மை நேம் ஈஸ் கான் — மகத்தான சேவை


ராமச்சந்திரனா என்றேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

பல ஆண்டுகளுக்கு முன் நான் ரசித்துப் படித்த நகுலனின் கவிதை இது. வேண்டுமென்றே அபத்தமான தொனியில் அமைந்த கவிதை இது. ஒரு மனிதனை யார் என்று அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். ஆனால் ஒரு பெயர் இருப்பதனாலேயே அவன் யார் என்று தெரிந்து கொண்டுவிட முடியாது. ஒருவன் யார் என்பதன் அடையாளம் அவனது பெயரல்ல. பலருக்கு ஒரே பெயர் இருக்கும் பட்சம், யார் எப்படிப் பட்டவர் என்று அறிந்து கொள்வது எப்படி?

இந்தக் கவிதை எழுப்பும் கேள்வி இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு, எதிரான சூழ்நிலை உலகெங்கிலும் உருவாகி வருகின்றது. முஸ்லிம் பெயர்கள் இருப்பதனாலேயே, சில தனி மனிதர்களும், சில குழுக்களும் செய்யும் வன்முறைகளுக்கு இஸ்லாமிய முத்திரை குத்தப்படுகிறது. எங்கள் ஊரில் குழந்தைகள் தாயை ‘ம்மா’ என்றுதான் அழைக்கும். குழந்தை பசியால் அழுது தாயை ‘ம்மா’ என்று அழைத்தால்கூட அந்தக் குழந்தை ‘அல்-உம்மா’ இயக்கத்தைச் சேர்ந்த குழந்தையாக இருக்கலாம் என்று காவல் துறையினர் கொண்டு போய்விடுவார்கள் என்று என் எழுத்தாள நண்பர் ஆபிதீன் ஒரு முறை ஒரு கதையில் எழுதி இருந்தார். அது நகைச்சுவையல்ல, விரக்திச் சிரிப்பு. அவர் செய்த கிண்டலின் விரிவைப் போலத்தான் இன்று தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், ஏன் உலகெங்கிலும் காரியங்கள் நடந்து கொண்டுள்ளன. ஊடகங்களும், பத்திரிக்கைகளும், அரசியல் வாதிகளும் இன்னும் பலவும் இதற்குக் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்திய முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்று கிடையாது. எல்லாத் தீவிர வாதிகளும் முஸ்லிம்களல்ல. ஆனால் எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதிகள் — என்பது போன்ற வாசகங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வருகின்றன. (இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு பற்றி வின்.என்.சாமி என்பவர் 1016 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் எழுதியுள்ளார்). ஒரு பக்கம் சல்மான் ரஷ்டி போன்ற எழுத்தாளர்கள் இஸ்லாத்தையும், இறுதித் தூதரையும் கேவலப்படுத்தி எழுதி வருகின்றனர். இணையத்தளங்களில் இதற்கென்றே வலைப்பக்கங்கள் திறந்து இறுதித்தூதரைப் பற்றி மரியாதை கெட்ட வார்த்தைகளில் எழுதுவதையே தங்கள் வாழ்க்கைப் பணியாகச் சிலர் செய்து கொண்டுள்ளனர். இந்திய ஜனநாயகமோ வேடிக்கை பார்க்கும் கோழைக் குழந்தையாகவே உள்ளது. ஒரு பள்ளிவாசல் அராஜகமான முறையில் இடிக்கப்படுவதை ‘லைவ்’-ஆகக் காட்டுகின்ற ஜனநாயகத்துக்கு அதைத் தடுக்கும் துணிச்சல் இல்லை. குற்றவாளிகள் யார் யார் என்று பட்டியலிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை வெளியிடும் ஜனநாயக மரபு இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லியுள்ள குற்றவாளிகளைக் கைது செய்யும் துணிச்சல் அதற்குக் கிடையாது. 1947-ல் சுதந்திரமடைந்த பிறகு வணக்கஸ்தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இருக்க வேண்டுமென்று வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும், துணிச்சலாகவும் சொல்கின்ற அறிவு நமது அரசியலுக்கு இல்லை. மாறி மாறி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாக்களித்து, காலில் விழுந்து கிடக்கும் ஜனநாயகம்தான் நமது.

இஸ்லாமும் முஸ்லிம்களும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இஸ்லாத்தைத் தங்கள் இஷ்டத்துக்குப் புரிந்து கொண்டு பல குழுக்களாகப் பிரிந்து, குர்’ஆனையும், ஹதீஸையும் பற்றி தனிப்பட்ட முறையில் சிந்திப்பதே இஸ்லாத்துக்கு செய்யும் துரோகம் என்று நினைத்துக் கொண்டு, மார்க்க அறிஞர்களுக்கு ‘ஹீரோ வொர்ஷிப்’ செய்து, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி என்ன சொல்ல வேண்டுமோ, எப்படிச் சொல்ல வேண்டுமோ எப்படியெல்லாம் சொல்லி இளம் மனங்களில் விஷம் விதைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் செய்யும் வேலையை இஸ்லாத்தின் எதிரிகள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ, தாடி வைக்க வேண்டுமா, விரலை ஆட்ட வேண்டுமா என்பது தொடர்பாக கொலை வெறியுடன் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு, ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலுக்கு உள்ளேயே குண்டு வைக்கிறார்கள்.

