நபிமொழிக் கவிதைகள் 193 – 210

கொஞ்ச நாளாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் வந்துகொண்டிருந்த என் நபிமொழிக்கவிதைகளை அவ்வப்போது பதிவிட முடியவில்லை. இப்போது கூகுள் பக்கம் மூலமாக உங்களோடு இங்கே. படித்துவிட்டு எழுதுங்கள்:

193
உடம்பு முடியாதவரை
உண்ணுங்கள் என்று சொல்லி
வற்புறுத்தாதீர்கள்
குடியுங்கள் என்று சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்

அருந்தவும் உண்ணவும் அவருக்கு
அல்லாஹ்விடமிருந்து வரும் என்று
அண்ணல் நபிகள் சொன்னார்கள்

(இப்னு மாஜா. உக்பா பின் அமீர் அல் ஜுஹானி: 04 – 3444)

194
தேனும் திருமறையும்
தித்திக்கும் எப்போதும்
நிவாரணங்கள் அவைகளாலே
சித்திக்கும் எப்போதும்
(இப்னு மாஜா. அப்துல்லாஹ்: 04 – 3452)

195
அபூஹுரைராவும் அண்ணல் நபியும்
அதிகாலையில் எங்கோ கிளம்பினார்கள்
தொழுதுவிட்டு அமர்ந்துகொண்டார் அபூஹுரைரா
அவரைப் பார்த்த அண்ணல் நபிகள்
வயிற்று வலியா என்று வினவினார்கள்
ஆமாம் என்றார் அபூஹுரைரா
தொழுங்கள் எழுந்து தோழரே
தொழுகை உங்களை குணப்படுத்தும் என
தாஹா நபி சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 04 – 3458)

196
காய்ச்சல் பற்றிய பேச்சு வந்தது
காசிம் நபியிடத்தில்
தீபோன்ற அந்த தகிப்பை ஒருவர்
திட்டித் தீர்த்தார்

சுரத்தை என்றும் சபிக்காதீர்கள்
சுத்தப்படுத்துகிறது உங்களை அது
இரும்பிலிருந்து அழுக்கை
நெருப்பு நீக்குவதுபோல

நரக நெருப்பு கொஞ்சம்
நரம்பினில் ஏறுவதே காய்ச்சலாகும்
நெருப்பென்பதால் அதனை
நீரைக்கொண்டு அணையுங்கள் என
நேசநபி சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா, ஆயிஷா: 04 – 3469, 3471)

197
இரண்டு மகள்களுடன்
அன்னை ஆயிஷாவைப் பார்க்க
அன்று ஒரு பெண் வந்தார்

மூன்று பேரீச்சம் பழங்களை
மூவருக்கும் கொடுத்தார்
முஸ்தஃபாவின் மனைவி ஆயிஷா

ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தை
அச்சிறுமிகள் உண்டபின்
மூன்றாவது பழத்தையும்
இரண்டாகப் பிளந்து
இருவருக்கும் கொடுத்தார்
அந்த அன்பு அன்னை

அதுபற்றி அண்ணலிடம்
ஆயிஷா சொன்னபோது
ஆச்சரியம் எதற்கு ஆயிஷாவே
அன்பால் அந்தத் தாய்
அப்பொழுதே அடைந்துவிட்டாள்
அழகிய சொர்க்கம் ன
அண்ணல் நபிகள் சொன்னார்கள்
(இப்னு மாஜா. ஆயிஷா: 05 – 3668)

198
மக்களுக்கு இடையூறாக
பாதையின் குறுக்கே கிடந்த
மரக்கிளை யொன்றை
ஓரமாய் எடுத்து
ஒதுக்கிப் போட்டான் ஒருவன்
அதனால் அவனுக்கு
ஆண்டவன் கொடுத்தான்
அழகிய சொர்க்கம்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 3682)

199
உங்கள் நாயன்
கருணயாளன் கொடையாளன்

ஏக்கத்தோடு
ஏந்திய கைகளை

ஆசையோடு
அகல விரிக்கப்பட்ட கைகளை

விருப்பங்கள் நிறைவேறவேண்டி
விரியத்திறந்த கைகளை

வெறுமையாக அனுப்ப
வெட்கப்படுகிறான்
(இப்னு மாஜா. சல்மான்: 05 – 3865)

200
அல்லாஹ் உங்கள்
சொரூபத்தையோ
செல்வத்தையோ பார்ப்பதில்லை
நெஞ்சம் நெய்ததையும்
நேர்படச் செய்ததையும் மட்டுமே
நாயன் பார்க்கிறான்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 4143)

