மஹா பிரிவு

18.06.12 திங்கள் அதிகாலை அலைபேசி அழைத்தது. மணி பார்த்தேன். 3.25. அழைத்தது விமலா. டாக்டர் சாருவின் மகளைக் கவனித்துக்கொள்ளும் பெண். யாருக்காவது ஓதிப்பார்க்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொள்வதற்காக சாரு சார்பாக விமலா அவ்வப்போது பேசுவாள். ஆனால் அதிகாலை அந்த நேரத்தில்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் ஃபோனை எடுத்துப் பேசினேன்.

”சார், டாக்டருக்கு மூச்சு விட முடியலை சார், சௌந்தர் சார் உங்களை ப்ரே பண்ணச் சொன்னார்”

அனேகமாக சென்னை வீட்டிலிருந்துதான் பேசியிருப்பாள். சரி என்று சொல்லி வழக்கம்போல ஓதுவதைத் தொடங்கினேன். ஒரு நிமிஷம் சென்றிருக்கும். மறுபடியும் விமலா.

“சார், எறந்துட்டாங்களாம் சார்” என்று கதறிக்கொண்டே சொன்னாள்.

கொஞ்ச நேரம் என் உடம்பில் என்னவோ செய்தது. ஒன்றும் புரியவில்லை. டாக்டர் சாருமதி இறந்திருக்க வாய்ப்பில்லை. நாற்பதுகளில்தான் அவர் இருந்தார். ஆனால் அபரிமிதமான obesity காரணமாக அது தொடர்பான தொந்தரவுகள் அவருக்கு அடிக்கடி இருக்கத்தான் செய்தது. ’வீசிங்’, முதுகு வலி இப்படி இருக்கும். சமீபத்தில்கூட லிஃப்ட்டுக்குள் போகும்போது கால் பிசகி கீழே விழுந்து லேசான ஃப்ராக்ச்சர் ஆகியிருந்தது. தன் உடம்புக்காக என்ன ’ப்ரே’ பண்ணச் சொன்னதைவிட அடுத்தவர்களுக்காக என்னை உதவச் சொன்னதுதான் அதிகம். நிச்சயம் உயிர் போகும் அளவுக்கு அவருக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. விமலா ஏதோ தவறாகக் கூறுகிறாள்.

எவ்வளவுதான் நான் எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாலும் என் உடல் நடுங்குவதிலிருந்து என்னை என்னால் தடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை விமலா சொன்னது உண்மயாக இருந்தால்?

டாக்டர் சாருமதியும் அவர் கணவர் சௌந்தரும் எனக்கும் என் குடும்பத்துக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். குறிப்பாக டாக்டர் சாரு. சான்றோர் குப்பம் என்ற பகுதியில் நான் இருந்தபோது ஏற்பட்ட பழக்கம். சாரு பிராமணப் பெண். சௌந்தர் வேறு ஜாதி. பலவித தொல்லைகளைத் தாண்டிய காதல் திருமணம் அவர்களது.

சாரு எனக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று. அவரை மாதிரி ஒரு மனுஷியைப் பார்ப்பது அரிது. சான்றோர் குப்பத்தில் இருக்கும்போது நடு இரவில்கூட நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். அப்போதும் யாராவது கிராமத்து ஆட்கள் வந்து ரத்தக் காயங்களோடு நிற்பார்கள். அவர்களுக்கு வேண்டியதை அப்போதும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பார் சாரு.  ஆனால் விஷயம் அதுவல்ல. வருபவர்கள் காசு எதுவும் எடுத்து வரமாட்டார்கள்! அதோடு அவர்களுக்கு ட்ரீட்மண்ட் கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்க வேண்டிய மாத்திரை மருந்துகளுக்காக கொஞ்சம் பணமும் சாரு கொடுத்து அனுப்பும்!

”டாக்டர், நீங்க உருப்படவே மாட்டிங்க” என்று நான் சொன்னால், ஊரே அதிரும் அளவுக்கு ஒரு சிரிப்புதான் சாருவின் பதில்.