இந்திய சினிமாவைப் பொருத்தவரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இன்றுவரை அது சரியாகப் பிரதிபலித்ததில்லை. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது அபத்தமாகவோதான் பிரதிபலிக்கின்றன. ‘பாங்கு’ ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்போதே தொழுது கொண்டிருப்பதுபோல் எத்தனையோ தமிழ்ப்படங்களில் காட்சி வந்தாயிற்று. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைக்கூட ஒழுங்காக ஒரு படத்தில்கூட சொல்லவிட்டதில்லை. கமல்ஹாஸனின் ‘தசாவதாரம்’ படத்தில் நெட்டையாக வரும் முஸ்லிம் பாத்திரத்தைவிடக் கேவலமான ஒரு பாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை. அவரது ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் பெஸ்ட் பேக்கரி எரிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தீவிரவாதியாக ஆகிவிட்டதைப் போலக் காட்டப்படுகிறது. ‘ரப்னே பனாதீ ஜோடி’ என்ற ஹிந்திப் படத்தில் ஒரு தர்காவில் பல பெண்களும் குழந்தைகளுமாய் நடனமாடிக் கொண்டே பாட்டுப் பாடுவதாக வருகிறது. எந்த அடக்கஸ்தலத்திலாவது நடன நிகழ்ச்சிகள் நடப்பதுண்டா? அதுவும் காதல் பாட்டு! அப்பாடலில் வரும் ‘துஜ் மே ரப் திக்தாஹே’ (உன்னில் நான் இறைவனைக் காண்கிறேன்) என்ற வரி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் தொனியில் உள்ளது. அதைப் பாடும் ஷாருக்கான் ஒரு முஸ்லிம். இப்படி வரலாற்றைச் சிதைத்தும், அபத்தமாகவும்தான் இன்றுவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் 2010-ல் எடுக்கப்பட்ட ‘மை நேம் ஈஸ் கான்’ என்ற ஹிந்திப்படம் ஒரு மகத்தான சாதனையும் சேவையும் ஆகும் என்றே சொல்லத் தோன்றுகிறது. இஸ்லாத்தின் உண்மை நிலையைப் பற்றி பல சொற்பொழிவுகள் மூலமாகவும், பல புத்தகங்கள் மூலமாகவும் மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு என்றாலும், எது சரியான சொற்பொழிவு, எது சரியான புத்தகம் என்று தேர்ந்து கொள்வது கடினம். ஆனால் ஒரு சரியான திரைப்படத்தின் மூலமாக பேச்சும் எழுத்தும் செய்ய முடியாத வேலையைச் செய்ய முடியும். ‘மை நேம் ஈஸ் கான்’ அதைச் செய்துள்ளது. மிகச்சரியாகவும், மிகைப்படுத்தாமலும் ரொம்ப நுட்பமாகவும் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

கதை
மும்பையில் போரிவலி என்ற பகுதியில் வாழும் ஒரு நடுத்தர அல்லது ஏழைக்குடும்பத்தில் பிறந்த மூத்த மகன் ரிஸ்வான் கான். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். ஜாகிர் என்று ஒரு தம்பி. ரிஸ்வானிடம் ஒரு சிறப்பும் ஒரு குறையும் உண்டு. பழுதான எந்த யந்திரத்தையும் அவனால் சரி செய்துவிட முடியும். அதே சமயம் ‘அஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ என்ற ஒரு நோயால் அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த நோய் உள்ளவர்களால் சமுதாயத்தில் சகஜமாகப் பழக முடியாது. அவர்களுடைய மொழியறிவு மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதோடு புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலை, புதிய சப்தங்கள் என்று எதைக் கண்டாலும் அவர்கள் பயப்படுவார்கள். ரிஸ்வானுக்கு இந்த நோய் இருப்பது அவன் அம்மாவுக்கே தெரியாது.

வளர்ந்தபின் அமெரிக்கா சென்று குடியேறி வாழ்கிறான் தம்பி ஜாகிர். அம்மா இடையில் இறந்து போகிறாள். அதன் பிறகு அண்ணன் ரிஸ்வானையும் அமெரிக்காவுக்கு வரவழைத்துக் கொள்கிறான் ஜாகிர். அமெரிக்கா வரும் ரிஸ்வான் தன் தம்பி தயாரிக்கும் மூலிகை அழகுச் சாதனங்களை விற்பதில் ஈடுபடுகிறான். அவனுக்கு ‘அஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ நோய் இருப்பதை முதலில் ஜாகிரின் மனைவி உளவியலாளரான ஹஸீனாதான் கண்டு பிடிக்கிறாள். மந்திரா என்ற ஒரு ஹிந்துப் பெண்ணோடு ரிஸ்வானுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அவளைக் காதலிக்கிறான். அவளுக்கு ஏற்கனவே ஆன திருமணத்தில் பிறந்த சாம் அல்லது சமீர் என்ற மகனுண்டு. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி அவளது மனதில் இடம் பிடிக்கும் ரிஸ்வான் இறுதியில் தன் தம்பியின் வெறுப்பையும் மீறி மந்திராவைத் திருமணம் செய்து கொள்கிறான். மந்திரா, மந்திரா கான் என்றும், சாம், சமீர் கான் என்றும் பெயர் மாற்றம் பெறுகின்றனர். (முஸ்லிமாகாமலே).

அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது செப்டம்பர் 9-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காயிதா தீவிரவாதிகளால் தகர்க்கப் படுகின்றன. அதன் பிறகு முஸ்லிம்களைப் பற்றிய கருத்து அமெரிக்காவில் மாறிப்போகிறது. சந்தேகத்தோடும், வெறுப்போடு, அச்சத்தோடும் அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பக்கத்து வீட்டு பத்திரிக்கையாள நண்பரான மார்க் யுத்தம் பற்றி நேரில் பார்த்து எழுத ஆப்கனிஸ்தான் செல்கிறார். அங்கே அவர் கொல்லப்பட்டு இறக்கிறார். ஏற்கனவே சாமுடன் நண்பனாக இருந்த மார்க்கின் மகன் ரீஸ் சாமை வெறுக்க ஆரம்பிக்கிறான். அவனைச் சமாதானப் படுத்தி, அவனுக்குப் புரிய வைக்க சாம் முயல்கிறான் ஆனால் முடியவில்லை. பள்ளியில் இருந்த சில மாணவர்களால் அவன் தாக்குதலுக்கு உள்ளாகிறான். ரீஸ் அதைத் தடுக்க முடியவில்லை. கடுமையாகக் காயமுற்ற சாம் அதனால் இறந்து போகிறான்.

இடிந்து போகிறாள் மந்திரா. தன் ஒரே மகனின் சாவுக்குக் காரணம் அவர்கள் வைத்துக் கொண்ட ‘கான்’ என்ற முஸ்லிம் பெயர்தான் என்று தீவிரமாக நம்புகிறாள். இனிமேல் என்னோடு இருக்க வேண்டாம் உடனே போய்விடு என்று கணவனிடம் கூறுகிறாள். நான் எப்போது திரும்பி வரவேண்டும் என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறான் ரிஸ்வான். “போ, போய் அமெரிக்க மக்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும் என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை என்று சொல்லிவிட்டு வா பார்க்கலாம்” என்று கடுமையாகக் கூறிவிடுகிறாள்.

அவள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்  கொண்டு உடனே கிளம்புகிறான் ரிஸ்வான். அவனைப் பொறுத்தவரை ஹிந்து, முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. உலகில் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இரண்டு வகையினர்தான் என்று அவன் அம்மா சொல்லிக் கொடுத்ததையே அவன் நம்புகிறான். அவ்வப்போது தன் பழுது பார்க்கும் திறமையைப் பயன்படுத்திக் கொஞ்சம் பணம் சம்பாதித்து, ஊர் ஊராக, மாகாணம் மாகாணமாகப் பயணம் செய்து, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசச் செல்கிறான். கடைசியில் பேசினானா என்பதுதான் கதை.

இந்தக் கதையின் மூலமாக படம் சொல்ல வரும் விஷயம்தான் நமது கவனத்துக்குரியது. கதையினூடே மிக நுட்பமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ரிஸ்வான் கானின் சிறுவயதில் ஒரு நிகழ்ச்சி. மாடியில் இருக்கும் அவர்களது போர்ஷனுக்குக் கீழே இரவில் சில முஸ்லிம்கள் ஆக்ரோஷமாகப் பேசிக் கொள்கிறார்கள். ‘அந்த ஹராம் ஜாதாக்கள் ஒவ்வொருவரையும் சுட்டுத் தள்ள வேண்டும்’ என்பதாக அவர்கள் பேச்சு போகிறது. மதம் தொடர்பாக ஏற்கனவே நடந்த ஒரு வன்முறை அல்லது பிரச்சனையை ஒட்டி அவர்கள் பேசிக்கொள்வதாக நாம் புரிந்து கொள்ளலாம். அவர்கள்  சொல்லும் வார்த்தைகளைச் செவி மடுக்கும் சிறுவன் ரிஸ்வான் அதை அப்படியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதைக்கேட்கும் அவனது தாயார் (ஜரீனா வஹாப் — ஆமாம் ‘சிட்சோர்’ படத்து கதாநாயகிதான்) மகனை அழைத்து கீழே உட்கார வைத்து ஒரு தாளை எடுத்து சோளக்கொல்லை பொம்மை போல ஒரு கோட்டோவியத்தை — தலைக்கு ஒரு வட்டம், கை, இடுப்பு, கால்களுக்கு கோடுகள் — வரைந்து இது ரிஸ்வான் என்கிறாள். பின் அதற்குப் பக்கத்தில் இன்னொன்றை அதுபோலவே வரைந்து இது ஒரு கெட்ட மனிதன். அவன் கையில் ஒரு கழி இருக்கிறது. அவன் ரிஸ்வானை அடிக்கிறான் என்கிறான். ரிஸ்வானும் அவன் கெட்ட மனிதன் என்று திருப்பிச் சொல்கிறான். பின் மறுபடியும் ஒன்றை வரைந்து இது மறுபடியும் நீதான் என்று சொல்லி, இன்னொன்றை வரைந்து இது ஒரு நல்லவன், இவன் உனக்கு லாலிபாப் தருகிறான் என்கிறாள். நல்லவன், லாலிபாப் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறுகிறான் ரிஸ்வான். அப்போது அந்த ஓவியங்களைக் காட்டி, இதில் ஹிந்து யார், முஸ்லிம் யார் சொல்லு என்று தாய் கேட்கிறாள். கொஞ்ச நேரம் அதைப் பார்த்துவிட்டு, ‘எல்லாமே ஒன்று போலத்தானே உள்ளது’ என்று சொல்கிறான் ரிஸ்வான். அதற்கு அவன் அம்மா, சபாஷ் மகனே, உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள், நன்மை செய்யும் நல்லவர்கள் (அச்சீ இன்சான்), தீமை செய்யும் கெட்டவர்கள் (புரீ இன்சான்) என்று சொல்லி புரிந்ததா என்று கேட்கிறாள். புரிந்ததாகத் தலையாட்டுகிறான் ரிஸ்வான். என்ன புரிந்தது என்று கேட்கிறாள். இந்த உலகத்தில் அச்சீ இன்சான், புரீ இன்சான் இரண்டு வகையினர்தான் உண்டு என்கிறான் ரிஸ்வான்.

