நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…

நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…

(The Next Voice You Hear…)

ஜார்ஜ் சம்னர் ஆல்பீ (George Sumner Albee)

தமிழில் : நாகூர் ரூமி

2003-ல் நான் மொழிபெயர்த்து வைத்த கதை. அம்ருதாவுக்காக அதைப் பிரசுரிக்கலாமா என்று கேட்டார்கள்.  அதைவிட சந்தோஷம் என்ன எனக்கு? இந்த மாத அம்ருதா (நவம்பர் 2010) இதழில் இந்தக் கதை பிரசுரமாகியுள்ளது.  அம்ருதாவுக்கு நன்றிகள்.

மார்ச் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று சரியாக இரவு மணி 9.38க்கு அந்த வினோதமான கம்பீரமான குரல் முதல் முதலாகக் கேட்டது காற்றில். ஏன் குறிப்பாக அந்த நாளும் அந்த நேரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது? யாருக்கும் தெரியாது. எது எப்படியிருப்பினும், அதற்கான உடனடியான எதிர்ச்செயல்பாடு அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. மக்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை.

டாயில்ஸ் டவுனைச் சேர்ந்த ஃப்லாய்டு உஃப்ல்மேன் அந்த நேரத்தில் தனது மகன் லிமேனுடைய எலக்ட்ரிக் ட்ரெய்னை வைத்து அறையில் விளையாடிக்கொண்டிருந்தான். தூக்கிச் செல்லக்கூடிய அவனது வானொலிப் பெட்டியிலிருந்து வந்துகொண்டிருந்த டாக்டர் ஐக்யூ க்விஸ்ஸையும் கவனித்துக் கொண்டிருந்தான். திடீரென்று டாக்டர் ஐக்யூ கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்றது. பதிலாக வந்த ஆழமான, மென்மையான, கருணையான அதே சமயம் உறுதியான குரல் சொன்னது :

“நான்தான் கடவுள் பேசுகிறேன். குறுக்கிடுவதற்காக மன்னிக்கவும். வேறு வழியில்லை. ஒரு படைப்பினத்தின் திட்டமானது அதன் விதிகளின்படிதான் முன்னேறிச் செல்ல வேண்டும். ஆனால் சூரியனின் மூன்றாவது கிரகத்தில் வாழும் என் குழந்தைகளே! உங்களை நீங்களே அழித்துக்கொள்கின்ற வேலைக்கு மிக அருகாமையில் வந்துவிட்டீர்கள். எனவே நான் உள்ளே வரவேண்டியதாகிவிட்டது. இந்த வாரத்தை நான் உங்களோடு கழிக்கப் போகிறேன்.”

ஒரு கணம் ஃப்லாய்டு வாய்பிளந்து நின்றான். “லிமேன் தன் அறையில் ஒரு மைக்கை ஒளித்து வைத்திருக்கிறான் என்று பந்தயம் கட்டுவேன்”

தனது மகனின் அறைக்குச் சென்றான். லிமேன் கூட்டு பின்னக் கணக்கை முன்னால் வைத்துப் பார்த்துக் குழம்பி வேதனையில் இருந்தான்.

“ரேடியோவை என்ன செய்தாய்?” கத்தினான்.

“நானா? ஒன்றும் செய்யவில்லையே! வெடித்துவிட்டதா?”

ஃப்லாய்டுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. பக்கத்துவீட்டு ஜெனியிடம் சென்றான்.

“ஜெனி, டாக்டர் ஐக்யூ கேட்டுக்கொண்டிருந்தாயா?”

“ம்ஹும். ரேடியோ தியேட்டர் கேட்டுட்ருந்தேன்”

“அப்ப, நீ கேட்டிருக்கமாட்டே”, ஃப்லாய்டு சொன்னான்.

“ஏய், நீயுங் கேட்டியா?” வியப்புடன் கேட்டான் ஜெனி “ரொம்ப வினோதமா இருந்துச்சில்ல?”

