நோன்பு – ஒரு சிந்தனை

இஜட். ஜபருல்லாஹ்

 

Z Nana-1ஜஃபருல்லாஹ் நானாவை சமீபத்தில் நாகூரில் சந்தித்தேன். ம்ஹும். நானாதான் என்னை வந்து பார்த்தார். எங்கள் புதிய பங்களா வீட்டில். சொல் புதிது என்று சொல்வார்கள். நானாவுக்கு சில பற்கள் விழுந்திருந்ததால் அப்படித்தான் இருந்தது. நாலு வார்த்தை பேசினால் ஐந்து வார்த்தை புரியவில்லை. ’வந்து வந்து’ என்று பலமுறை கூறுகிறார். எனக்கு என்னவோ போலிருந்தது. எனக்கும் தம்பி தீனுக்கும் பெரிய உந்துசக்தியாகவும் உதவியாகவும் இருந்தவர். என் துயரங்களில் பங்கெடுத்துக்கொண்டு, என் கூடவே இருந்து எனக்கானதைச் செய்தவர்.

 ஆனால் நானாவில் பிடிவாதம் ஓர் இதிகாசத்தன்மை கொண்டது. அவர் சொல்வதுதான் சரி. எப்போதுமே. எனினும் சிந்திக்கத்தெரிந்த சில முஸ்லிம்களில் ஜஃபருல்லா நானாவும் ஒருவர். இதை சிந்திக்கத்தெரிந்த யாருமே ஒத்துக்கொள்வர். அவருடைய பல  கவிதை வரிகள் எனக்கு பிரமிப்பூட்டியுள்ளன. எப்படியாவது அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரவேண்டுமென்ற  என் அவாவில் ஒருமுறை அவர்களுடைய கவிதைகளையெல்லாம் கேட்டேன்.

 ஆனால் யாரிடமும், யாரையும் நம்பி நூலையோ, கேசட்டையோ கொடுக்கமாட்டார். அது நாம் கொடுத்திருந்த நூலாக அல்லது கேஸட்டாக இருந்தாலும் சரி.

ஒருமுறை ஆம்பூர் வந்திருந்தபோது அவர் சொல்லச் சொல்ல நான் அவர் கவிதைகளை கணிணியில் உள்ளிட்டுக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் தொலைக்காட்சி சீரியல் ஒன்று தொடங்கியது. உடனே என்னைவிட்டுவிட்டு சீரியல் பார்க்க எழுந்தார்.

 “என்ன நானா இது? உங்க கவிதையைத்தானே அடிச்சிட்டிருக்கேன்!” என்றேன்.

“ஓய், அறிவில்ல? சீரியல் முக்கியமா கவிதை முக்கியமா?” என்று கோபமாகக் கேட்டுவிட்டு எழுந்துபோய்விட்டார்!

 அதுதான் ஜஃபருல்லா நானா!

இப்போது மறுபடியும் கெஞ்சிக் கூத்தாடி கவிதைகளையெல்லாம் லபட்டிக்கொண்டு வந்துவிட்டேன். நானே தேர்வு செய்துகொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் நூலாக வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ். ஆபிதீனிடம் 300 கவிதைகள் போல இருப்பதாகக் கூறினார். பார்ப்போம்.

 

Z Nana Attai-8திருமண அழைப்பிதழ்களை அழகாக வெட்டி வெட்டி கைக்கடக்கமான சின்னச் சின்ன செவ்வக வடிவங்களில் ஒட்டி, அவற்றில் கவிதைகள், குறிப்புகள், குர்’ஆன் வசனங்கள், நபிமொழிகள், சீரியல்களிலிலிருந்து தெரிந்துகொண்ட ‘தத்துவங்கள்’, ஏன் கட்டுரைகள்கூட எழுதுவது நானாவின் வழக்கம். நானாவின் தமிழ் எழுத்து ரொம்ப அழகாக இருக்கும்.

