கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம்

தி இந்துவில்  தமிழை ஆங்கில எழுத்துக்களை வைத்துக் கற்றுக்கொடுப்பது எளிது என்று ஜெயமோகன் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் அது பிரசுரமாகவில்லை. அதை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என்று தமிழுக்கு ‘ஆப்பு’ வைப்பதற்காக ஒரு தமிழ்க்கட்டுரையை 04.11.13 அன்று “தி இந்து”வில் ஜெயமோகன் எழுதி, ஏகப்பட்ட மறுமொழிகளையும் பெற்றிருக்கிறார். எள்ளல், விமர்சனம் எதுவும் செய்யாமல் அவர் சொல்லும் விஷயம் என்ன என்று முதலில் பார்ப்போம்.

  • நம் இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை
  • ஆங்கிலமே வேலை வாய்ப்புக்குரிய மொழி
  • தமிழ் இரண்டாவது மொழியாக பள்ளிகளில் இருப்பதால் அதில் கவனம் செல்வதில்லை [மாணவர்களுக்கு].
  • அவர்களுக்கு இருக்கும் சிக்கல்: இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்துருக்களை கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான்.
  • மிருகங்களையும் பறவைகளையும் வித்தைகளுக்குப் பழக்குவதுபோல குழந்தைகளை தமிழில் எழுதச்சொல்லி சித்திரவதை செய்கிறோம்.
  • இணையம், முகநூல் போன்றவற்றில் தமிழ் எழுதுவோர் phonetic typing-ல் ஆங்கிலத்தில்தான் தமிழை ‘டைப்’ அTamil Ancient Scriptடிக்கிறார்கள். கடந்த 13 ஆண்டுகளாக ஜெயமோகனும் அதைத்தான் செய்துவருகிறார். இது எளிதாக இருக்கிறது.
  • எனவே இதையே பின்பற்றினால் ஒரே எழுத்துருவில் இரண்டு மொழிகளையும் வாழவைக்கலாம்.
  • வருங்காலத்துக்காக நாம் தமிழ் எழுத்துருவை உதாசீனப்படுத்திவிட்டு ஆங்கில எழுத்துக்களை வைத்து தமிழைக் கற்றுகொடுக்கலாம். மலாய் போன்ற மொழிகள் இவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 

ஜெயமோகன் கட்டுரையின் உப்புக்கரிக்கும் சாறு இவ்வளவுதான்.  இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால், கடினமாக இருப்பதால், எளிமைப்படுத்த வேண்டி ஆங்கில எழுத்துருக்களைப் பயன்பத்தி தமிழ் கற்றுக்கொடுக்கலாம் என்பதுதான். அதற்கு அவர் கொடுக்கும் முட்டு, ஆங்கிலத்தின் மூலம் தமிழை எளிதாக தட்டச்சு செய்யலாம் என்பது.

tamilதமிழ் எழுத்துருக்களை ஆங்கிலத்தில் எளிதாக உள்ளிடலாம் என்று அவர் சொல்வது சரிதான். உதாரணமாக எனக்கு ஆங்கில தட்டச்சும் தெரியும், தமிழ் தட்டச்சும் தெரியும். நானும் தமிழை phonetic typing செய்யக்கூடியவன்தான். ஆனால் தமிழை எவ்வளவு எளிதாக இதன் மூலமாக உள்ளிட முடியுமோ அதே வேகத்தில், அதே எளிமையுடன் தமிழ் தட்டச்சின் மூலமும் உள்ளிட முடியும். தமிழ்  ’டைப்பிங்’ தெரிந்தவர்களிடம் ”தி இந்து” ஒரு நேர்காணல் எடுத்தால் இந்த உண்மை புரியும். அல்லது ஆங்கில, தமிழ் டைப்பிஸ்ட்டுகளை வைத்து ஒரு வேகப்போட்டி நடத்தினாலும் புரிந்துவிடும். எனவே ஜெயமோகனின் இந்த வாதம் வைக்கோலை நங்கூரமாக  வைத்து கப்பலை நிறுத்த முயற்சிக்கிறது.