ஆச்சரியத்தில் மூழ்கிப்போனது டாயில் டவுன் மட்டுமல்ல. மறுநாள் காலையில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா எல்லாவற்றிலிருந்தும் செய்திகள், தகவல்கள் வந்திருந்தன. அன்று கேட்ட குரல் ஒலிபரப்பு பல மொழிகளிலும் கேட்டிருக்கிறது என்ற விஷயம் உலகம் முழுவதிலும் பரவலாகத் தெரிந்திருந்தது. அரபிகள் அரபியிலும் தென்ஆப்பிரிக்க பழங்குடியினர் தங்களது வட்டாரமொழியான ஷி ரொங்க-விலும் அதைக் கேட்டிருக்கின்றனர்.

“இதெப்பத்தி நீ என்ன நெனக்கிறெ?” என்று ஒருவர் மற்றவரைக் கேட்டவண்ண மிருந்தனர். “எனக்குத் தெரியலெ” என்ற பணிவான வார்த்தைகள் அந்த மார்ச் மாத செவ்வாய்க்கிழமை உச்சரிக்கப்பட்டதுபோல வேறெப்போதும் செய்யப்பட்டதில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தலையங்கம் எழுதுபவர் ஒரு அனுமானத்தை வைத்திருந்தார் : ஒருகால் தொலைபேசி இணைப்புத் தலைமையகத்தில் எல்லா கண்டங்களையும் இணைக்கிற சர்க்யூட்டுகளை ஒரு சில வினாடிகளுக்கு ஒன்றாகக் கொக்கி போட்டிருக்கலாம்.

சூரியன் அஸ்தமித்தான். எட்டுமணிக்கெல்லாம் ரேடியோவை ‘ஆன்’ செய்தவுடன் பவர் ஸ்டேஷன்களில் இருந்த அம்மீட்டர்கள் லோடு அதிகமாவதைப் பதிவு செய்ய ஆரம்பித்தன. அவர்கள் ஏமாற்றமடையவும் இல்லை. மிகச்சரியாக 9.38க்கு அந்த அமைதியான நட்பான குரல் மறுபடியும் பேசியது :

“பயப்பட வேண்டாம். நான் கடவுள்தான் என்பதையும், இந்த வாரம் உங்களோடுதான் இருக்கப்போகிறேன் என்பதையும் உங்களுக்குப் புரியவைக்கத்தான் விரும்புகிறேன்”

இந்த முறை குரல் வந்த திசை இதுதான் என்று உறுதி செய்ய திசையறிபவர்கள் முயன்றனர். ஆனால் எந்த ஏமாற்றுவேலையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ரஷ்யாவின் வேலையாகத்தான் இருக்கும் என்ற தற்காலிக சந்தேகத்திலிருந்து அது விடுவிக்கப்பட்டது.

புதன் கிழமையன்று செய்தித்தாள்கள் பக்கம் பக்கமாக எழுதின அந்தக்குரலைப் பற்றி. தொடர்புகொள்ள முடிந்த ஒட்டு மொத்த விஞ்ஞானிகளின் ஏகோபித்த கருத்து — அதில் சிலர் தலைமறைவாக இருந்தவர்கள் — என்னவெனில் அந்தக் குரல் ஒரு மனிதனுடையது என்பதுதான். அது நிச்சயமாக மஸ்ஸாச்சுசெட்ஸில் பிறந்த ஒரு மனிதனுடைய குரல்தான் என்று உச்சரிப்பை வைத்து ஒரு மொழியியல் ஆசிரியர் அடித்துக் கூறினார்.

“அது உண்மயில் கடவுளுடைய குரலாக இருந்திருக்குமானால், அவர் வானொலியைத் தேர்ந்தெடுத்துத்தான் பேசவேண்டும் என்ற அவசியமில்லையே” என்று சொன்னார் ஒரு தர்க்கவியல் பேராசிரியர்.

