நம்பிக்கையின் படித்தரங்கள்

நம்பிக்கையின் படித்தரங்கள்


 

கடவுள் நம்பிக்கைக்கு நான்கு படி நிலைகள் உண்டு. நான்குமே சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. படி நிலைகள் என்று சொல்வதைவிட படிகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு படியாகத்தான் நாம் கடந்து போக வேண்டும். அகலக் கால் வைத்து முதல் படியிலிருந்து மூன்றாம் படிக்குப் போக முடியாது. அவசர அவசரமாகவோ, வேகமாகவோகூடப் போக முடியாது. அப்படிச் செல்ல முயன்றால் படிகள் படிகளாய் இருக்காது. பள்ளத் தாக்குகளாய் மாறும் அபாயம் உண்டு.

ஒவ்வொரு படியாக, நிதானமாகப் போக வேண்டும். அப்போதுதான் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அங்கே போய்ச் சேரலாம். நம்பிக்கை என்பது ஒரு வழியே தவிர,  போய்ச்சேர வேண்டிய இடமல்ல. படியிலேயே நின்று கொண்டிருந்தால் பயணம் சாத்தியமில்லை.

இங்கே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். நம்பிக்கையை நோக்கி ஒருவர் பயணிக்க முடியாது. நம்பிக்கையிலிருந்துதான் பயணிக்க வேண்டும். நம்பிக்கைதான் தொடக்கம். ’இறைவன் இல்லை என்ற படியிலிருந்து இறைவனைத் தவிர என்ற படிக்கு’ என்று அல்லாமா இக்பால் கூறுவது போல.

எனவே முதல் படி நம்பிக்கை ஒரு மதம் சார்ந்ததாக, ஒரு கோட்பாடு, ஒரு கொள்கை சார்ந்ததாக, ஒரு குறிப்பிட்ட கடவுள் சார்ந்ததாக, மறுமை, சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாள் — இப்படி எதைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இது நம்பிக்கையின் முதல் படி. இந்த படியில் இருப்பவர்கள் கோடிக்கணக்கானோர். இவர்கள் அனைவரும் ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள்தான். ஏனெனில் அந்த நம்பிக்கையின் மூலமாக தாங்கள் எதையோ அடைந்து விட்டதாகவோ, அல்லது அடையப் போவதாகவோ அவர்கள் நம்புகிறார்கள். இது நல்லதுதான்.

ஆனால் இங்கேயே நின்றுவிடுவது நல்லதல்ல. இங்கேயே நின்றுவிட்டால் இறைவனை நோக்கிய பயணத்தில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளப் போதுமானது என்றால், இந்நேரம் கோடிக்கணக்கானோர் உண்மையை அறிந்த புத்தர்களாக, மகாவீரர்களாக, மகான்களாக, ஞானிகளாக இருப்பார்கள். இந்த உலகை ஆட்டி வைக்கும் மனிதனால் உருவாகும் பல பிரச்சனைகள் இல்லாது ஒழிந்து போயிருக்கும்.

ஆனால் நடப்பு நிஜம் இது உண்மையில்லை என்பதையே நமக்குக் காட்டுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது அதற்கும் முன்னால் கொடுக்கப்பட்ட நம்பிக்கைகளை அப்படியே வாங்கி நாமும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு கிருஷ்ணருக்கு, ஒரு ஜீசஸுக்கு, ஒரு மோசஸுக்கு, ஒரு முஹம்மதுக்குத் தெளிவான உண்மை நமக்கும் தெளிவாகியுள்ளதா?

இல்லை என்பதுதான் நேர்மையான பதில்.  பல நூற்றாண்டுகளாக படிக்கட்டிலேயே நாம் நின்றுவிட்டோம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நம்பிக்கையின் நான்கு படித்தரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எந்தப் படியில் நிற்கிறோம் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வகை நம்பிக்கை

இது பொதுவான நம்பிக்கை. கும்பல் நம்பிக்கை. சாதாரண மக்களின் நம்பிக்கை.

கடவுள் இருக்கிறார் ஆமாம் கடவுள் இருக்கிறார். ஒரு கடவுள்தான் இருக்கிறான். ஆமாம் ஒரு கடவுள்தான் இருக்கிறான். பல கடவுள்கள் இருக்கின்றனர். ஆமாம், பல கடவுள்கள் இருக்கின்றனர். கடவுள் இல்லை.ஆமாம் கடவுள் இல்லை, இல்லவே இல்லை.

