நாதஸ்வரம்

நாதஸ்வரம்


நான் ரிலாக்ஸ் செய்ய விரும்பும்போதெல்லாம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது வழக்கம். ஒரு நாளைக்கு நான் இவ்விதமாக மாலை ஆறிலிருந்து இரவு பத்தரை வரை மட்டுமே ரிலாக்ஸ் செய்துகொள்வேன்…சீரியஸான வேலைகள் எதுவும் இல்லாத ஆசாமிகள் — என்னைத்தான் சொல்கிறேன் — பார்க்க விரும்புவது சீரியல்கள்தான். முக்கியமாக நான் பார்க்க விரும்புவதன் காரணம் காமெடிதான்.

மாமியார் குடும்பத்துக்காக ஒரு மருமகள் உருகி உருகி தியாகச் செம்மலாக இருப்பது, வெறும் கைகளாலேயே கொலை செய்து விடலாம் என்று கோபம் வரும் அளவுக்கு ஒரு மாமியார் அபாண்டமாக மருமகளைப் பேசும்போதும் அந்த மருமகள் அன்னை தெரஸா ரேஞ்சுக்கு அமைதி காப்பது, அல்லது ’என் தாயைவிட ஒரு பங்கு அதிகமாத்தான் உங்களை நெனச்சிட்டிருக்கேன் அத்தெ’ என்றெல்லாம் சொல்வது — இவ்விதமான காமெடிகள் ஒரு பக்கம். மாமியார் அடிக்கக் கையை ஓங்கும்போது எதிர்த்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவர் மிரளும் அளவுக்கு வசனம் பேசுவது (இவ்வாறான கட்டங்களிலெல்லாம் சிறப்பு சப்தம் வேறு சிறப்பு காமெடியாக ஒலிக்கும்), மனைவி  ஒரேயடியாக  அப்பாவியாக இருப்பது — இப்படி காமெடிகள் பல விதம்.

சில உதாரணங்கள் தருகிறேன். தங்கம் என்று ஒரு தொலைக்காட்சித் தொடர். அதில் அப்பாவாக நடிப்பவர் விஜயகுமார். அவருக்கு இரண்டு மனைவிகள். (இது காமடி அல்ல. பெரும்பாலும் ட்ராஜடி). முதல் மனைவியாக நடிப்பவர் ’அவளோட ராவுகள்’ புகழ் சீமா. (இனி சன் டிவியில் இரவு ஏழைரை மணியிலிருந்து எட்டுவரை இவரோட ராவுகள்தான்). இரண்டாவது மனைவி முன்னாள் டான்ஸர் மஞ்சு பார்கவி (என்று சொன்னார்கள்). எங்க ஊரில் நெடுநெடு என்று வளர்ந்தவர்களை ’ஜஜ்ஜால்’ என்று சொல்வோம். பார்கவி பார்ப்பதற்கு அப்படித்தான் பயமுறுத்தும் விதமாக இருக்கிறார்.

இதில் விஷேஷம் என்னவெனில் (முன்னாள் அவளோட ராவுகளின்) குஜால் மனைவியும், (இன்னாள்) ஜஜ்ஜால் மனைவியும், அவர்களது மூன்று பெண், மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும், மற்றும் ஊரில் உள்ளவர்களும் விஜயகுமாரைக் கூப்பிடுவது ‘அய்யா’ என்றுதான்! எல்லா நேரத்திலும் ஒரு மனைவி கணவனை அய்யா என்று அழைப்பதென்பது பெண்ணடிமைத்தனத்தையும், ஆணாதிக்கத்தையும் பலமாக முன்னிருத்துவதாகும். இந்த வார்த்தையைக் கேட்க ஒரு பக்கம் காமெடியாகவும் இன்னொரு பக்கம் கோபமாகவும் வருகிறது.

இதில் கதாநாயகி கங்காவாக நடிப்பவர் (நம்ம பஞ்ச தந்திரம் மேகி) ரம்யா க்ருஷ்ணன். ஒரு கலெக்டருக்கு மனைவியாகவும், தானே ஒரு கலெக்டராகவும் வருகிறார். (தற்போது சீரியல் இயக்குனர்களுக்கு கலக்டர் பைத்தியம் பிடித்துள்ளது. கங்காவின் இன்னொரு தங்கையும் கலக்டராகப் போகிறாராம். திருச்செல்வத்திலன் ‘மாதவி’ சீரியலிலும் கதாநாயகியின் காதலன் கலக்டராகிரார்! அவர் முகம் பார்க்க, பொன்னுக்கு வீங்கி வந்த வயசானவராட்டம் ரொம்ப பாவமாக இருக்கிறது. சரி, கங்கா கதைக்கு வருவோம்). கங்கா மாமியாரின் எல்லா அட்டகாசங்களையும் பொறுத்துக் கொள்கிறார். பொறுமையில் பூமா தேவியை மிஞ்சிவிடுகிறார். சொத்துக்களை அபகரிக்க நினைக்கும், தன் தாயையே கொல்ல நினைத்துக் காரியங்களில் இறங்கிய மூத்த தாரத்தின் மகனை அப்பா கடிந்து கொள்ளும்போதுகூட அண்ணனை ஒன்னும் சொல்லாதிங்கப்பா என்று வசனம் பேசுகிறார்.

