நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 3

அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்

 

 

இஸ்லாத்தின் வருகைக்குமுன் யூதம் கிறிஸ்தவம் ஆகிய இரண்டும் பிரதான மதங்களாக இருந்தன. ஆனாலும் அரேபியாவில் அவைகளால் வேறூன்ற முடியவில்லை. யூத மதத்தின் அணுகுமுறை எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதாக இருந்தது. தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், கடவுள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் யூதர்கள் நினைத்தார்கள். நபிகள் நாயகத்தின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் Trinity எனப்படும் முத்தெய்வக் கொள்கை வழக்கில் இருந்தது. இயேசுவை கடவுளின் மகன் என்று அம்மதம் சொன்னது. இயேசு திருமணம் செய்து கொள்ளாததால் ஆண் பெண் உறவு என்பதே ஏதோ அசிங்கமான ஒன்று என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்டது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்விக்காமல் அவர்களைத் துறவிகளாக, மடத்தில் கன்னிகாஸ்திரீகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் கொண்டிருந்தது.

நபிகள் நாயகமவர்கள் இறுதித் தூதர் என்பதால், குறிப்பிட்ட நாட்டோடோ, குறிப்பிட்ட மக்களோடோ அவர்களுடைய தூதுத்துவம் சுருங்கிப் போய்விடவில்லை. இஸ்ரவேலர்களில் வழிதவறிப் போனவர்களை நேர்வழிப்படுத்த தான் அனுப்பப்பட்டதாக இயேசு சொன்னதைப் போல பெருமானார் சொல்லவில்லை. இந்தியர்களுக்கு வேதங்களும், பாரசீகர்களுக்கு ஜென் அவெஸ்தாவும், யூதர்களுக்கு தௌராத்தும், ஹூத், சாலிஹ், மற்றும் இஸ்ரவேலர்களின் கூட்டத்தினரில் வழிகெட்டவர்களுக்காக இஞ்சீலும் அருளப்பட்டன.

ஆனால் மனிதகுலம் முழுமைக்கும் தான் நபியாக அனுப்பப்பட்டதாக பெருமானார்  கூறினார்கள். அகிலம் முழுவதையும் மனித குலத்துக்கான ஒரு பெரிய நாடாக இஸ்லாம் பார்த்தது. பெருமானாருக்குக் கிடைத்த இறை அழைப்பில் எல்லா மனிதர்களுக்குமான பொதுத்தன்மை இருந்தது. ஹிமாலய பள்ளத்தாக்குகளிலேயோ, அல்லது சினாய் மலையின் உச்சிகளிலேயோ வாழ்ந்த ஒரு கடவுளை வணங்க முஹம்மது மனிதர்களை அழைக்கவில்லை. பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஓரிறைவனுக்கான அழைப்பு அவர்களது. அதன் நோக்கம் மனித குலம் அனைத்தையுமே உண்மையின் பால் திரும்பச் செய்வது.

நபியே, நாம் உம்மை இந்த உலகத்தில் உள்ள சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி வைத்திருக்கிறோம் (34:28)

நபியே நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பி இருக்கிறோம் (21:107)

அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான் (61/09)

நபியே நீர் கூறும், ஓ மனிதர்களே, நான் மெய்யாகவே உங்கள் யாவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் (07/158)

என்றெல்லாம் இறைவன் திருமறையில் பல இடங்களில் இவ்விஷயத்தைத் தெளிவு படுத்துகிறான். முஹம்மது (ஸல்) அவர்களும் தன்னுடைய செய்தி எல்லா மனிதர்களுக்குமானது என்பதை பல நபிமொழிகள் மூலமும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

நான் அரேபியர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்குமான நபி. வெள்ளையர், கருப்பர் எல்லோருக்குமான நபியாக நான் இருக்கிறேன்.  எனக்கு முன்னால் வந்த நபிமார்கள் அனைவரும் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நானோ மனித குலம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்றெல்லாம் நபிமொழிகள் உள்ளன.

