வரலாறு அறியாத பொறுப்பின்மை: இஸ்லாமிய தமிழிலக்கிய எட்டாம் மாநாடு-2014

 

Page 1நடந்து முடிந்த அனைத்துலக  இஸ்லாமிய தமிழிலக்கிய எட்டாம் மாநாட்டில் பல விருதுகள் வழங்கப்பட்டன. இலக்கியச் சுடர், இசைச்சுடர் என்று. அதில் உமறுப்புலவர் விருதுக்கான ஒரு லட்ச ரூபாய் இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா மாமாவுக்கு வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. உயிர்வாழும் ஈடிணையற்ற ஒரு கலைஞரை கௌரவிப்பது நமது கடமை.

அதே சமயம் மன்னிக்கமுடியாத ஒரு தவறும் நடந்துள்ளது. நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்களுக்கு பதினோறு பேரில் ஒருவராக பத்தாயிரம் ரூபாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது.

கவிக்கோ தலைவர், பெரும்புலவர் முனைவர் சி. நைனார் முகமது, முனைவர் சாதிக், கேப்டன் அமீர் அலி போன்றோர் நெறியாளர்கள். இருந்தும் எப்படி இந்த வரலாற்றுப் பிழை, சரியாகச் சொன்னால் பொறுப்பற்ற தனம், அரங்கேறியுள்ளது என்று தெரியவில்லை.

நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்கள்தான் நாகூரில் உள்ள smakadirபாடகர்களிலேயே மூத்தவர். வயதாலும், அனுபவத்தாலும், இசையாலும். கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கற்ற, எச்.எம்.வி.யில் 15க்கும் மேற்பட்ட இசைத்தட்டுக்கள் கொடுத்த ஒரே முஸ்லிம். எத்தனையோ கச்சேரிகளில் அவர்கள் பாடும்போது வயலின் மற்றும் கடம் வாசிப்பவர்கள் அவர்களின் பாட்டுக்கு தங்களால் வாசிக்கமுடியவில்லை என்று நிறுத்தியிருக்கிறார்கள். இதை நான் ஓரிருமுறை நாகூர் தர்காவில் அவர்கள் பாடும்போது நேரில் கண்டிருக்கிறேன்.

பின்னோக்கிச் செல்லும் தாளகதியிலும் மூன்றாம் காலத்திலும் பாடமுடிந்த ஒரே பாடகர் வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்கள் மட்டும்தான். கர்நாடக சங்கீத உலகில் தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள பிரபலங்களில் ஒருவர்கூட மூன்றாம் காலத்தில் ஸ்வரம் சொல்லி நான் கேட்டதில்லை. (முதல் காலத்தில் நான்கு ஸ்வரம் என்றால், இரண்டாம் காலத்தில் எட்டு, மூன்றாம் காலத்தில் பதினாறு). அவர்களின் பின்னோக்கிச் செல்லும் தாளகதிப் பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தான் மேலே சொன்ன வயலினை கீழே வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாட்டு முஸ்லிம் உலகத்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா.

Page 13சரி பணவிஷயத்துக்கு வருவோம். எஸ்.எம்.ஏ. காதர் மாமாவைப் பற்றி ஊரில் இப்படிச் சொல்வார்கள். ”சங்கீதத்துக்காக லட்சாதிபதியானவர்”. கவனிக்க, சங்கீதத்துக்காக, சங்கீதத்தால் அல்ல. ஆமாம். ஏனென்றால் அவர் ஏற்கனவே கோடீஸ்வரராக இருந்தவர். சங்கீதத்துக்காக பல லட்சங்களை இழந்தவர். இன்றும் ஊரில் உள்ள பணக்காரர்களில் ஒருவர். மிக உயர்ந்த குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று. ஊரில் சில பணக்கார வீடுகளில் மட்டும்தான் ஏதாவது கல்யாணம், மௌலிது என்றால் ஊருக்கே சாப்பாடு கொடுப்பார்கள். அப்படி ஊருக்கே சோறு கொடுக்கும் குடும்பம் அது.

