மந்திரச் சாவி – 11

மந்திரச் சாவி – 11

நாகூர் ரூமி

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஒருமுறை என் உறவினர் ஒருவர் கோபமாக என் தம்பியிடம், ”நீ சொல்லுதம்பி, நா அங்கே போனேன், இங்கெ போனேன், அவகிட்ட போனேன், இவ கிட்ட போனேன், இப்டி ஏதாச்சும் கேள்விப்பட்டிருக்கியா” என்றார்.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வழக்கம்போல ஏதோ வழக்கு. அவருடைய கேள்வி என் தம்பியின் மூளைக்குள் பதிவாகவே இல்லை. காரணம் அவர் ரொம்ப தீவிரமாக பாக்கட் ரேடியோவில் கிரிக்கட் கமண்ட்ரி கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் வயதில் பெரியவர் எனபதால் மரியாதை நிமித்தமாக, தலையசைத்து, “ம்,ம்” என்றார் தம்பி! அவ்வளவுதான். உறவினருக்கு ஏதோ மாதிரியாகிவிட்டது.

“என்னாது? கேள்விப்பட்டிருக்கியா?”என்று அவர் தம்பியைப் பிடித்து உலுக்கிக் கேட்கவும்தான் தம்பி இந்த உலகுக்கு வந்தார். அவர் காதில் வானொலிக் குட்டி இருப்பதைப்பார்த்த உறவினர், “ஓஹோ ரேடியோ கேக்குறியா, சரி சரி, கேளு கேளு” என்று சொல்லிவிட்டு அசடு வழியப் போய்விட்டார்.

தம்பியின் மூளையில் ஏன் அவருடைய கேள்வி பதிவாகவில்லை?

அந்த மனிதருக்கு நடுத்தர வயதிருக்கும். வீட்டு வரி கட்டுவதற்காக அவர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய முறை வந்தபோது, “உங்கள் பெயர்?” என்று அதிகாரிகள் கேட்டார்கள். அவ்வளவுதான். ஒரு கணம் உலகமே ஸதம்பித்துவிட்டது. பெயரைக் கேட்டால் உலகம் ஏன் ஸ்தம்பிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? பெயர் ஞாபகம் இருந்தால்தானே? தன்னுடைய பெயரே ஒருவருக்கு மறந்து போனால்?! இப்படி நடக்குமா என்கிறீர்களா? நடந்துவிட்டதே! அதுவும் வரலாற்றின் பட்டப்பகல் ஒளியில்! ஏனென்றால் தன் பெயரை மறந்துபோன அந்த நபர் சாதாரண மனிதரல்ல. உலகப் புகழ் பெற்றவர். ஆனால் பெயர் தெரியாவிட்டால் வரி கட்ட முடியாது என்பதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்றுதான் வீட்டுவரி கட்ட வேண்டிய கடைசி நாள்!

என்னடா இது, என்னுடைய பெயரே மறந்துவிட்டதே என்று சோகமாகத் திரும்பி வந்துகொண்டிருந்த அவரை அவருடைய நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு, “என்ன எடிசன், என்ன இந்தப் பக்கம்?” என்று கேட்கவும்தான் அவருக்கு உயிர் வந்தது! ஆமாம், அவர் நீங்கள் சரியாக கணித்து வைத்த தாமஸ் ஆல்வா எடிசன்தான்!

இந்த உலக வரலாற்றில் தன் பெயரை மறந்த ஒரே மனிதர் அவராகத்தான் இருக்க முடியும். அவர் ஏன் தன் பெயரை மறந்தார்?

ஒருநாள் என்னை ஒருவர் கேட்டார். ஆடுமாடுகள் உட்காருவதையும் எழுவதையும் பார்த்திருக்கிறீர்களா என்று. ஓ, பார்த்திருக்கிறேனே என்று சொன்னேன். அவை எழும்போது எந்தக் கால்களை ஊன்றி எழும் என்று கேட்டார். என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. முன்னங்கால்கள் என்று நினைத்தேனே தவிர, நிச்சயமாக என்னால் சொல்ல முடியவில்லை. ஏன்?

