நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 8

பெருமானார் அனுப்பிய பிரதிநிதிகள்

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு (ஏப்ரல் 630 / 631) பல்வேறு அரசுத்தூதுக் குழுவினரின் வருகையால் நிரம்பிய ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டில் பல அரசுகளின் தூதுக்குழுவினர் பெருமானாரை மதினாவில் வந்து சந்தித்து மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட முழு அரேபியாவும் இஸ்லாம் என்ற அமைதிக்குடையின்கீழ் வந்திருந்தது. எல்லா எதிர்மறையான போக்குகளையும் வெற்றி கொண்ட பிறகு,  மாநகர அரசு என்ற நிலையில் இருந்து தேச அரசு என்ற நிலைக்கு இஸ்லாம் உயர்ந்திருந்தது. சர்வதேசப் பேரரசாக திகழப் போகும் காலம் வெகு விரைவில் வர இருந்தது.

நாடோடிகளாக இருந்த மக்களோடு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் போர்க்களங்களில் ஒடுக்கப்பட்டிருந்தனர். ஜிஸ்யா வரி கொடுப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாமிய அரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய அரசில் சேர்க்கப்பட்டிருந்தனர். மதினாவுக்கு வந்த பல தூதுக்குழுவினர் இஸ்லாத்தை ஏற்றனர். மக்கா வெற்றிக்குப் பிறகு, ஹிஜ்ரி 8, 9. மற்றும் 10 ஆகிய மூன்றாண்டுகளில் இது நிகழ்ந்தது. எத்தனை தூதுக்குழுவினர் வந்தனர், எத்தனை பேர் இஸ்லாத்தில் இணைந்தனர் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. பதிமூன்று தூதுக்குழுவினர் என்று இப்னு இஸ்ஹாக்கும், ஹாஃபிஸ் இன்பு கய்யிம், கஸ்தலானி போன்றோர் 34 என்றும் கூறுகின்றனர். இப்ன் ச’அது 70 என்று கூறுகிறார். வேறு சில ஆராய்ச்சியாளர்களும் இக்கருத்தோடு உடன்படுகின்றனர். ஷாமி மட்டும் 104 தூதுக்குழுவினர் என்று கூறுகிறார்.

ஒரு கோத்திரத்தில் இருந்து ஒரு தூதுக்குழு வந்து இஸ்லாத்தைத் தழுவுமானால் அந்தக் கோத்திரம் முழுவதுமே இஸ்லாத்தில் வந்துவிட்டதாக அர்த்தமாகாது. ஏனெனில் பல நேரங்களில் தூதுக்குழுவில் இருந்தவர் மட்டுமே இஸ்லாத்து வந்திருந்தனர்.

அவர்களை பெருமானார் நேரில் வரவேற்பதற்கு முன்பாக, அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து அனுப்புவதற்கு ஒரு காரியக்காரர் நியமிக்கப்பட்டிருந்தார். வெளிநாட்டுத் தூதுவர்களை பள்ளிவாசலில் சந்தித்து அவர் பொறுப்புகளை நிறைவேற்றுவார். இதுதொடர்பாக வைக்கப்பட்ட தூண் இன்றும் தூதுக்குழுக்களின் நினைவாக உள்ளது. பெருமானாரும் அவர்களது தோழர்களும் தூதுக்குழுவினரைச் சந்திப்பதற்கு முன் நல்ல உடையணிந்து சென்றனர். தனக்குப் பிறகு அரசை நிர்வகிப்பவர்கள், தான் செய்தது போலவே, வெளிநாட்டுத் தூதுக்குழுவினருக்குப் பரிசளிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும் என்று பெருமானார் இறப்பதற்கு முன்புகூட கேட்டுக் கொண்டார்கள்.

பொதுவாக தூதுக்குழுவினரை தோழர்கள் கவனித்துக் கொண்டனர். ஹாரிதின் மகள் ரம்லாவின் வீட்டில்தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அதுதான் அரசு விருந்தினர் மாளிகையாக செயல்பட்டது. அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அதற்கேற்றவாறு கூடாரங்கள் எழுப்பப்பட்டன. போகும்போது, அவர்கள் செலவுக்கு நிறைய பணமும், தகுதிக்குத் தகுந்தவாறு கூடுதலாக பரிசுப்பொருள்களும் கொடுக்கப்பட்டன. ஒருமுறை உமானில் இருந்து வந்திருந்த குழுவினருக்கு 500 த்ரக்மாக்களும், இன்னொரு முறை தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட ஒட்டியானங்களும், மற்ற தருணங்களில் மற்ற மற்ற பொருள்களும் பெருமானாரால் கொடுக்கப்பட்டன.

