மந்திரச் சாவி – 06

மந்திரச் சாவி –6

நாகூர் ரூமி

ரிலாக்ஸ் செய்வது என்றால் என்ன? நம் வீட்டுப் பூனைகள் நெட்டி முறிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியும் ரிலாக்ஸ் செய்யலாம். ஆமாம். ரிலாக்ஸ் செய்யும் சரியான முறைகளில் அதுவும் ஒன்று. இந்த வகையில் எல்லாப் பூனைகளும் நமக்கு குருதான். பாற்கடலையே நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை என்று ராமகாதையில் தன்னை வர்ணித்துக் கொள்கிறான் கம்பன். ஆனால் ரிலாக்சேஷன் என்பது ஒரு பூனையானால் நிச்சயம் அது பாற்கடலானாலும் நக்கியே குடித்துவிடும். அதன் சக்தி அப்படி. ரிலாக்சேஷனோடு இருந்தால் ஆதிசேஷனாக இருந்தாலும் நமக்கு அது படுக்கை விரிக்கும். மகா விஷ்ணுவின் படுக்கை நமக்கு அந்த செய்தியைத்தான் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

இந்த உலகம் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று ‘ஹாய்’யாக அவர் ஆதிசேஷன்மீது படுத்து உறங்கிக்கொண்டிருக்கவில்லை. பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது துயில் அறிதுயில். எல்லாம் அறிந்த துயில். எதுவும் அறியாத துயிலல்ல. விழிப்பு நிலையைவிட விழிப்புணர்வு மிகுந்த துயில் அது.

’ஸ்லீப் ஆன் த ப்ராப்ளம்’ என்றுஆங்கிலத்தில் ஒரு சமாச்சாரம் உண்டு. அதாவது பிரச்சனையை ஒட்டி ரிலாக்ஸ் ஆகிவிடுவது. பிரச்சனையை தற்காலிகமாக மறப்பது. அல்லது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வேண்டுமென்றே – வேறு வழியில்லாமல் அல்ல — ஒத்தி வைப்பது. இப்படிச் செய்வதனால் பிரச்சனைக்கான தீர்வுக்கதவுகள் திறக்கும். மஹா விஷ்ணு  அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். மாறாக, பிரச்சனையைப் பற்றியே நினைத்துக் கொண்டு, வேறு வேலைகளைச் செய்ய விடாமல் அது நம்மைத் தடுத்துக்கொண்டோ அல்லது தேவையில்லாத வேலையை செய்யத் தூண்டிக் கொண்டோ இருந்தால், நாம் ரிலாக்ஸ்டாக இல்லை என்று அர்த்தம்.

ஒரு எளிய ஆனால் எல்லோருக்கும் தெரிந்த  உதாரணம்.

ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்பது மறந்துவிட்டது. தேடத்தேட கிடைக்கவில்லை. ஞாபகப்படுத்திப் பார்க்கப் பார்க்க, அது நினைவுப் பள்ளத்தின் அதள பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ்ஸைப் பிடித்தால்தான் ஆபீசுக்குப்போகமுடியும். இல்லையென்றால் கடுவன் பூனை மேனேஜரின் பார்வையை, வார்த்தைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டி வரும். சரி, ஒழிந்து போகிறது என்று அதை, பிரச்சனையை, மறந்துவிட்டு பஸ் பிடித்து ஆபீஸுக்கு வந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும்போது திடீரென்று ஆனால் மிகச்சரியாக ஞாபகம் வரும். இன்ன அலமாரியில், இன்ன கலரில் உள்ள, இத்தனையாவது புடவைக்குக் கீழேதான் வைத்தீர்கள் என்று. அந்த நேரத்தில் மன்மோகன் சிங்கும் ஒபாமாவும் ஒருசேர வந்து அந்த இடத்தில் நீங்கள் வைத்த பொருள் இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னாலும் நீங்கள் சிரிப்பீர்கள். ஏனெனில் அப்போது உங்களிடம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நிச்சயத்தன்மை இருக்கும். அது எப்படி வந்தது?

அந்தப் பிரச்சனையை ஒட்டி நீங்கள் ரிலாக்ஸாகிவிட்டீர்கள். அது தொடர்பாக இருந்த டென்ஷனில் இருந்து உங்களை நீங்களே, தெரிந்தோ தெரியாமலோ, விடுவித்துக் கொண்டீர்கள். அதனால்தான் ஞாபகம் வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

டென்ஷனானால் எதுவுமே கிடைக்காது. ரிலாக்ஸானால்தான் தீர்வுக்கு வழி பிறக்கும். பட்டாபிஷேகம் செய்து கொள் என்ற போதும், வனவாசம் செல் என்ற போதும் ராமன் செய்தது அதுதான். மூச்சு முறையாக விடுவதற்கும் ரிலாக்ஸ்டாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ஏனெனில் டென்ஷனாக இருக்கும்போது ஆழமான மூச்சு விடமுடியாது. 

சரி, அப்ப ரிலாக்ஸ்டாக இருப்பது எப்படி?

இதற்குப் பல வழிகள் உண்டு. உடலில் கொஞ்சம் இறுக்கத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தி பின்னர் தளர்த்துவது ஒருவகை ரிலாக்சேஷன். பல மனவியல் மருத்துவர்கள் நம்மை இப்படித்தான் செய்யச் சொல்வார்கள். அல்லது அவர்களே நமக்குச் செய்துவிடுவார்கள். நம் வீட்டுப் பூனைகள் செய்வதும் இதுதான். முதலில் உடலை நீட்டி நிமிர்த்தி, இதற்கு மேல் முடியாது எனும்போது தளர விடுவது. உடலைக்கொண்டே உடலுக்கு ரிலாக்சேஷனை ஏற்படுத்துவது. இது ஆரம்ப வகை ரிலாக்சேஷன். உதாரணமாக, உள்ளங்கையை இறுக்கமாக மூடி, பின்னர் மெதுவாக, மிக மெதுவாக, ஒவ்வொரு விரலாக விடுவித்துப் பாருங்கள். உள்ளங்கை முற்றிலுமாக ரிலாக்ஸாவதை உணர முடியும்.