சாருவின் சிரிப்பு பிரபலம். சாருவின் உடல் பருமனை நான் பலவாறு கிண்டல் செய்வேன். என் குழந்தைகள் “டாக்டர் ஆண்ட்டி” என்று கூப்பிட்டால், நான் “வாங்க ட்ராக்டர் ஆண்ட்டி” என்று சொல்வேன். பிள்ளையார் பால் குடித்தார் என்று தினசரியில் செய்தி வந்தால், “என்ன டாக்டர், நேத்து நீங்க பால் குடிச்சிங்களாமே” என்று கேட்பேன். ஒரு சொம்பு நிறைய தயிர் செய்து வைத்திருக்கும். வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு அற்புதமான தயிர். அந்த சொம்பைக் காட்டி, “இது உங்க டம்ளரா” என்று கேட்பேன். எல்லாவற்றுக்கும் வாய்விட்டுச் சிரிக்கும். ரொம்ப சப்தமாக.

வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற முதுமொழி நிச்சயம் உண்மையில்லை. சாரு சிரித்த சிரிப்புக்கு அவருக்கு ஒரு சளி காய்ச்சல்கூட வந்திருக்கக் கூடாது. ஆனால் வரக்கூடாதெதெல்லாம் வந்துவிட்டதுதான் உண்மை.

சாருவுக்கு குழந்தை கிடையாது. நானே ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் வசந்தா சிவானந்தன் என்று அருமையான ஒரு கைனகாலஜிஸ்ட். அவரிடம் என் மனைவியை காட்டியிருப்பதால், டாக்டர் சாருவையும் அழைத்துச் சென்றேன். அவர் பரிசோதித்துவிட்டு, ஒரு கார்டியாலஜிஸ்ட் ஒபினியன் வேண்டுமென்று சொன்னார். அதற்காக, சாருவின் பேராசிரியராக இருந்த புகழ்பெற்ற ஒருவரிடம் சாருவே சென்றது. அவரும் பரிசோதித்துவிட்டு வேண்டாமென்று சொன்னாராம். அந்த உடல் பருமனுக்கு குழந்தை உண்டாகிக் கொண்டால் இதயம் தாங்காது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் சாரு ஆசையை விடுவதாக இல்லை. கடைசியில் தன் கணவரை சம்மதிக்க வைத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டெஸ்ட் ட்யூப் பேபியைப் பெற்றெடுத்தது. பெண் குழந்தை. அவளுக்குப் பேசுவதிலும் நேராக நிற்பதிலும் பிரச்சனை இருந்தது. அவளுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக கோயம்புத்தூர் போயிருந்தபோதுதான் விமலாவின் அலைபேசி அழைப்பு.

விமலா சொன்ன விஷயம் பற்றி சௌந்தரிடம் பேசுவதற்கு எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. என்றாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரை அழைத்தேன்.

அவர் கதறிக் கதறி அழுதுகொண்டே சொன்னதிலிருந்து சாரு இறந்துவிட்டது உறுதியானது. எதற்கெடுத்தாலும் அழும் என் மனைவி சாருவுக்கு என்னைவிட ஒருவகையில் நெருக்கம். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

நான் சாருவை ரொம்பக் கிண்டல் செய்திருக்கின்றேன். உரிமையாகத்தான். சாரு அற்புதமாக ஓவியங்கள் வரையும். எக்ஸ்ரே எடுத்த ஷீட்டின் பின்புறத்தில். அருமையாக சமைக்கும். அதன் கையால் சமைத்து நான் பல தடவைகள் வயிறாற உண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் சொல்வேன், “ஹும், எம்பிபிஎஸ் சரியா படிக்கலைன்னாலும், ஓவியம் வரையவும், சமைக்கவும், பாட்டுப் பாடவும் கற்று வைத்திருப்பது நல்லதுதான். பிற்காலத்தில் பொழப்புக்கு உதவுமல்லவா”. அதற்கும் அதிரும் சிரிப்புதான்.

