பூனைக்கும் அடி சறுக்கும்

பூனைக்கும் அடி சறுக்கும்

துவக்கம்

In CCU on 14.11.12மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போயிருந்தனர். ரெண்டு நாள் கழித்து,”எனக்கு லேசா நெஞ்சு வலிச்சிச்சு” என்று ஷாயிஸ்தாவிடம் (என் இரண்டாவது மகள்) சொன்னேன். மனைவியிடம் பேசாமல் மகளிடம் மட்டும் பேசினால் மனைவியிடம் கோபம் என்று அர்த்தம். நெஞ்சு வலித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதை வலி என்று சொல்லிவிட முடியாது. வலியின் நிழல் நெஞ்சுப் பக்கமாக வந்து ஒரு சில கணங்கள் நின்றுவிட்டுப் போனது. ஊருக்குப்போன குடும்பம் சீக்கிரமாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்கான என் விளையாட்டு அது. ஆனால் இந்த முறை அந்த விளையாட்டு வினையாகுமென்று நான் நினைக்கவில்லை.

என் மனைவிக்கு இந்த விளையாட்டு எப்போதுமே புரிந்ததில்லை. என் வெற்றிக்கு காரணமே அவள் அப்படி இருப்பதுதானே! நான் எதிர்பார்த்தது போலவே அவள் உடனே அழுதுகொண்டே நண்பர் ஆதிலுக்கு (கல்லூரி முதல்வர்) அலைபேசினாள். அவர் என்னிடம், “ஏம்ப்பா சும்மா மெரட்ரே? பார், அண்ணி அழுதுகிட்டே ஃபோன் பண்றாங்க” என்றார்.

அழுகையும் அச்சமும் என் மனைவியின் குடும்பசொத்து. அந்த சொத்துக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் என் மனைவி காப்பாற்றி வருகிறாள். எனக்கு அதுதான் வேண்டும். என்னவோ ஏதோவென்று பயந்தால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுவாள். அவள் கையால் சமைத்து தாலிச்ச சோறும் மட்டன் கறியும் சாப்பிட்டுவிட்டால் என் நாக்குக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்.

12 நவம்பர் 2012, திங்கள்

நேற்று இரவு முதல் இன்று காலை ஐந்து அல்லது ஆறு மணிவரை லாப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். அடுத்த செமஸ்டருக்கான எம்.ஏ. ஆங்கில பாடங்களையெல்லாம் முடிந்தவரை ’இறக்கி’ வைத்தேன். அடிக்கொருதரம் என் மனைவி வந்து, “தூங்கலையாம்மா, தூங்குங்கம்மா” என்று அவள் பாணியில் சொல்லிக்கொண்டே இருந்தாள். “ஒரு அஞ்சு நிமிஷம்” என்று நானும் நேரம் கடத்திக்கொண்டிருந்தேன். கடைசியாக ”சாட்டை” படம் பார்த்தேன். மிக அருமையாக, நேர்மையாக, பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்ட படம். சமுத்திரகனி மிக அருமையாக நடித்திருந்தார். ஓரிரு இடங்களில் மட்டும் கொஞ்சம் அவசரம் தெரிந்தது. பாடல்கள் நண்பர் யுகபாரதி. “அடி ராங்கி” பாட்டை குண்டு சந்தோஷ் அருமையாகப் பாடியிருந்தார். அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம். தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படத்தில் இருப்பது போன்ற அனாவசியமான, பிரதான கதைக்குத் தொடர்பில்லாத, ஆனால் தொடர்பிருப்பதுபோல் சேர்க்கப்பட்ட ‘செக்ஸி’யான ‘சீன்’கள் எதுவும் இல்லை. இது மிகவும் பாராட்டுதலுக்குரியது. காலையில் தூங்கப்போனபோது மணி ஆறு இருக்கும்.

விழித்தபோது ஒன்பது ஒன்பதரை இருக்கும். மார்பின் இரண்டு பகுதிகளிலும் மெல்ல வலி தலை தூக்க  ஆரம்பித்தது. இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போனது. வலி மட்டுமல்ல. ஒருவிதமான எரிச்சல். உள்ளே யாரோ நெருப்பு வைத்ததைப்போல. முடிந்தவரை நெஞ்சைத் தடவி விட்டுப் பார்த்தேன். முடியவில்லை. சொன்னேன்.

அன்று கல்லூரி கடைசி வேலை நாள். கையெழுத்துப் போட்டுவிட்டால் 27 நாட்கள் வகேஷனை அனுபவிக்கலாம். முதல்வருக்கு என் மனைவி அலைபேசினாள். கார் அனுப்பவா என்று அவர் கேட்டார். ஃபஜிலா (என் மூத்த மகள்) தற்செயலாக தீபாவளி லீவுக்கு கணவரோடு காரில் வந்திருந்தாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று நானே நினைத்திருந்தேன். அவளாகவே வந்திருந்தது சந்தோஷம்தான்.

ஆனால் இறந்து போவதற்குமுன், போகஇருப்பவர் நினைக்கும் எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று எனக்குத் தெரியும். என் சின்னாப்பா ’மௌத்’தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நாங்களனைவரும் சிங்கப்பூரில் இருந்தோம். சீரியஸாக இருப்பதாகத் தகவல் வந்ததால், ஒருவர் மாற்றி ஒருவர் செல்வதாக முடிவெடுத்தோம். அது ’டெக்னிகல்’ முடிவு. ஏனெனில் எல்லோருக்கும் ஒரே நாளில் விமான ’டிக்கட்’ கிடைக்காது. தங்கை இந்தோனேஷியாவில். தம்பிகள் இருவரும் சிங்கையில். நான் சிங்கை சென்றிருந்தேன். முதலில் தம்பி நிஜாம் செல்வதென்றும், பின்னர் தங்கை செல்வதென்றும், பின்னர் தீன் செல்வதென்றும், இடையில் நானும் என் மனைவியும் கலந்துகொள்வதென்றும் முடிவெடுத்ததாக  ஞாபகம்.

ஆனால் ஏதோ ஒன்று எங்கள் திட்டங்களையெல்லாம் மாற்றிவிட்டது. எல்லோரும் ஒரே நாளில் சிங்கையில் கூடினோம். அன்றே சென்னை புறப்பட முடிவெடுத்தோம். வியப்புக்குரிய முறையில் எல்லோருக்கும் டிக்கட்டும் கிடைத்தது.

சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சின்னாப்பாவுக்கு ரொம்ப நல்லமுறையில் சிகிச்சையளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவரும் சென்றோம். பார்த்தோம். சின்னாப்பாவின் கண்களை மூடிவைத்திருந்தார்கள். திறந்து விடுங்கள், அவர் எங்களைப்பார்க்கட்டும் என்று கூறினேன். அப்படிச்செய்தால் அவருக்கு வலி, வேதனை ஏற்படுமென்று டாக்டர் கூறினார். அப்படியென்றால் வேண்டாமென்று சொல்லிவிட்டோம். நாங்கள் பேசுவது சின்னாப்பாவின் காதுகளில் விழுந்தது. நாங்கள் சொல்வது புரிந்தது. நாங்கள் பேசப்பேச தலையாட்டி ஆமோதித்தார். கொஞ்சநேரம் கழித்து அவர் உயிர் பிரிந்தது. என் கண்ணில் இன்னும் அந்தக் காட்சி அப்படியே இருக்கிறது.

இறக்கும் கணத்தில் மனிதனுக்கு ஏற்படும் எண்ணத்தின் தீவிரத்துக்கு ஈடு இணை கிடையாது. மூளையும் மனமும், உடலும், ஆன்மாவும் ஒரே சிந்தனையால் ஆக்கப்பட்டிருக்கும். எங்களையெல்லாம் பார்த்துவிடவேண்டும் என்ற சிந்தனைதான் அது. அது எங்கள் திட்டங்களை மாற்றியது. எங்களுக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்தது.

அப்படிப்பட்ட சிந்தனைதான் என் மூத்த மகளை இழுத்து வந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது! பாத்திரங்களை தினமும் கழுவித் துடைத்துவைப்பது மாதிரி, தினமும் எதிர்மறையான எண்ணங்களால் அழுக்காகும் மனதையும் துடைக்க வேண்டியுள்ளது! இவ்வளவு ’நெகடிவ்’-வான எண்ணங்களை வைத்துக்கொண்டு நான் எப்படி இன்னொரு மனிதனுக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருக்கிறேன்! உலகம் ரொம்ப வேடிக்கையானதுதான்!

ஷாஜித் (என் மருமகன்), என் இரண்டு மகள்கள், மனைவி சகிதமாக, அவருடைய காரில் நேரே காலேஜுக்குச் சென்று கையெழுத்திட்டேன். ஆனால் அப்போதே எனக்கு தொப்பலாக மழையில் நனைந்த மாதிரி வியர்த்துவிட்டிருந்தது. அந்த அறிகுறியை நான் பொருட்படுத்தவில்லை. நான் முகம் கழுவிக்கொண்டதால் ஏற்பட்ட ஈரம் என்று நினைத்தேன். நிச்சயமாக ’ஹார்ட் ப்ராப்ளம்’ இருக்காது என்று பட்சி சொல்லியது. பட்சி முக்கியமான தருணங்களில் பொய் சொல்லும் என்று எனக்கு அப்போது தெரியாது!

அங்கே என் நண்பர் பேரா. ராஜா ஹுசேனும் இருந்தார். அது ரொம்ப வசதியாகப் போனது. உடனே அவருக்குத் தெரிந்த கார்டியாலஜிஸ்ட்டான டாக்டர் தெய்வசகாயம் என்பவரைப் பார்க்கச் சென்றோம். மருமகன் காரில் நானும், முதல்வரின் காரில் கலவரப்பட்டுப்போன சில பேராசிரிய நண்பர்களும்.

