மந்திரச்சாவி 15 — 18

குறிப்பு:

கல்கியில் எழுதி வந்த மந்திரச்சாவி தொடர் முடிந்துவிட்டது. இடையில் சில காரணங்களினால் உடனுக்குடன் பதிவிட முடியவில்லை. எனவே ஒட்டு மொத்தமாக இதோ. விரைவில் இது இன்னும் கொஞ்சம் விரிவாக நூலாக வெளி வர இருக்கிறது.

எனது ஆல்ஃபா தியானம் நூல் ஆங்கிலத்தில் Alpha Meditation: An Introduction என்ற தலைப்பில் The Sixth Sense Publications வெளியீடாக அழகான, பொருத்தமான  படங்களுடன் வெகு விரைவில் வெளிவர இருக்கிறது. உங்களுடைய அன்பும், வாசிப்பு ஆர்வமும் இன்னும் நிறைய நூல்கள் என் மூலமாக வெளிவர துணை நிற்கட்டும். இறையருளுடன்.

மந்திரச் சாவி – 15

 

ஓர் அழகான பெண் என்று உங்களிடம் சொன்னால் உங்களுக்கு யார் ஞாபகம் வரும்? ஒரு சினிமா நடிகை, ஒரு சீரியல் நடிகை – இப்படி யாராவதுதான், அல்லவா? நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் இது ஓகே. ஆனால் திருமணமானவராக இருந்தால் இது ரொம்பத் தப்பு என்கிறார்கள் மனைவிமார்கள்! (கணவன்மார்களும் இதே கதையைத்தான் திருப்பிச் சொல்கிறார்கள்)! இது ஒரு முக்கியமான பிரச்சனைதான். இதுபற்றி ”சினிமாவுக்குப்போன சித்தாளு” என்று ஜெயகாந்தன் ஒரு கதையே எழுதியிருக்கிறார். ஒரு நடிகரை நினைத்துக்கொண்டு அவர் உருவம் பதியப்பட்ட பனியனை அணிந்திருக்கும் கணவனின் நெஞ்சில் விழுந்து புரளும் சித்தாளு-மனைவி பற்றி! போகட்டும், இங்கே  நான் சொல்லவருவது அது பற்றியல்ல. ஆனால் அது தொடர்பானது.

ஒரு வார்த்தையைச்  சொன்னவுடன் நமக்கு அந்த வார்த்தை மனதில் தோன்றுவதில்லை. அந்த வார்த்தை எந்தப் பொருளைக் குறிக்கிறதோ, அந்தப் பொருள்தான் நம் மனதின் திரையில் தோன்றுகிறது. குழந்தை என்று சொன்னால், நமக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் நம் மனதில் விரியும். ஜனநாயகம், அழகு, அரசியல் என்று அரூபமான விஷயங்களைக் குறிப்பிடும் வார்த்தைகளைச் சொன்னாலும் அது தொடர்பாக நம் மனதில் பதிந்த காட்சிகள்தான் உடனே நினைவுக்கு வரும். ’ஜனநாயகம்’ என்று சொன்னவுடன், பெங்களூருவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலைபேசியில் நீலப்படம் பார்த்தது நினைவுக்கு வரலாம். ’அரசியல்’ என்று சொன்னவுடன் ஒலிபெருக்கியைப் பிடுங்கி அடிக்க வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் நினைவுக்கு வரலாம். 

வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் வார்த்தைகளில் சிந்திப்பதில்லை. காட்சிகள் வழியாகத்தான் சிந்திக்கிறான் என்று சொல்லலாம். சொல்லலாம் என்ன, சொல்ல வேண்டும், ஏனெனில் அதுதான் உலகளாவிய, காலம் கடந்த, மொழி கடந்த, ஜாதி, இனம் என்று எல்லாவற்றையும் கடந்த, எல்லாருக்குமான உண்மையாக இருக்கிறது. எதையும் காட்சிப்படுத்திப் பார்க்கும் இந்த ஆற்றல் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை வரமாகும். ஆங்கிலத்தில் இதை visualization என்று கூறுகிறார்கள். இந்த உண்மையை, இந்த நன்மையை நாம் அனைவரும் நமது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் சோகமே.

ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெருவெற்றி பெற்ற, சாதனை படைத்த யாருடைய வாழ்விலும் இந்த காட்சிப்படுத்திப் பார்க்கும் பண்பு பெரும் பங்கு வகித்திருப்பது புரியும்.

அவர் பெயர் மோரிஸ் குட்மேன் (Morris Goodman). பெயருக்கேற்றாற்போல் நல்ல மனிதர். ஒரு இன்ஷூரன்ஸ் கம்பனியின் ஏஜண்டாக வேலை பார்த்து வந்தார். நல்ல வருமானம். பணம், புகழ் எல்லாம் கிடைத்தது. கூடவே சொந்தமாக ஒரு விமானமும். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. ஏதோ ஒரு இடத்தில் இறங்கும்போது அது விபத்துக்குள்ளானது. அது மோரிஸின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கழுத்தெலும்பு இரண்டு இடங்களில் உடைந்து போனது. முதுகுத்தண்டு முற்றிலுமாக நசுங்கிப்போனது. அவருடை சிறுநீரகம், குடல்கள், வயிறு, உதரவிதானம் எல்லாமே செயலற்றுப்போயின. அவரால் சாப்பிடவோ, குடிக்கவோ, பேசவோ முடியாது. உயிர் மட்டும் மீதியுள்ள பிணம்போல அவர் மருத்துவமனையில் கிடந்தார். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் இரண்டு காரியங்கள்தான்.   வேண்டும் என்றால் ஒரு முறையும், வேண்டாமென்றால் இரண்டு முறையும் கண்களை மூடித்திறப்பார். அவ்வளவுதான் அவரது இயக்கம்.

