மந்திரச்சாவி — 07

மந்திரச் சாவி – 07

 

டயோஜீனஸ் மாதிரி நாமும் முழுமையாக ரிலாக்ஸாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவர் மாதிரி நிர்வாணமாக ஆற்றங்கரையில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று நிச்சயம் சொல்ல மாட்டேன். ஏனெனில் அப்படிச்செய்தால் ஒருவேளை நீங்கள் ரிலாக்ஸ் ஆகலாம். ஆனால் பார்ப்பவர்கள் டென்ஷனாகிவிடுவார்கள்! ரிலாக்சேஷன் என்பது ஆடைகளைக் கழற்றுவதல்ல. உண்மையில் ரிலாக்சேஷன் என்பது உடல் சார்ந்ததே அல்ல என்றுகூடச் சொல்லலாம்.

அப்படியானால் ஏற்கனவே உடலை வைத்து உடலை ரிலாக்ஸ் செய்வது, உடலை வைத்து மனதை ரிலாக்ஸ் செய்வது என்றெல்லாம் சொன்னாயே என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம் சொன்னேன். அதுவும் உண்மைதான். இதுவும் உண்மைதான். வரும் ஆனால் வராது என்பது வேண்டுமானால் சினிமா காமெடியாக இருக்கலாம். இருக்கு ஆனால் இல்லை என்பது நம்மைப் பற்றிய சத்தியம். எப்படி என்கிறீர்களா? சொல்கிறேன்.

உடல் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அது இல்லை என்பதும் உண்மை. சற்று ஆழமாகப் பார்த்தால் உடல், மனம் இரண்டும் வேறுவேறு பொருளல்ல. கண்ணுக்குத் தெரியும் மனமே உடல், கண்ணுக்குத் தெரியாத உடலே மனம் என்கிறார் ஓஷோ. விஞ்ஞானமும் அப்படித்தான் சொல்கிறது. இதைத்தான் ஐன்ஸ்டீன் E = MC2 என்று கூறினார். உயிரணுக்களின் அமைப்பின், இயக்கத்தின் வேக தாளத்தைப் பொறுத்து ஒன்று கண்ணுக்குத் தெரியும், இன்னொன்று தெரியாது. வேகம் கூடக்கூட ஐம்புலன்களுக்குப் புலப்படாது. அப்படியானால் எல்லாமே வெறும் தோற்றம்தான். இந்த உண்மையைத்தான் நமது மரபு ’மாயா’ என்று கூறியது. ஆனால் நமக்கு ‘சாயா’ குடிப்பதில் உள்ள ஆர்வம்கூட மாயா பற்றி இல்லை.

கொஞ்சம் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் மறுபடியும் புத்தரிடம்தான் போகவேண்டும். புத்தரிடம் ஒருவர் வந்து, “மனசே சரியில்லை. ரொம்ப கவலையா, ரொம்ப பயமா இருக்கு. உங்க ஒதவி வேணும்” என்று கேட்டாராம். பதிலுக்கு புத்தர்,”சரி, உன் மனசு எங்கே இருக்கிறதென்று என்னிடம் காட்டு. நான் அதைச் சரி செய்துவிடுகிறேன்” என்று சொன்னாராம்! உதவி கேட்டவர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

அவர் மட்டுமல்ல, மனம் என்ற ஒன்றை உடலுக்கு மேலே, உடலுக்கு உள்ளே என்று எங்கே தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அது எந்த குறிப்பிட்ட இடத்திலும் இல்லை. வேறொரு விதமாகச் சொன்னால், அது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது என்று சொல்லலாம். மனம், சிந்தனை எல்லாம் மூளையிலிருந்து வருவதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல. நம் கை சிந்திக்கிறது, நம் காது சிந்திக்கிறது. நம் உடலில் அறிவு இல்லாத எந்த இடமும் இல்லை. மூளை என்ற உறுப்பு மட்டும்தான் தலைக்குள் இருக்கிறது. மூளை எனப்படும் அறிவானது நம் உடல் முழுக்க அணு அணுவாக வியாபித்துள்ளது. 

உடலும் மனமும் பிரித்துப்பார்க்க முடியாதவை. இசையைப்போல. இருப்பதென்னவோ ஏழு ஸ்வரங்கள்தான். அவற்றைத்தான் மாற்றி மாற்றிப் போட்டு மாயமாளவ கௌள, பைரவி என்றெல்லாம்  பாடிக்கொண்டிருக்கிறோம். குறிப்பிட்ட ஸ்வரக்கட்டுப்பாட்டமைப்பில் ராகங்களுக்கென்று தனியானதொரு உயிர்ப்பும் இருப்பும் வந்துவிடுவது மாதிரி உடல், மனம் என்ற பிரிவுகள் வந்துவிட்டன. ஏ ஃபார் ஆப்பிள் என்ற வாக்கியமும், ஷேக்ஸ்பியரின் நாடகமும் ஏபிசிடி-யால் ஆனதுதான். உடல் என்பது முன்னதைப் போன்றது. மனம் என்பது பின்னதைப் போன்றது. உடல் பாலபாடம். மனம் முனைவர் பட்டம். உடல் என்பது ஸ்ரீகணநாதா. மனம் என்பது ராகமாலிகை. இரண்டுமே உண்டுதான். ஆனாலும் இரண்டுமே ஒன்றுதான்.

