மந்திரச்சாவி — 03

மந்திரச் சாவி –3

”ஏய், நா யாருன்னு தெரியுமா?”

அந்த மனிதன் உச்ச ஸ்தாயியில் கத்திக் கேட்டான். பதில் எதுவும் வரவில்லை. அவன் விழிகளின் சிவப்பு கூடியது.  

”ஏய், நா யாருன்னு தெரியுமா? என் முன்னாடியே மரியாத இல்லாம படுத்திருக்கிறியா?  எந்திருச்சிப் போ”.

எந்த பதிலும் சொல்லாமலும், கோபப்படாமலும் ஒரு முறை தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் தெருவில் படுத்துக் கொண்டது அந்த நாய்.  நான் யாரென்று தெரியுமா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தவன், தான் யாரென்றே தெரிந்துகொள்ள முடியாத போதையில் இருந்தான். அவனோடு பேசுவதற்கும், அவனது கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும் எந்த நாயும் தயாராக இல்லை.

ஒருவகையில் அந்த நாய் அவனைவிட உயர்ந்த நிலையில் இருந்தது. அது போதையில் இல்லை. அது தன்னை மறந்திருக்கவில்லை. அவனது கோபத்தைப் பொருட்படுத்தாமல், அவனைக் கத்த விட்டுவிட்டு, நிமிர்ந்து பார்த்துவிட்டு, ஒன்றுமே சொல்லாமல், மீண்டும் தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தது. ஒரு ஞானியைப் போல!

நாமும் அந்த குடிகாரனும் ஒருவகையில் ஒன்றுதான். அவன் மதுவின் போதையில் தன்னை மறக்கிறான். நாம் பணம், பதவி, அந்தஸ்து, பெண், பொன், குடும்பம், குழந்தை, சொத்து, சோறு, சுகம், சொந்தம், பந்தம், நட்பு, ’கொல வெறி’ — என ஆயிரக்கணக்கான விஷயங்களில் நம்மை மறந்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரென்று நமக்குக் காட்டுகிற எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும், சின்னச் சின்ன சாளரங்களையும்கூட இறுக்கமாக சாத்திவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து கொள்கிறோம்!

ஆனால் உண்மையோ நாம் செய்ததற்கு, நாம் வாழும் முறைக்கு நேர் மாறான, எதிரான திசையில் இருக்கிறது. ஓடுகின்ற ஆற்றைப் பிடித்து நாம் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறோம். மலையைப் பிடித்து ஓரிடத்தில் உட்கார வைக்க முயற்சி செய்துகொண்டுள்ளோம். தங்கம் என்பதற்காக செருப்பைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நாம் ஏன் இருக்கிறோம்? ஏனென்றால், உண்மையில் நாம் யார் என்று நமக்குத் தெரியவில்லை. அதனால்தான். நாம் நம்மை வேறு எதாகவோ, வேறு யாராகவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் உண்மையில் நாம் யார்?

இந்தக் கேள்விக்கான பதிலை ஞானிகள் பல வழிகளில் கண்டடைந்திருக்கிறார்கள். அவற்றில் மிகவும் எளிமையான வழிதான் மூச்சு. ஆம். ஆனால் மறுபடியும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மூச்சென்பது வெறும் ஆக்சிஜனோ கார்பண்டை ஆக்ஸைடோ அல்ல. அவற்றை நமக்குள் செலுத்தியும் வெளியேற்றியும் வைக்கும் ஆற்றல்தான் உண்மையான மூச்சு. அதுதான் நாம். அதுதான் எல்லாம். சரி, அதை எப்படிப் பயன்படுத்துவது?

லைலா மஜ்னு கதை தெரியுமில்லையா? மஜ்னூனை சாட்டையால் அடிக்க அடிக்க லைலாவின் முதுகில் கோடுகள் விழுந்தன என்று கதை உண்டு. இது சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஏனெனில் அவர்களின் இதயங்கள் மட்டுமல்ல, மூச்சும் இணைந்திருக்கும். ஒரு சின்ன பரிசோதனை செய்து பாருங்கள்.

உங்கள் காதலி அல்லது மனைவிக்கு தலைவலி என்று வைத்துக் கொள்வோம். (மனைவிக்குத் தலைவலியா? மனைவிதானே தலைவலி என்று கணவன்மார்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. ஆனால் இதையேதான் மனைவிகளும் சொல்கிறார்கள் என்கிறாள் என் மனைவி)! அவளை அருகில் அழைத்து அன்பாக அமர வைத்துக் கொள்ளுங்கள். (அன்பாக என்றால் தெரியும்தானே?) அவளுடைய மூச்சோட்டத்தைக் கவனியுங்கள். (மூச்சோட்டத்தை மட்டும்தான்). கொஞ்ச நேரம் அதையே கவனியுங்கள். அப்போது ஒரு அதிசயம் நிகழும். அதாவது, உங்களது மூச்சோட்டம், அந்த ஃப்ரீக்வன்ஸி, அவளுக்குப் போகும். அல்லது அவளது  மூச்சோட்டம் உங்களுக்கு வரும். இரண்டும் ஒன்றுதான். தாயைத்தேடி குழந்தை போனால் என்ன, குழந்தையைத் தேடி தாய் போனால் என்ன?