இது ஒருவகை ரிலாக்சேஷன். இது கொஞ்சம் அடிப்படை வகையைச் சேர்ந்தது. அகோரப் பசியாக இருக்கும்போது கஞ்சியோ கூழோ கிடைத்தால் குடிக்க மாட்டோமா? அது மாதிரி ரிலாக்சேஷன் இது. ஆனால் இதுவும் வேலை செய்யும்.

இன்னொரு வகை உள்ளது. இது கொஞ்சம் உயர்வானது. நல்ல இசை கேட்பது, வாய்விட்டுச் சிரிப்பது, கண்களுக்குக் குளிர்ச்சி கொடுப்பது – இப்படி உடல் சார்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது.  ’நாலு கிலோ கறுப்புப் புளி, மஞ்சத்தூளுடா’ என்று அந்தச் சிறுவன் பாடிக்கொண்டே ஓடும்போது நம் கண்கள் பார்க்கின்றன, நம் மனம் ரசிக்கிறது. நம்மை மறந்து சிரிக்கிறோம். அதன் மூலமாக ஒருவித தளர்ச்சி நிலை ஏற்படுகிறது. நமது ஐம்புலன் அனுபவத்தால் நம் மனம் ரிலாக்ஸாகிறது. உடலை விட்டும், மனதை விட்டும் டென்ஷன் போகிறது. உடலால் மனதைத் தளர்த்துவது என்று இதைச் சொல்லலாம்.

யாரையும் கொல்ல நினைக்காத ‘கொல வெறி’ப் பாடல்மீதான நமது விருப்பமாக இது இருக்கலாம். ’ஒருதரம் முட்டினா தலையில கொம்பு மொளைக்கும்’ என்று சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லும் ஜெனீலியாவாக இருக்கலாம். சின்னத்திரையில் தோன்றும் பெரிய சைஸ் பெண்களாக இருக்கலாம். நாகூர் குலாப்ஜான், ஆம்பூர் பிரியாணி, முருகன் இட்லி, புது ஆடைகள், புதுக்காதலி, பெசன்ட் நகர் பீச் – இப்படி எதுவாக, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கடந்த காலத்தைப்  பற்றிய கவலையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் இல்லாமல், நிகழ் காலத்தில் நம்மை நிறுத்தி, நம் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும் எதுவுமே நம்மை ரிலாக்ஸ் செய்கிறது.

இதுவரை இரண்டு வகையான ரிலாக்சேஷனைப் பார்த்திருக்கிறோம். முதல் வகை உடலால் உடலைத் தளர்த்துவது. இரண்டாம் வகை உடலால் மனதைத் தளர்த்துவது.

கோரிந்த் என்ற ஊருக்கு மகா அலெக்சாண்டர் வந்திருந்தார். அங்கிருந்த முக்கிய புள்ளிகள் எல்லாரும் அலெக்சாண்டரைப் பார்த்து மரியாதை செய்தனர். ஆனால் டயோஜீனஸ் என்ற ஞானி மட்டும் வரவில்லை. ஆர்வத்தில் உந்தப்பட்டவராக அலெக்சாண்டரே அவரைப் பார்க்க தனது பரிவாரங்களுடன் சென்றார். டயோஜீனஸ் ஒரு ஆற்றங்கரையில் ஜாலியாக படுத்துக்கிடந்தார். உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லை. அவரிடம் சென்ற அலெக்சாண்டர், “நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். உடனே டயோஜீனஸ், “ஆமாம், என் மீது மாலை வெயில் பட்டுக்கொண்டிருந்தது.  அதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நீ வந்த அதை மறைத்துக்கொண்டு இப்போது நின்று கொண்டிருக்கிறாய். கொஞ்சம் தள்ளி நின்றால் நல்லது” என்றார்!

அலெக்சாண்டர் யாரென்று தெரிந்திருந்தும் அவரால் எப்படி அப்படிப் பேச முடிந்திருந்தது? ஏனெனில் அவர் முற்றிலுமாக ரிலாக்ஸ்டாக இருந்தார். (அவர் நிர்வாணமாக இருந்ததை இங்கே நான் குறிப்பிடவில்லை). அவர் உடலளவிலும் அதே சமயம் மனதளவிலும் மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தார். அதனால்தான் அவரால் அப்படிப் பேச முடிந்தது. மரணம் பற்றிய அச்சம் அவரிடம் கொஞ்சம்கூட இல்லை. அந்த ட்டோடல் ரிலாக்சேஷன் அலெக்சாண்டரைத்தான் மாற்றியது. “நான் அலெக்சாண்டராக இருந்திராவிட்டால், டயோஜீனஸாக ஆகியிருப்பேன்” என்று அவரை அது சொல்ல வைத்தது. பரிபூரண ரிலாக்சேஷனின் வெற்றி அது.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நன்றி: 19.02.12 கல்கி

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to மந்திரச் சாவி – 06

  1. vijay ganesh says:

    dear rumi sir,my name is vijay ganesh , nagercoil , kanyakumari dt,i read (adutha vinadi,Alpha dyanam)books and practised ur alpha dyanam past 3 weeks, but i am not getting good feel.can u explain more or can u give ur mobile no, if u likes? thanks

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s