ஆனால் அந்த சூழ்நிலையிலும் அவருக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்திருந்தது. ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பதுதான் அது. As a man thinketh என்ற பைபிள் வாசகம் பிரபலமானது. எனவே அவரும் நினைக்க ஆரம்பித்தார். காட்சி வடிவத்தில். நமக்கிருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கலாம் என்ற முடிவோடு.

அவரது முதல் முயற்சி தன் மீது பொருத்தியிருக்கும் வெண்டிலேட்டரை எடுத்துவிட்டு இயற்கையாக மூச்சு விடுவதுதான். அதற்கான முதல் முயற்சியாக கொஞ்சம் காற்றை அந்த யந்திரம் மூலம் உறிஞ்சி உள்ளே இழுக்க முயன்றார். அப்படி அவர் ஒவ்வொரு முறை முயன்றபோதும் அவரது நுரையீரம் எதிலோ போய் இடித்து கடுமையான வேதனை கொடுத்தது. என்றாலும் அவர் விடவில்லை. கடுமையாக முயன்று நூறு முறை மூச்சு விட்டார். பிறகு 200 முறை, பிறகு 300 முறை! அப்படிச் செய்தபோது அவரது நுரையீரல் மூன்று மடங்கு பெரிதானது! வெண்டிலேட்டரை மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படி அவரால் மூச்சுவிட முடிந்தது என்ற அதிசயம் மட்டும் அவர்களுக்குப் புரியவே இல்லை.

அவரது அடுத்த ப்ராஜக்ட் கிறிஸ்துமஸுக்கு முன் எழுந்து நடப்பதுதான்! அதற்காக அவர் தினமும் செய்தது ஒன்றுதான். நடப்பது மாதிரி கற்பனை செய்தார். ஆனால் அவர் காட்சி வடிவத்தில் நினைத்தது போலவே அடுத்த கிறிஸ்துமஸில் அவர் எழுந்து நடமாடவும் செய்தார்! டயஃப்ரம் எனப்படும் அவரது உதரவிதானம் முழுமையாக கெட்டுக் கிடந்ததால், தனது மன உறுதியின் மூலமும், காட்சிப்படுத்துதலின் மூலமும் அதற்கு பதிலாக தன் வயிற்றுத் தசையை அவர் பயன்படுத்தினார்! இப்படி இந்த உலகில் செய்ய முடிந்த ஒரே மனிதர் இவர்தானாம்! ஒரு வாக்கியத்தைப் பேச அவருக்கு இரண்டு ஆண்டுகளானது. ஆனால் பிடிவாதமாக, காட்சிப்படுத்திப் பார்த்தலின் மூலமாக மட்டுமே குணமடைந்த இவர் ”அற்புத மனிதர்” என்று மிகச்சரியாக வர்ணிக்கப்படுகிறார்.

”தளபதி” திரைப்படத்தில் மம்மூட்டி கடுமையாக வெட்டுப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். அவரைப் பார்த்துவிட்டு வரும் அவரது தளபதி ரஜினி, அவர் மனைவி கீதாவிடம் போய், தேவா பிழைத்துக்கொள்வார் என்று கூறுவார். டாக்டர் சொன்னாரா என்று மனைவி கீதா கேட்பார். அதற்கு ரஜினி, “இல்லை, அவனே சொன்னான்” என்று சொல்வார். அதைக்கேட்ட ஆடியன்ஸ் சிரித்தார்கள். ஆனால் அது சிந்திக்க வேண்டிய அற்புதமான வசனம். ஏனெனில், டாக்டர் என்ன நினைக்கிறார் என்பது முக்கியமல்ல. நோயாளி என்ன நினைக்கிறார் என்பதுதான் அவரைக் காப்பாற்றப் போதுமான மருந்துமாகவும் சிகிச்சையாகவும் இருக்கிறது. எண்ணம்தான் வாழ்வு. இன்னும் சரியாகச் சொன்னால், காட்சி ரீதியான எண்ணம்தாம் வாழ்வாக மலர்கிறது.

கூடைப்பந்து மேதை மைக்கேல் ஜோர்டான் உடலை இரண்டு முறை முழுமையாக 720 டிகிரி திருப்பி பின்பு பந்தை கூடைக்குள் செலுத்தி ’கோல்’ போடுவார். அவர் கையில் பந்து போய்விட்டதென்றால் அடுத்தது ’கோல்’தான். தினசரி, அடிக்கடி, பந்து கோலில் விழுவது போன்ற காட்சியை தன் மனத்திரையில் பார்த்ததுதான் அவரது அபார விளையாட்டின் ரகசியமாக உள்ளது.

கால்ஃப் பந்து விளையாட்டில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் டைகர் உட்ஸ் என்பவர் பயன்படுத்தியதும் இந்த உத்திதான். பந்து எங்கே போய், எந்தக் குழியில் விழ வேண்டுமோ அதில் விழுவதாக அவர் அடிக்கடி கற்பனை செய்வார்.

ஹாலிவுட் நடிகர் ஜிம்கேரி ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால் அவர் ஒரு வித்தியாசமான காரியம் செய்தார். 1995ம் ஆண்டு நன்றி செலுத்தும் நாளில் தேதியிட்டு, பத்து மில்லியன் டாலர்களுக்கான காசோலையை அவருக்கு அவரே கொடுத்துக்கொண்டார்! தன் பைக்குள் வைத்திருந்த அந்த காசோலையை எடுத்து அவர் அடிக்கடி பார்த்துக்கொண்டார். ஆனால் நன்றி செலுத்தும் நாளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக பத்து மில்லியன் டாலர்கள் சம்பளம் கிடைத்தது! அதன் பிறகு 20 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெறுமளவு அவர் பெரிய நடிகரானது வேறு விஷயம்.