ஆங்கிலத்தில் Lateral Thinking என்று கூறும்வகையான சிந்தனை முறையைக் கொண்டது நானாவின் மூளை. எப்போதுமே வித்தியாசமாகவே சிந்திக்கும் திறன்  கொண்டவர். சில உதாரணங்கள்:

 1)    என் ‘அடுத்த விநாடி’ நூலுக்கு பா.ராகவன் (அந்த தலைப்பே அவர் வைத்ததுதான்) அட்டையில் “இந்த நூல் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றப்போகிறது” என்று ஒரு கேப்ஷன் கொடுத்திருந்தார். அதைப் பார்த்த ஜஃபருல்லா நானா, “அய்யய்ய, அப்ப இந்த நூலை வாங்கக்கூடாது” என்றார். ஏன் என்று ராகவன் கேட்க, “ஆமா, என் வாழ்க்கை சரியான திசையில் போய்க்கொண்டிருந்தால், அதை இது மாற்றிவிடுமல்லவா?” என்றார்! “சார், இப்புடி யாருமே யோசிச்சதில்லை சார்” என்றார் ராகவன்!

2)    அல்லாஹ் நம் பிடரி நரம்பைவிட அருகில் இருப்பதாகச் சொல்லுகிறான். அப்படியானால் அல்லாஹ் நமக்குப் பின்னால் இருக்கிறான். நாம்தான் அவனுக்கு முன்னால் இருக்கிறோம். அதனால்தான் நம்மால் அவனைப் பார்க்க முடியவில்லை. நம் இஷ்டத்துக்கு நடக்கிறோம். ஆனால் பின்னால் இருந்தால்தான் லகானைப் பிடித்து இழுத்து நம்மை கண்ட்ரோல் பண்ண வசதியாக இருக்கும். அதனால்தான் அவன் பின்னால் இருக்கிறான்” என்றார் என்னிடம் நாகூரில்.

 அவருடைய கவிதைகளை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கட்டுரை ஒன்று அதில் இருந்தது. நோன்பு பற்றி. ரமலான் நெருங்குவதால் அதை முதலில் உள்ளிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது. இதோ உங்களுக்காக. A taste of Zafarullah Nana. Lateral thinking of course. Enjoy (Or Suffer): 

*************

 ’நோன்பு’ என்ற வார்த்தைக்கு ‘உறுதி கூறுதல்’, ‘சங்கல்பம்’,  ‘விரதம்’ என்று அர்த்தங்கள் கூறலாம். ”உண்ணாமல் இருப்போம்” என்று போராட்டம் செய்யும்போது “உண்ணா நோன்பு” அல்லது “உண்ணா விரதம்” என்று கூறுகிறோம். ன் அதுபோலவே, ஒரு நாள் முழுதும் பேசமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது அதை “மௌன விரதம்” என்று கூறுகிறோம்.

 

Z Attaiஎனவே ’நோன்பு’ என்ற வார்த்தைக்குத் தமிழில் ‘பட்டினி’ என்ற பொருள் வராது. இஸ்லாத்தில் ‘நோன்பு’ என்ற சொல்லுக்கு  ஒரு புனிதமான இடம் இருக்கிறது. முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் நோன்பு நான்காம் இடத்தில் இருக்கிறது. அது ஒரு சங்கல்பம்.

 இந்த நோன்பு வைக்கக்கூடிய மாதம் “ரமலான்” ஆகும். இந்த மாதம் மிக முக்கியமானது. வரவேற்புக்குரியது. காரணம், இந்த மாதத்தில்தான் அல்லாஹ், அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருள்மறையின் முதற்சொல்லாக “ஓதுவீராக” என்னும் வார்த்தையை ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் ஹிரா என்ற மலைக்குகையில் பிரகடனப்படுத்தினான்.  அந்த ஓதுதல் எப்போது நாயகம் (ஸல்) நாவின் மூலம் துவங்கியதோ இன்றுவரை அந்த ஓதுதல் நிற்கவே இல்லை. உலக இறுதி நாளுக்குப் பிறகும்கூட அந்த ஓதுதல் நின்றுவிடாது என்பது உலகம் நிரூபித்துக்கொண்டுவரும் உண்மை.