இறைவன் அருளால் இன்றும் வித்வான் மாமா தனது புதுமனைத்தெரு வீட்டில் நலமாகவே இருக்கிறார்கள். முதுமை காரணமாகவும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய பக்கவாத நோய் காரணமாகவும் வலது பக்கம் செயலிழந்திருந்தாலும், இன்னும் நல்ல ஞாபக சக்தியிருக்கிறது. நடக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார்கள். இறைவன் அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

SMAKஅவர்கள் வட இந்தியாவில் பிறந்து வாழ்ந்திருந்தால் படே குலாம் அலி கான், அந்தக் கான், இந்தக் கான் போல உலகப்புகழ் பெற்ற ஒரு மகா ஆளுமையாக, மாறியிருக்கக்கூடும்.

உமறுப்புலவரின் சீறாவை, இஸ்லாமிய கீதங்களையெல்லாம் கர்நாட சங்கீத பாணியில் ஸ்வரமெழுதி கீர்த்தனைகளாகப் பாடியிருக்கிறார்கள். அவர்களது சாகித்யங்களில் கொஞ்சம்தான் L.P. இசைத்தட்டு வடிவத்தில் வந்துள்ளது. நிறைய வராததற்கும் ஜாதி, மதம் ஒரு காரணமாக இருந்துள்ளது துரதிருஷ்டமே. தியாகராஜர் அவர்கள் செய்த வேலையை மாமா அவர்கள் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிய அக்கறையோ அறிவோ நமது சமுதாயத்துக்கு இல்லாததினாலும், இசை இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற அபத்தமான, ஆதாரமற்ற கருத்து பலரிடம் நிலவி வருவதாலும் மாமா போன்றவர்களால் இசைவானில் மின்னமுடியாமல் போய்விட்டது.

மாமா அவர்களிடம் நான் ஆறு மாதங்கள் கர்நாடக சந்தீதம் கற்றுக்கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் With SMAKபிடிக்கும் வர்ணம் என்னும் பாடம் வரை ஆறே மாதங்களில் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். எனக்கு சொல்லிக்கொடுத்த ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் கச்சேரி செய்வது மாதிரியானது. இசைக்காக வாழ்ந்த ஒருவரால் மட்டுமே அப்படிச் சொல்லித்தரமுடியும்.  நான் தம்பூரா போட, மாமா ஸ்வரம், ஆரோகரணம்,  அவரோகணம் சொல்லிப்பாட, அவர்களது பேரர் ராஜாவும் சேர்ந்துபாட, என் நண்பர் பிலால் பிரம்மாதமாக பதிவு செய்த ஒலிநாடா என்னிடம்தான் இன்னும் உள்ளது. சமீபத்தில் மாமாவைப்பற்றி ஒரு ஒளிப்பதிவு செய்துவிடலாம் என்றுகூட முயற்சி செய்தோம். ஆனால் அது இன்றுவரை முடியாமல் இருக்கிறது. அந்த ஒலிநாடாவில் இருந்து ஒவ்வொரு ராகமாகப் பிரித்து இரண்டை மட்டும் நான் யூட்யூபில் வலையேற்றியுள்ளேன். கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே அவர்கள்து மகத்துவம் புரியும்.

உமறுப்புலவரின் ”திருவினும் திருவாய்” முதன்முதலில் பாடியது மாமாதான். ஆனால் மாநாட்டில் குமரி அபூபக்கரின் “திருவினுந்திருவாய்” குறுந்தகடு வெளியிடப்படுவதாக அறிவிப்பு உள்ளது. அவருக்கு அதற்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அவர்தான் முதன்முதலில்  அப்படிச் செய்வதுபோன்ற ஒரு தோற்றத்தை இந்த மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கிறது.