சாரு சென்னைக்குச் சென்று மாதவரத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் செய்கின்ற சோனாலஜிஸ்ட் ஆக பணி புரிந்துகொண்டிருந்தது. ஒரு லட்சம் பேருக்கு மேல் வெற்றிகரமாக ஸ்கேன் செய்து முடித்திருந்தது. நோயை டயக்னோஸ் செய்வதிலும், பெர்ஃபக்ட்டாக ஸ்கேன் செய்து ரிபோர்ட் தருவதிலும் சாருவுக்கு நிகர் சாருதான். உடல் ரீதியான, மன ரீதியான, பண ரீதியான எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உடல் குலுங்க வாய்விட்டு சிரிப்பதையும், அடுத்தவருக்கு வலியச் சென்று உதவி செய்வதையும் விட்டுவிடவே இல்லை. என் மூத்த மகளின் பிரசவத்தின்போது முழு நேரமும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு கூடவே இருந்தது.

ஒரு நாள் எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். சௌந்தர்தான் பேசினார் என்று நினைக்கிறேன். சாருவுக்கு உடம்பு சரியில்லை என்றும், அப்போலோவில் தனியறையில் வைத்திருப்பதாகவும், நான் வந்து பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும் சொன்னார். அப்போது இரவு இரண்டு மணி இருக்கும். நான் உடனே என் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன்.

ஏதோ தவறான மாத்திரைகள் கொடுத்ததால் உடம்பு பூரா தடித்துத் தடித்து, அரித்து அரித்து, அதைச் சொரிந்து சொரிந்து புண்ணாகிவிட்டிருந்தது. நான் போய் உடம்பில் கை வைத்து இரண்டு நிமிடம் ஓதிப்பார்த்தேன். அதன் பிறகு, “ரஃபி என்ன செஞ்சிங்க?” என்று சாரு கேட்டது. ஏன் என்று கேட்டேன்.

“இப்ப அரிப்பே இல்லை. ஒடம்பு பூரா ஐஸ் வச்ச மாதிரி கூலாயிடுச்சு” என்றது.

“அதப்பத்தி இப்ப என்ன, சரியாயிடுச்சில்ல? மொதல்ல இங்கெருந்து கெளம்பி வீட்டுக்குப் போங்க” என்று சொன்னேன்.

அன்றிலிருந்து நான் ஓதிப்பார்ப்பதில் சாருவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அடிக்கடி ஃபோன் செய்து அவருக்கோ அவர் நண்பர்கள், தோழிகளுக்கோ ஓதிப்பார்க்கச் சொல்லும்.

சாரு இறந்து போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு ஃபோன் செய்து ஒரு 68 வயது அம்மாவுக்கு தலையில் ஏதோ ஆபரேஷன் நடக்க இருக்கிறதென்றும், அவருக்காக நான் ப்ரே பண்ண வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அவர் பெயரைச் சொன்னது. அதுதான் நான் சாருவின் குரலைக் கடைசியாகக் கேட்டது.

என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வர்மா ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்காக கோவை சென்று ஏதோ தவறான சிகிச்சையின் மூலம் அப்படி நடந்துவிட்டதோ என்று முதலில் நான் நினைத்தேன். குழந்தைக்காகத்தான் சென்றது என்றும்,  தங்கியிருந்த ’லாட்ஜ் சூட்’டில் இருந்த சமையலறையில் அன்று இரவு அனைவருக்கும் சாருவே சமைத்துக் கொடுத்தது என்றும்,  இரண்டு இரண்டரை மணிவரை டிவி பார்த்துக் கொண்டிருந்தது என்றும், பின்னர் படுத்தது என்றும், கொஞ்ச நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதற்கான உதவிகள் செய்தும் பலனில்லை என்றும், வாயிலும் மூக்கிலும் நுரை தள்ள சாய்ந்துவிட்டது என்றும், ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரமாகிவிட்டது என்றும், பருத்த உடம்பாக இருந்ததால், டக்கென்று இறங்கி கீழே போகமுடிவதோ, அல்லது தூக்கிக் கொண்டு போவதோ சாத்தியமில்லை என்றும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதும், சாரு இறந்து கொஞ்ச நேரமாகிவிட்டது என்று தகவல் சொன்னதும் – எல்லாவற்றையும் சௌந்தரும் விமலாவும் அவ்வப்போது சொல்லச் சொல்ல எனக்கு விளங்கியது.