எதை நாம் காட்சி ரீதியான மனதில் அடிக்கடி ஓட்டுகிறோமோ அதுதான் நடக்கிறது. விரைவாகவோ தாமதமாகவோ. நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். விடாப்பிடியாக ஒரு காரியத்தைத் தொடர்ந்து நாம் செய்து வரும்போது, நமக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் காட்சிப்படுத்தும் திறமையும் வேகமாக வளரும்.  ஆனால் அதற்கு சில மனத்தடைகளைத் தாண்டி வந்தாக வேண்டும்.

===

மந்திரச் சாவி – 16


அந்தச் சிறுவனுக்கு ஒன்பது வயதிருக்கும். ஆனால் பேச்சு சரியாக வரவில்லை. பெற்றோர்களுக்கு ரொம்ப பயமாகிப் போனது. பையனுக்கு டிஸ்லெக்சியா என்ற வியாதி வந்திருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டது. டிஸ்லெக்சியா என்பது உண்மையான வியாதிதான். பாண்டியராஜன் சொல்லும் ’இஸ்துமேனியா கலக்கலேசியா’ போன்றதல்ல. எழுத்துக்கூட்டி வாசிக்கும் திறன் குறைவை அந்த வியாதி குறிக்கிறது.

ஆக, ஒன்பது வயதாகியும் பையனுக்கு பேச்சு சரியாக வரவில்லை. எழுத்துக்கூட்டி வாசிப்பதில் சிரமம் இருந்தது. என்றாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்றுதானே பெற்றோர்கள் நினைப்பார்கள்? பையனின் தந்தை ஹெர்மனும் அப்படித்தான் நினைத்தார். ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியரிடம் கூட்டிப்போய், “என்ன படிக்க வைத்தால் இவனுக்கு நல்லது?” என்று கேட்டார். அதற்கு அந்த தலைமை ஆசிரியர் என்ன சொன்னார் தெரியுமா?

“ம்ஹும், எது படிக்க வைத்தாலும் பிரயோஜனமில்லை. இவன் எதிலுமே உருப்படப் போவதில்லை” என்றார்!

உருப்பட வாய்ப்பே இல்லை என்று அவமானப்படுத்தப்பட்ட அந்தப் பையன் யார் தெரியுமா? வேறு யாருமல்ல, மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன்! தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசிரியர்கூட இதே மாதிரிதான் அவரைப் பற்றிச் சொன்னார். இசைமேதை பீத்தோவனையும் அவரது இசையாசிரியர் இப்படித்தான் திட்டினார். ”திறமை இல்லை” என்பதற்காக உயர்நிலைப்பள்ளி கூடைப்பந்தாட்டக் குழுவிலிருந்து மைக்கேல் ஜோர்டான் நீக்கப்பட்டார். பிற்காலத்தில் கூடைப்பந்தாட்டத்தில் ஒரு மேதையென வர்ணிக்கப்பட்டவர்! மரியாதைக்குரிய ஆசிரியர்களிடம் அவமானப்படும் மாணவர்கள் பிற்காலத்தில் மேதைகளாகும் வாய்ப்பு உண்டு என்று இதிலிருந்து தெரிகிறது!

அவள் ஒரு திருமணமான பெண்.  ஆனால் கணவர் அவளோடு இல்லை. மகள் மட்டும் உண்டு. வசதி இல்லை. ஆதரவாக இருந்த அம்மாவும் இறந்துபோனார். அந்தப் பெண்ணுக்கு நன்றாகத் தெரிந்ததெல்லாம் கதை எழுதுவதுதான். அதுவும் குழந்தைகளுக்கான கதை. அவளிடம் ஒரு ஹைதர் காலத்து டைப்ரைட்டர் இருந்தது. அதை எப்படியோ தள்ளி, உருட்டி, என்னென்னவோ செய்து, குழந்தைகளுக்கான ஒரு ஃபேன்டஸி நாவலை எழுதி முடித்தாள். ஆனால் இங்கிலாந்தில் இருந்த எந்த பதிப்பகத்தாரும் அதனை சீண்டிப் பார்க்கவில்லை. பன்னிரண்டு பதிப்பகங்கள் அந்த நாவலை நூலாகக் கொண்டுவர முடியாது என்று மறுத்துவிட்டிருந்தன.

கடைசியில் இங்கிலாந்திலிருந்த ப்ளூம்ஸ்பரி என்ற ஒரு சின்ன பதிப்பகம் அதனை வெளியிட ஒத்துக்கொண்டு அவளுக்கு 1500 பவுண்டு அட்வான்ஸ் பணமும் கொடுத்தது. இப்படியெல்லாம் கஷ்டப்பட்ட அந்தப் பெண் எழுத்தாளர் யார் தெரியுமா? ஏழு பாகங்களாக வெளிவந்து உலகைக் கலக்கிய, லட்சக் கணக்கில், இல்லை இல்லை, கோடிக்கணக்கில் விற்றுத்தீர்ந்து புத்தக விற்பனை வரலாற்றில் சாதனைகள் படைத்த ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜெ.கெ.ரோலிங் என்பவர்தான்! இதுவரை அந்த நாவல் நாலு கோடிக்கும் மேலான பிரதிகள் விற்றுள்ளன! இங்கிலாந்தின் பன்னிரண்டாவது கோடீஸ்வரி என்று ரோலிங் அறியப்படுகிறார்! “நம்மிடத்தில் உள்ள அவசியமில்லாத அனைத்தையும் நீக்குவதற்குப் பெயர்தான் தோல்வி” என்கிறார் ரோலிங். எவ்வளவு அழகான, உண்மையான வார்த்தைகள்!