சிங்கத்தின் காலடியில் சின்ன பூச்சிகள் ஊரலாம். அது இயற்கை. ஆனால் சிங்கத்துக்கும் சின்ன பூச்சிகளுக்கும் சேர்த்து விருது கொடுப்பது வேடிக்கையானது! அபத்தமானது. ஆனால் அப்படித்தான் இந்த மாநாட்டில் விருது கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “இசைச்சுடர்” விருது. நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லத்தேவையில்லை. ஆனால் மாமாவின் பேருக்குக் கீழே போடப்பட்டிருக்கும் அத்தனை பேருக்குமே மாமாவின் மகத்துவம் தெரியும். எல்லாருமே மாமாவின் கால் தொட்டு ஆசீர்வாதம் பெறக்கூடியவர்கள்தான்.

மாமாவின் பெயரைப் போடும்போதுகூட “நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான்” என்று போடவில்லை. ரொம்ப அவசர கதியில் விழாக்குழுவினர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருப்பது தெரிகிறது. நான் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். எனக்கு அழைப்பிதழ் மாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் வந்து சேர்ந்தது. என் கட்டுரை வந்திருப்பதாக மாநாட்டுக்குச் சென்ற ஒரு நண்பர் சொன்னார்! மலர் இதுவரை எனக்கு வந்து சேரவில்லை!

கவிக்கோ அவர்களுக்கு  உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். ஒரு வேளை அதனால் அண்ணனால் கவனிக்க முடியாது போயிருக்கலாம். ஆனால் மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

Isaimani Yusufவிழாவுக்கு வந்திருந்த நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி அவர்கள்கூட மாமாவின் பெயர் குறிப்பிட்டு அவர்களைப் போன்றவர்களைப் பார்க்க முடியாது என்று ஒரு கருத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இசைமணி எம்.எம்.யூசுப் அவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் மாமாவின் பிரதம சீடர்-பாடகர்களில் ஒருவர்! குருவுக்கு சீடருக்கும் ஒரே விருது! அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் அவரைக் கேட்காமலே அவர் பெயர் சொல்லப்பட்டவுடன் ஒருவர் பாய்ந்துசென்று அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக ஒரு தகவலும் கிடைத்துள்ளது!

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். பணத்தின் பின்னால் அலைந்துகொண்டிருங்கள். எதையாவது, எப்படியாவது செய்துகொண்டிருங்கள். ஆனால் ஒரு உண்மையான இசைக்கலைஞரை, முஸ்லிம் கர்நாடக சங்கீத வித்வானை, இசையைத் தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தவரை, இசைக்காக பல விஷயங்களை இழந்தவரை, நாமெல்லாம் நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய ஒருவரின் அந்தஸ்தைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாமல் இப்படி பத்தாம்பசலித்தனமாக செயல்பட்டிருப்பதை நான் கண்டிக்கிறேன். ஒரு ஐந்து லட்ச ரூபாயை விருதாக அறிவித்து  அதை இசை முரசு நாகூர் ஹனிபா மாமா கையால் எஸ்.எம்.ஏ. காதர் மாமாவின் மகனார் கையில் கொடுத்திருந்தீர்களென்றால் அது கொஞ்சம் பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

எனக்கொரு நகைச்சுவை ஞாபகம் வருகிறது. இதுவும்  வித்வான் மாமா சொன்னதுதான். ஒரு முறை நாகூரில் அவர்கள் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது, ”கல்யாணி ராகத்துல ஒரு பாட்டுப்பாடுங்க” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்துகொண்டே இருந்ததாம் என்று சொல்லிச் சிரித்தார்கள். அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு அப்போது புரியவில்லை. பின்னர் வாக்கியத்தை மாமா முடித்தபோதுதான் புரிந்தது. “நான் அதுவரை கல்யாணியில்தான் பாடிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு அவர்களுக்கே உரிய சிரிப்பு ஒன்றைச் சிரித்தார்கள்!

