மந்திரச் சாவி – 14

மந்திரச் சாவி – 14

நாகூர் ரூமி

பிடிமானம் எதுவும் இல்லாமல் நடக்கக் கற்றுக்கொள்ளும் சின்னக் குழந்தைகள் என்ன செய்யும் என்று கவனித்திருக்கிறீர்களா? நடக்கும், கீழே விழும், எழும், நடக்கும், கீழே விழும், மீண்டும் எழுந்து நடக்கும், மீண்டும் கீழே விழும், மீண்டும் எழுந்து நடக்கும். இப்படியே செய்துகொண்டே இருக்கும். எத்தனைமுறை விழுகிறோம் என்பதைக் கணக்கில் வைக்கக்கூடாது. எத்தனைமுறை எழுகிறோம் என்பதைத்தான் கணக்கில் வைக்கவேண்டும். பாலகர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம் இதுதான்!

அந்த இளம் பெண்ணின் பெயர் மாலி. சீன நடனமாது. நாட்டியத்தின் மூலமாகவே கதை சொல்லும் பாலட் நடனக்கலைஞி. வயது பத்தொன்பதுதான். ஆனால் அந்த முக்கியமான இளம்வயதில் ஒரு கார்விபத்தில் வலதுகையை இழந்திருந்தாள். கையில்லையென்பதால் காதலனும் விட்டுப்போனான். தற்கொலைக்கு முயன்ற அவளை அவளது பெற்றோர்தான் காப்பாற்றினர். அதன்பிறகுதான் வாழ்க்கையின் சவால்களை ஏற்றுக்கொள்ள அவள் முடிவுசெய்தாள். தன்கையே தனக்குதவி என, எழுத, சமைக்க, துவைக்க என்று எல்லாவற்றையும் இடது கையாலேயே செய்ய அவள் கற்றுக்கொண்டாள். அதுமட்டுமா?

அவளுடைய கனவு, வெறி எல்லாம் நடனமல்லவா? ஐந்து ஆண்டுகள் கழித்து அவள் மீண்டும் நடனமாடத் தொடங்கினாள். அவளும் அவளுடைய ஆத்ம தோழனாக அமைந்த தாவோ என்பவனும் இணைந்து பல நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். பின் சார்ஸ் நோய் சீனாவில் பரவியதால் நடனஅரங்குகளெல்லாம் மூடப்பட்டன. பனி பெய்துகொண்டிருந்த ஓர் இரவில் சூரிய உதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, தீடீரென்று அவளுக்குத் தோன்றியது. இப்போது இந்தப் பனியில் ஆடினால் என்ன?

அவ்வளவுதான். ஆடினாள். கொட்டும் பனியில் தன்னை மறந்து ஆடினாள். அவளுடைய வாழ்நாளின் சிறப்பு நடனம் அதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று தாவோ தன் மனதில் குறித்துக்கொண்டான்.

2005 செப்டம்பரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சாய்சியாவே என்ற இளைஞனைச் சந்தித்தாள். நான்கு வயதில் ஒரு ட்ராக்டரில் இருந்து விழுந்து இடது காலை இழந்தவன் அவன். இருவரும் சேர்ந்து நடனமாடினால் அற்புதமாக இருக்கும் என்று அவனிடம் மாலி கூறினாள். வாழ்க்கையில் நடனம் பற்றி எதுவுமே அறியாத சாய்சியாவே முதலில் தயங்கினான். பின்னர் ஒத்துக்கொண்டான்.

சாய்சியாவேயும் மாலியும் இணைந்து மிகத்தீவிரமாகப் பயிற்சிசெய்தனர். பனி பெய்துகொண்டிருந்த இருளில் மாலி செய்த அதே சிறப்பு நடனப்பயிற்சி. காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோறு மணி வரை பயிற்சி தொடர்ந்தது. ஓராண்டு முழுக்க. நடனப்பயிற்சியின்போது ஓராயிரம் தடவைகளாவது சாய் அவளை தவறுதலாக கீழே போட்டிருப்பான்! ஆனால் சிசிடிவியின் நடனப்போட்டியில் கலந்துகொண்டு லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளைகொண்ட முதல் ஊனமுற்ற நடனக்கலைஞர்கள் இவர்கள்தான்! She without arm, he without leg என்று யூட்யூபில் சென்று பார்த்தால் அவர்கள் நிகழ்த்திய அற்புதமான, கண் கலங்கவைக்கும் நடனத்தைக் கண்டு களிக்கலாம். மாலி போன்ற நாட்டிய மயூரிகள் நம்நாட்டிலும் உண்டு.

