கங்கா ஸ்நானம்

“இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி செய்யும்”. காசிக்கு டூர் வந்தவர்களையெல்லாம் கங்கையின் கரைக்கு அழைத்து வந்து சொல்லிக் கொண்டே போனார் எஸ்கார்ட். அவர் முகத்தில் ஒருவித அச்சமும் மரியாதையும் தெரிந்தது. அது பக்தியாகவும் இருக்கலாம்.
“உமக்கு கமிஷன் கிடைக்க உதவி செய்யும் என்று சொல்லும்”.
ganges1 300x225 கங்கா ஸ்நானம்கூட்டத்திலிருந்து கேட்டது கொஞ்சம் கரகரப்பான ஆனால் தெளிவான அழுத்தமான குரல். குரலுக்குச் சொந்தக்காரரை எல்லாருக்கும் தெரியும். டூர் கிளம்பியதிலிருந்து இவர் குண்டக்க மண்டக்க ஏதாவது பேசிக்கொண்டேதான் வந்தார். அதனால் பிரயாணிகள் மத்தியில் பிரபலமாகவும் இருந்தார். வழு வழுவென்ற முகம். ஐம்பதுகளில் இருந்தார். தினசரி ஷேவ் செய்து கொள்வார் போல. சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம். சுருள் முடி. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை. அல்லது இளக்காரம். ரயிலில் பூஜைப்பாடல்கள், ஜபங்கள் செய்யப்பட்டால் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால் உடனே தன் செல்ஃபோனில் ஜாக் சொருகி பாட்டுக் கேட்க ஆரம்பித்துவிடுவார்.
வயதை மறைக்கும் ஒருவித இளமை அவர் உடம்பில் ஏறியிருந்தது. பக்தியோடு யாராவது எதையாவது சொன்னால் முதலில் அதைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கும் குரல் அவருடையதுதான். ரயிலில் வந்த இளைஞர்கள்களுக்கும் இளைஞிகளுக்கும் அவரைப் பிடித்துப் போனாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ரம்யா மட்டும் அவரை மற்றவர்களைவிட உன்னிப்பாகக் கவனித்து வந்தாள். அவர் பேச்சில் இருந்த உண்மை அவளைக் கவர்ந்தது. அவர் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அவரை மையமாக வைத்து ஒரு கதை எழுதலாம் என்று ரம்யாவுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. 
எஸ்கார்ட்டின் முகத்தில் வழிந்தது அசடா கோபமா என்று தெரியவில்லை.
“சார், அப்டியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க எனக்கு எதுவும் கொடுக்க வேணா. கங்கா தேவியோட மட்டும் வெளையாடாதீங்க. உங்களெ கெஞ்சி கேட்டுக்கறேன். என்னக் கொஞ்சம் சொல்ல விடுங்க” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டார்.
குண்டக்க மண்டக்கரின் இணைந்த உதடுகள் வலது பக்கமாக லேசாக நகர்ந்தன. அவரின் பதிலின்மையை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து எஸ்கார்ட் சொன்னார். “கங்கை எங்கிருந்து கிளம்பி எப்படியெல்லாம் பிரிஞ்சு போவுதுங்கறது ஒரு பெரிய கதை. நந்தாகினி, மந்தாகினி அப்டீன்னெல்லாம் பலவிதமான ஆறுகளா இது பிரிஞ்சு, எணைஞ்சு இங்கே வருது. தவம் செஞ்சுகிட்டிருந்த சாகரனின் கோபப்பார்வையால கடலுக்கு அடீல போயிட்ட தன் முன்னோர்களை மீட்பதற்காக பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தான்.”