”உன் தலைவலி குணமாகிவிட்டது. இப்போது உனக்குத் தலைவலி இல்லை” என்று அப்போது மனதில் சொல்லிக் கொள்ளுங்கள். அல்லது நினைத்துக் கொள்ளுங்கள். அது இன்னும் சிறப்பு. இப்படிச் செய்துவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து, உன் தலைவலி இப்போது எப்படி இருக்கிறது என்று அவளைக் கேட்டுப் பாருங்கள். ’தலைவலியே இல்லை, போச்சு, போயிந்தே’ என்றோ, வெகுவாகக் குறைந்துள்ளது என்றோ அவள் நிச்சயம் சொல்வாள். நீங்கள் மனைவியாக இருக்கும் பட்சம், இதே பயிற்சியை உங்கள் காதலனுக்கோ கணவனுக்கோ செய்து பாருங்கள். (ஆனால் பெண்களை குஷிப்படுத்துவதற்காக ஆண்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்புண்டு. எனவே இந்தப் பயிற்சியை, பெண்களை நம்பி ஆண்கள் செய்து பார்த்தல் நலம்)!

வலி எப்படிப் போனது அல்லது குறைந்தது? இதற்கு பதிலைக் கண்டு பிடிக்க நாம் மருத்துவம் படிக்க வேண்டியதில்லை. உடல் கூறு பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை. நுரையீரல், அதனுள் இருக்கும் அல்வியோலி எனப்படும் நுண்ணிய பைகள் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதையெல்லாம் மூச்சு பார்த்துக் கொள்ளும். இருவர் மூச்சும் ஒரே தாள கதியில் இணைகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். அப்போது என்ன நடக்கிறது?

மேட்டில் இருக்கும் தண்ணீர் பள்ளத்தை நோக்கிப் பாய்வதுபோல, உங்களிடம் இருக்கும் ஆரோக்கியம் அவளை நோக்கிப் பாய்ந்து, அங்கே தலைவலி உண்டாக்கிய பிரச்சனையைப் போக்கும். அதன் விளைவாக தலைவலி குணமாகும்.

நுரையீரலுக்குள் தேவையான ஆக்ஸிஜன் போவதால் இது நடக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். அது விஞ்ஞானம் சார்ந்த, மருத்துவ அறிவு சார்ந்த மேலோட்டமான புரிந்துகொள்ளல். பலவீனப் பட்டுப்போன ஒரு உயிரின் ஆற்றலுக்குள் ஆரோக்கியமாக உள்ள இன்னொரு உயிரின் ஆற்றல் பாய்வதால் நிகழும் அற்புதம் அது. இதை சாதிப்பது மூச்சு எனும் அற்புத சக்தி.

அப்படியானால் மருந்து மாத்திரையில்லாமல் மூச்சினால் மட்டுமே உடலில் ஆரோக்கியத்தை ஏற்படுத்த முடியுமா என்றால் ஆமாம். முடியும். நிச்சயமாக முடியும். ஆனால் அதற்கு மூச்சு எப்படி விட வேண்டுமோ அப்படி விட வேண்டும். எதையுமே முறைப்படி செய்ய வேண்டும். அப்போதுதான் கிடைக்க வேண்டியது கிடைக்கும். மூச்சும் அப்படித்தான். எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டு, மின் விசிறியைச் சுழல விட்டு, போர்வையைப் போட்டுப் போர்த்தி முகத்தை மறைத்துக்கொண்டு எட்டு அல்லது பத்து மணி நேரம் தூங்குவதும் தற்கொலை முயற்சி செய்வதும் ஒன்றுதான். ஆனால் நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தவறாக.

எப்படி மூச்சு விட வேண்டுமோ அப்படி மூச்சு விடவில்லையானால், எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லை என்று அர்த்தம். எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லையானால், எது எதெல்லாம் கிடைக்க வேண்டுமோ அதெல்லாம் கிடைக்காது என்று அர்த்தம். அது மட்டுமல்ல, எதெல்லாம் கிடைக்கக் கூடாதோ அதெல்லாம் கிடைக்கும் என்றும் அர்த்தம். ஆரோக்கியத்துக்கு பதிலாக நோய். வளத்துக்கு பதிலாக வறுமை. சரியாக மூச்சு விடாததன் மூலம், நன்மையின் வாசல்கள் யாவும் ஒவ்வொன்றாக அடைபட்டு, தீமையின் கதவுகள் யாவும் ஒவ்வொன்றாகத் திறக்கும். ஆனால் மூச்சை முறையாக விடுவதன் மூலம் எல்லா நன்மையும் கிடைக்கும்.

கதவைத் திற காற்று வரட்டும் – என்று கவிதை சொன்னார் பசுவய்யா. நான் சொல்கிறேன்:

முறையாக மூச்சு விடு

முன்னேற்றம் தானாக வரும்.

எப்படி? (சாவி திறக்கும்)

நன்றி, கல்கி 29.01.12

This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to மந்திரச்சாவி — 03

 1. // (அன்பாக என்றால் தெரியும்தானே?) அவளுடைய மூச்சோட்டத்தைக் கவனியுங்கள். (மூச்சோட்டத்தை மட்டும்தான்). //

  ஹா..ஹா.. அருமை. உங்கள் எழுத்தோட்டத்தின் குறும்பு கொப்பளிப்போடு சொல்லும், அட்வைஸ்கள் இன்னும் இன்னும் தொடரவேண்டுமாய் …!!

 2. Super, Very very interesting, awaiting eagerly for the next post

 3. Fawzdeen says:

  அஸ்ஸலாமு அலைக்கும்.
  எப்படி மூச்சு விட வேண்டுமோ அப்படி மூச்சு விடவில்லையானால், எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லை என்று அர்த்தம். மிகவும் அருமை.
  முறையாக மூச்சு விடுவது எப்படி..? என அறிய ஆவலாய் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s