இந்த உலகத்தின் சாவிகள் அனைத்தும் என்னிடம் கொடுக்கப் பட்டுள்ளன;  அகிலமனைத்தையும் என் கட்டுப்பாட்டுக்கு இறைவன் கொண்டு வந்துள்ளான்; உலகின் கிழக்கு மேற்குப் பகுதிகளை நான் பார்த்துள்ளேன்; அங்கெல்லாம் என் சமுதாயத்தினரின் அரசுகள் நிறுவப்படும் என்றெல்லாம் பொருள்படக் கூறும் நபிமொழிகள் உள்ளன.

முஹம்மது (ஸல்) அவர்களின் பணி தொடங்கிய காலம்  முதல் ஹுதைபிய்யா உடன்படிக்கை காலம் வரையில் கணக்கிட்டால், அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதி இஸ்லாத்திற்குள் வந்திருந்ததைக் காணலாம். மற்ற நாடுகளில் இருந்த அரசர்களையும், ஆட்சியாளர்களையும், தலைவர்களையும் ‘துணிச்சலாகவும், சமரசம் செய்துகொள்ளாத வகையிலும்’ இஸ்லாத்துக்கு அழைக்க பெருமானார் முடிவு செய்தார்கள். அப்படி அழைக்க முடிவு செய்தவர்களில் சிலர் ஆட்சியாளர்களாகவும், சிலர் ரோம, பாரசீக மன்னர்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தவர்களாகவும் இருந்தனர்.

அதற்காக அந்த ஆட்சியாளர்களிடம் சென்று இஸ்லாத்தை எடுத்துரைக்கத் தூதுவர்களை நியமித்தார்கள். அவர்களுக்குக் கடிதங்கள் எழுதும்போழுது சர்வதேச விதிமுறைகளை அனுசரித்தே எழுதினார்கள். ஆட்சியாளர்களுக்கு உரிய மரியாதைகள் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. பெருமானாரின் காலத்தில் வெளி நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பும் வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத் தக்கது. அப்படி அனுப்பப்பட்டவர்கள் நன்கு படித்தவர்களாகவும் அனுபவம் மிக்கவர்களாகவும் இருந்தனர். ராஜீய நடைமுறைகளை நன்கறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களை நியமிக்கும்போது அவர்களது தகுதியை வைத்தே நியமனம் செய்யப்பட்டது.

அப்படி அனுப்பப்பட்ட தூதர்கள், எந்த நாட்டுக்குச் சென்றார்களோ அந்த நாட்டில் பேசப்பட்ட மொழியினை நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். ஏற்கனவே அந்நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். எனவே இஸ்லாமிய பிரசாரத்தை எளிதாக அவர்களால் செய்ய முடிந்தது. பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும், எதிர்ப்பு உருவாகாமல் நடந்து கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடிதங்களின் உறைகள் மீது ’அல்லாஹ்’, ’தூதர்’, ’முஹம்மது’ என்ற மூன்று சொற்கள் பிரதானமாக, தனித்தனியாக மூன்று வரிகளில் எழுதப்பட்டன. இதற்காக ஒரு வெள்ளி மோதிரம் செய்யப்பட்டு அதில் இந்த மூன்று சொற்களும் பொறிக்கப்பட்டன. முதன் முதலில் அரேபியாவில்தான் இக்கடிதங்கள் இந்த மூன்று சொற்களுடன் முத்திரையிடப்பட்டன.

மகா ரோம், மகா பாரசீகம், மகா எகிப்து என்று அவற்றில் முகவரி எழுதப்பட்டன. “இஸ்லாத்தில் இணையுங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்ற வாக்கியம் இக்கடிதங்களில் எழுதப்பட்டன. அப்படி எழுதியது பெருமானாரின் அரசியல் ஞானத்தைக் காட்டியது, ஏனெனில், “என் மீது விசுவாசம் கொள்ளுங்கள், உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்” என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது. மறுத்தால் (இறைத்) தண்டனை உண்டு என்ற எச்சரிக்கையும் அதில் உட்குறிப்பாக இருந்தது. நவீன ராஜதந்திரத்துக்கு அது ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தது.

அரேபியா என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒரு நாடல்ல, ஒருங்கிணைக்கப்பட்ட ஆற்றல் மிகுந்த ஒரு அரசு அங்கே உருவாகிவிட்டது என்பது இக்கடிதங்களின் மூலம் அண்டை நாடுகளில் இருந்த ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப்பட்டது.