இம்மாதிரியான நம்பிக்கை. இது பொது நம்பிக்கை. பரவலான நம்பிக்கை. பத்தில் ஒன்பது பேருக்கு இருக்கும் நம்பிக்கை. இதில் தவறு என்ன? இது மாறக்கூடியது. உதாரணமாக, கடவுளுக்கு உருவம் உண்டு என்பது இந்து மத நம்பிக்கை. அதே சமயம், ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று சொல்பவரும், கடவுள் இல்லை என்று சொல்பவரும் இந்துவாக இருக்கும் சாத்தியம் உண்டு என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. இறைவனுக்கு உருவம் இல்லை என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஆனால் உருவம் உண்டு, ஆனால் நம் ஜடக் கண்களால் அவனைப் பார்க்க முடியாது என்று சொல்பவர்களும் முஸ்லிம்களாக இருக்கும் சாத்தியக்கூறையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கும்பல் நம்பிக்கை என்பது கூடக்கூடியது, அல்லது குறையக் கூடியது. உடையக் கூடியது, அல்லது மறையக் கூடியது. ரஷ்யப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் ரஷ்ய மன்னர் ஜாரின் ஓவியமும், ரஷ்ய அரசி ஜாரினியின் ஓவியமும் அலங்கரிக்காத தெருக்களே கிடையாது. மக்கள் ஒரு தெய்வத்துக்குக் கொடுக்கும் மதிப்பை ஜாருக்கும், ஜாரினிக்கும் கொடுத்தனர். அவர்கள் தெருவில் போனால், கடவுளைத் தரிசித்துவிட்டதைப் போல புளகாங்கிதம் அடைந்தனர்.

ஆனால் புரட்சிக் காலத்தின்போது, அதே மக்கள்தான் தெருத்தெருவாக இறங்கிச் சென்று ஜார், மற்றும் ஜாரினியின் அடையாளச் சின்னங்கள் அத்தனையையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இந்த வரலாறு ஒரு தொடர்கதை என்பதை நாம் அறிவோம். ஜார் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மரியாதையையும் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஒரு கணம் போதுமானதாக இருந்தது. ஏன்? அவர்களது நம்பிக்கை கும்பல் நம்பிக்கை.

ஆனால் கும்பல் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. சாம்ராஜ்ஜியங்களைச் சாய்க்க வல்லது. புதிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்க வல்லது. தேர்தல் காலத்தில் இதை நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கலாம். முன்னர் தோற்ற கட்சி பின்னர் ஜெயிக்கும். அதைத் தோற்க வைத்ததும், ஜெயிக்க வைத்ததும் அக்கட்சியின்மீது மக்கள் கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கை தேர்தலுக்குத் தேர்தல் மாறிக் கொண்டே இருக்கும்.

நம் அனைவரையும் இந்த நம்பிக்கை ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்டி வைக்கத்தான் செய்கிறது. நாம் ஒத்துக் கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி.

இரண்டாவது வகை நம்பிக்கை

இது ஒரு தலைவன் மீதான நம்பிக்கை. ஒரு தனி மனிதன் மீதான நம்பிக்கை. ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு ஹிட்லர், ஒரு முசோலின், ஒரு நாராயண மூர்த்தி, ஒரு பில் கேட்ஸ் இப்படி அது யாராக வேண்டுமானலும், எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் இறை நம்பிக்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால், அது தொடர்பானவர்களை தலைவர்களாக, மாடலாக, ஏற்றுக் கொள்வதை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒரு இயேசு, ஒரு மோசஸ், ஒரு முஹம்மது, ஒரு கிருஷ்ணர், ஒரு புத்தர், ஒரு மகா வீரர், ஒரு பரம ஹம்சர் இப்படி.

நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொன்னால், நான் இயேசுவைப் பின்பற்றுபவன் என்றும், நான் ஒரு முஸ்லிம் என்று சொன்னால், நான் முஹம்மது நபியைப் பின்பற்றுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

இவ்வகையான நம்பிக்கை முதல் வகை நம்பிக்கையைவிட உயர்ந்தது. முதல் வகை நம்பிக்கை அரூபமானது, வெறும் கருத்து ரீதியானது. ஆனால் இந்த இரண்டாவது வகை நம்பிக்கை ரொம்பவும் திடமானது. ரத்தமும், சதையும், உயிரும், வாழ்வும் கொண்ட ஒரு முன் மாதிரி மனிதர் மீதான நம்பிக்கை சார்ந்தது.

