ரமளான் சிந்தனை-1 : ஏ.ஹெச்.ஹத்தீப்

நண்பர் ஆபிதீனின் தளத்தில் வந்திருந்த சமீபத்தைய குறுங்கட்டுரை இது. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள சரியான சிந்தனை. எனவே அதை இங்கே மறுபதிப்பு செய்கிறேன். குங்குமத்தில் எனது பேட்டி ஒன்று கொஞ்ச நாளக்கு முன்பு வந்திருந்தது. நான் சென்னையில் இருந்த பெசண்ட் நகர் வீட்டுக்கே வந்து எடுத்தார்கள். தீவிரவாதம் தொடர்பான சில கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். நான் சொன்ன பதில்களை வந்திருந்த ஒரு சகோதரி குறித்துக் கொண்டார். அதிலிருந்து ‘மீட்டு’ அவர் அல்லது அந்த குழு எழுதிய கட்டுரைதான் யார் தீவிரவாதி என்ற தலைப்பில் (தலைப்புக்குப் பக்கத்தில் என் படத்தையும் போட்டு) வந்திருந்தது!

அந்த கட்டுரையில் / பேட்டியில் நான் சொல்லியிருந்த மையமான கருத்து தீவிரவாதிக்கு மதம் கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதுதான்.

அதை மறுபிரசுரம் செய்யக் கேட்டு சத்திய மார்க்கம் என்ற இணைய இதழ் சகோதரர்கள் கேட்டுக் கொண்டார்கள். நானும் அளித்தேன். அது தொடர்பாக நான் கடிதம் எழுத வேண்டி வந்தபோது வணக்கம் என்று தொடங்கியிருந்தேன். அதற்கு பலத்த எதிர்ப்பு வந்தது. அந்த சொல்லை பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் பதில் கடிதத்தை ‘மறுபடியும் வணக்கம்’ என்று தொடங்கி ஒரு சொல்லைச் சொல்வதால் எதுவும் மாறிவிடுவதில்லை, எல்லாம் மனதைப் பொறுத்த விஷயம் என்று விளக்க முயற்சித்தேன். ஆனாலும் என் கட்டுரையையும் கடிதத்தையும் ஒரேயடியாக அதிலிருந்து நீக்கிவிடுவதே வழி என்று ஆனது என்று நினைக்கிறேன்.

இப்போது அது பற்றி ஹத்தீப் அவர்கள் புதியதொரு கோணத்தை முன் வைக்கிறார். படியுங்கள்.

ரமளான் சிந்தனை-1 : ஏ.ஹெச்.ஹத்தீப்

ஆகஸ்ட் 14, 2010 இல் 5:37 மு.பகல் (ஹத்தீப் சாஹிப்)

“வணக்கம்”என்று இந்திய பாணியில் முகமன் கூறினால் இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்ற பலரது கேள்விக்கு நவீன ஏகத்துவவாதிகள் “ஆம்”என்று பதிலளிக்கின்றனர். இந்தக் கேள்வியையே ஒரு வணக்கமாக மாற்றியதில் அவர்களது கைவண்ணமும் வாய்வண்ணமும் அரும்பணியாற்றியிருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று “பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை செய்வதுகூட ஒருவகை வணக்கம்தான். வணக்கம் இறைவனுக்கு மட்டுமே சொந்தம். ஆகவே பெற்றோரை மதிப்பதுகூட இஸ்லாத்திற்கு விரோதமானது’ என்று தங்களைப் பின்பற்றுவோருக்கு எடுத்துரைத்ததில்கூட உள்நோக்கம் இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமது சமுதாயத்தில் பெரும்பான்மை இளைஞர்கள் பெற்றோர்களை மதிப்பவர்கள். அவர்களின் அறிவுரைகளுக்குச் செவி சாய்ப்பவர்கள். இத்தகைய முஸ்லிம்கள், பெற்றோர்களின் புத்திமதிக்கு எதிரான எந்தப் பிரச்சாரத்தையும் ஏற்பதில் கஷ்டமிருக்கிறது. எனவே முதலில் பெற்றோர்களிடமிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மேற்கண்ட பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்குமோ என்று நம்புவதற்கு அதிகக் காரணமிருக்கிறது.

முதலில் ‘வணக்கம்’ என்று சொன்னவுடனேயே அது இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்று பார்க்க வேண்டும். தொழுவதும் வணங்குவதும் ஒரே மாதிரிச் செயல்களா என்பதை அவர்கள் விளக்க வேண்டும். ஏனெனில் தொழுகைக்குமுன் செய்துகொள்ள வேண்டிய உலூ, நிய்யத், கிப்லாவை நோக்குதல் போன்ற முக்கியக் காரியங்கள் உண்டு. தொழுகை போன்றதுதான் வணக்கமும் என்றால், அதற்குமுன்னால் செய்துகொள்ள வேண்டிய முக்கிய செயல்கள் இருக்கவே செய்யும். வணக்கம் என்பது திக்ரு, துஆ போன்ற செயல்கள்; அவற்றிற்கு உலூ போன்றவை தேவையில்லை என்றாலும் மிக முக்கியமாக நிய்யத் கட்டாயம். இயந்திரகதியில் செய்யப்படுகின்ற எந்தக் காரியத்திற்கு இஸ்லாத்தின் ஆசீர்வாதம் கிடையாது. மனம் ஒன்றிச் செய்யாத எந்த வணக்கமும் முழுமையானதல்ல. அதனால்தான், தக்பீர் கட்டிவிட்டால், இதரச் சிந்தனைகள் மற்றும் இதரக் காரியங்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.( தக்பீர் தஹ்ரீமா)

‘இறைவனை வணங்குகிறோம்’ என்ற உறுதி ஏற்பின்றி ‘வணக்கம்’என்று சொன்னவுடனேயே அது வணக்கமாகிவிடுகிறது என்று பிடிவாதம் பிடிப்பது இஸ்லாம் சார்ந்த சிந்தனையல்ல. சமுதாயத்தில் புதுமையாக அல்லது சர்ச்சைக்குரியதாக ஏதாவது சொல்ல வேண்டுமென்ற மன அரிப்பின் அடிப்படையில் கூறப்பட்டவையே.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்: ‘வணக்கம்’என்றவுடனேயே இறைவனை வணங்குவதாக ஆகிவிடும் என்றால், தொழுகை என்றதும் தொழுததாகவும், நோன்பு என்றதும் நோன்பு நோற்றதாகவும் ஜகாத் என்றதும் ஜகாத் அளித்ததாகவும் ஆகிவிடுகிறதா?

பெற்றோர்களுக்கு மரியாதை செய்வதுகூட இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆணித்தனமாக வாதிடுகிறார்கள். இறைவனுக்கு இணை வைக்காமல், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் பெற்றோர்களை மதிக்கும்படியும் கண்ணியப்படுத்தும்படியும் திருமறை கட்டளை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு தொழுகையில் மட்டுமின்றி, அவர்களது மரணத்திற்குப் பின்னரும்கூட அவர்களுக்காகப் பிரார்த்திப்பது ஒவ்வொருவருக்கும் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
“பெற்றோர்களைப் புறக்கணியுங்கள்” என்ற அறிவுரை பிறச் சமூகத்தினரிடையே இஸ்லாத்தின் கண்ணியத்தைக் குறைக்கவே உதவுகிறது என்பதை மார்க்க மாமேதைகள் சீர்தூக்கிப் பார்ப்பது இன்றைய இன்றியமையாத கடமை.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s