ஜல விமோசனம்

Kalki Deepavali Malar 2013மஹாபாரதத்தை மையமாக வைத்து நான் எழுதிய இரண்டாவது கதை இது. முதல் கதை ”திரௌபதியும் சாரங்கப் பறவையும்”. இத்தலைப்பில் என் சிறுகதைகளடங்கிய நூலொன்று வெளிவந்தது. சந்தியா வெளியீடு.  இது சென்னை எத்திராஜ் மகளிர் கலைக்கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்தக் கதை. நம்முடைய கற்பனையைத் தூண்டக்கூடிய எத்தனையோ விஷயங்கள் மஹாபாரதத்தைப் படிக்கப்படிக்க நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். வாழ்வியல், சுய முன்னேற்றம் தொடர்பாக மஹாபாரதக் கதைகளை முன்வைத்து ஒரு நூல் எழுவும் எனக்கு ஆசையுண்டு. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளேன. கொஞ்சம் எழுதியும் உள்ளேன்.

இக்கதையை கல்கியில் வெளியிட்ட  ஆசிரியர் திரு ஆர். வெங்கடேஷ் அவர்களுக்கு என் நன்றிகள். படித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் பாராட்டுக்கள்தான் எனக்கான நோபல்.

அன்புடன்

நாகூர் ரூமி

============================

”நிறுத்து தேவி”

குரல் பின்னாலிருந்து வந்தது. துள்ளி ஓடும் கங்கையின் சலசலப்பு வனம் முழுக்க நிறைந்திருந்தது. தன்னைத்தான் Jalavimochanam Kalki-1சொன்னாரோ என சில மான்களும் திரும்பிப் பார்த்தன.

கங்கா திரும்பினாள்.  அவளுக்குத் தெரிந்துவிட்டது. நாடகம் முடிவுக்கு வந்ததுவிட்டது. காலம் கனிந்துவிட்டது. என்ன நடக்கிறதென்று தெரியாமல் அவள் கையில் ஏந்திய சிசு அவளைப்பார்த்து சிரித்தது. தங்கக் கொலுசுக் கால்களால் அவளை உதைத்தது.

“நீ பெண்ணா, பேயா? நீயெல்லாம் ஒரு தாயா? பெண்ணினத்துக்கே நீ ஒரு சாபக்கேடு. ஏன் இப்படிச் செய்கிறாய்? செய்தவரைக்கும் போதாதா? என்னால் தாங்க முடியவில்லை. பெற்ற பிள்ளையை எந்தத் தாயாவது ஆற்றில் எறிவாளா?”

எட்டு வருஷமாக மனதில் கிடந்ததையெல்லாம் கொட்டிவிட்டான் சந்தனு. அவன் முகம் வியர்த்துவிட்டிருந்தது. கொடுத்த வாக்கை மீறிவிட்டோம் என்ற உணர்வு மேலிட்டாலும் கடைசியில் தர்மத்தையே செய்தோம் என்ற திருப்தி அவன் முகத்தில் கலந்திருந்தது. எனினும் அச்சம் அவனை விட்டு அகலவில்லை. கங்கை தன்னை விட்டுப் போய்விடுவாளோ? இந்த உலக அழகி இல்லையென்றால் தன் வாழ்க்கையே சூன்யமாகிவிடுமே!

”மஹாராஜா, காலம் கனிந்துவிட்டது. இனி நீங்கள் ஹஸ்தினாபுரத்துக்கு நான் இல்லாமல்தான் திரும்பிச் செல்லவேண்டும். கொடுத்த பிரதிக்ஞையை மீறிவிட்டீர்கள். இத்தனை காலமாக இந்த எண்ணம்தான் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. கொடுத்த வாக்கை இத்தனைகாலமாக மனதளவில் மீறிக்கொண்டுதான் இருந்திருக்கிறீர்கள். இப்போது அது வெளியிலும் வந்துவிட்டது. இனி நான் உங்களுக்குத் தேவையில்லை. இனி நான் உங்களோடு இருக்கவும் முடியாது. பிள்ளைப்பாசம் உங்களை மிகைத்துவிட்டது”.

”ஆமாம், பிள்ளைப்பாசம்தான். அப்படியே இருக்கட்டும். அதுமட்டுமல்ல. நீ செய்வது அதர்மம். சிசுக்கொலை. ஹஸ்தினாபுரத்தின் அரசனாக அதை நான் இனியும் அனுமதிக்க முடியாது. நான் தர்மத்தின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஒரு மஹாராஜாவுக்கு உரிய காரியம் அதுதான். என் முன்னோர்களும் தர்மத்தின் பக்கம் நின்றவர்களே”.

