மந்திரச் சாவி – 12

மந்திரச் சாவி – 12

நாகூர் ரூமி

ஒரு முறை மாணவர்களுக்கு நான் ஒரு சோதனை வைத்தேன். ஒரு கைக்கடிகாரத்தை அவர்களிடம் காட்டினேன். ”நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், நான் சில கேள்விகள் கேட்பேன், பதில் சொல்லவேண்டும்” என்று கூறினேன். சில வினாடிகளுக்குப் பிறகு, “அந்த வாட்ச்சில் உள்ள எண்கள் 1, 2, 3 என்று உள்ளனவா அல்லது I, II, III என்று ரோமன் எழுத்துக்களில் உள்ளனவா?” என்று கேட்டேன். பல மாணவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இரண்டு மாணவர்கள் மட்டுமே ரோமன் எழுத்துக்களில் இருப்பதாகச் சரியாகச் சொன்னார்கள். என்ன காரணம்?

பொதுவாக நம் எண்ணம் ஏற்கனவே போன பாதையில்தான் போகிறது. நம்முடைய கவனம் பழைய பாட்டையில்தான் செல்கிறது. அதைவிடுத்து வேறு விஷயங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றுவதே இல்லை. வாட்ச்சைப் பார்த்தால் மணி பார்க்க வேண்டும் என்று மட்டும்தான் தோன்றுகிறதே தவிர, வேறு வகையில் அதை கவனிக்கலாமே என்று தோன்றுவதே இல்லை. நம்முடைய கான்சன்ட்ரேஷன் பலவீனமாக உள்ளதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நமக்கு ஆர்வமில்லாத விஷயங்களில் நமது கவனம் செல்வதே இல்லை. எது நமக்குப் பிடித்தமானதோ, நமக்கு எது தேவை என்று நாம் நினைக்கிறோமோ அதில் மட்டுமே நம் கவனம் செல்கிறது. நம் மனம் தானாகவே குவிகிறது. தான் பெற்ற குழந்தை லேசாக அசைந்தாலும் தூங்கிக்கொண்டிருக்கும் தாய் உடனே எழுந்து குழந்தையைக் கவனிப்பாள். ஆனால் பக்கத்துத் தெருவில் இடி விழுந்த சப்தம் அவளுக்கு கேட்காமலே போயிருக்கலாம்!

 இந்த மாதிரியான கான்சன்ட்ரேஷன்தான் நம்மிடம் உள்ளது. இதுதான் மிருக கான்சன்ட்ரேஷன். Involuntary concentration என்று இதற்குப் பெயர். இது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனென்றால், பொதுவாக நமக்கு எதிலெல்லாம் ஆர்வம் இயற்கையாகவே இருக்கிறதோ, அதெல்லாம் நமக்கு அனேகமாக தேவையில்லாததாகத்தான் இருக்கும்! எப்படி? பொதுவாக மாணவர்கள் என்றால் அவர்களுக்கு  எதிலெல்லாம் ஆர்வம் இருக்கும்? அரட்டை, சினிமா, இண்டர்நெட், முகப்புத்தம், அமலாபால் — இன்னபிறவில். இந்த ஆர்வம் பாடத்தில் ஏன் இருப்பதில்லை. ஏனென்றால் பாடம் மிகவும் அவசியமானது, முக்கியமானது!

ஆனால் நமக்கு இருக்க வேண்டியதோ voluntary concentration மட்டுமே. நமக்கு வெற்றியைக் கொடுக்கவல்லது அதுதான். நமக்கு எது தேவையோ, எது அவசியமோ, அதில் வேண்டுமென்றே ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதுதான் வாலுண்டரி கான்சன்ட்ரேஷன். வேண்டுமென்றே முழு கவனத்தையும் அதில் வைப்பது. அதனால் என்ன பலன்? அர்ஜுனனைக் கேட்கலாம் வாருங்கள்.

“அர்ஜுனா, மரம் தெரிகிறதா?” என்று கேட்டார் த்ரோனாச்சார்யா.

“இல்லை குருவே”

“கிளைகள் தெரிகின்றனவா?”

“இல்லை குருவே”

“பறவையாவது தெரிகிறதா?”

“இல்லை குருவே”

பறவையின் கண்களைக் குறிவைத்து அம்பெய்வதுதானே போட்டி? பறவையே தெரியவில்லை என்கிறானே என்று த்ரோணாச்சாரியாருக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட  இருந்தது.

“பின் என்ன தெரிகிறது அர்ஜுனா?” என்று கேட்டார்.

“பறவையின் கண்கள் மட்டும் தெரிகின்றன ஐயா”

ஆஹா, இவனல்லவா மாணவன்! இதுவல்லவோ பரிபூரண மன ஓர்மை! த்ரோனாச்சாரியார் வியந்து மகிழ்ந்தார். ஒரு புள்ளியில் மனதைக் குவிப்பது என்றால் இதுதான்.  உண்மையில் ’கான்சன்ட்ரேஷன்’ என்ற சொல்லின் அர்த்தமே அதுதான். ’கான்’(ற்கு), ’செண்ட்ரம்’(மையம்) ஆகிய இரண்டு லத்தீன் மொழிச்சொற்களிலிலிருந்து ’கான்சன்ட்ரேஷன்’  வருகிறது. அதன் பொருள்: “மையத்தில் நிலைத்திருத்தல்” என்பதுதான். டோட்டல் கான்சன்ட்ரேஷன் பற்றிய முக்கியமான மஹாபாரதப் பாடம் இது. அர்ஜுனனின் வெற்றிக்குப் பின்னால் இருந்தது இதுதான். தாமஸ் ஆல்வா எடிசன் தன் பெயரையே மறந்து நின்றதற்குக் காரணமும் இதுதான். அதுதான் Voluntary Total Concentration. பெருவெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஆற்றல் இதுதான். நமக்கு ஆர்வமிருந்தாலும் இல்லாவிட்டாலும், நமக்கு அவசியமான ஒன்றில் வேண்டுமென்றே மனதை வைக்கும் காரியம்தான் இது. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது இதுதான்.  