நான் முன் சீட்டில். ஷாஜித் காரை ஓட்டினார். மிக மெதுவாகத்தான் ஓட்டினார். ஆனால் ஒரு சின்னப்பள்ளம் அல்லது ’பம்ப்’பின் மீது கார் ஏறி இறங்கியபோது இதயத்தில் ஏற்பட்ட வேதனை சொல்லமுடியாததாக இருந்தது. இன்னும் கொஞ்சம் மெதுவாக ஓட்டும்படி அவரிடம் சொன்னேன். ஆனால் டாக்டர் க்ளினிக் செல்வதற்கு முன்னேயே வலி சுத்தமாக நின்று விட்டிருந்தது. எரிச்சலில்லை. ஒரு ’டல் பெய்ன்’ மட்டும், ஏதோ நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டிருப்பதுபோல,  இருந்தது.

டாக்டர் மனைவியும் டாக்டர். முதலில் நாங்கள் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். ராஜா ஹுசைன் சொன்ன பிறகு டாக்டர் மனைவி வந்து எனக்கு ஈஸிஜி எடுத்தது. வாழ்க்கையில் முதன் முறையாக அப்போதுதான் ஈஸிஜி எடுத்தேன். ரொம்ப ’ஈஸி பொரொசிஜர்’தான். கைகள்,கால்கள், நெஞ்சுப் பகுதியில் ஒரு ஜெல்லைத் தடவிவிட்டு, அதன்மீது ’பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டு பிடித்திருக்குமாறு சில  குட்டிப்பந்துகளை ஒட்டினார்கள். கால்களுக்கும் கைகளுக்கும் ’கிளிப்’ மாதிரி. உடனே அவைகள் இணைக்கப்பட்டிருந்த ஒரு மெஷினிலிருந்து ஒரு ’ப்ரிண்டவ்ட்’ வந்தது. அதுதான் ’ஈஸிஜி ரிபோர்ட்’. பிறகு ’டிஷ்யூ’வால் துடைத்துவிட்டு எழுந்து உட்காரச் சொன்னார்கள்.

டாக்டர் வந்தார். ஒரு கால்மணி நேரம் ’லெக்சர்’ கொடுத்தார். ஆங்கிலத்திலேயே. கொஞ்சம் தேவையில்லாமல் அவர் பேசியதாகத் தோன்றியது. ’ஈஸிஜி நார்ம’லாக இருப்பதாகவும், ’ஹார்ட் ப்ராப்ளம்’ இருப்பதற்கான அறிகுறிகள் அதில் தென்படவில்லை என்றும், ஆனா ’நார்ம’லாக நாம் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

’பேஷண்ட் நார்ம’லாக இருப்பது டாக்டர்களுக்குத்தான் பிடிக்காதே – என்றேன் நான். அவர் என் பதிலால் கொஞ்சம் பேஜாராகிப்போனார். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. உடனே பெதஸ்தா அல்லது சிஎம்சி மருத்துவமனை சென்று நான்கைந்து மணி நேரம் ’அப்சர்வேஷ’னில் இருக்க வேண்டும், பின்னர்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.

அப்படிச் செய்யப்போவதில்லை என்று அப்போதே நான் முடிவெடுத்துக்கொண்டேன். சளி, காய்ச்சல், நார்மலான பிள்ளைப் பேறு போன்ற ‘சீரியஸான’ விஷயங்களுக்கு மட்டும் பெதஸ்தா செல்லலாம். ஏற்கனவே குட்டியாப்பாவை பெதஸ்தாவிலும், சிஎம்சியிலும் காட்டிய அனுபவம் இருக்கிறது. சிஎம்சியின் ’ஃபார்மாலிடீஸ்’ நோயாளியையும், அவர் குடும்பத்தினரையும் கொல்லும் தன்மைகொண்டவை. பணம், பயமுறுத்துதல் – இவைகளை பிழைப்புக்கான ’டெக்னிக்’காகக்கொண்ட எந்த மருத்துவமனையிலும் நான் போய் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

சென்னைதான் இந்த மாதிரியான அவசரங்களுக்குச் சிறப்பான இடம். Cash-க்காகப் பார்க்கும் டாக்டர்களும், மருத்துவமனைகளும் நிறைய சென்னையில் இருந்தாலும், case-ஐ மட்டும் பார்க்கும் டாக்டர்களும் நிறைய இருக்கின்றனர். ஆனால் அவர்களை நமக்குத் தெரிய வேண்டும். அல்லது அவர்களைத் தெரிந்தவர்களைத் தெரியவேண்டும்.

அப்படி ஒருவர் எனக்குத் தெரிந்திருந்தார். பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர். பச்சையப்பன் கல்லூரியில் கணிதத் துறையிலும் கணிணித்துறையிலும் தலைவராக இருந்தவர். பின்னர் நியூகாலேஜ் காம்ப்ளக்ஸில் உள்ள ஐ.டி. கல்லூரியில் கொஞ்சகாலம் முதல்வராக இருந்தார். விஞ்ஞானத்தில் ஊறிய ஆன்மிகவாதி. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் ’எக்ஸ்பர்ட் டாக்டர்’களை அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் மிகச்சரியாக இருக்கும். எனக்கு அவர்மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. இருக்கிறது.

அவருக்கு அலைபேசினேன். அவர்தான் டாக்டர் ப்ரும்மானந்தம் என்பவரின் எண்ணைக் கொடுத்தார். பெரிய ’ஸ்காலர்’ என்றும் இதய சிகிச்சை நிபுணர் என்றும், ’சர்ஜன்’ இல்லை என்பதால் எடுத்ததெற்கெல்லாம் அறுக்கவேண்டும் என்று சொல்லமாட்டார் என்றும் கூறினார். அவரைப் பற்றி எனக்கு விபரமாக மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் சொன்னார். நான் எண்ணைக் குறித்துக்கொண்டு ராஜாஹுசேனிடம் கொடுத்து ஒரு ’அப்பாய்ண்ட்மெண்ட்’ எடுத்து வைக்கச் சொன்னேன்.

அதுவும் என் குடும்பத்தினருக்காகத்தான். இதயம் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்காது. வெறும் ’காஸ்ட்ரோ’ பிரச்சனையாக இருக்கும் என்றுதான் நான் நம்பினேன். ஆனால் ஆம்பூர் ’க்ளினிக்’கிலிருந்து வீடு திரும்பியவுடன் கூடவே முதல்வரும் பத்துப்பதினைந்து பேராசிரிய நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இங்கே போகலாம், அங்கே போகலாம் என்று அவரவர்க்குத் தெரிந்த டாக்டர்களின், ’க்ளினிக்’குகளின் பெயர்களையெல்லாம் சொன்னார்கள். ”அவரிடம் கேட்க வேண்டாம், அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடலாம்” என்றார் பேராசிரிய நண்பர் ஜோஸஃப். தயவுசெய்து எனக்கு மாலை வரை ஓய்வு கொடுங்கள், நான் கொஞ்சம் தூங்கி எழுந்துவிட்டுச் சொல்கிறேன் என்று அக்கறையான அவர்களையெல்லாம் அனுப்பிவைத்தேன்.

மறுநாள் சென்னைக்குக் காரில் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் மறுநாள் தீபாவளி என்பதால் ட்ரைவர் கிடைப்பது கஷ்டம். தானே காரை ஓட்டிவந்து, விட்டுவிட்டு வருவதாக ஆதில் கூறினார். மறுநாள் திட்டமிட்டபடி பகல் சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மூன்று மணியளவில் கிளம்பினோம். நான், மனைவி, இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்கள் பின்சீட்டில். ஆதில் கார் ஓட்டினார். அவர் மனைவி அருகில்.

ஜாலியாக, பழைய கிஷோர்குமார், முஹம்மதுரஃபி ஹிந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டே, பாடிக்கொண்டே, ’ஜோக்’-குகள் சொல்லிக்கொண்டே வந்தோம். ரொம்ப சாதாரணாகத்தான் இருந்தது. கொஞ்சம்கூட வலி இல்லை. மாலையில் ஃபஜிலா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். இரவு அங்கேயே சாப்பிட்டுவிட்டு ஆதில் கிளம்பினார். நானும் பிறகு படுக்கச் சென்றேன்.

14, நவம்பர், 2012, புதன் காலை 04 – 8.30

காலை நான்கு மணியிருக்கும். நெஞ்சுக்கு உள்ளே மறுபடியும் பிரச்சனை தொடங்கியது. வலியும் எரிச்சலும். கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பின் தீவிரம் அதிகரித்தது. இதற்கு முன் வந்தது ஒரு அரைமணி நேரத்தில் அடங்கிவிட்டது. ஆனால் இந்தமுறை காலை ஆறரை மணியாகியும் அடங்கவில்லை. எரிச்சலின் வேகத்தில் நான் அடிக்கடி வாஷ் பேசினுக்குச் சென்று ’டாப்’பைத் திறந்து தண்ணீரைக் கையில் அள்ளியள்ளி நெஞ்சில் தடவிக்கொண்டேன். கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது.

காலை ஆறரை மணிக்கு ராஜாஹுசேனுக்கு அலைபேசினோம். அவர் ஏற்கனவே இன்றைக்கு ’அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கி வைத்திருந்தார். டாக்டர் பெரிய டாக்டர் என்றும் விசாரித்துத் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.

என் இருபத்தைந்து ஆண்டுகாலக் கல்லூரி வாழ்க்கையில் இவ்வளவு அதிகாலையில் ராஜாவுக்கு அழைப்புக் கொடுத்ததே இல்லை. அவரும் நிச்சயமாக எடுத்திருக்க வாய்ப்பில்லை. முதன் முறையாக அப்படிச்செய்தோம். முதன்முறையாக அவரும் உடனே எடுத்தார். முதல்வரைக்கூட அலைபேசியில் பிடித்துவிடலாம், ஆனால் ராஜாவைப் பிடிப்பது கஷ்டம்! அவ்வளவு பிசி அவர்! அவரும் ட்ரைவர் வந்தவுடன் வந்துவிடுகிறேன் என்று சொன்னார். பேரா. நண்பர் ஃப்ரோஸ்கானுக்கும் சொன்னோம். அவரும் கிளம்பி வருவதாகச் சொன்னார்.

