அப்பாடா — நம்மால் முடியும்

அப்பாடா!

நம்மால் முடியும்

(The Audacity of Hope)

கிழக்கு, முதல் பதிப்பு டிசம்பர் 2009.

 

அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய மூன்று நூல்களில் ஒன்றை என்னிடம் கொடுத்து மொழி பெயர்க்கச் சொன்னார்கள் கிழக்கு நண்பர்கள். நானும் ஒத்துக் கொண்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்த நூல் மிக முக்கியமான நூல்தான். ஆனால் அது என் ஆர்வங்களுக்கு அப்பாற்பட்டது. ஒபாமாவின் அரசியல் வாழ்வு பற்றியது. The Audacity of Hope என்ற நூல். இதற்கு பதிலாக Dreams from My Father என்ற நூலைக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

என்றாலும் ஏற்றுக் கொண்ட பணிக்கு என்னால் ஆன நியாயத்தைச் செய்ய நான் எப்போதுமே தயங்கியதில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட இந்த நூலை — என்று நினைக்கிறேன் — இரவு பகலாக — குறிப்பாக, வழக்கம்போல, இரவுகளில் — அமர்ந்து மொழி பெயர்த்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.

என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கடினமான நூலை நான் மொழிபெயர்த்ததில்லை.

அப்படி என்ன கஷ்டம் என்கிறீர்களா?

1. ஒபாமாவின் ஆங்கில நடை. Very long, complex and compound sentences.

இது எனக்கான முதல் சவால். வாக்கியங்களை உடைத்து உடைத்துப் போட்டு, அதே சமயம் அர்த்தம் கெடாமல் எழுத வேண்டியிருந்தது.

2. அமெரிக்க வரலாறு.

அனேகமாக ஒவ்வொரு பக்கத்திலும் அமெரிக்க வராற்று நிகழ்ச்சிகள், அமெரிக்கத் தலைவர்கள் தொடர்பான குறிப்புகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள நான் கலைக்களஞ்சியம், மற்றும் இணையத்தின் உதவியை நாட வேண்டியிருந்தது. மொழி பெயர்க்க உட்காரும் போதெல்லாம் இணையத்தொடர்பிலேயே இருக்க வேண்டி வந்தது. எனவே ஆங்காங்கே அடிக்குறிப்புகள் கொடுக்க வேண்டி வந்தது.

3. அமெரிக்க ஆங்கிலம்.

சாதாரண ஆங்கிலத்துக்கும், அதாவது ஸ்டாண்டர்ட் / ப்ரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் உண்டு. இலக்கியத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா மாபெரும் ஆங்கில இலக்கியங்களைக் கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தின்மீது எனக்கு மரியாதை கிடையாது. அது வலிந்து திணிக்கப்பட்ட,  ‘அமெரிக்க ஈகோ’ அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்றே நம்புகிறேன். அதனால் ப்ரிட்டிஷ் ஆங்கிலத்தில் இருக்கும் இயற்கையான அழகு, ஒரு native beauty அதில் மிஸ்ஸிங்! ஆனால் ஒபாமாவின் நூலை மொழிபெயர்ப்பதில் பிரச்சனை அமெரிக்க ஆங்கிலம் என் கருத்தில் அழகானதல்ல என்பதல்ல. எனக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் பரிச்சயமில்லாததுதான்.

எனவே நான் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பக்கத்திலும் நின்று, நிதானித்து, தகவல் சேகரித்து, சரிபார்த்த பிறகே மொழி பெயர்க்க வேண்டி இருந்தது.

இவ்விதமாக பக்கத்துக்குப் பக்கம் எனக்கு சவாலையும் முதுகு வலியையும் ஒபாமா பல மாதங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் ஒரு புத்தகத்தை மொழி பெயர்த்து முடித்த பிறகு, மறுபடியும் அதை fair செய்வேன். அப்போது அதை முற்றிலுமாக எளிமைப்படுத்துவேன். மூல நூலின் அர்த்தம் கெடாதபடி. ஆனால் நான் அப்படிச் செய்ய முடியாமல் first draft-ஐ யே ‘நீங்களே எடிட்  செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லி அனுப்பிய ஒரே புத்தகம் இதுதான்.

நான் நினைத்த மாதிரியே ’கடுமையாக’ எடிட் செய்யப்பட்டே இது வெளி வந்துள்ளது. ஆனால் வெளி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வரலாறு காணாத தாமதத்துக்குப் பிறகு இது வெளி வந்துள்ளது. இவ்வளவு லேட்டாகத்தான் வரும் என்று சொல்லி இருந்தால் நானே இன்னும் அழகாக எடிட் செய்து, மாற்றிக் கொடுத்திருப்பேன். என்றாலும் என்னுடைய வேலைய கிழக்கும், குறிப்பாக ராகவனும் குறைத்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு நன்றி.

