அப்படி என்னதான் செய்துவிட்டார் மகாத்மா?

அப்படி என்னதான் செய்துவிட்டார் மகாத்மா?

 

நான் 2003ல் தமிழோவியத்தில் எழுதிய கட்டுரையை மீண்டும் பகிர்ந்துகொள்கிறேன். காந்தி ஜெயந்திக்காக.

 

mahatma-ghandi_m80zp_1359374268மகாத்மாவுக்கும் எனக்கும் ஒத்துக்கொள்ளாத விஷயங்கள் எத்தனையோ உள்ளன. உதாரணமாக நான் ஒரு சர்வபட்சிணி. மகாத்மாவோ ஒரு சாகபட்சிணி. ம்ஹும். இப்படி ‘தொழில்நுட்ப’ ரீதியில் பேசுவது ஏதோ வசைபாடுவதைப் போல உள்ளது. வேண்டாம்.

 

உணவைப் பொறுத்தவரை எதுவுமே எனக்கு தீண்டத்தகாததல்ல. தயிர்வடையில் இருந்து தந்தூரி சிக்கன் வரை. அதுவும் மீன், மட்டன் பிரியாணி வகையறாக்கள் என்றால் உயிர். ஆனால் மகாத்மாவோ இதற்கு நேர்மாறானவர். சைவத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் ஒரு ‘தீவிரவாதி’. (இந்த ‘தீவிரவாதி’ வரிசையில் கணிதமேதை ராமானுஜம், சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோரும் சேருவர்)!

 

சைவமென்றால் உங்கவீட்டு சைவம் எங்கவீட்டு சைவமல்ல. முட்டையையும் பாலையும்கூட தொடாத அல்லது முகர்ந்து பார்க்காத வீரசைவர். இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றபோது சைவ ஓட்டலில்கூட முட்டையும் பாலும் கலந்த பதார்த்தங்களை கவனமாக விசாரித்து ஒதுக்கியவர்! இனிப்பு, ஊறுகாய், மசாலா – முதலியவற்றையும் அவர் சாப்பிடுவது கிடையாது. “ருசியெல்லாம் எண்ணத்தில்தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை என்பதை இதுபோன்ற பல சோதனைகள் எனக்கு போதித்தன” என்றும் “மனுஸ்மிருதி நாத்திகத்தை நோக்கி சாயும்படிச் செய்தது. அது புலால் உண்பதை ஆதரிப்பதாகத் தோன்றியது” என்றும் அவர் சொல்கிறார்!

 

Gandhi_and_Nehru_1942அப்படியானால் சைவம்தான் ஒருவரை மகாத்மாவாக்குமா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்துக்கூறலாம். ஆமாம் என்றால் சுத்த சைவங்களான யானைகள் எல்லாம் மகாத்மாக்களாக மாறுகின்ற சாத்தியக்கூறுகள் உண்டு! வனவாசத்தின்போது மீன்களை விரும்பி ராமபிரான் உண்டதாக கம்பன் கூறுகிறான் (அவன் ஏற்றுக்கொண்டானே தவிர சாப்பிடவில்லை என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். சரி, ராமனுக்குக் கொடுத்துவைக்கவில்லை, அவ்வளவுதான்)! காய்ந்த ரொட்டியும் ஒட்டிய வயிறுமாகக் காலம் கழித்த முஹம்மது நபி(ஸல்)கூட  வாய்ப்புக் கிடைத்தபோது மாமிச உணவை விரும்பி உண்டது வரலாறு. இறையச்சமில்லாத சைவ உணவு சாப்பிடுபவனைவிட இறைபக்தி கொண்டவன் உட்கொள்ளும் மாட்டுக்கறி தெய்வீகமானது என்று பரமஹம்சர் சொன்னது இங்கே நினைவு கூறத்தக்கது. அப்படியானால், சைவ உணவுக்கும் மகாத்மாவாக ஒரு மனிதன் பரிணமிப்பதற்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிவிட்டாது.

 

ஆனால் காந்திஜி ஒருவிரலை அசைத்தால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே அந்த திசையில் அடிபணிந்தது. அவர் சொன்னார் என்பதற்காக அடிஉதைகள் வாங்கியது; மாசக்கணக்கில், வருஷக்கணக்கில் கம்பி எண்ணியது; ஜாலியன் வாலாபாக்குகளில் ரத்தம் சிந்தி இன்னுயிரையும் விட்டது. ஜவாஹர்லால் நேரு தனது புகழ்பெற்ற The Discovery of India என்ற நூலை எழுதியதும் அலஹாபாத் சிறைவாசத்தின்போதுதான்.

 

இன்றைக்கு இப்படி நடப்பது சாத்தியமா? நான்கே உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் சொல்வதைக்கூட உறுப்பினர் ‘அனைவரும்’ கேட்பதில்லை. கட்சி விட்டு கட்சி தாவுவதும், தூக்கி எறியப்படுவதும், எறியப்பட்டவர் புதிய கட்சி துவங்குவதும், அறிக்கைப் போர் நடத்துவதும் அன்றாட அரசியல் நிகழ்வுகளாகிவிட்டன.

