வரலாற்றுப் பாட் பூரி

Ashokaஅசோகரை மாற்றியது யார்?

அசோகர் இந்தியா முழுக்க ஆண்ட ஒரு பேரரசர். அவர் கலிங்கத்துப் போரில் வென்று அங்கு இறந்தும், உடல் ஊனமுற்றும் கிடந்தவர்களைப் பார்த்து மனம் திருந்தி, இனி போரே செய்வதில்லை என்று முடிவு செய்து புத்த மதத்துக்கு மாறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அப்படியில்லை. அவர் மனம் மாறியது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் கலிங்கத்துப் போருக்குப் பிந்திய துயரமல்ல. அவர் மனம் மாறியதற்குக் காரணம் ஒரு பெண். அதுவும் அவருடைய மகள். அவள் பெயர் சங்கமித்திரை.

ஆம். போரில் கிடைத்த செல்வங்களையெல்லாம் தன் மகளிடம் கொடுத்து அவளை மகிழ்விக்க எண்ணுகிறார் அசோகர். ஆனால் அப்பொருள்களை பெற்றுக்கொள்ள சங்கமித்திரை மறுத்துவிடுகிறாள். அதற்கு அவள் சொன்ன காரணம்தான் அருமையானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

“தந்தையே, தாங்கள் கலிங்கத்தில் பெரும் வெற்றிகண்டது உண்மைதான். ஆனால் இதில் மாண்டுபோன லட்சக்கணக்கான மக்களைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? உடல் உறுப்புகளை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாக வாடித்தவிப்பவர்களின் பரிதாப நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? கணவனை இழந்து கைம்பெண்ணான ஆயிரக்கணக்கான அபலைகளின் கண்ணீர் ஆற்றை நீங்கள் காணவில்லையா? பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் துயரம் உங்கள் நெஞ்சத்தை இளக்கவில்லையா? கொலையிலும் அழிவிலும் பெற்ற இந்தப் பொருள்கள் எனக்கு வேண்டாம். இவைகளையெல்லாம் வாழ வழியில்லாமல் தவிக்கும் கலிங்க நாட்டு மக்களுக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினாள்! அதன் பிறகுதான் அசோகர் மனம் மாறியது, பௌத்தம் தழுவியது எல்லாம். மனிதாபிமானம், இரக்கம், அன்பு, கருணை, புரிந்துகொள்ளல் போன்றவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண் பெண்கள்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

jhansi_ki_rani_01பிச்சைக்காரர்களுக்குப் போர்வை

ஜான்ஸி ராணி லட்சுமி பாய் ஒரு நாள் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போது சில கூக்குரல்கள் கேட்டன. என்னவென்று விசாரித்தபோது குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களின் முறையீடு என்று பதில் வந்தது. அதைக்கேட்ட ஜான்ஸி ராணி மனம் உருகியது. மூன்று நாட்களுக்குள் நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களுக்கெல்லாம் ஓர் அங்கியும்  ஒரு போர்வையும் தரப்படவேண்டும் என்று உத்தரவு போட்டாள். அது முறைப்படி நிறைவேற்றப்பட்டது. பிச்சைக்காரர்களுக்கும் போர்வை கொடுத்த ராணி வாழ்ந்த நாடு இது! ஆனால் இன்று பிச்சைக்காரர்களோ உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் அதிகாரமும் வழங்கப்படுகிறது. வினோதமான நாடுதான்!

சதாவதானி — தூக்கத்திலும் விழிப்பு

நான் சென்னை பெசண்ட் நகரில் மூன்று ஆண்டுகள் குடியிருந்தபோது சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலரின் மகளார் என் அண்டை வீட்டுக்காரராக இருந்தார். அவ்வப்போது அவரது தந்தையார் பற்றிய செய்திகளை அவர் வாயால் கேட்டு நான் மகிழ்வேன். ஒரு வியத்தகு ஆளுமையின் மகளாகப் பிறந்தவர். ஆனால் சதாவதானியின் குடும்பம் இப்போது பெரிய வசதியுடனோ மகிழ்ச்சியுடனோ இல்லை என்பதுதான் உண்மை. எல்லாக் குடும்பங்களிலும் உள்ள பிரச்சனைகள் அங்கும் உண்டு. சதாவதானியின் எழுத்துக்களை அரசு நாட்டுடமையாக்கியதை அடுத்து, அந்தப்பணம்கிடைக்க அவர்கள் அலைந்துகொண்டிருந்தார்கள்.

Sadavadaniஅதெல்லாம் இருக்கட்டும். ஒரு நிகழ்ச்சி. தனது கவிதை நூலை வாசித்துக்காட்டி, வாழ்த்துரையும், ஆலோசனையும் பெற ஒருவர் வந்திருந்தார். பகல் நேரம். கவிதைகளை வாசித்துக்காட்டச் சொன்னார் சதாவதானி. வந்த கவிஞர் வாசித்துக்கொண்டிருக்கும்போதே சதாவதானி தூங்கிப் போனார். அதைப் பார்த்த கவிஞருக்கு கொஞ்சம் அவமானமாகிவிட்டது. என்றாலும் தன்னையே நொந்துகொண்டு அவர், விடாக்கண்டனாக கவிதைகள் முழுவதையும் வாசித்து முடித்தார்! அதுவே ஒரு சாதனை அல்லவா! வாசித்து முடித்துவிட்டு, “ஐயா, ஐயா” என்று சதாவதானியை எழுப்பினார் கவிஞர்!