குலசேகரன் என்று வில்லன் பாத்திரம் ஒன்று வருகிறது. நல்ல கம்பீரமான குரல் அவருக்கு. விஜய் டிவியின் விருதுகளில் சிறந்த  வில்லனுக்காக அவரும் தேர்ந்தெடுக்கப் படிருந்தார். அவர் வசனம் பேச ஆரம்பித்தாலே எனக்கு சிரிப்பு வந்து விடும். மிக ஆக்ரோஷமாக அவர் பேசுவார். அதில் என்ன சிரிப்பு என்கிறீர்களா? அவர் பேசும் விதம் அப்படி. எதிராளியின் முகத்தைப் பார்த்துப் பேசவே மாட்டார். சட்டென்று அவர்களுக்கு நேர் எதிராகத் திரும்பி நின்று கொண்டு வெற்றிடத்தைப் பார்த்துத்தான் வீர வசனம் பேசுவார்.

இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் நாம் என்னாவது?!

ஆனாலும் சில சீரியல்கள் உண்மையிலேயே நினைத்து நினைத்துப் பார்க்கும்படியாகவும் அற்புதமாகவும் உள்ளன. விஜய் டிவியில் ‘யாமிருக்க பயமேன்?’ என்று ஒரு தொடர். அதில் கடவுள் முருகனாக நடிக்கும் சிறுவன் ஒரு நாள் ஒரு டாக்டரைப் பார்த்து ஒரு வசனம் பேசுகிறான். அப்போது, “உடல் என்பது வெறும் எலும்பும் சதையும் மட்டுமல்ல, அது ஒரு தொடர்ச்சி” என்று கூறுகிறான்! சட்டென்று என்னை நிறுத்தி சிந்திக்க வைத்த கணம் அது. இப்படிப்பட்ட கணங்கள் சீரியல்கள் மூலமாகவும் நிகழத்தான் செய்கின்றன.

சன் டிவியில் இரவு ஏழரைக்கு வரும் தொடர்தான் நாதஸ்வரம். ”இந்த மூஞ்சியையெல்லாம் எங்கே பிடித்தார்கள்? வேறு மூஞ்சிகளே கிடைக்கவில்லையா?” என்றுதான் முதலில் சில நாட்கள் பார்த்தவர்கள் விமர்சனம் செய்தார்கள். எனக்கும்கூட என்ன கதை என்று தெரியாமல், எதுவும் பிடிபடாமல் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. ஆனால் தொடர்ந்து பார்க்கப் பார்க்க ஒரு விஷயம் புரிந்தது. அது என்ன?

இது சீரியல் இல்லை. வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கை. அல்லது நாம் அன்றாடம் பார்க்கும் வாழ்க்கை.

ஆமாம். அந்த தொடரில் வரும் முகங்களெல்லாம் நான் அன்றாடம் பார்க்கும் சாதாரண முகங்கள். அவர்கள் பேசும் வசனங்களில் பஞ்ச் டயலாக்-குகள் கிடையாது. (பாஸ்கர் சக்தியின் உழைப்பு எனக்கு இதில் தெரிகிறது). அவர்கள் படும் உணர்ச்சிகளில் மிகை கிடையாது. ஒரு கட்டத்திம் நாமும் நம் வாழ்க்கையில் பட்டவைதான் அவை. அல்லது பட்டுக் கொண்டிருப்பவை. அவர்கள் வாழ்வில் நடக்கும் திருப்பங்கள் நம் வாழ்விலும் நடந்தவை, அல்லது நடப்பவை.

நம்முடைய வாழ்க்கையையே, அல்லது எல்லாக் குடும்பங்களிலும் நடக்கும் சராசரியான அனுபவங்களையும் பிரச்சனைகளையுமே மிகவும் சரியாக, நேர்த்தியாக, கலையழகோடு, ஆனால் அழகு படுத்திக் காட்டுவது தெரியாமல், வெகு அற்புதமாக காட்டுகிறார் கோபியாக வரும் இயக்குனர் திருமுருகன். அவரை ஆரத்தழுவ வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்ற அளவுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாமல், அதே சமயம் ஒரு டாக்குமெண்டரி மாதிரி களைப்பூட்டாமல் பார்த்து ரசிக்கும்படியாக இருக்கிறது நாதஸ்வரம்.

