தாயுமானவள்

இந்த மாதம் வெளியானது என் இரண்டாவது நாவல் தாயுமானவள்.  முதல் நாவல் திராட்சைகளின் இதயம். அது கிழக்கு பதிப்பக வெளியீடு. பின்னர் சிக்ஸ்சென்ஸ் வெளியீடு. இது காரைக்குடி அழகப்பர் பதிப்பக வெளியீடு. 112 பக்கங்கள். விலை ரூ 95/-

thayumanaval

இது என்னையும் மற்றும் என் தம்பிகளையும் உருவாக்கிய என் பாட்டியாரைப் பற்றியது. ஒருவித கவிதா சுதந்திரத்தோடு எழுதப்பட்ட உண்மைக்கதை. ரொம்ப நாள் கழித்து நான் எழுதி முடித்தது. ஆனால் இது சில ஆண்டுகளுக்கு முன்பே என்னால் எழுதப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு அதை நான் மீண்டும் செழுமைப்படுத்தினேன் என்று சொல்லலாம்.

 

இப்போது வெளிவந்துவிட்டது. அட்டை வடிவமைப்பு என் நண்பர் கவிஞர் யாழன் ஆதி. அவருக்கு என் நன்றிகள். அழகப்பர் பதிப்பக நாராயணன் அவர்களுக்கும், நூலை அச்சிட்ட  எல் கே எம் பதிப்பக கார்த்தி சாருக்கும் என் நன்றிகள்.

 

நூலுக்கு நான் எழுதிய முன்னுரை (அல்ஃபாத்திஹா) இந்த நாவலைப்பற்றி உங்களுக்கு ஒரு நல்ல குறிப்பைத் தரலாம். நூல் வேண்டுவோர்

 

திரு நாராயணன்

9443492733

என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

அல் ஃபாத்திஹா

 

எங்கள் சமூகத்தில் யாராவது இந்த உலகை விட்டுப் பிரிந்தால் அவர்களுக்கு ஃபாத்திஹா ஓதுவார்கள்.  திருக்குர்’ஆனிலிருந்து சில அத்தியாயங்களையும், முழுக்குர்’ஆனையும் ஓதத்தெரிந்தவர்கள் ஓதுவார்கள். (நாலு முஸ்லிம்களை  எடுத்துக்கொண்டால் அவர்களில் ஐந்து பேர் ஓதத்தெரிந்தவர்கள்களாக இருப்பார்கள்). அந்த திருமறையின் புனித வசனங்களின் பொருட்டு இறந்தவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவருக்கு மறுமையில் ஓர் உயர்ந்த இடம் கிடைக்க அது வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. இதல்லாமல் இறந்தவர் பெயரில் தான, தருமங்களும் செய்வார்கள். எல்லாமே நம்மை விட்டுப் பிரிந்துபோன ஆன்மா அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்யப்படுகிறது.

 

இந்த நாவலில் வரும் கதை நடந்த கதை. எங்காவது இன்றும் நடந்துகொண்டிருக்கும் கதை. நான்கு வயதில் ஒரு தாய் தன் மகனை விட்டும் இந்த உலகை விட்டும் பிரிகிறார். பையனுடைய தகப்பனார் ஊரிலேயே இருந்தாலும் உறவில் இல்லை. எனவே அந்த தாயில்லாப் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவன் பாட்டியாருக்கும், அவரது இன்னொரு மகளுக்கும் வருகிறது.

 

அந்த தாயில்லாப்  பிள்ளை செல்லம் கொடுத்து, வறுமை தெரியாதவாறு, ராஜா மாதிரி வளர்க்கப்படுகிறார். பாட்டியின் இன்னொரு மகளுக்குப் பிறந்த ஒரு சகோதரர் பொறுப்பையும், வறுமையையும் காட்டிக்காட்டி வளர்க்கப்படுகிறார்.  இருவரும் வளர்க்கப்பட்ட விதத்தில் பாரதூரமான வித்தியாசம் இருந்தது.  தாயில்லாப் பிள்ளை என்பதால் அவனுக்கு சிறப்பு கவனிப்பு. வறுமை என்றால் என்னவென்றே காட்டாமல் வளர்த்தார்கள். ஆனால் வறுமையைக் காட்டிக்காட்டி, சொந்தபந்தங்கள் செய்த அவமானங்களையெல்லாம் புரியவைத்து இன்னொரு சகோதரனை வளர்த்தார்கள்.