கண் விழித்த சதாவதானி, “ என்ன படித்து முடித்துவிட்டீர்களா?” என்றார்.

“ம்” என்றார் கவிஞர்.

கவிதையாக நூலின் முடிவுவரை சொல்லிக்கொண்டே வந்தார் சதாவதானி. அதுமட்டுமல்ல, இந்தக் கவிதையில் இப்படி மாற்றம் செய்யலாம், அந்த வரியை அப்படி மாற்றலாம் என்று ஆலோசனைகள் வழங்கி, திருத்தங்களும் சொன்னார்!

அந்தக் கவிஞர் மெய்சிலிர்த்துப் போனார். நானும்தான். நமது விழிப்புகூட ஒருவகைத் தூக்கமாக இருக்கும் காலமிது. ஆனால் சதாவதானியின் தூக்கம்கூட ஒருவகை விழிப்பாக இருந்துள்ளது. என் கண்கள்தான் உறங்குகின்றன, என் மனம் உறங்குவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

அரசனுக்கு சவரம் செய்த அரசன்

ஸ்பெயின் நாட்டுக்கு மன்னராக இருந்த அல்ஃபோன்ஸோ என்பவர் மாறுவேடத்தில் நகரை வலம் வருவது வழக்கம். 1886 Alfonso-11அப்படி ஒருநாள் சுற்றிவருகையில் ஒரு இரவு ஒரு விடுதியில் போய்த்தங்கினார்.  அந்த விடுதி உரிமையாளரிடம் சவரம் செய்ய தனக்கு ஒரு கண்ணாடி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஷேவ் செய்துகொண்டிருந்த மன்னரையே கவனித்துக்கொண்டிருந்த அவன், “அடிக்கடி இந்தப் பக்கம் வருகிறவர் மாதிரி தெரியவில்லையே, நீங்கள் அரசர் அரண்மனையில் வேலை பார்ப்பவரோ?” என்று கேட்டார்.

“உங்கள் ஊகம் சரிதான்” என்றார் மாறுவேஷ மன்னர்.

“அப்படியா, அங்கே உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “எனக்கு எத்தனையோ வேலைகள். ஒன்றா இரண்டா? இப்போது பாருங்கள், மன்னருக்கு ஷேவ் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்!

தங்கத் தேங்காய்

Kilavan_Sethupathiபாண்டிய நாட்டின் பகுதியாக இருந்த சேது நாட்டை ரகுநாத சேதுபதி ஆண்டார். அவர் புலவர்களுக்கு ஊக்கம் கொடுத்துவந்தார். ஒருமுறை வைத்த போட்டியில் அகப்பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் இல்லையே, இருந்தால் நன்றாக இருக்குமே என்று தன் அவாவைத் தெரிவித்தார். நான் முப்பது பாடுவேன், நான் நாற்பது பாடுவேன் என்று பல கவிஞர்கள் கூறினர். அமுத கவிராயர் என்பவர்,  ”நான், நூறு பாடுவேன்” என்றார். அவர்மீது பொறாமை கொண்ட சிலர், “அவர் நானூறு பாடுவாராம்” என்று திரித்துக்கூறினர்.

ஆனால் அமுத கவிராயர் “நாணிக் கண் புதைத்தல்” என்ற தலைப்பில் உண்மையிலேயே நானூறு கவிதைகளைப் பாடினார். முதல் இரண்டடிகள் சேதுபதியின் சிறப்பையும், அடுத்த இரண்டடிகள் அகப்பொருளின் சிறப்பையும் கூறுவதாக அமைக்கப்பட்டன.

ஒரு கவிதைக்கு ஒரு தேங்காய் என அரசர் பரிசளித்த்தார்!  என்ன வெறும் தேங்காய்தானா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. ஒவ்வொன்றும் தங்கத் தேங்காய்! செய்கூலி சேதாரம் எதுவுமில்லாமல், எந்த நடிகரும் விளம்பரம் செய்யாமல் தங்கத்தேங்காய்! ஆஹா, அந்தக் காலத்தில் நாமில்லாமல் போய்விட்டோமே என்று ஏக்கமாக உள்ளது!

Paramahamsaஅமுதக் கோப்பையும் ஈயும்

“ஒரு அமுதம் நிறைந்த கோப்பை உன் எதிரே இருக்கிறது. ஆனால் நீயோ ஒரு ஈயாக இருக்கிறாய். இந்த சூழ்நிலையில் நீ என்ன செய்வாய்?”

தன் பிரியமான சீடர் விவேகானந்தரிடம் பரமஹம்சர் ஒருநாள் கேட்ட கேள்வி இது. அதற்கு விவேகானந்தர் மிகுந்த விவேகத்துடன் ஒரு பதிலைச் சொன்னார். அவர் மூளையால் வாழ்ந்துகொண்டிருந்தார் என்பதற்கு அதுவே சான்று.