மூன்றாவது வகை நம்பிக்கை

இது நம் சிந்தனை சார்ந்தது. நாமே அறிவுப் பூர்வமாக சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்த பிறகு ஏற்றுக் கொண்ட நம்பிக்கை. ஒருவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டதல்ல இது. அதையே இறைவன் கொடுத்த மூளையை உபயோகித்து, சிந்தித்து, பின்பு சரிதான் என்று ஏற்றுக்கொண்ட நம்பிக்கை நிலை இது. இது நேர்மறையானதாகவும் இருக்கலாம், எதிர் மறையானதாகவும் இருக்கலாம்.

சிந்தித்துப் பார்த்து, இந்த நம்பிக்கை எனக்குத் தேவையில்லை என்ற நம்பிக்கைக்கும் அல்லது முடிவுக்கும் ஒருவர் வரலாம். ”நான் ஏன் கிறிஸ்தவனல்ல?” என்ற தலைப்பில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நீண்டதொரு கட்டுரை எழுதினார். அதில் தான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்று அவர் அறிவுக்குப் பட்ட வகையில் சிந்தித்து அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.

இந்த மூன்றாவது வகையான நம்பிக்கையானது அவநம்பிக்கையில் கொண்டுவிடும் அபாயமும் உண்டு. அதோடு, இந்த வகை நம்பிக்கைக்கு சில வரம்புகள், வரையறைகள் உண்டு. இதன் முக்கியக் குறைபாடு இது அறிவைச் சார்ந்து இருப்பதுதான்!

ஏனெனில் அறிவு உணர்ச்சியைச் சார்ந்து இருக்கிறது! ஆம், பல சமயங்களில் உணர்ச்சியின் அடிமையாகவே மனித அறிவு செயல்படுகிறது.

பாபர் மசூதியை ஏன் இடித்தீர்கள்? சோம நாதபுரக் கோயிலை ஏன் முற்றுகை இட்டீர்கள்? தேவாலயத்தை ஏன் கொளுத்தினீர்கள்? கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கீறி சிசுவை வெளியில் எடுத்து தீயில் எறிய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? யாரோ ஒருவர்மீது வழக்கு போட்டதற்காக அப்பாவி இளம் மாணவிகளை பேருந்துக்குள் வைத்து ஏன் தீமூட்டிக் கொன்றீர்கள்? இயற்கையாக கடலில் ஏற்பட்ட மணல் திட்டை புராண காலத்துப் பாலம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? அப்பாவி மக்களை குண்டு வைத்து ஏன் கொன்றீர்கள்? ஏன் கற்பழித்தீர்கள்?

இப்படிப்பட்ட ஏன்-கள் ஏராளம். அதையெல்லாம் செய்தவர்கள் அல்லது சொல்பவர்கள் அதற்கான காரணங்களை நிச்சயமாக வைத்திருந்தனர். அல்லது வைத்திருக்கின்றனர். லட்சக் கணக்கான அப்பாவி மக்களை எப்படிக் கொல்ல உத்தரவு கொடுத்தாய் என்று கேட்டால் நிச்சயம் ஹிட்லரிடம் அதற்கு ஒரு அல்லது பல ‘நியாயமான’ காரணங்கள் இருக்கும். காந்தியைக் கொல்ல கோட்சேவுக்கு ஒரு காரணமிருந்தது. எல்லாக் குற்றவாளிகளின் குற்றங்களுக்கும் பின்னால் அவரவர்க்கான காரணங்கள் நிச்சயம் உண்டு. அந்தக் காரணங்கள் சட்டத்தோடும், சமூகத்தோடு ஒத்துப் போகாமல் இருக்கலாம்.