ganges கங்கா ஸ்நானம்“ஹ்ம், பகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததே ஒரு கட்டுக்கதை. அதையும் தப்பு தப்பா சொல்லி கட்டுக் கதைக்குள்ள இன்னொரு கட்டுக்கதையா? இப்டியே புருடா உட்டுகிட்டே போனீங்கன்னா ஒரு ஆயிரம் வருஷம் கழிச்சு இதுவும் ஒரு புராணமா மாறிடும் அப்டித்தானே?” என்று கொஞ்சம் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார் குண்டக்க மண்டக்கர். ஒரு கணம் ஸ்தம்பித்தவராக எஸ்கார்ட் அவரைப் பார்த்தார். எங்கே, என்ன தப்பு செய்தோம்னு அவருக்குத் தெரியவில்லை.
”கோபப்பார்வையால கீழ் உலகத்துக்கு அவிஞ்சு சாம்பலாப் போனது சாகரனுடைய அறுபதாயிரம் மக்கள். சாபம் குடுத்தது சாகரனல்ல. கபிலர் என்ற முனிவர்.” 
சொல்லிவிட்டு எகத்தாளமாகச் சிரித்தார் குண்டக்க மண்டக்கர். எஸ்கார்ட்டின் முக நரம்புகளுக்கு அசுர வேகத்தில் ரத்தம் பாய்ந்து ஒரு அசாதாரணமான சிவப்பைக் கொடுத்தது. எத்தனை முறை கங்கை நீரினால் கழுவினாலும் அந்த அவமானச் சிவப்பு போகாது போலிருந்தது. கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கண்களில் தெறித்த ஏளனம் அப்படி இருந்தது. குண்டக்க மண்டக்கர் அவர்களது மதிப்பில் ஒரு படி மேலும் உயர்ந்து போனார். புத்தி முட்ட, பக்தி கெட்ட, உயரமான புதிர் மாதிரி. 
மேற்கொண்டு மௌனம் சாதித்தால் அது தன் மரியாதைக்கும் தொழிலுக்கும் இழுக்கு என்பது எஸ்கார்ட்டுக்குப் புரிந்தது. அவருக்கும் கங்கையின் கதை தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் ஏதோ நாக்கு நழுவி  பெயர்கள் மாறிவிட்டன, என்ன செய்ய?
“பகீரதன் கங்கையை தன் முன்னோர்களுக்காக சொர்க்கத்திலேருந்து இறக்கி பூமிக்கிக் கொண்டு வரும்போது ஒரு பிரச்சனை இருந்தது. கங்கையின் வேகத்தைப் பூமி தாங்காது. அதனால் சிவ பெருமானோட ஜடாமுடியில அதைக் கட்டுப்படுத்தி அனுப்பணும்னு வேண்டுகோள் வச்சார். சிவ பெருமானும் அதுக்கு சம்மதிச்சார். அவரோட தல முடியில கங்கையை வச்சு கட்டுப்படுத்தித்தான் பூமிக்கு அனுப்பினார். அதனால இந்த கங்கா தேவி…”
”சிவனோட சின்ன வீடுன்னு சொல்றீரா?” என்றார் சட்டென்று குண்டக்க மண்டக்கர்.
“அபச்சாரம், அபச்சாரம். அய்யா தயவு செஞ்சு கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. உங்களக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். இப்டியெல்லாம் பேசி எல்லார் மனசையும் நோகடிக்க வேணாம்” என்றார். தனது சரிவை சரிக்கட்ட இதுவே நல்ல தருணமாக அவருக்குப் பட்டது. குண்டக்க மண்டக்கர் பதில் சொல்லாமல் இருக்கவும் எஸ்கார்ட் தொடர்ந்தார்.
“இந்த கங்கை நீர் புனிதமானது. உங்களை இது சுத்தப்படுத்தும்.”
“ஆமாமா, தோ, இங்க மெதக்கிற பொணங்களைப் பாக்கும்போதே தெரியுது” என்றார் குண்டக்க மண்டக்கர் அவசரமாக. 
ஆனால் எஸ்கார்ட் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருந்தார். இனி குண்டக்க மண்டக்கரிடம் பேசக்கூடாது. அவரை கெஞ்சக் கூடாது. தான் சொல்ல வந்ததை சொல்லிக் கொண்டே போக வேண்டும். அதுதான் தனக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தவராக குண்டக்க மண்டக்கரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்
“இதுல நீங்க குளிச்சிங்கன்னா, அல்லது முக்குளி போட்டிங்கன்ன பத்து தலைமுறைப் பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுங்கறது ஐதீகம்” என்று முடித்துக்கொண்டார். வந்தவர்கள் எல்லாம் படிகளில் இறங்கி இறைவனையும் கங்கையையும் மனதாலும் வாயாலும் துதித்தவர்களாக முங்கி எழ ஆரம்பித்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும்.