தூதுக்குழுக்களின் ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே சில குழுக்கள் மதினாவுக்கு வந்து போயின. அங்கிருந்து நாம் தொடங்கிக் கொள்ளலாம்.

1.         முசைனா தூதுக்குழு

மதினாவுக்கு நேர் வடக்கே இருந்த முசைனாவுக்கு ரஜப் மாதம் பிறை 5ல் ஒரு தூதுக்குழு சென்றது. நுஃமான் இப்னு மக்ரான் என்ற புகழ்பெற்ற நபித்தோழர் முசைனா குலத்தைச் சேர்ந்தவர். அந்த தூதுக்குழுவில் 400 பேர் இருந்தனர். அதில் பிலால் இப்னு அல் ஹாரித், மேலே சொன்ன நுஃமான், அஸ்மா, உஸாமா, உபைதா இப்னு பர்தா, அப்துல்லாஹ் இப்னு தர்ரா மற்றும் பிஷ்ர் இப்னு லமஹ்தஸர் ஆகியோர் இருந்தனர். தூதுக்குழுவின் உறுப்பினர்கள் ஹிஜ்ரத் செய்ய விரும்பியபோது, “எங்கு சென்றாலும் நீங்கள் முஹாஜிரீன்கள்தான். எனவே உங்கள் வீடுகளுக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று பெருமானார் சொன்னார்கள். அம்மக்கள் முஸ்லிம்களாகி தங்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றனர். மக்கா வெற்றியின்போது முசைனா குலத்தின் கொடியை ஏந்தியவராக நுஃமான் இப்னு மக்ரான் சென்றார். பின்னாளில் ‘இஸ்பஹானை வெற்றி கொண்டவர்’ என்று அவர் அறியப்பட்டார்.

2.         ச’அது இப்னு பக்ர் தூதுக்குழு

ரஜப் பிறை 5ல், பனீ ச’அத் இப்னு பக்ர் கோத்திரத்தார் தம்மாம் இப்னு தலபாவை தங்கள் தூதுவராக மதினாவுக்கு அனுப்பினர். தன் கடமைகளை தம்மாம் நிறைவேற்றிய விதம் அரேபியர்களின் எளிமையையும் அஞ்சா நெஞ்சத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஒரு ஒட்டகத்தின் மீதமர்ந்து வந்த அவர், ‘இங்கே அப்துல் முத்தலிபின் மகன் யார்?’ என்று கேட்டார்.

‘அது நான்தான்’, என்று பெருமானார் (ஸல்) பதில் சொன்னார்கள்.

‘நீங்கள்தான் முஹம்மதா?’

‘ஆமாம்’.

‘அப்துல் முத்தலிபின் மகனே, ஒரு கஷ்டமான கேள்வியை நான் இப்போது உங்களிடம் கேட்கப் போகிறேன். ஆனால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.’

‘ஆண்டவன்மீது சத்தியமிட்டுக் கேட்கிறேன், உங்ள் இறைவன் மீதும்,  உங்களுக்கு முந்தியவர்களின் இறைவன் மீதும், உங்களுப்பின்னால் வர இருப்பவர்களின் இறைவன் மீதும் ஆணையிட்டுக் கேட்கிறேன், நம்மிடையே ஒரு தூதரை இறைவன் அனுப்பி உள்ளானா?’

‘ஆமாம்.’

‘மறுபடியும் ஆணையிட்டுக் கேட்கிறேன். அந்த ஆண்டவனுக்கு மட்டுமே நாங்கள் அடிபணிய வேண்டும், வேறு எதையும் அவனுக்கு இணை வைக்கக் கூடாது, நமது முன்னோர் வணங்கிய போட்டிக் கடவுள்களையெல்லாம் வணங்காது விட்டுவிட வேண்டும் என்று உமதிறைவன் எங்களுக்கு கட்டளையிடச் சொல்லி உமக்குக் கட்டளையிட்டுள்ளானா?’

‘ஆமாம், இறைவன் எனக்கு அப்படித்தான் கட்டளையிட்டுள்ளான்’ என்று பெருமானார் பதில் சொன்னார்கள்.