தூதர்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக இரண்டுவிதமான கருத்துக்கள் உண்டு. ஹிஜ்ரி 7, முஹர்ரம் முதல் பிறை அன்று (கிபி 628, மே 11) புதன் கிழமை அவர்களுடைய பிரயாணம் துவங்கியது என்று ஒரு கருத்தும், வேறு தேதிகளில் கிளம்பியதாக இன்னொரு கருத்தும் உண்டு. தனது காலத்தில் வாழ்ந்த ஆட்சியாளர்களுக்கு முஹம்மது (ஸல்) அவர்கள் கிட்டத்தட்ட 250 அல்லது 300 கடிதங்களை அனுப்பியதாக வரலாறு பதிந்து வைத்துள்ளது.

ஆனால் அனுப்பப்பட்ட கடிதங்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் சாம்ராஜ்ஜியம் 10 லட்சம் ஸ்கொயர் மைல்கள் பரப்பளவிற்குப் பரந்து விரிந்திருந்தது. அத்துடன் ஒரு ஆட்சியாளராக அவர்கள் பத்தாண்டுகள் இருந்திருக்கிறார்கள்.

முகாகிஸ் என்ற ஆட்சியாளருக்கு அவர்கள் எழுதிய கடிதம் இன்னும் எகிப்து நூலகத்தில் அதன் மூல வடிவத்திலேயே பாதுகாப்பாக உள்ளது. அதேபோல, ரோமாபுரியை ஆண்ட சீசர் ஒருவருக்கு எழுதிய கடிதமும் துருக்கியின் இஸ்தான்புல் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆட்சியாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் கீழ்வரும் திருமறை வசனம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது:

நபியே, இதற்குப் பின்னரும் உம்மை விசுவாசிக்காது அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் இந்த விஷமிகளை நன்கறிந்தவனாகவே இருக்கிறான். நீர் கூறும்: ஓ வேதத்தை உடையவர்களே, எங்களுக்கும் உங்களுக்கும் சம்மதமான ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக. (அதாவது): நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நான் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும், அல்லாஹ்வையன்றி வேறெவரையும் ஆண்டவனாக எடுத்துக்கொள்ள மாட்டோம் (03:63).

இனி பெருமானார் ஆட்சியாளர்கள் சிலருக்கு அனுப்பிய கடிதங்களைப் பார்க்கலாம்.

1.         நீகஸுக்கு அனுப்பிய கடிதம்

அபிசீனிய அரசர்களுக்கு நீகஸ் என்று பொதுப்பெயர் இருந்தது. இந்த கடிதம் எழுதப்பட்ட நீகஸின் உண்மையான பெயர் ஆஷாம் அல்லது அஷாமா இப்னு அல் ஜப்ர். அவர் ஒரு கிறிஸ்தவர். கிழக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்துக்குக் கட்டுப்பட்டு அதன் பாதுகாப்பில் இருந்தவர். ஏற்கனவே அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்து சென்ற முஸ்லிம்கள் அங்கே வரவேற்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தனர். அம்ரிப்னு உமய்யா அல் தம்ரி என்பவர் அங்கே தூதுவராக அனுப்பப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார். எந்த நீகஸுக்காக முஹம்மது (ஸல்) இறந்த உடலுக்கான (ஜனாஸா) தொழுகை நிறைவேற்றினார்களோ அந்த நீகஸ் அல்ல இவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கடிதம் எழுதப்பட்ட நீகஸ் முஸ்லிமாகவில்லை என்று வரலாற்றாசிரியர் இப்னு ஹிஷாமும் கருதுகிறார். ஆனால் அவர் முஸ்லிமானார் என்று இப்னு இஸ்ஹாக், வகீதி, இப்னு ச’அத் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவருக்கு பெருமானார் அனுப்பிய கடிதம்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வன் தூதர் முஹம்மது அபிசீனிய அரசர் நீகஸ் அல் அஷாமுக்கு எழுதுவது. உமக்கு சாந்தியும் சமாதானமுன் உண்டாவதாகுக.