201
பசியோடு காலையில்
பறந்து செல்லும் பறவைகள்
வீங்கிய வயிற்றோடு
வீடு திரும்புகின்றன மாலையில்

பறவைக்குக் கொடுத்த
பரோபகாரியான
படைத்தவன் மீது நம்பிக்கை வைத்தால்
உங்களுக்கும் கொடுப்பான்
உண்மையாளன் என
உமரிடம் சொன்னார்கள்
உத்தம நபி
(இப்னு மாஜா. உமர்: 05 – 4164)

202
அல்லாஹ் தன் அளப்பரிய
அன்பினால் அருளியுள்ள
அருட்கொடைகள் இரண்டினையும்
அநாவசியமாக செலவு செய்கின்றனர்
அறிவுகெட்ட மனிதர்கள்:
ஆரோக்கியம் ஒன்று
அவகாசம் இன்னொன்று

உடல் நலத்தையும்
உள்ள நேரத்தையும்
உருப்படியாய் செலவழிக்காதவர்
உருப்படவே மாட்டார் என
இப்னு அப்பாஸ் அவர்களிடம்
இறுதி நபி கூறினார்கள்
(இப்னு மாஜா. அப்துல்லாஹ் பின் சயீத் பின் அபூ ஹிந்த்: 05 – 4170)

203
பெருமை எனது போர்வை
மகத்துவம் எனது மேலாடை
என்னோடு போட்டி போடும்
எவனாக இருந்தாலும்
எறிவேன் நரகில் என்று
இறைவன் சொன்னதாக
இறுதித்தூதர் சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 4174)

204
ஒவ்வொரு மதத்துக்கும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு
நன்மார்க்கம் இஸ்லாத்தின் சிறப்பு
நாணமாகும் என்று
நவின்றார்கள் நமது நபி
(இப்னு மாஜா. இப்னு அப்பாஸ்: 05 — 4182)
205
அடுத்தவர் பார்க்கிறார் என்பதனால்
அழகிய முறையில் தொழுவதைப்போல
ஆண்டவனை ஏமாற்ற முயலும்
அசிங்கமான காரியமானது
அந்தரங்க இணைவைப்பாகும் என
அருமை நபி கூறினார்கள்
(இப்னு மாஜா. அபூ சயீத்: 05 – 4204)

206
சின்ன சாட்டையின் அளவிலான
சொர்க்கத்தின் இடமானது
சுந்தர பூமியைவிடவும்
அதில் உள்ள அத்தனையையும்விட
அழகானது
(இப்னு மாஜா. சஹல் இப்னு ச’அத். 05 – 4330)

207
காலைத்தொழுகயின் நேரமென்ன
காசிம் நபி அவர்களே என்று
சந்தேகம் கேட்டார்
ஒரு சஹாபா

அமைதியாக இருந்தார்கள்
அண்ணல் நபிகள்

அடுத்தநாள் விடியலில்
அதிகாலைத் தொழுகையினை
இருட்டு கலையுமுன்னே
இறுதிநபி தொழுதார்கள்
அடுத்த நாள் அதிகாலை
விடியலின் வெளிச்சத்தில்
வாஞ்சை நபி தொழுதுவிட்டு

சந்தேகம் கேட்டவர் எங்கே என்று
சஹாபாக்களைக் கேட்டார்கள்
இங்கே உள்ளேன் இறுதித்தூதரே என
அங்கே இருந்த அவரும் சொன்னார்

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடையில் உள்ளது
மூலவனை வணங்குவதற்கான
முதல் தொழுகை நேரம் என
முஸ்தஃபா சொன்னார்கள்

வார்த்தைகளால் விளக்குவதைவிட
வாழ்க்கையால் விளக்குவதையே
விரும்பினார்கள் வேதநபி
(முவத்தா. அ: அதா பின் யாஸர். 01)

208
என்னருமைத் தோழர்களாகிய நீங்களும்
எனக்குப் பின் வரஇருப்பவர்களும்
என் சகோதரர்களே

கௌதர் எனும் தடாகத்தில் நான்
காத்திருப்பேன் அவர்களுக்காக
என்றார்கள் ஏந்தல் நபி

உங்கள் காலத்துக்குப் பின்னால்
உலகில் வர இருப்பவர்களை
உங்கள் சகோதரர் என
உணர்ந்துகொண்டதெப்படி
உம்மி நபி அவர்களே என
உண்மைத்தோழர்கள் கேட்டனர்

