மந்திரச் சாவி — 02

என் பள்ளிப்பருவ நண்பன் ஒருவனின் தந்தை இறந்துபோனார். அவரை அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது என் நண்பன் என் காதில் வந்து, “எங்க வாப்பா, மூச்சுவுட மறந்துட்டார்கள்” என்றான். அப்போதும் நாங்கள் பள்ளிச் சிறுவர்கள்தான். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எனக்குக் கடுமையான கோபம் வந்தது. அவனை அங்கேயே ஓங்கி அறையலாமா என்று நினைத்தேன். ஒரு தந்தையைப் பற்றி ஒரு மகனால் எப்படி அந்த நேரத்தில் அப்படிக் கூறமுடியும் என்று எனக்கு விளங்கவே இல்லை. இதற்கு உளவியலாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

மூச்சு விடுவதற்கு ஒருவர் உண்மையிலேயே மறந்துபோக முடியுமா? இந்தக் கேள்வியைப் பற்றி நான் தீவிரமாக சிந்தித்த காலத்தில் என் நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. அவன் தந்தை மட்டுமல்ல, இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதராலும் மூச்சுவிட மறந்து போகவே முடியாது. ஏன்? ஏனென்றால், நாம் யாருமே மூச்சு விடுவதே இல்லை! இது என்ன புதுக்குழப்பம் என்கிறீர்களா?

ஒருமுறை திருக்குறள் முனுசாமி பேசும்போது சொன்னார். “நேத்து எனக்கு தூக்கமே வரலேன்னு ஒருத்தன் சொன்னான். நா கேட்டேன். எத்தனெ மணிக்கு வரேன்னு சொன்னிச்சுன்னு”. கூட்டம் சிரித்தது. அவர் பேச்சு எப்போதுமே சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டுவதாகத்தான் இருக்கும். உண்மைதான். நாம் எங்கே தூங்குகிறோம்? தூக்கம் அதுவாக நம்மை ஒரு கணத்தில் வந்தடைகிறது. தூக்கம் வரவில்லை, வரவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்போம். ஆனால் தூக்கம் வந்துவிடும் கணத்தில் நமக்கு பிரக்ஞை இருப்பதில்லை! இதுதானே உண்மை? தூக்கம் என்பது நாம் நிகழ்த்துவது அல்ல. தானாகவே நிகழ்வது அது.

இப்போது நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், நீங்கள் மூச்சு விடுகிறீர்களா அல்லது மூச்சு அதுவாக உள்ளே போய் வெளியே வந்து கொண்டிருக்கிறதா? இரண்டாவதுதானே? அப்படியானால் ’நான் மூச்சு விடுகிறேன்’ என்று சொல்வது பொய்தானே? செய்ய வேண்டிய ஒன்றைத்தான் நாம் மறந்துபோக முடியும். செய்யாத ஒன்றை எப்படி மறக்க முடியும்?!

ஆனால் மூச்சைப் பொறுத்தவரை தூக்கத்துக்கு இல்லாத ஒரு தன்மை அதற்கு இருக்கிறது. அது தானாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். நாம் விரும்பினால் நாமாகவே நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வைத்தும் விடலாம். அது involuntary-யாகவும், அதேசமயம் voluntary-யாகவும் இருக்கிறது.  சரி, இதெல்லாம் ஏன் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது, இல்லாமலா சொல்வேன்?

மூச்சைக் கட்டுப்படுத்தினால், நமது உடல் நமக்குக் கட்டுப்படும். நமது வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும். நமக்கு வெளியில் உள்ள வாழ்க்கையும் நமக்குக் கட்டுப்படும். அதாவது, நமக்குச் சாதகமாகக் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். நமது குணம் மாறும். நமது ஆசைகள் நிறைவேறும். நமது பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் தீரும். இன்னும் பல அறியப்படாத ரகசியங்களை, பொக்கிஷங்களையெல்லாம் இறைவன் மூச்சுக்குள் மறைத்து வைத்துள்ளான்!

நம்பிக்கை வரவில்லையா? வேண்டாம். நம்பவே வேண்டாம். நான் இந்தத் தொடரில் நான் சொல்லப் போகும் எதையும் யாரும் நம்பத் தேவையில்லை. ஆனால் நான் சொல்வதை செய்து பார்த்தால் போதும். நான் சொல்வது உண்மைதான் என்று உங்கள் அனுபவத்திலேயே புரியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுக்கு நான் சொன்ன விஷயம் பற்றிய ஞானம் வந்துவிடும்! உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை நீங்கள் நம்ப வேண்டிய அவசியமிருக்காது! ஏனெனில் நம்பிக்கை என்பதே நேரடி அனுபவம் இல்லாதபோது, ஒரு வசதிக்காக மனிதன் வைத்துக்கொள்வதுதான். ஒருவகையில் அது இரண்டாம் பட்சமானதுதான்.

லட்டு என்ற ஒரு பண்டம் இனிப்பானது என்று வாயில் போட்டுப் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகு, ஆமாம், அது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்குமா நமக்கு, அல்லது அது இனிப்புப் பண்டம்தான் என்று தெரியுமா? நான் சொல்லப்போவதும் அப்படித்தான். நான் கொடுக்கும் லட்டை சுவைத்துப் பாருங்கள். உங்கள் நாக்குக்கு அதன் சுவை தெரிந்துவிடும். சரியா?

