பாட்பூரி – 06

பாட்பூரி – 06

Viswaroopam-Movie-Photos-1067விஸ்வரூபம் வெர்சஸ் ஆமிர்

என் நண்பர் ஆபிதீனின் மகனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். துபாயிலிருந்து வந்திருந்த அவரைப் பார்க்க நான் அவர் மனைவி வீட்டுக்குப் போயிருந்தேன். அறையில் அவரும் மகனும் இருந்தனர். அவர் என்னோடு தனியாக, சுதந்திரமாகப் பேச விரும்பினார். எனவே மகன் அறையைவிட்டு வீட்டுக்குள் போகவேண்டும். அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?

“வாப்பா (குழந்தைகளைக் கொஞ்சும்போது மகன் வாப்பாவாகிவிடுவார். மகள் ம்மாவாகிவிடுவாள். இதெல்லாம் எழுதப்படாத கொஞ்சல் இலக்கணம்). நீ இந்த ரூம்லயே இரிக்கணும் என்னா?” என்று சொன்னார். உடனே பையன், “இல்ல, நா வெளியே போவேன்” என்றான். அவர், “ம்ஹும், நீ இங்கதான் இருக்கணும்” என்று மறுபடியும் சொன்னார். “முடியாது, நா வெளியே போவேன்” என்று சொன்ன மகன் வெளியிலும் போய்விட்டான்.

”அப்பாடா, போயிட்டான். போ என்று சொன்னால் இருப்பேன் என்று சொல்வான். எது சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் செய்வான்” என்று சொல்லிவிட்டு கதைவைச் சாத்தினார்! (பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை நான் எழுதுகிறேன். சொற்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் விஷயம் உண்மை).

வேண்டுமென்றால் வேண்டாம். வேண்டாமென்றால் வேண்டும். பார்க்காதே என்றால் பார்ப்பேன். பார் என்றால் பார்க்க மாட்டேன். இதுதான் மனித இயல்பு. அதுதான் கமல்ஹாசனின் விஸ்வரூம் படத்தையும் அதன் மூலம் கமலையும் இன்று வாழ வைத்திருக்கிறது.  

விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்து கடைசியில் படம் வெளிவந்து கமல்ஹாசனுக்கு அவரது வீட்டையும் இதர சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டது (என்று நினைக்கிறேன்). எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் – 230 கோடி என்று சொல்கிறார்கள் – கிடைத்ததாம்.

கமல் நன்றி சொல்வதாக இருந்தால் – அதெல்லாம் அவருக்குப் பழக்கமிருந்தால் – எதிர்ப்புக்கொடி பிடித்த ஏகப்பட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். ஏன்? படத்தைப் பார்த்தேன். ஏண்டா பார்த்தேன் என்று ஆகிவிட்டது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு முடியும் புரியவில்லை! எந்த எதிர்ப்புமின்றி படைத்தை வெளியிட்டிருந்தால் படம் ஒரு சூப்பர் தோல்வியைத் தழுவியிருக்கும். கமலும் தமிழ்நாட்டைக் காலி செய்து  அமைதியான ஒரு நாட்டுக்கு அல்லது ஸ்டேட்டுக்குப் போயிருக்கலாம். (ஒருவர் டி.வி. பேட்டியில் இதுபற்றிப் பேசும்போது, அமைதியான மாநிலத்துப் போகப்போறாராம். எங்கே? குஜராத்துக்கா? என்று கேட்டார். கமலை இதுபற்றி யோசிக்கவே நாம் விடவில்லை).

படத்தில் ஆப்கன் மொழி புஷ்டு, ஹிந்தி, உர்து, கஷ்மீரி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். ஓரிரு வார்த்தைகள் தமிழில் அவ்வப்போது. 90 சதவீதம் தமிழ் சப்-டைட்டில்-ஆகத்தான் இருக்கிறது. இது முதல் பிரச்சனை.

கதை என்ன, கதா நாயகன் ஆணா, பெண்ணா, அவன் நடனக் கலைஞனா, உளவுத்துறை ஏஜெண்டா என்றெல்லாம் புரிய படத்தை ஒரு நூறு முறை பார்க்க வேண்டும். இது இரண்டாம் பிரச்சனை.