மகன் ஆண்ட்ரூவின் தலைக்குள் ஏதோ பிரச்சனை. பெற்றோருக்கு ரொம்பக் கவலையாகிவிட்டது. ஆண்ட்ரூவை எப்படிக் காப்பாற்றுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவன் தலைக்குள் வந்த நோய் அவர்களுக்குப் பெரிய தலைவலியாகிவிட்டிருந்தது. இருக்கும் வீட்டைவிட்டு வாடகை குறைந்த வேறொரு வீட்டுக்குப் போகவேண்டிய நிலமைக்கு ஏற்கனவே செய்திருந்த மருத்துவச் செலவுகள் அவர்களைத் தள்ளியிருந்தன. இனி அதிகச் செலவுவைக்கும் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியாது. ஏதாவது அற்புதம்தான்  மகனைக் காப்பாற்றவேண்டும். இப்படியெல்லாம் பெற்றோர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுமி டெஸ்ஸுக்கு அப்போது வயது எட்டுதான்.

ஏதோ ஒரு உந்துதலில் தன் உண்டியலில் இருந்த காசையெல்லாம் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு மருந்துக்கடைக்குச் சென்றாள். “இதிலுள்ள காசையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்கு அற்புதம் வேண்டும். அது ஒன்றுதான் என் அண்ணனைக் காப்பாற்றும் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்கள்” என்றாள். அப்படி ஒரு மருந்து கிடையாது என்று கடைக்காரர்கள் சொல்லியும் அவள் விடுவதாக இல்லை.

அங்கே நின்றுகொண்டு அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் அவளிடம் பேச்சுக்கொடுத்து அவளுடன் அவள் வீட்டுக்குச்சென்று நிலமையை நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டார். பின்னர் அவள் அண்ணன் ஆண்ட்ரூவைக் காப்பாற்றினார். பணம் கொடுத்து அல்ல. பணமே இல்லாமல்! எப்படி? அவரே அறுவை சிகிச்சை செய்து! ஆமாம், ஏனெனில், அவர் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கார்ல்டன் ஆம்ஸ்ட்ராங்தான்! சென்னை ஐஐட்டி சார்பாக நடந்த ஒரு விழாவின்போது இந்தக் கதையை சொன்ன விப்ரோவின் சேர்மன் அஜிம் ப்ரேம்ஜிக்கு நன்றி சொல்லவேண்டும். அதிருக்கட்டும், அந்த மருந்துக்கடையில் டெஸ் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மிகச்சரியாக தேவைப்பட்ட டாக்டரைக் கொண்டுபோய் நிறுத்திய அற்புதம் எது?

ஆங்கில இலக்கிய நாடகாசிரியரும் மேதையுமான பெர்னார்ட்ஷா ஆரம்பத்தில் கதைகள், நாவல்கள் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தார். ஒன்றுகூட பிரசுரமாகவில்லை. எத்தனை ஆண்டுகள் அப்படிச் செய்துகொண்டிருந்தார் தெரியுமா? ஒன்பது ஆண்டுகள்! பொறுமையாளர்களோடு இறைவன் இருப்பதாகச் சொல்லும் திருக்குரான் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஒன்பது ஆண்டுகள் ஒரு மனிதன் விடாப்பிடியாக, பொறுமையோடு, மனம்தளராமல் இருந்திருப்பது என்னைப் பொறுத்தவரை உலக அதிசயங்களில் ஒன்று. கணையாழி பத்திரிகைக்கு ஒரு கதையை அனுப்பிவிட்டு அது பிரசுரமாகும் செய்தி தெரியவந்த ஆறு மாதங்களுக்குள் நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அந்த ஆறு மாதங்களில் அனுப்பிய கதையைத்தவிர கூடுதலாக ஒருவரிகூட என்னால் எழுத முடியவில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன் முயன்று முயன்று தோற்றது எத்தனை முறை தெரியுமா? பத்தாயிரம் தடவைகள்! நம்முடைய முயற்சிகளுக்கும் சாதனையாளர்களுடைய முயற்சிகளுக்கும் இருக்கு வித்தியாசம் இதுதான். வெற்றியாளர்கள் விட்டுவிடுவதில்லை. விட்டுவிடுபவர்கள் வெற்றி பெறுவதில்லை என்ற முதுமொழிதான் எவ்வளவு உண்மையானது!