ஆனால் இந்தக் காரணங்கள் நிரந்தரமானவை அல்ல. உணர்ச்சிகள் மாறும்போது காரணங்களும் மாறும். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுபவர் அதற்கான காரணத்தைச் சொல்வார். மீண்டும் அவர் தாய்க் கட்சிக்கே திரும்பும்போது அதற்கான காரணமும் அவரிடம் தயாராக இருக்கும். ஒரு மனிதனை நாம் விரும்புவதற்கு சில காரணங்கள் இருக்கும். அதே மனிதனை கொஞ்ச நாள் கழித்து நாம் வெறுக்கலாம். அதற்கும் காரணங்கள் இருக்கும்.

அறிவென்பது தட்பவெப்ப நிலை மாதிரி மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் வெயிலடிக்கும். கொஞ்ச நேரம் கழித்து குளிரெடுக்கும். இந்த அறிவை நம்பி வைக்கின்ற நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்க முடியும்?!

நான்காவது வகை நம்பிக்கை

ஆங்கிலத்தில் conviction என்றொரு சொல் உண்டு. ஒரு விதமான நிச்சயத்தன்மை என்று இதைச் சொல்லலாம். இவ்விதமான நிச்சயத்தன்மையின்மீது கட்டப்படும் நம்பிக்கைதான் நான்காவது வகையிலானது. இது மனித அறிவுக்கும் மேலானது. இவ்விதமான நிச்சயத்தன்மை கிடைக்க கொஞ்ச காலமாகும். பின்னர் ஒரு கட்டத்தில் அதுவாகவே நமக்குக் கிடைக்கும்.

அன்றுதான் நமக்கு அருள் பாலிக்கப்பட்ட நாள் என்று சொல்லலாம்.

அந்த நிச்சயத்தன்மை சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்களுக்கு அப்பாற்பட்டது. தூய்மையானது. இவ்விதமான நிச்சயத்தன்மையில் உருவாகும் நம்பிக்கையை எந்த அறிவாலும் உடைக்க முடியாது. ”காற்றடித்தால் மலை அசையுமா?” என்று கேட்பார் சூஃபி கவிஞானி ஜலாலுத்தீன் ரூமி. அப்படிப்பட்ட மலை போன்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஒருவருக்கு வந்து விட்டால், அதை வார்த்தைகளால் அடுத்தவருக்கு விளக்க முடியாமல்கூடப் போகலாம். ஆனாலும் நூற்றுக்கு நூறு இந்த நம்பிக்கை கொண்டவர் தெளிவாக இருப்பார். ஒரு விஷயத்தில் நேரடி அனுபவம் கொண்டவர் எந்த அளவு நம்புவாரோ அதைவிட உறுதியாக இந்த நான்காவது வகை நம்பிக்கை கொண்டவர் இருப்பார். அவரைப் பொறுத்தவரை எந்த ஆதாரமும் தேவையில்லை.

சொர்க்கத்தின் ஏழு கதவுகளும் திறந்து காட்டப்பட்டாலும், நரகத்தில் ஏழு வாயில்களும் திறந்து காட்டப்பட்டாலும், எனது நம்பிக்கை கூடப் போவதுமில்லை, குறையப் போவதுமில்லை என்று அலீ சொன்னார். அந்த வகை நம்பிக்கை இது. இது கூடாது, குறையாது. இது பரிபூரணமானது. நிரந்தரமானது.

இந்த நம்பிக்கையைத்தான் சூஃபிகள் ஈமான் என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.

நமது நம்பிக்கை எந்த வகையைச் சேர்ந்தது?

நம்பிக்கையுடன்
நாகூர் ரூமி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

11 Responses to நம்பிக்கையின் படித்தரங்கள்

 1. seasonsali says:

  புதுமையாக சிந்திக்கும் திறன், தத்துவம் கொண்ட தங்களிடமிருந்து இம்மாதிரி கட்டுரைகள் அதிகம் கிடைக்கும் .
  நரகத்திற்கு பயந்து அல்லது சுவர்கத்திற்கு ஆசைப்பட்டு இறைவா உன்னை தொழவில்லை என்னை படைத்தமைக்கு உன்னை நேசித்து தொழுது வருவேன் இறைவா . எனது ரட்சகன் நீ! என் தொழுகையை ஏட்றுக்கொள் !

