மந்திரச் சாவி – 09

மந்திரச் சாவி – 09

தண்ணீரா? அப்படியென்றால் என்ன? என்று கேட்டதாம் கடலில் வாழ்ந்துகொண்டிருந்த மீன் ஒன்று. கற்பனை என்றால் என்ன என்று கேட்பதும் இதைப்போன்றதுதான். நமது வாழ்க்கை என்பதே எல்லாத் திசைகளிலும் நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய கற்பனையால் ஆனதே. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியம், ஆனால் உண்மை.

உண்மை! இந்த வார்த்தையைச் சொன்னவுடன் இன்னொரு விஷயத்தையும் சொல்லத் தோன்றுகிறது. கற்பனையும் உண்மையும் எதிர் எதிரானவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையைச் சொன்னால், உண்மைக்கு இன்னொரு பெயர்தான் கற்பனை! ஆமாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், கற்பனை என்பது திரை போடப்பட்ட உண்மை. முகத்திரை அணிந்த அழகான லைலா. ஆனால் அவள் முகத்திரையை விலக்கிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் அவள் காதலனாக, மஜ்னூனாக இருக்க வேண்டும். முதலில் அவளை உங்களவளாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவள் முகத்திரையை அகற்றி அந்த அழகைப் பார்க்கும் உரிமை உங்களுக்கு வரும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?

நீங்கள் ஒரு காதலனாக இருக்கும் பட்சம் உங்கள் காதலியைப் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை நினைப்பீர்கள் என்று கேட்டால் சிரிப்பீர்கள். ஏனெனில் கேள்வியே தப்பு. நாள் முழுவதும் அவளைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருப்பீர்கள். முப்பொழுதும் அவள் கற்பனைதான். சரி. ஒருவகையில் கற்பனை என்பதும் காதலி மாதிரிதான். ஞானிகளும், விஞ்ஞானிகளும் அப்படித்தான் கற்பனை செய்தார்கள். மின்சார விளக்கு உருவாக்குவதைப்பற்றி ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கற்பனை செய்யவேண்டும் என்று ஷெட்யூல் போட்டுக்கொண்டிருந்தால் ஏழு ஜென்மத்துக்கு முயற்சி செய்திருந்தாலும் எடிசனால் மின்சார பல்பைக் கண்டுபிடித்திருக்க முடியாது. ஐன்ஸ்ட்டீனால் சார்புத் தத்துவத்தைக் கொடுத்திருக்க முடியாது. இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்கள் மூளைக்குள், நரம்புகளுக்குள், ரத்தத்துக்குள், எலும்புகளுக்குள் எல்லாம் ஒரே சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்தது. அதனால்தான் அவர்களால் சாதனைகள் செய்ய முடிந்தது.

நமக்கும் கற்பனை என்பது நாள்பூராவும் இருந்துகொண்டேதான் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரு வித்தியாசம், அவர்கள் கற்பனை ஒருமுகப்பட்டது. ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டது. நமது கற்பனையோ ஆங்காங்கே சிந்தியும், சிதறியும் கிடப்பது. ஆங்கிலத்தில் மனிதர்களை peak performers என்றும் weak performers என்றும் இரண்டுவிதமாக வகைப்படுத்துகிறார்கள். ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை/கற்பனை கொண்டவர்கள் சாதனையாளர்கள். அப்படியெல்லாம் செய்யத்தெரியாத நாமெல்லாம் வேதனையாளர்கள். அதாவது ’வீக் பெர்ஃபாமர்ஸ்’. ஒரு நாளில் நமக்கு கிட்டத்தட்ட 60,000 எண்ணங்கள் வருவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்! நம் எண்ணங்கள் எவ்வளவு தூரம் சிதறிக்கிடக்கின்றன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்!