வேதவிற்பன்னர்கள் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்தனர். “அது நம்முடைய தேவனுடைய குரலாக இல்லையென்றால்கூட, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற விஷயத்தை நாம் மறந்துவிட்டோம் என்பதையே அந்தக்குரல் சுட்டுகிறது” என்றார் ஒரு ஆங்க்லிகன் பிஷப்.

புதன்கிழமைக்கான பிராத்தனைக் கூட்டங்களில் அமெரிக்கா முழுவதும் ரொம்ப ஆர்வமாக மக்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான தேவாலயங்களில் வானொலிப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. மூன்றாவது முறை கேட்ட பேச்சில் மூன்றே மூன்று சொற்கள்தான் வந்தன. கடவுளுடைய குரல் வேடிக்கைக்கான விஷயமல்ல என்று நம்புபவர்களுக்கு கோபமூட்டும் விதமாக மூன்றாவது முறையாக, கடவுள் தனக்குத்தானாகவே சிரித்துக்கொள்வது மாதிரியாகக் கேட்டது இதுதான் :
“அது நான் தான்”

முந்தைய பேச்சுக்களைப் போலவே, இந்த மூன்றாவது செய்தியும் எப்படியோ எல்லா வானொலிப் பெட்டிகளின் ‘காயில்’களுக்குள்ளும் ‘கண்டென்ஸர்’களுக்குள்ளும் புகுந்து கொண்டது. கடலில் மிதந்துகொண்டிருந்த சங்கேதக் குறிகளுக்கான, ‘மைக்’ வசதி இல்லாத கப்பல்களுக்குள்ளும். கடவுள் ஏன் வானொலியைப் பயன்படுத்தினார் என்ற கேள்விக்கு ஒருவகையில் விடையளிப்பதாக அது இருந்தது. வானவெளியிலிருந்து ஒரு அசரீரி கேட்டிருக்குமானால் அது மனிதர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருக்கும். ஆனால் மனிதர்களோ வானொலியில் குரல்களைக் கேட்கப் பழகியிருந்தார்கள். கடவுள் மிகவும் கருணையுள்ளவராக இருந்தார்.

மனித உளவியலைப் பற்றிய கடவுளின் அறிவு அபாரமானதாக இருந்தது. (சிந்தித்துப் பார்த்தால் இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல). “அது நான் தான்” என்ற வார்த்தைகளின் ரத்தினச் சுருக்கமே அடக்கிவாசிப்பவர்கள் அனைவரையும் ஒத்துக்கொள்ள வைப்பதாக இருந்தது.

வியாழக்கிழமையன்று வேறொரு முறை கடைப்பிடிக்கப்பட்டது. அறியாதவர்களுக்கும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தவர்களுக்குமாக அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஐம்பது மைல் தள்ளி உலகம் முழுவதிலும் அற்புதங்கள் நிகழ்ந்தன. அதில் பல அற்புதங்கள் ரொம்ப லேசானவை. ஃபான் து லாக் மார்க்கட்டிலும் விஸ்கோன்சினிலும் இருந்த ஆரஞ்சுப் பழங்கள் எல்லாம் சுவற்றின்மேல் உருண்டு சென்று “மனிதர்கள் அனைவரும் என் குழந்தைகள். அதனால் சகோதரர்கள்” என்ற வாக்கியத்தை அமைத்தன. கோபன்ஹேகன் மிருகக்காட்சிச் சாலையிலிருந்து ஒரு சிங்கம் கூண்டைவிட்டு வெளியே வந்து, கிராமத்துக்குள் போய், அங்கிருந்த சில ஆடுகளைக் கண்டுபிடித்து அவைகளோடு போய் வேண்டுமென்றே படுத்துக்கொண்டது. கலிஃபோர்னியாவின் பசடோனாவில்  நரம்புத்தளர்ச்சிகொண்ட ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன்கூட தூங்கும்போது நரநரவென பல் கடிப்பான். திடீரென்று அவள் அரொயோ செகோ பாலத்திலிருந்து குதித்தாள். அந்தரத்தில் அப்படியே 45 நிமிடம் இருந்தாள். தீயணைப்புப்படையினரின் ஏணிவைத்துத்தான் இறக்கப்பட்டாள்.