பிரச்சனை ஏற்பட்ட நாளிலிருந்தே எனக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று ராஜாஹுசேனுக்குத் தோன்றிக்கொண்டே இருந்ததாக அவர் சொன்னதாக பின்னர் ஃபெரோஸ்கான் என்னிடம் கூறினார்!

ராஜா வந்து சேர்ந்தபோது மணி எட்டரை அல்லது எட்டே முக்கால் இருக்கும். நானும் இறங்கி தெரு முனையில் நின்றுகொண்டிருந்த காருக்கு நடந்தே சென்றேன். வீடு சரியாகத் தெரியாமல் ராஜா அங்கே காரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். நான், மனைவி, ஷாயிஸ்தா மட்டும்தான் சென்றோம். போய்ப்பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம் என்று சொல்லி ஃபஜிலா, மருமகன், மாமியார், கடைசி மகள் ஜெமீ ஆகியோரை விட்டுவிட்டுத்தான் சென்றோம்.

B C Roy Awardடாக்டர் ப்ரும்மானந்தம்

ஹபீபுல்லா சாலையில் இருந்த டாக்டர் ப்ரும்மானந்தத்தின் ’ஹெல்த் ஸ்பெஷாலிட்டி கேர்’ என்ற வீடு-கம்-க்ளினிக்குக்குச் சென்றபோது ஒன்பதேகால் இருக்கும். டாக்டர் மேலே தியானத்தில் இருப்பதாக தகவல் சொன்னார்கள்.

எனக்கு வலி அதிகமாகியது. ஒரு ஃபேனுக்குப் பக்கத்தில் உட்கார வைத்தார்கள். அங்கிருந்த கறுப்பு ஸ்டீல் நாற்காலியில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். டாக்டர் இருக்கும் இரண்டாவது மாடிக்கு உடனே ஷாயிஸ்தா ஓடிச்சென்று என் நிலையைச்  சொன்னாள். அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்து என் நாக்கின் கீழ் வைக்கச் சொல்லிக்கொடுத்துவிட்டு, சீக்கிரம் வருவதாகச் சொல்லியனுப்பினார். இதயக்கோளாறு என்றே முடிவு செய்துவிட்டாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஷாயிஸ்தாதான் மாத்திரையை நாக்குக்குக் கீழே வைத்தாள். சில வினாடிகளுக்கெல்லாம் டாக்டர் வந்தார். நானே நடந்து உள்ளே சென்றேன். ஆனால் அதற்குள் நாற்காலியில் அமர்ந்திருந்த எனக்கு கண்கள் மேலே சொருகியதாக ஷாயிஸ்தா பின்னர் கூறினாள்.  டாக்டர் அறையில் நான், ராஜா ஹுசேன், கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த ஃபெரோஸ்கான் மற்றும் என் மனைவி.

டாக்டர் நல்ல உயரமாக, வயதானவராக இருந்தார். வெளியிலேயே நிறைய நிழல்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் பார்க்கும் மன, உடல் நிலையில் நான் அப்போது இல்லை. அவருக்கு வயது எப்படியும் 70-க்கு மேல் இருக்கும். ’ஈஸிஜி’ எடுத்தார். ’ஸ்டெத்’ வைத்து ’செக்’ பண்ணினார்.

“Major, massive serious heart attack. He has three days to go. Anytime he may collapse” என்று கூறினார். நல்லவேளை என் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது.

அவர் அப்படிச் சொன்னது சரியா என்று பின்னர் பேசிக்கொண்டோம். ஆனால் அவர் சொன்னதை நான் மனதுக்குள் 26-111-12 With Prof Jawahirullahபோட்டுக்கொள்ளவே இல்லை. என் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நானே நிறைவேற்றினால் நல்லது என்றுதான் நான் அடிக்கடி இறைவனிடம் கேட்டுகொண்டிருந்தேன். என் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் அவன் செவிமடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. தவிர, இறப்பு என்ற ஒன்று வருவது ஒரு மனிதனுக்கு எல்லா வகையிலும் நல்லதுதான். உடல் தொடர்பான, மனம் தொடர்பான பிரச்சனைகளெல்லாம் அதோடு ஒரு நல்ல, நிரந்தரமான முடிவுக்கு வந்துவிடுகின்றன. அவனுக்குக் கொடுத்த பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்றும் முன்னர் அவனை இறைவன் அழைத்துக்கொண்டால், அந்தப் பொறுப்புகளை இறைவனே ஏற்றுக்கொள்வான். எனினும், என் வேலையை நானே செய்வதில்தான் எனக்குத் திருப்தி. அதற்காகத்தான் இன்னும் கொஞ்ச காலம் வாழவேண்டும் என்று விரும்பினேன். மற்றபடி இறைவனுடைய ஏற்பாடு எதுவாயினும் எனக்குத் திருப்திதான்.

என்னைத்தவிர வேறு யாராவது டாக்டர் சொன்னமாதிரியான வார்த்தைகளைக் கேட்டிருந்தால் அங்கேயே போயிருக்கும் வாய்ப்பு உண்டு என்பதாக ஃபெரோஸ் பின்னர் கூறினார். இருக்கலாம். ஆனால் டாக்டர் உள்ளதை எப்போதும் மறைக்காமல் சொல்லும் பழக்கம் கொண்டவர் என்பதை போகப்போகத் தெரிந்துகொண்டேன்.

27-1-12 -- With 6th Sense Karthi n Suntvp”ஒரு எமர்ஜன்ஸி இன்ஜெக்‌ஷன் போடுகிறேன். உடனே பக்கத்தில் உள்ள பாரதிராஜா ஹாஸ்பிடலுக்குக் கொண்டு செல்லுங்கள். அங்கே டாக்டர் மனோஜ் இருக்கிறார். நான் அவரிடம் பேசுகிறேன்” என்று சொன்னார்.

”ஊசிக்கு பதிலாக ஏதாவது மாத்திரை தர முடியுமா?” என்று கேட்டேன்.

“Do you want to live or not?” என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊசி போட்டபோது அது சதையின் உள்ளே போன சுவடே தெரியவில்லை. அவரது அனுபவம் அதில் தெரிந்தது.

க்ளினிக்குக்கு வெளியில் வந்து காரைப் பின்னால் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. ஒரு சில வினாடிகள்தான். எனக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. மறுபடியும் கண் விழித்து என்னாச்சு என்று கேட்டேன். மயக்கம் வந்திடுச்சா என்று கேட்டேன். ஒன்னுமில்ல என்று ஷாயிஸ்தாவும் மனைவியும் கூறினார்கள். ஆனால் அவர்கள் கண்களில் தெரிந்த கலவரம் என்னால் மறக்க முடியாதது. பின்னால், ஆபரேஷன் நடந்து முடிந்து சி.சி.யு.-வில் என்னை வந்து பார்த்த ஆதில் சொன்னார். ஒரு கர்சீஃபைக் கையில் இருந்து நழுவ விட்டு, “இப்படித்தான் நீ விழுந்தாயாம்” என்றார். கண்கள் மேலே ஒருவிதமாகச் சொருக, கால்கள், கைகளெல்லாம் கோணிக்கொள்ள அப்படியே ஒரு துணியைப் போல நான் கீழே விழுந்துகொண்டிருந்தேன். மனைவியும் மகளும் தாங்கிப் பிடித்துக்கொண்டு ராஜாவையும் ஃபெரோஸையும் பயங்கரமாகச் அலறி அழைத்திருக்கின்றனர். கண்கள் கலங்க அவர்கள் என்னருகே ஓடிவந்தனர் என்றும் ஷாயிஸ்தான் பின்னர் என்னிடம் சொன்னாள். என்னை அந்த நிலையில் பார்த்த ஃபெரோஸுக்கு அன்று முழுவதும் தூக்கமே வரவில்லை என்று கூறினார். ராஜாவும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள நேரமானது என்றும் சொன்னார்.

”என் கிளினிக்கில் கொலாப்ஸ் ஆனாயல்லவா, அப்போது ஒரு வாழ்க்கை உனக்கு முடிந்து போய்விட்டது. இது மறுWith Nursadik, Raja n Manivannan வாழ்வு உனக்கு. God has been very kind with you. You were lucky. நீ ஆம்பூரிலிருந்து சென்னை வரும்போது இப்படி நடந்திருந்தால் என்னாகியிருக்கும், நினைத்துப்பார்” என்று பின்னர் டாக்டர் ப்ரும்மானந்தம் கூறினார்.

போகப்போகத்தான் அவரைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவரது க்ளினிக் உள்ளேயே பதினெட்டு நிழல் படங்கள் இருந்தன. அதில் பத்து கருப்பு வெள்ளை, எட்டு கலர் படங்கள். அவர் மாணவப்பருவத்திலேயே தங்கமெடல் பரிசுகளை ஒவ்வொரு பாடத்திற்கும் வாங்கிக் குவித்திருக்கிறார். மருத்துவத்திற்கான டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றிருக்கிறார். மெட்ராஸ் மெடிகல் காலேஜில் பேராசிரியராக இருந்திருக்கிறார். ’பெஸ்ட் மெடிகல் டீச்சர்’ விருது பெற்றிருக்கிறார். டாக்டர் எம்ஜியார் மெடிகல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இரண்டுமுறை இருந்திருக்கிறார். புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இவருக்கு வாடாபோடா நண்பர். இவர் ப்ரொஃபஸராக இருந்தபோது அவர் அசிஸ்டண்ட் ப்ரொஃபஸராக இருந்திருக்கிறார். கவர்னர் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டே இருக்கிறார். என்னைப் போல ஆங்காங்கே குறித்தும் அடிக்கோடிட்டும் வைத்திருக்கிறார். அபாரமான நினைவாற்றல் இவரது சிறப்புக்கு வலு சேர்க்கிறது. மாத்திரை மருந்துகளை சரி பார்ப்பதில் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறார். மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்பவர். நகைச்சுவை உணர்வும் மிக்கவராகவும் இருந்தார். சரியான மருத்துவரிடம் சேர்வது ஒரு கொடுப்பினை. இறைவன் எனக்கு இந்த விஷயத்திலும் கருணை காட்டியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

 

With Ammiyappa --- 04.12.12எமர்ஜன்ஸி அறை

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரி வந்துவிட்டது. என்னை ஒரு சக்கர நாற்காலியில் உட்கார வைத்து ராஜா தள்ளிக்கொண்டு சென்ற ஞாபகம். “எமர்ஜன்ஸி” என்றும் அவர் சொன்னார். இடது பக்கமாகத் திருப்பி ஒரு அறைக்கு என்னை அழைத்துச்சென்றார்கள்.

விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் மாதிரி சக்கர நாற்காலியில் என்னை உட்கார வைத்து அறைக்கு உள்ளே தள்ளிக்கொண்டிருந்தபோதே தீன், நிஜாம், ஜெமீமாவுக்குச் சொல்லிவிடும்படி கூறினேன். யாரிடம் என்று ஞாபகம் இல்லை. ஷாயிஸ்தாவாக இருக்கலாம். என் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் இந்த மூவரும் அருகில் இருக்க வேண்டும். அல்லது செய்தியாவது அவர்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும். வாழ்வா சாவா என்ற கேள்விக்குள் நுழைந்துகொண்டிருந்த நான் அப்போது அவர்களுக்குத் தெரிவிக்கச் சொன்னேன். அவர்களது மனம் என்னோடு இருக்கும். அது போதும்.

ஆனால் விஷயம் சொல்லப்பட்ட உடனேயே தம்பி தீன் பணம் அனுப்பி வைப்பதாகச் சொன்னாராம். என் சிகிச்சைக்கான பணம் இறைவன் அருளால் என்னிடமே இருந்தது. ஆனால் தீன் கேட்கமாட்டார். அவருக்கு அவர் கொடுத்தால்தான் சந்தோஷம். எனக்கும் அதில் சந்தோஷம்தான். அபூபக்கர் (ரலி) அவர்களின் பணத்தை தன் பணத்தைப் போல ரஸூலுல்லாஹ் (ஸல்) செலவு செய்வார்களாம். அந்த முஹம்மதுவுக்கு ஒரு அபூபக்கர். இந்த முஹம்மதுவுக்கு ஒரு அப்துல் காதர் (தீன்). அல்ஹம்துலில்லாஹ். இறைவன் அவருக்கு பன் மடங்கு கொடுக்கட்டும். அவருக்கு அலைபேசிய பத்து நிமிடங்களுக்குள் தேவையான பணம் வந்து சேர்ந்தது.

அந்த நேரத்தில் ராஜாஹுசைன், “எத்தனை லட்சம் வேணும்னாலும் தரேன் மாப்ளெ, கவலப்படாதெ” என்று சொல்லி பணம் எடுக்கவும் போய்விட்டார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தீனின் பணம் வருவதற்குச் சற்று முன் நடந்தது இது. ராஜாஹுசைன் செய்த உதவி ஞாலத்தின் மானப்பெரிது. அவர் மட்டும் வரத்தாமதமாகி இருந்தால் நான் என்னாகியிருப்பேன் என்று சொல்ல முடியாது. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அவர் அதைச் செய்துவிட்டார். இறைவன் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மைகளையும் நிறைவாகக் கொடுக்க வேண்டும்.

விஷயம் கேள்விப்பட்டவுடன் உடனே (வர முடிந்ததால்) கிளம்பி வந்த தம்பி நிஜாம் என்னோடு மூன்று நாட்கள் தங்கியிருந்தார். நான் எவ்வளவோ மறுத்தும் ஒரு தொகை கொடுத்தார். மறுநாள் மீண்டும் ஒரு தொகை தருவதாகக் கூறினார். ஆனால் நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். தேவைப்பட்டால் நிச்சயம் அவரிடம் கேட்பதாகச் சொல்லி சமாதானப்படுத்தினேன்.

லாப்டாப்-பில் எனைப் பார்த்த தங்கை ஜெமீமாவும் பணம் அனுப்பவா என்று அழுதுகொண்டே கேட்டாள். நான் பிடிவாதாக வேண்டாமென்று சொல்லிவிட்டேன். நிஜாம்,ஜெமீமா விஷயத்தில் என் பிடிவாதம் செல்லும். தீன் விஷயத்தில் அவர் பிடிவாதம்தான் செல்லும். மைத்துனர் ஜெயின் அலியும் வரவா, பணம் அனுப்பவா என்று  கேட்டுக்கொண்டே இருந்தார். அவரையும் சமாதானப்படுத்தி ’ஆஃப்’ செய்து வைத்தேன். பணம் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் என்று பட்டாசு வெடித்து கையில் காயம்பட்ட மனைவியோடு வந்திருந்த யுகபாரதி கூறினார்.

இத்தகைய தருணங்களில்தான் உண்மையான நண்பர்களை அடையாளம் காண முடியும். பணம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால் அதைப்பற்றி முக்கியமான தருணங்களில் நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம். பணம் இல்லையென்றால் அன்பை, நட்பை, ஆதரவை, நல்ல வார்த்தைகளை, துணையை – இப்படி ஏகப்பட்டதைக் கொடுக்கலாம். ராஜா, ஃபெரோஸ், ராஜேஷ், சௌந்தர் போன்ற நண்பர்கள் அதைச் செய்தார்கள். ராஜேஷ் ஊரில் இருந்ததால் அவரது தம்பியை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்பு உதவினார். எனக்காக ஒருநாள் முன்னாடியே ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். வந்த பிறகு பல உதவிளைச் செய்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மூன்று வால்வுகளில் பலூனிங் ஆபரேஷன் செய்துகொண்ட சௌந்தர் (சமீபத்தில் காலமான என் தோழி டாக்டர் சாருமதியின் கணவர்) என்னை நேரில் வந்து பார்த்து ஆறுதலும் ஆலோசனைகளும் சொன்னார். மனிதர்கள் பலவிதம். அடடா, ஏடிஎம் கார்டு கொண்டு வர மறந்துவிட்டேனே என்று சொல்லும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களும் உண்டுதானே!

எமர்ஜென்ஸி அறைக்குள் கொண்டுசென்று என்னை அங்கே ஒரு படுக்கையில் படுக்கச் சொன்னார்கள். ஒருத்தி அல்லது இரண்டு பேர் என் மணிக்கட்டுக்கருகில் ’வெய்ன்’ கிடைக்குமா என்று மாற்றி மாற்றி இரண்டு கைகளிலும் தேடினார்கள். கடைசியில் இடது கையில்  கிடைத்தது. எதையோ தடவி, எதையோ குத்தி வைத்து, எதையோ ஒட்டினார்கள். அதன் பெயர் ஐ.வி. அல்லது ’வென் ஃப்ளான்’ என்று பின்னர் தெரிந்துகொண்டேன். வலது கையில் எதையோ நுரைவருமாறு தடவி ஒருவர் ’ஷேவ்’ செய்தார். கை வழியாகத்தான் ’ஆஞ்சையோக்ராம்’ செய்வார்கள் போலிருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

ஆனால் கையில் வேலை முடிந்தவுடன் பேண்ட்டை கழற்றச் சொன்னார். பின்னர் உள்ளாடையையும் கழற்றச் சொன்னார். வெட்கம் பிடுங்கித் தின்றது. இந்த விஷயத்தில் நான் ரசூலுல்லாஹ்வை முழுமையாகப் பின்பற்றுபவன். வெளியில் ஒன்னுக்கு இருப்பதாக இருந்தால்கூட ரொம்பதூரம் யார் கண்ணும் படாமல்சென்று தண்ணீர் இருந்தால் மட்டுமே இருப்பேன். இப்போது எவன் கண்ணுக்கோ என் ரகசியங்களைக் காட்ட வேண்டியிருக்கிறதே என்று ரொம்பக் கூசியது. இரண்டு கைகளையும் ‘அதன்’மீது வைத்து மறைத்துக்கொண்டேன்.

ஆனால் அந்த நீலஉடை சிப்பந்தி எதையுமே கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாயிருந்தார். அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே ’கத்னா’வெல்லாம் செய்தாயிற்றே! இப்போ எதையாவது செய்து ‘உள்ளதும் போச்சு’ என்று ஆகிவிடப்போகிறது என்று தோன்றியது! ஆனால் முழுமையாக தொடைகள்வரை ’ஷேவ்’ செய்த பிறகே அவர் விட்டார்.  நல்லவேளை வெறும் ஷேவிங்தான், ‘சீவிங்’ எதுவும் இல்லை!

அவ்வளவுதான். நான் அறுவைசிகிச்சை அல்லது அதையொத்த நிகழ்வுகளுக்குத் தயாராகிவிட்டேன். ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டே வெளியில் வந்தார்கள். வெளியில் மனைவி, ஃபஜிலா, ஷாயிஸ்தா, ஃபரிஷ்தா, ராஜா, ஃபெரோஸ், மருமகன் ஷாஜித் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள். கவலையுடன். கலவரத்துடன். ஒரு சில வினாடிகள்தான். தள்ளிக்கொண்டு டாக்டர் மனோஜ் இருந்த தியேட்டருக்குள் கொண்டுபோய் விட்டார்கள்.

’ஃபார்ம் ஃபில்லப்’ பண்ணுங்கள், அப்போதுதான் ’ஆஞ்சையோக்ராம்’ ஆரம்பிக்க முடியும் என்று சொன்னார்களாம். அவள் அழுதுகொண்டே டென்ஷனிலும் அச்சத்திலும் தப்புத்தப்பாக விலாசம் எழுதிக்கொடுத்ததாகவும், பின்னர் சரிசெய்து கொடுத்ததாகவும் கூறினாள். என்னிடம்கூட ஒரு ஃபார்மில் கையெழுத்து வாங்கினார்கள்.

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எம் புருஷனெ எப்புடியாவது காப்பாத்திடுங்க” என்று ரமணா ஸ்டைலில் என் மனைவி அழுதுகொண்டே கேட்டுக்கொண்டதாக குழந்தைகள் பின்னர் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள்.

