அரிதாரமற்ற அரிதான கலைஞன்

அரிதாரமற்ற அரிதான கலைஞன்

நேர்காணல்களுக்காகவே நேர்காணல் என்ற தலைப்பில் ஒரு இதழ் — இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று புரிந்து கொள்கிறேன் —  வருகிறது. ஆசிரியர் பௌத்த அய்யனார். அதில் மூன்றாவது நேர்காணல் நாசருடையது. 68 பக்கங்கள் கொண்ட அந்த இதழில் 42 பக்கங்கள் நாசரின் பதில்கள். நான்கு மணி நேரப் பேட்டியும் அதன் பதிவும். கேள்வி சின்னதுதான். ஆனால் நாசரின் பதில்கள் நீண்டவை. நேர்காணல் கேள்வி பதில் என்பதால் மட்டும் அப்படி அமையவில்லை. நேர்காணலின் நோக்கத்தை நிறைவேற்றும் முறையும் அதுதானே?

நாசரை ஓரளவுக்கு நானறிவேன். ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக, ஒரு இயக்குனராக, தூரத்து உறவினராக — எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல, நேர்மையான, பண்புள்ள மனிதராக.

போல்டில் இருக்கும் கருத்து இந்த நேர்காணலில் மேலும் உறுதிப்பட்டுவிட்டது.

நாசரின் எளிமையும் நேர்மையும் மிகவும் அரிதானவை. நிறைய தகவல்கள் எனக்கு ஆச்சரியமூட்டின. அதே சமயம் அவருடைய நேர்மையை நேர்மையான எந்த மனிதனாலும் பாராட்டாமல் இருக்க முடியாது! (சரி, சரி, நீங்களும் நேர்மையான வாசகர்கள்தான், ஒத்துக் கொள்கிறேன்).

ஆசிரியர் பவுத்த அய்யனார்தான் பேட்டி கண்டிருக்கிறார். (அய்யனாரையும் எனக்குத் தெரியும்.ஆனால் அவர் தலையை மொட்டை போட்டிருப்பதற்குக் காரணம் பௌத்தமா என்பது தெரியவில்லை).

”மிக இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவர், எந்த மனத் தடையுமின்றி அவரால் பேச முடிந்தது” என்று அய்யானார் சொல்வது முற்றிலும் உண்மை. முதன் முதலாக அவரை அவரது இல்லத்தில் அல்லது அவரது மனைவி இல்லத்தில் சந்திக்கச் சென்றது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு நடிகரைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் என் மனைவி இருந்தாள். நாசர் வருவதற்குச் சில நிமிடங்கள் ஆயின. ஒரு நடிகர் என்றால் உடனே வரமுடியுமா என்ன? கால தாமதமாக வருவதுதானே ஒரு சிறந்த நடிகருக்கு அழகு என்று அவள் ஆர்வமுடன் காத்திருந்தாள். ஆனால் நாசர் தூக்கத்தில் இருந்திருப்பார் போல. அதனால்தான் தாமதமாகியிருந்தது. அவர் வந்தமர்ந்த கோலத்தைப் பார்த்து என் மனைவி அசந்து போய்விட்டாள். ஒரு சாதாரண சட்டை. அழுக்கான அல்லது அழுக்கேறியதைப் போலத் தோற்றமளித்த ஒரு கைலியில் அவர் வந்தமர்ந்தார்.

”என்னாம்மா, ஒரு நடிகர் இப்புடி வந்து உக்காந்துட்டாரே” என்று போகிற வழியெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டே வந்தாள். அவருடைய எளிமையை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. அந்த நேர்மையும் எளிமையும் அவருடைய சினிமா வாழ்வுக்கேகூட ஒரு கட்டத்தில் உலை வைத்தது என்பதையும் அவருடைய நேர்காணலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு காலகட்டத்தில் எனக்குப் பின்னால் வந்த நடிகர்கள் என்னைவிட அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள். என்னைவிட அடுத்த தளம்  நோக்கிப் போகிறார்கள். நான் கிரியிடம் — அப்போதைய காரியதரிசி — அப்போது கேட்டேன். என்னைவிடத் திறனற்றவர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்களே என்று. கிரி சொன்ன வார்த்தை. பின்ன என்னங்க, உங்க வீட்டுக் கதவைத் தட்டுனா, நீங்களே வந்து திறக்கிறீங்க. போன் வந்தா நீங்களே எடுக்கிறீங்க. அப்புறம் எப்புடி சம்பளத்தை உயர்த்த முடியும்?