வெள்ளை நிறக்குதிரைகளை
வேறுநிறக் குதிரையில் இருந்து
வேறுபடுத்திப் பார்க்க முடியாதா என
வேத நபி கேட்டார்கள்
முடியும் எங்கள் முஸ்தஃபாவே என்றார்கள்
முத்திரை நபியின் தோழர்கள்

அதேபோல
மறு உயிர்ப்பு செய்யப்படும் அந்த
மறுமை நாளின்போது
தொழுகைக்கு முன்னர் தம் உடலை
தண்ணீரால் சுத்தம் செய்த என்
சகோதரர்கள் அனைவருக்கும்
பாசமுகம் ஒளிவீசும்
பாதங்கள் பளபளக்கும்
அதைவைத்து அவர்களை நான்
அடையாளம் கண்டுகொள்வேன் என
அஹ்மது நபிகள் அறிவித்தார்கள்
(முவத்தா. அ: அபூஹுரைரா: 55)

209
வஞ்சகனின் வாளொன்றால்
வீரர் உமர் காயப்பட்ட இரவன்று
நான் சென்று அழைத்தேன்
காலைத்தொழுகைக்கு
கலீஃபா உமரை

தொழுகையைத் தவறவிடுபவனுக்கு
தீமைதான் என்ற உமர்
தொழ வந்தார் அப்போதும்
குத்தப்பட்ட காயத்திலிருந்து
குருதி வழிந்தோடியது
கலீஃபா உமர் தொழுதபோது
(முவத்தா. அ: மிஸ்வார் இப்னு மக்ரமா 79)

210
அவ்வப்போது நீங்கள்
ஆண்டவனை உங்கள் வீட்டு
அறைகளிலும் தொழுதுகொள்ளுங்கள்

இல்லத்திலும் தொழுதுகொள்ளுங்கள்
இறைவனை அவ்வப்போது

இல்லையெனில்
மண்ணறைகளாக மாறிவிடும்
மனதுக்குப் பிடித்த இல்லங்கள்

கல்லறைகளாக மாறிவிடும்
கட்டப்பட்ட வீடுகள் என
காசிம் நபி கூறினார்கள்
(புகாரி. அ: இப்னு உமர்: 01 – 432)

Photo
Photo
09/11/2018
2 Photos – View album

 

Posted in Uncategorized | 4 Comments

அன்னை ஆயிஷாவின் அறிவுக்கூர்மை

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.              

ஒரு வரலாற்றைப் படிக்கும்போது அதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் பல இருக்கும். அதைப்போல அவ்வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களும் சில இருக்கும். வரலாறு கற்றுத்தரும் பாடம் என்பது அதுதான்.

மின்சார பல்பை எடிசன் கண்டுபிடித்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் எல்லோருமே தெரிந்துகொள்ளும் ஒரு தகவலாகும். பல்லாயிரம் முறைகள் முயற்சி செய்தபோதும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது, ஆனாலும் அவர் விடவில்லை, அவரது விடா முயற்சியே அவருக்கு இறுதியில் வெற்றியைக் கொடுத்தது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கும்போதும் நமக்கு இந்த உன்னிப்பான பார்வை தேவை.  அன்னை ஆயிஷா அவர்களைப் பற்றிய சில நூல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் புரிந்ததும் இதுதான்.

அன்னை கதீஜா அவர்களுக்குப் பிறகு, இறுதித்தூதர் அவர்கள் மணந்துகொண்ட பெண்களில் வயது மிகக்குறைந்தவராக இருந்தவர் அன்னை ஆயிஷா அவர்கள்தான். ஆனால் மற்ற வயது முதிர்ந்த மனைவிமார்களிடம் இல்லாத அளவுக்கு அறிவுக்கூர்மையும், ஆழமான மார்க்க ஞானமும் அன்னைஆயிஷா அவர்களிடம் இருந்தது அவர்களது சிறப்புக்களில் ஒன்றாகும்.

உண்மையை சொல்லத் தயங்காத துணிச்சல் கொண்டவர் அவர் என்பதை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. அன்னை ஆயிஷாமீது அவதூறு சொல்லப்பட்டபோது, உண்மையை அறிய பெருமானார் பெருமுயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மனைவியை தாய் வீட்டில்தான் விட்டு வைத்திருந்தார்கள். இறைவன் ஒரு வஹீ மூலம் அன்னை ஆயிஷா தூய்மையானவர் என்பதை உலக்குக்கு அறிவித்தான் (சூரா நூர் 24: 23).