வானொலியில் கேட்ட ஆழமான சுறுசுறுப்பான குரலினால் லேசாக பாதிக்கப்பட்ட பலபேர் இந்த அற்புதங்களினால் — அவை லேசானவைதான் என்றாலும் — ரொம்ப ஆத்திரமடைந்தார்கள். சேம்பர் ஆஃப் டெபுட்டி ஆஃப் ஃப்ரான்ஸில் கிட்டத்தட்ட ஒரு கலகமே ஏற்பட்டுவிட்டது. அறிவுவாதம், புரட்சி ஆகியவற்றுக்கு துரோகம் செய்வதாகச் சொல்லி, “நீ ஒரு ஒட்டகம்” என்பது போன்ற வார்த்தைகளை ஒருவர்மீது ஒருவர் எறிந்துகொண்டனர். அமெரிக்காவிலேயே இதில் மிக அதிகமான கோபத்திற்குள்ளானது ‘நாத்திகம் மற்றும் சிலைஉடைப்பு முன்னேற்றக் கழக’த்தின் தலைவராக இருந்த நியூயார்க்கின் வால்டர் பி. வலேரியன்தான். ஒரு எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்று நாடுமுழுவதிலும் இருந்த தனது கழக உறுப்பினர்களுக்கெல்லாம் நியூயார்க்குக்கு வரும்படி ஒரு அழைப்பு விடுத்தார் அவர்.

கடவுளின் வியாழக்கிழமை ஒலிபரப்பு நீண்டதாகவும் இறையியலை உபதேசிக்கும் தொனியிலும் இருந்தது :

“உங்கள் காலடியில் கிடக்கின்ற ஒவ்வொரு கூழாங்கல்லும், ஒவ்வொரு நீர்த்துளியும், ஒரு அற்புதம்தான். அதை பயபக்தியுடன் புரிந்து கொள்கின்ற தகுதியை நீங்கள் இழந்துவிட்ட காரணத்தால் நான் இயற்கைவிதிகளை மீறுகின்ற இந்த அற்புதங்களைச் செய்துகாட்ட வேண்டியதாகிவிட்டது. நானே ஏற்படுத்திய பிரபஞ்ச விதிகளை நானே உங்களுக்காக உடைக்கின்றேன் என்றால், உங்கள்மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாம்வல்ல கடவுளும் தனது சக்திகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் பிடிவாதமாக இருப்பவர்களை இது மாற்றப்போவதில்லை. எனவே, நாளைக்கு, வெள்ளிக்கிழமை, பகல்வேளையில், நான் பல பெரிய அற்புதங்களை நிகழ்த்தப்போகிறேன். பிற்பகலில், ஆஸ்த்ரேலியா கண்டத்தை ஒரு நிமிடம் நான் கடலுக்கடியில் மூழ்கடிக்கப் போகிறேன்.”

இந்த வியாழக்கிழமை ஒலிபரப்புக்குப் பிறகு எல்லா அவநம்பிக்கையும் உருகி ஓடிப்போனது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் அது கடவுளின் குரல்தான் என்பதில் மிகவும் தெளிவடைந்திருந்தார்கள். முஸ்லிம் உலகம் முழுவதும் மக்காவை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. சைனாவின் மஞ்சள் புகையினூடே பட்டாசுகள் வெடிக்கும் சப்தம் இரவும் பகலும் கேட்டுக்கொண்டிருந்தது. ஓசார்க் மலைப்பகுதியில் வாழ்ந்த அவ்வளவாக அறியப்படாத மக்கள் போர்வைகளால் தங்களைப் போர்த்திக்கொண்டு, மலையின் உச்சிக்குச் சென்று உலக முடிவு நாளுக்காகக் காத்திருந்தனர்.