 எல்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில்தான். கான்சன்ட்ரேஷன். என் தம்பியின் கான்சன்ட்ரேஷன் கிரிக்கட் கமண்ட்ரி கேட்பதில் இருந்ததால் உறவினரின் கேள்வியை உள்வாங்கிக் கொள்ளாமல் அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த வழக்கை ஒரு தலையசைவில் பெரிதுபடுத்த இருந்தார். மனம் பூராவும் மின்சார பல்பு அடைத்துக் கொண்டிருந்ததால், அல்லது ஏதோ ஒரு கருவிக்கான கண்டுபிடிப்பு தொடர்பான சிந்தனை அடைத்துக் கொண்டிருந்ததால்  (ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை எடிசன் செய்துள்ளார்) எடிசனால் தன்னுடைய பெயரையே சட்டென்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவர் வேறு ஓர் உலகத்தில் இருந்தார். அது  டோட்டல் கான்சன்ட்ரேஷனின் உலகம். கான்சன்ட்ரேஷன் இல்லாத காரணத்தினால் நான் பல முறை பார்த்திருந்த ஒரு நிகழ்ச்சி பற்றி என்னால் நிச்சயமான பதிலைச் சொல்ல முடியவில்லை.

ஒரு மனிதன் வெற்றி அடைய வேண்டுமென்றால் அவனுக்கு வேண்டியது மன ஒருமை எனப்படும் கான்சன்ட்ரேஷன். அது இல்லாமல் யாருக்கும் எந்த வெற்றியும் கிடைக்க சாத்தியமில்லை. சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சாஃப்ட்வேராக இருந்தாலும் சரி. விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, தியானமாக இருந்தாலும் சரி. அ-விலிருந்து அஃ வரை எல்லாவற்றிலும் கான்சன்ட்ரேஷன் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

ஒரு இலையை அல்லது ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை வெயிலில் காட்டிக்கொண்டே அதன் மீது, கொஞ்சம் இடைவெளிவிட்டு ஒரு லென்ஸைப் பிடிக்கவேண்டும். சில வினாடிகளில் அந்த இலை அல்லது தாளில் ஓட்டை விழுந்துவிடும்.

நம்மைச் சுற்றி சக்தி எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. ஆனால் அதை ஒரு புள்ளியில் குவிக்கும்போதுதான் அது திரண்டு தீவிரமடைகிறது. பள்ளிக்கூடக் காலத்தில் நாம் எல்லாருமே இந்த பரிசோதனையை நிகழ்த்திப் பார்த்திருப்போம். நான்கூட செய்திருக்கிறேன்.  சக்தியை ஒரு புள்ளியில் குவிக்கும் உத்திக்குப் பெயர்தான் கான்சன்ட்ரேஷன்.

ஒரு புள்ளியில் வெயிலின் சக்தி குவியும்போது உஷ்ணம் தீவிரமடைந்து தீயாகி கருக்கிவிடுகிறது. இது சக்தியைப் பயன்படுத்தும் எதிர்மறையான உதாரணம். இதேபோல, ஆனால் நேர்மறையாகவும் சக்தியைப் பயன்படுத்தலாம். அனல் மின் சக்தி மாதிரி. மனதை ஒரு புள்ளியில் குவித்தால் அது வெற்றியைக் கொடுக்கிறது.

இந்த உலகில் இதுவரை நிகழ்ந்த சாதனைகள் அனைத்துக்கும் காரணம் கான்சன்ட்ரேஷன்தான். ’கருமமே கண்ணாயினார்’ என்று தமிழில் சொல்லப்படுவதும் இதையொற்றித்தான்.

நமக்கெல்லாம் கான்சன்ட்ரேஷனே கிடையாதா?  

இந்தக் கேள்விக்கு பதில், உண்டு ஆனால் இல்லை! ஆமாம். என்ன இது கான்சன்ட்ரேஷனில் சொதப்புவது எப்படி என்ற கட்டுரையா இது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் சரியாகத்தான் சொல்கிறேன். நம்மிடம் கான்சன்ட்ரேஷன் இருக்கிறது. ஆனால் அது மிருகங்களின் கான்சன்ட்ரேஷனை ஒத்த்து! கோபமடைய வேண்டாம். உங்களுக்குச் சொன்னது எனக்கும்தான் பொருந்தும்!

தெரு நாயை எடுத்துக்கொள்வோம் (உதாரணத்துக்குத்தான், வளர்ப்பதற்கு அல்ல). அது பசியோடு இன்னொரு நாயின் வாயில் உள்ள இறைச்சி எலும்பை இழுக்க போட்டி போட்டுக்கொண்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு கற்பனைக் காட்சிதான். ஆனால் நாம் சாதாரணமாகப் பார்க்க முடிவதுதான்.