 ரமலான் மாதம் முழுதும் ஆரோக்கியம் உள்ள ஆண், பெண் அனைவரும் உண்ணா நோன்பை மேற்கொள்ளவேண்டும் என வல்லநாயன் கட்டளையிட்டுள்ளான். இந்த நோன்பை உங்களின் மூதாதையருக்கும் கடமையாக்கி இருந்தேன் என்றும் திருக்குரானில் சொல்லிக்காட்டுகிறான்.

 தொழுவது, ஜக்காத் கொடுப்பது, ஹஜ் செய்வது போன்ற காரியங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால் வெளிப்படையாக அடையாளம் காணமுடியாது. “நான் நோன்பாளி” என்று ஒருவர் பொய் சொன்னால் அதைத் தெரிந்துகொள்ளவும் முடியாது. எனவே ஒருவரின் நோன்பை அல்லாஹ்வே நன்கறிவான்.

 ”இப்படி நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்” என்றும் உறுதியாகச் சொல்லுகிறான். இறைவனே நேரடியாகக் கூலிதரும் இந்த நோன்புக்கடமை மிக வலிமையும் புனிதமும் கொண்டதல்லவா? அதனால்தான் ரமலான் மாதம் வரப்போகிறது என்று தெரியும்போதே, எல்லோர் மனங்களும் மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறது.

 கலிமா, தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் – இந்த ஐந்து கடமைகளில் எது மிக முக்கியமானது என்று இமாம் அபூ ஹனிஃபா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், “இந்தக் கடமைகளில் கலிமா என்பது கொள்கைப் பிரகடனம். இந்த கலிமாவின் பொருள், ’அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் கிடையாது’ என்பது. மற்ற நான்கும் இந்தக் கொள்கையை நிலைநிறுத்தக்கூடிய கோட்பாடுகள். இந்த நான்கு கடமைகளும் ஒன்றுக்கொன்று சமமானதே. தர்க்க ரீதியாகப் பார்த்தால், ஒருநிலையில் நோன்பு முக்கியமானது” – என்று பதில் சொன்னார்கள்.

 அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: “பெண்கள் தங்கள் மாதவிடாய்க் காலத்தில் தொழவேண்டியதில்லை. பின்னால் சுத்தமான பிறகு, விட்ட தொழுகையையும் தொழ வேண்டியதில்லை. நோன்பையும் மாதவிடாய்க் காலத்தில் நோற்கக்கூடாது. ஆனால் சுத்தமான பிறகு விட்ட நோன்புகளை கட்டாயம் நிறைவேற்றவேண்டும். இந்த அடிப்படையில் நோன்பு முதன்மையானது” என்றார்கள்.

 நோன்புக்கு அடிப்படையான ஒரு கருத்தை அறிஞர்கள் பலரும் மார்க்கசீலர்களான ஆலிம்களும் கூறுகின்றனர்.

 “பசியின் கொடுமையை பணம் படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” என்று. ஒரு நோக்கில் இதை ஏற்கலாம். என்றாலும் முற்ற முழுக்க இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால், பசி என்பது ஏழைகளுக்கு மட்டுமே உரியது என்றும், பணக்காரர்களுக்குப் பசி தெரியாது என்பது போலவும் இந்தக் கருத்து இருக்கிறது.

 பணத்துக்கும் பசிக்கும் தொடர்பு கிடையாது. பசிக்கும் உணவுக்கும்தான் தொடர்பு உண்டு. கஞ்சத்தனமான ஒரு பணக்காரன் பசியை ஏற்றுக்கொண்டு காசை சேமித்து வைப்பதில்தான் இன்பம் காண்கிறான். ஆனால் சாதாரண ஒரு தொழிலாளி, வியர்வை சொட்ட உழைத்து, அன்றாடம் வரும் கூலிப்பணத்தை வைத்து தன் குடும்பத்தோடு உணவு உண்டு களிப்படைகிறான்.