வேதங்களையும், மூன்றுலட்சம் ஸ்லோகங்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் மஹாபாரத காப்பியத்தையும் அந்தக்காலத்தில் மனப்பாடமாக வைத்திருந்தார்கள்.  முழுக்குரானையும் மனனம் செய்யும் முஸ்லிம்கள் இன்றும் ஊருக்கு ஊர் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். திருக்குறளைச் சொல்வது, முதுகில் போடப்படும் அரிசியின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்துக்கொள்வது, சொல்லப்பட்ட சந்தத்துக்கு உடனே வெண்பா சொல்வது போன்ற நூறு காரியங்களை ஒன்றுகூட பிசகாமல், ஏககாலத்தில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் செய்து சாதனை நிகழ்த்தினார்.

விடாக் (Vidocq) என்றொரு ஃப்ரெஞ்சு துப்பறியும் நிபுணர் இருந்தார். உலகின் முதல் ப்ரைவேட் துப்பறியும் நிபுணர் அவர்தான் என்று கூறுகிறார்கள். அவருக்கு அழிக்கமுடியாத நினைவாற்றல் (photographic memory) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் குற்றவாளியாக இருந்த அவர் பின்னாளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நிபுணரானார். அடிக்கடி சிறைச்சாலைக்குச் சென்று குற்றவாளிகளின் முகங்களை உற்று கவனித்து நினைவில் வைத்துக்கொள்வாராம். இதன் பலனாக இருபது ஆண்டுகளாக மாறு வேஷத்தில், வெளிநாட்டில் மறைந்து வாழ்ந்த ஒரு குற்றவாளியை தெருவில் கண்டவுடன் கண்டுபிடித்துப் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தது உலகப் புகழ்பெற்ற நிகழ்வாகும்.

பென் ஜான்சன் என்ற ஆங்கில எழுத்தாளர் தான் எழுதிய கவிதைகள், நாடகங்கள் அனைத்தையும் இம்மி பிசகாமல் மனப்பாடமாகச் சொன்னார். சாக்ரடீஸ் தனது வகுப்புக்கு வரும் எல்லா மாணவர்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருந்தார். ஒரு ஆண்டில் அவர் ஆயிரக்கணக்கான வகுப்புகளை நடத்தினார்!

அலக்ரி என்றொரு இத்தாலிய இசைமேதை இருந்தார். அவருடைய ”மிசரரெ” என்ற இசைப்பாடல்கள் மிகப்பிரபலமானவை. அவை நிரந்தரமாக வாட்டிகன் நகரத்தில் இருக்கும் சிஸ்டைன் சாப்பல் என்ற தேவாலயத்தில் தினசரி இசைக்கப்பட்டு வந்தன. இசைமேதை மொசார்ட்டுக்கு பதினான்கு வயதிருந்தபோது ரோம்நாட்டில் வாட்டிகன் நகரில் இருந்த சிஸ்டைன் சாப்பலுக்கு அவர் சென்றார். அங்கே அலெக்ரியின் இசை இசைக்கப்பட்டது. இசைக்குறிப்புகளை யாரும் பிரதி எடுத்துக்கொள்ள அங்கே அனுமதி கொடுப்பதில்லை. கேட்க மட்டும்தான் முடியும். ஆனால் மொசார்ட் அந்த இசையை உன்னிப்பாகக் கேட்டு, வீட்டுக்கு வந்த பிறகு அட்சரம் பிசகாமல் அப்படியே அந்த இசைக்குறிப்புகளை, ஸ்வரங்கள் உட்பட எழுதிவிட்டார்!

ஒரு மனிதனுடைய பெயரைக் கேட்டவுடன் நெப்போலியன் சும்மா இருக்க மாட்டார். உடனே அதை ஒரு தாளில் எழுதிப் பார்த்துக் கொள்வார். இப்படி வேண்டுமென்றே திணிக்கப்பட்ட ஆர்வமுடன் செயல்பட்டதால்தான் தனது படையில் இருந்த லட்சக்கணக்கான வீரர்களின் பெயர்களையெல்லாம் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது!

எதையுமே திணிப்பது செயற்கையில்லையா? தப்பில்லையா? என்ற கேள்விகள் வரலாம். தப்பே இல்லை. அவசியமென்றால், எதையும் திணிக்கலாம். உடம்பு சரியில்லை என்றால் கசப்பான மருந்தை விழுங்கித்தான் ஆகவேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். குறிப்பிட்டதொரு நல்ல நோக்கத்துக்காக நாமாக எதைச் செய்தாலும் தப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படிச் செய்வதுதான் சரியுமாகும்.

மேலே பார்த்ததுபோல இந்த உலகில் சாதனை செய்த அனைவரும் தாமாகவே தன் மனதை ஒரு புள்ளியில் வைக்கப் பழகிக்கொண்டவர்கள். அவர்கள் வாலுண்டரி கான்சன்ட்ரேஷனுக்குச் சொந்தக்காரர்கள்.

அப்படியானால் இந்தவகையான கான்சன்ட்ரேஷனை வளர்ப்பது எப்படி?

===

 

                                                

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s