மூன்று கவிதைகள்

சிங்கப்பூரில் இருக்கும் என் இளைய சகோதரர்கள் இருவரில் மூத்தவர் காதர். நாங்கள் தீன் என்று அழைப்போம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பது முழுப்பெயர். (காதிர் என்பதுதான் காதர் என்று திரிந்து விட்டது. தப்பாகச் சொல்லாவிட்டால் நமக்கு பொறுக்காதே..!) அவர் ஒரு ஆடிட்டர். (ஆனால் இதுவரை அவர் எல்லாரையும் ஆட்டி வைப்பவராகத்தான் இருக்கிறார்)! DNH Consultants என்ற சொந்தக் கம்பனியின் எம்.டி. இதல்லாமல் சிங்கையில் உள்ள மூன்று நான்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிகிறார். தற்போது Management Studies-ல் முனைவர் பட்டத்துக்கான ஆய்வைச் செய்து கொண்டிருக்கிறார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் — என்னை உருவாக்கிய கல்லூரி, என் இன்னொரு தாய் — முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மதுதான் இவரது டாக்டர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். விரைவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தம்பி தீனுக்கு எங்கள் மரியாதைக்குரிய ஷேக் சாரின் வழிகாட்டுதலில் டாக்டர் பட்டம் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாலையில் தம்பி வீட்டை விட்டுக் கிளம்பினால் — காலை ஏழு மணி என்பது என்னைப் பொறுத்தவரை அதிகாலைதான் — வீடு திரும்ப இரவு பத்து பதினொன்றாகிவிடும். ஒருமுறை அவர் வீட்டை விட்டுக்  கிளம்பும்போது  என் தம்பி மகன் கேட்டான்: “வாப்பா, நீ இருட்டா வருவியா? வெளிச்சமா வருவியா?” அந்தக் கேள்வியில் ஒரு innocence-ம்  இலக்கிய அழகும் இருந்தது. எனக்கு முதலில் புரியவில்லை. தம்பிதான் விளக்கினார். வெளிச்சம்  இருக்கும்போதே வருவாயா, இருட்டிய பிறகு வருவாயா என்று கேட்கிறான் என்று!

என் தம்பியிடமிருந்து நான் கற்றுக் கொண்ட, கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள் பல உண்டு. நேரம் தவறாமை, வாக்குத் தவறாமை, நேர்மை, ஒழுக்கம், உடை உடுத்துதல், அபார நினைவாற்றல் — இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்னுடைய தம்பியைப் பற்றி நானே இப்படிச் சொல்லலாமா என்று கேட்கலாம். என் பதில்:

சொல்லலாம். உண்மையாக இருப்பின்.

அவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. உதாரணமாக எங்கள் குரல். நான் எழுதுவேன். அவர் பேசுவார். இதென்ன பிரமாதம், எல்லா மனிதர்களும்தான் பேசுவார்கள் என்று நீங்கள் புன்னகைப்பது எனக்குத் தெரிகிறது. நான் சொல்வது அந்த வகையான பேச்சல்ல. என் எழுத்து ஒரு இலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், வைத்துக்கொண்டால் என்ன, வைத்துக் கொள்வோம், அப்போதுதான் நான் அடுத்து சொல்லவருவது சரியாகும்! என் எழுத்தைப் போன்றது அவரது பேச்சு. என் எழுத்தை ரசிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. உங்கள் விலா வலிக்கும்படி என்னால் எழுத முடியும். என் விலா வலிக்கும்படி அவரால் பேச முடியும். இவர் எழுத ஆரம்பித்திருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல எழுத்தாளராகியிருப்பார் என்பது என் கணிப்பு.

