நாகூர் கொத்துபுராட்டா

நாகூர் கொத்துபுராட்டா

நாகூரின் சிறப்புக்களில் ஒன்று நாவோடு தொடர்பு கொண்டது. ஆமாம். நாகூர் குலாப்ஜான்(ஜாமூன்), பால்கோவா, தம்ரொட்டு, பருத்திக்கொட்டெ ஹல்வா, கொத்துபுராட்டா மற்றும் புதிய வரவான மீங்கொரி (எனப்படும் ஒருவகை சிங்கப்பூர் நூடுல்ஸ்) இவையெல்லாம் நாகூரைக் காட்டும் அடையாளங்களில் ஒன்று.

இவற்றில் இந்த கொத்துபுராட்டாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. புராட்டா, முட்டை, வெங்காயம், தக்காளி, இன்னபிற அய்ட்டங்களைச் சேர்த்துப் புரட்டிக் கொத்தி செய்யப்படும் இந்த உணவின் சுவை இருக்கிறதே, ஆஹா, அது சாப்பிட்டவர்களுக்குத்தான் தெரியும்.

இந்த ஆண்டு, சில நாட்களுக்கு முன்பு நாகூர் சென்றிருந்தேன். குழந்தைகளின் சந்தோஷத்துக்காக. கந்தூரி நடந்து கொண்டிருந்தது. கந்தூரியை என்னால் ஒரு மதரீதியான நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை. அது ஒரு சமூக ரீதியான, கலாச்சார ரீதியான செயல்பாடு. நாகூர் ஆண்டகை காதிர் வலீ அவர்களின் நினைவாகச் செய்யப்படும் வெறும் வருடாந்திர சடங்காக மட்டும் அது இருக்கவில்லை. அப்படி எப்போதுமே அது இருந்ததில்லை. பலதரப்பட்ட மக்களும், சொந்தங்களும் பந்தங்களும், குழந்தைகளும் சந்தோஷமாகக் கூடும் சில நாட்கள் அவை. ’ஹந்திரிக்கடை’களுக்குப் போய் இரண்டு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை உள்ள சாமான்களை பேரம் பேசி வாங்கி வருவதில் பெண்களுக்கு அதில் ஏக சந்தோஷம். பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷத்தில் உடைந்து போகக்கூடிய ஒரு தோட்டை வாங்கி விட்ட ஒரு பெண்ணுக்கு ஐபிஎம்-மில் பங்குதாரராக ஆகிவிட்ட சந்தோஷம்!

குழந்தைகளைக் கேட்கவே வேண்டாம். கடைகளையும் விளையாட்டு சாமான்களையும் பார்த்தும், வாங்கியும், சுவைத்தும் பெறும் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

எட்டாம் நாள் நடக்கும் வான வேடிக்கை உண்மையிலேயே கண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.

ஆனால் சந்தனம் பூசும் அதிகாலை நேரத்துக்கு முந்திய நாள் இரவு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கூடுகளும் அவற்றின் முன்னால் குத்துப்பாட்டுகளுக்கு நடனமாடிக்கொண்டே போகும் இளைஞர்களும் — பார்க்க சகிக்கவில்லை. அமைதியாக ஒரு கூட்டில் சந்தனத்தை எடுத்துக் கொண்டு வந்து பூசினால் என்ன? இஸ்லாத்தை அவமதிப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது கொடுக்கிறது. பாட்டும் பரதமும் நமது கலைதான். ஆனால் அந்த இடத்தில் அவை இருக்கக் கூடாது.

நான் கந்தூரிகளுக்குப் போவதே இல்லை. தர்ஹாவுக்கும் போவதில்லை. அங்கே அடக்கமாகியுள்ள இறைநேசரின் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாகத்தான். ஆனால் கந்தூரிகள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமூக நிகழ்வு அது. அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதே இல்லை.