ஆபரேஷன் தியேட்டர்

அது ஆபரேஷன்தியேட்டர் மாதிரி இல்லை. உண்மையில் எனக்குச் செய்யப்பட்டதை ஆபரேஷன் என்ற வரிசையிலும் சேர்க்க முடியாதாம். வலது கையில் மணிக்கட்டுக்குக் கீழே லேசான ஒரு ஓட்டை போட்டு அதன் வழியாக ஒரு மெல்லிய குழாயைச் செருகி அதற்குள் இதயம் வரை செல்லும் ஒரு மெல்லிய வலை போன்ற ஒன்றை அனுப்பி ஏதோ செய்கிறார்கள். அதை ஆங்கிலத்தில் stent என்கிறார்கள். அது போய் அடைப்பு இருக்கும் குழாயில் ஏதோ செய்து அடைப்பை நீக்கிவிடுகிறது. பின்னர் அதை பின்னோக்கி எடுத்துவிடுகிறார்கள். இன்னுமொரு வகையில், அந்த வலைக்கூண்டு போன்ற மெல்லிய அமைப்பை இதயத்தின் பகுதியாக நிரந்தரமாக இருக்க விட்டுவிடுகிறார்கள். எனக்குச் செய்தது இதுதான். அந்த வலை இதய வால்வுக்குள் ‘செட்’ ஆவதற்காக ஒரு மாத்திரையை ஒரு ஆண்டுவரை சாப்பிட  வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு மட்டுமே  பல ஆயிரங்கள் ஆகிறது!  சாப்பிடுகின்ற உணவு, அணிகின்ற உடை எல்லாமே ‘ரிச்’ ஆக இருக்கும்போது, வரக்கூடிய பிரச்சனையும் ‘ரிச்’ஆக இருந்தால்தானே தர்க்கரீதியாக  சரியாக இருக்கும்!

என் வலது கை மணிக்கட்டருகில் ஒரு ’லோகல் அனஸ்தீஸியா’ கொடுத்தார்கள். அங்குதான் ஒரு சிறு ஓட்டை போட்டு அதன் வழியாகத்தான் ஒரு ட்யூபை இதயம் வரை செலுத்தி செய்ய வேண்டியதைச் செய்தார்கள். அது கைகளில் உள்ள நரம்புகள் வழியாகப் பயணித்தபோது மட்டும் லேசான, பொறுத்துக்கொள்ளக்கூடிய வலி இருந்தது. மற்றபடி நான் ’கான்ஷியஸ்’ ஆக, நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் அந்த நீலஉடை சிப்பந்தி செய்ததுபோல ஒரு லேடி டாக்டரும் என் அந்தரங்கத்தில் ஏதோ செய்தார். நானும் முன்பு செய்ததுபோலவே என் இரண்டு கைகளையும் ’அதற்குமேலே’ வைத்து மூடினேன்.

“Sorry sir, we can understand your feelings. But we have to do it. Excuse us” என்று சொன்னார். நான் வேறுவழியின்றி மூடியைத் தூக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

எனக்கு இடது பக்கத்திலிருந்து கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக்கொண்டேதான் டாக்டர் மனோஜ் ஏதோ செய்தார். என்னிடம்  அவ்வப்போது பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

“மிஸ்டர் முஹம்மத், உங்க நாலு வால்வுல மூனு நல்லா இருக்கு. ஒரேயொரு வால்வு மட்டும் ஹண்ட்ரட் ப்ரசண்ட் ப்ளாக் இருக்கு. சர்ஜரி தேவையில்ல. ஆஞ்ஜையோப்ளாஸ்டி பண்ணிடலாமா?” என்று கேட்டார்.

அப்படீன்னா என்ன என்று நான் கேட்டேன்.

அவர் கொஞ்சம் ஆச்சரியப்பட்டவராக, “இப்ப எப்டி இருந்துது?” என்றார்.

“கையில் கொஞ்சம் வலித்தது” என்றேன்.

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் அப்டி இருக்கும். ஓகேயா?” என்றார். நான் ஓகே என்றேன்.

அடுத்த பத்து அல்லது முப்பது நிமிஷம் என்ன நடந்தது என்று பார்த்துகொண்டே இருந்தும் எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது கை நடுவில் வலி தோன்றித்தோன்றி மறைந்தது. ஒரு கட்டத்தில் நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டது.

“மிஸ்டர் முஹம்மத், நெஞ்சு கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக்குங்க” என்றார்.

அந்த வலி அதிகமாகத்தான் இருந்தது. ஆனாலும் எல்லா வலிகளையும் போக்குவதற்கான கடைசிவலிதானே என்று பொறுத்துக்கொண்டிருந்தேன். பொறுத்துக்கொண்டிருந்தேன் எனும்போதே பொறுக்க முடிந்ததாக இருந்ததாகத்தானே அர்த்தம்?

”அவ்வளவுதான். எல்லாம் சரியாகிவிட்டது. உங்கள் இதயத்துக்கு இப்போது ரத்தம் நார்மலாக ஃப்லோ ஆகிறது” – என்று அவர் சொன்னார். சர்ஜரி தேவையில்லை என்று அவர் நேர்மையாகச் சொன்னபோது அந்த வார்த்தைகளில் இறைவன் என்மீது காட்டிய கருணையை உணர்ந்தேன். இல்லையெனில் கீழே கிழித்து, மேலே கிழித்துத் தைத்து உடலையே அசிங்கமாக மாற்றியிருப்பார்கள். இறைவனின் கருணை ’பைபாஸ் சர்ஜரி’யை ‘பை பாஸ்’ செய்ய வைத்துவிட்டது! அல்ஹம்துலில்லாஹ்.

”எனக்கு கொலஸ்ட்ரால் இல்லை, பி.பி. இல்லை, டயபடிஸ் இல்லை. நான் ஒரு ஸ்ட்ரிக்ட் நான் – வெஜிடேரியன், எனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததில்லை. இனிமேலும் வராது.அப்படியே வந்தாலும் என் கையாலேயே அதை (இதய வால்வுகளில் உள்ள கொழுப்பு அடைப்பை) நான் எடுத்துவிடுவேன்” என்று நான் ஆல்ஃபா வகுப்புகளில் ரொம்ப பெருமையாக மார்தட்டிச் சொல்வதுண்டு. என்னைக் கேட்காமல் நீ எப்படி இவ்வளவு திமிராகச் சொல்லலாம் என்று இதயம் கோபித்துக்கொண்டுவிட்டது. எனினும் என் கைவழியாகத்தானே எடுத்திருக்கிறார்கள்! ஒருவகையில் நான் சொன்னது சரியாகிவிட்டது! தன் கையே தனக்குதவி என்பது இதுதானோ!

நிச்சயமாக இறைவன் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள் – என்று இறைவன் திருமறையில் (சூரா யூனுஸ் 10:44) தெளிவாகக் கூறுகிறான்.

நான் டாக்டர் பிரும்மானந்தம் அவர்களைக் கேட்டேன். ஏன் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று.  ஹெரடிட்டி-தான் காரணமா என்றும் கேட்டேன். ”ஹெரடிட்டி என்பது ஒரு விதை மாதிரிதான். அது வளர்வதற்குரிய காரியங்களை நீ செய்தால் அது சீக்கிரம் வளர்ந்துவிடும்” என்று பதில் சொன்னார்.

அப்படி நான் என்ன செய்துவிட்டேன்? எனக்குத் தெரிந்து மூன்று தவறுகள்:

 1. என் உணவுப்பழக்கம். தினசரி மட்டன் என்ற அளவுக்குக் கொஞ்ச காலமாக மாறிப்போனது. மட்டன் இல்லாவிட்டால் சிக்கன், முட்டை, மீன் என்று. அதிலும் காரமாக இருந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் என்னுடைய ‘இண்டேக்’ அளவு மிகக்குறைவு.
 2. ஆனால் இந்த உணவை செரிக்க வைக்கும் உடல் ரீதியான எந்த செயல்பாடும் என்னிடம் இல்லை. நடையோ, உடற்பயிற்சிகளோ எதுவும் இல்லை.
 3. லாப்டாப் எதிரில் உட்காருகிறேன். ஆறிலிருந்து பத்து மணி நேரம் ஒரு நாளைக்கு. கல்லூரிக்கும், வெளியிலும் போக ‘பைக்’கில் உட்காருகிறேன். சென்னை அல்லது வேறு எங்காவது போக காரில் உட்காருகிறேன். இந்த sedentary வாழ்க்கையும், தேவையான உடல் இயக்கமற்ற வாழ்முறையும் நான் சாப்பிட்ட உணவு சரியாக செரிக்க விடாமல் செய்துவிட்டது என்று எனக்கு இப்போது புரிகிறது. இது என்வி-யால் வந்த பிரச்சனையல்ல. என்னால் வந்த பிரச்சனை. (இனிமேல் மட்டன், சிக்கன், மீன் என்று எந்த என்வி அய்ட்டங்களும் கிடையவே கிடையாதென்றுதான் மனைவி நினைத்துக்கொண்டும் கூறிக்கொண்டும் இருந்தாள். ஆனால் டாக்டர் தெளிவாகக் கூறிவிட்டார். எல்லாம் சாப்பிடலாம். உடனே அல்ல. எப்போது, எப்படி, எந்த அளவு என்று தெளிவாகச் சொன்னார். என்ன ஆயில் பயன்படுத்த வேண்டும், எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றுகூடச் சொன்னார். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவின் அளவும் நாம் சராசரியாக உட்கொள்கின்ற அளவும் வேறுவேறு என்பது எனக்குப் புரிந்தது. நாம் பயன்படுத்துகின்ற அளவுகள் பிரச்சனையைக் கவருகின்ற, அல்லது ஏற்கனவே இருக்கின்ற பிரச்சனையை தீவிரப்படுத்துகின்ற அளவுகள். என்னால் இவ்வளவுதான் இங்கே சொல்ல முடியும். வெஜிடேரியனாகவே இருந்து இரண்டு மூன்று முறை ’பை பாஸ்’ செய்தவர்களை நான் அறிவேன்).

