மந்திரச் சாவி -05

மந்திரச் சாவி –5

ராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சி. மூத்த மகன், செல்ல மகன், தெய்வ மகன், ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டுமென்று தசரதன் ஆசைப்படுகிறான். அதை ராமனுக்கும் குடும்பத்தாருக்கும் அறிவித்தும் விட்டான். மறுநாள் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டுள்ளன. மக்களெல்லாம் கொண்டாட்ட மனநிலையில். ராமனும் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டுள்ளான்.அப்போது கைகேயி என்ற பிரச்சனை அவனை அழைக்கிறது.

அவள் ஏற்கனவே தனக்கான வரங்களைக் கேட்டு தசரதனை ‘ஸ்விச் ஆஃப்’ பண்ணி வைத்திருந்தாள். மறுத்து ஏதும் சொல்ல முடியாத நிலையில் தசரதன் கிட்டத்தட்ட ‘கோமா’ நிலையில் கிடந்தான். ஆனால் இதெல்லாம் தெரியாத ராமன் ’அன்னை’ கைகேயியைப் பார்க்க வருகிறான்.

தன் மகன் பரதனே முடிசூட்டிக் கொள்ளவேண்டுமென்றும், ராமன் 14ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டுமென்றும் தசரதன் முடிவெடுத்திருப்பதாக ராமனிடம் கைகேயி கூறுகிறாள்.  வக்கிர மனநிலையின் உச்சகட்டத்தை கைகேயியின் பாத்திரத்தில் காணமுடிகிறது. ஆனால் அவளுக்கு ராமன் என்ன பதில் சொன்னான்?

”அப்பா சொன்னால் என்ன, நீங்கள் சொன்னால் என்ன அம்மா? எனக்கு எல்லாம் ஒன்றுதான்.  எனக்கு நீங்கள் வேறு அப்பா வேறு அல்ல – “தந்தையும் தாயும் நீரே” என்று ராமன் சொல்வதாக கம்பனின் பாட்டு — உங்கள் முடிவுதான் என் முடிவும் “ என்று சொல்லிவிட்டு உடனே, ஆமாம் உடனேயே, காட்டுக்குச் செல்வதற்கான பிரத்தியேக மரவுரி உடைகளை அணிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறான்! காவியத்தில் நடப்பது இதுதான். வார்த்தைகள் மட்டும்தான் எனது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு மிகப்பெரிய உண்மை அடங்கியுள்ளது. வெற்றிபெற விரும்பும் அனைவருக்குமான செய்தி அதில் மறைந்துள்ளது. அதிருக்கட்டும். ராமனுடைய இடத்தில் நாமாக இருந்தால் என்ன சொல்லியிருப்போம்? வாயில் வைக்கப் போன சோற்றை யாராவது தட்டிவிட்டால் நமக்கெப்படி இருக்கும்?

“ஏண்டீ, எங்கப்பனுக்கு ரெண்டாவதா வந்த ஒனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, மூத்த மகன் நா உயிரோட இருக்கும்போது, எனக்கு சட்டப்படி கெடைக்க வேண்டியதை தடுத்து, ஒம்மகனுக்குக் கொடுக்க நினைப்பே?  சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போனாலும் விடமாட்டேன். உங்க எல்லாரையும் கம்பி எண்ண வச்சிடுவேன். எங்கப்பனுக்கு மூளை கீள கொளம்பிருச்சா என்ன? கூத்தியா மயக்கத்துல கெடக்குறானா அவன்?” – இப்படி, இதையொத்த வசனங்கள் தொடரும். நிஜவாழ்க்கையில் சொத்துக்காக கோர்ட்டு கச்சேரி என்று பெற்றோர்கள் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் அலைந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் ராமன் நடந்து கொண்டவிதம் வியப்பூட்டுகிறது. அவன் சொல்லும் அற்புதமான பதிலில் நமக்கான ஒரு செய்தி இருக்கிறது. அது என்ன?

அதுதான் ரிலாக்சேஷன்.

உடலை, மனதை தளர்ச்சியாக வைத்துக் கொள்வது என்றெல்லால் சொல்லலாம். ஆனால் ரிலாக்சேஷனுக்கு இணையான தமிழ்ச்சொல் இன்னும் உருவாகவில்லை என்றே நினைக்கிறேன். எனவே அப்படி ஒன்று உருவாகும் வரை நாம் ரிலாக்சேஷன் என்றே பயன்படுத்துவோம்.

ஆமாம். ரிலாக்சேஷன். ஒரு மனிதனுடைய வெற்றிக்கு வழி அதுதான். ஒரு மனிதனுடைய உடல் ஆரோக்கியத்துக்கு வழியும் அதுதான். ரிலாக்சேஷனுக்கு நேர் எதிரானது டென்ஷன். எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொள்வதைவிட முக்கியானது எப்படி வாழக்கூடாது என்று தெரிந்துகொள்வது. டென்ஷனாக வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால் கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காது. தெருவில் போகிற சனியன் எல்லாம் நம் வாழ்க்கைக்குள், நம் உடம்புக்குள் வந்து புகுந்து கொள்ளும்.

ஆனால் ராமன் செய்தது என்ன?

தன் மனநிலையை ஒரேமாதிரியாகவே எல்லா சூழ்நிலையிலும் அவன் வைத்துக்கொண்டான். பட்டாபிஷேகம் என்றாலும் சரி, வனவாசம் என்றாலும் சரி, அன்றலர்ந்த செந்தாமரை மலரைப் போலத்தான் அது எப்போதுமே இருந்தது. பூவும் வாடவில்லை. அதன் மணமும் குறையவில்லை. ஒரேவிதமான மனநிலையே ராமனுக்கு எல்லா சூழ்நிலையிலும் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவன் எப்போதுமே ரிலாக்ஸ்டாக இருந்தான். இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும் தன்னை பாதிக்க அவன் அனுமதிக்கவில்லை.