அதன் பிறகு, ஆஸ்திரேலிய ரேடியோ ஸ்டேஷன்கள் காற்றில் உயிர் பெற்றன. தனது இறுதி ‘டெமொ’வுக்காக கடவுள் சரியான கண்டத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். மற்ற கண்டத்தவராக இருந்தால் துடுப்பு கிடுப்பு போட்டு தப்பித்துவந்துவிடலாம் என்று நினைத்திருப்பர். ஆனால் ஆஸ்த்ரேலியர்களால் அப்படி முடியாது! நகைச்சுவையோடு மெல்போர்ன் அறிவிப்பாளர் சொன்னார் : “யாருக்குமே க்ளு கிடைக்கவில்லை. ஒரு நிமிடம் தண்ணீருக்குள் இருப்பதால் யாருக்கும் எந்தக்கெடுதியும் வந்துவிடப் போவதில்லை. சொல்லப்போனால், சில குடிமகன்களுக்கு அது நன்மையே செய்யலாம்.” மெல்போர்ன் மற்றும் சிட்னியைச் சுற்றி விமானங்கள் வட்டமிடவும், இரண்டாவது பிரளயத்தைப் பார்வையிடும் நேரடிசாட்சிகள் சொல்வதை ஒலிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை முற்பகலுக்கென கடவுள் பெரும் அற்புதங்களை வாக்களித்திருந்தார். அவைகள் உண்மையில் மிகப்பெரியவையாகவே இருந்தன. அமெரிக்காவின் தரைப்படை, கப்பற்படை, விமானப்படையிலிருந்த ஒவ்வொரு ‘அவ்ன்ஸ்’ உலோகமும் தத்தமது இடங்களைவிட்டு எங்கோ போய்விட்டிருந்தன. ‘டன் டன்’னான அந்த அனைத்து உலோகங்களும், ‘பக்கில்’ஸிலிருந்து போர்க்கப்பல்வரை, எல்லாமே துகள்களாகி இருந்தன.

காலையின் நடுப்பகுதியில், இந்த உலகம் எந்த இன்னொரு நாட்டின் போர் ஆற்றலை பயந்துகொண்டிருந்ததோ, அந்த நாட்டிலும் எல்லா ராணுவ ஆயுதங்களும் போய்விட்டிருந்தன. தனது கோபத்தையே க்ரெம்லின் தணிக்கை செய்ய வேண்டியதாகிவிட்டது. பளபளக்கும் ரஷ்ய டாங்குகள், ப்ளேன்கள், துப்பாக்கிகள் எல்லாமே போய்விட்டிருந்தன. அவைகளின் இடத்தில் வெறும் உரங்களைக்கொட்டி வைத்ததைப்போல இருந்தது. அவைகள் ஒவ்வொன்றின் மேலேயும் “அமைதி, உணவு, உறைவிடம்” என்று லெனினின் மேற்கோள் ஒன்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை இருந்தது.

நியூயார்க்கில் கூடிய நாத்திகர்களின் எதிர்ப்பு மாநாட்டைப் பொறுத்தவரை, டைம்ஸ் ஸ்கொயருக்குள் அவர்களெல்லாம் நுழைந்தவுடனேயே அவர்களனைவரையும் கடவுள் ஒரு தேவதையாக மாற்றிவிட்டிருந்தார். தூய வெண்மை நிறத்தில் ‘ஆர்ச்’ மாதிரி வளைந்த சிறகுகள் திடீரென அவர்களின் தோள்களிலிருந்து முளைத்தன. அவர்களின் தலையைச் சுற்றி தங்க நிறத்தில் ஒளிவட்டம் மின்னியது. வாடகைக் கார்களைத் தேடிப்போய் ஒளிந்து கொள்வதற்குள் அவர்களுக்கு போதும்போதும் என்றாகிவிட்டது.