இந்த மூன்று தவறுகளையும் நான் சரி செய்துகொண்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் 20, 30 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்பது டாக்டரின் கருத்து. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

முடிவாக

நிறையபேர் வந்துபார்த்தார்கள். அல்லது அலைபேசினார்கள். உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும். (நிறையை பேரிடம் ஷாயிஸ்தாதான் பேசினாள். என்னிடம் கொடுக்கவே இல்லை. சிலரிடம் மட்டுமே நான் பேச அனுமதி கிடைத்தது. அதுவும் சில விநாடிகளுக்குத்தான்)! பெரும்பாலானவர்கள் விஐபி-கள். எழுத்தாளர்கள். கவிஞர்கள். நண்பர்கள். அரசியல், இலக்கியம், சினிமா, பத்திரிக்கை, டிவி துறையைச் சேர்ந்தவர்கள். பேராசிரியர்கள்; முன்னாள் இந்நாள் முதல்வர்கள்; கல்லூரித்தாளாளர்; பள்ளிக்கூட நண்பர்கள்; மாணவர்கள்; சொந்தக்காரர்கள்; சம்பந்தம் செய்தவர்கள். (என் பக்கமிருந்தும், என் மனைவி பக்கமிருந்தும்). ஏன், சம்பந்தமே இல்லாதவர்கள்கூட வந்து பார்த்தார்கள். நான் சி.சி.யு.வில் இருந்தபோதுகூட ஒரு நாளைக்குக் குறைந்தது இருபதுபேர் வந்தார்கள். இனிமேல் நான் உங்களைப் பார்க்க வரமாட்டேன் என்று டாக்டர் மனோஜ் (செல்லமாகக்) கோபித்துக்கொண்டு போகும் அளவுக்கு வந்தார்கள்.

சவுதியிலிருந்து மைத்துனர் அக்ரம், நண்பர் பிலால், துபாயிலிருந்து நண்பர் ஆபிதீன், நார்வேயிலிருந்து மைத்துனர் ஷஃபி, இப்படி பலர் பேசினார்கள். எல்லாருடைய அன்புக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். எல்லாருடைய பெயர்களையும் நான் குறிப்பிடவும் முடியாது. மறந்திருக்கலாம்.

எனினும் என் மனம் எல்லாருக்காகவும் துஆ செய்கிறது. என் மனைவியைப் பற்றி நானே சொல்லக்கூடாது. அவள் எப்போதுமே ஸ்பெஷல். சமைப்பதிலும் சேவை செய்வதிலும் அவளுக்கு இணையே கிடையாது. என் மூன்று மகள்களும் அவர்கள் வயதுக்குத் தக்கவாறு எனக்கு உதவி செய்தனர். ஃபஜிலா ரொம்ப இதமாகத் தடவி விடுவாள். ஆபரேஷன் நடந்த அன்று இரவு என் மனைவியையும் மற்ற குழந்தைகளையும் வீட்டுக்கு வற்புறுத்தி அனுப்பிவிட்டு, அவளும் அவள் கணவரும் மட்டும் இரவு முழுவதும் நாற்காலியிலேயே உட்கார்ந்து கழித்தனர். எப்போது வேண்டுமானாலும் சி.சி.யு.வில் இருந்த என் அட்டர்டர்களாக அழைக்கப்படலாம் என்பதால். நீ கவலப்படாதே டாடி, எல்லாம் சரியாயிடும். யூ ஆர் ஆல்ரைட் என்று ஜெமீ ஆறுதல் சொல்வாள். என்றாலும் ஒரு ஆண்பிள்ளைபோல ரொம்ப கவனமாகவும், அக்கறையாகவும், ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் மாறிமாறி, களைப்பறியாத யந்திரம்போல என்னை கவனித்துக்கொண்டது இரண்டாவது மகள் ஷாயிஸ்தா.

அவள் பட்ட மனக்கஷ்டமும் உடல் கஷ்டமும் கொஞ்சமல்ல. ”என் ’ஏடிஎம் கார்டு’களையெல்லாம் இன்ன இடத்தில் வைத்திருக்கிறேன். அவற்றின் ’பாஸ் வேர்டு’களை லாப்டாப்பில் இன்ன ஃபைலில் வைத்திருக்கிறேன்” என்று வீட்டில் எதேச்சையாக நான் சொன்னபோது அவள் கண்களிலிருந்து உடனே பொங்கி வந்த கண்ணீரை என்னால் மறக்க முடியாது. ஏன் இப்படிச் சொன்னாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளை நினைத்து என் மனம் ஒவ்வொரு கணமும் குளிர்ந்துபோனது. அவளுக்கான என் பிரார்த்தனைகளை நிச்சயம் இறைவன் நிறைவேற்றுவான்.

எனக்கு ஆண் குழந்தைகள் கிடையாது. மருமகன் ஷாஜித் வேலை பார்க்கும் கம்பனியில் வாரத்தின் ஒரேயொருநாள் விடுமுறையான ஞாயிறுகூட நிம்மதியாக இருக்கவிடாமல் அலைபேசியிலேயே பிசினஸ் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு பிழிந்தெடுக்கும் வேலை. ஆனால் அவர் வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு நாலுநாள் என்னோடே கிடந்தார். ஆஸ்பத்திரியிலேயே. அவரும், ஃபஜிலாவும், ஷாயிஸ்தாவும்தான் ஏழாவது மாடியில் கொடுக்கப்பட்ட எங்கள் அறைக்கும், கீழ்த்தளத்தில் உள்ள மெடிகல் ஷாப்புக்கும், ரிசப்ஷனுக்கும் இன்னும்பல இடங்களுக்கும் அலைந்து கொண்டே இருந்தார்கள். ஷாஜித் ஒரு இரண்டு நாட்கள் வீட்டுக்குக்கூடப் போகாமல், கம்பனி யூனிஃபார்மைக்கூட மாற்ற வாய்ப்பில்லாமல் எனக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இறைவன் மிகுந்த கருணையுள்ளவன். இப்படிப்பட்ட உறவுகளை எனக்குக் கொடுத்துள்ளான்.

ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஆன்லைனில் தம்பி நிஜாம் சிங்கப்பூரில் உள்ளவர்களை ஸ்கைபியில் என்னைப் பார்க்க வைத்தார். ஒரு சில வினாடிகள் என்னைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த தம்பி தீன், திடீரென்று, “ஒன்னெ இப்புடி பாக்க முடியல நானா” என்று அழுதுகொண்டே ’கட்’ செய்து விட்டார். தங்கை ஜெமீமா பார்க்கும்போதே அழுதுவிட்டாள். ஊருக்குக் கிளம்பும்போது நிஜாம் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலங்கிவிட்டார். கண் ஆபரேஷன் செய்ய வந்திருந்த என் வாப்பா என்னை இரண்டு நாட்கள் தொடர்ந்து வந்து பார்த்தார். வாப்பாவுக்கு நிறைய மறதி வந்துவிட்டிருக்கிறது. அவரது ஆபரேஷன் செய்ய இருந்த கண்களும் கலங்கியதை நான் உணர்ந்தேன். அவருக்கு டயபடிஸ் இல்லை. எனக்கும் இல்லை. (இதனால் ஏகப்பட்ட நன்மைகள் ட்ரீட்மெண்ட்டில் இருப்பதாக டாக்டர் சொன்னார்). ஆனால் அவருக்கும் சரியாக 54 வயதில் ஹார்ட் அட்டாக் வந்ததாம்! வாப்பாவிடமிருந்து ஜீன் வழியாக எனக்குக் கிடைத்த சொத்துக்கள் இவை!   

சின்னம்மா என்னைப் பார்க்கும்போதெல்லாம் விம்மியது. சின்னம்மா என்பது ஒரு பெயர். என் அம்மாவின் தங்கை என்பதால் சின்னம்மா என்பது மட்டுமல்ல, அது நான் அவர்களைக் கூப்பிடும் பெயரும்கூட. நாலரை வயதில் என் தாயார் இறைவனடி சேர்ந்த பிறகு என்னை வளர்த்து உருவாக்கிய மூன்று பேரில் ஒருவர் சின்னம்மா. தான் பெற்ற பிள்ளைகளுக்கு வெறும் தோசையும் எனக்கு மட்டும் முட்டை தோசையும் கொடுத்து வளர்த்த தாய். நான் பல வகையில் கொடுத்துவைத்தவன். என் சின்னம்மாவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரவேண்டும். உடம்பு முடியாமல் இருந்த என் மாமியாரும் எங்களோடுதான் இருந்தார்.  என் பயன்பாட்டுக்கான சில  பொருட்களையும் கொடுத்தார்.

கண்ணீரின் மொழி அலாதியானது. அது சொல்லாத செய்திகளே இல்லை. எல்லாமே அன்பின் செய்திகள். பாசத்தின், உறவின் வெளிப்பாடு. ஆனால் அழுகை மட்டுமே அன்பின் வெளிப்பாடு அல்ல. சமயத்தில் சிரிப்பும், ஒன்றுமே நடக்காத மாதிரி இருப்பதும்கூட அன்பின் வெளிப்பாடுகள்தான்.  தங்கை செல்லதங்கம் அந்த ரகம். அவள் எனக்காக ருசியான பகல் உணவு சமைத்துக்கொடுத்தாள். (என்ன கறி என்று சொல்லமாட்டேன், ரகசியம். ஆனால் ஒரு க்ளூ: டாக்டர் ஓகே சொன்னதுதான்)!

என்னைப் பார்த்த நண்பர்கள் சொன்னதில் எனக்கு மிகவும் பிடித்த, மனதில் உட்கார்ந்துகொண்ட வார்த்தைகள்:

சோம வள்ளியப்பன்: எத்தனையோ பேருக்கு இவர் ஓதிவிட்டிருக்கிறார்.அத்தனை பேரும் இவருக்காக பிரார்த்தித்திருப்பார்கள்.

பா.ராகவன்: எங்களுக்கெல்லாம் ஏதாவது கெட்டது நடக்கும்போது ஆறுதலுக்கும் உதவிக்கும் அழைக்க நாங்கள் நினைப்பது ஒரு சிலரைத்தான். அதில் ரூமியும் ஒருவர். அவருக்கு இப்படியானது ஒன்றும் ஆச்சரியமல்ல. ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு ஏன் கேன்சர் வந்தது என்று கேட்க முடியுமா என்ன?