சந்தனம் பூசும் இரவு அன்று தர்காவுக்கு உள்ளே எப்போதும் இருக்கும் விஐபி-களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். அவர் இந்த ஆண்டு உள்ளே வந்தபோதுதான் நான் பார்த்தேன் (இன்னொருவர் எடுத்த செல்ஃபோன் வீடியோ மூலமாக). அவர் அணிந்திருந்த உடையும், தொப்பியும், பவ்யமாக அவர் அமர்ந்து கொண்ட விதமும் நமக்கு நிச்சயம் பாடம் கற்றுத் தருபவை. அவர் அதிகம் பேசுவதில்லை. அவருடைய நம்பிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். அவருடைய ஈமான் அசைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அவருக்கு நிச்சயம் காதிர் வலீ அவர்களின் அன்பு கிடைக்கும். அதனாலேயே அவர் மேலும் மேலும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொத்து புராட்டாவில் தொடங்கி எங்கெங்கோ சென்றுவிட்டேன். சரி, அதை எப்படிப் ‘போடுகிறார்கள்’(இந்த சொல் என் நண்பர் ஆபிதீனுக்கு ரொம்ப சந்தோஷம் தரும்) என்றுதான் பாருங்களேன்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

10 Responses to நாகூர் கொத்துபுராட்டா

 1. போட்டாச்சா? உலகத்திலேயே உயர்ந்த சங்கீதம் ’தவ்வா’வில் வருவதுதான்!

 2. //ஆனால் கந்தூரிகள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமூக நிகழ்வு அது. அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதே இல்லை.//

  முகமது நபி கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்கச் சொல்லி தனது மருமகன் அலியிடம் சொன்னதை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் அங்கு நடக்கும் கூத்துகள் இஸ்லாத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவைகள். இது போன்ற செயல்களை தொடர்ந்து செய்பவர்களிடம் தொழுகையோ மற்ற பிற அமல்களோ இருப்பதில்லை. புதிதாக இஸ்லாத்தை தழுவிய ரஹ்மானுக்கு அடிப்படை தெரியவில்லை என்றால் நாம் தான் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

  இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேறு வழி முறைகள் இருக்கின்றன. இஸ்லாத்தில் இந்துத்துவத்தை நுழைப்பது காலப்பேர்கில் கிருத்தவத்தைப் போல் இஸ்லாமும் இந்துத்துவத்தில் அடங்கி விடும். சங்பரிவார் விரும்புவதும் அதைத்தான்.

 3. basheer says:

  என்ன ஒரு லாவகம்?என்ன ஒரு ஸ்ருதி சுத்தமான இசை?ஆனால் ஒப்புக்கு அமர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டாவது ரசிக்கும் டிசம்பர் கச்சேரிகள் போலல்லாது எளிய மக்களுடன்
  இரண்டரகலந்த நாட்டுப்புற இசையை போலுள்ளது.எனதூரிலும் இதே இசையை ரசித்துள்ளேன்.
  இப்போது காணக்கிடைக்காத அல்லது கேட்க கிடைக்காத ஒன்றாகிவிட்டது.கப்ரு வழிபாட்டில்
  சுவனப்பிரியனுக்கு நான் ஆதரவாளன்.இணை வைத்தலை ஒருக்காலும் ஏற்க முடியாது.
  *** நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே.*** இந்த பாடலை,(என் கருத்து
  சரியென்றால் தூயவன் அல்லது நாகூர் சலீம் தான் எழுதியிருக்க வேண்டும்)அப்படியானால் நமன்
  யார்? பாடலின் கருத்தோடு ஒத்து போகிறீர்களா? தங்கள் பதில் மிக அவசியம்.