அந்த செய்தியை அறிந்ததும் ஆயிஷா அவர்களின் அன்னையார், ‘மகளே, நீ தூய்மையானவள் என்பதை இறைவனே வஹீ மூலம் அறிவித்துவிட்டான். எழுந்து வந்து இறைவனின் தூதரான உன் கணவருக்கு நன்றி சொல்’ என்று சொன்னபோது, ‘என்னுடைய இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் நன்றிக்கடன் பட்டவள் அல்ல’ என்று சொல்லிய துணிச்சலும் நேர்மையும் அன்னை ஆயிஷாவுக்கே உரியது!

ஒரு பிரபலமான நபிமொழிக்கு அன்னை ஆயிஷா கொடுத்த விளக்கமானது அவர்களது அறிவுக்கூர்மையை உலகுக்கு எடுத்தோம்புவதாக உள்ளது.

இறந்த ஒருவரின் உடலை வைத்துக்கொண்டு அவரது உறவினர்கள் உரத்த குரலில் ஒப்பாரி வைப்பதால் இறந்தவருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்ற நபிமொழி பிரபலமானது. உமர் இப்னு கத்தாப், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அல் முகீரா, ஷு’அபா போன்ற நபித்தோழர்கள் மூலமாக இந்த நபிமொழி திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் பெருமானார் ஒருபோதும் இப்படிச்சொல்லவில்லை என்று அன்னை ஆயிஷா திட்டவட்டமாக அதை மறுத்தார்கள். உண்மையில் நடந்தது என்னவெனில், ஒருநாள் பெருமானார் ஒரு யூதரின் ஜனாஸாவைக் கடந்து சென்றார்கள். அவரது உறவினர்கள் உரத்த குரலில் அவருக்காக ஒப்பாரி வைத்துப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த பெருமானார், ‘இவர்கள் இங்கே அழுதுகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கோ அங்கே தண்டனை கொடுக்கப்படுகிறது’ என்று கூறினார்கள்.

இறந்த ஒருவருக்காக மற்றவர்கள் அழுவது இறந்தவரின் தண்டனைக்குக் காரணமாக அமையாது. ஏனெனில் இரண்டும் இருவேறு தனித்தனி நிகழ்வுகள். ஒருவர் இறந்துவிட்டாரே என்பதற்காக அவரது உறவினர் அழுகிறார்கள். இறந்தவரோ அவரது செயல்களின் விளவுகளுக்கேற்ப தண்டிக்கப்படுகிறார். ஒருவருடைய செயலுக்கு இன்னொருவருக்கு எப்படி தண்டனை கொடுக்கப்படும்?  ஒரு ஆன்மாவின் சுமையை இன்னொரு ஆன்மா சுமக்காது என்று திருமறை மிகத்தெளிவாகக் கூறுகிறது (சூரா அன்’ஆம் 6:164). மேற்கூறப்பட்ட நபிமொழிக்கான தவறான விளக்கத்தை மறுக்கும் விதத்தில் இந்த திருமறை வசனத்தை அன்னை ஆயிஷாவே மேற்கோள் காட்டினார்கள். 

அழுவதற்கு அனுமதியுண்டு. ஏனெனில் அது அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும். பெருமானார் எத்தனையோ தடவைகள் அழுதுள்ளார்கள் என்பதை வரலாறும் நபிமொழிகளும் காட்டுகின்றன. ஆனால் அழுவதற்குப் பதிலாக, ஆடைகளைக் கிழித்துக்கொள்வது, கன்னத்தில் அறைந்துகொள்வது, தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது, உரத்த குரலில் ஒப்பாரி வைப்பது போன்ற இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத செயல்களைச் செய்வது விரும்பத்தக்கதல்ல. அப்படியெல்லாம் செய்பவர்கள் அறியாமைக்காலத்து மக்களைப் போன்றவர்கள் என்றும், நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் பெருமானார் கூறியுள்ளார்கள்.

அப்படியானால் உமர் அவர்கள், அல் முகீரா, ஷு’அபா, அப்துல்லாஹ் இப்னு உமர் போன்ற நபித்தோழர்கள் மூலமாக இவ்விஷயம் பற்றி திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட பல நபிமொழிகளை எப்படி எடுத்துக்கொள்வது?