அவர் ஒரு அட்வகேட். அதுவும் லண்டனில் படித்த பாரிஸ்டர். ஆனால் இந்திய நாட்டுக்காரர். அப்துல்லா சேத் என்பவருடைய வழக்கை எடுத்து நடத்துவதற்காக தென் ஆப்பிரிக்கா போயிருந்தார். அது தொடர்பாக பிரிட்டோரியா என்ற ஊருக்கு அவர் ரயில் பயணம் செய்ய டிக்கட் எடுத்திருந்தார். முதல் வகுப்பில். ஆனால் மாரிட்ஸ்பர்க் என்ற ஊரில் அவர் இருந்த ரயில் பெட்டியில் ஏறிய ஒருவர் இவர் இந்தியர் என்று தெரிந்ததும் முகத்தைச் சுழித்து கோபமாக அங்கிருந்து போய் இரண்டொரு அதிகாரிகளை அழைத்துவந்தார். இந்தியர்கள் என்றால் கருப்பு நாய்கள் என்று அங்கே அர்த்தம். ஆனால் நமது வக்கீல் ஒன்றும் கருப்பல்ல. நல்ல சிவப்பு. ஆனாலும் இந்தியர் என்பதால் கருப்பு!

வந்த அதிகாரிகளில் ஒருவர் நமது வக்கீலை இறங்கி சரக்கு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னார்! எவ்வளவு கொழுப்பு பாருங்கள்!  ஆனால் என்னிடம் முதல் வகுப்புப் பயணத்துக்காக டிக்கட் இருக்கிறது என்று அப்பாவியாகச் சொன்னர் அந்த அட்வகேட்.

“அதைப்பற்றி அக்கறையில்லை. நீர் சரக்கு வண்டிக்குப் போகவேண்டும் என்று நான் கூறுகிறேன்” என்றார் அதிகார தொனியில்.

ஆனால் பெட்டியில் இருந்து தான் இறங்க முடியாது என்று அவர் சொன்னதும் போலீஸ்காரர் அழைத்துவரப்பட்டு, அவர் அட்வகேட்டின் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினார். கைப்பையை மாத்திரம் எடுத்துக்கொண்டு பிரயாணிகள் தங்குமிடத்தில் போய் உட்கார்ந்தார் அட்வகேட். தென்னாப்பிரிக்காவில் சாதாரணமாகவே சீதோஷ்ணம் 30 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். குளிர்காலத்தில் உறைநிலைக்கும் கீழே போகும். அட்வகேட் அமர்ந்திருந்த மாரிட்ஸ்பர்க் மிக உயரத்தில் இருந்ததாலும், அது குளிர்காலம் என்பதாலும், நள்ளிரவு என்பதாலும் குளிரில் அவர் உடல் பூராவும் தந்தியடித்துக்கொண்டிருந்தது.

ஒரு பாரிஸ்டருக்குக் கிடைத்த உச்சபட்ச அவமானம் அது. நடுங்கிக்கொண்டே அவர் யோசித்தார். நமக்கே இந்த கதி என்றால், இங்கு வாழும் சாதாரண, படிக்காத, கூலி வேலை பார்க்கும் ஏழை இந்தியர்களின் கதி என்னவாகும்? அந்த யோசனைதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது. அந்த அவமானம்தான் தேசத்துக்கு ஒரு தந்தையைக் கொடுத்தது. ஆம். அந்த அட்வகேட் வேறு யாருமல்ல. மகாத்மாதான்.

அவமானம், தோல்வி என்பதெல்லாம் ஒரு பூவின்மீது திராவகத்தை ஊற்றுவதைப் போன்றது. ஒரு மனிதனை அது உச்சிக்கும் கொண்டுசெல்லும், பாதாளத்துக்கும் கொண்டு செல்லும். ஆனால் கீழே போகின்றவர்கள்தான் அதிகம். அவமான ஏணியில் ஏறி  புகழின் உச்சியை, வெற்றியின் சிகரத்தை அடைபவர்கள் மிகக்குறைவு. ஆனால் வரலாற்றில் நம்மால் பார்க்க முடிகிற எல்லா சாதனையாளர்களுமே ஏதாவதொரு கட்டத்தில் தொடர்ந்த தோல்விகளையும், அவமானங்களையும் அனுபவித்தவர்கள்தான். ஆனால் அவர்கள் தாங்கள் கண்ட தோல்விகளையும் பட்ட அவமானங்களையும் எப்படி எடுத்துக்கொண்டார்கள் தெரியுமா? இந்த கதையைக் கேளுங்கள்.

ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. ஒரு விமானத்தின் சராசரி வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர்கள் இருக்கும். அப்போது அதைத் தாண்டிக்கொண்டு ஒரு ராக்கட் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றது. ராக்கட்டின் சராசரி வேகம் மணிக்கு 1700 மைல்கள் இருக்கும்.

“ஏன் இவ்வளவு அவசரம்? எதற்கு இப்படி பதறியடித்துக்கொண்டு போகிறாய்?” என்று ராக்கட்டைக் கேட்டது விமானம். அதற்கு ராக்கட் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“ம்ஹ்ம், உனக்கென்ன, எனக்கு மாதிரி உன் பின்னாடியும் யாராவது நெருப்பு வைத்திருந்தால் தெரியும்” என்றதாம் ராக்கட்!