இந்தப் படத்தின் முழுச் செய்தியும் இதுதான். இந்தியாவுக்கும் உலகத்துக்குமான செய்தி இது. மிக எளிமையாக, தொழில்நுட்ப வேலைப்பாடுகள் எதுவுமின்றி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்த எளிமை வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட எளிமை. படத்தின் தரத்தை உயர்த்தும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அம்மா சொல்லிக் கொடுத்த இந்த செய்தியை உள் வாங்கிக் கொண்டு வளர்ந்தவனே ரிஸ்வான் கான். அவனைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை, நல்லவர் கெட்டவர் என்பதைத் தவிர.

சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ரிஸ்வான் வந்திறங்குவது படத்தின் முதல் காட்சி. கொஞ்சம் கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கோணலாக நடந்து கொண்டு  அவன் வருகிறான். அவன் உருவத்தைப் பார்க்கின்ற எவரும் அவன் ஒரு நார்மலான மனிதன் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். லேசான பைத்தியம் மாதிரியான தோற்றமும் அசைவும் கொண்டு வருகிறான் ரிஸ்வான். அவன் கையில் கறுப்பு நிறத்தில் சில கற்கள். அவைகள்தான் அவனது தஸ்பீஹ் மணி. அவற்றை உருட்டி உருட்டி அவன் கஸ்டம்ஸ் அதிகாரிகளைக் கடந்து போக நின்று கொண்டிருக்கும்போது ‘குல்ஹுவல்லாஹு அஹது’ சூராவை ஓதிக்கொண்டே நடக்கிறான். அரபி மொழிச் சப்தம் அருகில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக சந்தேகத்தின் அடிப்படையில் அவன் அழைக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான். (ஷாருக்கான் கூட இந்தப் படத்துக்காக அமெரிக்கா சென்ற சமயத்தில் கான் என்ற அவருடைய பெயருக்காக அதிக நேரம் சோதிக்கப் பட்டது செய்தி). சட்டையைக் கழற்றியும், வாயைத்திறந்தும் சோதனை நடக்கிறது. சதாம் ஹுசைனின் வாயைத் திறந்து பல் பரிசோதனை செய்தது எனக்கு நினைவுக்கு வந்தது.
எல்லாச் சோதனைகளும் முடிந்து, ‘ஹீ ஈஸ் க்ளீன்’  என்ற சான்றிதழுடன் அவன் வெளியே அனுப்பப்படுகிறான். அப்போது அந்த கஸ்டம்ஸ் அதிகாரி அமெரிக்காவுக்கு நீ ஏன் வந்தாய் என்று கேட்கும்போது, அமெரிக்க அதிபரைப் பார்க்க என்று கான் பதில் சொல்கிறான். அவர் உனக்கு நண்பரா என்று கேட்க, இல்லை, அவரிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது என்று சொல்கிறான். என்ன செய்தி என்று அவன் கேட்க, “என் பெயர் கான், நான் தீவிரவாதி அல்ல” என்று நான் அவரிடம் சொல்ல வேண்டும் என்று கான் சொல்கிறான். ஒரு கணம் அமைதி நிலவுகிறது அந்த கஸ்டம்ஸ் அதிகாரி முகத்தில். கான் சொன்னது வெறும்  வார்த்தைகளல்ல. ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு அது. மிக அழுத்தமாகவும், அழகாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தக் காட்சி.