 எனவே பசி எல்லோர்க்கும் உண்டு. பசி பொதுவானது. அதற்கு ஏற்றத்தாழ்வு இல்லை. பசியை அறியாத எந்தப் படைப்பும் இல்லை. மரத்தில் இருந்து, விலங்கு, மனிதர்கள்வரை எல்லாவற்றுக்கும் பசி உண்டு.

 ஆனால் நாம்தான் பசியைத் தொலைத்துவிட்டோம். இங்கே ஒருவிஷயத்தைச் சொல்லியாக வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் அதன் பின்னால் ஒரு காரணம் இருக்கும். இதை ஆன்மிகவாதிகள் ‘காரண உலகம்’, ‘காரிய உலகம்’ என வகைப்படுத்துவார்கள். சூரியன் உதிக்கிறது, காரணம் இருட்டைப் போக்குவதற்காக. சூரியன் மறைகிறது, காரணம் இரவு வருவதற்காக! கீழே விழுவதற்குக்கூட அறிஞர்கள் தன்னம்பிக்கைதரும் ஒரு காரணத்தைக் கூறுவார்கள். விழுவது மீண்டும் எழுவதற்காக – என்று. இப்படி எந்த செயலுக்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

 உணவு எல்லாருக்கும் முதல் தேவை. பிறகு உடை, மூன்றாவது வசிக்க இடம் என பொருளியல் அறிவியலாளர்கள் கூறுவார்கள். உணவு உண்ண காரணம் என்ன என்று பார்த்தால் பசிதான். ஆனால் நம்மில் பெரும்பாலோர் பசிக்கு உண்பதில்லை. “பசித்தபின் புசி” என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். அவர்கள் நோயின்றி வாழ்ந்தார்கள். அவர்களின் சராசரி ஆயுள் 100 ஆக இருந்தது. இப்போது 60 வயது என குறிக்கின்றனர்.

 இன்று நாமோ உணவை கடிகாரத்தோடு இணைத்துவிட்டோம். அதனால்தான் ஒவ்வாமை, அஜீரணம், வயிற்றுக்கோளாறு என்று அவதிப்படுகிறோம்.

 அதுபோல, தண்ணீர் குடிப்பதுகூட நாம் சரியாகச் செய்வதில்லை. ஒரு மினரல் பாட்டில் தண்ணீர் நம் கண்ணில் பட்டுவிட்டால் உடனே வாங்கி பாதி பாட்டில் காலிசெய்துவிடுகிறோம். ஓசியில் கிடைக்கிறதே! தண்ணீர் குடிப்பது ஒரு செயல் என்றால் அதன் காரணம் தாகம் என்பதை நாம் எண்ணுவதே இல்லை. தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்கவேண்டும் என உறுதிகொண்டால் சிறுநீரகத் தொந்தரவுகள் பெரும்பாலும் வராது. தாகமின்றித் தண்ணீர் குடிப்பதினால் சிறுநீரகத்துக்கு அதிகமான வேலை பளுவைக் கொடுக்கிறோம். அதனால்தான் அது பழுதடைகிறது!

 எனவே, காரணத்தோடுதான் காரியம் நடக்கவேண்டும். தாகித்த பிறகுதான் தண்ணீர் குடிக்கவேண்டும், பசித்த பிறகு உணவு உண்ணவேண்டும் என்பதே இறைநீயதி.

 பசி, உணவு இவை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? நமக்குப் பசிக்கிறது. ஒரு தோசையோ அல்லது இரண்டு இட்லிகளோ நாம் சாப்பிடுகிறோம். பசி போய்விடுகிறது. சாதாரணமாக நாம் நினைப்பது, சாப்பிட்ட தோசையோ இட்லியோ பசியைத் தீர்த்தது என்றுதான். ஆனால் இஸ்லாத்தின் தத்துவம் அப்படிச் சொல்லவில்லை. நாம் சாப்பிட்ட இட்லியோ அல்லது தோஆசையோ நம் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக, அவற்றைக் கருவியாக வைத்து இறைவன்தான் நம் பசியைத் தீர்த்தான் என்பதுதான்!