நான் சொல்ல வரும் மூன்றாவது வகை ரிலாக்சேஷனுக்கு உங்களைத் தயார் செய்யத்தான் இவ்வளவும் சொல்ல வேண்டியுள்ளது. இந்த மூன்றாவது வகை ரிலாக்சேஷன் மற்ற இரண்டு வகையையும் விட உயர்வானது. மற்ற இரண்டும் உடல்வழியாகத் தொடங்குவது. இந்த மூன்றாவது வகை மனம் வழியாகத் தொடங்குவது.  மலையுச்சிக்கு கஷ்டப்பட்டு ஏறிப் போவதைப் போன்றது முதல் இரண்டு வகை ரிலாக்சேஷனும். மலையுச்சிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்குவதைப் போன்றது மூன்றாவது வகை ரிலாக்சேஷன்.

இதற்கிடையில் ஒரு கொசுறு ரிலாக்சேஷன் ஒன்று உள்ளது. அதையும் தெரிந்துகொண்டு மூன்றாவதுக்குப் போகலாம். இது கொசுறுதான் என்றாலும் ’லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்’ ரகம். இதற்கு ’டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷன்’ என்றும் பெயருண்டு.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு என்னென்ன உறுப்புகள் தேவையோ அவற்றை மட்டும் பயன்படுத்துவதுதான் டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷன். ஆமாம். செய்ய வேண்டிய வேலையை முறைப்படி செய்வதும் ரிலாக்சேஷன்தான்!

வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு காரியத்தைச் செய்வதற்கு எவ்வளவு சக்தி தேவையோ, அவ்வளவு சக்தியை மட்டும் பயன்படுத்துவதுதான் டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷன். “பூப்பறிக்கக் கோடரி எதற்கு?” என்று வைரமுத்துவின் அருமையான பாடல் வரி ஒன்று இருக்கிறது தெரியுமில்லையா? டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷனை விளக்கும் பாடல் வரி என்று அதைச் சொல்லலாம். மிக அழகாக ஒரு உண்மையை அது சொல்கிறது. ஆம். நாம் அனைவருமே பூப்பறிக்கக் கோடரியைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்! எப்படி என்கிறீர்களா? சொல்கிறேன்.

நீங்கள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து புத்தம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் வாய்விட்டு. உங்கள் இரண்டு தொடைகளையும் ஆட்டிக் கொண்டே. அப்போது உங்கள் நண்பர் வந்து அழைக்கிறார். “இரு, இரு, இரு, வரேன்” என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் செய்யும் காரியம் என்ன தெரியுமா? கோடரியால் பூப்பறித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி என்கிறீர்களா? நீங்கள் செய்யும் காரியத்துக்குத் தேவையில்லாத பல உறுப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். புத்தகம் படிப்பதற்கு என்ன தேவை? வாக்கியங்களைப் படிக்கக் கண்களும், பக்கங்களைப் புரட்டுவதற்கு விரல்களும். அவ்வளவுதான். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் இரண்டு கால்களையும், தொடைகளையும் தேவையில்லாமல் ஆட்டிக் கொண்டிருக்கிறீர்கள். புத்தகம் படிப்பதற்குத் தொடை ஏன் ஆடவேண்டும். படிக்கும்போது ‘ஆடாதொடை’ இருந்தால் போதாதா?

அதுமட்டுமா? வாயால் வேறு படிக்கிறீர்கள். நீங்கள் சின்னப் பையனாக அல்லது குட்டிப் பெண்ணாக இருந்தால் வாய்விட்டுப் படிப்பதை அனுமதிக்கலாம். எழுத்தும் வார்த்தைகளும் பிடிபட வேண்டும் என்பதற்காக. ஆனால் நீங்களோ கல்லூரியில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இளைஞர். நீங்கள் ஏன் வாய்விட்டுப் படிக்கவேண்டும்? அதுமட்டுமா? உங்கள் நண்பரின் அழைப்புக்கு “இரு, வரேன்” என்று சொல்லியிருக்கலாம். “இரு” என்ற சொல்லை மூன்று முறை ஏன் பயன்படுத்தினீர்கள்? இப்போது புரிகிறதா, பூப்பறிக்க நீங்கள் எப்படிக் கோடரியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று?

தேவையில்லாமல் உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவதும், தேவைக்கு அதிகமாக உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவதும் சக்தி விரயம். சக்தியை விரயம் செய்யாமல் எந்தக் காரியத்துக்கு எந்த உறுப்பு அல்லது உறுப்புகள் தேவையோ அதை அல்லது அவற்றை மட்டும் தேவையான அளவு பயன்படுத்துவதுதான் டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷன். சரியா?

கொஞ்சம் உக்கிரமாகப் பார்த்தாலே வாடிவிடக் கூடியவை பூக்கள். எனவே தூக்கிப் போடுங்கள் உங்கள் கோடரிகளை. வாருங்கள், ஹெலிகாப்டரில் மலையுச்சிக்குப் போகலாம்.

=======

 நன்றி கல்கி 26.02.12

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to மந்திரச்சாவி — 07

  1. Devi Mahendran says:

    aduththa chavi eppo kidaikkum endra ethirparppu athihamaahikkonde pohirathu….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s