அடுத்த முக்கியமான காட்சி சாம் எனப்படும் சமீர் கொல்லப்பட்ட பிறகான காட்சி. ஆப்கனிஸ்தான் போன தன் தந்தை இறந்து போனவுடன் முஸ்லிம்கள்மீது இனம்புரியாத ஒரு வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான் சாமின் நண்பன் ரீஸ். சாம் எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் அவன் கேட்கவில்லை. அந்த முயற்சியில் சிறுவர்களுக்குள் நடக்கும் சண்டையில் அவன் இறந்து போகிறான். அவன் இறந்ததற்குக் காரணம் கான் என்ற அவனுடைய பெயர்தான், நான் தப்பு செய்துவிட்டேன், ஒரு முஸ்லிமை நான் திருமணம் செய்திருக்கக் கூடாது, அவன் பெயர் ‘ராத்தோட்’ என்று முடிந்திருந்தால் அவன் செத்திருக்க மாட்டான் என்றெல்லாம் மந்திரா (கஜோல்) ரிஸ்வானிடம் புலம்புகிறாள்.
ஆனால் சாம்  இறந்ததற்கான காரணம் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மிக முக்கியமான குறிப்பு. இப்படித்தான் முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். திருவல்லிக்கேணியில் நடு வீதியில் மாடு சாணி போட்டால் அதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று சொல்வது போல. சாம் சாகும் நிகழ்ச்சியின் பின்னணியில் இரண்டு காரணங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று 9/11 நிகழ்ச்சி. இன்னொன்று அதன் விளைவாக முஸ்லிம்களின் மீது ஏற்பட்ட உலகளாவிய வெறுப்பின் பகுதியாக ரீஸ் தன் பள்ளி நண்பன், பக்கத்து வீட்டுக்காரன் சாமை வெறுப்பது. ஒன்றாக அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டுச் சந்தோஷித்த குடும்பங்கள். நெருங்கியவர்களுக்கு மத்தியில்கூட வெறுப்பு வளர்கிறது. அதுவும் ஒரு அப்பாவிச் சிறுவன் சாகும் அளவுக்கு அது போகிறது.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிபர் ஜார்ஜ் புஷ் வருகிறார் என்று கேள்விப்பட்டு அங்கு போகிறான் கான். 500 டாலர்கள் கட்ட வேண்டும் என்று சொன்னதும் எடுத்துக் கொடுக்கிறான். நீங்கள் எந்த சர்ச் என்றும், அது கிறிஸ்டியன் மிஷன் நடத்தும் நிகழ்ச்சி என்றும் விளக்குகிறாள் பணம் பெறும் பொறுப்பில் இருப்பவள். ”இது கிறிஸ்தவர்களுக்காக ஹனீ” என்று அவள் சொன்னதும், “ஹனீ, ஆப்பிரிக்காவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள் ஹனி” என்று சொல்லிவிட்டுப் போகிறான் கான். இதுவும் ஒரு முக்கியமான காட்சி. அதிபரைப் பார்த்துப் பேசுவதுதான் கானின் நோக்கமென்றாலும் அவன் மனம் எப்போதுமே ஏழைகளுக்கு இரங்குவதாகவும், சேவை செய்வதிலும் இருப்பதை இது உணர்த்துகிறது.

செல்லும் வழியில் பஸ்ஸில் ஒரு முஸ்லிம் தம்பதியர் எதிரில் அமர்ந்திருக்கும் கானிடம் சப்பாத்தியை நீட்ட அவன் அதில் இரண்டை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறான். அவர்களுக்கு நன்றி சொல்வதில்லை. காரணம், அவனது நோய். ‘ஆஸ்பர்கர்ஸ் சிண்ட்ரம்’ உள்ளவர்களுக்கு சமுதாயத்தில் பழகத் தெரியாது, முன்பின் தெரியாத அந்நியர்களின் உணர்ச்சி பற்றியும் அக்கறை இருக்காது. படம் முழுக்க நோயின் பாதிப்பை எங்கெல்லாம் காட்ட முடியுமோ அங்கெல்லாம் எந்த உறுத்தலும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தொழுகை நேரம் வந்தவுடன் இருக்கும் இடத்திலேயே தொழ ஆரம்பிக்கிறான் கான். பார்ப்பவர்கள் தப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்று அந்த தம்பதியர் சொல்வதை அவன் எடுத்துக்கொள்வதில்லை. எல்லாம் எண்ணத்தைப் பொறுத்ததே என்று பதில் சொல்கிறான்.