கொட்டிக்கொடுத்த அன்பில் இருவருக்கும் மத்தியில் வித்தியாசமில்லை. ஆனால் செய்துகொடுத்த வசதிகளில் அது இருந்தது. ஒருவருக்கு முட்டை தோசை என்றால் இன்னொருவருக்கு வெறும் தோசை. ஒருவருக்குக் கேட்டவுடன் பொன் வண்டு, காடை, கிளி, பணம் இன்னபிற. ஆனால் அதெல்லாம் இன்னொருவருக்கு வெறும் கனவுகள். ராஜாவாக ஒருவர் என்றால் மந்திரியாகவும் சேவகனாகவும் இன்னொருவர். ஆனால்  வாழ்க்கைச் சக்கரம் சுழன்றபோது ராஜா சேவகனாகவும் மந்திரி ராஜாவாகவும் மாறிப்போனதில் வேடிக்கை எதுவுமில்லை.

இப்படி இரண்டு சகோதரர்களை உருவாக்க ஒரு வயதான பாட்டி எவ்வளவு கஷ்டப்பட்டார், எப்படி அவர்களை உருவாக்கினார், எப்படி ஒரு தாய்க்கும் மேலாக, ஒரு தாயாக, ஒரு தகப்பனாக, ஒரு மந்திரியாக, ஒரு துணையாக, ஒரு ஆசிரியராக, இன்னும் என்னவாகவெல்லாம் ஒரு பெண் இருந்தார் என்பதைச் சொல்வதுதான் இந்த நாவல்.

 

எங்களை உருவாக்கிய எம் பாட்டியாரோடு நாங்கள் பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறேன். இது ஒருவகையில் நான் அவர்களுக்காக ஓதும் முழுக்குர்’ஆன். பெற்ற தாயையும், தந்தையையும் முதியோர் இல்லத்தில் விடும் உள்ளங்கள், அல்லது அதையொத்த உள்ளங்களில் இந்த கதை ஏதாவது நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்துமானால் அப்போது என் ஃபாத்திஹா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று புரிந்துகொள்வேன்.

 

இரண்டு சகோதரர்களின் அனுவபங்களையும் ஒருவரின் அனுபத்தைப் போன்ற பாவத்தில் உருவாக்கியுள்ளேன். எனக்கான வசதி கருதி. இது எங்களுடைய கதை மட்டுமல்ல. உங்களுடைய கதையாகவும் இருக்கலாம். நல்ல எழுத்து என்பது பொங்கி வரும், கண்ணீரின், கோபத்தின் அல்லது ஆத்மார்த்தமான சிரிப்பின் இன்னொரு வடிவமே. இந்த நாவல்கூட அப்படித்தான். நாங்கள் சிந்திய மற்றும் சிந்தாத கண்ணீர் இது.  பாட்டி என்றால் வயதான கிழவி, தாயாரின் அல்லது தகப்பனாரின் தாய் என்பதையெல்லாம் மீறிய ஒரு பரிமாணம் இருக்கிறது. அதை இந்த நாவல் நிச்சயம் காட்டும் என்று நம்புகிறேன்.

 

எங்கள் பாட்டியாருக்கான எங்கள் ஃபாத்திஹா இதுதான்.

 

அன்புடன்

நாகூர் ரூமி

24.08.13, ஆம்பூர்

ruminagore@gmail.com

www.nagorerumi.com     

 

 

 

 

சமர்ப்பணம்

 

எங்களுக்கு இறைவன் கொடுத்த அருள்மீன்

நென்னம்மா பாட்டியா

செல்லம் என்கிற அலிமுஹம்மது நாச்சியாருக்கும்

ஜெஜிமா சின்னம்மாவுக்கும்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

6 Responses to தாயுமானவள்

 1. mano ranjjan says:

  anaegha vanakkangaL, Aasaanae!… andha “bhaa”vam.. ungaL ‘author’itial touch… directorial touch maadhiri… authoritarian alla (illae)… ungal puththagangaL… Chennai-KK Nagar… Discovery book house’il thaamadhamaagaththaan kidaikkiradhu… aavana seiyyavum…

 2. நாகூர் ரூமி says:

  Thank u

 3. வாழ்த்துகள் ரஃபி. பாட்டியாவை பார்க்க காத்திருக்கிறேன்.