சிரிப்பு வரவழைக்கும் இந்தக் கதையில் நமக்கான ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அவமானம், தோல்வி என்பதெல்லாம் நெருப்பு மாதிரி. அது எரிய எரியத்தான் நாம் ராக்கட் மாதிரி மேலே மேலே போய்க்கொண்டிருப்போம். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார். ஏன்? எதையும் தாங்கும் இதயம் ஒருவருக்கு உண்மையிலேயே வந்துவிட்டதென்றால் துன்பம், தோல்வி, அவமானம் என்று கருதப்படும் எல்லாமே அதனதன் தன்மையை இழந்துவிடும். மனத்தடைகள் நீங்கும்போதுதான் வரவேண்டியது வரும். கிடைக்க வேண்டியது கிடைக்கும். போக வேண்டியது போகும்.   

===

மந்திரச் சாவி – 17


அவளுக்கு பதினான்கு வயது. பெயர் மடில்டா க்ராப்ட்ரீ. அவளுடைய அம்மா, அப்பா வெளியில் சென்றிருந்தனர். அவளும் தோழிகளைப் பார்க்கச் சென்றிருந்தாள். வீட்டுக்கு அம்மாவும் அப்பாவும் திரும்பி வந்தபோது வீடு அமைதியாகத்தான் இருந்தது. மகள் நண்பர்களோடு இருப்பாள் என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் மடில்டா திரும்பி வந்தது அவர்களுக்குத் தெரியாது. தன் பெற்றோர்களை பயமுறுத்த மடில்டா விரும்பினாள். அறையைத் திறந்து அவர்கள் உள்ளே வந்தபோது எங்கோ ஒளிந்துகொண்டிருந்த அவள் தீடீரென எழுந்து “ப்பூ” என்று கத்தினாள்.

அவ்வளவுதான். யாரோ எதுவோ என்று நினைத்த அவள் தந்தை தன்வசமிருந்த .357 ரக பிஸ்டலால் மடில்டாவின் கழுத்தை நோக்கிச் சுட்டார். இது நடந்த பன்னிரண்டு மணி நேரம் கழித்து மகள் மடில்டா காப்பாற்ற முடியாமல் இறந்துபோனாள்.

இந்த நிகழ்ச்சியை தனது உலகப் புகழ் பெற்ற Emotional Intelligence என்ற நூலில் அதன் ஆசிரியர் டேனியல் கோல்மேன் குறிப்பிடுகிறார். கத்தியது தனது மகள்தான் என்ற உண்மை மூளைக்குள் பதிவாவதற்கு முன்பே அச்சம் அவள் தந்தையை ஆட்கொண்டு துப்பாக்கியின் விசையை அழுத்தவைத்திருந்தது. விசையை அழுத்திய அடுத்த கணத்திலேயே அய்யய்யோ அது மகளின் குரலாயிற்றே என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் பிரயோஜனமில்லை. மகளின் குரல்தான் என்று அறிவு புரிந்துகொண்டது. ஆனால் அச்சம் என்ற உணர்ச்சி முந்திக்கொண்டு விசையை அழுத்திவிட்டது. இப்படியாக உணர்ச்சிக்கும் அறிவுக்குமான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது மனித வாழ்வு.

”டேய், என்னையா அடிச்சே, நா சிங்கம்டா” என்று ஒவ்வொரு அடிக்கும் அழுதுகொண்டே காமடியன் கூறும் நகைச்சுவை வசனம் பழையை தமிழ்ப்படம் ஒன்றில் வரும். மூன்றாவதுமுறை அவன் வாயிலிருந்து வெளியாகும் “சிங்கம்” ரொம்ப கொழகொழத்து நசுங்கிப் போன மண்புழு போல வரும்! ”நா சிங்கம்டா” என்பது அறிவின் பேச்சு. ஆனால் அவன் கோழைத்தன உணர்ச்சியின் வெளிப்பாடு கண்ணீருடனான நா தழுதழுக்கும் பேச்சு.

“விழியே கதை எழுது” என்ற எம்ஜியார் படப்பாடல் மெட்டில் “மனமே பயம் எதற்கு” என்று ஒரு பாடல் எழுதப்பட்டு அதை என் தம்பி முதன் முறையாக மேடையேறிப் பாடியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. அவர் முதன் முறையாக மேடையேறிப் பாடிய பாடல் என்பதால் அவருக்கு நடுக்கமிருந்தது. கைகளை தொடைகளோடு பிணைத்துக்கொண்டு, நடுங்கும் உடலைக் காட்டிக்கொடுக்காமல், “பயம் எதற்கு” என்று அவர் பாடியது வாழ்வில் அங்கதச் சுவைகளில் ஒன்று!

அந்தப் பெண்ணின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து போய்விட்டார். முறையாக அல்ல. திடீரென்று கைகழுவி விட்டு. அப்பெண்மணி தன்னைக் கைவிட்டுப் போன கணவர் மீது மிகுந்த கோபமாக இருந்தார். நியாயம்தானே? “அவர் இல்லாவிட்டால் என்ன, என்னால் வாழ முடியாதா? இப்போதுதான் நான் மிகவும் சுந்திரமாக இருக்கிறேன். இனி என் திறமைகளையெல்லாம் இந்த உலகுக்கு நான் காட்டுவதற்கு எந்தத் தடையுமிருக்காது. என் மகளை நானே என் விருப்பப்படி வளர்ப்பேன்” என்று ஆக்ரோஷமாகக் கூறினார். ஆனால் அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் கண்கள் கலங்கி இருந்தன.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது, “எதிரில் வரும் தயிர்க்காரியின் மீது மோதாமல் ஓட்ட வேண்டும், மோதாமல் ஓட்டவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே, அல்லது சொல்லிக்கொண்டே போய் மிகச்சரியாக தயிர்ப்பானையின்மீது மோதி உடைத்த அனுபவம் நமக்கெல்லாம் இருக்கிறது. தயிர்ப்பானையாக இல்லாவிட்டால், அதையொத்த பிருஷ்டங்களாக இருக்கலாம். வித்தியாசம் அவ்வளவுதான். ஆனால் நம் அனைவருக்குமே இவ்வகை ’தயிர்ப்பானை’அனுபங்கள் நிச்சயமாய் வாய்த்திருக்கும். 