எல்லோரும் எடிசனாகவோ ஏசுவாகவோ இருக்க முடியுமா? முடியாது. அவசியமும் இல்லை. ஆனால் நம்மளவில் நமது பிரச்சனைகளைத் தீர்க்கிற, நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுகிற சாதனையாளர்களாகவாவது நாம் இருக்கலாமல்லவா? அதற்கும் சிந்தாத, சிதறாத கற்பனை வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனால் எதைக் கற்பனை செய்ய முடியாதோ, அதை அவனால் அடையவே முடியாது. அப்படியானால், இதுவரை நம் வாழ்வில் நாம் எதையெல்லாம் அடைந்திருக்கிறோமோ அதையெல்லாம் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ கற்பனை செய்திருக்கிறோம் என்று அர்த்தம்.

ஒரு சின்ன எளிமையான உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை என் குருநாதரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அவருக்கு அவருடைய கணவரோடு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருந்தார்.

“எல்லாத்துக்கும் நீதாம்மா காரணம்” என்றார் என் குருநாதர்.

“நா எப்படி காரணமாவேன்? என் கணவர் என்னிடமிருந்து பிரிந்து போக வேண்டுமென்று நானே விரும்புவேனா?” என்று அவர் கேட்டார். எனக்கும் அந்தக் கேள்வி ரொம்ப நியாயமாக இருந்தது. குருநாதரின் பதிலைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன்.

“நீ விரும்பியிருக்கேன்னு நா சொல்லலை. ஆனா, இப்டி ஆயிடுமோ, அப்டி ஆயிடுமோ அப்டீன்னு பயந்திருக்கியா?” என்று கேட்டார்.

“ஆமா, ரொம்ப பயந்திருக்கேன். அடிக்கடி, ஏன், நாள் முழுக்க எனக்கு அந்த மாதிரியான பயம் இருந்திருக்கு” என்று அப்பெண்மணி கூறினார்.

“அதெத்தான் சொன்னேன். உன்னுடைய பயம்தான் உன்னுடைய ஆசையா மாறியிருக்கு. உன்னுடைய ஆசை திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டு தீவிரமாகி, ஒரு வேண்டுதலாக மாறிடுச்சு. எப்ப ஒரு மனிதன் ஆத்மார்த்தமா – தெரிஞ்சோ தெரியாமலோ – ஆசைப்படுகிறானோ, அந்த ஆசையை ஆண்டவன் நிச்சயம் நிறைவேத்தி வைப்பான். அதுதான் உன் விஷயத்துல நடந்திருக்கு. உன் கணவர் ஒன்னை விட்டுப் பிரிஞ்சு போனதுக்கு முக்கியமான காரணம் உன் ஆசைதான். ஐ மீன், உன்னுடைய பயம்தான். எண்ணத்தின் அல்லது கற்பனையின் சக்தி இதுன்னு சொல்லலாம். எண்ணம், கற்பனை, சிந்தனை, ஆசை, பயம், பொறாமை, கோபம், காதல், காமம் – எல்லாமே ஒரே குடும்பம்தான்” என்று அவர் சொன்னபோது என் மண்டைக்குள் ஒரு சூரியன் எழுந்தது.

எந்த மனிதனாலும் சிந்திக்காமல் இருக்க முடியாது. அதாவது எதைப்பற்றியாவது நினைக்காமல் இருக்க முடியாது. ஒரு பூனையோ யானையோ சிந்திக்குமா? மனிதனையும் மற்ற படைப்பினங்களையும் பிரித்துக் காட்டும் முக்கியமான எல்லைக்கோடு சிந்தனைதான். (மிருகங்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சம் இக்கருத்தை மாற்றிகொள்ளலாம்).