அவன் பேசியதைக் கேட்டு கங்கை சிரித்தாள். அந்த வனமும் சேர்ந்துகொண்டது அவள் சிரிப்பில். இலைகளும் பூக்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன.

“ஓஹோ, அப்படியா? இத்தனை காலமாக எங்கே போனது உங்கள் தர்மம்? ஆசைகள் அடங்கும்வரை தர்மத்தின் நினைப்பு வரவில்லையா? ” மீண்டும் சிரிப்பு.

சந்தனு மஹாராஜா தலை குனிந்தான். அவள் சொன்ன உண்மை அவனைச் சுட்டது. யோசனையே செய்யாமல் அவள் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் உட்பட்டோமே! ச்சே! அவனை நினைக்க நினைக்க அவனுக்கு அவமானமாக இருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒருவேளை நாம் அனுமதியற்ற பிரதிலோமம் செய்துவிட்டோமோ? இவள் தாழ்ந்த குலப்பெண்ணோ?  இல்லையெனில், இப்படி ஒரு கொடூரமான அதர்ம சிந்தை இவளுக்கு எப்படி வந்திருக்கும்?

“மஹாராஜா, அனுலோமம், பிரதிலோமம் பற்றியெல்லாம் சிந்திக்க இது தருணமல்ல. நான் உங்களுக்கு மூன்று நிபந்தனைகள் போட்டபோதே அது பற்றி நீங்கள் யோசித்திருக்கவேண்டும்” என்றாள் கங்கா. உதட்டோரம் ஒரு விஷமப் புன்னகையுடன்.

தூக்கிவாரிப்போட்டது சந்தனுவுக்கு.  மஹேஷ்வரா! யாரிவள்? மனதில் உள்ளதையெல்லாம் கூறுகிறாளே! நிச்சயம் இவள் தாழ்ந்த குலப்பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.

”என்ன மஹாராஜா, மறுபடியும் குலச்சிந்தனையா? குலமும் கோத்திரமும் எப்போதுமே பிரச்சனையல்ல பிரபு, பிரச்சனையெல்லாம் மனிதர்களால் வருவதுதான். ஆண்களாலும் பெண்களாலும். ஆண்களால் பெண்களுக்கு. பெண்களால் ஆண்களுக்கு” என்றாள் கங்கை.

சந்தனு நிமிந்து பார்த்தான்.

“இருக்கலாம்.”

”இருக்கலாம் என்ன, அப்படித்தான். உங்கள் வம்சத்திலேயே லோமங்களெல்லாம் கலந்துவிடும். யயாதி தேவயானியையும் மணமுடிப்பான், அரக்கி சர்மிஷ்டையையும் மணமுடிப்பான். உலக முடிவுநாள் வரை இப்படித்தான் போகும். இப்போது பிரச்சனை அதுவல்ல”

”சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் குழந்தைகளையெல்லாம் ஆற்றில் போட்டுக் கொன்றாயே, அதற்கு யார் காரணம்? எது காரணம்?”

“நீங்கள்தான் காரணம். ஆண்கள்தான் காரணம். அவர்களுக்குக் கட்டுப்படும் பெண்கள் காரணம்”.

“என்ன உளறுகிறாய்? நீ பெற்ற குழந்தைகளைக் கொன்றதற்கு நான் எப்படிக் காரணமாக முடியும்?” சற்று கோபமாகவே கேட்டான் சந்தனு.

”மஹாபிரபு, உங்களோடான என் காலம் முடிந்துவிட்டது. நம் குழந்தைகள் ஏழு பேரையும் ஜலத்தில் போட்டு விமோசனம் கொடுக்க வேண்டுமென்பதுதான் பிராப்தம். அது நிறைவேறிவிட்டது. இந்த எட்டாவது குழந்தைதான் கடைசி. ஆனால் இது இன்னும் நீண்ட காலம் இந்த உலகில் வாழவேண்டியுள்ளது. அதனால்தான் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்”

“பிராப்தம்? பிள்ளைகளைப் பிறந்தவுடன் கொல்வது விதியா? அப்படியானால் நீ ஒரு அரக்கியா?”

”நான் அரக்கியல்ல. நான்தான் இந்த நதி. தேவிதான் நான். ஆனால் கங்காதேவி. இவர்கள் குழந்தைகளுமல்ல. தேவர்கள். அஷ்ட வசுக்கள். வஷிஷ்டமுனியின் தெய்வீகப்பசு நந்தினியைக் கவர்ந்து சென்றதற்காக மானிடராகப் பிறக்க சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் வேண்டுகோளின்படிதான் பிறந்தவுடன் இந்த ஜலவிமோசனம் கொடுக்கப்படுகிறது. இப்போது நீங்கள் கேள்வி கேட்டு என்னைத் தடுத்ததால், இந்தப் பிள்ளை மட்டும் என்னோடு கொஞ்சகாலம், உங்களோடு நீண்டகாலம் வாழ வேண்டும். இது விதியின் விளையாட்டு. இனி நீங்கள் செல்லலாம்” என்று சொல்லிச் சிரித்தாள்.

