நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை – 7

அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்

21.       பஹ்ரைன் ஆட்சியாளர் ஹிலாலுக்கு அனுப்பிய கடிதம்

நீங்கள் அமைதியை விரும்பும் மக்கள். எனவே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்பதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்.  அவனுக்கு இணையோ துணையோ கிடையாது. இறைவனின் ஒருமையை உணர்த்தும் இஸ்லாத்தில் இணையுமாறும், தூதராகிய எனது வட்டத்துக்குள் வருமாறும் நான் உங்களை அழைக்கிறேன். நேர்வழியில் செல்பவனுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

22. துகாதுர் என்ற பிஷப்புக்கு   

தெஹ்யா இப்னு அல் கல்பி மூலமாக துகாதுருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:

இஸ்லாத்தில் இணைபவருக்கு அமைதி உண்டாகட்டும். அஸ்ஸலாமு அலைக்கும். மர்யத்தின் மகனாகிய ஈஸா அல்லாஹ்வுடைய ரூஹாகவும் சொல்லாகவும் இருக்கிறார். பக்திமானாகிய மர்யத்தினுள் அவர் உருவாகுமாறு அவன் செய்தான். அல்லாஹ் எங்களுக்கு அருளிய வேதத்திலும்..இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், ய’அகூப் மற்றும் அவரது சந்ததியினருக்கு அருளியதன் மீதும், மூஸா, ஈஸா இவர்கள் மூலமாக அருளப்பட்டதன் மூலமும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களுக்கு மத்தியில் நாங்கள் வித்தியாசப்படுத்திப் பார்ப்பதில்லை. அல்லாஹ்வுக்காக இஸ்லாத்தை நாங்கள் எடுத்துரைக்கிறோம். நேர்வழியில் செல்பவருக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

தெஹ்யா கடிதத்தோடு ஹெராக்லியஸிடம் சென்றாகவும், ஹெராக்லியஸ் தெஹ்யாவிடம், “உங்களது தூதரைப் பற்றி எங்கள் வேதத்தில் நான் படித்துள்ளேன். ரோமானியர்களிடமிருந்து என் உயிருக்கு ஆபத்து வருமோ என்று நான் அஞ்சுகிறேன். இல்லையெனில் நானும் முஹம்மதைப் பின்பற்றிவிடுவேன். நீங்கள் பிஷப் துகாதுரிடம் சென்று உங்கள் தலைவரைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில் ரோமானியர்களுக்கு முன் நான் இருப்பதைவிட உயர்ந்த அந்தஸ்தில் அவர் இருக்கிறார். அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு என் சொற்களைவிட மதிப்பும் மரியாதையும் இருக்கிறது” என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி தெஹ்யா துகாதுரிடம் சென்று கூறினார். அதற்கு துகாதுர், “உங்கள் தூதர் உண்மையான தூதர்தான், சந்தேகமே இல்லை. அவரைப் பற்றிய வர்ணனைகளில் இருந்தும், எங்கள் வேதத்தில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்தும் நாங்கள் அவரை அறிவோம்” என்று கூறினார். அதன் பின் துகாதுர் உள்ளே சென்று தன் கறுப்பு ஆடையைக் களைந்து விட்டு வெள்ளை ஆடையை அணிந்து கொண்டார். தனது தடியைக் கையில் எடுத்துக் கொண்டு தேவாலயத்துக்கு வந்திருந்த ரோமானியர்கள் முன் சென்று, “ரோமானியர்களே, அஹ்மதிடமிருந்து ஒரு கடிதம் நமக்கு வந்துள்ளது. அதில் அவர் நம்மை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கிறார். அல்லாஹ் ஒருவன் தான் என்றும், அஹ்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்.

அப்படி அவர் சொல்லி முடித்தவுடன் கூட்டம் அவர் மீது பாய்ந்து அவரை அடித்துக் கொன்றது. நடந்ததையெல்லாம் தெஹ்யா ஹெராக்லியஸிடம் வந்து கூறினார்.

22.       அய்லாவின் தலைவர்களுக்கு

ருஹானா இப்னு ரோயா போன்ற அய்லா தலைவர்களுக்கு பெருமானாரின் கடிதம்:

நீங்கள் அமைதிய விரும்பும் மக்கள். எனவே அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். ஏனெனில் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. நான் உங்களோடு போர் செய்ய விரும்பவில்லை. இஸ்லாத்துக்கு உங்களை அழைக்கிறேன். முஸ்லிமாகுங்கள் அல்லது ஜிஸ்யா வரியைச் செலுத்துங்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், மற்ற தூதர்களுக்கும் வழிப்பட்டு நடங்கள், அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துங்கள். முஜாஹிதீன்களுக்கு உகந்த ஆடையை அவர்கள் அணிய வையுங்கள். எனது தூதுவர்கள் திருப்தியடைந்தால் நான் திருப்தியடைவேன். ஜிஸ்யா பற்றி உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நீரிலும் நிலத்திலும் அமைதி வேண்டுமானால், அல்லாஹ்வுக்கு அவனது தூதருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.