ஃபெரோஸ்கான்: ரஃபிக்கு வந்தது ஒரு நோயே அல்ல. அவனுடைய லைஃப் ஸ்டைலின் விளைவு. அவனுக்கு இருக்கும் ’வில்பவர்’ எல்லாருக்கும் இருக்க வேண்டும்.

நான் இன்னும் சில மாதங்களுக்கு ஓய்வில் இருப்பேன். அதன் பிறகே ’நார்மல்’ வாழ்க்கை தொடங்கும். அதுவும் வேறுவிதமான, எனக்குப் பழக்கமில்லாத ’டைம் ஷெட்யூ’லில். இருக்கட்டும். எல்லா நிலைகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதுதான் உண்மயான ஆன்மிகவாதியின் தன்மையாக இருக்கும். நானும் அப்படி இருக்க முயல்கிறேன். என் பேரவா நிறைவேற துஆ செய்யுங்கள்.

நண்பர்கள் ஜனவரிவரை தொலைபேசி / அலைபேசி அழைப்பு தயவுசெய்து கொடுக்கவேண்டாம். எனக்காக பிரார்த்தியுங்கள். அது போதும். அவசியமானால் மின்னஞ்சல் கொடுங்கள். ஓரிரு நாட்களில் பதில் தருவேன்.

இனிமே அப்பா நெஞ்சுமேலே ஏறி வெளையாட முடியாதா என்று என் பேரன் ஃபஹீம் கேட்டான். முடியும் கண்ணு. கூடிய சீக்கிரமே முடியும். இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்

இறையருளால் நலமாகிக்கொண்டிருக்கும்

நாகூர் ரூமி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

68 Responses to பூனைக்கும் அடி சறுக்கும்

 1. “Allah will reward you [with] goodness.”அல்லாஹ் தங்களுக்கு ஆரோக்யமான பூரன சுகம் பிரார்த்திக்கின்றேன்

  • salahudeen. TENKASI says:

   allah with u all times i pray for u sir

   • salahudeen. TENKASI says:

    but my doubt docter potta injection. naan kaelve patta alla heart opration patentem, ethu polavea oru injectionku peragu mayange velunthu oparation panneyavargal than. entha kodumaikara doctargaledam erunthu allah than alla makalaiyum kakka veandum. aameen

 2. ravi_aa says:

  நம்ம வாத்தியார் சுஜாதாவிற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட மருத்துவமனை அனுபவங்களை சுவையாகவும் நகயுருக்க் உருக்கமாகவும் யாரும் எழுதினதில்லை . Get well soon. Bonne santé !

 3. Ananth.S says:

  I Pray the almighty to keep you safe and make you active soon….

 4. S.M.A. SALAM says:

  அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

  எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் (Nagoorumi) விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்கிறேன்.

  வஸ்ஸலாம்
  Ln. Nagore S.M.A. Salam from Paris

 5. “அழுகையும் அச்சமும் என் மனைவியின் குடும்பசொத்து. அந்த சொத்துக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் என் மனைவி காப்பாற்றி வருகிறாள். எனக்கு அதுதான் வேண்டும். என்னவோ ஏதோவென்று பயந்தால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுவாள். அவள் கையால் சமைத்து தாலிச்ச சோறும் மட்டன் கறியும் சாப்பிட்டுவிட்டால் என் நாக்குக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்.” மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்த அருள் .

 6. //அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே ’கத்னா’வெல்லாம் செய்தாயிற்றே! இப்போ எதையாவது செய்து ‘உள்ளதும் போச்சு’ என்று ஆகிவிடப்போகிறது என்று தோன்றியது! ஆனால் முழுமையாக தொடைகள்வரை ’ஷேவ்’ செய்த பிறகே அவர் விட்டார். நல்லவேளை வெறும் ஷேவிங்தான், ‘சீவிங்’ எதுவும் இல்லை!//

  மரணம் உங்களை நெருங்கியதை சொல்லும்போது கூட் வேதனையில்லாமல் அதை நைக்சசுவையுடன் சொல்லியுள்ளீர்கள்.

  “இன்ஷா அல்லாஹ் லா பஸ் தாஹஹ்ரூன்”

  இறைவன் உங்களை வெகு விரைவில் குணப்படுத்துவானாக ஆமின்.!!

 7. அவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன்
  http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_6705.html
  குர்ஆனில் வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வெவ்வேறு வார்த்தைகள் (ஆங்கிலத்தில் )
  http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_2853.html

 8. வாழ்க்கை ‘ஹயாத் ‘ நீடித்தல் இறையருள்.
  Please visit
  http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_2234.html

 9. முன்பு இருந்ததை விட எல்லா வகையிலும் இன்னும் சிறப்பாக, சுறுசுறுப்பாக நீண்ட நாள் நல்வாழ்வு வாழ குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

 10. உன் நெஞ்சின் உள்ளே இருக்கும் பேரன், உன் நெஞ்சின் வெளியே வெகுசீக்கிரம் விளையாட நாயன் நல்லருள் புரிவானாக! இந்த விநாடியும், அடுத்த விநாடியும் படைத்த உன்னை, ஒவ்வொரு விநாடியும் படைத்தவன் காப்பாற்றி, நீண்ட ஆயுளை வழங்குவானாக! எங்கள் கண்ணீர் துஆக்கள், இறைக்கதவுகளைத் தட்டட்டும். ஆமீன். – ப்ரியமுடன், தம்பி தீன் (சிங்கப்பூர்)

  • நாகூர் ரூமி says:

   அழகாக எழுதியிருக்கிறாய். உனக்கும் எழுத்து கைகூடுகிறது!

 11. Kader Mohideen @ Zain Ali says:

  Dear Macchan, Assalamu Alaikum.
  May Allah’s Blessings be with you and with our family forever, Aameen! Insha Allah, you will be alright and you will recover from the incident gradually. Our Prayers will be there for you forever, Aameen!! Insha Allah, I will see you soon by end of Dec 12 or beginning of Jan 13. Please rest well and utilise the time for resting at home with a good sleep.

 12. மருத்துவரின் அறிவுரைப்படி உணவு பழக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஸார்.. இவ்வளவு பெரிய போஸ்ட்டை இப்போது எழுதவே தேவையில்லை.. இந்த அளவுக்கு உழைப்புகூட தேவையில்லாதது.. முதலில் ஓய்வுதான் உங்களுக்குத் தேவை..! இணையத்திற்கு பின்பு வாருங்கள்.. நாங்கள் இங்கேதான் இருப்போம்..!

  • நாகூர் ரூமி says:

   இந்த போஸ்ட்டையும் நான் முன்னர் செய்வதுபோல ஒரே மூச்சில் எழுதவில்லை. ஒவ்வொரு நாளைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பத்து நாளாக எழுதினேன். ரொம்ப நன்றி நண்பரே.

 13. SARAVANAN SACHIDHANANDAM says:

  நட்பின் ஆழம் ….பாசத்தின் உச்சம்…..பிரார்த்தனையின் பலன்…..வலியின் வேதனை….கலையின் நேசம்…..மொழியின் ஆளுமை…..எல்லாம் உணர வைத்த எழுத்து ……எல்லாவற்றுக்கும் மேல் தொடர்பில் இல்லா என் போன்ற மாணவர்களையும் உங்களுடன் பயணிக்க வைத்த எழுத்து….

  கண்ணீரின் மொழி அலாதியானது. அது சொல்லாத செய்திகளே இல்லை. எல்லாமே அன்பின் செய்திகள். பாசத்தின், உறவின் வெளிப்பாடு. ஆனால் அழுகை மட்டுமே அன்பின் வெளிப்பாடு அல்ல. சமயத்தில் சிரிப்பும், ஒன்றுமே நடக்காத மாதிரி இருப்பதும்கூட அன்பின் வெளிப்பாடுகள்தான்

  “எத்தனை லட்சம் வேணும்னாலும் தரேன் மாப்ளெ, கவலப்படாதெ”-

  உங்களின் பேரவா நிறைவேற என்னுடைய துஆ…….

 14. kosindraa says:

  வணக்கம் தோழர் .உங்களை அல்லாதான் காப்பாற்றினார்.நல்ல வேளை டாக்டர் காப்பாற்றினாரென்று சொல்வீர்களென்று நினைத்து விட்டேன்.
  சிறப்பாக வாழ வாழ்த்துகள்

 15. Mohankumar says:

  சார் ஹார்ட் அட்டாக் மற்றும் ஆஞ்சியோப்லாஸ்ட்டி குறித்து அனைவரும் அறியும் வண்ணம் விரிவாக எழுதியுள்ளீர்கள்

  வெகு சிலருக்கு தான் ஆஞ்சியோப்லாஸ்ட்டியுடன் முடிகிறது. அத்துடன் முடிந்தது நல்ல விஷயம். எங்கள் அக்கா கணவருக்கு பை பாஸ் ஆனபோது ஒரு மாதம் வேலை நேரம் தவிர அவர் அருகிலேயே இருந்ததால் இதில் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது

  விரைவில் பூரண நலமடைவீர்கள்.

  நெகிழ்வான பதிவு

 16. zahir says:

  roomi sir, such a respected spritual personality and professor ,not aware of medical procedures ….very much surprsing …..!Good sharing of thoughts ….but some sentences could have been removed….and shouldhave added how people must be provactive in such situations!!
  zahir

  • நாகூர் ரூமி says:

   Thank u for labelling me as a spiritual personality. But I am not a medical personality anyway! Pls Tell me what sentences may be removed. Ishal Allah shall do so.

 17. நிச்சயமாக என் துஆவில் எப்போதும் நீங்களும் இருக்கிறீர்கள் ரஃபி

 18. Nisha Mansur says:

  விரைவில் பூரண சுகமடைய வாழ்த்துக்கள்….
  அனுபவம் எள்ளலாக இருந்தது…..