நாசரின் இன்றைய நிலைக்கு அஸ்திவாரமிட்டது அவரது தந்தை என்று தெரியும்போது மிகுந்த வியப்பு மேலிடுகிறது. தன் மகன் டாக்டராக வேண்டும் என்று எல்லாத் தந்தைகளையும்போல அவருக் கனவு கண்டிருக்கிறார். ஆனால் டாக்டராகாவிட்டால் அடுத்த ‘ஆப்ஷன்’ ஆக அவர் வைத்திருந்தது நடிப்புக் கலை! இதனாலேயே விமானப்படையில் சேர்ந்துவிட்ட மகனுக்கு அவருக்கும் சண்டைகள் வந்துள்ளன! அந்த வகையில் நாசர் கொடுத்து வைத்தவர்தான். ஓஷோவுக்கு ஒரு நானி அமைந்த மாதிரி நாசருக்கு ஒரு தந்தை! ஆமாம். ஓஷோவுக்கு அவரை வளர்த்த நானி கொடுத்த சுதந்திரம் நமது கற்பனைக்குப் பிடிபடாதது. அவரைப் போன்ற ஒரு பாட்டி அமையும் யாரும் ஞானம் பெறுவது நிச்சயம். அப்படிப்பட்ட பாட்டி அவர். அதேபோலத்தான் நாசரின் தந்தை மகபூப் பாட்சாவும் இருந்துள்ளார்.

அவர் ஒரு வித்தியாசமான முஸ்லிமாக இருந்திருக்கிறார். தன் பிள்ளைகள் அனைவருக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களைத்தான் பிடிவாதமாக, எதிர்ப்புகளைத் தாண்டி, வைத்திருக்கிறார்: நாசர், அயூப்கான், இந்திரா மோத்தி, ஜவஹர், ஜாகிர் ஹுசைன் என்று. அதோடு ஒரு வெஜிடேரியனாகவும் இருந்திருக்கிறார்!

அப்பா அதிகம் படிக்காதவராக இருந்தாலும், அவரது தீவிரத் தன்மைக்காக, பிடிவாதத்திற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏனென்றால் முறையாக  நான் — நடிக்கக் — கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவரே தேடிப்பிடித்து சென்னை பிலிம் சேம்பரில் நடந்து கொண்டிருந்த திரைப்படப் பயிற்சிக் கல்லூரியை அறிந்து, அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் வாங்கி வந்து, அதைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு என் கூடவே இண்டர்வியூவிற்கு வந்து, அங்கு சேர்வதுவரை மிகத் தீவிரமாகச் செயல்பட்டார் — என்கிறார். இப்படி ஒரு தந்தை அமைவது ஒரு கொடுப்பினையன்றி வேறில்லை.

நாசருடைய வாழ்க்கையில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய இன்னொன்று, அவர் தாஜ் கொரமாண்டல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வராக தட்டுகள் கழுவும் வேலையை மூன்று ஆண்டுகள் செய்திருக்கிறார் என்பது! நாசர் வாடிக்கையாளர் ஒருவருக்கு தேநீர் கொடுத்த விதத்தை கவனித்த அவருடைய மேலதிகாரி சுனில், நாசரை அழைத்து, ஒரு அடிமையைப் போல சேவை செய்யக் கூடாது என்றும், எப்படி தன்னம்பிக்கையோடு சேவை செய்ய வேண்டும் என்றும் விளக்கியது பற்றிக் குறிப்பிடும் நாசர், அதன் பிறகு

