மந்திரச் சாவி – 08

மந்திரச் சாவி – 08

                                                                                             

”வாப்பா, நீ வெளிச்சமா வருவியா, இருட்டா வருவியா?”

இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது நான் சிங்கப்பூரில் இருந்தேன். நானும் என் தம்பியும் தம்பியின் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களை நிறுத்தியது இந்தக் கேள்வி. கேள்வி கேட்டது என் தம்பி மகன். அப்போது அவனுக்கு வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும்.

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு அறிஞருலகம், கவிதை என்பது இதுதான், கவிதை என்பது அதுதான் என்று முரண்பட்ட வரையறைகளைச் சொல்லிக்கொண்டும் குழப்பிக் கொண்டும் இருக்கும் காலகட்டத்தில் ஒரு சின்னப் பையனிடமிருந்து ஒரு அழகான கவிதை! அவன் சொன்னது எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. கவிதையின் அழகே அதுதானே!

என்றாலும் அவன் சொன்ன ஒருவரிக் கவிதையின் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாக இருந்தது. நான் என் தம்பியைப் பார்த்தேன். “வெளிச்சமாத்தான் வாப்பா வருவேன்” என்று தம்பி பதில் கவிதை சொல்லவும் மகன் புரிந்துகொண்டு அமைதியானான். (பையன் சொன்ன “வாப்பா” தந்தையையும், தந்தை சொன்ன “வாப்பா” மகனையும் குறிக்கும்). மகனுக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எனக்குத்தான் புரியவில்லை. என் ஆச்சரியம் அதிகமானது. கேட்டேன்.

சிரித்துக்கொண்டே தம்பி சொன்ன பதில்: “அது ஒன்னுமில்ல. இருட்டும் முன்னே வருவியா, இருட்டின பிறகு வருவியான்னு கேக்குறான்”.

அடடா, அதை இப்படிக்கூட கேட்க முடியுமா என்று வியந்தேன். ஆனால் அவன் சொன்னது என்னைப் பொருத்தவரை ஒரு அழகான கவிதைதான். மனிதர்கள் ஒன்று இருட்டில் இருக்கிறார்கள். அல்லது வெளிச்சத்தில் இருக்கிறார்கள். ஒன்று டென்ஷனில் இருக்கிறார்கள். அல்லது ரிலாக்சேஷனில் இருக்கிறார்கள். ஆமாம். டென்ஷன் என்பது இருட்டுதான். ரிலாக்சேஷன் என்பது நிச்சயமாக வெளிச்சம்தான். ஏனெனில் ரிலாக்ஸ்டாக நாம் இருக்கும்போதுதான் நமது பிரச்சனைக்கான தீர்வுகள் மனதின் கண்களுக்குத் தெரியும். நம் ஆசைகள் நிறைவேறுவதற்கான வழிகள் புலப்படும். வெளிச்சத்தில்தானே எல்லாம் தெரியும்? கதவு திறந்திருக்கலாம். ஆனால் இருட்டில் இருந்தால் கதவு திறந்திருப்பதோ, கதவு என்று ஒன்று இருப்பதோகூடத் தெரியாமல் போகலாமல்லவா? டென்ஷனில் இருந்தாலும் அப்படித்தான். பிரச்சனைக்குத் தீர்வு ஒன்று இருப்பதோ, அது இருக்கும் திசையோ எதுவுமே டென்ஷன் என்ற இருட்டில் தெரியாது.       

இருட்டை விரட்ட விளக்கேற்றுவதுதான் வழி. விடியும்போது விடியட்டும் என்று காத்திருக்க முடியாது. நாம் ஏற்படுத்திக்கொண்ட இருட்டை நாம்தான் விரட்ட வேண்டும். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று மனதிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கக்கூடாது. ஏனெனில் நாம் என்பது உடலையும் மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி. எனவே ரிலாக்சேஷன் என்ற விளக்கை ஏற்ற வேண்டியது அவசியம்.

இரண்டு வகையான ரிலாக்சேஷனையும், கொசுறாக டிஃபரன்ஷியல் ரிலாக்சேஷனையும் பற்றித் தெரிந்துகொண்டோம். இப்போது மிக உயர்ந்த மூன்றாம் வகை ரிலாக்சேஷன்.

