வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு!

Vaadaa

என்ன குழப்பமாக உள்ளதா? ’வாடா’வும் ‘வாங்க’வும் எப்படி ஒரே வாக்கியத்தில் வரமுடியுமென்று? ’வாங்க’ என்பது அழைப்பு. ‘வாடா’ என்பது உழைப்பு, பிழைப்பு. ஆமாம். சமீபத்தில் என் ஊரான நாகூருக்குப் போயிருந்தேன். கடைத்தெருவில் ஒரு வண்டியில் வைத்து ’வாடா’ சுட்டுக்கொண்டிருந்தார் ஒரு சகோதரர். அதைப்பார்த்ததும் என் கால்கள் தாமாக நின்றுவிட்டன! சரி, முதலில் ’வாடா’வை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

’வாடா’ என்பது நாகூருக்குப் புகழ் சேர்க்கும் ருசியான சமாச்சாரங்களில் ஒன்று. நாகூர் ஏற்கனவே ஆன்மிகத்துக்கும், இலக்கியத்துக்கும், நாவன்மைக்கும் புகழ்பெற்ற ஊர். அதுமட்டுமல்ல, சில ருசியான தின்பண்டங்களுக்கும்தான். ஆம்பூர் என்றால் மட்டன் பிரியாணி என்பதுபோல, நாகூர் என்றால் குலாப்ஜான், பால்கோவா, தம்ரொட்டு, மீங்கொரி, ஈச்சகொட்டெ பனியான், வட்லப்பம், ஜாலர் ப்ராட்டா, பெருநா ப்ராசப்பாம் – இப்படி லிஸ்ட் போகும். எல்லாமே சொர்க்கத்தின் சுவையை இம்மையிலேயே காட்டுபவை! ஆம். அதில் ‘வாடா’ ஒரு தனி ரகம்.


இதற்கு ஏன் இப்படி ஒரு ’மரியாதை கெட்டத்தனமான’ பெயர் வந்தது என்று எந்த ’படிய உளுந்துருவானு’க்கும்
தெரியவில்லை!  (பை த பை, ‘படிய உளுந்துடுவான்’ என்பது எங்களூரின் செல்ல வசவுகளில் ஒன்று)! இந்த வாடா-வின் சிறப்பு என்னவெனில் இதன் சுவை சுவையற்றது! ஆம். ஆனால் சில நகாசு வேலைகளுக்குப் பிறகு இதற்கு ஒரு சுவை வரும் பாருங்கள்…!

Ulladamஅரிசி மாவு, கோதுமை மாவு ஆகியவற்றைக் கலந்து இது கைகளால் குழைக்கப்படும். பின்னர் ஒரு டப்பா மீது வைக்கப்பட்ட ஒரு சின்ன வெள்ளைத்துணியில் இது இடப்படும். பின்னர் அதில் மேல் கீழாக, இரண்டு சின்ன சென்னக்குனி ராலுகள் (இறால்) வைக்கப்படும். இது வாடா-வின் ஹைலைட் நம்பர் ஒன். பின்னர் அடுப்பில், வாணலியில் உள்ள எண்ணெயுள் போடப்படும். நன்கு பொறிந்து வெந்தபின் அல்லது வந்தபின், அது எடுக்கப்பட்டு ஒரு குச்சிக்குள் சொருகப்படும். கபாப் மாதிரி.

இப்படி சிலபல வாடா-க்கள் சொருக்கப்பட்டபின் அவை கேட்பவருக்கு பேப்பரில் மடித்துக் கொடுக்கப்படும். இன்னும் முடியவில்லை.


அதன் பிறகு வெங்காயம், இஞ்சி வகையறாக்கள் கலந்து செய்யப்பட்ட ஒரு சமாச்சாரம் தொட்டுக்கொள்ளத் தரப்படும். இதற்கு ’உள்ளடம்’ என்று பெயர். இந்த உள்ளடத்தில் தொட்டுக்கொண்டு, அதாவது கொஞ்சம் சேர்த்துக்கொண்டு ஒரு வாடா-த்துண்டைக் கடித்து உள்ளே தள்ளினால் அதன் சுவை…ஆஹா!

வாடா திங்கலாம், வாங்க நாகூருக்கு!

4 Replies to “வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு!”

  1. போடா போடா நாகூருக்கு என்று மனசு தள்ள நாவில் எச்சியூறுது……!

  2. ஆமாம் ! இந்த ” வாடா ” நாகூர், விட்டால் பக்கத்தில் காரைக்கால் ஆகிய இரு ஊர்களிலும் மற்றும் இவ்வூர்களின் அருகாமையில் அமைந்த சிற்றூர்களிலும் மட்டுமே கிடைக்கும் தீனி ! நீங்கள் கூறியது போல வெறும் வாடாவைவிட அதில் பதிக்கப்படும் இரால் மற்றும் வெங்காயம் சங்கதிகளால்தான் அதன் ருசி !

    அப்படியே நாகூரின் தனி ஸ்பெசலான ” பராட்டா உருண்டை ” பற்றியும் எழுதுங்களேன் !

Leave a reply to saamaaniyan saam Cancel reply

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.