இந்த விநாடி பற்றி யுகபாரதி

சென்ற 13.09.12 அன்று ஆனந்த விகடனுக்காக நண்பர் யுகபாரதி பேசியபோது என் இந்த விநாடி நூல் பற்றிப் பேசினார். அதை இங்கே தருகிறேன். முகப்புத்தகத்தில் அதன் எம்பி3 கோப்பையும் இணைத்துள்ளேன். பாரதிக்கு என் நன்றிகள். இதைவிட சிறப்பான ஒரு விளம்பரத்தை எனக்கு இதுவரை யாரும் செய்யவில்லை!
Yugabharathi speaking about Indha Vinadi | Upload Music

ஆனந்த விகடன் வாசகர்களுக்கு இனிய வணக்கம். நான் யுகபாரதி பேசறேன். பொதுவாக புத்தக வாசிப்புங்கறது அருகிப் போயிடுச்சு, மருகிப் போயிடுச்சு, இப்ப இல்லாமலே போயிருச்சு அப்டீங்கற ஒரு செய்தியை எல்லோரும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சொல்லிக்கொண்டிருப்பவர்களே வாசிக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

இந்த சொல் ஏன் வந்தது? புத்தக வாசிப்பு ஏன் அருகிப் போனது? என்பதற்கும் நிறைய காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி இருக்கிறது, அல்லது கைபேசி இருக்கிறது, இணையதளத்திலே வாசிக்கிறார்கள்…இப்படி நிறைய காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தாலும், மிகச்சமீபத்தில் நான் வாசித்த, திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே  இருக்கக்கூடிய ஒரு புத்தகமாக மாறிப்போயிருக்கிற ஒரு நூல் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய “இந்த விநாடி” என்ற ஒரு புத்தகம்.

இது தன்னம்பிக்கைப் புத்தகம்தான். ஆனால் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் பொதுவாக நீங்கள் கஷ்டப் பட்டால் முன்னேறிவிடலாம், உளியால் செதுக்கப்பட்டால்தான் சிலையாக முடியும் இப்படியெல்லாம் வழக்கமாக சொல்லப்படும் செய்திகளோ அல்லது சாதாரனமான செய்திகளைச் சொல்லி, அவற்றின் மூலாஅக விஷயங்களை விளக்கக்கூடிய ஒரு நூல் அல்ல அது. அதன் மிக முக்கியான  விஷயம்  மனதை ஒழுங்குபடுத்தக்கூடிய முறைமைகளை அற்புதமாக அவர் எழுதியிருக்கிறார் என்பதுதான். அதையெல்லாம் தாண்டி, நாகூர் ரூமி மிகச்சிறந்த கவிஞர், மிகச்  சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதனால் ஒரு வாசகன் புத்தகத்தைப் படிக்கும்போது எவ்வளவு நுட்பமாகப் புரிந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நுட்பமான முறையிலே எளிய தமிழில் ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார்.

மிக  முக்கியமான புத்தகம் என்று இன்னும் கொஞ்ச காலத்தில் அது பேசப்படக்கூடும். காரணம் அதன் வடிவமைப்பு மட்டுமின்றி, அதில் வகைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களும் அவ்வளவு நன்றாக இருக்கிறது. ஒருங்குபடுத்தப்பட்ட ஓசைதான் இசை, ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைதான் கவிதை, ஒழுங்குபடுத்தப்பட்ட வண்ணங்கள்தான் ஓவியம், அதேபோல, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்கங்கள்தான் மனிதன். அப்படிப்பட்ட மனிதன் மனதைக் கட்டுப்படுத்த எத்தகையை விஷயங்களைப்  புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் முக்கியம்.

மனம் ஏன் அலைபாய்கிறது? அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும்? கண்களை மூடிக்கொண்டு அமரும்போது, தூரத்தில் கேட்கும் ஒரு பறவையின் ஒலி, ஒரு டிரான்சிஸ்டரின் ஓசை, இப்படிப் பல ஓசைகளைக் கேட்கிறோம். அப்போது நம்முடைய மனம் ஏதேதோ சிந்தனைகளில் சிதறும். தூரத்தில் கேட்கக்கூடிய மைனாவின் ஓசை உங்களுடைய சிறுவயது ஞாபகங்களைத் தூண்டலாம். மனம் அலைபாயாமல் அமைதியாகவும், பேரமைதியிலும் இருக்கும்போது உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை, ஆற்றல்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும். இப்படியான விஷயங்களெல்லாம் இப்புத்தகத்தில் இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், வீடு பெரிதாகும்போது மனது சின்னதாகிறது என்று ஓஷோ ஓரிடத்தில் கூறுகிறார். இதேபோன்ற பல  மனதைவிட்டு அகலாத பல விஷயங்கள் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. சிந்தனையை, மனதை ஒருமுகப்படுத்துவதற்குரிய உத்திகளையும் இதில்  அவர் சொல்லியிருக்கிறார். இதை இந்த புத்தகத்தின் சிறப்பாக  நான் கருதுகிறேன்.