அரசனாகவும், புனிதனாகவும், அமைதியாகவும், நம்பிக்கையாகவும், கவனிப்போனுமாகவும் இருக்கும் அல்லாஹ்வைப் புகழ்ந்து நான் துவங்குகிறேன். மரியத்தின் மகனாகிய இயேசு தூய்மையானவரும், நல்லவருமாகிய கன்னி மர்யத்தின் வயிற்றில் அல்லாஹ்வினால் உயிர் கொடுக்கப்பட்டவர் என்பதற்கு நான் சாட்சி  கூறுகிறேன். எப்படி அல்லாஹ் ஆதத்தை தன் கையினாலும் தன் மூச்சினாலும் படைத்தானோ அதேபோல அவன் இயேசுவைத் தன் ஆன்மாவிலிருந்தும் மூச்சிலிருந்தும் படைத்தான். ஈடு இணையற்றவனாகிய அல்லாஹ் ஒருவனுக்குக் கீழ்ப்படிய நான் இப்போது உம்மை அழைக்கிறேன். எப்போதுமே அவனுக்கே அடிபணியுங்கள், என்னைப் பின்பற்றுங்கள். எனக்கு அவனிடத்திலிருந்து அருளப்பட்டதில் நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறேன். இதற்கு முன் நான் என் உறவினர் ஜாஃபரை பல முஸ்லிகளோடு சேர்த்து உங்களிடம் அனுப்பி இருக்கிறேன். அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொள்ளுங்கள். நீகஸ், பெருமையை விட்டுவிடுங்கள். ஏனெனில் நான் உங்களையும், உங்கள் சபையினரையும் அல்லாஹ்விடத்திலே அழைக்கிறேன். எனது கடமையையும் நான் செய்ய வேண்டிய எச்சரிக்கையையும் நான் நிறைவேற்றி விட்டேன். என் அறிவுரையை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நல்லது. உண்மையான வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளும் அனைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக…

இப்னு ச’அத் கூற்றின்படி, நீகஸுக்கு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டன. அபூ சுஃப்யானுடைய மகள் உம்மு ஹபீபாவைத் திருமணம் செய்து கொள்ள இரண்டாவது கடிதத்தில் பெருமானார் அனுமதி கேட்டிருந்ததார்கள். தன் கணவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹஷ் அல் அசதியோடு அவர் அபிசீனியாவுக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் கணவர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டார். பின் அங்கேயே அவர் இறந்தும் போனார். நீகஸ் 400 தீனார்களை முஹம்மது நபி (ஸல்) சார்பாக மஹராகக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

தனது கடிதத்தில் அரசியல் அதிகாரம் பற்றி பெருமானார் குறிப்பிடவே இல்லை. இயேசுவின் சரியான நிலை பற்றி மட்டுமே குறிப்பிடிருந்தார்கள். “எதிர்க்காதவரையில், அபிசீனியர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று அவர்கள் சொன்னதாக குறிப்பிடப்படுகிறது. எனவே முஸ்லிம்கள் அபிசீனியாவை பல நூற்றாண்டுகளாக தாக்கவே இல்லை. இஸ்லாமிய ஆட்சியின் பகுதியாக அபிசீனியா இல்லாவிட்டாலும் அதனோடான உறவு நட்புடனேதான் இருந்து வந்தது. முஸ்லிம் அரசுக்கு தன் நட்பையும் அபிசீனிய அரசு வழங்கி இருந்தது. செங்கடல் மூலமாகச் செல்லும் வாணிகம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 18, 19ம் நூற்றாண்டுகளில் அமைதியாக அரேபியாவினுள் அவர்கள் புகுந்ததாக வரலாறு கூறுகிறது.

எனவே தனது அரசியல் அதிகாரம் விழுந்துவிடும் என்ற அச்சத்தில்தான் நீகஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று பட்ஜ், அபுல் ஹசன் போன்றோர் சொல்வது ஆதாரமிழக்கிறது. ஜாஃபர் தய்யாரின் கையில் நீகஸ் இஸ்லாத்தைத் தழுவினார். அதுபற்றி விபரமான ஒரு கடிதத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அனுப்பினார். அதோடு, தன் மகன் அர்ஷாவை தூதுவராகவும் அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார். தேவைப்பட்டால் தானே வருவதாகவும் சொன்னார்.

தொடரும்…

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s