மந்திரச் சாவி – 10

மந்திரச் சாவி – 10

நாகூர் ரூமி

ஹீப்ரூ மொழியில் கற்பனை என்பதைக் குறிக்கும் சொல் ”எட்ஸர்” அல்லது ”எட்ஸிரா” என்று சொல்கிறார்கள். அதற்கு “படைப்பு” என்று பொருளாம். எல்லா படைப்பும், அது தெய்வத்தின் படைப்பாக இருந்தாலும் சரி, மனிதப் படைப்பாக இருந்தாலும் சரி, கற்பனையோடு தொடர்பு கொண்டது என்ற குறிப்பு அந்த சொல்லில் உள்ளது ஆச்சரியமே.

கற்பனை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது நம்நாடுதான். இந்தியர்களைவிட கற்பனையில் சிறந்தவர்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரேயொரு மகாபாரதம் போதும் நமது கற்பனை வளம் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் காட்டுவதற்கு. மார்க்யூஸ், மாஜிகல் ரியலிஸம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் இந்தியக் கற்பனை மரபுக்கு முன் எதுவும் நிற்கமுடியாது என்றே கூறலாம்.

மகாபாரதத்தில் அஷ்டாவக்கிரன் கதை ஒன்று உண்டு. கஹோடனுக்கும் அவருடைய குருவான ரிஷி உத்தாலகனின் மகள் சுஜாதாவுக்கும் உருவாகிறான் அஷ்டாவக்கிரன். அஷ்டாவக்கிரன் என்றால் எட்டு கோணல் என்று பொருள். தன் தந்தையும் தாத்தாவும் வேதங்களுக்கு சொல்லும் விளக்கங்களையெல்லாம் சுஜாதாவின் வயிற்றில் இருந்தே அஷ்டாவக்கிரன் கேட்டுக்கொண்டு வருகிறான். தாத்தா மிக அருமையாக விளக்கம் கொடுப்பதும், தந்தையின் விளக்கங்களில் சில தவறுகள் இருப்பதையும் புரிந்துகொள்ளும் கரு, அம்மாவின் வயிற்றில் இருந்துகொண்டே தந்தையின் தவறுகளைத் திருத்த முயல்கிறது. அதனால் கோபமடையும் உத்தாலகன் மகனை எட்டு கோணல் கொண்டவனாகப் பிறக்கும்படி சபிக்கிறான். அவனும் அப்படியே பிறக்கிறான். அதனால் அவன் அஷ்டாவக்கிரன் எனப்படுகிறான்.

உடலுக்கும் மனதுக்கும், நமக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இருக்கும் அற்புதமான தொடர்பை விளக்கும் அழகான கற்பனைக்கதைகளில் இதுவும் ஒன்று.

அழகான கொழுகொழு குழந்தைகளை எந்நேரமும் கற்பனை செய்யும் தாய்மார்களுக்கு அழகான குழந்தைகள் பிறக்கும் சாத்தியம் உள்ளது. அதனால்தான் கிரேக்கர்கள் உடலழகும் முக அழகும் கொண்ட ஆண் அல்லது பெண் கடவுளரின் சிலைகளை கர்ப்பிணிப் பெண்களின் அறைகளில் வைத்தனர். 

நம் நாட்டு கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் மனதால் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஏன், வாயால்கூட பேசுவார்கள். குழந்தையிடம் பேசினால் அதற்குப் புரியுமா என்ற கேள்வியெல்லாம் எழாது. இதயத்துக்கு தர்க்கமெல்லாம் தெரியாது.

கர்ப்பிணிப் பெண்களை முடிந்தவரை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நம் பாரம்பரியம் கூறுகிறது. ஏன்? அவர்கள் மனம் சந்தோஷமாக இருந்தால்தான் அவர்களுடைய சிந்தனை அல்லது கற்பனை ஆரோக்கியமானதாக இருக்கும். அது ஆரோக்கியமானதாக, அழகானதாக இருந்தால்தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் அஷ்டாவக்கிரம்தான். அதுதான் கதையின் குறிப்பு. சாபம் என்பதும் வரம் என்பதும் சக்தி மிகுந்த வார்த்தைகளின் விளைவு அல்ல. சக்தி மிகுந்த கற்பனையின் விளைவு. அது வார்த்தையாக வெளிப்பட்டாலும் சரி, வெளிப்பாடாவிட்டாலும் சரி.

99 சதவீதம் பாஸ் பண்ணிடுவேன் என்று ஒருவர் சொன்னால், ஒரு சதவீதம் பாஸ் பண்ண மாட்டேனோ என்ற அச்சம் இருக்கிறதென்று பொருளல்லவா? ஆனால் அந்த ஒரு சதவீதம் என்பது 99-ஐயும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. பயம், கவலை இவையெல்லாம் எப்படி ஆசையாகவும் பிரார்த்தனையாகவும் மாறிவிடும் என்று ஏற்கனவே உதாரணம் பார்த்தோம்.

நம்பிக்கை என்பது நூறு சதவீதம் இருக்க வேண்டும். ஒரு சதவீத அச்சம், அவநம்பிக்கை என்பதுகூட கண்ணாடியின் மேல் விழுந்த இலை அல்ல. கண்ணாடியின் மேல் விழும் அம்பு அது. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகிவிடும். ஏனெனில், காலம் காலமாக எதிர்மறையாகவே பேசியும் நினைத்தும் நாம் பழக்கப்பட்டு விட்டதால், எதிர்மறையான கற்பனை ராட்சச சக்தி பெற்றுவிட்டது. ஆக்கப்பூர்வமான, நல்ல ஆரோக்கியமான கற்பனைகள் இப்போதுதான் முளைவிடுவிடுகின்றன. அச்சம், கவலை போன்ற ராட்சச ஆடுகள் அவற்றைத் தின்றுவிட்டுப் போய்விடும் அபாயம் உண்டு. 