 

குஜராத்தில் மதக்கலவரங்கள் ஒழியாவிட்டால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தமிழ் நாட்டில் உள்ள தலைவர் யாராவது இன்று சொல்லமுடியுமா? தெரிந்தே பட்டினியில் சாக யார் தயாராக இருப்பார்கள்?!

 

1306172313mahatma-gandhi-india-elites-2இந்தியாவானது ஒரு துணைக்கண்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய நாடு என்று நாம் வரைபடத்தைப் பார்த்துத்தான் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. தவிச்ச வாய்க்குத் தண்ணி தராத சுத்த கர்நாடகமாக நாடே மாறிவிட்டிருப்பதுதான் இன்றைய சோகம்! ஒரு திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு இந்திய உயிரும் மலினப்பட்டுப் போயிருக்கிறது!

 

ஆனால் இந்த சூழ்நிலையிலும், ஒரு மகாத்மா வந்தால்கூட இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், மகாத்மாவின் மகிமையைப் புரிந்து கொள்ளாத பேச்சு அது.

 

காந்தி ஆங்கிலத்திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். காந்தி சிறையிலிருப்பார். போராட்டத்தை அபுல்கலாம் ஆஸாத் தலைமை ஏற்று நடத்திச் செல்வார். அப்போது மக்களை அழைத்து அவர் சொல்வார், “They want us to fight back or lose heart. We will do neither”. அழகான வசனம். காந்தியத்திற்கு ஒரு அருமையான உதாரணம்.

 

எப்படி அந்த மனிதருக்கு மட்டும் அவ்வளவு சக்தி வந்தது? எங்கிருந்து? சும்மா யாரையாவது கூப்பிட்டு ‘மகாத்மா’ என்று பட்டம் கொடுத்துவிட்டால் அந்த சக்தி வந்துவிடுமா? இந்த கேள்வி வெகு நாட்களாக என் மனதில் பதில் இல்லாமல் கிடந்தது. அதற்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தேன். கடைசியில் மகாத்மாதான் பதில் சொன்னார். பூடகமாக. அவருடைய சுய சரிதை மூலமாக.

 

குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட மகாத்மாவின் சுயசரிதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் மகாசக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது என்ற உண்மையை அவர் தன் சுயசரிதையில் ஆங்காங்கு ஒளித்து வைத்திருந்தார். விடுவேனா நான்? கண்டுபிடித்துவிட்டேன்! அந்த யுரேகாவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்களும் பல யுரேகாக்களை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக.

 

Mahatma Gandhi with Rajkumari Amrit Kaur at Simla in 1945ஒருசில தடவைகள் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக மட்டனையும் அது கலந்த உணவையும் நண்பனின் சிபாரிசின் பேரில் மகாத்மா சாப்பிட்டுள்ளார். கெட்ட சகவாசம். ஆனால் அவர் சாப்பிட்டதற்கான காரணம் இருக்கிறதே அதுதான் ஒரு மகாத்மாவை அடையாளம் காட்டுவதாக உள்ளது. Mahatma in the making!

 

அந்தக் காரணம் என்ன தெரியுமா? மட்டன் ரொம்ப சுவையானது என்பதல்ல.(இது நாம் சாப்பிடுவதற்கான காரணம்). ஒழுங்காக சமைத்த மட்டன் சுவையாக இருக்கும் என்ற விஷயம்கூட பாவம் அவருக்குத் தெரியாது! பின் ஏன் சாப்பிட்டார்?

 

மாமிசம் சாப்பிட்டால் பலம் வருமாம். எப்போதும் அதைச் சாப்பிடுகிற ஒரு பலசாலியான நண்பன் சொன்னது! இந்தியர்கள் காந்தி மாதிரி நோஞ்சானாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலும் அவர்கள் காய்கறி சாப்பிடுபவர்களாக இருந்ததுதான். வெள்ளைக்காரர்கள் வலிமையுடன் இருந்ததற்குக் காரணம் அவர்கள் மாமிச உணவு உண்டதுதான். எனவே அவர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேற்றி வெற்றி கொள்ள ஒரே வழி எல்லா இந்தியர்களும் மாமிசம் புசித்து பலசாலி ஆவதுதான் என்று சத்தியமாக மகாத்மா நினைத்தார்! இது அவர் பள்ளிப்பருவ சிந்தனை! பின்னாளில் அவர் ‘திருந்தி’ சைவத்துக்கு மாறியது தெரிந்ததே.

 

இங்கே நாம் அடிக்கோடிட வேண்டியதெல்லாம் சைவ உணவு பலம் தரக்கூடியதா அல்லது அசைவ உணவா என்பதற்கான பதிலை அல்ல. ஒரு பள்ளிச் சிறுவன் தன் உணவுப் பழக்கங்களை நாட்டு நலன் கருதி மாற்றிக்கொண்டிருந்திருக்கிறான் என்பதையே! விருப்பமில்லாமல் மகாத்மா மென்று பார்த்த மட்டன் துண்டிலிருந்து அவர் தேசபக்தியின் வேர்கள் கிளம்பியிருக்கின்றன என்பது அவரைக் கனவில் வந்து பயமுறுத்திய ஆடுசத்தியமாக உண்மை!