தன் உரிமை அநியாயமாகப் பறிக்கப்படுகிறது. அதற்கும் மேலாக வனவாசம் என்ற அநியாயம் செய்யப்படுகிறது. இதை நிச்சயமாக தந்தை விரும்பியிருக்கவோ சொல்லியிருக்கவோ மாட்டார் — இதெல்லாம் ராமனுக்கும் தெரியும். தெரிந்தும் அவன் அதை மனதார ஏற்றுக்கொள்கிறான். கைகேயிக்கு அவன் சொன்ன பதிலில் மரியாதைக் குறைவான ஒரு அட்சரம்கூட அவன் வாயிலிருந்து வரவில்லை. மாறாக, தான் சொன்னால் எங்கே ஏற்றுக் கொள்வானோ மாட்டானோ என்ற கைகேயியின் சந்தேகத்தைப் போக்கும் வகையில், அப்பா சொன்னாலும் நீங்கள் சொன்னாலும் ஒன்றுதான் என்று கூடுதலாகச் சொல்லி அவள் வயிற்றில் அமுதம் வார்க்கிறான். அதுமட்டுமா? காட்டுக்குச் சென்று வாழ உடனே ஆயத்தமாகிவிடுகிறான்!

இதைத்தான் Law of Detachment என்று வால்யூம் வால்யூமாக ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், அது கிடைக்க வேண்டும் என்ற தீவிரமான பற்றி எரியும் ஆசையோடு நாம் செயல்பட வேண்டும். அதேசமயம், அது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்பதை மனதார ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறுகிறது ‘லா ஆஃப் டிடாச்மெண்ட்’! வெற்றியைக் கண்டு வியர்க்காமல் இருக்க வேண்டுமென்றால் தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வெற்றிமேல் வெற்றி வரும். ’லா ஆஃப் டிடாச்மெண்ட்’ சொல்வது அதுதான்.

இது பற்றிய ஆங்கில நூல் ஒன்று ஒரு நூறு பக்கம் இருந்தால் அதன் விலை குறைந்தது ஐநூறு ரூபாய் இருக்கும். ஆனாலும் க்ரெடிட் கார்டு கொடுத்தாவது அதை லாண்ட் மார்க்-கில் இருந்து வாங்கிச்செல்ல அனேகம் பேர் இருக்கிறோம். ஆனால் ராமாயணம் படிக்க நம்மில் எத்தனை பேருக்கு இன்று ஆர்வமிருக்கிறது? நாம் வாழ்க்கைக்குத் தேவையான ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் நம்மிடமிருந்து வெளியே போயுள்ளன என்பது சத்தியம். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏழாம் அறிவு போன்ற திரைப்படம் வந்துதான் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நம் ஆறாம் அறிவு சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்!

சரி போகட்டும். ரிலாக்சேஷனுக்கு வருவோம்.  ராமன் ரிலாக்ஸ்டாக இருந்ததனால்தான் அவனுக்கு ராஜ்ஜியம் திரும்பக் கிடைத்தது. அவன் இல்லாதபோது அவனது செருப்பு ராஜ்ஜியம் செய்தது. கைகேயியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் ராமன் எதையும்  இழந்துவிடவில்லை. மாறாக, புதிய புதிய அனுபவங்கள் அவனுக்குக் கிடைத்தன. பிறன்மனை விழையும் ராவணங்களுக்கு அழிவு ஏற்பட்டது. இன்னும் எவ்வளவோ.

எனவே ராமன் செய்ததுதான் மிகச்சரி. அது தர்க்க ரீதியான செயல்பாடாக நமக்குத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் வெற்றி என்பது தர்க்கத்தைப் பார்த்து வருவதல்ல. ரிலாக்சேஷனைப் பார்த்து வருவது. பிச்சைக்காரன் ராஜாவாக முடியாது. இது தர்க்கம். ஆனால் யானை மாலை போட்டால் ஆகலாம். இது சரித்திரம். நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் யானைகள் நம் கழுத்தில் மாலை போடும். நிச்சயம்.

===

 நன்றி 12.02.2012 தேதியிட்ட கல்கி.

 

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to மந்திரச் சாவி -05

 1. ஷாஜஹான் says:

  மிகச்சரி Sir!

  “மன்னவன் பணியன் றாகி னும்பணி மறுப்ப னோவென்
  பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ”

  என்று இராமன் மிக ரிலாக்ஸான மனதுடன் சொல்வதனூடாக விட்டுக்கொடுக்கும் உயரிய பண்பை வெளிப்படுத்தியது அவனது பின்னைய வெற்றிகளுக்கெல்லாம் காலாய் அமைந்ததை மறுக்கமுடியாது. இருப்பினும் ராஜ்ஜிய பாரத்தைச் சுமப்பதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக அதை அவன் கருதியதால் தான் அந்த மனநிலை அவனுக்கு வாய்த்தது என்று எண்ணத்தக்கவாறு அதற்கு முந்திய பாடல் அமைந்திருக்கிறதே?

  “தெருளுடை மனத்து மன்ன னேவலிற் றிறம்ப லஞ்சி
  இருளுடை யுலகந் தாங்கு மின்னலுக் கியைந்து நின்றான்
  உருளுடைச் சகடம் பூண்ட வுடையவ னுய்த்த காரே
  றருளுடை யொருவ னீக்க வப்பிணி யகன்ற தொத்தான்”

 2. Devi Mahendran says:

  manthiram ethuvum illaatha manthira chaavikal waw aththanayum arumai , padikkum pothe relax
  aaha irukirathu… mikka nandri

 3. coimbatorebalu says:

  arumai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s