“தேவி, நீ என்ன சொல்கிறாய்? ஏதோ பசு, வசு என்றெல்லாம் சொல்கிறாய், எனக்குப் புரியவில்லை”.

“பிரபு, இது கடந்த காலத்தின் எச்சம். ஆனால் இதுதான் வருங்காலமும்கூட. இனி வரும் காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது. இனி வரும் காலத்தில் பெண்களில் பலர் இப்படித்தான் செய்வார்கள். அதைத்தான் நான் இந்தக் காரியத்தின் மூலம் உங்களுக்கு உணர்த்தினேன்”.

Jalavimochanam Kalki-2”என்ன சொல்கிறாய்? இந்த ஏழோடு சிசுக்கொலைகள் முடியுமென்றால்கூட ஆசுவாசிக்கலாம். ஆனால்  இது தொடருமென்று வேறு சொல்கிறாயே? எனக்குப் புரியவில்லை”.

”ஆமாம் பிரபு. அந்தக் காலம் வரும்போது பிள்ளைகளைப் போடுவதற்கு ஆற்றில் தண்ணீர் இருக்காது. ஆனால் சாக்கடைகளும் குப்பைத்தொட்டிகளும் இருக்கும். அதுவும் இல்லாவிட்டால் வயிற்றுக்குள் பிள்ளை ஜனித்தவுடனேயே கொன்றுவிடுவார்கள்” என்றாள்.

”என்ன சொல்கிறாய்? இனி வரும் காலத்தில் குழந்தைகளைக் கொல்வார்களா?”

“ஆமாம். அதுவும் பெண் குழந்தைகளை. நான் செய்தது இந்த வசுக்களுக்கு விமோசனம். ஆனால் இனி மனிதர்கள் செய்யப்போவதுதான் கொலை பாதகம்”.

”நீ என்ன சொல்கிறாய்?”

”புரியவில்லையா? இதோ பாருங்கள் இங்கே” என்றாள். அவள் காட்டிய இடத்தில் காற்றில் ஒரு திரை விரிந்தது. அதில் சில கொடூரமான காட்சிகள் தெரிந்தன.

”இதோ. இது அரேபியப் பாலைவனம். இங்கே பாருங்கள் ஒரு பெண் குழந்தையை அதன் தகப்பன் கதறக்கதற, கெஞ்சக்கெஞ்ச படுகுழியில் தள்ளி உயிரோடு புதைக்கிறான்.”

”இதோ, இது மும்பை. ஓடும் ரயிலில் இருந்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை அந்தத் தாய் தூக்கி எறிகிறாள் பாருங்கள்” என்றாள்.

”இதோ இது தமிழ் நாடு. மடியில் பெண் சிசுக்களை வைத்து தாய்மார்கள் கள்ளிப்பால் புகட்டுகிறார்கள் பாருங்கள்.”

“இதோ, இது சென்னை. இது பெங்களூரு. இது கல்கத்தா. இவைகளெல்லாம் மருத்துவமனைகள். இதோ பாருங்கள் வயிற்றுக்குள்ளேயே சிசு ஆணா பெண்ணா என்று பார்க்கிறார்கள். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்கிறார்கள் பாருங்கள்” என்றாள்.

அதையெல்லாம் பார்த்த சந்தனு மஹாராஜா, மேலும் பார்க்கமுடியாமல், ஒன்றும் சொல்லமுடியாமல், தலை குனிந்தபடியே கனத்த மனசுடன் ஹஸ்தினாபுரத்தை நோக்கித் திரும்பிச் சென்றான்.

ஒன்றுமே தெரியாத மாதிரி எப்போதும்போல துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தாள் கங்கா.

======Thursday, August 01, 2013======1:21:50 AM

 நன்றி: கல்கி தீபாவளி மலர், 2013

அனுலோமம் – ஜாதி, குலம் மாறாத திருமணம்

பிரதி லோமம் – ஜாதி, குலம் பார்க்காமல் செய்யப்படும் திருமணம்

4 Replies to “ஜல விமோசனம்”

  1. மிக வித்தியாசமான பார்வையில் இருக்கிறது உங்கள் கதை. வாழ்த்துக்கள்.

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.