சில உதாரணங்கள். புத்தகத்தின் ஆங்கிலத் தலைப்பு THE AUDACIY OF HOPE. தமிழில் நான் அதை 1. நம்பிக்கையின் பிடிவாதம் என்றும், 2. பிடிவாதமான நம்பிக்கை என்றும், 3. உடும்பு நம்பிக்கை என்றும் தமிழ்ப்படுத்தி இருந்தேன்.

ஆனால் அது சில நாட்களுக்கு முன் வெளி வந்தபோது, நம்மால் முடியும் என்ற தலைப்பில் வந்தது. தலைப்பு எளிமையாக உள்ளது. கிழக்குக்கு இலக்கியம் முக்கியமல்ல. வணிகம்தான் முக்கியம். ரொம்ப சரி.

முதல் அத்தியாயம் Republicans and Democrats என்பது. நான் அதை ரிபப்ளிகன்களும் டெமக்ராட்டுகளும் என்று தமிழ்ப்படுத்தியிருந்தேன். (டெமக்ராட் என்பதுதான் சரியான உச்சரிப்பு. அதே போல ஒபாமாவின் முழுப்பெயர் Barack Hussein Obama the Junior என்பது. அவருடைய முஸ்லிம் தந்தை Barack Hussein Obama Senior–ன் பெயரால் அழைக்கப்படுகிறார். நம்ம ஊரில் தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள். இங்கே மகனுக்கே தந்தையின் பெயரை வைக்கிறார்கள். முதல் பெயர் ’பராக்’ என்றே உச்சரிக்கவும் எழுதவும் படுகிறது.

ஆனால் என்னுடைய புரிந்துகொள்ளலில், அது ஒரு முஸ்லிம் பெயர் என்பதால், அது பாரக் என்றே உச்சரிக்கப்பட வேண்டும்.

எனவே நான் பாரக் ஹுசைன் ஒபாமா என்றுதான் எழுதியிருந்தேன்.

ஆனால் வணிகம் காரணமாகவோ என்னவோ, அதுவும் பராக் என்றே மாற்றப்பட்டுவிட்டது.

முதல் அத்தியாயத்தின் தலைப்பு ரிபப்ளிக் கட்சியினரும் டெமாக்ரடிக் கட்சியினரும் என்று விரிவாக மாற்றப்பட்டுவிட்டது. தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு. ஆனால் நான் கொடுத்திருந்த அடிக்குறிப்புகள் எதுவும் நூலில் கொடுக்கப்படவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. படிக்கின்ற flow-வைக் கெடுத்துவிடும் என்று விட்டிருக்கலாம். அல்லது வாசகர்கள் என்னைப் போல அமெரிக்க வரலாறு தெரியாத கூமு-க்கள் அல்ல என்றும் விட்டிருக்கலாம்!

எப்படியோ. ஒபாமா மும்பைக்கும் டெல்லிக்கும் விஜயம் செய்திருக்கும் சமயத்தில் நான் மொழிபெயர்த்த அவருடைய நூலும் சந்தைக்கு வந்துவிட்டது.  புத்தகம் வழக்கம்போல அழகாக வெளியிடப்பட்டுள்ளது. 456 பக்கங்கள். விலை ரூ 300/-

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

9 Responses to அப்பாடா — நம்மால் முடியும்

 1. நாகூர் அப்துல் ரவூஃப் என்னும் என் ஜி.எம் (உங்கள் நண்பர் தான் ) உங்கள் மொழி பெயர்ப்பு திறன் பற்றி வியந்து கூறினார்.

  எனது அகப்பார்வை புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு சில நண்பர்கள் வற்புறுத்தினர். எனது அவகாசமின்மையாலும், மொழிபெயர்ப்பில் பயிற்சி இன்மையாலும், வேலை பளுவின் விளைவாய் பெற்ற முதுகு வலியாலும் – சுருக்கமாக சொன்னால் இயலாமையாலும் ஒரு பக்கத்துக்கு மேல் தொடர முடியவில்லை. கால வரையின்றி ஒத்தி வைத்து விட்டேன்.

  உங்கள் உழைப்பின் வலியை என்னால் உணர முடிகின்றது.வாழ்த்துக்கள்.

 2. உங்களுக்கே விருப்பமில்லாத நூலை மொழி பெயர்க்க ஏன் உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை செலவிடுகிறீர்கள். அந்த நேரத்தில் இரண்டு புதிய புத்தகங்களை எழுதியிருக்கலாமே! நட்புக்காக வலைந்ததா? கொடுத்து வைத்தவர் ராகவன் இப்படி ஒரு கர்ணனை பெற்றதற்கு.