பின்னர் அவன் ஜார்ஜியாவில் உள்ள வில்ஹெல்ம் என்ற ஊருக்குச் செல்கிறான். அங்கு சைக்கிளில் அடிபட்டு விழும் ஒரு சிறுவனுக்கு உதவி செய்து அவனுடைய அம்மா ‘மாமா ஜென்னி’ என்ற கருப்பினப் பெண்மணியின் குடும்பத்தோடு பழகுகிறான். ஈராக் யுத்தத்தில் தன் மகனை இழந்தவள் அவள். சாம் இறந்தது பற்றியும் அவர்களிடம் அவன் சொல்கிறான். அவர்களிடமிருந்து பிரிந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வரும் கான் ஒரு பள்ளிவாசலில் தொழச்செல்கிறான். அங்கு தலைவராக இருக்கும் ஃபசல் ரஹ்மான் என்பவர் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுகிறார். இப்ராஹீம் நபி பெற்ற மகனையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ததை எடுத்துச் சொல்லி அவர்களை உசுப்பேற்றுகிறார். எல்லாரும் அவர் பக்கம் சாய்வதாக உறுதி மொழியெடுக்கும்போது கான் பேசுகிறான். அது அப்படியல்ல, இஸ்மாயீலை இறைவன் காவு வாங்கவில்லை என்பதுதான் உண்மை, அல்லாஹ்வின் பாதை அன்பின் பாதை என்று சிறிய சொற்பொழிவாற்றுகிறான். அங்கே குழப்பம் ஏற்படுகிறது. சிலர் அவன் சொல்வது சரியென்று நினைக்கின்றனர். அங்கிருந்து போகுமுன் கையில் வைத்திருந்த ஜபமாலைக் கற்களை “ஷைத்தான், ஷைத்தான்” என்று சொல்லிக்கொண்டே ஃபசல் ரஹ்மான்மீது வீசிவிட்டுச் செல்கிறான். வன்முறை செய்பவர்கள் அனைவரும் ஷைத்தானின் மறு உருவங்கள் என்பது படத்தில் இன்னொரு செய்தி.

ஒரு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. அங்கே அதிபர் புஷ் வருகை தருகிறார். கூட்டத்தில் இருந்து கான், ”மை நேம் ஈஸ் கான் அண்டு அயம்  நாட் எ டெர்ரரிஸ்ட்” என்று திரும்பத் திரும்ப உரக்கச் சொல்ல, அதை இரண்டு இளம் இந்திய மாணவப் பத்திரிக்கையாளர்கள் வீடியோ எடுக்கின்றனர். அவனைத் தவறாகப் புரிந்து கொள்ளும் காவல்துறையினர் கானைச் சுற்றி வளைத்துக் கைது செய்து தனியறையில் வைத்து சூடு, குளிர் எல்லாம் அதிகமாகக் கொடுத்து சித்திரவதை செய்கின்றனர். ஆனால் ராதா என்ற சைக்கியாட்ரிஸ்ட் அவன் குற்றமற்றவன் என்று நம்புகிறாள். அந்த ஃபைசல் ரஹ்மான் பேசியது பற்றி கான் FBI-க்கு அறிவிக்க முயன்றதையெல்லாம் எடுத்துக் காட்டி, இரண்டு மாணவப் பத்திரிக்கையாளர்களும் பாபி ஆஹூஜா என்ற பிபிசி செய்தி வாசிப்பாளருமாகச் சேர்ந்து கான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கின்றனர். வெளியே வரும் கானுக்கு ரசிகர் கூட்டம் உருவாகிறது. மந்திராவுக்கும் செய்தி தெரிய வருகிறது. தன் மகனின் இறப்புக்கான காரணம் தேடி அவளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

விடுதலையாகி வெளியில் வரும் கான் ஜார்ஜியாவை கடும் புயலும் சூறாவளிக்காற்றும் தாக்கிய செய்தியைப் பார்க்கிறான். மாமா ஜென்னியில் ஊரென்பதால் உடனே அங்கே கிளம்பிப் போகிறான். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்  மக்களுக்கு தன் மூளையப் பயன்படுத்தி உதவிகள் செய்து வெகு விரைவில் அங்கே நார்மல் வாழ்க்கை திரும்ப உதவுகிறான். அங்கே செல்லும் ஆஹூஜா அதையும் டிவியில் காட்டுகிறார். A man from India moves America என்று டிவியில் காட்ட கான் புகழின் உச்சிக்குச் செல்கிறான். பாரக் ஒபாமா அதிபராகிறார். கான் ஏன் அதிபரைச் சந்திக்க விரும்புகிறான் என்பதை டிவில் கேட்க அவன் சொல்லும் பதிலை ஒபாமா(வாக நடிப்பவர்) கூர்ந்து கேட்டுக்கொள்கிறார்.

ரீஸ் மந்திராவிடம் மன்னிப்புக் கேட்டு உண்மையைச் சொல்ல சாமைக் கொன்ற குற்றவாளிகளும் கைது செய்யப்படுகிறார்கள். மந்திரா உடனே கிளம்பி ஜார்ஜியா போகிறாள். ஏற்கனவே ஜாகிரும் அவன் மனைவி ஹசீனாவும் அங்குதான் இருக்கிறார்கள். 9/11 நிகச்சிக்குப் பிறகு கொஞ்ச நாள் ஹிஜாப் போட முடியாமல் இருந்த ஹசீனா, கானின் புகழுக்குப் பிறகு துணிச்சலாக ஹிஜாப் அணிந்து கொள்கிறாள். மந்திராவும் கானும் சந்திக்கும் வேளையில் ஃபசல் ரஹ்மானின் அனுதாபி ஒருவர் கானைக் கத்தியால் குத்த, கானை மருத்துவ மனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறாள் மந்திரா. மருத்துவ மனையிலிருந்து வரும் கானை புதிதாக அதிபராகியிருக்கும் ஒபாமாவே அழைத்து, “உங்களை எனக்குத் தெரியும், your name is khan and you are not a terrorist” என்று கூறுவதோடு படம் முடிகிறது.