தங்கள் வாட்ச்களில் 11.58, 11.59 என்று வினாடிமுள் முன்னேற முன்னேற, ஆஸ்த்ரேலியாவுக்குப் பறந்திருந்த அறிவிப்பாளர்களுக்கும் ரிபோர்ட்டர்களுக்கும் டென்ஷன் அதிகமாகிக்கொண்டே போனது. கடைசியில் பிற்பகலுக்கான புள்ளி வந்தது. ஆனால் பி.பி.சி.காரன் மட்டும் ஏதோ க்ரிக்கட் மாட்ச்சை விவரிக்கப் போவதுபோல ‘கூலாக’ பேசிக்கொண்டிருந்தான். “முன்னறிவிப்பு செய்யப்பட்டது போலவே, கண்டம் இப்போது மூழ்கிக்கொண்டிருக்கிறது. மூழ்கும் வேகம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒரு நவீன பயணிகளின் லிஃப்ட் வேகத்தில். அதோ, கடைசி தேவாலயத்தின் கோபுரமும் மறைந்துவிட்டது. மிதக்கும் பொருட்களுடன் எங்குபார்த்தாலும் தண்ணீர்! மக்கள்தான் எவ்வளவு சாமான்களைக் குப்பையாட்டம் தமது வீடுகளில் போட்டுவைத்திருக்கிறார்கள்! இப்போது மலைகளின் உச்சிகள் கீழே உள்ளன. ஐம்பது வினாடிகள்…ஐம்பத்தைந்து..யெஸ்…இதோ ஆஸ்த்ரேலியா மறுபடியும் மேலே வருகிறாள்…வந்துவிட்டாள்! ஓ பழைய ஆஸ்த்ரேலியா! என்ன, கொஞ்சம் நனைந்து இருக்கிறது!”

இறங்கு தளங்கள் தென்பட்ட உடனேயே குட்டி விமானங்கள் இறங்க ஆரம்பித்தன. நொடியில். அறிவிப்பாளர் முதலில் சென்றடைந்த குடிமகன் யாரோ ஒரு ரிடையர்டு கலோனல் ஹம்ப்ரி ஆர்பத்னாட் டி.எஸ்.ஸி. என்பவர். கையில் ஒரு ‘போர்ட்டபிள் ட்ரான்ஸ்மீட்ட’ரை அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தார்.

“வானொலி வாசகர்களுக்குச் சொல்லுங்கள் ஐயா, உண்மையிலேயே நீங்கள் கடலுக்கு அடியில் சென்றீர்களா?”

“என்னிடமிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கிறதே பார்க்கவில்லையா?” கலோனல் கூறினார். “பயங்கரமான கடல் என் அறைக்குள்ளேயே நேராகப் புகுந்துவிட்டது. ஒரு உலர்ந்த டவல்கூட கிடைக்காது என்று நான் சத்தியம் செய்வேன்”

வெள்ளிக்கிழமை மாலை வந்த கடவுளின் ஒலிபரப்பு தொய்வு விழுந்த பகுதிகளைத் தூக்கி நிறுத்துவதாக இருந்தது :

“என்னுடைய வருகை இந்த உலகம் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தப்படுகிறதா? ஆண்டவனுக்காக, உங்கள் மனதக் கேட்டுப் பாருங்கள். அது சொல்வதுபோலக் கேளுங்கள். குட் நைட்”

சனிக்கிழமை அலுவல் மிகுந்த நாளாக இருந்தது. ரொம்ப. ட்யூலிப் பல்புகளைப் போல, பச்சை குருத்துத் தண்டுகள் வெகுகாலமாக புதைக்கப்பட்டிருந்த மனசாட்சியிலிருந்து கிளம்பின. ஒரு அரை டஜன் நாடுகளில் இருந்த சர்வாதிகாரிகள் தங்கள் பதவிகளைத் துறந்தனர். ஒரு பன்னாட்டு வணிகக் கம்பெனி தன் பிசினஸை இழுத்து மூடியது. தங்களது அணுகுமுறைகள் செத்துப்போனதல்ல என்றாலும் சரியானதல்ல என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான சிறுசிறு வியாபாரிகளும் இதையொத்த மனமாற்றம் அடைந்தார்கள். ஒரு கராஜ் முதலாளி தன் தொழிலாளர்களை அழைத்து, “இனிமேல் ‘கஸ்டமர்’களிடம் ‘காயி’லுக்காக பணம் வாங்கும்போது, உண்மையில் ‘காயி’லைப் பொறுத்திவிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