அது இறைவனின் அழைப்புதான். ஆனால் சின்ன வயதில். 45 அல்லது 46தான் இருக்கும். ஆனாலும் ஆம்பூரில் கொண்டு வந்து வைக்கப்பட்ட சாருவின் உடலைப் பார்த்து நான் அழுத அழுகை என் மகள்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்னை, என் மனைவியை, என் குழந்தைகளை, என் குடும்பத்தாரை, அனைவரையும் நேசித்த, அடுத்தவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மிகைத்த, சிரித்துக்கொண்டே பிரச்சனைகளை சமாளிக்கிற சாருவுக்கு கண்ணீரைத்தவிர வேறு எங்களால் என்ன தர முடியும்?

சாரு, உங்களின் பிரிவு ஒரு மஹா பிரிவு என்று நான் சொன்னால், சாரு நிச்சயம் தன் சிரிப்பால் சொர்க்கத்தை அதிர வைக்கும். சாருவின் மறுமை வாழ்க்கை சந்தோஷமாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

7 Responses to மஹா பிரிவு

 1. We are quite shocked and stunned to learn the sad and sudden demise of our lovely sister, Dr Charumathi was a unique human-being whom we ever met. I first met her sometime in 1986 or 1987 at my brother Nagore Rumi’s house in Ambur. When our Father was undergoing medical treatment in Chennai four years ago, she rendered excellent service voluntarily. In fact, she was the one who precisely diagnosed the exact disease of our Father. Our Father is no more. Dr Charu is also no more. On behalf of our family and myself, we convey our deepest sympathy and heart-felt condolences to Mr Sounder,his daughter and all the members of the bereaved family. We pray for the departed soul to rest in peace. With tears, Deen (Nagore Rumi’s younger brother from Singapore).

 2. அற்புதமான பெண்மணியை இழந்திருக்கிறோம். சௌந்தருக்கு என் அனுதாபங்களைச் சொல்லுங்கள்.

 3. mohamed ameen syed varusai says:

  please convey my condolence ot dr.charu’s family…. அவர் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை பிராத்திப்போம்…

 4. /சாருவின் மறுமை வாழ்க்கை சந்தோஷமாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்./ ஆமீன்.

  படித்தவுடன் கண்களும், உள்ளமும் கலங்கியது. அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் இறைவன் சாந்தியக்க இறைஞ்சுகின்றேன்.

 5. /சாருவின் மறுமை வாழ்க்கை சந்தோஷமாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்./ ஆமீன்.

  படித்தவுடன் கண்களும், உள்ளமும் கலங்கியது. அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் இறைவன் சாந்தியளிக்க இறைஞ்சுகின்றேன்.

 6. HBA says:

  //அதோடு அவர்களுக்கு ட்ரீட்மண்ட் கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்க வேண்டிய மாத்திரை மருந்துகளுக்காக கொஞ்சம் பணமும் சாரு கொடுத்து அனுப்பும்!

  ”டாக்டர், நீங்க உருப்படவே மாட்டிங்க” என்று நான் சொன்னால், ஊரே அதிரும் அளவுக்கு ஒரு சிரிப்புதான் சாருவின் பதில்.//

  இன்னும் உலகம் இயங்கி கொண்டிருக்கும், இவர்களை போல் உள்ளவர்கள் இருக்கும் வரை

 7. pnamdiqbal says:

  may allah accept her good deeds

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s