பின்னர் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள ஏவல் விலக்கல்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி மேலே கேட்ட மாதிரியே ஒவ்வொரு கேள்வியையும் பெருமானாரிடம் கேட்டார். இறுதியில் கலிமா சொல்லி முஸ்லிமானார்.

தம் மக்களிடம் திரும்பிச் சென்ற பிறகு அங்கிருந்த சிலைகளையெல்லாம் உடைத்து எறிந்தார். ஆனால் அவருடைய கோத்திரத்தார் அவரை அச்சுறுத்த வந்தபோது, ‘ஆண்டவன் மீது ஆணையாகக் கூறுகிறேன், இந்த சிலைகளால் நமக்கு லாபத்தையோ நஷ்டத்தையோ ஏற்படுத்த முடியாது’ என்று கூறினார்.

மாலைக்குள் கோத்திரத்தினர் அனைவரும் முஸ்லிமாயினர்.

3.         அஷ்ஜா தூதுக்குழு

அகழ்ப் போரின்போது இந்தக் கோத்திரத்தினர் மதினாவைத் தாக்குவதில் கலந்து கொண்டார்கள். நூறு பேர் கொண்ட இந்த குழு மதினாவுக்கு மசூத் இப்னு ருஹைலா தலைமையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு வந்தது. முஹல்லா ஷ’அப் சாலாவில் அக்குழு தங்க வைக்கப்பட்டது. பெருமானரே அவர்களை நேரில் சென்று பார்த்தார்கள். பேரீச்சம் பழங்களை அவர்களுக்குக் கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ‘நாங்கள் உங்களோடு சண்டையிட விரும்பவில்லை. சமாதானம் பேசவே விரும்புகிறோம்’ என்று அவர்கள் கூறினார்கள். அதன் படியே அமைதி உடன்படிக்கையை அவர்களோடு பெருமானார் செய்து கொண்டார்கள்.

பனீ குறைஸா குழு வந்துபோன பிறகு ஏழு நூறு பேர் கொண்ட இன்னொரு அஷ்ஜா குழு மதினாவுக்கு வந்து அனைவரும் முஸ்லிமாயினர்.

4.         குஷ்னி தூதுக்குழு

கைபர் கோட்டையை நோக்கி பெருமானார் செல்ல இருந்த சமயத்தில் அபூ தலபா அல் குஷ்னி அவர்களைச் சந்தித்து முஸ்லிமானார். பிரச்சனைகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருந்த யூதர்களுக்கு எதிரான கைபரின் மீதான முற்றுகையில் அவரும் பெருமானாரோடு உடன் சென்றார்.  அதன் பிறகு 700 பேர்களைக் கொண்ட ஒரு குழு மதினாவுக்குச் சென்றது. அபூதலபாவின் வீட்டில் அக்குழுவில் இருந்தவர் தங்க வைக்கப்பட்டனர். இஸ்லாத்தில் இணைந்த பிறகு குழுவினர் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.

5.         அல் அஷ் அரீன் தூதுக்குழு

அல் அஷ் அரீன் குழுவினர் யெமன் நாட்டைச் சேர்ந்த கண்ணியமிகு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரி 7ம் ஆண்டு அவர்கள் மதினாவுக்கு வந்தனர். பெருமானாரின் பெருமைமிகு தோழர்களில் ஒருவரான அபூ மூசா அல் அஷ் அரியும் அவர்களில் ஒருவராக இருந்தார் அப்போது. இறுதி நபியின் தூதுத்துவம் பற்றிக் கேள்விப்பட்டபின், மதினாவுக்கு வருவதற்காக ஒரு கப்பலில் ஏறிவந்தனர். ஆனால் எதிர் காற்று அவர்களை அபிசீனியாவுக்குக் கொண்டு சென்றது. ஜாஃபர் தய்யார் என்பவர் உதவி செய்ததால் ஜித்தா வழியாக மதினா வந்தடைந்தனர். கைபர் கோட்டையை வெற்றி கொண்டு பெருமானார் அங்கேயே இருந்த நேரம் அது. அவர்களைப் பார்த்த பெருமானார், ”இவர்களது நம்பிக்கை பலவீனமானது. உறுதியான நம்பிக்கையை ஏமனில்தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்கள். அதோடு, ”பையிலிருக்கும் நறுமணம் போன்றவர்கள் அவர்களில் இருக்கும் அல் அஷ்’அரீன்” என்றும் கூறினார்கள்.

‘இறைவனின் தூதரே, இந்த உலகின் துவக்கம் எவ்வாறு இருந்தது?’ என்று கேட்டார்கள்.