சிறுகுற்றம் செய்வோர், நூலகங்களில் திருடிய புத்தகங்களையும் பழைய கடன்களையும் திருப்பிக்கொடுத்தனர். முதியோர் இல்லங்களில் இருந்த மறக்கப்பட்ட அத்தைகளுக்கு பரிசுப்பொருட்களை அனுப்பினர். இப்படியாக. இந்த புவியுலகில் வாழ்ந்த 99 சதவிகித மனிதர்களுக்கு சனிக்கிழமை இரவுக்குள் இந்த உலகம் ஒரு சந்தோஷமான, நட்புடனான, இனிமையான இடமாக மாறிப்போனது.

சனிக்கிழமை இரவு வந்த கடவுளின் ஒலிபரப்பு விடைபெறுதலாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருந்த வானொலிகள் ‘ஹம்’ செய்தன. அதன்பிறகு ஒரு நிசப்தம். பின் அந்த அழகான குரல் மறுபடியும் :

“இப்போது நான் போய் வருகிறேன். உங்களுடைய பெரும்பாலான பிரச்சனைகள் அப்படியேதான் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். இன்னும் வேதனையும் வலியும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் உங்களுக்கு உணவும், உடையும், அரசாங்கமும் தேவைப்படுகிறது. ஏனென்று நான் சொல்ல வேண்டுமா? ஒரு கிரகம் என்பது ஒரு பள்ளிக்கூடம். அதில் வசித்திருந்து கற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகளே! சரி, மறுபடி நாம் சந்திக்கும்வரை, குட் பை.”

ஏழாவது நாள், வழக்கம்போல கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டார் என்று நினைக்கிறோம்.

=====================================================================================
ஜார்ஜ் சம்னர் ஆல்பீ ஒரு அமெரிக்க எழுத்தாளர் என்பதைத்தவிர வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜூலை 1982ல் வந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’டில் வந்த இந்த கதையை ரொம்பவும் ரசித்துப் படித்துவிட்டு ‘கட்’பண்ணி எனக்கு நண்பர் கவிஞர் தாஜ் அனுப்பியிருந்தார். அதை இப்போதுதான் தமிழாக்கம் செய்ய முடிகிறது. தாஜுக்கு என் நன்றிகள். “காஸ்மோபொலிடனிலிருந்து சுருக்கி எடுக்கப்பட்டது” என்ற ஒரு பொடிஎழுத்துக் குறிப்பும் ஆகஸ்ட் 1948 என்ற ஆண்டும் கதையின் முடிவில் இருந்தது. காஸ்மோபாலிடன் என்பது நியூயார்க் பத்திரிகையாக இருக்கலாம். கதை நீண்ட கதையாகவும் அதன் ஒருபகுதியே மேலே தரப்பட்டதாகவும் இருக்கலாம். எது எப்படி இருப்பினும், ஒரு மறக்கமுடியாத கதையை ஆல்பீ கொடுத்துவிட்டார் என்பது உண்மை.

நாகூர் ரூமி
28 – 10 – 2003

Advertisements
This entry was posted in Translation / தமிழாக்கம். Bookmark the permalink.

2 Responses to நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…

  1. Zain Ali says:

    Compliments and Wishes being the first step in any beautiful relationship. Therefore, our wishes to you again for adding one more in the release of a book by you, named “The Next Voice You Hear…”

    Usually the information in your books will be very unique in presentation of knowledge, written in a light, highly informative and interesting way, presented in a logical and easier way for understanding. Great Job, my Role Model….

  2. This is not a book, just a short story translated.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s