சரியாகப் பாடாதவர்களை மாமா அடிக்கடி, “ஞான சூன்யம்” என்று திட்டுவார்கள். பல ஞான சூன்யங்கள் சேர்ந்து பாடகர்களுக்கென்று விருது கொடுத்தால் இப்படித்தான் அமையும்.

மாமா அவர்களின் மகனாரும் என் நண்பருமான நூர் சாதிக் அவர்கள் அவ்விழாக் குழுவினருக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் இத்துடன் இணைக்கிறேன். இனி வருங்காலத்திலாவது இது போன்ற அபத்தங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்குக் கொண்டாடத் தெரியவேண்டாம். கௌரவப்படுத்தத் தெரியவேண்டாம். குறைந்த பட்சம் முட்டாள்தனமாகச் செயல்படாமலாவது இருக்கலாமல்லவா? நீங்கள் கழுதைகள் அல்ல என்னும் பட்சம், அடுத்த முறையாவது கற்பூர வாசனையை அறிந்துகொள்ளுங்கள்.

வருத்தத்துடன்

நாகூர் ரூமி

NoorSadik's Letterநூர் சாதிக்கின் கடிதம்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நான் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் ஜனாப் SMA காதர் அவர்களின் மூத்த மகனார் ஆவேன். நான் அவர்களுக்கு மகனாக இருந்தாலும் அதற்கும் அப்பாற்பட்டு ஒரு இசை ரசிகன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.

வித்வான் SMA காதர் அவர்கள் புகழ்பெற்ற சங்கீத மேதை ஆவார்கள். இவர் புதுக்கோட்டை ஸ்ரீமான் ராமச்சந்திர மகாராஜா சமஸ்தானத்தில் அரசு வித்வானாக இருந்த நன்னுமியான், சோட்டுமியான் ஆகியோர்களின் சீடரான பாபுமியான் அவருடைய சீடரான கௌஸ்மியான், அவருடைய சீடரான தாவூத் மியான் அவர்களுக்கு இவர் சீடராவார். இவர் நாகூர் தர்கா சங்கீத வித்வானாக நியமனம் பெற்று சுமார் 50 ஆண்டுகளைத் தாண்டுகிறது. இவர்களின் பாடல்களை HMV நிறுவனம் இசைத்தட்டுகளாக  1952லிருந்து வெளியிட்டுள்ளது. அதில் உமருப்புலவரின் ’திருவினுந்திருவாய்’, மற்றும் சிறந்த ’மெய்ப்பொருளை’, குணங்குடி அப்பா பாடல்கள், காசிம் புலவரின் திருப்புகழ், ஆபிதீன் புலவர் மற்றும் ஆரிப் நாவலர் பாடல்கள், தியாகராஜர் கீர்த்தனைகள், மற்றும் கவிஞர் சலீம் பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள் அடங்கும். ஆக 1977 வரை மொத்தம் 15 இசைத்தட்டுக்கள் வெளிவந்துள்ளன.

இவருடைய மாணவர்தான் இசைமணி M.M.யூசுப் அவர்கள். இவர்கள் வித்வான் SMA காதர் அவர்களிடம் இசை பயின்று பின்னர் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று ”இசைமணி” பட்டம் பெற்றவர். இப்பட்டம் பெற்ற ஒரே முஸ்லிம் தமிழ்நாட்டில் இசைமணி M.M.யூசுப் அவர்கள் மட்டுமே.

இந்நிலையில் தங்களால் கும்பகோணத்தில் நடத்தப்படும் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டில் விருது வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் சற்றும் பொருத்தமில்லாத பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு மாத்திரமில்லாமல், வித்வான் SMA காதர் அவர்களின் பெயருக்கு முன்பு ”வித்வான்” என்ற தகுதியோ அல்லது அவர் வகிக்கும் பதவியையோ குறிப்பிடாமலும், அதுபோல இசைமணி எம்.எம்.யூசுப் அவர்களின் பெயருக்கு முன்பு விலாசம் போடாமலும் அழைப்பிதழ் வெளியிட்டிருப்பதை முறையற்ற செயலாகக் கருதுகிறேன்.