என் முட்டாள்தனத்தில் ஒரு பகுதி காணாமல் போனது. என் தாழ்வு மனப்பான்மையின் ஒரு பெருங்கிளை வெட்டி எறியப்பட்டது. இது ஒரு சாதாரண நிகழ்ச்சி போல் தோன்றலாம். ஆனால் எனக்கு அது ஒரு போதனையாய் அமைந்தது. பாடி லாங்குவேஜ், பாடி லாங்குவேஜ் என்று மாய்ந்து மாய்ந்து நடிப்புப் பயிற்சியாளர்கள் மணிக்கணக்காக வறட்டுத் தனமாக எடுத்த பாடத்தை சுனில் ஒரு வரியில் விளக்கினார். உண்மையில் அன்றுமுதல் என் நடை, உடை பாவனைகள் மாறிப்போயின — என்று கூறுகிறார்.

அதிர்ஷ்டம் பற்றிய ஒரு கேள்விக்கு நாசர் சொல்லும் பதில் மிக முக்கியமானது:

அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன்…அதிர்ஷ்டத்தினால் ஒருவன் ஒரு உயரத்தை எட்டியிருக்கிறான் என்று சொல்லப்பட்டால் அந்த இடத்திற்கு அவன் லாயக்கற்றவன் என்றுதானே பொருள்? — என்று கேட்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கும் பட்சம் அவர் சொல்வது உங்களுக்குப் புரியும்!

ஒருமுறை தாஜுக்கு வந்த ஒரு வெளிநாட்டு கிழத்தம்பதிகளுக்கு உபசரிக்க நாசர் அனுப்பப்படுகிறார். அவரது பெயர் பொறித்த பேட்ஜைக் கழற்றி விடும்படி மேலதிகாரி கூறுகிறார். இல்லை நான் பேட்ஜை சுத்தமாகக் கழுவித்தான்  வைத்திருக்கிறேன் என்று நாசர் சொல்வதையும் அவர் பொருட்படுத்தவில்லை. கட்டாயமாகக் கழற்றிவிட்டே சேவை செய்ய வைத்திருக்கிறார்.

பின் அவர்கள் போன பிறகு, ஏன் அப்படிச் செய்யச் சொன்னீர்கள் என்று நாசர் கேட்டதற்கு, அவர்கள் ஜூஸ் (Jews)  அதாவது யூதர்கள், முஸ்லிம்களை வெறுப்பவர்கள் என்று கூறியிருக்கிறார். புதிய தகவலாக இருந்த அது நாசரை சிந்திக்க வைத்திருக்கிறது. தன் அம்மாவிடம் போய், அம்மா, ஜூஸுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆகாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அம்மா, ஜூஸ் யார் குடிச்சாலும் நல்லதுதாண்டா என்று பதில் சொல்லியிருக்கிறார்!

ஒற்றுமையாக இருக்கும் சமுதாயத்திற்குள் கருத்து விஷம் கலக்காத வரையில் மனிதர்கள் அனைவருமே இப்படித்தான் வெள்ளந்தியாக இருக்கிறார்கள் என்பது நாசரின் கணிப்பு. அது சரிதான். பிறக்கும்போது ஒரு குழந்தை குழந்தையாகவே பிறக்கிறது, அதாவது ஃபித்ரா எனும் அதன் இயற்கையான தன்மையிலேயே பிறக்கிறது. பெற்றோர்கள்தான் அதை யூதராகவோ, கிறிஸ்தவராகவோ மாற்றிவிடுகிறார்கள் என்று நபிகள் நாயகம் சொன்ன ஹதீஸும் உண்டு. (அந்த நபிமொழிக்கு அர்த்தம் பிறக்கும்போது குழந்தை இஸ்லாத்திலேயே பிறக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு)!