என் தூதுவர்கள் அதிருப்தியுடன் நீங்கள் திருப்பி அனுப்பினால், உங்களோடு போர் செய்யாமல் நான் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன். கெடுதி நேருமுன் இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றி என் தூதுவர்களிடம் சொல்லியுள்ளேன். மூன்று வசக் பார்லியை ஹெம்லாவிடம் கொடுத்துவிடவும். அவர் உங்களுக்காக சிபாரிசு செய்துள்ளார். இல்லையெனில், நான் உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்க மாட்டேன், உங்கள்மீது போர் தொடுத்திருப்பேன். என் தூதுவர்களுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் நடந்து கொண்டால், அல்லாஹ்வும், அவனது தூதரும், எனது பிரதிநிதிகளும் உங்கள் பாதுகாவலர்களாக இருப்பார்கள்.

ஷர்ஜீல், ஹெம்லா, உபய், ஹாரித் இப்னு ஜைது அல் தாஈ ஆகியோர் எனது தூதுவர்கள். அவர்களுக்கு உடன்பட்டால் உங்களுக்கு அமைதி உண்டாகும். மக்னா மக்களுக்குத் தேவையான பண்டங்களைக் கொடுத்தனுப்பவும். அப்போதுதான் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியும்.

24. பனீ ஜுபைர் இப்னு உகைஷுக்கு

பனீ ஜுபைர் இப்னு உகைஷ் உஸ்காலின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த கோத்திரத்துக்கு பெருமானார் அனுப்பிய கடிதம்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுவிடமிருந்து பனீ ஜுபைர் இப்னு உகைஷுக்கு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை, முஹம்மது அவனுடைய தூதராவார் என்ற உண்மைக்கு நீங்கள் சாட்சி சொல்வீர்களேயானால், பல தெய்வ வணக்கக்காரர்களிடமிருந்து பிரிந்து தனியாக இருங்கள். போர்ப்பொருள்களில் இருந்து ஐந்தில் ஒரு பங்கை முஹம்மதுக்கு என ஒதுக்கி வையுங்கள். அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

பதப்படுத்தப்பட்ட தோலில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி இக்கடிதம் எழுதப்பட்டது.

25. அஹ்பியீன்களுக்கு

அஹ்பியீன்களைச் சேர்ந்த ஹபீப் இப்னு அம்ர் பெருமானாரிடம் வந்தபோது அவர்களுக்கான இக்கடிதம் அவரிடம் கொடுக்கப்பட்டது:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுவிடமிருந்து ஹபீப் இப்னு அம்ர் மற்றும் முஸ்லிமாகி, ஐவேளைத் தொழுது, ஜக்காத் கொடுக்கும் அவருடைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு. நகரிலும் பாலைவனத்திலும் உள்ள சொத்துக்களும் தண்ணீர் கிணறுகளும் அவர்களுக்கே சொந்தமாகும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அவனது தூதரின் பொறுப்பு.

26. பக்ர் இப்னு வயீலுக்கு அனுப்பிய கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாத்தில் இணையுங்கள். அமைதி கிடைக்கும் என்று எழுதப்பட்ட இக்கடிதத்தை தபியான் இப்னு மர்தது அல் சதூஸி கொண்டு கொடுத்தார்.

27. நஷீல் இப்னு மாலிக் அல் வயீலீ

நஷீல் இப்னு மாலிக் அல் வயீலுக்கு பெருமானார் சொல்ல இக்கடிதம் உஸ்மான் அவர்களால் எழுதப்பட்டது:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுவிடமிருந்து நஷீல் இப்னு மாலிக் அல் வயீல் மற்றும் முஸ்லிமாகி, ஐவேளைத் தொழுது, ஜக்காத் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அடிபணியும் அவருடைய தோழர்களுக்கு. அல்லாஹ்வுக்காக போர்ப்பொருளில் ஐந்தில் ஒரு பங்கும், தூதருக்கான பங்கும் கொடுக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இணைந்ததற்கு சாட்சி கூறுங்கள், பலதெய்வ வணக்கக்காரர்களிடமிருந்து ஒதுங்கி இருங்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பீர்கள். எல்லா வகையான கொடுமைகளிலிருந்தும் முஹம்மது காப்பாற்றுவார். இம்மக்களை நாடு கடத்தவோ, அவர்களிடமிருந்து உஷ்ர் வசூலிக்கவோ யாருக்கும் உரிமையில்லை. அவர்களுடைய நிர்வாகியை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

28. ஹஜாருக்கு

ஹஜார் கோத்திர மக்களுக்கு கீழ்க்கண்ட கடிதத்தை பெருமானார் அனுப்பினார்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுவிடமிருந்து ஹஜார் மக்களுக்கு. உங்களுக்கு அமைதி கொடுக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ்வித் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை. எனவே அவனை நான் புகழ்ந்தேத்துகிறேன்.

அல்லாஹ்வுக்காக, நேர்வழியில் இருந்து விலகிப் போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்களில் யார் மிக உயர்ந்தவர்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் பாவங்களால் பாதிப்பு இருக்காது.

என் தளபதிகள் உங்களைச் சந்திக்கும்போது, அல்லாஹ்வுடைய பாதையில் செயலாற்ற அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். உங்களின் நற்செயல்கள் வீணாக மாட்டா.