 இறைவன் அன்றி நாம் சாப்பிட்ட பொருட்கள்தான் நம் பசியைத் தீர்த்தன என்று சொன்னால், சிலர் ஏன் ஜீரணம் ஆகாமல் தவிக்கிறார்கள்? சிலர் வாந்தி எடுத்துவிடுகிறாகளே ஏன்? அவர்களது பசி தீரவில்லையே! அதுவும் இறைவனின் நற்செயல்தான்! ஒவ்வாத அந்தப் பொருட்களை மனிதனின் உடலில் இருந்து அகற்றுகிறான். வேறு உணவைக் கொடுத்து பசியைத் தீர்க்கிறான்.

 இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை, நாம் சாப்பிடும் பொருட்கள் நம் பசியைத் தீர்க்கும் சக்தி பெற்றதல்ல என்பதைத்தான். ஏனென்றால் உணவு உண்ணவேண்டியது பசி வருவதால்தான். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் பசியைத் தீர்க்க முடியும் என்றால், அவற்றால் நமக்கு பசியைத் தோற்றுவிக்க முடியுமா?

 அது இறைவனால்தான் முடியும். பசியைத் தோற்றுவிக்கிற இறைவன்தான் உணவுப்பொருள்களைக் கருவியாக்கி பசியைத் தீர்த்தும் வைக்கிறான். அதுதான் உண்மை!

 ஒரு மனிதன் எப்படி சாப்பிட்டால் நல்லது என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்கள். “அரை வயிறு சாப்பிடவேண்டும். கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறு காலியாக இருக்கவேண்டும்” என்று அவர்ள் சொன்னபோது அவர்களின் திண்ணைத்தோழர்களில் ஒருவர் கேட்டார். “அரை வயிறு என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று. அதற்கு பெருமானார், “நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று உங்கள் மனம் சொல்லும். அப்போது சாப்பிடுவதை உடன் நிறுத்திவிட்டு கையைக் கழுவி விடுங்கள்” என்று.

 பெருமானார் சொல்லிக்கொடுத்த வழியில் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுக்கோளாறோ அஜீரணப் பிரச்சனையோ வராது என உணவு இயல் வல்லுனர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

 உடல்நலம் இல்லையென டாக்டரிடம் போய்க்காட்டும்போது, அவர் முதலில் கேட்கும் கேள்வியே நன்றாகப் பசிக்கிறதா என்பதுதான். இதற்கு என்ன பொருள்? ஒரு மனிதனுக்கு நன்றாக பசி எடுக்கிறது என்றால் அவன் உடல் நலத்தோடு இருக்கிறான் என்பதுதானே! எனவே தான் படைத்த மனிதர்களை நல்ல உடல்நலத்தோடு வாழவைக்கத்தான் இறைவன் இந்த உண்ணா நோன்பைக் கட்டாயமாக்கி இருக்கிறான் என்பதில் சந்தேகம் உண்டா?

 “உலக இயக்கத்துக்கு எது அடிப்படையான காரணம்?” என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்தபோது, சிக்மண்ட ஃப்ராய்டு என்ற மனவியலாளர் பாலுறவு (sex) என்று கூறினார். அவருக்குப் பின் வந்த ஜங், பாலுறவு என்பது ஒரு எல்லைவரைதான். மதம் சார்ந்த உணர்வே உலக இயக்கத்துக்குக் காரணம் என்றார்.

ஆனால் இமாம் கஸ்ஸாலி (ரலி) கூறினார்கள்: “உலக இயக்கத்துக்கு பசிதான் காரணம்” என்று. இதுதான் உண்மை என்பதை இன்றளவும் உலகம் நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

 பசி மட்டும் மனிதனுக்கு இல்லாவிட்டால் அவன் எந்த வேலையையும் செய்யமாட்டான். எதற்காகச் செய்யவேண்டும்? எல்லா வேலைகளுக்கும் ஊதியமாகப் பணம்தான் கொடுக்கப்படுகிறது. பசியே இல்லையென்றால் பணம் எதற்கு?