சில அல்லது பல நேரங்களில் மனிதனுடைய சிந்தனையானது கற்பனை என்ற தளத்துக்கு உயர்ந்துவிடுகிறது. பறவையைக் கண்டான், விமானம் படைத்தான் என்ற பாட்டு தெரியும்தானே? பறவையைக் கண்டவுடன் ரைட் சகோதரர்களின் கற்பனை சிறகு விரித்துவிட்டது. அதன் விளைவு? ஏர் இந்தியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் என்று நாம் இன்று பறந்துகொண்டிருக்கிறோம். இன்றையை உண்மைகள் எல்லாமே நேற்றைய கற்பனைகள்தான். ”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் / காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்” என்று பாரதி பாடியது வானொலி அல்லது அலைபேசி பற்றிய தீர்க்கதரிசனக் கற்பனையல்லவா?

வின்சன்ட் வான்கோ என்று உலகப்புகழ் பெற்ற ஓவியர் இருந்தார். தனது சின்ன வாழ்வை வண்ணங்கள் தீட்டுவதிலேயே கழித்தவர். 37 வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன அவர் வாழ்க்கை வறுமையில் அழிந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த உலகம் அவரை வியந்து போற்றியது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட வான்கோவின் ஓவியங்கள் அவரது மறைவுக்குப் பிறகு 100 மில்லியன் டாலர் வரை விலைபோயின. இவ்வளவு புகழுக்கும் காரணம் ஆச்சரியமூட்டும் வண்ணங்களின் கலவையில் வெளிப்பட்ட அவரது அபார கற்பனைதான்.

”ஸ்டாரி நைட் ஓவர் த ரோன்” என்ற தலைப்பில் அவர் ஓர் ஓவியம் வரைந்தார். அதில் என்ன விஷேஷம் என்றால், ரோன் ஆற்றில் பிரதிபலித்த நட்சத்திரங்களெல்லாம் சுருள் சுருளாக ஸ்பைரல் வடிவத்தில் இருந்ததுதான்!

அதைப் பார்த்த சக ஓவியர்கள், நீ என்ன லூஸா? நட்சத்திரம் என்ன வடிவம் என்றுகூட உனக்குத் தெரியாதா – என்று கேட்டனர். அதற்கு வான்கோ, “தெரியும். ஆனால் நான் என் கண்ணால் பார்த்து வரையவில்லை. என் மனதைக் கேட்டு வரைகிறேன். என் மனதுக்கு அவை ஸ்பைரல்களாகத்தான் தெரிகின்றன. நான் என்ன செய்ய?” என்று பதில் சொன்னார்.

நட்சத்திரங்கள் ஸ்பைரல் வடிவம் கொண்டவை என்று இந்த நூற்றாண்டின் விஞ்ஞானம் கூறியது! வான்கோவின் கண்களுக்கு எப்படி நட்சத்திரத்தின் உண்மையான வடிவம் தெரிந்தது? அவர் கண்கள் கற்பனையின் கண்கள். அவை திரையை விலக்கிவிட்டுப் பார்த்துவிட்டன. தூரதிருஷ்டிகொண்டது கற்பனை. தீர்க்க தரிசனம் கொண்டது கற்பனை. இறைவனது ஆற்றலின் இன்னொரு வடிவம்தான் கற்பனை. இந்த பிரபஞ்சமும் அதில் உள்ளவைகளும் இறைவனின் கற்பனைதானே? கற்பனை என்பது உண்மைதான். உண்மை என்பது கற்பனைதான்.

===

 நன்றி 11.03.2012

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to மந்திரச் சாவி – 09

  1. Devi Mahendran says:

    Sir, neengal solvathaippaarthaal enakku bayamaaha ullathu. enendral oru vibareetha karpanai adikkadi enakkul varuhirathu, athu nadakkaamal irukka naan enna seyvathu? udane pathil sollungalen please…

  2. saravana says:

    (எந்த மனிதனாலும் சிந்திக்காமல் இருக்க முடியாது. அதாவது எதைப்பற்றியாவது நினைக்காமல் இருக்க முடியாது. )

    Not Thinking is not impossible, all thinking really empowered while we aware without thinking before thinking, this is my experience, if we don’t want to think we can stop think, it’s absolutely possible.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s