அடுத்து அவர் சொல்லும் ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி . ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பேராசிரியன் என்ற முறையிலும் ஆங்கிலம் எனது காதலிகளில் ஒருத்தி என்ற முறையிலும் — எனக்கு நிறைய காதலிகள் உண்டு  – எனக்கு இது நன்றாகத் தெரியும்.  ஆனால் அதன் எழுத்துக்களைப் பொறுத்த அளவில் அது தமிழ் எழுத்துக்களின் முன்னால் ஒரு கற்றுக்குட்டி.

மிக நுட்பமான ஒலி வேறுபாடுகளை தமிழ் உள்வாங்கி ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்தைக் கொடுத்துள்ளது. ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் அது ஆணுக்குப் பெண் வேஷமிட்டதுபோல் ஆகிவிடும். உதாரணமாக,

ட (கடை), ட்ட(அட்டை), ர (இரவு), ற(உறவு), ல (பகல்), ள (மகள்), ன (மன்னா), ண (மண்ணா), ழ (பழம்) போன்ற எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை ஆங்கில எழுத்துக்களால் தரமுடியாது.

 

’மன்னா’ என்பதையும் ’மண்ணா’ என்பதையும் manna என்றுதான் எழுதவேண்டி வரும். இல்லையெனில் அவற்றுக்கான சிறப்பு குறியீடுகள் (diacritical marks) கொடுக்கவேண்டிவரும். அப்படிச் செய்தால்  அது சிங்கம் இருக்கும் கூண்டில் மனிதனை விட்ட மாதிரியாகத்தான் ஆகும். ‘பழி’க்கும் ‘பலி’க்கும், ‘வழி’க்கும் ‘வலி’க்கும், வேருக்கும், ’வேறு’க்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

அடுத்து குறில் நெடில் பிரச்சனைகள் ஏற்படும். ‘வாடா’ என்ற விளிப்பு தின்னக்கூடிய vada-வாக மாறக்கூடும்.

தமிழ் வினைச்சொற்களுக்கு ஆங்கிலத்தில் இல்லாத ஒரு சிறப்பு உண்டு. வினை புரிபவரின் பால் அந்த வினைச்சொல்லிலேயே தெரிந்துவிடும். ‘அவன் வந்தான்’ என்று சொன்னாலும் சரி, ‘வந்தான்’ என்று சொன்னாலும் சரி, வந்தவர் ஆண் என்பது விளங்கிவிடும். ஆனால் ‘He came’ என்பதில் உள்ள ‘came’-ஐ வைத்துக்கொண்டு வந்தவர் ஆணா பெண்ணா என்று அறிய முடியாது. அதோடு ஆங்கிலத்தில் ‘ந்தா’ என்ற ஒலியும் இல்லை. ‘வந்தான்’ என்பதை vandhaan என்று எழுதினால் ’வண்ட்ஹான்’ என்று படிக்கும் வாய்புண்டு.

ஆங்கில நாக்குக்கு தமிழ் வருவதில்லை.  தஞ்சாவூர் Tanjore என்றும், நம் கிண்டி-கூட பின்பக்கத்தை நினைவுபடுத்தும் விதமாக Guindy என்று மாறும்! அதேபோல தமிழ் நாக்குக்கு ஆங்கிலம் வருவதில்லை. Hamilton Bridge அம்பட்டன் பிரிஜ் ஆகும். இப்படி அபத்தங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ”பீமன் மரத்தைப் பிடுங்கினானே” என்பதை ஒரு திக்கு வாயன் “பீமம-ரத்தப்பி–டிங்கினானே” என்று சொன்னானாம்! ஆக, ஆங்கில எழுத்துக்கள் மூலமாக தமிழைக் கற்றுக்கொடுப்பவரும் கற்றுக்கொள்பவரும், ஆசிரியரும் மாணவரும் தமிழராக இருக்கும் பட்சம், பிரச்சனை பீமன் மரத்தைப் பிடுங்கியதைவிட இன்னும் கற்பனைக்கு எட்டாத விஸ்வரூபங்களெடுக்கும் வாய்ப்பு உண்டு.