நடிப்புப் பள்ளியில் பயிலும்போது ஒன்றும் பெரிதாக கற்றுக் கொள்ளவில்லை என்றும், நண்பர்கள் குழுவினாலும், பள்ளிக்கு வெளியிலும்தான் கற்றுக்கொண்டதாக நாசர் கூறுகிறார். அவரது பேச்சில் லேசான, இயற்கையான நகைச்சுவையும் இழையோடுகிறது.

பிரபாகரன் — நடிப்புப் பள்ளி ஆசிரியர் — கடமைக்குத்தான் சொல்லுவார். நாங்களும் கடமைக்குக் கேட்பதுபோல் நடித்தோம். ஆக, நடிப்பை அங்கேயே ஆரம்பித்துவிட்டோம் — என்கிறார்!

நாசருடைய பேட்டியில் அவர் சொல்லியிருந்த ஒரு விஷயம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. அது அவ்வளவு முக்கியமானதென்று அவருக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த விஷயத்தின் முக்கியத்துவம் பற்றி நான் சமீபத்தில் எழுதிய இந்த விநாடி என்ற புத்தகத்தில் தற்செயலா? தெய்வச் செயலா? என்ற அத்தியாயத்தில் எழுதியுள்ளேன். அதில் நண்பரும் கவிஞருமான யுகபாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியையும் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளேன். நாசர் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சி தெரிந்திருந்தால் நிச்சயம் அதையும் சேர்த்திருப்பேன்.

நாசருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. சரி, அது போகட்டும். தற்செயலாக நடக்கும் விஷயங்களை ஆங்கிலத்தில் chance occurrence, accident என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தற்செயலாக நடக்கும் எதுவுமே தற்செயலாக நடப்பதல்ல என்பதுதான் அவற்றின் பின்னால் இருக்கும் உண்மை. இதை டெக்னிகலாக ஆங்கிலத்தில் synchronicity என்று கூறுகிறார்கள். தீபக் சோப்ரா Synchrodestiny என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு செயல் நாசரின் வாழ்விலும் நடந்துள்ளது. அது அவர் வாழ்க்கையையே திசைமாற்றிப் போட்டது என்று அவரே கூறுகிறார். அது என்ன நிகழ்ச்சி?

தாஜ் கோரமண்டலில் அவர் வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு துண்டு விளம்பரம் — அவர் —  கண்ணில் பட்டது. அதுதான் என் வாழ்க்கையை, நடிப்பிற்கான எனது அணுகு முறையை முற்றிலும் மாற்றியது — என்று கூறுகிறார்.

முற்றிலுமாக அவர் வாழ்க்கையை மாற்றிப் போட்ட அந்த விளம்பரம் அவர் கண்ணில் பட்டது தற்செயலாக நடந்தது. நாம் கவனிக்க வேண்டிய இடம் இதுதான். தென்னிந்திய பிலிம் சொசைட்டியும் பூனா ஆர்க்கைவ்ஸும் இணைந்து பத்து நாட்களுக்கு திரைப்பட ரசனை வகுப்புகள் பற்றிய விளம்பரதான் அது.

இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்படவேண்டியுள்ளது. நாசரோ தாஜில் வேலை பார்க்கும் ஒரு தட்டுக் கழுவும் சிப்பந்தி. ஆனால் நிகழ்ச்சியோ பத்து நாட்களுக்கு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் பத்து நாட்களுக்கு லீவு வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிப்பந்திக்கு அத்தனை நாட்கள் லீவு கொடுப்பார்களா? ஆனால்

நான் விடுமுறைகள் அதிகம் எடுக்காததால் விடுமுறை நாட்கள் சேர்ந்திருந்தன. பன்னிரண்டு நாட்கள் விடுப்பெடுத்து அவ்வகுப்பில் சேர்ந்தேன் — என்று அவர் கூறுகிறார்.

இதுவும் ஒரு சின்க்ரானிக் ஈவண்ட்-தான். ஏனெனில், அந்த 10 நாள் வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே இறைவன் அவரை விடுப்பில் போகாமல் பார்த்திருக்கிறான் என்பதுதான் உண்மை.