கற்பனை என்பதே இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு வரம்தான். நாம்தான் பல நேரங்களில் அதை சாபமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ராமனின் பாதம் பட்ட மண் பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும், உணர்ச்சியுமாக உயிர் பெறும் அவள் பேசிய முதல் வார்த்தை என்னவென்று யாருக்காவது தெரியுமா? ஆனால் புதுமைப்பித்தனுக்குத் தெரிந்திருக்கிறது! ஆமாம். அவருடைய ”சாபவிமோசனம்” கதையில் உயிர் பெறும் அகலிகை தன் கணவன் கௌதமனிடம் “எனக்குப் பசிக்கிறது” என்று கூறுவாள்! அடடா,  எவ்வளவு எளிமையான லாஜிக்! ஆனால் எவ்வளவு பொறுத்தமான, அழகான கற்பனை!

”த டெம்பெஸ்ட்” என்று ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்று. அதில் தனக்கு துரோகம் செய்த சகோதரனையும் அவனது மகன் ஃபெர்டினன்டையும் போலியான ஒரு புயலை உருவாக்கி, கப்பலைக் கவிழ்த்து, ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாமல் கரையில் ஒதுக்கு என்று ப்ராஸ்பரோ தனது அடிமையான ஏரியல் என்ற குட்டிச் சாத்தானிடம் கூறுவான். ஏரியல் என்ற பெயரே ஒரு அழகான கற்பனையின் விளைவு. ’ஏர்’ என்பதிலிருந்து காற்றிலே மிதந்தோ பறந்தோ செல்லக்கூடிய ஒன்று என்ற பொருள்படும்படி ’ஏரியல்’ என்று ஷேக்ஸ்பியர் பெயர் வைத்துள்ளார்.

சொன்னபடி செய்துவிட்டு ஏரியல் வந்து ப்ராஸ்பரோவிடம் நடந்ததைக்கூறும். எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று அவன் கேட்பான். “ஒரு முடிகூட அழியவில்லை” என்று ஏரியல் பதில் சொல்லும். தந்தையின் நிலை பற்றி அறிய ஆவலாக இருந்த மகன் ஃபெர்டினான்ட் காதில் விழும்படி ஒரு பாடலை ஏரியல் பாடும். அதில், அவன் தந்தை மூழ்கிச் செத்துவிட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல், “அவனது கண்களாக இருந்தவை இப்போது முத்துக்களாக உள்ளன” என்று கூறும்!

ஒரு சர்ரியலிஸ நாடகம் ஒன்று படித்தேன். எழுதியவர், நாடகத்தின் பெயர்கள் நினைவில் இல்லை. அதில் ஒரு கொலை நடக்கும். பிணத்தைக் கொலைகாரர்கள் ஒரு அறையில் பூட்டி வைத்துவிடுவார்கள். ஆனால் பிணம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நீண்டுகொண்டே போகும்! கடைசியில் ஜன்னலுக்கு வெளியே அதன் பாதங்கள் தெரியும்! ஒரு விஷயத்தை ரொம்ப நாளைக்கு ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற கருத்தை அது அவ்வளவு அழகாகச் சொன்னது.

கம்பராமாயணத்தில் கம்பன் ஒரு கற்பனை செய்வார். ராமனுடைய கதையானது கடல் மாதிரி பெரிய விஷயம் என்றும், அதுவும் சாதாரண கடல் அல்ல, பாற்கடல் என்றும், அந்த பாற்கடலை நக்கிக் குடிக்க ஒரு பூனை ஆசைப்படுவது போல, ராமனுடைய கதையை எழுத தான் ஆசைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுவார். ஆனால் அந்த அவையடக்கத்தின் விஷேஷம் என்னவெனில், அந்த பூனை பாற்கடலை நக்கி நக்கிக் குடித்தேவிடுகிறது என்பதுதான்!

உலகின் முதல் காவியம் எழுதிய ஹோமரின் காலம் கிறிஸ்துவுக்கு கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் முந்தியது. ஹோமரின் ”இலியட்” காவியத்தில் ஒரு காட்சி. எஜமானனுக்கு பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே இருந்தனர். அவர்கள் பேசவும், உடல் உறுப்புக்களை அசைக்கவும் செய்தது மட்டுமல்ல, அறிவோடும் இருந்தனர். நித்தியர்களான கடவுளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலைத் திறம்படக் கற்றிருந்தனர். இப்படி ஒரு கற்பனை 18-வது காண்டத்தில் வருகிறது. இன்றையை ரொபோடிக்ஸின் முன்னோடி ஹோமர் என்று அறியவரும்போது எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

மீண்டும் நினைவூட்டுகிறேன். ஒரு மனிதனால் எதைக் கற்பனை செய்ய முடியவில்லையொ, அதை அடையவே முடியாது. ஆனால் கற்பனை சரியாக வருவதற்கு கான்சன்ட்ரேஷன் எனப்படும் மன ஒருமை தேவை.

====

நன்றி கல்கி: 18.03.12

                                                

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to மந்திரச் சாவி – 10

  1. mano ranjjan says:

    thanks a lot guruvae! naan kalki padikkavilllai … read about your indhavinaadi in maruththuva malar by NONI… got indha vinaadi from ur godself with autograph last year, when i came to drop a friend to “alfa” initiation… and i had to go for acupuncture class… gifted to lot of people… they in refer to their friends…. same like “dhraatchaigaLin idhayam’ … “alfa dhyanam”… DI is not available now… any idea of next edition….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s