லூகி பிராண்டலோ என்று ஒரு இத்தாலிய நாடகாசிரியர், எழுத்தாளர் இருந்தார். 1934ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர். ”வார்” (போர்) என்று அவருடைய சிறுகதை ஒன்றில், போருக்குத் தன் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களெல்லாம் ரயில் பெட்டியில் அமர்ந்து கண்ணீர் மல்கத் தம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு முதியவர் திடீரென்று வீர வசனம் பேசுவார்.

”நான் என்னுடைய ஒரே மகனை போருக்கு அனுப்பியிருகிறேன். நம்மைவிட நம் நாடுதான் முக்கியம். அவன் போரில் இறந்துபோய்விட்டான். ஆனால் அவன் நாட்டுக்காக உயிரை விட்டிருக்கிறான். எப்படிச் சாக வேண்டுமோ அப்படிச் செத்திருக்கிறான். அதை நினைத்து நான் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, அழக்கூடாது” என்றெல்லாம் அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்தவர்களிடம் எடுத்துச் சொல்வார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தந்தை அவரிடம், “உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஆனால் எனக்கொரு சந்தேகம்.உங்கள் மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா?” என்று கேட்பார்.

அவ்வளவுதான். அந்தப் பெரியவர் ஒரு கைத்துண்டை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிப்பார். அத்துடன் கதை முடிகிறது.

இந்த உதாரணங்களெல்லாம் சொல்வது என்ன? மனிதன் இரண்டு வகையான ஆற்றல்களுக்கு மத்தியிலே சிக்கிக்கொண்டு வாழ்கிறான். ஒன்று அறிவு. இன்னொன்று உணர்ச்சி. ஒன்று தலை. இன்னொன்று இதயம். இதில் எது  அதிக ஆற்றல் மிக்கது என்றால் சந்தேகமில்லாமல் உணர்ச்சிதான். இந்தக் காரை ஏன் வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு, “அது அதிக மைலேஜ் தருகிறது” என்று பதில் சொன்னால்,  அறிவின் அடிப்படையில் அவர் செயல்பட்டதாக அர்த்தம். ஆனால், “அந்த ப்ராண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்”, “அந்தக் கலர் சூப்பர்” – இப்படி பதில் சொன்னால் உணர்ச்சியின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அர்த்தம்.

கார் என்ன, நமது வாழ்வின் மிகமிக முக்கியமான முடிவுகள் யாவுமே உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படுபவைதானே? காதல், கல்யாணம் இரண்டையும் எடுத்துக்கொண்டாலே போதும். காதலனுக்கு தன் காதலிதான் உலக அழகி. காதலில்லாதவன் அவளைப் பார்த்தால் அவள் சுமாரானவளாகவோ, ஏன் அசிங்கமானவளாகவோகூடத் தெரியலாம்.

லைலாவைவிட அழகிகளையெல்லாம் வரிசையாக நிறுத்தி, ”இவர்களில் ஒருத்தியை நீ தேர்ந்தெடுத்துக்கொள். ஆனால் லைலாலவை விட்டுவிடு” என்று மஜ்னூனிடம் சொன்னபோது அவன், “லைலாவைவிட அழகி இந்த உலகில் யாருமே இல்லை. இவர்களெல்லாம் லைலாவின் கால் தூசிக்குக்கூட வரமாட்டார்கள்” என்று சொன்னான்.

கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் அவனிடம் காட்டப்பட்ட பெண்கள் உண்மையிலேயே உலக அழகிகள். லைலா கறுப்பு வேறு. ஆனால் அப்பெண்களோ மூச்சுக்காற்று பட்டாலே ரத்தமாகச் சிவந்து போகும் நிறத்தைக் கொண்டவர்கள். அவர்களைப் பார்த்து மஜ்னூன் அப்படிச் சொன்னான். எப்படிச் சொல்கிறாய் என்று கேட்டதற்கு மஜ்னூன் ஒரு அழகான கேள்வியைக் கேட்டான்: “லைலாவை நீங்கள் என் கண்களால் பார்த்திருக்கிறீர்களா?”

ஆஹா அதுதான் காதல். அதுதான் உணர்ச்சியின் வெற்றி. ஒரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டார்கள். “உங்களைப் பார்க்கமலேயே திருமணம் செய்துகொண்டேனே நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் பார்த்தீர்களா? ” என்று மனைவி சொன்னாள். அதற்கு கணவன், “உன்னைப் பார்த்தும்கூட நான் உன்னையே திருமணம் செய்தேனே, நான் எவ்வளவு பெரிய தியாகி என்று புரிகிறதா?” என்றானாம்! உணர்ச்சி வேகத்தில் எதைச் செய்தாலும் பின்னாளில் அதற்காக நாம் வருத்தப்படத்தான் வேண்டிவரும்!