சரி அப்படி என்னதான் சொல்லவருகிறது படம் என்றால் ஒன்றுமில்லை. ஆப்கனில் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுக்கிறார்கள். பாகிஸ்தானில் துரோகி என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு முஸ்லிமை மற்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பில் இருப்பவர்கள் தூக்கில் போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டும், அவர்களோடே அவர்களில் ஒருவராக, ஒரு பயிற்சியாளராக ஹீரோ கமல் முஸ்லிம் பெயரில் இருக்கிறார். அவரை யாராலும் சந்தேகித்துக் கண்டுபிடிக்க முடியவில்லை!

இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் கழுத்தை அறுக்கும் காட்சிகளையொத்த காட்சிகளில் ஓதப்பட்ட குர்’ஆன் வசனங்களையும், சில காட்சிகளையும், சில சப்தங்களையும் வசனங்களையும் நீக்கியிருக்கிறார்களாம்.

படம் ஏதாவது செய்தி சொல்ல வருகிறதா என்றால் வருகிறது. முஸ்லிம்களில் பலர் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் செய்தி. இந்த உலகம் முழுக்க மதங்களின் பெயரால் வன்முறைகள் நடந்தேறியுள்ளதை வரலாறு காட்டும். மன மாற்றத்தின் மூலமே இது மாறவேண்டும். ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலாக இதே பிரச்சனையை மையமாக வைத்த ”ஆமிர்” என்ற ஹிந்திப்படம் இருக்கிறது. நண்பர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால் தயவு செய்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆமிர்

2008ல் எடுக்கப்பட்ட இந்த ஹிந்திப்படத்தை இயக்கியவர் ராஜ் குமார் குப்தா. ஹீரோவாக நடித்தவர் ராஜீவ் கந்தல்வால். aamirஹீரோயின், கதக் நடனம், ப்ரிஜ் மஹராஜ், பெண்மையுடன் கூடிய ஆணில் அசைவுகள் இப்படி எதுவும் இந்தப் படத்தில் இல்லை.

கதை

மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் ஆமிர் தகுதி அடிப்படையில் டாக்டருக்குப் படித்துவிட்டு லண்டனிலிருந்து ஊர் (மும்பை) திரும்புகிறான். அவன் வந்து இறங்கியவுடன் ஒருவன் – யாரோ ஒருவன் – அவனிடம் ஒரு கைபேசியைக் கொடுத்துவிட்டு மறைகிறான். இவனுடைய லக்கேஜை எடுத்து ஒரு டாக்சியில் போட்டுவிடுகிறார்கள். யார் என்றெல்லாம் அவனுக்கு முதலில்  தெரியவில்லை. தன்  லக்கேஜைத் துரத்திக்கொண்டே அவன் டாக்சியை விரட்டிக்கொண்டு ஓடுகிறான். ஊருக்கு வந்தோமா, அம்மா, தம்பி, தங்கைககளையெல்லாம் பார்த்தோமா என்று இருக்கவேண்டிய அவனுக்கு இது தேவையில்லாத இம்சையாகிறது. யாரென்று தெரியாமல் இப்படி யாரோ செய்கிறார்கள் என்றுதான் அவன் முதலில் நினைக்கிறான்.

மெல்ல மெல்ல அவனுக்கு விஷயம் உணர்த்தப்படுகிறது. அவனை வேண்டுமென்றே பகடைக்காயாப் பயன்படுத்தியது ஒரு முஸ்லிம் தீவிரவாதக் கும்பல் என்று அவனுக்குத் தெரியவரும்போது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவனது குடும்பத்தினரைக் கடத்தி வைத்துக்கொண்டுதான் அவர்கள் இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். அது அவனுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுக்கிறது.

ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் அவனிடம் கொடுக்கப்படுகிறது. அதைக்கொண்டுபோய் சொல்லும் இடத்தில் சேர்த்துவிட்டால் அவன் குடும்பத்தை விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். குடும்பத்தினரைக் கடத்தி வைத்திருக்கும் வீடியோக்ளிப்பையும் ஒரு செல்ஃபோன் மூலம் அவன் பார்க்கும்படி செய்கிறார்கள். பயந்துபோன அவன் அவர்கள் சொன்னபடியெல்லாம் செய்கிறான்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கிறான். நிறைய பணம் இருக்கிறது. ஒருமுறை பாகிஸ்தானுக்கு  தொலைபேசியில் அவனைப் பேசவும் வைக்கிறார்கள். சரி, எக்கேடுகெட்டுப் போகட்டும், இந்தப்பெட்டிச் சனியனைக் கொடுத்துவிட்டு குடும்பத்தை மீட்டுவிடலாம் என்று நினைத்து தீவிரவாதிகள் சொல்லும்படியெல்லாம் செய்கிறான். ஆனால் முக்கியமான கட்டத்தில் சூட்கேஸை சிலர் திருடிச்சென்றுவிடுகின்றனர். குடும்பத்தை எப்படியாவது மீட்க வேண்டுமென்ற வெறியில் அலைந்து தேடி, அடித்து சண்டை போட்டு அந்தப் பெட்டியை மீண்டும் மீட்டுக்கொண்டு வருகிறான். சொன்னவேலையைச் செய்யாவிட்டால் தன் குடும்பத்தைத் தீவிரவாதிகள் கொன்றுவிடும் காட்சியையும் மனக்கண்ணில் காட்சியாகப் பார்க்கிறான்.

கடைசியில் ஒரு பொதுமக்கள் போகும் ஒரு பேருந்தில் அந்தப் பெட்டியை வைத்துவிட்டு இறங்கிவிடு என்ற கடைசி உத்தரவு அவனுக்கு வருகிறது. அவனும் செய்கிறான். பேருந்தில் ஒரு குழந்தை,பெண்கள் என்று அப்பாவிகள் நிறைந்ததாக அது இருந்தது. அவன் இறங்கியதும் அந்த சூட்கேஸில் உண்மையில் வெடிகுண்டுதான் இருக்கிறது, அது வெடித்து அப்பாவி மக்கள் இறப்பார்கள், ஆமிர் என்ற பெயருக்கு ஏற்றமுறையில் நீ ஒரு தலைவனாக, உண்மையான முஸ்லிமாகிவிட்டாய் என்று கைப்பேசி சொல்கிறது. அதிர்ச்சியடையும் ஹீரோ யாரும் எதிர்பாராத வகையில், சில வினாடிகளே மீதமிருக்கும் அந்த இடைவெளியில் மீண்டும் அந்த பேருந்தில் ஏறி, அந்த சூட்கேஸை எடுத்தணைத்தவாறே வெளியேறி யாரும் இல்லாத ஒரு இடத்துக்குச் சென்று அதோடு வெடித்துச் சிதறுகிறான். ஒரு முஸ்லிம் தீவிரவாதி பஸ்ஸில் குண்டுவைத்துவிட்டான், பின் கடைசி நேரத்தில் ஏன் அவன் மனம் மாறினான் என்று தெரியவில்லை என்றும் அடுத்த நாள் தினசரிகளில் செய்தி வருகிறது. அத்துடன் படம் முடிவடைகிறது.

படம் பார்க்கும் அனைவருக்குமே உண்மையான இந்தியனாக, இந்த ஹீரோவைப்போல் இருக்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. பாராட்ட வார்த்தையே இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த அற்புதமான உதாரணப்படம். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சொல்வதும் நினைப்பதும் எவ்வளவு அபத்தமானது, வரலாற்றுக்குப் புறம்பானது என்று உண்மையான வரலாற்று அறிவும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசன் ரொம்ப அறிவாளி, அவர் கதக் ஆடும்போது ரொம்ப அற்புதமாக இருக்கிறது, முகலே ஆஸம் படப்பாடலைக் கொஞ்சம் மாற்றி அவர்கள் பாடும் பாட்டு மனதை என்னவோ செய்கிறது – இதெல்லாம் ஓகே. ஆனால் படத்தின் செய்தி? ஆமிர் மலையின் உச்சியில் இருக்கிறது. விஸ்வரூப அதளபாதாளத்தில். மலையைப் பிடுங்கி எலியை விரட்டிய கதை.  

என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று காட்டுவது மட்டும் சிறப்பல்ல. நடந்ததும், நடப்பதும் விரும்பத்தகாததாக இருந்தால் என்ன நடக்கவேண்டும் என்று காட்டுவதுதான் அறிவார்ந்த செயல். அதை ஆமிர் செய்திருக்கிறது.