 19. தாஜ் says:

  இத்தனை அழகாக எழுதி
  ரசிச்சி
  படிக்க முடியாமல்
  செய்திட்டிங்களே ரஃபி!

  நலம் திரும்பட்டும்.
  நானும் துவா செய்கிறேன்.
  -தாஜ்

  • நாகூர் ரூமி says:

   ரொம்ப நன்றி தாஜ் நான் உங்களுக்கு நிறைய கடன்பட்டுள்ளேன்

 20. Though I am not a big fan reading yours, thought of turning on a fan to read yours (this time).

  InshaAllaah hope all is well to be strong with hope.

  By the Grace of Allaah get well soon so that you never get ill again.

  May Allaah bless you and your family.

 21. sadayan aman says:

  கடைசிவரை வாசிக்க இயலவில்லை கண்கள் பனித்து விட்டது. Take care professor.
  will meet very soon விரைவில் குணமாகித் திரும்ப எனது அவாவும் துவாவும்

 22. sivasanakr says:

  இறைவன் அருளால் விரைவில் பரிபூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்

 23. ARUL .R AMBUR says:

  கண்ணீரின் மொழி அலாதியானது. அது சொல்லாத செய்திகளே இல்லை. எல்லாமே அன்பின் செய்திகள். பாசத்தின், உறவின் வெளிப்பாடு. ஆனால் அழுகை மட்டுமே அன்பின் வெளிப்பாடு அல்ல. சமயத்தில் சிரிப்பும், ஒன்றுமே நடக்காத மாதிரி இருப்பதும்கூட அன்பின் வெளிப்பாடுகள்தான். இறைவன் அருளால் விரைவில் பரிபூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்

 24. sathiq basha says:

  விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்கிறேன்.

 25. A.MANGAI says:

  Iam Mangai from Ambur mailing this.Thro’ Manimaran I came to know abt your health condition.A potential person should live longer.Its just a warning-from your article I cd understand that, Take good care of yourself. Wishing you speedy recovery–mangai.

 26. naazar says:

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  மிகவும் கடினமான ஒரு நிகழ்வை கடந்து வந்துள்ளீர்கள், இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாய் நெகிழ்ச்சியாய் பகிர்ந்ததில் உங்களின் உணர்வை நானும் உணர்கிறேன்.

  அல்ஹம்துலில்லாஹ்.

  உங்களின் குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் எனது ஸலாத்தினை தெரிவிக்கவும்.

  அன்புடன்
  நாசர் – மதுக்கூர்
  UAE

 27. Vijay says:

  நீங்கள் எங்களுக்கு சொல்லித்தந்த மறக்கும் ஞானத்தின்படி உங்களது உபாதை மறைந்து உடல்நலம் பெருகட்டும். எப்பொழுதும்போல் எங்களுக்கு ஆலோசனை நல்கிட எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக அருள்புரிவான்.

 28. ஆண்டவன் உங்களுக்கு இந்த கஷ்டத்தை கொடுத்திருக்க வேண்டாம் சார்,
  “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்று விட்டு விடுங்க சார். மேற்கொண்டு எந்த பிரச்சினையும் இன்றி விரைவில் பூரண குணமடைவீர்கள்.

  வணக்கத்துடன்,

  K.தாமோதரன்

 29. Dear Rumi Sir,

  Assalamu alaikum, Kairiythki sir (pardon me if misspelled) You may not recollect me sir… I left out with no words to say, literally teared. Yes sir, the almighty bless every one but he takes special care of his “chella kuzanthai”, needless to mention here you are one among.

  “அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலங்குமோ ரிறையின் இனிய பேர் போற்றி”

 30. Mohamed Naleem says:

  “இன்ஷா அல்லாஹ் லா பஸ் தாஹஹ்ரூன்”

  இறைவன் உங்களை வெகு விரைவில் குணப்படுத்துவானாக ஆமின்
  Wassalam
  Mohamed Naleem

 31. S.Kuppusamy says:

  எல்லா நிலைகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதுதான் உண்மயான ஆன்மிகவாதியின் தன்மையாக இருக்கும். நானும் அப்படி இருக்க முயல்கிறேன். Thank you for the above statement sir. Getwell soon.

 32. Rafeekdeen says:

  InshaAllaah you get well soon and write & Publish more articles.

  May Allaah bless you and your family

 33. ismath says:

  பூரண நலம்றெ துவா செய்கிறேன்… இந்த நிலையிலும் உங்களின் எழுத்து கண்களை நனைத்தது…

 34. Hussain Munawer Beig says:

  மனிதனுக்கு ஏற்படும் சராசரி மிரட்டல்தான்! ஆனால் மார்க்கண்டேயனுக்குமா??????????????? வியந்தேன்!!!பிரார்த்திக்கிறேன் முதல் முறையாக….இதுவும் கடந்து போம்!!!!!
  பிரியத்துடன்
  மடையன் முனவ்வர் பே.

 35. NIYAS AHMED says:

  insha allah …yu ll be cure at soon ….may allah peace upon yu and u r family….

 36. கு. மணிகண்டன் மேட்டூர் அணை says:

  என்னுடைய மானசீக குருவே
  இந்த பதிவை நான் காணாமலே போயிருக்கக்கூடாதா?
  எல்லாம் வல்லோன் அருளாளனுக்குத் தெரியாதா “எம் கண்ணீரின் மொழி அலாதியானது. அது சொல்லாத செய்திகளே இல்லை. எல்லாமே அன்பின் செய்திகள். பாசத்தின், உறவின் வெளிப்பாடு. ஆனால் அழுகை மட்டுமே அன்பின் வெளிப்பாடு அல்ல” என்று.
  உங்களுடைய குடும்பத்தார் மற்றும் சுற்றதார் , நண்பர்களின் அன்பான பிரார்த்தனைகளுடன் அடியேனைப் போன்று உங்களிடம் அதிகம் தொடர்பில் இல்லாமல் உங்களுக்காக இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்யும் உள்ளங்களுக்காகவும் அவன் நிச்சயம் கடைக்கண் பார்ப்பான்
  நலமே நிகழும்
  பணிவான வணக்கங்களுடன்
  அன்பன்
  யாக்ஞவல்கியன்
  (கு. மணிகண்டன், மேட்டூர் அணை).

 37. மிகவும் கடினமான ஒரு நிகழ்வை கடந்து வந்துள்ளீர்கள், இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாய் நெகிழ்ச்சியாய் பகிர்ந்ததில் உங்களின் உணர்வை நானும் உணர்கிறேன்.

  அல்ஹம்துலில்லாஹ்.

 38. yousuf says:

  allah unkaluku sugam kuduppan inshal allah….

  Thanks for Raja Hussain sir and firous sir who is help to our professor… and also thanks to my professor mr.aadil (now principal)

 39. vanijayam says:

  கருணையே வடிவான இறைவனின் திருவருள் தாங்களுக்கு என்றும் நிலைத்திருக்கும்.பிராத்திக்கின்றேன் அண்ணா.

 40. Sheik Uduman says:

  I am praying for your good health,

 41. Niyaz Ahmed says:

  RABBANA WA LA TUHAMMILNA MA LA TAQATA LANA BIH. WA FU ANNA WAGHFIRLANA WARHAMNA. ANTA MAWLANA FANSURNA ALAL-QAWMIL KAFIRIN.

 42. insha allah you will recover soon, sir and by the duas and the grace of the almighty you will live long with good health and prosperity.
  please take care of your health.

 43. விரைவில் பூரண குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பிரார்த்திக்கிறேன்.
  எம்பெருமாளின் அன்பும் அருளும் ஆசிகளும் எப்போதும் உமக்குண்டு.

  என்றும் அன்புடன்,
  துளசி கோபால்(நியூஸி)

 44. V.MOHAMED ILYAS says:

          அன்புள்ள நானா, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

           தங்களுக்கு உடல் நலமில்லாது போன செய்தி அறிந்து மனதிற்கு கஷ்டமாக இருந்தது.நாயன் தங்களுக்கு ஒரு குறையும் விட மாட்டான்.
  தங்கள் நண்பர் சோம வள்ளியப்பன் சார் சொன்னது போல் எத்தனையோ பேருக்கு இவர் ஓதிவிட்டிருக்கிறார்.அத்தனை பேரும் இவருக்காக பிரார்த்தித்திருப்பார்கள்.
  இது உண்மை .

  “இன்ஷா அல்லாஹ் லா பஸ் தாஹஹ்ரூன்”

  இறைவன் உங்களை வெகு விரைவில் குணப்படுத்துவானாக ஆமின்.!!

  வஸ்ஸலாம்
  அன்புடன் : வா.முஹம்மத் இல்யாஸ்
  லண்டன் .

 45. W.Mohamed Younus says:

  தோழர் நாகூர் ரூமி இன்ஷா அல்லாஹ் உங்களை வெகு விரைவில் அல்லாஹ் குணப்படுத்துவானாக விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பிரார்த்திக்கிறேன்.ஆமின் அன்பன் W,Mohamed Younus,J M C ,trichy

 46. அஸ் ஸலாமுன் அலைக்கும்,
  தானாய் கசிந்த கண்ணீர் துளிகளை துடைக்கவும் தோன்றாமல் வாசித்து ’சிரித்து’க்கொண்டேன்.குழந்தமை மாறாத உங்கள் குணாம்சத்தை கண்ணுறும் போதெல்லாம் ஆச்சாரியம் தான் தொக்கி நிற்கும்.சிரிக்க வைப்பதற்கும் சந்தோஷமாய் இருப்பதற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்த்தியது ‘பூனை’.காரணிகளில் ’இரண்டா’வதை காலம் கடத்தி உணர்த்திய அல்லாஹ்வின் நாட்டம் நலமடையச்செய்வது மட்டுமே என்று நம்புகிறேன்.நீங்கள் நலமுடன் இருந்தீர்கள்…நலமுடனே இருக்கிறீர்கள்.நலமுடனே இருப்பீர்கள்.இன்ஷா அல்லாஹ்!
  அன்புடன்,
  முஸ்தாக்(சு.மு.அகமது)

 47. manivannan says:

  i can’t believe gurugi ….. i have been praying…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s