 3. நாகூர் ரூமி says:

  அன்பு நூருல் அமீன், கருத்துக்கு நன்றி. விருப்பமில்லாமல் எடுத்துக் கொள்ளவில்லை. வாங்கிய பிறகுதான் அது அரசியல் வாழ்வு பற்றிய புத்தகம் என்று தெரியும். இதுவும் மிக முக்கியமான நூல்தான். அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு என்பதாலும், ஒபாமாவுடையது என்பதாலும், இப்படியும் ஒன்று செய்து பார்த்துவிடலாமே என்றும் ஒத்துக் கொண்டேன். என்றாலும் இதுபோன்ற பணிகளை நான் இனி தவிர்த்துக் கொள்வதே நல்லது. நன்றி.

 4. maleek says:

  அமெரிக்க ஆங்கிலம் குறித்து உங்கள் கருத்து சரி,அந்தக் கருத்து பரவலானதும் கூட.அவர் வந்திருக்கும்
  நேரத்தில் நூலும் வந்திருப்பது பொருத்தமானது.

 5. abdullah says:

  அஸ்ஸலாமு அழைக்கும்…

  வாழ்த்துக்கள் சகோதரே…

  வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அனுபவமே..
  தவறு செய்தால் இனி அதை மீண்டும் செய்ய கூடாது என்ற சிந்தனை நாம் அனுபவித்த அந்த தவறான அனுபவத்தில் இருந்து தான் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்..

  உங்களுடைய இந்த புத்தகத்தின் மொழிபெயர்த்தல் பணி சிரமத்தோடு சில சங்கதிகளையும் உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கும் என்பது உறுதி..

  “என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கடினமான நூலை நான் மொழிபெயர்த்ததில்லை” என்று மீண்டும் நீங்கள் சொல்வதற்கு வாய்ப்பு வரலாம் இதை விட கடினமாக இன்னொரு நூல் மூலமாக…

  உங்களுக்கு தெரியாதது இல்ல…
  நெருக்கடிகள் தான் நமக்கு நாம் யார் என்பதை புரியவைக்கும்.

  இப்ப என்ன சொல்லவரிங்க என்கிறீர்களா ?

  இதுபோன்ற பணிகளை நான் இனி தவிர்த்துக் கொள்வதே நல்லது என்ற உங்களின் வார்த்தைகள் உங்களுக்கு நீங்களே உங்களுடைய திறமைக்கு வேலிபோடுவது போல் தெரிந்தது அது தான்..

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • நாகூர் ரூமி says:

   அன்புச் சகோதரர் அப்துல்லாஹ்,அலைக்கும் ஸலாம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். அல்லாஹ் என்ன நாடியிருக்கிறானோ அதுதானே நடக்கும்? நிற்க, உங்கள் ப்ளாக்ஸ்பாட் பார்த்தேன். நன்றாக உள்ளது. அதைத் தொடர்ந்து நீங்கள் எழுதி வர என் வாழ்த்துக்கள்.
   அன்புடன்
   நாகூர் ரூமி

 6. Zain Ali says:

  Dear sir, Assalamu Alaikum & Good Day to you!

  I am great to hear on the above work given by the publishers, “Kizhakku Pathipagam”, as they knew very well that you are the best person, who can do it above their expectation level in providing great delights, not only for them but to everyone around you!

  You are a great person who makes life easier and better for everyone around you. Your continual acts of thoughtfulness and kindness brighten each day, Aameen.

  All the Best! Great job as usual!! May Allah’s blessings be with you forever, Aameen!!!

 7. ஏற்கனவே, ஒபாமா பற்றி வைகோ எழுதி, விகடன் வெளியிட்ட புத்தகத்தின் பெயர்: ‘ஆம்; நம்மால் முடியும்’.

  இப்போது அதே தலைப்பில், அதே ஒபாமா பற்றி. குழப்பாதா? ‘கூறியது கூறல்’ என வாசகர்கள் கணித்தால்…? வணிக நோக்கமும் உரிய பலனைக் கொடுக்க வேண்டுமே?

 8. நாகூர் ரூமி says:

  அன்பு பரக்கத், உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. ஆனால் பெயர் நான் வைக்கவில்லையே! ஐந்து பிரதிகள் எனக்கு வந்து சேர்ந்தபின்தான் அந்தத் தலைப்பே எனக்குத் தெரியும். இது ராகவன் மற்றும் கிழக்கின் பிரச்சனை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s