‘இறைவனே ஆரம்பத்தில் இருந்தான். அவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவனது அர்ஷ் தண்ணீரின்மீது இருந்தது. அவன் எல்லாவற்றையும் ஒரு பட்டோலையில் எழுதி வைத்துள்ளான்’ என்றார்கள். அவர்களுக்கிடையே நடந்த விவாதம் இவ்விதமாக இருந்தது.

6.         தௌஸ் தூதுக்குழு

துஃபைல் இப்னு அம்ர் தௌஸி உயர்ந்த, நுட்பமான கவிஞர். ஒருமுறை அவர் மக்கா சென்றிருந்தார். அப்போது குறைஷிகள் சிலர் பெருமானாரைப் பற்றி அவரிடம் அவதூறு சொன்னார்கள். “இந்த முஹம்மது நமது ஒற்றுமையைக் குலைக்கிறார். நீங்கள் அவரோடு பேசாமல் இருப்பது நல்லது. அவர் சொல்வதைக் கேட்க வேண்டாம்” என்று கூறினர். அவர்கள் ரொம்ப வற்புறுத்திச் சொல்லவும் அப்படியே செய்வதாக துஃபைலும் சொன்னார். “எனவே என் காதுகளில் (முஹம்மது சொல்வதைக் கேட்காதிருக்கும் பொருட்டு) பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டேன்” என்று பின்னாளில் இவர் சொன்னார். ஒருநாள் காலை க’அபா அருகில் அவர் சென்றபோது பெருமானார் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். முஹம்மது சொல்வதைக் கேட்டால்தான் என்ன என்று அவருக்குத் தோன்றியது. பெருமானார் தொழுதுவிட்டு வீட்டுக்குச் செல்லும்வரை பின் தொடர்ந்து சென்றார். குறைஷிகள் என்ன சொன்னார்கள் என்பதை பெருமானாரிடம் சொன்னார். அவருக்கு பதிலாக பெருமானார் திருக்குர்’ஆனை அவருக்கு ஓதிக்காட்டினார்கள். அதைக் கேட்ட பிறகு மனமுருகி அவர் இஸ்லாத்தில் இணைந்தார். இஸ்லாத்தைப் பரப்ப இறைவன் தனக்கு உதவ வேண்டும் என்று பெருமானாரை தனக்காக துஆ செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். பெருமானாரும், “இறைவா, இவருக்கு ஓர் அடையாளத்தைக் காண்பிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

வீட்டுக்கு வந்த துஃபைல் தன் வயதான தந்தையைப் பார்த்து, “நான் இப்போது முஸ்லிமாகிவிட்டேன். இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை” என்று கூறினார். தன் தந்தையையும் இஸ்லாத்துக்கு வரும்படி அழைத்தார். அவரும் முஸ்லிமானார். பின் அவருடைய மனைவியும் முஸ்லிமானார். தன் கோத்திரத்தாரையும் இஸ்லாத்துக்கு வரும்படி துஃபைல் அழைத்தார். ஆனால் அவர்கள் அவர் சொன்னதற்குச் செவிமடுக்கவில்லை. மனமுடைந்துபோன அவர் பெருமானாரிடம் சென்று, “என் கோத்திரத்தார் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை நீங்கள் சபிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், “இறைவா, தௌஸுக்கு வழிகாட்டுவாயாக” என்றுதான் பெருமானார் துஆ கேட்டார்கள்.

பின்னர் துஃபைலின் நோக்கம் நிறைவேறியது. ஹிஜ்ரி 7ல் அவர் மதினாவுக்கு வந்த தூதுக்குழுவின் தலைவராக இருந்தார். அதில் எழுபது, எண்பது பேர் இருந்தனர். அதில்தான் அபூ ஹுரைராவும், அப்துல்லாஹ் இப்னு உஜைரும் இருந்தனர். அந்த நேரத்தில் பெருமானார் கைபரில் இருந்ததால் தூதுக்குழு அங்கேயே சென்று அவர்களைச் சந்தித்தது. போரில் கிடைத்த பொருள்களில் அவர்களுக்கும் பெருமானார் பங்கு கொடுத்தார்கள். பின் அவர்கள் பெருமானாரோடு மதினாவுக்கு வந்து இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அறிந்து கொண்டனர்.