மனம் என்ற நுட்பமான சக்தியால் உடல் என்ற அடர்த்தி அதிகமான ஆனல் நுட்பம் குறைந்த ஒன்றைத் தளர்த்தும் முறை இது. கண்ணுக்குத் தெரியாததை வைத்து கண்ணுக்குத் தெரிவதை இயக்குவது. மின்சாரத்தை வைத்து மின்விசிறியை சுழல விடுவது மாதிரி. மிக உயர்ந்த வகை ரிலாக்சேஷன் என்றாலும் இதுவும் எளிமையான பயிற்சிதான்.

பயிற்சி

கண்களை மூடிக்கொண்டு, தலையிலிருந்து கால் வரை மனதால், அதாவது கற்பனையால், கவனித்துக் கொண்டே வரவேண்டும். உதாரணமாக, கண்களை மூடிக்கொண்டு, தலைப்பகுதி எப்படி இருக்கிறதென்று கவனியுங்கள். தலை முடி எப்படியெல்லாம் அலைகிறது, அல்லது அலையவில்லை, காற்று எங்கெல்லாம் படுகிறது அல்லது படவில்லை, மண்டையில் ஏதேனும் உணர்வுகள் ஏற்படுகின்றனவா, எங்காவது அரிக்கிறதா, எங்காவது வலிக்கிறதா, எங்காவது கனமாக உள்ளதா, எங்காவது லேசாக உள்ளதா – இப்படி கவனித்துக் கொண்டே இருப்பது. இப்படிச் செய்தால் கொஞ்ச நேரத்தில் தலைப்பகுதி முழுவதும் ரிலாக்ஸ்ட் ஆகிவிடும். அப்படியே கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி பாதம் வரை செல்லலாம். இப்படிச் செய்யும்போது உடலை அசைக்காமல், நேராக அமர்ந்துகொண்டோ அல்லது மல்லாக்கப் படுத்துக்கொண்டோ இருக்க வேண்டும். துவக்க காலத்தில் நேராக அமர்ந்துகொண்டு செய்வதே நல்லது. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று அடம்பிடிப்பது நல்லதல்ல.

இப்படி உடல் முழுக்க ரிலாக்ஸ் செய்வதற்குச் சில நிமிடங்கள் ஆகலாம். கொஞ்சநேரம் செய்வதற்குள் ‘போர்’ அடிக்கும். செய்தது போதும் என்று தோன்றும். அதுதான் மிக முக்கியமான நேரம். நீங்கள் உடைந்து போகும் நேரம். நீ உருப்படவே கூடாது என்று உங்கள் பழைய வாழ்க்கை உங்களை உடைக்கும் நேரம். பழைய வாழ்க்கைக்கே திரும்பு என்று உங்கள் பழக்கம் உங்களை சங்கிலி போட்டு இழுத்துக் கொண்டு போகும் நேரம். அப்போதுதான் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாமே கெட்டுவிடும். அந்த நேரத்தை ’ப்ரேக்கிங் பாய்ண்ட்’ என்று கூறுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்காக எந்தக் காரியம் செய்தாலும், அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல், ஒரு மனத்தளர்வு ஏற்படும். அதுதான் ப்ரேக்கிங் பாய்ண்ட். அந்தப் புள்ளியில்  ’ப்ரேக்’ ஆகாதவர்களே வெற்றி பெறுவார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்த ’ப்ரேக்கிங் பாய்ண்ட்’டை நாம் ’ப்ரேக்’ செய்யவேண்டும்! ஆமாம்.

ஆனால் இந்தக் காரியம் இலகுவானதா? நிச்சயமாக இல்லை. இந்த உலகில் செய்யப்படும் எந்தக்காரியமும் இலகுவானதில்லை. மூச்சுவிடுவது இலகுவானதா? சாப்பிடுவது இலகுவானதா? தண்ணீர் குடிப்பது இலகுவானதா? இப்படி நான் கேட்டுக்கொண்டே போனால், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கும் வாய்ப்புண்டு. இதென்ன கேள்வி, எல்லாமே இலகுவானதுதானே என்று சொல்வீர்கள் அல்லது நினைப்பீர்கள்.