 சிலர் இப்படிக் கேட்கலாம். “சரி, உணவுதான் தேவையில்லை. உடை, வீடு வேண்டாமா” என்று. உடையைத்தயாரிக்கவும், வீட்டைக் கட்டிக்கொடுக்கவும் எவர் வருவார்கள்? அப்படியே யாராவது வந்தால் எதைக்கொடுப்பீர்கள்? பணத்தைத்தானே! எந்தத் தயாரிப்பு வேலையும் உலகில் நடக்காது!

 எனவே உலக இயக்கத்துக்கு அடிப்படை பசிதான் என்று இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் கூறியது சரிதானே? பிச்சைக்காரர்கள் உருவாவது பசியினால்தான். “பசிவந்தால் பத்தும் பறந்துபோம்” என ஒரு பாடல் சொல்லும். மனிதனின் மிகப்பெரிய பண்புகள் பத்தும் பசி வந்துவிட்டால் பறந்து போய்விடுமாம்!

 ஒரு மனிதன் பசியோடு இருந்தால் அது சமுதாயக் குற்றம் என்று பாரதி சொல்கிறான். எல்லோரும் நன்றாக உண்டு களிக்க, ஒருவன் மட்டும் பசியில் துன்பப்படுவதா? மிகப்பெரிய கோபம் வருகிறது பாரதிக்கு! “இனியொரு விதி செய்வோம். அதை…எந்நாளும் காப்போம். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடுகிறான்!

 பசியினால் பிச்சையெடுக்கும் ஒருவனைப் பார்க்கிறார் வள்ளுவர். எல்லோரும் நன்றாக வாழும்போது இவன் மட்டும் ஏன் பிச்சையெடுக்கிறான்? இதற்குக் காரணம் யார் என யோசிக்கிறார். எல்லோரையும் படைத்தவன்தானே இவனையும் படைத்திருக்கவேண்டும்? இவனை மட்டும் அந்த இறைவன் ஏன் பிச்சையெடுக்க வைத்தான்?  எண்ண எண்ண கோபம் வருகிறது அவருக்கு.

 இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்தும் கெடுக உலகியற்றியான்

 ஒருவனை மட்டும் படைத்த இறைவன் பிச்சையெடுக்க வைத்தான் எனில், உலகம் பூராவும் பரந்து பிச்சையெடுத்துக் கெடுக என்று இறைவனுக்கு சாபம் விடுகிறார்!

 பசி இல்லையேல் உலக இயக்கம் இல்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் தம் பசியைத் தீர்த்துக்கொள்ளும் நிலையில் இருக்க சிலர் மட்டும் பட்டினியில் உழன்றால் அது சமுதாயக் குற்றம். அவர்களின் பசியைத் தீர்க்கவேண்டியது மனிதர்களின் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.

 பாரதி, வள்ளுவர் கூறியவற்றில் அவர்களின் கோபம் தெரிகிறது. உலகத்தை அழிப்பதாலும், இறைவனைப் பிச்சையெடுக்க வைப்பதாலும் தனி மனிதனின் பசி போய்விடுமா? உணவு வந்துவிடுமா?

 பொதுவாகவே கவிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். கோபக்காரர்கள். அதனால்தான் பாரதி, வள்ளுவர் வாக்கில் கோபம் கொப்பளிக்கிறது. ஆனால் தனிமனித பசி தீர தீர்வு இல்லை!

 நபிகள் நாயகம் (ஸல்) இதற்கு எளிய தீர்வொன்றைக் கொடுத்தார்கள். “அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க, நீ சாப்பிட்டால், நீ என்னைச் சேர்ந்தவனல்ல” என்று சொன்னார்கள்.