ஷாருக் கானின் நடிப்பு
படத்தின் மிகச்சிறப்பான அம்சம், கதைக்கு அடுத்த படியாக, ஷாருக் கானின் நடிப்புதான். ‘ரப் நே பனாதி ஜோடி’ படத்தில் ஒரு தர்காவுக்குள், அல்லது அப்படி போடப்பட்ட செட்டுக்குள் ஜீன்ஸ் பேண்ட்டுடன் முட்டாள்தனமான ஒரு பாட்டைப் பாடி டான்ஸ் ஆடிய ஷாருக்கானா இது என்று மலைக்க வைக்கிறார். ‘ஆஸ்பெர்கர்ஸ் சிண்ட்ரம்’ உண்மையிலேயே வந்தவர் போலேயே நடித்துள்ளார். எந்த இடத்திலும் தன் அசைவுகள் நார்மலாகிவிடாதபடி கவனமாக இருக்கிறார். தலையையும் கண்களையும் ஒரு மாதிரியாக கோணலாக வைத்துக் கொள்வது, சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்வது என மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கஜோலும் சிறப்பாக நடித்திருந்தாலும் கானின் நடிப்புக்கு முன்னால் அது எடுபடவில்லை.

கான் இஸ்லாமியப் பழக்க வழங்கங்களில் மூழ்கி வளர்ந்தவர் என்பதைக் காட்ட பல இடங்களை பயன்படுத்தியுள்ளனர். யாரைப்பார்த்தாலும் கான் ‘ஸலாமலைக்கும், ஸலாமலைக்கும்’ என்றுதான் சொல்கிறார், கேட்பவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். படத்தில் ஒரே ஒரு கட்டத்தில் மட்டும்தான் அவருடைய ஸலாமுக்கு தம்பி மனைவி ஹசீனா பதில் சொல்கிறாள். மந்திராவிடம் ஒரு முறையும், ஒபாமாவிடம் இரு முறையும் ஸலாம் சொல்கிறார். (ஒபாமாவாவது அலைக்கும் ஸலாம் என்று சொல்லியிருக்கலாம். அவர் இப்போது கிறிஸ்தவராக வாழ்ந்தாலும், முஸ்லிம் தந்தைக்குப் பிறந்து இந்தோனியாவில் வளர்ந்தவர்தானே அவர்? அவர் அலைக்கும் ஸலாம் என்று சொல்லாதது எனக்கு வருத்தமே)! சாம் இறந்துவிட்டதாக மந்திரா சொல்லும்போது ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று சொல்கிறார். விமான நிலையத்துக்குள் ‘குல்ஹுவல்லாஹு’ ஓதிக்கொண்டிருக்கிறார் (அரபி உச்சரிப்பு ஷாருக்குக்கு அவ்வளவு சரியாக வரவில்லை). திருமணமான புதிதில் ஷரியத்தின்படி குறிப்பிட்ட தொகையை தருமம் வேறு செய்கிறார்.

நகைச்சுவை
படத்தில் ஆங்காங்கே ரொம்ப நுட்பமான நகைச்சுவை இடம் பெறுகிறது. கான் தனது பெயரை உச்சரிக்க மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இடம். காரித் துப்புவது போன்ற ஒலியை ஏற்படுத்த வேண்டும் என்று from the epiglottis என்று linguistic-ஆக விளக்குவது அருமையான நகைச்சுவை.
ஜார்ஜியாவில் சைக்கிளிலிலிருந்து விழுந்து முழங்காலில் அடிபட்டுக் கிடக்கும் சிறுவனிடம், I can’t repair your knee என்று சொல்வது போன்ற பல இடங்களைக் குறிப்பிடலாம்.
எல்லாம் சரி. ஒரு திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இருக்குமா? அப்படிப் பார்த்தால் இப்படத்தில் சில குறைகள் உள்ளன. உதாரணமாக,
1. இவ்வளவு இஸ்லாமிய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள கான் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிமாக்காமலே திருமணம் செய்து கொண்டு வாழ்வது. (ஒரு வேளை அமெரிக்கா என்பதால் அப்படிக் காட்டியிருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் இந்த விஷயம் ஷாருக்கானுக்கு ஒரு முரண்பாடாக நிச்சயம் பட்டிருக்காது என்று பின்னர் புரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தப் படத்தைத் தயாரித்தவர்களில் கானின் மனைவியும் ஒருவர். கௌரி கான் என்ற பெயர் கொண்ட அவர் முஸ்லிமல்ல). எனவே கானின் பாத்திரம் கானின் நிஜ வாழ்க்கையை ஒட்டியதாகவே உள்ளது. இதுபற்றி நாம் மேற்கொண்டு பேசவே முடியாது. ஏனெனில் அவரே அப்படி நிஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது நாம் என்ன சொல்வது? என்.டி.டிவி. பேட்டியில்கூட ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்றும், அதற்காகப் பெருமைப் படுகிறேன் என்றும், தோற்றத்தில் முஸ்லிமாக இருப்பதைவிட உணர்வில் முஸ்லிமாக இருப்பதே மேல் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