 

தமிழ் மொழி செம்மொழி. பல ஆயிரம் ஆண்டுகளின் தொன்மை கொண்டது. இலக்கியத்திற்கு அந்தக் காலத்திலேயே இலக்கணம் வகுத்துக்கொண்டுத்த மொழி. ஆங்கிலத்துக்கென்று ஒரு இலக்கணமே கிடையாது. லத்தீன் மொழியின் இலக்கணத்தைத்தான் அதன் மீது திணித்து வைத்திருந்தார்கள். அதனால்தான் பெயர்ச்சொல் என்றால் என்ன என்ற கேள்விக்கு noun is the name of a person or a place or a thing என்று தவறான வரையறை உள்ளது. ஆனால் இந்த வரையறை, beauty, politics, democracy, truth போன்ற எந்த முக்கியான பெயர்ச்சொல்லுக்கும் பொருந்தாது. பின் அவைகள் எப்படிப் பெயர்ச்சொற்களாகின்றன என்று பழைய வரையறையை (prescriptive grammar) வைத்துக்கொண்டு சொல்லவே முடியாது. English is a very natural and arbitrary language. அதுதான் அதன் சிறப்பு.

ஆனால் தமிழ் சிறப்பான வரையறைகளும் நுட்பமான வேறுபாடுகளையும் கொண்ட மொழி. எனக்குத் தெரிந்து தமிழுக்கு இணையான ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் பண்டைய கட்டமைப்பை மாற்றிக்கொள்ளாமல் உயிர்வாழும் சமஸ்க்ருதத்தைத்தான் சொல்லலாம். [எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.ஆனால் அது பற்றித் தெரியும்].

ஆங்கிலத்தால் தமிழை நெருங்கவே முடியாது. ஆனால் அசுர வளர்ச்சி கொண்ட ஒரு மொழியாக அது இருப்பது மறுக்க முடியாத உண்மை. அது வேறு.

ஜெயமோகனின் அடிப்படை வாதமே தமிழ் லிபி மாணவர்களுக்கு கடினமாக இருக்கிறது  என்பதுதான். இது ஒரு அபத்தமான வாதமாகவே எனக்குப் படுகிறது. ஏனெனில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழில்தான் பதில் எழுதுகிறார்கள்! அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆங்கிலம் கஷ்டமாக இருக்கிறது. தமிழ்தான் எளிதாக இருக்கிறது! தமிழ் எழுத்துருக்களை விட்டு நாம் தூரமாகிப்போக முயற்சிப்போமேயானால், பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நமது வேரின் மீது ’இங்க்லீஷ் சுடுதண்ணி’ ஊற்றியதுபோலாகிவிடும்.

கடினம், எளிது என்பதெல்லாம் சார்புச் சமாச்சாரங்கள். ‘Easy’ and ‘difficult’ are relative terms and not absolute. எது கடினம்? எது எளிது? எல்லாமே கடினம். எல்லாமே எளிது. செய்யும் மனதைப் பொறுத்தது அது. மூச்சு விடுவது கஷ்டமா? ஆனால் ஆஸ்துமா இருந்தால் அது கஷ்டம்தான். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்காக இன்னொரு ஆஸ்துமா வியாதிக்காரர் பரிந்து பேசுவது இயற்கை. ஆனால் ஆரோக்கியமானவர்களுக்கு?

தமிழுக்கு அமுதென்று பேர்

அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்

7 Replies to “கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம்”

  1. This article was very nice. Even though you work as an English lecturer, You are not giving up our ancient Tamil on any account. I appreciate it.

  2. வைக்கோலை நங்கூரமாக வைத்து கப்பலை நிறுத்த முயற்சிக்கிறது.///
    அருமை

    வலிமையான கட்டுரை

  3. வைக்கோல் என்றாலும் ரொம்ப நைந்துபோன வைக்கோல் புரி…ஜெயமோகனுக்கு புரி -யுமா?

  4. Sir,
    An unbiased article with solid logic and content.what surprised me more is that this piece had come from a English major.keep up the good work.

Leave a comment

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.