அதை நிரூபிக்கும் விதத்தில் சமீபத்தில் அவர் ஒரு காரியம் செய்திருந்தார். எழுதி விட்டார்! ஆமாம். அதுவும் கவிதைகள். மூன்று கவிதைகள். அவற்றில் ஆரம்ப காலக் கவிஞனுக்கே உரிய ரொமாண்டிசிஸமும் வானம்பாடித்தனமும் இருக்கிறது. என்றாலும், கவிதைக்கே உரிய சில சிறப்பு அம்சங்களை — உதாரணமாக முரணழகு — இவை கொண்டிருக்கின்றன. கன்னி முயற்சி என்ற அளவில் இவை நிச்சயம் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆனால் எனக்கொன்றும் இதில் ஆச்சரியமில்லை. இது எங்கள் குடும்பச் சொத்து. ஒருவகையில் எங்கள் ஊரின் கொடை. எழுத்தும் பேச்சும், நா வன்மையும், பேனா வன்மையும் புலவர் கோட்டை என புகழப்பட்ட நாகூர் மண்ணின் பிரத்தியேக வாசனையாகும். யாராவது நாகூர்க்காரர்களிடம் பேசிப்பாருங்கள். ஆபிதீன் காக்காவிலிருந்து ஆபிதீன்வரை, குலாம் காதிர் நாவலரிலிருந்து குல் முஹம்மது வரை, நாகூர் சலீமிலிருந்து ஜஃபருல்லாஹ் நானாவரை — சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது நாகூர் தீன் வந்திருக்கிறார். படியுங்கள். உங்கள் நேர்மையான  விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வையுங்கள்.

நோன்பு

விஷப்பரிட்சைகளுக்கு மத்தியில்
ஒரு விஷேசப் பரிட்சை!
ஏழையின் குடலை
எக்ஸ்ரே எடுக்கும் முயற்சி.

இந்த பட்டினியில்தான்
ஆன்மாவின் வயிறு நிரம்புகிறது
வயிற்றில் அடிப்பவனை
வயிறு அடிக்கிறது.

சுமக்கும் வயிறு புனிதமானது
இன்று —
சுமக்காத வயிறும்
புனிதம் பெறுகிறது.

கூலி கிடைத்தால்தான்
வயிறு நிரம்பும்
இன்று —
காலி வயிறுக்கே
கூலி கிடைக்கிறது.

வயிற்றுக்குக் கஞ்சி வேண்டும்
நோன்பு நாட்களில்
கஞ்சிக்கு வயிறு வேண்டும்.

இது —
இறையோடு உரையாட
குடல் எழுதும் மடல்

ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்கள்
ஒடிந்து போவதின் ஒத்திகை
வள்ளல்களின் துள்ளல்களில்
திடீர் அதிகரிப்பு!
வரட்சியின் புரட்சியால்
ஈரம் சுரக்கும் நேரம்.

இது —
வேதம் வந்த மாதம்
அதனால்தான்
சத்தியம் சாத்தியமானது
கல்லறையின் ஞாபகத்தில்
சில்லரைகள் மறந்து போனது

புனித ரமலானே வருக வருக
புவியில் ரஹ்மானின் அருளைத் தருக

வரம்பு

மழை மீறினால்  வெள்ளம்
அலை மீறினால் சுனாமி

காற்று மீறினால் புயல்
பூமி மீறினால் பூகம்பம்

நெருப்பு மீறினால் புகை
வெறுப்பு மீறினால் பகை

நடை மீறினால் ஓட்டம்
தடை மீறினால் ஆட்டம்

மரம் மீறினால் காடு
வரம் மீறினால் கேடு

வேகம் மீறினால் விபத்து
சோகம் மீறினால் ஆபத்து

தூக்கம் மீறினால் சோம்பல்
துக்கம் மீறினால் சாம்பல்

உப்பு மீறினால் துப்பு
நட்பு மீறினால் தப்பு

மௌனம் மீறினால் பேச்சு
பேச்சு மீறினால் போச்சு

மனிதனே!
வாழ்வின் வரம்பைக் கற்றுக் கொள்
வசந்த காலத்தைப் பெற்றுக் கொள்.

மறதி

இறைவன் கொடுத்த வரம்
அவமானங்களின் சமாதி
துன்பம் துறக்கும் திறவுகோல்.

மறதி ஒரு தாலாட்டு
முகாரி ராகத்தின் முற்றுப் புள்ளி

மறதியின் பிரதியில்கூட
தோல்விகள் ஜெயிக்கும்
காயங்கள் மாயமாகும்…

இன்று —
மறக்கத் தெரிந்தவனுக்குத்தான்
ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது!
அஸ்தமிக்கும் சூரியனில்தானே
வெளிச்சம் பிறக்கிறது?