அந்த நேரத்தில் நீங்கள் அதற்கு எவ்வளவு அருகில் போனாலும் உங்களை அது கண்டுகொள்ளவே செய்யாது. கண்டுகொள்வது என்ன, நீங்கள் இருப்பதே அதற்குத் தெரியாது. ஏனெனில், அது பசியோடு இருக்கிறது. அதாவது பரிபூரண கான்சன்ட்ரேஷனில் இருக்கிறது. அதன் உலகம் அந்த இன்னொரு நாயின் வாயில் உள்ள எலும்பால் ஆனது. அந்த உலகை தன் வாய்க்கும் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காத்தான் அது அப்போது வாழ்ந்துகொண்டிருக்கும். மற்ற எதுவுமே அதன் கண்களுக்குத் தெரியாது. அதன் காதுகளுக்குக் கேட்காது. அதன் தொடு உணர்ச்சிக்கும் தெரியாது.

இப்படிப் போராடி அந்த எலும்பைப் பிடுங்கி சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸ்டாக நடுத்தெருவில் படுத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் லேசான அசைவைக் காட்டினாலும் அது உங்களைப் பார்க்கும். ஒரு கல்லை எடுப்பதுபோல நீங்கள் குனிந்தால் அது உடனே எழுந்து ஓடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வேறு வார்த்தைகளில் இந்த உண்மையைச் சொன்னால், தனக்கு பசி ஏற்பட்டபோது அதைத் தீர்ப்பதற்காக மனதை ஒரு புள்ளியில் அதனால் வைக்க முடிகிறது. இது மிருக மன ஒருமை. நமக்கும் இப்படித்தான் இருக்கிறது!

நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், நமக்குப் பிடித்த காரியம் என்றால், உதாரணமாக நம்முடைய காதலியோடு பேசிக்கொண்டிருந்தால் நமக்கு வேறு ஏதாவது தெரியுமா? நம்முடைய மனமும் உடலும் அவளோடுதானே இருக்கும்? அது பரிபூரண கான்சன்ட்ரேஷன்தான். ஆனால் மிருக கான்சன்ட்ரேஷன்.

அப்படியானால் மனிதனுக்கு வெற்றி தரும், கற்பனைக்கு உதவி செய்யும் கான்சன்ட்ரேஷன் எது?

 

 

 

===

 

                                                

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

4 Responses to மந்திரச் சாவி – 11

 1. தாஜ் says:

  எனக்கு எத்தனையோ முறை
  என் பெயர் மறந்து போய் இருக்கிறது.
  ‘என் பெயரை நான் மறந்து’ என்று
  எப்போவோ கவிதைக்கூட எழுதி இருக்கிறேன்.

  மறதியெல்லாம் மனித சகஜம்.

  பொதுவாகவே…
  மனிதனுக்கு மறதி வேண்டும் என்கிறார்கள்.
  வாழ்வில் நேரும் இடர்களை
  ஒருவன் மறக்கவில்லை என்றால்….
  அல்லது
  மறக்க முடியவில்லை என்றால்…
  வாழ் நாளெல்லாம்
  அவனுக்கு நரகம்தான்
  இங்கே தீர்வு!.
  -தாஜ்

 2. நாகூர் ரூமி says:

  அன்பு தாஜ், சொந்தப் பெயரை மறந்து போவது அசாதாரணமானது. உங்களுக்கு அது நேர்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லை. நீங்களும் அசாதாரண மனிதர்தான். எடிசனைப்போல. ஆனால் இது எல்லாருக்கும் நிகழும் ஒன்றல்ல.

  • தாஜ் says:

   பதில் சொல்ல முடியாமல் ஆக்கிட்டிங்களே ரஃபி.
   நான் சொல்லவந்தது….
   மறதி என்பது கவிதை மாதிரியானது என்பதைத்தான்.
   தவிர…
   மறதி மனித குலத்தின்
   அவசியங்களில் ஒன்று என்பதைத்தான்.
   நன்றி ரஃபி.

   அப்புறம்…….
   நான் ‘னைசடிஎ’னாகவும் கூட
   கற்பனை செய்யவும் முடியாது.
   உங்களது தாராளத்திற்கு
   மீண்டும் நன்றி.
   -தாஜ்

 3. akkim says:

  thanks sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s