ஆனால் ஒரு ஆஸ்துமா நோயாளியைக் கேட்டுப் பாருங்கள். சாதாரணமாக மூச்சுவிடுவது எவ்வளவு கஷ்டம் என்று அவர் விளக்குவார். வாயில் அல்சர் வந்து அவதிப்படுபவரிடம் கேட்டுப் பாருங்கள். சாப்பிடுவது எவ்வளவு கஷ்டம் என்று அவர் உங்களுக்கு வகுப்பெடுப்பார். கடுமையான காய்ச்சலினால் அவதிப்படுபவரிடம் கேட்டுப் பாருங்கள். தண்ணீர் குடிப்பது எவ்வளவு பெரிய சாதனை என்று அவர் சொல்வார். எனவே எந்தக் காரியமும் அதனளவில் இலகுவானதோ கடினமானதோ அல்ல. காரியமாற்றுபவரைப் பொறுத்து அது கடினமாகவோ இலகுவாகவோ அமைகிறது என்பதுதான் உண்மை.

எனவே அதீக கவனமும் தீவிர அக்கறையும் கொண்டவர்கள் மட்டுமே மனதால் உடலை ரிலாக்ஸ் செய்யும் காரியத்தில் வெற்றியடைவார்கள். நம்முடைய கவனம் முழுவதும் ரிலாக்ஸ் செய்வதிலேயே இருக்க வேண்டும். வெளி உலகத்தின் எந்த சப்தமும் நம்மை அசைத்துவிடக் கூடாது. தண்ணீருக்குள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாலும், ஆமையின் கவனம் முழுவதும் தரையில் இட்டு வந்த முட்டைகளைப் பற்றியே இருக்குமாம். மீன் பிடிப்பதற்காகத் தூண்டில் போட்டுக் காத்திருக்கும்போது ரொம்ப கவனமாகத் தூண்டிலையே பார்த்துக் கொண்டிருப்போம். மிதவையின் கீழே இருக்கும் புழுவை உணவு என்று நினைத்து மீன் கவ்வினால் மிதவையில் அசைவு ஏற்படும். அப்போதுதான் தூண்டிலை இழுக்க வேண்டிய தருணம். அப்போது கவனக் குறைவாக இருந்தால் மீனும் போய்விடும் புழுவும் போய்விடும்.

ரிலாக்சேஷன் செய்யும்போது நமக்கு இத்தகைய கவனம்தான் தேவை. முழுமையான ரிலாக்சேஷன் பழகிவிட்டால் நாம் நமது ஆன்மாவின் குணாம்சத்தைக் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று அர்த்தம். ஏனெனில் ஆன்மாவின் தன்மை எப்போதுமே ரிலாக்ஸ்டாக இருப்பது!

உச்சி முதல் உள்ளங்கால் வரை இப்படி ரிலாக்ஸ் செய்வதற்கு கற்பனையின் உதவி அவசியம். கற்பனை இல்லாமல் இது சாத்தியமில்லை. கற்பனை இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. கண்களை மூடிக்கொண்டு எப்படி நாம் நம் முகத்தைப் பார்க்க முடியும்? கற்பனையால்தானே? அப்படியானால் கற்பனையை வளர்க்கும் வழியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு முதலில் கற்பனை என்றால் என்ன என்றும், அது என்னென்ன தரும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

====

நன்றி 14.03.12 கல்கி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

4 Responses to மந்திரச் சாவி – 08

 1. rumi sir super blog dr.s.mahadevan head, dept.of tamil ,sadakathullah appa college, tirunelveli

  • நாகூர் ரூமி says:

   Dear Mahadevan, thank u. What is the url where our photo is available? I visited your gravatar but it was empty.

 2. Devi Mahendran says:

  thank you sir…

 3. K.Manohar Raja says:

  Dear Rumi Sir,

  The breathing and relaxation tecq. taught by you is very simple and effective.I hv been practising breathing excersize since last 4 months after reading ur Indha Vinnadi Book and started some good things are happening in life without putting hard efforts.Thank you sir-K.Manohar Raja,Salem

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s