மறதியின் மடியில்தான்
துக்கம் தூரமாகி
தூக்கம் பிறக்கிறது

மனிதம் இல்லாத .
மனிதர்களைக்கூட
மறதி மன்னிக்கிறது…
மனிதனே
மறக்கப் பழகிக் கொள்!

எதை மறந்தாலும் சரி
மறதி மட்டும்
உன் ஞாபகத்தில் இருக்கட்டும்!

நாகூர் தீன்

Advertisements
This entry was posted in Poetry /கவிதை. Bookmark the permalink.

14 Responses to மூன்று கவிதைகள்

 1. sivakumae says:

  super good

 2. தீன் நானாவின் கவிதைகள் அபாரம்..!

  ஆன்மாவின் வயிற்றை
  நிரப்பும் ரமலானை
  வரவேற்கும் அழகு

  வரம்பு மீறாமல்
  வரம்பை பற்றியகற்றலை
  தூண்டும் பாங்கு

  மறக்கவே முடியாதபடி
  செய்துவிட்ட மறதி
  கவிதையின் ஒழுங்கு

  தீன் நானாவின்
  அரங்கேற்றம்
  நல்லவிதம்..!
  இனி இங்கே
  மூன்றாம் கண்ணாம்
  நெற்றிக் கண்
  (நிஜாம் காகா)
  திறக்காவிடில்
  (எழுதாவிடில்)
  தான் குற்றம்

  -நாகூர் இஸ்மாயில்

 3. வாழ்த்துக்கள் தீன். நிறைய எழுதுங்கள், நிஜாமையும் எழுதச் சொல்லுங்கள்.

 4. babythooyavan says:

  Assalamu alaikkum, iam baby from t.nagar, after so many years i saw ur photos and red ur “KAVITHAI” IAM very much excited, how lovely u have written, any way how r u? how is ur life? u have forgot all of us i think so. i have suddenly visited this website after seeing ur face i felt very happy macchan. anything else u can cont me in this email id, thank u and HAPPY RAMZAN. BY YASMINE SHUKOOR

  • Deen says:

   Thank you Baby. In fact, I sent a copy of these poems to your Mother to T.Nagar Address. Convey my regards to your Husband and all at home. Ramadhaan Mubarak. – Deen Machaan

 5. seasonsali says:

  அருமை அருமையிலும் அருமை .மாசால்லாஹ் .இதைவிட நான் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை

 6. seasonsali says:

  “அவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.”
  முக அமைப்பிலும் ஒற்றுமைகள் உண்டு

 7. seasonsali says:

  கடைசியில் உள்ள படம் அழகானதுதான் ஆனாலும் நோன்பு பற்றி எழுதி கடைசி படம் இதை விட்டு மற்ற அழகிய படம்
  போட்டுருக்கலாம்

 8. seasonsali says:

  RAMADAN KAREEM

  Assalamuallikum.
  May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
  We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
  Jazakkallahu khairan
  Mohamed Ali jinnah

 9. nagoorumi says:

  Dear friends, thanks for all your views and May God make this Ramadan a great blessing for all of us.

  Nagore Rumi

 10. MINA MARECAR says:

  இன்று இங்கு ரமலான் முதல் நாள். உங்கள் மூன்று கவிதையும் கண்டு மகிழ்ந்தேன்.குறிப்பாக
  நோன்பு கவிதை நெஞ்சில் நின்றது;
  வரம்பு மீறினா ல் என்ன ஆகும் என்பதை அழகாக சொன்னீர்.
  மறதியும் மறக்க முடியவில்லை
  பிரமாதம். கன்னி முயர்ச்சியாயினும் முதிர்ந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன..
  பாராட்டுக்கள்.
  நிறைய எழுதுக.- பாரிஸ் மீனா மரைக்கார்
  இன்று இங்கு ரமலான் முதல் நாள். உங்கள் மூன்று
  கவிதையும் கண்டு மகிழ்ந்தேன்.குறிப்பாக
  நோன்பு கவிதை நெஞ்சில் நின்றது;
  வரம்பு மீறினா ல் என்ன ஆகும் என்பதை அழகாக சொன்னீர்.
  மறதியும் மறக்க முடியவில்லை
  பிரமாதம். கன்னி முயர்ச்சியாயினும் முதிர்ந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன..
  பாராட்டுக்கள்.
  நிறைய எழுதுக.- மீனா மரைக்கார் – பாரிஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s