குண்டக்க மண்டக்கர் படிகளில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் இறங்கி கங்காஸ்னானம் செய்யப் போவதில்லை என்று எல்லோருக்குமே தெரியும்.
ooOoo
”நீ நல்லாருக்க மாட்டே, நீ நல்லாவே இருக்க மாட்டே. நீ கங்கையில போயி குளிச்சாலும் ஒம் பாவம் போவாதுடா, ஒனக்கு நரகம்தான்”.
அந்தப் பெண் ரொம்ப ஆக்ரோஷமாக அந்த வார்த்தைகளைச் சொன்னாள். அவளின் ஆன்மாவின் கோபத்தைப் போல அது ஒலித்தது. ஆனால் அதைப் பற்றி கங்காதரன் கவலைப்படவில்லை. 
“சும்மா சத்தம் போடாதே. வட்டியோட சேத்து பணத்தக் குடுத்துட்டு நகையை வாங்கிட்டுப் போ”. 
கறாராகச் சொன்னார். சுற்றி இருந்தவர்களுக்கும் அவரைப் பற்றித் தெரியும். நிறைய படிச்சவர். மேடையில பேசறவர். பணக்காரர். ஆனாலும் வட்டி விஷயத்துல கொஞ்சம்கூட இரக்கமில்லாதவர். அவரை எதிர்த்துப் பேசும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. பணத்தின் கைகள் இரும்புக் கைகள். அவற்றின் கனமான அடிகளை வாங்கும் ஏழைகளின் சாபம் அக்கைகளை ஒன்றும் செய்வதில்லை. 
அப்பெண் போய்விட்டாள். அவள் சாபம் கொடுத்துவிட்டுப் போன ஒரு மாதத்தில் அது நடந்தது. கங்காதரனின் ஒரே மகள் அபி ஸ்கூல் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது வேகமாக வந்த ஒரு பைக் மோதி துடிதுடிக்க இறந்து போனாள். அவரின் எட்டு வயது வண்ணக் கனவு சிவப்பு நிறத்தில் சாலையில் நசுங்கி நாயைப் போல உறைந்து கிடந்ததைப் பார்த்த எல்லார் மனதிலும் வட்டி கொடுத்து நகையை மீட்க முடியாமல் சபித்துவிட்டுப் போன அந்தப் பெண்தான் வந்தாள். அவளுக்கு என்ன கஷ்டமோ, என்ன அவசரமோ? 
பைத்தியம் பிடித்தவரைப் போல குறைந்தது ஆறு மாதமாவது கங்காதரன் இருந்திருப்பார். அவருடைய சிரிப்பு, பேச்சு எல்லாம் மாயமாய் மறைந்து போனது. வட்டிக்குப் பணம் தரும் வியாபாரத்தை இழுத்து மூடினார். பின்னர்தான் உடம்புக்கு முடியாத மனைவியைப் பார்த்துக்கொள்ள ஆள் வைத்துவிட்டு ஏதோ ஒரு உந்துதலில் அந்த முடிவுக்கு வந்தார். 
ooOoo
டூர் வந்த எல்லாரும் புனித நீராடி விட்டு கரையேறிவிட்டார்கள். எல்லாரும் போய்விட்டார்களா என்று இரண்டு மூன்று முறை பார்த்துக் கொண்டார் குண்டக்க மண்டக்கர். எல்லாரும் போய்விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு சட்டென்று போட்டிருந்த உடையுடன் விறுவிறுவென்று ஆற்றில் இறங்கினார். 
“கங்காதேவி தாயே, என் பாவங்களை மன்னிச்சுடும்மா” 
ஒரு ஜபம் போல வாய் பலமுறை முணுமுணுக்க மூன்று முறை முக்குளி போட்டு எழுந்தார் கங்காதரன் என்ற குண்டக்க மண்டக்கர். 
சிரித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள் கங்கா.
===
Advertisements
This entry was posted in SHORT STORY/சிறுகதை. Bookmark the permalink.

2 Responses to கங்கா ஸ்நானம்

  1. அருமையான பதிவு.
    நன்றி.

  2. yenippadi says:

    அங்கதம் இழையோடுகிறது.எதோ மேஸேஜ் உள்ளது.ஆபிதின் என்றொரு …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s