“குடும்பம் என்பதே நாதஸ்வரம் போன்றதுதான். அதில் உள்ள துளைகள் எல்லாம் குடும்ப அங்கத்தினர் போல. எந்தத் துளையை மூடி எந்தத் துளையைத் திறந்தால் இனிய சங்கீதம்வரும் என்ற சூத்திரம் இருக்கிறது. அதேபோல எந்த சூழலில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தால்தான் குடும்பமும் இனிமையாக இருக்கும். அப்படியொரு குடும்பம் எனும் நாதஸ்வரத்தைக் கட்டிக் காக்கும் வித்வான்தான் குடும்பத் தலைவன். அவருக்கு ஒத்து போல கூடவே இருக்கும் தம்பியும் இந்தக் கதையில் இருக்கிறார்” என்று இந்த தொடர் பற்றி ஒருமுறை திருமுருகன் சொல்லியிருப்பது அவருடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இரண்டு சகோதர்களுக்குள் இருக்கும் பாசம், பெண் பிள்ளைகள் அதிகமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்குள் இருக்கும் பாசப் பிணைப்பு, எப்போது, எப்படி புத்தி தடுமாறுகிறது, உணர்ச்சி வசப்பட்டு தவறான வழிகளுக்கு இட்டுச் செல்கிறது, அதனால் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும் — என்பது பற்றியெல்லால் சொல்லிச் செல்கிறது கதை.

சகோதர்களாக நடிப்பவர்கள் மௌலியும் பூவிலங்கு மோகனும். மௌலியை காமெடி பாத்திரங்களிலேயே பார்த்துப் பழகியிருக்கும் நமக்கு இது புதிது. மௌலியின் இன்னொரு பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் அவர் நடிக்கிறார். வசனங்கள் பேசப்படும் விதம், நடிகர்களின் அசைவுகள் எல்லாவற்றிலும் போதுமான கவனம் செலுத்தப்படுகிறது.

மூத்த நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு நடிக்கின்றன சின்னப் பெண் பிள்ளைகள். அதுவும் முதல் முறையாக கேமராவுக்கு முன் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட 23 பேர்கள். (இத்தனை பேரை அறிமுகப்படுத்துவதே ஒரு சாதனைதான்). ஆம். ஒரு நேர்காணல் வைத்து, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சில நாட்கள் நாசரின் அடவு நடிப்புப் பட்டறையில் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்ததாக தகவல்.

எல்லாக் க்ரெடிட்டும் இறுதியில் இயக்குனரையே போய்ச்சேரும். ஏற்கனவே மெட்டி ஒலி என்ற  புகழ்பெற்ற தொடரை இயக்கியவர். எம்(டன்) மகன் என்ற திரைப்படத்தையும் எடுத்தவர். இப்போது நாதஸ்வரத்த ஸ்வர சுத்தமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று டபிள்யூ. பி. ஏட்ஸ் ஒரு கவிதையிலேயே சொன்னது என் நினைவுக்கு வருகிறது:

If it does not seem a moment’s thought
Our stitching and unstitching has bee naught

என்று வெகு அழகாகச் சொல்லுவார். கஷ்டப்பட்டு, அளந்தளது தைக்கப்பட்ட துணி மாதிரி இருக்கூடாது. வானத்திலிருந்து நேராக சட்டையாகவோ, புடவையாகவோ இறங்கிய மாதிரி கவிதை இருக்க வேண்டும். ஆனால் அது அளந்தளந்துதான் எழுதப்பட்டிருக்கும்.

திருமுருகனின் நாதஸ்வரமும் யேட்ஸின் கவிதை மாதிரிதான் உள்ளது.

இது இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

12 Responses to நாதஸ்வரம்

 1. இனி ‘நாதஸ்வரம்’ மூலமாக ரிலாக்சேசன் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

  நன்றிகள்

  எழுத்து வழக்கம் போல் பிரியாணி சோத்துல பன்னீர் தெளிக்கிற மாதிரி நகைச்சுவை அங்கங்கே தெளிக்கப்பட்டு நற்சுவையாக இருந்தது

 2. எனக்கு சீரியல் என்றாலே அலர்ஜி. நீங்கள் சொன்ன மாதிரி சீரிய்ஸ் காமெடி வசனங்களை ரசிக்கலாம் என்றால், அதற்கும் ஒரு பொறுமை வேனும்.