ஜீன்ஸ் போட்ட சித்தர் என்று நாசரால் வர்ணிக்கப்படும் ரவூஃப் என்பவர் கொடுத்த அறிவுரைகூட ஒரு சிங்க்ரானிக் ஈவண்ட்–தான். இயக்குனர்கள் வீட்டு வாசலில் போய் வாய்ப்புக்காக நிற்பதும் பிச்சை கேட்பது போலத்தான் என்று சொல்லி அவர் நாசரை உசுப்பேற்றி இருக்கிறார்.

அடுத்தவர் வாசலில் நிற்பதை நிறுத்து. வாய்ப்பு உன்னைத் தேடி வரும்படி செய் — என்று அவர் கூறுகிறார். முதலில் சங்கடப்பட்ட நாசர் பின்னர் அதுதான் சரி என்பதை உணர்ந்து கொள்கிறார். இதுவும் இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

தான் நடிகராக உருவான விதம் பற்றிப் பேசும்போது இரண்டு நிகழ்ச்சிகளை நாசர் குறிப்பிடுகிறார். அற்புதமான நிகழ்ச்சிகள் அவை. திரைப்படக் கல்லூரிக்கு ஒருமுறை ஹாலிவுட் நடிப்பாசிரியர் வில்லியம் க்ரீவ்ஸ் என்பவர் வருகிறார். அவரிடம் நாசர், ராணி சுதா, அனிதா ஆகிய மூவரும் நிகழ்த்திக் காட்டிய உணர்ச்சி மயமான சில நிமிட நாடகம் — நாசர் எவ்வளவு பெரிய கலைஞர் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அவர் விவரிக்கும் ராணி சுதா, அனிதா ஆகியோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. உடம்பு முழுக்க பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடக்கும் மனைவி ராணி சுதாவிடம் நாசர் வந்து தன் அலுவலகத் தோழி அனிதாவைத் திருமணம் செய்ய இருப்பதாக சொல்வதாகக் காட்சி. இதை நாசர் வார்த்தைகளில் சொல்லும் விதமே அபாரமாக உள்ளது.

இன்னொரு நிகழ்ச்சி மழையில் அவர், பப்லு போன்றோர் ஜப்பானிய மொழியில் திடீரென்று பேசிக்கொண்டு நடித்த காட்சி. அதை நாசர் விவரிக்கும் விதத்தில் அடடா, அந்த இடத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்று தோன்றும் விதத்தில் இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரையிலும் நாசரின் பேச்சில் நேர்மை தெரிகிறது. சில உதாரணங்கள்

1. அவர் அப்பா வெஜிடேரியனாக இருந்ததால், கறி சாப்பிட வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரமாட்டார்களா என நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம்

2. திரைப்பட ரசனை வகுப்புக்கு வந்திருந்தவர்கள் பேசியது ஒரு எழவும் புரியவில்லை.

3. அறிவு வகுப்பறையில் கிடைப்பதில்லை. அறிந்து கொள்ளும் தாகம் வளர்த்துக் கொண்டால், பாறையிலும் நீர் கிடைக்கும் (இந்த வரிகளில் ஒரு கவிதையின் அழகு மிளிர்கிறது)

4. இன்றைக்கும்கூட கவிதை படிப்பது எனக்குக் கஷ்டமானது (இது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனது முதல் கவிதைத் தொகுதியான நதியின் கால்கள் — நூலுக்கு அவரிடம் ஒரு முன்னுரை கேட்டிருந்தேன். முதலில் தயங்கிய அவர் பின்னர் எப்படியோ ஒத்துக்கொண்டார். ஆனால் அந்தத் தொகுதியைத் தூக்கிக்கொண்டு ஷூட்டிங் ஷூட்டிங்-காக பாவம் கிட்டத்தட்ட ஆறு மாதம் அலைந்திருக்கிறார். என் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியில்! முடியுமா அது? எனக்கே புரியாதது அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்துவிடும்! கடைசியில் ஒரு வழியாக, ஒரு மாதிரியான முன்னுரையை எழுதியும் கொடுத்தார், பாவம்)!