அப்படியானால் உணர்ச்சிய ஒழித்துவிடலாமா? அது முடியவே முடியாது. உணர்ச்சிதான் நம்முடைய உந்து சக்தி. அதுதான் நம்மை மேலே மேலே கொண்டு செல்லக்கூடிய ஒரே சக்தி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

========

மந்திரச் சாவி – 18


கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்பதை புத்தரின் போதனகள் உணர்த்திக்கொண்டிருந்தன. அதனால் ’தொழில்’ பாதிக்கப்பட்ட சிலர் புத்தரைப் பார்த்து வெகுவாக வசைபாடினார்கள். புத்தர் எப்போதும்போல அமைதியாக இருந்தார். ஆனால் சீடர்கள் கொதிப்படைந்தனர். குறிப்பாக பிரதம சீடரும் புத்தரின் உறவினருமான ஆனந்தர். புத்தர் ஏன் அமைதியாக அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார் என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை.

கடைசியில் புத்தர் பேசினார். “நான் இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டும். நீங்கள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டீர்களென்றால் நல்லது. ஆனால் ஏதேனும் பாக்கி இருந்தால் நான் திரும்பி இந்தப் பக்கமாகத்தான் வருவேன். அப்போது நீங்கள் அதை வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

வசைபாடியவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? புத்தர் தொடர்ந்தார், “இதேபோன்ற சூழ்நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தால் நீங்கள் ஒருவர்கூட உயிரோடு திரும்பிப் போயிருக்க சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் மிகவும் காலம்கடந்து வந்துவிட்டீர்கள். நீங்கள் செய்யும் எந்தக் காரியத்துக்கும் நான் எதிர்வினை ஆற்றவேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அது முடியாது. நான் சுதந்திரமானவன். என் விருப்பப்படிதான் நான் செயல்படுவேன். உங்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு என்னால் செயலாற்றிக்கொண்டிருக்க முடியாது” என்றார்.

அவர் விழித்துக்கொண்டவர். விடுதலை பெற்றவர். அவர் எந்த உணர்ச்சிக்கும் அடிமையாக மாட்டார். தனது லிம்பிக் சிஸ்டத்தையும், அமிக்டாலாவையும் நியோகார்டக்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அவரால் முடியும். என்ன இது என்கிறீர்களா? ஒன்றுமில்லை. எல்லாம் நமது மூளையின் பாகங்கள்தான்.

நியோகார்டக்ஸ் என்பது அறிவின் தலைமைப்பீடம். லிம்பிக் சிஸ்டம் என்பது உணர்ச்சியின் தலைநகரம். அங்கே உணர்ச்சித் துப்பாக்கி ஏந்தி அறிவைக் கேட்காமல் கொள்ளாமல் சகட்டு மேனிக்குச் சுட்டுத்தள்ளும் வீரர்கள்தான் இரண்டு அமிக்டாலா-க்கள்! ஒரு கணக்கு சொல்கிறேன். ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரத்தில் நமது அறிவு செயலாற்றும். ஆனால் நமது உணர்ச்சியோ ஒரு வினாடியில் 12000-த்தின் ஒரு பகுதியிலேயே செயலாற்றிவிடும்! உணர்ச்சி அமிக்டாலாக்களின் வேகம் அப்படி! மனிதர்கள் யாரும் அறிவுவசப்படுவதில்லை, ஆனால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். காரணம் இந்த எக்ஸ்ப்ரஸ் ரூட்-டின் வேகம்தான்.

புத்தர் மட்டுமல்ல. எல்லாக் காலத்திலும் தோன்றிய எல்லா மகான்களுமே இப்படித்தான் நடந்துகொண்டுள்ளார்கள். சிலுவையில் தன்னை அறைந்த மக்களுக்காக இயேசு பிரார்த்தனை செய்தார். “பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் என்ன செய்கிறோம் என்று இவர்கள் அறியவில்லை”. முஹம்மது நபிக்குக் கோபம் வரும். கண்கள் முகமெல்லாம் சிவந்து போகும். ஆனால் அவர் வாயிலிருந்து வந்த எந்த வார்த்தையும் யாரையும் காயப்படுத்தாது.

அவருடைய சிற்றப்பா ஹம்ஸா என்பவரை ஒரு போரில் வஹ்ஷி என்பவர் ஈட்டி எறிந்து கொன்றார். பின்னாளில் அந்த வஹ்ஷி முஸ்லிமான பிறகு தன் சிற்றப்பாவை அவர் கொன்ற விதத்தை அவரிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்ட முஹம்மது நபி, தயவு செய்து நான் வாழும் காலம் வரை என் கண் முன்னால் நீங்கள் வரவேண்டாம் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தார். தன் சிற்றப்பாவைக் கொன்ற கொலைகாரர்மீது அவர் காட்டிய கோபம் அதுதான்!

முஹம்மது நபியின் மருமகனான அலீ ஒரு போரில் ஈடுபட்டிருந்தார். எதிரியின் மீது ஏறி அமர்ந்து அவரைக் கொல்ல இருந்தார். அந்த நேரத்தில் அந்த எதிரி அலீயின் முகத்தில் காரி உமிழ்ந்தார். அவ்வளவுதான் வீரர் அலீ என்ன செய்தார் தெரியுமா? அவரைக் கொல்லாமல் அவர் மேலிருந்து கீழே இறங்கிக் கொண்டார்! ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அலீ கொடுத்த விளக்கம் அற்புதமானது.

“நாம் இருவரும் ஒரு கொள்கைக்காக போரிட்டுக்கொண்டிருக்கிறோம். நீ என் முகத்தில் காரி உமிழ்ந்ததால் எனக்கு உன்மீது பயங்கர கோபம் வந்துவிட்டது. இப்போது நான் உன்னைக் கொன்றால், அது என் தனிப்பட்ட கோபத்தின் விளைவாக நான் செய்த கொலையாக இருக்குமே தவிர கொள்கைப் போராக இருக்காது” என்று சொல்லி அவரை விட்டுவிட்டார்!