மேலும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற அறிஞர்களும், வல்லுனர்களுமான இருவரையும் கௌரவிக்கிறோம் என்ற பெயரில் காலத்திலும் மூத்தவர்களான இவர்களை ’பத்தோடு பதினொன்றாக’ பொருத்தமில்லாத பிரிவில் தேர்வு செய்திருப்பதும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இதை எந்த தேர்வுக்குழு, எப்படித்தேர்வு செய்தது என்று அறிய விரும்புகிறேன்.

எந்தத் தகவலையும் கேட்டு, ஆய்ந்து தேர்வு செய்யாமல் இப்படி மனம்போன போக்கில் தேர்வு செய்திருப்பது அவர்களுடைய கௌரவத்திற்கு இழுக்காக அமைந்துவிடும் என்று கருதுகிறேன்.

ஆகவே இந்த விருதுகள் இருவருக்கும் பொருந்தாத விருதுகள். எனவே அதைப்பெற மறுக்கிறோம்.

மேலும் நான் எந்த தந்தை வித்வான் SMA காதர் அவர்கள் பெயரால் விருது வழங்குவதாக அழைப்பிதழில் உள்ளது. இது என்னிடம் கேட்காமலும், என் அனுமதியைப் பெறாமலும் அச்சிடப்பட்டுள்ளது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருபக்கம் நானே விருது கொடுத்து மறுபக்கம் நானே எனது தந்தைக்காக விருது வாங்குவதுபோல் உள்ளது. ஏன் இந்தக் குளறுபடிகள்?…புரியவில்லை!

இப்படிக்கு

எஸ்.எம்.ஏ. நூர்சாதிக்

15.02.2014

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

5 Responses to வரலாறு அறியாத பொறுப்பின்மை: இஸ்லாமிய தமிழிலக்கிய எட்டாம் மாநாடு-2014

 1. Jafar Sadiq says:

  Unmaiyil vedikkaiyaana matrum vedhanaiyaana visayam

 2. பீ.மு .மன்சூர் says:

  உன் ஆதங்கமும் கோபமும் எனக்குப் புரிகிறது ,,இஸ்லாமிய இலக்கியக் கழகம் களவாடப்பட்ட வரலாறு உனக்குத் தெரியுமா ?இசையறியா ஞான சூனியங்கள் பற்றி அறிந்து கொண்ட நீ, இலக்கியம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் பொறுப்பில் சிக்கிச் சீரழிந்த அந்த அமைப்பின் வழி அந்த இசைஞானியின் பெயர் இடம் பெறாமல் இருந்திருந்தால் அதுவே அவருக்குச் சிறப்பு . முதுமை காரணமாக நினைவாற்றலை இழந்துவிடும் பெரும் புலவர் சி .நயினார் முஹம்மது அவர்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் .உன் தகுதிக்கு நீ கட்டுரை அனுப்பியது உன் தவறு ,,இன்னும் நிறையப் பேசலாம் ,,

  • நாகூர் ரூமி says:

   அன்புள்ள சார், எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்கள் எனக்கும் சங்கீத குரு. ஒரு சீடன் என்ற முறையிலும் நான் இதுபற்றி சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. நயினார் சார் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்கிறேன். அங்கே நிறைய ‘அரசியல்’ இருப்பது தெரியும். அதற்காக இப்படிச் செய்வார்கள் என்று நினைக்கவே இல்லை.

 3. ismath13 says:

  பல ஞான சூன்யங்கள் சேர்ந்து பாடகர்களுக்கென்று விருது கொடுத்தால் இப்படித்தான் அமையும்.

  சரியாத்தான் சொன்னீர்கள்….

 4. Dr. vaheetha says:

  varuntha thakka onru

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s