7.         ஜுதம் தூதுக்குழு

கைபர் வெற்றிக்கு முன், ரிஃபா இப்னு உமைர் இப்னு ம’அபத் அல் ஜுதாமி என்பவர் மதினாவுக்கு வந்து பெருமானாருக்கு ஒரு அடிமையை பரிசளித்தார். ஜுதம் கோத்திரத்தார் வியாழன் கோளை வணங்குபவர்களாக இருந்தனர். ரிஃபா முஸ்லிமானார். அவரது கோத்திரத்தாருக்கு ஒரு கடிதத்தை அவர் வசம் பெருமானார் கொடுத்தனுப்பினார்கள். அதில்:

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ரிஃபா இப்னு ஜைதுக்கும், அவரது கோத்திரத்தாருக்கும், அவர்களைப் பின்பற்றுவோருக்கும் எழுதுவது. உங்களை இறைவன் பக்கம் நான் அழைக்கிறேன். வருவபவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்சியில் இருப்பீர்கள். மறுப்பவர்கள் இரண்டு மாதங்களே பாதுகாப்பாக இருக்க முடியும்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஜுதம் கோத்திரத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர்.

8. ஜுஹைனா தூதுக்குழு

அப்துல் உஸ்ஸா  இப்னு பத்ர், அகைஃபி, அபூ ரோஹா போன்றோர் இக்கோத்திரத்தில் இருந்தனர். அவர்கள் காவி என்ற பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். அதன் பெயரை ’ஹிதாயத்’ என்று பெருமானார் மாற்றினார்கள். அப்துல் உஸ்ஸா என்ற பெயரையும் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள். மக்கா வெற்றியின்போது கொடிபிடித்துக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர். பள்ளி வாசல் கட்டிக் கொள்வதற்கு இவர்களுக்கு நிலமும் வழங்கப்பட்டது. மதினாவில் நிலம் கொடுக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலும் அதுவே.

அதே கோத்திரத்தைச் சேர்ந்த அம்ரிப்னு ஜர்ரா அல் ஜுஹைனி என்பவரும் பெருமானாரின் போதனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு தன் வசமிருந்த சிலையை உடைத்துவிட்டு, பெருமானாரைச் சந்தித்து முஸ்லிமானார். பெருமானாரின் ஆலோசனைப்படி திரும்பி வந்த அவர் தன் மக்களையும் இஸ்லாத்துக்கு அழைத்தார். ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முஸ்லிம்களாயினர்.

9.         தலபா தூதுக்குழு

பெருமானார் ஜிஃரானாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹிஜ்ரி 8ம் ஆண்டில், நான்கு பேர் அடங்கிய ஒரு குழு பெருமானாரைச் சந்தித்து இஸ்லாத்தில் இணைந்தது. ஆனால் தங்களது வறுமை நிலை பற்றி பெருமானாரிடம் எடுத்துச் சொன்னது. மதினாவில் சில நாட்கள் தங்கி இருந்த அவர்கள் திரும்பியபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ‘ஆக்கியா’ வெள்ளி வழங்கப்பட்டது. அதை பெருமானாரின் உத்தரவின் பேரில் பிலால் (ரலி) கொடுத்தார்கள்.

10. பனீ அப்திப்னு அதீ தூதுக்குழு

ஹாரித் இப்னு உத்பா, ராபியா இப்னு முல்லத், ஹபீப் இப்னு முல்லத், அவைமார் இப்னு அல் அக்ராம் மற்றும் பலர் ஹிஜ்ரி 5ம் ஆண்டு வந்த, மக்காவைச் சேர்ந்த இந்த தூதுக்குழுவில் இருந்தனர்.

“முஹம்மதே, மக்காவில் இருப்பவர்களில் எல்லாம் நாங்களே வலிமை மிக்கவர்கள். நாங்கள் உங்களோடு போர் செய்ய விரும்பவில்லை. நீங்கள் யாரோடாவது போர் செய்ய இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். குறைஷிகளைத் தவிர. எங்களில் யாரையேனும் நீங்கள் தவறுதலாகக் கொன்றுவிட்டால், நஷ்ட ஈட்டுப் பணத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. அதேபோல, உங்கள் தோழர்களில் யாரையாவது நாங்கள் தவறுதலாகக் கொன்றுவிட்டால், அதற்கான நஷ்ட ஈட்டுப் பணத்துக்கு நாங்கள் பொறுப்பு” என்றனர்.

அவர்கள் சொன்னதை பெருமானார் ஏற்றுக்கொண்டார்கள். பின் அவர்களனைவரும் இஸ்லாத்தில் இணைந்தனர்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s