மகான்கள் உணர்ச்சியற்ற ஜடங்கள் அல்ல. அவர்களிடமும் நம்மிடம் இருப்பதைப் போலவே, ஏன் இன்னும் அதிகமாகவே, உணர்ச்சி இருந்தது. அவர்கள் அவ்வுணர்ச்சிகளை அவ்வப்போது காட்டத்தான் செய்தார்கள். ஆனால் எந்த நேரத்திலுமே அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை. இதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

உணர்ச்சியைக் காட்டுவது வேறு, உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியைக் காட்டலாம். ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது. காரணம், உணர்ச்சியைக் காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். உணர்ச்சிவசப்படாமல் உணர்ச்சியைக் காட்டுவதுதான் இமோஷனல் இண்டலிஜென்ஸ். அதாவது உணர்ச்சியோடு அறிவைக் கலப்பது.

ஒரு உணர்ச்சியை இல்லாமலாக்குவது அறிவார்ந்த செயலல்ல. காமம், கோபம், அச்சம் இப்படி எல்லா இயற்கையான உணர்ச்சிகளுக்கும் உரிய இடத்தைக் கொடுக்கவேண்டும்.  அதே சமயம் அவைகள் மடத்தைப் பிடுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

கோபம் இருக்கலாம். அது தார்மீக அடிப்படியில் அமைய வேண்டும். காந்தி அப்படித்தான் காட்டினார். வெள்ளையனே வெளியேறு என்று கோஷம் போட்டார். ஆனால் காவல்துறையினர் அடித்தால் வாங்கிக்கொண்டார். திருப்பி அடிக்கவில்லை. வன்முறைக்கு பதில் அஹிம்சை என்று அவர் முடிவு செய்திருந்தார். அந்த பரிசோதனையில் அவர் முழுவெற்றி பெற்றார். அவர் சொல்லுக்கு இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே அடிபணிந்தது. இன்று அப்படி ஒரு உண்மையான அகில இந்தியத் தலைவரை நம்மால் ஏன் காட்ட முடியவில்லை? காரணம் அவர் ஊருக்கு மட்டும் உபதேசிக்கவில்லை. சொன்னதை முதலில் அவர் செய்தார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் அவர் வாழ்நாள் முழுவதும் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார்.

கோபத்தைப்போலவே அச்சம் என்ற உணர்ச்சிக்கும் உரிய இடம்கொடுக்க வேண்டும். அச்சத்துக்கா என்று அஞ்ச வேண்டாம். நம்மைப் படைத்துப் பரிபாலித்துக் காக்கும் கடவுளுக்கு பயந்தால் போதுமானது. பயத்தை வைக்க மிக உயர்ந்த, சரியான இடம் அதுதான். இறைவனுக்கு உண்மையிலேயே மனிதன் அஞ்சினால், இந்த உலகில் அநியாயங்கள் நடக்க வாய்ப்பில்லை. வன்முறையும், வஞ்சமும் இவ்வுலகில் தலைவிரித்தாடுவதன் காரணம் மனிதர்களுக்கு உண்மையான  இறையச்சம் இல்லாமல் போனதுதான்.

காதலும் காமமும் வருகிறதா? அதற்கும் வடிகால் உண்டு. மும்பைக்குச் சென்று க்ராண்ட் ரோட்டுக்குப் போவதல்ல அதற்கு வழி. சட்டப்பூர்வமாக அதற்கு முறையான வடிகால் அமைத்துக் கொடுக்கவேண்டும். வேறுவார்த்தைகளில் சொன்னால், காதலையும், காமத்தையும் மனைவியிடம்தான் காண்பிக்க வேண்டும்.

உணர்ச்சியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சுலபமான காரியமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு மனைவி இரவில் கொஞ்சம் தாமதமாக வீடு திரும்பினாள். தனது படுக்கையறைக்குள் வந்தபோது போர்வைக்குள்ளிருந்து நான்கு கால்கள் தெரிந்தன. உடனே கோபமாக உள்ளே சென்று கிரிக்கட் மட்டையை எடுத்து வந்து கை வலிக்கும்வரை போடுபோடென்று போட்டுவிட்டு சமையல்கட்டுக்குச் சென்று ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பினாள். அவள் கணவன் நின்று கொண்டிருந்தான்!

“என்ன டியர், இன்னிக்கும் லேட்டா? உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க. நான்தான் நம்ம பெட்ரூம்லயே படுத்துக்கச் சொன்னேன். நீ அவங்களுக்கு ஹலோ சொன்னியா?” என்றான்!

நமது நிலையும் அந்த மனைவியைப் போன்றதுதான். என்றாலும் உணர்ச்சியோடு அறிவைக்கலக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நமது கனவுகள் நம்மை நோக்கி நகர்ந்து வரும்.

இதுவரை நான் எனக்குத் தெரிந்த பல உண்மைகளை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். பாரதியின் அற்புதமான வார்த்தைகளில் சொன்னால்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

மந்திரச்சாவியை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். தங்கச் சுரங்கத்தின் சாவி அது. அதுவும் தங்கத்தால் ஆனதென்பதால் சாவி மட்டும் போதும் என்று தூக்கிக்கொண்டு ஓடிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.   

அன்புடன்

நாகூர் ரூமி

========

                                       

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to மந்திரச்சாவி 15 — 18

 1. premzen says:

  Dear Rumi Sir,

  Please continue your writings for inspiring and motivating us.
  I realized that words has power only after reading your books and blogs.

  I heartily appreciate your good work..!!

  anbudan,
  Prem

 2. chenthuri says:

  it really nice plz continue

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s