 

மகாத்மாவுக்கு நம்ம தெனாலி மாதிரி இருட்டு பயம், பேய் பயம், பாம்பு பயம், இன்னும் என்னென்னவோ பயங்கள். கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டெல்லாம் இந்த பயங்கள் போகவில்லையாம். கடைசியில் ரம்பா என்ற வீட்டு வேலைக்காரக் கிழவிதான் ராம நாமத்தை உச்சரித்தால் பயங்கள் நீங்கும் என்று கற்றுக்கொடுத்தாளாம். தன் உயிர்போகும் தருவாயில்கூட “ஹேராம்” என்று சரிந்த மகாத்மா, பயத்துக்கான தீர்வைவிட, தீர்வைச் சொன்ன ரம்பாமீது நம்பிக்கை வைத்துதான் ராம நாமம் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்!

 

மகாத்மா என்ற பட்டம் தன்னை எப்போதுமே சந்தோஷப்படுத்தியதில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் அது தனக்கு மிகுந்த வேதனையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இன்றைக்கு பட்டங்கள் ‘வாங்கு’வதற்காக என்னவெல்லாம் செய்யப்படுகின்றன என்பதை நாமறிவோம். 

 

இப்போது புரிந்திருக்கும், தந்தை இறந்து கொண்டிருந்தபோதுகூட, அவர் பக்கத்தில் நிற்காமல், மனைவியோடு கூடுவதற்காக அறைக்குள் சென்றுவிட்டதையெல்லாம் ஒளிவு மறைவு இன்றி மகாத்மா ஏன் சொல்கிறார் என்று!

 

மகாத்மா வாழ்ந்ததைத்தான் சொன்னார். சொன்னதைத்தான் வாழ்ந்தார். நேர்மை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக தன் வாழ்வையே பரிசோதனைக் களமாக ஆக்கிக்கொண்டு, சத்தியத் தீயில் தன்னைப் புடம்போட்டுக் கொண்ட தங்கம் அவர்! அந்த பரிசோதனைகளின் விளைவாக அவருக்குக் கிடைத்ததுதான் அந்த ஆகர்ஷண சக்தி. ஒழுக்கத்தின் ஆற்றல் அது. அஹிம்சையின் ஆற்றலும் அதுதான். அரசியல் களத்தில் தனக்கிருந்த பலமெல்லாம் தனது ஆன்மீக பலம்தான் என்றும், மதம் என்பதன் அடிப்படையே ஒழுக்கம்தான் என்றும் பல இடங்களில் அவரே சொல்கிறார் : “சமயம் என்பதை தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்”.

 

அதனால்தான் எத்தனையோ விஷயங்களில் நேரு ஜின்னா போன்றவர்கள் மகாத்மாவோடு ஒத்துப் போகாவிட்டாலும் அவரை அதற்காக வெறுத்தார்களில்லை. “உண்மைதான் எனது கடவுள்” என்று சொன்ன, வாழ்ந்த, உத்தமராக நீங்களும் இருந்தால், இந்தியா என்ன, அகில உலகமும் உங்கள் பேச்சைக் கேட்கும். அடுத்த காந்தி ஜெயந்தி வருவதற்குள்ளாவது ஒவ்வொரு இந்தியனும் மகாத்மாவின் சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்ற நப்பாசையிலும் நம்பிக்கையிலும் விடைபெறுகிறேன்.

 

தமிழோவியம், செப்டம்பர் 21, 2003

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to அப்படி என்னதான் செய்துவிட்டார் மகாத்மா?

 1. ashokkumar kj says:

  நல்ல கட்டுரை. நான் தேடும் அதே விசயங்களையே இந்த கட்டுரையும் ஆராய்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்பதைவிட ஒர் இஸ்லாமியராக இருந்து நேர்மையாக நேர்ப்பட பேசியிருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்.

  • நாகூர் ரூமி says:

   அன்பு அஷோக் குமார், ஒரு முஸ்லிம் நேர்மையாக எழுதியது உங்களுக்கு ஏன் ஆச்சரியம் தருகிறது என்று எனக்குப் புரியவில்லை. நேர்மை என்பது எந்த ஜாதிக்கும், எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல. மனிதர்கள் நேர்மையாக இருக்கிறார்கள், அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள். அது உள்ளிருந்து வருவது. மகாத்மாவும், அவரைச் சுட்டுக் கொன்றவனும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். தெரிந்தே சிலுவையை ஏற்றுக்கொண்ட ஜீசஸும் அவரைக் காட்டிக்கொடுத்தவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். போர்க்களங்களில் மன்னிப்பை மட்டுமே வழங்கிய முஹம்மது நபியும் அவரைக் கொல்ல முயன்றவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

   எனினும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s