  • நாகூர் ரூமி says:

   அன்பு பஷீர், எனது பதிலைக் கேட்டிருக்கிறீர்கள். இறப்பைப் பற்றிய எனது கருத்து விஞ்ஞான ரீதியானது. இந்த உலகில் வந்த எதுவுமே இறப்பதில்லை. மாற்றம் மட்டுமே அடைகிறது. மத ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில், இறப்பு என்பது மறுமையின் நுழைவாயில். நிரந்தரமற்ற ஒன்றிலிருந்து நிரந்தரமான இன்னொன்றிற்குச் செல்வது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நமனை விரட்ட மருந்தொன்றும் கிடையாது. ஈசா நபி இறந்த வருக்கு உயிர் கொடுத்ததையும் நாம் இப்படிப் பார்க்க முடியும். நாகூர் சலீமின் பாடலாகவோ அல்லது தா. காசிமின் பாடலாகவோ அது இருக்கலாம். தூயவன் பாடல்கள் எதுவும் — எனக்குத் தெரிந்து — எழுதவில்லை. நாகூரின் இறைநேசர் அவர்களைப் புகழ்ந்து சொல்லும் வரிகள் அவை. ’என்னப் பெத்த ராசா’ என்று தான் பெற்ற பிள்ளையைத் தாயே உல்டாவாகக் கொஞ்சுவதுபோல. அந்த வரியின் அர்த்தம் என்னைப் பொறுத்தவரை, அது குறிப்பிடும் நபரை மிகவும் புகழ்கிறது. அவ்வளவுதான். கவிதைகளையும் பாடல்களையும் நாம் மிகவும் ஆராய வேண்டியதில்லை. கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய் அழகு, தெரியாதா என்ன? நபிகள் நாயகமும், நமனை விரட்டியதாக அந்த வரிகள் கூறும் நாகூர் காதிர் வலீ அவர்களும் இறைவனிடம் சேர்ந்துவிட்டவர்கள்தானே! இறப்பு பற்றி விஞ்ஞானப் பூர்வமாக மேலும் அறிய ஆர்வமிருந்தால் Life After Death, The Biology of Belief போன்ற ஆங்கில நூல்களை நீங்கள் வாசித்துப் பார்க்கலாம். சென்னையில் கிடைக்கும். அன்புடன்
   ரூமி

   • “….the story of Hamzah, the Prophet’s uncle, who used to wear body armour when he was young, and, when he was an old man and had become a Muslim, he used to go into battle without armour. They said to him: “When you were young and strong / you never went to war without armour / Why, now that you’re old and frail / have you turned so reckless?”

    Hamzah said in reply (and it is, in fact, Rumi who is putting these word’s in Hamzah’s mouth): Then I was the addressee of the verse that says, God has asked you not to invite death, but, today, I am the addressee of the verse that says, Rush to Me. Because, then, I thought of death as the end, whereas today I see death as the epitome of life and felicity……”

    Derived from:
    http://www.drsoroush.com/English/By_DrSoroush/The%20Relationship%20between%20the%20Mathnawi%20and%20the%20Qur%27an%20.html

   • இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

    பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

    நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
    (That ye most certainly shall journey on
    from stage to stage)

    எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.

    – குரான் ஷரீஃப் 84: 16 – 20

 4. தொழுவுறத பார்த்து விட்டு ‘ஏன் செவத்தை பாத்து வணங்கறீங்க”ன்னு ஒருத்தர் கேட்டார்

  நாங்க செவத்தையோ நாலு முனை கல்லு கட்டடத்தையோ வணங்கவில்லை என்று எடுத்து கூறினாலும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..

  அவர்கள் சொல்கிறார்கள், ‘எப்படியோ உங்களுக்கு வணங்க ஒரு கல் தேவைப்படுகிறது.. அது இல்லாமல்.. அதை இடித்து விட்டு உங்களால் வணக்கம் செய்ய முடியுமா?’ என்று

  கல்லை வணங்குவதில்லை என்பது நிய்யத்தில் இருக்கிறது..

  கப்ரையும் வணங்குவதில்லை என்பது நிய்யத்தில் தான் இருக்கிறது..

  Certainly actions are judged by intentions – இது பெருமானாரின் (ஸல்) அவர்களின் மொழிகள் தானே?

 5. ரொம்ப அருமையான பதில் இஸ்மாயீல். சரியான சிந்தனை.

 6. Pingback: கொடுக்கி » Archives » நாவூறும் நாகூர் கொத்துப் பரோட்டா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s