  நேற்றே இந்த மறுமொழியை இட்டேன். ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை வேர்ட்பிரஸ். சின்னம்மா ஏதும் சொல்லிவிட்டார்கள் போல!.

  ப்ளஸ்-இல் பகிர்ந்திருக்கிறேன்.

  • நான் நேற்று பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன். நான் பார்க்கும்போதுதான் ஏற்றுக்கொள்ளுமோ! இது பாட்டியாவின் வேலையாக இருக்கலாம்.

 4. HUSSAIN MUNAWER BEIG S/O MUSTAFA NAZIM BEIG S/O MOHD.SHARIFF BEIG says:

  மன்னிக்கவும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!……………………………….
  தொடரலாம்!
  தொடரும்!!!!
  என்னையும்,
  நானே புகழ்ந்துகொள்வேன் !!!!!!!!!!!!!!!!!!!………………..
  பரவாஇல்லை!
  இன்னும் பலநூறு தொடருட்டும் என் ஆச்சர்யக்குறிகள் !
  இது என்ன?
  கொம்பை விட்டு விட்டு,
  வாளைப்பிடிக்கும் கதையா ???????????
  புலமைப்பித்தன் எல்லாம்,
  மடையனா???
  “நின்று நிமிர்ந்து,
  என் பிள்ளை நடக்கையில்,
  ராஜநடை தோற்கும்!
  எழில் நீன்ற,
  உடலினை காணும் பொழுதினில்,
  சிற்பம் அதைக்கேட்க்கும்!

  என்னென்னத் தேவைகள்? உன்
  உள்ளம் மகிழ்ந்திட!என்பதை.
  சொல்லிவிடு! என்றும்,
  இல்லையெனும் சொல்லை.
  நீ சொல்ல நான், அதைக்
  கேட்பதை மாற்றிவிடு!!!”

  உமது பாட்டீயருருக்கு,
  இன்னும் 3 ஆண் செல்வங்கள்!
  அதை, நலங்கெடப்
  புழுதியிலெரிந்தது ஆஆஆஆர்!

  பாதைத்தவறிய கால்கள்”
  (உங்கள் பாஷையில் கால் கேர்ள் )
  விரும்பிய ஊர் சென்று,
  சேர்ந்ததில்லை! நல்ல
  பண்பு தவறியப்
  பிள்ளையைப்பெற்றவர்,
  பேர் சொல்லி வாழ்ந்ததில்லை!!!

  புகழ்வதை நிறுத்திக்கொள்ளவும்.

  இங்கனம்,

  சரீப் பே யின்,
  மூன்றாவது தாரத்துக்கான ?
  முறையான?
  முதல் வாரிசு???????????????
  ங்கே.ங்கே..ங்கே…ங்கே……………………………………………………..

  • நாகூர் ரூமி says:

   அன்புள்ள பெரிய தம்பி,

   எங்கள் பாட்டியார் எங்களை வளர்த்தைப் பற்றி உனக்கு ஒரு முடியும் தெரியாது. அநாகரீகமாக நீ எழுதிய இந்த கடிதத்தை நான் பதிவு செய்ததற்குக் காரணம் உன்ன அடையாளம் காட்டத்தான். பாட்டியார் தான் பெற்ற ஆண் செல்வங்களுக்காக என்னென்ன செய்தார்கள் என்று உனக்கென்ற தெரியும்? அந்த ‘செல்வங்கள்’ எதுவும் உருப்படாமல் போன விதம் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். அதிருக்கட்டும், நீ உன் தாயை, தந்தையை என்றைக்காவது மதித்திருக்கிறாயா? இப்படி எழுத உனக்கு எந்த அருகதையும் இல்லை.

   அன்புடன்
   ரஃபி மச்சான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s