எப்படிப் பார்த்தாலும் அன்னை ஆயிஷா கொடுத்த விளக்கத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் பெருமானாரால் மிக அதிகமாக நேசிக்கப்பட்ட, பெருமானாரோடு வாழ்க்கையைப் பங்கு போட்டுக்கொண்ட அருமை மனைவியாவார்கள். அவர்களோடு இருக்கும்போது பெருமானாருக்கு வஹீ வந்துள்ளது. அவர்கள் மடியில்தான் பெருமானாரின் உயிர் பிரிந்தது.

இவ்வகையான காரணங்களுக்காக மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாத நம்பகத்தன்மையை அன்னை ஆயிஷாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்வது சரியாகாது. ஆனால் மற்றவர்களைவிட பெருமானாரை அதிகம் அறிந்தவர்களாக அன்னை ஆயிஷா இருந்தார்கள். அவர்களுக்கு பெருமானாரோடு இருந்த நெருக்கமானது உடலில் தொடங்கி உடலில் முடிந்த நெருக்கமல்ல. அது உள்ளத்தையும் தாண்டி ஆன்மாவோடு தொடர்பு கொண்டது.

அவர்களது விளக்கத்தில் ஓர் அதிகார முத்திரை உள்ளது. சில சமயங்களில் நபிமொழியை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மற்றவர்களுக்குச் சொன்னதற்காக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்களை அன்னை ஆயிஷா கடிந்துகொண்டுள்ளார்கள்!

எனவே, இறந்தவருக்காக ஒப்பாரி வைத்தால் இறந்தவர் தண்டிக்கப்படுவார் என்ற நபிமொழியை, அட ஆண்டவனே, இப்படியெல்லாம் ஆகிவிடுமோ என்று அஞ்சி ஒப்பாரி வைப்பதை உளவியல் ரீதியாகத் தடுக்கும் ஒரு வழியாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.

பெண், வாகனம், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் துர்ச்சகுனம் உள்ளது என்று பெருமானார் சொன்னதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அறிவிக்கிறார் என ஒரு செய்தி அன்னை ஆயிஷாவின் கவனத்துக்குக் கொண்டுபோகப்பட்டது.

அது உண்மையல்ல, அபூ ஹுரைரா பாதி நபிமொழியைத்தான் கேட்டார், மீதியைக் கேட்கவில்லை, பாதியைப் பெருமானார் கூறி முடித்தவுடன்தான் அவர் வந்தார், அதை மட்டும் கேட்டுவிட்டு அதை அறிவித்துவிட்டார், அது சரியல்ல என்று அன்னை ஆயிஷா சொன்னார்கள்.

முழுமையான நபிமொழி என்னவெனில், ‘பெண், வாகனம், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் துர்ச்சகுனம் உள்ளது என்று யூதர்கள் கருதிக்கொண்டிருந்தார்கள்’ என்பதுதான் என்று அன்னை ஆயிஷா விளக்கம் சொன்னார்கள்!

நபித்தோழர் அபூ சயீத் குத்ரி அவர்கள் இறக்கும் தருவாயில் ஒரு புதிய ஆடையைத் தருவித்து அணிந்துகொண்டார். ஓர் இறைநம்பிக்கையாளன், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற ஒரு முஸ்லிம், எந்த உடையில் இறக்கிறானோ அதே உடையில் எழுப்பப்படுவான் என்று அதற்குக் காரணமும் சொன்னார்.

அதைக்கேட்ட அன்னை ஆயிஷா, ‘அல்லாஹ் அபூ சயீத் மீது அருள் மழை பொழியட்டும். ஆடைகள் என்று அண்ணலார் சொன்னது ஒருவரது நற்செயல்களைத்தான்’ என்று விளக்கினார்! எந்த நபிமொழி சாதாரணமானது, எது குறியீட்டுத் தன்மை கொண்டது என்று ஐயமறப் புரிந்துகொண்டு அறிவித்தவர்கள் அன்னை ஆயிஷா. உணவு வகைகளில் ’தரீத்’ அல்லது ‘ஸரீத்’ எப்படி உயர்வானதோ அதைப்போல பெண்களில் எனக்கு ஆயிஷா’ என்று பெருமானார் சொன்னதன் பின்னால் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதற்கு அன்னை ஆயிஷாவின் அறிவுக்கூர்மையே சான்றாகும்.

Posted in Articles /கட்டுரை | Leave a comment