இதல்லாமல், இப்புத்தகத்தின் அடுக்குகளில் பல விஷயங்களை ஒவ்வொன்றாக அவர் விளக்குறார். உதாரணமாக ஞாபக சக்தி. அது உங்களுக்கு என்னென்ன தரும்? மறதியின் மூலமாக வரக்கூடிய கேடுகள் என்ன? போன்ற பல விஷயங்களை  அவர் இதில் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி, ஒரு முறை வாசித்த பிறகும், இது போதாது, மறுபடியும் வாசிக்க வேண்டும் என்று தோன்றக்கூடிய ஒரு புத்தகமாக இது உள்ளது. ரூமி ஏற்கனவே பல நூல்களை எழுதியிருக்கிறார். இஸ்லாம் ஓர் எளிய அறிமுக, சூஃபி வழி, அடுத்த விநாடி என. பல விஷயங்களை உள்வாங்கி  எழுதக்கூடியவராக அவர் இருக்கிறார்.

தன்னம்பிக்கை நூல் என்று சொன்னாலே அப்துல் ரஹீமுடைய ஞாபகம்தான் நமக்கு வரும். எண்ணம்போல் வாழ்வு என்று நமக்குச் சொல்லிக்கொடுத்தவர் அப்துல் ரஹீம். தொடர்ந்து நாகூர் ரூமியுடைய பெயரையும் சொல்லக்கூடிய அளவுக்கு இந்த நூல் இருக்கிறது. இந்த நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல். குறிப்பாக வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று ஆசைப்படக்கூடிய எல்லா இளைஞர்களின் கையில் இதயத்திலும் இருக்க வேண்டிய நூல் இது. ஏனென்றால் இது மனதை ஒருமுகப்படுத்தக்கூடிய, மனதை கட்டுப்படுத்தக்கூடிய, மனதை சரிசெய்யக்கூடிய, மனதின் நடவடிக்கைகளை நமக்கு நாமே கண்காணித்துக்கொள்ளக்கூடிய மிக அற்புதமான செய்திகளை இந்த நூல் தருகிறது என்பதுதான் இந்த நூலுடை சிறப்பு. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.

 

 

 

 

 

 

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to இந்த விநாடி பற்றி யுகபாரதி

  1. ஞாநி says:

    ஒரு விளக்கம்: : செப்டம்பர் 18 செவ்வாயன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்கரின் படத்துக்கான கண்டனங்கள் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டேன். படத்தைக் கடுமையாகக் கண்டித்தேன். அந்தப் படமும் அதை எடுத்தவர்களும் நாம் பொருட்படுத்துவதற்கான தகுதி கூட இல்லாதவர்கள். இதில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் முதல், வெளிநாட்டு அரசியல், எகிப்தில் உள்நாட்டு அரசியல், கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சி எல்லாம் பொதிந்திருப்பது பற்றி சொன்னேன். அதே நேரத்தில் ஒரு பகுத்தறிவாளன் நிலையிலிருந்து எப்படி எல்லா மதங்களிலும் அடிப்படை வாதத்தை உணர்ச்சியை வெறியை ஊக்குவிக்கிற குருமார்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசினேன். இழிவுபடுத்தல்தான் தவறு; விமர்சனங்களை ஏற்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமியமார்க்க அறிஞரான மருத்துவர் சயீத் சொன்னார். ஜமாத் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் அடிப்படைவாத மத குருமார்களின் அதிகாரத்தில் இருப்பதால், விமர்சிப்பவர்களை மத விலக்கம் செய்வது நடப்பதை சுட்டிக் காட்டினேன். எழுத்தாளர் நாகூர் ரூமி அவ்வாறு விலக்கப்பட்டார் என்று தவறாக சொல்லிவிட்டேன். நான் சொல்ல நினைத்தது ரசூலின் பெயரை. தவறாக ரூமியின் பெயரை சொல்லிவிட்டேன். அதற்காக ரூமியிடமும் ரசூலிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் ஞாநி, ஃபேஸ்புக்கிலிருந்து.

  2. kosindraa says:

    நல்ல புத்தகத்தை எடுத்துச் சொன்னதற்க்கு உண்மையில யுக பாரதிக்கும் ,எழுதித்தந்ததற்க்காக கவிஞர் நாகூர்ரூமி அவர்களுக்கும் நன்றி

  3. யுகபாரதியின் வரிகளை வாசிக்கையில் இந்த வினாடி புத்தகத்தை வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s