உகுஸ் புகுஸ்

ஐசிஐசிஐ வங்கியின் சமீபத்திய விளம்பரங்களில் ஒன்று. எந்த நாட்டு அல்லது ஏரியாக் குழந்தைகள் என்று தெரியவில்லை. ஒருவேளை நேபாலாக இருக்கலாம். இரண்டு அழகான குழந்தைகள். பள்ளிவிட்டதும் மிட்டாய் வாங்க ஆசையாய் ஓடிவந்து கடைக்கு முன் நின்று ஜேபியில் கைவிடும்போது அது ஓட்டையாய் இருக்கிறது. சோகமாகத் திரும்பும் அவர்களை கடைக்காரர் மிட்டாயால் தட்டி அழைத்து இலவசமாக இரண்டு மிட்டாய்களை அவர்களுக்குக் கொடுக்கிறார். எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு! ஐசிஐசியை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத சந்தோஷங்கள் கிடைக்கும் என்பதுதான் ஐடியா. அழகாக எடுக்கப்பட்ட நினைவுகூறத்தக்க விளம்பரப்படம்.

மாணவர்கள் போராட்டம்

வரலாறு காணாத அளவில் மாணவர்கள் இலங்கையில் நடந்த, நடக்கும் படுகொலைகளுக்காகவும் மனித உயிர் அழிப்புக்காகவும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கல்லூரிகளுக்கெல்லாம் காலவரையறையற்ற விடுமுறையும் விடப்பட்டுள்ளது. போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் என்று ஆதரவும் பெருகிக்கொண்டே போகிறது.

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து தீக்குளிப்பு போன்ற விஷயங்களில் இறங்க வேண்டாம். மனித உயிர் மகத்தானது. அதை இயற்கையான அழைப்பு தவிர செயற்கையாக, நாமாக எதுவும் செய்வது நல்லதல்ல. உங்கள் உயிர்கள் இந்த நாட்டுக்குத் தேவை. உங்கள் போராட்டங்கள் வெற்றி பெறட்டும். அது மிக கவனமாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. ஆனால் ஏமாற்றமளிக்கும் விதமாக அதன் வாசகங்கள் உள்ளன என்பது அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்து. இந்தியாவைப் பொறுத்தவரை அது எப்போதுமே பூமியைவிடப் பொறுமையாகவே இருக்கும் பழக்கம் கொண்டது. நானும் சின்னப் பையனாக இருக்கும் காலம்தொட்டே இந்திய மீனவர்களைப் பிடித்து வைத்துக்கொள்வது, சிறையிலடைப்பது, சுட்டுக்கொல்வது என்றுதான் இலங்கை இருந்துவந்துள்ளது. இன்னும் இருக்கிறது. எத்தனை காணொளிகளைக் காட்டினாலும், எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும், எத்தனை ஆவணங்களை எடுத்துக் காட்டினாலும் கூனல் விழுந்த இந்திய முதுகை நிமிர்த்துவது யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் இறையாண்மை என்று இனி சொல்லக்கூடாது, ஏனெனில் அதில் ஆண்மையில்லை என்று ஒருவர் கூறினார்! பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு யார் யார் குற்றவாளிகள் என்று ஒரு அறுபது பேரை அறிக்கை பெயர் குறிப்பிட்டுச் சொன்னது. அதில் ஒருவர்கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால்  இலங்கையோடு ஆயிரம் ஆண்டு உறவு என்று கூறியிருக்கிறது இந்தியா! இந்தியாவில் உள்ள அனைவரும் காறித்துப்பினாலே மூழ்கிப்போகும் அளவுக்குக் குட்டி நாடான இலங்கை நமக்குத் தரும் இன்னல்களையே அது இதுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு கொன்றால் ஏதாவது இந்தியா செய்யும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்?

காக்கச்சிப் பெண்ணுக்குக் கல்யாணம்

என் வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தார். அவருடைய மகனுக்குப் பிடித்த பாடல் என்று ஒன்றை அவருடைய செல்ஃபோனில் போட்டு அவனுக்குக் காண்பித்தார். அது ஒரு மலையாளப்பாடல். அதுவும் கார்ட்டூன் பாடல். பையன் அந்தப் பாடலைக் கேட்டு செமையாக டான்ஸ் போட்டான். அப்படி என்னதான் அந்தப் பாடலில் இருக்கிறதென்று நானும் கேட்டேன். அந்தக் கணத்திலிருந்து நாங்களும் அப்பாடலுக்குக் காதலர்களாகிவிட்டோம்! நீங்களும் கேட்டுப்பாருங்கள்:


Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s