நீங்கள் அனுப்பிய பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள். எனது முழு உரிமையையும் நான் பயன்படுத்த வேண்டுமெனில், உங்கள் அனைவரையும் ஹஜ்ஜாரில் இருந்து நான் வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் நான் உங்கள் பிரதிநிதிகளை தவறாக நடத்தவில்லை. வந்தவர்களிடம் அன்பு காட்டினேன். வராதவர்களுக்கும் சலுகை கொடுத்தேன். இறைவன் உங்கள் மீது சொரிந்த அருட்கொடைகளை சொல்லிய வண்ணம் இருங்கள்.

கிஸ்ராவின் அதிகாரிகள் ஹஜாரில் இருந்தார்கள். அவர்களிடத்தும் பெருமானார் தன் தூதுவர்களை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்துக்கு வரவில்லை. அதனால் அவர்களுக்கு தலைக்கு ஒரு தீனார் என ஜிஸ்யா விதிக்கப்பட்டது.

29. நஜ்ரான் மக்களுக்கு

மத விஷயங்களில் நஜ்ரானில் இருந்த கிறிஸ்தவர்கள் மிகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு பெருமானார் அனுப்பிய கடிதம்:

இப்ராஹீம், இஸ்ஹாக், ய’அகூபின் இறைவனின் பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும். மனிதர்களை வணங்குவதை விட்டுவிட்டு இறைவனை வணங்க வரும்படி உங்களை அழைக்கிறேன். மறுத்தால் நீங்கள் ஜிஸ்யா கட்ட வேண்டியிருக்கும். உங்களுக்கு எதிராக நான் போர் செய்ய வேண்டிவரும். உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

30. நஃபதா அத்திலீ-க்கு

ஹீராவின் தென்கிழக்குப் பகுதியில் இருந்த சமாவா என்ற பிரதேச அரசருக்கு பெருமானார் ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை. சமாவாவின் அரசர் அரேபிய வம்சா வழியில் வந்தவராகையால் அவர் முஸ்லிமாகி இருக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது. ஈரானிய பிடியிலிருந்து சமாவாவுக்கு விடுதலையும் கிடைத்திருக்கும். ஆனால் நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை.

ஆட்சியாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பும் இந்தக் கொள்கை பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல பல விளைவுகளையும் ஏற்படுத்தியது. அரேபிய தீபகற்பத்தில் இருந்து இஸ்லாத்தின் செய்தி பல மிகப்பெரும் அரசுகளையும் சென்றடைந்ததது. இறைவனின் ஒருமைக்காகவும் மானிட சமத்துவத்துக்காகவும் போராடுவதற்குத் தயாரான  அரேபியாவில் ஒரு மாபெரும் புரட்சி நடக்க இருப்பதை அந்நாடுகளும் அரசுகளும் புரிந்துகொண்டன. இந்நாடுகளின் பல அரசர்கள் இஸ்லாத்தில் நிழலில் அடைக்கலம் தேடினர். அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய குடிமக்களும் இஸ்லாத்தைத் தழுவினர். ஏற்றுக்கொள்ளாதவர்களும், விமர்சித்தவர்களும் கடைசியில் ஏமாற்றமடைந்தார்கள். மோசமான முடிவுகளுக்கு ஆளாயினர். கிஸ்ரா தன் மகனாலேயே கொல்லப்பட்டார். பெருமானாரின் கடிதத்தைக் கிழித்தெறிந்தார். ஆனால் அவர் தன் ராஜ்ஜியத்தையே அப்படிச்செய்தார் என்று பெருமானார் சொன்னார்கள். அப்படியே ஆனது. மகத்தான பாரசீகப் பேரரசு கொஞ்ச காலத்திலேயே காட்டரபிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

சர்வதேசத்தசப்படுத்துதலின் இந்த தொடக்கமானது உள்நாட்டில் நிலமையை உறுதிப்படுத்த உதவியது. இஸ்லாமிய அரசின் லட்சியங்கள் விரிவடைந்தன. அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய முஸ்லிம்கள் தயாராக இருந்தார்கள். மக்கா வெற்றிக்குப் பிறகு, அவர்கள் படுத்துத் தூங்கிவிடவில்லை. மாறாக, அவ்வெற்றி அவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

வெளிநாட்டு விஷயங்களில் பெருமானாரின் தோழர்களுக்கு அனுபவமும் அறிவும் ஏற்பட்டது. பிரம்மாண்டமான அரண்மனைகளையும், புதிய தேசங்களையும், புதிய மக்களையும் அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. அனுப்பப்படும் நாட்டில் பேசப்படும் மொழியறிந்தவர்களையே அந்நாடுகளுக்குத் தூதுவர்களாக பெருமானார் அனுப்பினார்கள். வெளி நாட்டு மொழிகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இவ்விதமாக முஸ்லிம்களிடம் ஏற்பட்டது. வரும் காலங்களில் அறிவின் விளக்கை முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி மற்றவர்கள் வாழ்விலும் அவர்களால் ஏற்ற முடிந்தது.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s