“நான் ரொம்ப ஜாக்கிரதையாக அந்தக் கோப்பையின் விளிம்பில் அமர்ந்துகொண்டு கோப்பையில் உள்ள அமுதத்தைப் பருகுவேன். கவனமாக இல்லையென்றால் கோப்பைக்குள் விழுந்து, அமிழ்ந்து உயிர் போகலாமல்லவா, அதனால்தான்” என்று அவர் பதில் சொன்னார்.

”கோப்பைக்குள் இருப்பது அமுதம் என்பதை மறந்துவிட்டாய். உள்ளே குதித்து அமிந்து போனாலும் உன் உயிர் போகாது. அதுதான் அமுதமாயிற்றே” என்று பரமஹம்சர் புன்னகைத்தார்.

கருமமே கண்ணாக

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஒரு முறை ஒரு வழக்காடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தந்தி Patelவந்தது. அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு வழக்காடுதலைத் தொடர்ந்து செய்தார்.  எல்லாம் முடிந்த பிறகு நண்பர்கள் அவரிடம் அந்த தந்தி பற்றிக் கேட்டனர்.

மருத்துவ மனையில் தன் மனைவி இறந்து போனதாக வந்த தந்தியைக் காட்டினார் படேல்!

Lincolnதாடிக்குப் பின்னால் இருந்த லேடி

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு தாடி இல்லை. ஆனால் அவருடைய நிழல்படத்தைப் பார்த்த பதினோறு வயது சின்னப்பெண் க்ரேஸ் பெடல் (Grace Bedell) அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள் . “என் அப்பா உங்கள் நிழல்படத்தை சந்தையிலிருந்து வாங்கி வந்தார். எனக்கு பதினோறு வயதுதான் ஆகிறது. ஆனால் நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்….எனக்கு 4 சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் உங்களுக்கு வாக்களிப்பார்கள். தாடி இல்லாமல் உங்கள் கன்னம் ரொம்ப ஒல்லியாக ஒட்டிப்போயுள்ளது. ஆனால் நீங்கள் கன்னத்தில் முடிவளர்த்தால் நான் என் மற்ற சகோதர்களையும் உங்களுக்கு வாக்களிக்க வைக்க முயற்சிப்பேன்.

“எல்லாப் பெண்களுக்குமே தாடி பிடிக்கும். அவர்கள் தங்கள் கணவர்களை கேலி செய்து உங்களுக்கு வாக்களிக்கச் Lincoln Beardசொல்வார்கள். அதன் பிறகு நீங்கள் ஜனாதிபதிதான்…” இப்படி ஒரு கடிதத்தை அந்த சிறுமி எழுதினாள்! ஆண்களுக்குக் கன்னத்தில் முடி இருந்தால் – தாடிதான் – பெண்களுக்குப் பிடிக்குமாம்! ஒரு பதினோறு வயதுச் சிறுமி சொல்கிறாள்! ச்சே, இது எனக்கு என் இளம் வயதிலேயே தெரியாமல் போய்விட்டதே!

அதைப் படித்த லிங்கன் உடனே தாடி வைக்க ஆரம்பித்தார்! தேர்தலில் வென்று ஜானதிபதி ஆன பிறகு இல்லினாய்ஸிலிருந்து வாஷிங்டன் போகும் வழியில் அந்தச் சின்னப்பெண்ணைச் சந்தித்து கௌரவித்தார்!

Alexander1256அலெக்சாண்டரின் மனசாட்சி

ஒருமுறை அலெக்சாண்டர் முன் டியோண்டஸ் என்ற கடல் கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டான்.

“உனக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார் அலெக்சாண்டர்.

“இந்த உலகத்தையெல்லாம் அடக்கியாளவேண்டுமென்ற துணிவு உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான்” என்று பதில் சொன்னான் டியோண்டஸ்.

அவன் துணிச்சலைக்கண்டு வியந்த அலெக்சாண்டர், “எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“என்னிடம் ஒரே ஒரு கப்பல் இருப்பதால் நான் கடல் கொள்ளைக்காரன். உங்களிடம் ஒரு கப்பல் படையே இருப்பதால் நீங்கள் மாவீரர். மற்றபடி நாம் இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறோம்” என்றான்!

அலெக்சாண்டர் அவனை விடுதலை செய்தார். அவருடைய மனசாட்சியை அவன் தொட்டிருக்கவேண்டும்!

============================

நேற்று கல்லூரி நூலகத்தில் சில நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்தது “மேதைகள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்” என்ற நூல். ஆசிரியர் தே.ப.பெருமாள். வானதி பதிப்பகம். நான்காம் பதிப்பு, மே, 1983. அதிலிருந்து நான் தேர்ந்தெடுத்த சில தகவல்களை என் பாணியில் பகிர்ந்துகொண்டேன்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to வரலாற்றுப் பாட் பூரி

  1. Jazeela says:

    Good one. Thanks for sharing.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s