பத்து பேரில் ஒன்பதே முக்கால் பேருக்கு மூச்சு அதுவாகவே போய்க்கொண்டும் வந்துகொண்டும்தான் இருக்கிறது. கணக்கில் வைக்க முடியாத அளவுக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டும்தான் மூச்சை அடக்கியாண்டு மகான்களானார்கள். இந்த உலகில் வந்த மகான்களை எண்ணிவிடலாம். அதிகமில்லை. ஒரு இயேசு, ஒரு புத்தர், ஒரு மகாவீரர், ஒரு முஹம்மது நபி, ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒரு ரமணர், ஒரு நாகூர் ஆண்டகை – இப்படிச் சிலரே. ஆனால் இந்த வெகுசிலரால் செய்ய முடிந்த காரியங்கள் கோடிக்கணக்கான மக்களால் செய்ய முடியாதவை.

தன்னை கைது செய்ய வந்தவனின் அறுந்த காதை எடுத்து ஒட்ட வைத்தார் இயேசு. செத்துப் போன லசாரஸுக்கு உயிர் கொடுத்தார். கொல்வதற்காகக் காத்திருந்த எதிரிகள் இருந்த திசையை நோக்கி மண்ணை எறிந்தார் முஹம்மது நபி. எதிரிகளுக்குத் தற்காலிகமாகப் பார்வை போனது. புத்தர் இருந்த இடத்திலிருந்து முப்பது மைல் தூரத்துக்கு ஒரு கோடு வரைந்து, அதை ஆரமாக பாவித்து, அதிலிருந்து ஒரு வட்டம் வரைந்தால், அந்த வட்டத்துக்குள் வரும் எதுவும் தன் கெட்ட குணத்தை மாற்றிக்கொள்ளுமாம். புத்தரைச் சுற்றியுள்ள வட்டத்துக்குள் ஒரு சிங்கம் வந்தால் அது புத்தரின் காலடியில் வந்து பூனை மாதிரி படுத்துக் கொள்ளும். கொலை செய்யும் எண்ணத்துடனும் ஆயுதத்துடனும்  ஒருவன் கண்ணுக்குத் தெரியாத அந்த வட்டத்துக்கு உள்ளே வந்துவிட்டால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு புத்தரின் காலைத் தொட்டு வணங்குவான். ஏன் என்று அவனுக்கே தெரியாது. கடவுளைக் காட்ட முடியுமா என்று கேட்ட விவேகானந்தரை பரமஹம்சரின் பஞ்சுப் பாதங்கள் எட்டி உதைத்தன. விவேகானந்தர் கொஞ்ச நேரம் பிரக்ஞையற்றுக் கிடந்தார். உணர்வு வந்து எழுந்தவர் ராமகிருஷ்ணரின் கால்களில் விழுந்து மரியாதை செய்தார். ஓட்டை விழுந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கப்பலை ஊரில் இருந்தே பார்த்த நாகூர் ஆண்டகை தன் சவரக் கண்ணாடியை வீசியெறிந்தார். அது பறந்து போய் கப்பலின் ஓட்டையை ஃபெவிக்விக் போட்ட மாதிரி அடைத்துக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. அவர் வீசியெறிந்த கண்ணாடியை இன்றும் நாகூர் தர்காவில் காணலாம். இப்படி மகான்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அற்புத சக்திகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தது மூச்சுதான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா?!

ஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான். ஏனென்றால் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல, மூச்சு என்பது வெறும் ஆக்சிஜனோ கார்பண்டை ஆக்சைடோ கலந்த அல்லது கலக்காத வாயு அல்ல. அதுதான் உயிர். அதுதான் சக்தி. அதுதான் வாழ்வு. அதுதான் சாவு. அதுதான் நோய். அதுதான் நிவாரணம். அதுதான் பிரச்சனை. அதுதான் தீர்வு. எந்த சக்தி நமக்குத் தேவையான காற்றை உள்ளே இழுத்து, தேவையில்லாத காற்றை வெளியே அனுப்புகிறதோ அதுதான் உண்மையான மூச்சு. அதைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மூச்சைக் கட்டுப்படுத்தப் பழகாத மகான் ஒருவர்கூட இந்த உலக வரலாற்றில் இல்லை.

அப்படியானால் அந்த பேராற்றலை நாம் எப்படிப் பயன்படுத்துவது? அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம்? எப்படி?

 

நன்றி கல்கி 22.01.12

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to மந்திரச் சாவி — 02

  1. marimuthumcl says:

    அருமையாக வந்திருக்கிறது தங்களின் கட்டுரை! தொரட்டும் …அடுத்த பகுதிக்கு ஏங்குகிறது மணம்!

  2. Fawzdeen says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    அப்படியானால் அந்த பேராற்றலை நாம் எப்படிப் பயன்படுத்துவது? அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம்? எப்படி?
    எதிர்ப்பார்த்திருக்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s