2. திருமணமான புதிதில் முதல் இரவில் எனக்கு என்ன செய்வதென்று தெரியும், உடலுறவு பற்றிப் படித்துள்ளேன் என்று மனைவியிடம் சொல்வதும், மற்றொரு நாள் திடீரென்று வந்து நாம் உடலுறவு கொள்ளலாமா என்று கேட்பதும் நாகரீகத்துக்கு அப்பால் உள்ள விஷயங்களாக உள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் என்று இதைச் சொல்ல வேண்டும். ஷாருக்கானின் நடிப்பு உலகத்தரமாக உள்ளது. அடுத்த ஆஸ்கார் அவருக்குக் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு அற்புதமான நடிப்பு. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு எவ்வளவு முட்டாள்தானமானது, அல்லது அயோக்கியத்தனமானது என்பதை அழகாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்ட ஒரு கதையின் மூலம் இது சொல்கிறது. சுனாமியில் தமிழகம் பாதிக்கப்பட்டபோது கடலூரில் வாரக்கணக்கில் முகாமிட்டு நடிகர் விவேக் ஓபராய் தர்ம காரியங்கள் செய்தார். அதுபோலத்தான் கானும் ஜார்ஜியாவில் செய்கிறான். படத்தில் மிகை எதுவும் இல்லை, பொய் எதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்ற முன் முடிவு இல்லை.
ரொம்ப யதார்த்தமாக ஒரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கிறது படம். இயக்குனர் கரன் ஜோஹர் பாராட்டப்பட வேண்டியவர். படத்தின் செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தின் மொத்த அழுத்தமும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் பொதுவான தீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பானது என்பதால் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை ஷாருக்கானின் வாழ்க்கையாகவே எடுத்திருக்கிறார்கள். அதை மன்னித்துவிட்டு, அல்லது மறந்துவிட்டுப் பார்ப்போமேயானால், காலத்தால் நிற்கக் கூடிய படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாத நமது முற்றம் இதழில் (மே, 2010) இக்கட்டுரை அளவு கருதி ‘எடிட்’ செய்யப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to மை நேம் ஈஸ் கான் — மகத்தான சேவை

 1. நானா,
  உங்களின் விமர்சனத்தை படித்த பின்பு தான் படத்தை பார்த்தேன்.

  “மை நேம் இஸ் இஸ்மாயில் – ஐயம் எ ஷாருக்கான் ஃபேன்” என்று ஷாருக்கானை பார்த்து வாழ்த்து சொல்ல ஒரு பயணமே புறப்படலாம் போல் உள்ளது இந்த படம்

  நீங்கள் எழுதியிருப்பது போல் நிறைய தமிழ்படங்களில் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக காட்டியிருந்தாலும் சில படங்களில் நல்ல விதமாகவும் காட்டியிருக்கிறார்கள், உதாரணமாக ‘படிக்காதவன்’ எனும் ரஜினி நடித்த படத்தில் நாகேஷ் கேரக்டர், அது ஏன் அப்படி நல்லவராக காட்டப்பட்டது என்றால் அது இந்தியில் அமிதாப் நடித்த குத்தார் எனும் படத்தை தழுவியது. இந்த படத்தின் கதை, வசனகர்த்தா புகழ்பெற்ற இந்தி நகைச்சுவை நடிகர் காதர் கான் தான். அதனால் தான் அப்படி உள்ளது.

  எனக்கு தெரிந்து விசு எடுத்த டௌரி கல்யாணம் படத்தில் நம்பியார் ஒரு ராவுத்தர் கேரக்டர் பண்ணியிருப்பார், முஸ்லீம் என்றால் தமிழை ஒழுங்காக பேச மாட்டார் என்ற குறையை தவிர மற்றபடி நல்லாவே இருக்கும் அந்த கேரக்டர்.

  அப்புறம் ஜரினா வஹ்ஹாப் அவர்கள் சிட் சோரில் நடித்திருப்பார்கள், அந்த படத்தில் தமிழ் தழுவலான பாண்டியராஜன் நடித்த ‘உள்ளம் கவர்ந்த கள்வன்’ படம் தூயவன் அவர்களின் படம் தானே…?

  படத்தை பற்றிய அருமையான அலசலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

 2. எனக்கு திரைபடங்கள் பார்க்கும் பழக்கம் இல்லையென்றாலும், உங்களுடைய மொழிபெயர்ப்பு நன்றாக,அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இவற்றை என்னுடைய ப்ளாக் ஸ்போட்டில் வெளியிட அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருகின்றேன்.

  • nagoorumi says:

   Dear Ilam Thooyavan, you can surely use it in your blog. And kindly send me the url of your blog also.

   anbudan
   rumi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s