 இதில் முக்கியமானது அடுத்த வீட்டுக்காரன் யார் என்பது. அவன் அப்துல்  காதரா? அலக்சாண்டரா? அழகிரிசாமியா? என்பது முக்கியமல்ல. பக்கத்து வீட்டில் பசியோடிருக்கும் ஒரு மனிதன். அவன் யாராக இருந்தாலும் சரி. இப்படி அடுத்த வீட்டுக்காரனை அவனவன் பார்த்துக்கொண்டால் எவனும் பசியோடு இருக்கமாட்டான். பிச்சைக்காரர்கள் உருவாக மாட்டார்கள். இதுதானே உண்மை?

 இறைவன் கூறுகிறான்: “பசியோடு நீ  என்னை வணங்காதே” என்று. ஏன் இப்படிக் கூறுகிறான் என்பதை பின்னால் யோசிப்போம். நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? மனைவி சாப்பிடக் கூப்பிடுகிறாள். “இரு! கடன் வைக்கக்கூடாது. நாலு முட்டி போட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நிம்மதியாகச் சாப்பிடலாம்” என்கிறோம்!

 பசியைத் துறத்திவிட்டு நிம்மதியாய்த் தொழச்சொன்னால், தொழுகையை வேகமாக முடித்துவிட்டு நிம்மதியாய்ச் சாப்பிடலாம் என்கிறோம்!

 ஆனால் “பசியோடு என்னைத் தொழாதே” என்று ஏன் இறைவன் சொன்னான் தெரியுமா? பசியோடு நீ என் முன் வந்து நின்றுதொழுதால், நீ என்னை அவமானப் படுத்துகிறாய் என்று பொருள். …

 ”ஆமாம். உன்னைப் படைத்தவன் நான். உணக்கு வேளா வேளைக்கு உணவு தருவது என் கடமை. என் கடமையை நான் செய்தபின்னும் உணவை ஒதுக்கிவைத்துவிட்டு நீ பசியோடு வந்தால் குற்றமல்லவா?

 ”என் பேச்சை மீறுவதோடு என்னையும் அவமானப்படுத்துகிறாய்!

 ”தொழும்போது பசியினால் துவண்டு நீ விழுந்தால், “பாவம் பசியோடு தொழுதிருக்கிறான்” என்று மக்கள் பச்சாதாபப்பட்டால் நீ உண்ணாமல் வந்ததற்கு, நான் உன்னைப் பசியோடு வைத்துவிட்டேன் என்று என்னைத்தானே நிந்திப்பார்கள்? இது எனக்கு அவமானமல்லவா?” என்று கேட்டான். புரிகிறதா?

 அவன் பெருங்கருணையாளன். வணக்கத்தைக்கூடப் பின் தள்ளி உன் பசியைப் போக்கிக்கொள்ளச் சொல்கிறான்!

 கடைசியாக ஒரு செய்தி. பசியை நாம் நமக்குள்ளே தெரிந்துகொண்டால் அது ஆன்மிகப் பயிற்சி. மற்றவரை பசிக்கவிட்டால், பட்டினி போட்டால், அது தண்டனைக்குரிய குற்றம். சட்டப்படியும். தர்மப்படியும். இம்மையிலும். மறுமையிலும்.

Z Nana Sign=======

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

7 Responses to நோன்பு – ஒரு சிந்தனை

 1. abuhaashima says:

  ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணே…

 2. A ABDUL RAHIM says:

  Realy very nice. and useful to everyone.

  A ABDUL RAHIM.

 3. prabaharan says:

  Migavum arumaiyaga ( intha vinadi patri pa.ragavan sonna poluthu nana avargal sonnathu, nonbin mukkiyathuvam, ulaga iyakkam) ullathu. By prabaharan.

 4. ghouse says:

  super

 5. Ashraf says:

  salam nana, text color (blue) change pannuga….roomba contrasta iruku..padikae mudiyale…
  * try grey or black..(suggested)

 6. Nagore Rumi says:

  தம்பி, க்ரே-க்கு மாற்றிவிட்டேன் அஷ்ரஃப், ஓகேயா?

 7. Iraiyanban Khuddhus. says:

  Romba arumai., idhu zafarullah naanaavukku vulla Perumai. Thank you . Vassalaam.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s