 2. த. துரைவேல் says:

  நன்றாக எழுதுபவர் நீங்கள் என நிரூபிக்கும் கட்டுரை இது. ஆனாலும் உங்கள் கருத்திற்கு ஆதரவான ஒரு எதிர்வினைக்கு தவறாய் பொருள் கொண்டு மிக மோசமான ஒரு எதிர்வினை த்ங்களிடமிர்ந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை, தங்கள் தகுதிக்கும் சற்றும் பொருத்தமற்ற பதிவது. இது சம்பந்தமாக பாலா என்பவரின் பதிவை இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.
  பாலா கூற்று:
  >>அக்காகி ஆப்பு என்பவர் போகிற போக்கில் நாகூர் தர்கா அனுமன் இலங்கைக்குப் போகும் வழியில் வால் பட்ட இடம் என்று விஷம் கக்குவார்//

  அவர் கரசேவைக்கான காரணங்களை நக்கலடித்திருக்கிறார். நீங்கள் தான் சரியாகப் படிக்கவில்லை. மீண்டுமொரு முறை அதைப் படித்துப் பாருங்கள்.
  இன்னும் புரியலையா? கணேசன் தாஜ் மஹாலை சிவன் கோயிலுன்னு சொல்றார். அக்காகி, அவ்ளோ தூரம் ஏன் போறீங்க தமிழ் நாட்டிலேயே, வேளாங்கன்னிய சீதாபிராட்டியோட கோவில்னு சொல்லுங்க, நாகூர் தர்காவ அனுமன் வால் பட்ட இடம்னு சொல்லுங்கன்னு நக்கல் பண்றார். நீங்க இதைப்படிச்சுட்டு கோவப்பட்டு பேசறீங்க. ஐயோ! ஐயோ!

 3. நாகூர் ரூமி says:

  அன்பு திரு துரைவேல், ரொம்ப நன்றி. நானும் இப்பதிவை தமிழ் பேப்பரிலேயே பார்த்துவிட்டேன்.பதிலும் எழுதி விட்டேன். எனினும், உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி. நீங்கள் என் மீதுவைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். தமிழ்பேப்பரில் அநீ-யின் கட்டுரைகள் பொதுவாக ஹிந்துத்துவக் கருத்துக்களை மேன்மைப்படுத்துவதாகவும், நியாயப் படுத்துவதாகவும் இருப்பதாகவே நான்நினைக்கிறேன். மற்றபடி ஒன்றுமில்லை.
  அன்புடன்
  ரூமி

 4. யாழன் ஆதி says:

  நல்ல கட்டுரை. நம்பிக்கைகளின் படித்தரம்.

 5. ஒரு பிரமாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வெற்றிகரமான முதல் அத்தியாயமாகத் தான் இந்த கட்டுரையை பார்க்கின்றேன். இந்த வகையில் அதிகமதிகம் உங்களிடமிருந்து வெளிபட வேண்டும் என்ற கோரிக்கையுடன். என் வலைப்பக்கத்தில் உங்கள் பெயருடன் இதை மீள்பதிவு செய்ய அனுமதி வேண்டுகின்றேன்.

 6. நாகூர் ரூமி says:

  நிச்சயம் சகோதரரே, போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்னது சரியே.

 7. நம்பிக்கையை அறிவு சார்ந்து எல்லோராலும் எழுத முடியாது. தங்களிடம் அத் திறமை இருப்பதைக் காண்கிறேன். தாங்கள் இது போன்று இன்னும் எழுத வேண்டும் என என் ஆவல்.

 8. coimbatorebalu says:

  100 percent true
  நூற்றுக்கு நூறு இந்த நம்பிக்கை கொண்டவர் தெளிவாக இருப்பார். ஒரு விஷயத்தில் நேரடி அனுபவம் கொண்டவர் எந்த அளவு நம்புவாரோ அதைவிட உறுதியாக இந்த நான்காவது வகை நம்பிக்கை கொண்டவர் இருப்பார்.
  நம்பிக்கையுடன்
  நாகூர் ரூமி ummai yen vazhikattiyaga yerkiren
  coimbatorebalu

 9. நாகூர் ரூமி says:

  அன்பு அரபுத்தமிழன், கோவை பாபு, நன்றிகள்

 10. இந்த கட்டுரையை என் வலைதளத்தில் இணைத்து விட்டேன். ஒரு சின்ன முகவுரையுடன்.
  அன்புடன்,
  ஒ.நூருல் அமீன்

 11. நாகூர் ரூமி says:

  நன்றி நூருல் அமீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s