  ஆனால் நாதஸ்வரம் நன்றாகவே இருக்கிறது. மிக இயல்பாக நடிக்கும் நடிகர்களும் நல்ல திரைக்கதையும் விடாது பார்க்கத் தூண்டுகிறது.

  மத்த சீரியல் மாதிரி நம்ம மண்டைய கடிப்பதில்லை.

 3. திருவாடுதுறை ராஜரத்தினம் says:

  ”நாதஸ்வரம்” பற்றிய உங்கள் கருத்துகளை நான் “ஒத்து”க்கொள்கிறேன்.

  • nagoorumi says:

   அன்புள்ள திருவாடுதுறை ராஜரத்னம், நீங்கள் “ஒத்து”க் கொண்டதிலிருந்து நானும் ஒன்றைக் கத்துக்கொள்கிறேன்!

 4. அற்புதமான கட்டுரை ரூமி ஸார். ’நாதஸ்வரம்’ நிச்சயம் மக்கள் மனதில் நீங்காமல் ஒலிக்கும் ;))) உங்களின் மனம் திறந்த பாராட்டை வாசிக்க நெகிழ்ச்சியாகவும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களை நினைத்து மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். //திருமுருகனின் நாதஸ்வரமும் யேட்ஸின் கவிதை மாதிரிதான் உள்ளது. // மிகச் சரியே ;))) பகிர்விற்கு நன்றி

 5. துபாயிலிருந்து மஜீத் says:

  பிடிக்கவில்லை; ஆனால் பார்க்கிறேன்.
  (மாதத்தில் 4 /5 நாட்கள் தான்) பிறகு எரிச்சலைத்தான்டி வரும் இனம் புரியாத எள்ளல் தருவது relaxation தான். ஆனாலும் அத்தி பூத்தாற்போல் சில சவுக்கடிகள்,திருமுருகன், நிமிர்ந்து அமரவைக்கும் சிறு பொறிகள், ஸ்ரீநிவாஸ் போன்றோரின் முகப்புப்பாடல்கள், இவைகளைத்தாண்டி வரும் குற்றவுணர்வு இன்றோடு முடிந்தது – காரணம் நான் தனியன் அல்ல

 6. யப்பா!! டிவி சீரியல்ஸ் வேண்டாம் என்றுதானய்யா உங்களைப்போன்றவர்களின் பதிவுகளை தேடி தேடி படிக்கிறோம்… இங்கேயும் அதே என்றால் எப்படி சாமி??

  • nagoorumi says:

   அன்புள்ள ரோமிங் ராமன் (பெயர் ரொம்ப நல்லாருக்கே), தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக அற்புதமான இலக்கியத்தைக் காட்ட முடியும். உதாரணமாக, பாலு மகேந்திராவின் கதை நேரம். அப்படியும் தேடித்தேடிப் பார்க்கலாம். எனினும் மற்ற கழுசடைகளை காமெடியாக நான் பார்க்கிறேன். என் போன்றோர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. எழுத்து எதைப் பற்றியதாக இருந்தாலும், உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது!

   • நன்றி…இவ்வளவு கூர்ந்து கவனிப்பீர் என்று யோசிக்கவில்லை அன்புடன் ரோமிங் ராமன்

 7. Pingback: நாதஸ்வரம் « SEASONSNIDUR

 8. மீனா says:

  நாதஸ்வரம் பற்றிய தங்களின் பார்வை நெகிழவைத்தது.. என்னவோ நானே இயக்குனர் போல!

  இந்த தொடர் வந்த புதிதில் இது பற்றி எனது ’வாசகசாலை’ வலையிலும் குழுமங்களிலும் நான் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வந்தது!

  தங்களின் ’திராட்சைகளின் இதயம்’ மிகவும் ஆழ்ந்து திரும்ப திரும்ப படித்தேன்!

  //அப்போது, “உடல் என்பது வெறும் எலும்பும் சதையும் மட்டுமல்ல, அது ஒரு தொடர்ச்சி” என்று கூறுகிறான்! சட்டென்று என்னை நிறுத்தி சிந்திக்க வைத்த கணம் அது. // தாங்கள் யாமிருக்க பயமேன் பற்றி குறிப்பிட்டிருந்தது போல் இதில் பல இடங்கள்..! சிந்திக்க வைத்த கணம் அதிகம்! எளிமையாக புரியும்படியான நடை தங்களுடையது !நன்றி.

 9. Pingback: 2010 in review « பறவையின் தடங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s