மாலி-சாய்சியாவேயின் சாதனைக்குக் காரணம் என்ன? டெஸ்ஸின் தம்பியைக் காப்பாற்றிய அற்புதம் எது? பெர்னார்ட்ஷா, எடிசன் போன்றோரின் வெற்றிக்குக் காரணம் என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். மன உறுதி, விடாமுயற்சி. பிடிவாதம். இவைதான். எடுத்த காரியத்தை உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டதுதான் காரணம். பயிற்சிகளை வெற்றிகரமாகச் செய்வதற்கு இந்த பிடிவாதம், காலந்தவறாமை, பொறுமை எல்லாம் தேவை.

நான் ஆல்ஃபா தினாம் சொல்லிக்கொடுத்த சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டுமுறை ஆல்ஃபா தியானம் செய்யலாமா என்று. ஒருமுறைதான் செய்யவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிடுவேன். காரணம், அதிக ஆர்வம், அதிக வேகம் ஒருவிதமான பேராசையால் எழுவது. அதிகமான ஆர்வம் என்பது ஆர்வக் கோளாறு. தினமும் பத்துமுறை தண்டால் எடுத்தால் உடல் உறுதியாகும், அழகாகும் என்று சொன்னால், தினமும் ஐம்பதுமுறை எடுப்பார்கள். சீக்கிரமே உடல் உறுதியாகட்டும் என்று. ஆனால் அது பிரசவ வைராக்கியம் மாதிரியானதுதான். ஏனெனில் நாலைந்து நாட்களில் உடல்வலி பொறுக்க முடியாமல் ஒரு மாதத்துக்கு உடற்பயிற்சி செய்பவர்கள் இருக்கும் பக்கம்கூடத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். முன்னைவிட உடல் இன்னும் மோசமாகிவிடும்! வேளைக்கு ஒன்று என, மூன்று நாளைக்கு மாத்திரை சாப்பிடவேண்டும் என்று டாக்டர் சொன்னால் ஒரே நாளில் சாப்பிட்டு முடித்துவிட்டால் என்ன என்று யோசிப்போமா? மாட்டோமல்லவா? எல்லா விஷயங்களும் இப்படிப்பட்டவைதான்.

எதையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய வேண்டும். தினமும் செய்ய வேண்டும். விடாப்பிடியாகச் செய்ய வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் செய்ய வேண்டும். அதிக சந்தோஷத்தினால் அதிகமாகச் செய்தால், அச்சம் வரும்போது குறைவாகச் செய்வோம். அல்லது விட்டுவிடுவோம். இப்படி விடாப்பிடியாக தொடர்ந்து ஒரு காரியத்தைச் செய்து வந்தால்தான் இன்னொரு முக்கியமான தகுதி நமக்கு வரும். அது என்ன?

 

===

 

                                       

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to மந்திரச் சாவி – 14

 1. Prem says:

  ஒரு அருமையான கட்டுரை. 🙂

  “Every failure will teach you a lesson that you need to learn if you will keep your eyes and ears open and be willing to be taught. Every adversity is usually a blessing in disguise. Without reverses and temporary defeat, you would never know the sort of metal of which you are made” – Napoleon Hill, The Law of Success.

  பறவையின் தடங்களை தொடரும்
  – பிரேம்

 2. Murugan says:

  Thanks Rumi. It is always when you write something there is energy spreads and occupies us. You are guiding many of us with your wisdom. All the technique you teach us are simple once, we always have struggle in applying the simple once. The key I take out of this article is applying them consistently and make it as regular practice.

  with love

 3. mohamed ameen syed varusai says:

  நம்பிக்கை என்ற தகுதி இன்னும் ஆழமாக வரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s