4. தீவிர வாதத்துக்கு எதிரானவன் நான். எப்போது எந்த வகையில் இருந்தாலும் சரி. தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றால் அது முஸ்லிம்கள்தான் என்று ஸ்திரப்படுத்திவிட்டார்கள்.

5.பாப்கார்ன் படம்  படுதோல்வியைத் தழுவி இரண்டே கால் கோடி ஒட்டு மொத்த நஷ்டத்தில் தள்ளியது. (எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நான் நாசரின் அவதாரம்பாப்கார்ன், தேவதை ஆகிய படங்கள் பார்த்துள்ளேன். மாயன் பார்க்கவில்லை. பாப்கார்ன் மாதிரி ஒரு சொதப்பலான, மோசமாக எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்ததில்லை. குறிப்பாக கதாநாயகன் தேர்வு, அவருடைய தலைமுடி ஸ்டைல் இன்ன பிறவற்றைச் சொல்லலாம். கதையை எடுத்துச் சென்ற முறையிலும் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. நாசர் எப்படி இப்படி எடுத்தார்? அவதாரம் எடுத்தவரா இவர்? என்ற கேள்விகளெல்லாம் இன்னும் என் மனதில் உள்ளன. நல்ல வேளை அந்தப் படம் வெற்றி பெறாமல் அவருக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்துக் கொடுத்தது. அவதாரத்தில்கூட எனக்கொரு கேள்வி உள்ளது. Survival of the Fittest என்று சொல்வார்களல்லவா? அப்படித்தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் நசிந்து போகின்றன என்று அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம் அவற்றைவிட வலுவான கலைகள் வந்தபிறகு? அவைகள் நசிந்து போய்விட்டன என்ற செய்தியைக்கூட நீங்கள் ஒரு திரைப்படம் மூலமாகத்தானே சொல்ல முடிகிறது?)

அவர் நஷ்டப்பட்டு, கஷ்டப்பட்ட காலகட்டத்தில், அவருடைய காரியதரிசி கிரியும் அவரை விட்டுப் பிரிந்து போன நேரத்தில் அவருடைய மனைவி காமிலா — ஏன் எல்லாரும் அவர் பெயரை கமீலா என்று சொல்லவும் எழுதவும் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அரபியில் காமில் (perfect) என்ற சொல்லில் இருந்து காமிலா வருகிறது. அதில் நெடில்தான். குறில் கிடையாது — அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை பொருளாதார மற்றும் எமோஷனல் நஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்தது பாராட்டுதலுக்கு உரிய ஒன்று.

நாடக இயக்குனர் கருணா பிரசாத் சொல்வதுபோல, நாசர் உண்மையிலேயே அரிதாரமற்ற ஒரு அரிதான கலைஞர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கட்டுரையில் உள்ள கோட்டோவியங்களை வரைந்தவரும் நாசர்தான்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

6 Responses to அரிதாரமற்ற அரிதான கலைஞன்

 1. basheer says:

  நாசர் ஒரு அறிதாரமற்ற கலைஞராக இருக்கலாம்.ஆனால் புத்திசாலி கலைஞர்
  அல்ல.பாப்கார்ன்,தேவதை போன்ற உருப்படாத குப்பைகளே அதற்க்கு சாட்சி.

  **** பின் அவர்கள் போன பிறகு, ஏன் அப்படிச் செய்யச் சொன்னீர்கள் என்று நாசர் கேட்டதற்கு, அவர்கள் ஜூஸ் (Jews) அதாவது யூதர்கள், முஸ்லிம்களை வெறுப்பவர்கள் என்று கூறியிருக்கிறார். புதிய தகவலாக இருந்த அது நாசரை சிந்திக்க வைத்திருக்கிறது. தன் அம்மாவிடம் போய், அம்மா, ஜூஸுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆகாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அம்மா, ஜூஸ் யார் குடிச்சாலும் நல்லதுதாண்டா என்று பதில் சொல்லியிருக்கிறார்! ****
  **** இதைவிட அரைவேக்காட்டு தனமான பதிலை நான் படித்ததில்லை.****

 2. நாகூர் ரூமி says:

  அன்பு பஷீர், உங்களுக்கு நாசர் மீது எதற்குக் கோபமென்று தெரியவில்லை. ஜூஸ் என்று ஒரு படிக்காத ஒரு முஸ்லிம் பெண்மணியிடம் சொன்னால் அவர்களுக்கு அது Jews என்று புரியுமா? அரைவேக்காட்டுத்தனம் என்பது நாசரின் தாயாருக்குப் பொருத்தமில்லாத வார்த்தை. அவசரப்பட்டு எழுதிய உங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 3. //ஏனெனில், அந்த 10 நாள் வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே இறைவன் அவரை விடுப்பில் போகாமல் பார்த்திருக்கிறான் என்பதுதான் உண்மை//

  மேலே உள்ளது சரியெனில், கீழே உள்ளது?

  //திரைப்பட ரசனை வகுப்புக்கு வந்திருந்தவர்கள் பேசியது ஒரு எழவும் புரியவில்லை//

  வெறும் வரட்டு வாதத்திற்காகக் கேட்கவில்லை.
  இரண்டையும் சேர்த்தால்,

  “ஒரு எழவும் புரியாத பேச்சுகளை 10 நாள் கேட்க வைப்பதற்காகவே இறைவன் அவரை விடுப்பில் போகாமல் பார்த்திருக்கிறான்’

  என்றல்லவா வருகிறது?

  சின்க்ரானிக் ஈவண்ட்?
  இருக்கலாம்; அறுதியிட்டுக் கூறமுடியாதல்லவா?

  chance occurrence, accident இவற்றை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில், இவற்றின் உட்பொருளிலேயே, நம் அறியாமை – இயலாமை ஒப்புக்கொள்ளப்படுகிறன.

  synchronicity – நம் அறியாமையும் இயலாமையும் மறைக்கப்படுகின்றன.

  நாசரின் இப்பேட்டியும் அவரது நேர்மையை, வெளிப்படையான அணுகுமுறையை, புத்திசாலித்தனத்தை அழகாகவே காட்டுகிறது – அவரது ஓவியங்களைப் போலவே!

 4. நாகூர் ரூமி says:

  அன்பு மஜீத், நீங்கள் முழுப் பேட்டியையும் படிக்காததால் இந்த சந்தேகம் / கேள்வி வந்திருக்கிறது. ஒன்றும் புரியவில்லை என்பது முதல் கட்டம். பிறகு எல்லாம் புரிந்தபோது எப்படி அது தன் வாழ்க்கையை, அணுகுமுறையை எல்லாம் மாற்றியது என்று நாசர் விளக்கமாகக் கூறியுள்ளார். எல்லாவற்றையும் ஒரு விமர்சனக் கட்டுரையில் சொல்வது சாத்தியமில்லையே…எனவே சிங்க்ரானிக் ஈவண்ட் — என்று எனக்குத் தோன்றியதை ’ஹைலைட்’ செய்வதற்காக அப்படி எழுதினேன். சிங்க்ரானிக் ஈவண்ட்ஸ் பற்றி நீங்கள் விளக்கமாக அறிந்து கொள்ள விரும்பினால் நான் கூறியுள்ள தீபக் சோப்ராவின் நூலைப் படிக்கவும். அல்லது எனது நூல் இந்த விநாடி–யின் கடைசி அத்தியாயத்தையாவது படிக்கவும். அன்புடன்
  ரூமி

 5. Basheer says:

  Thanks Mr. Roomi. I also misunderstood with Nazar. Now I will change my view InshaAlalh.

 6. Thanks Nagoor Rumi sir for a fantastic posting. Nasser is a great artiste. But unfortunately he lost all his hardly earned wealth in producing films.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s