சிலையும் நீ சிற்பியும் நீ–1&2

May Alumai Sirpi Coverஆளுமைச் சிற்பி என்ற பத்திரிக்கையில் சிலையும் நீ சிற்பியும் நீ என்ற தலைப்பில் ஒரு சுய முன்னேற்றத் தொடர் எழுதத் தொடங்கியுள்ளேன். இதுவரை இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. வரும் ஜூன் இரண்டாம் வாரத்தில் இருந்து மஹாபாரதத்தை அடிப்படையாக வைத்த வாழ்வியல் தொடர் ஒன்று புதிய தரிசனம் என்ற பத்திரிக்கையில் எழுத உள்ளேன். உங்களுக்காக சிலையும் நீ சிற்பியும் நீ இரண்டு கட்டுரைகளும்  இதோ:

01 — சிலையும் நீ, சிற்பியும் நீ

Silaiyum Nee Sirpiyum Nee 1”மூளை இருக்கா?”

இப்படி ஒரு கேள்விக்குக் கொஞ்சம்கூட கோபப்படாமல், சர்வசாதாரணமாக, “ஓ இருக்கு சார், அம்பது ரூவா ஆகும்” என்று ஒருவர் பதில் சொன்னால் இந்த உரையாடலுக்குள் வரும் ‘மூளை’ சமைத்து சாப்பிடக்கூடிய ஆட்டு மூளை என்று மூளை உள்ள எல்லா மனிதர்களுக்கும் புரிந்திருக்கும்.

“மூளை சாப்பிடு, மூளைக்கு நல்லது” என்று என்னை வளர்த்த என் பாட்டி, சின்னம்மா என்று பலர் மூலமாக, பல முறை இப்படி வருத்த மூளைகள் ஒரு விஞ்ஞான அடிப்படையிலான பாசத்தில் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆட்டு மூளை மனித மூளைக்கு நல்லதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் அதை வைத்து ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம் என்ற ரீதியில் சிந்திப்போமானால் நமது மூளை தேவையில்லாத கற்பனைகளுக்குள் போய்விடும். அதனால் அவசிமான உறுப்புகளையெல்லாம் ஆடுமாடுகள் அனாவசியமாக இழக்கும் அபாயத்தில் கொண்டுபோய் விட்டுவிடலாம்! எனவே நாம் அதுபற்றியெல்லாம் இப்போது மூளையைக் கசக்க வேண்டாம்.

Silaiyum Nee Sirpiyum Nee 1.1ஒன்று மட்டும் நிச்சயம். ஆட்டு மூளைகளை சுவைத்துச் சாப்பிட்டு வந்த காலகட்டத்தில் மனித மூளை பற்றி நான் சிந்தித்தே இல்லை. இப்போது அது பற்றித் தெரிய வரும்போது ரொம்பவும் வியப்பாக உள்ளது. வியப்புக்குக் காரணம், மூளை என்பது நம் தலைக்கு உள்ளே பாதுகாப்பாக இருக்கின்ற சாம்பல் நிற சமாச்சாரம் மட்டுமல்ல என்ற உண்மைதான்! ஆமாம். மூளையென்பது மூளையில் மட்டுமில்லை, நம் உடல் முழுக்க, நம் நாடி நரம்புகளிலெல்லாம், நம் மனம் முழுக்க, நம் சிந்தனை முழுக்க, நம்மை முழுவதுமாக வியாபித்திருக்கும் ஒரு விஷயமாக உள்ளது! இவற்றின் தலைமைச் செயலகம் வேண்டுமானால் தலைக்குள் இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் மூளை என்ற ஒன்று நாம் வரையறை செய்திருக்கும் ’மூளை’ என்று ஒன்றுக்குள் கட்டுப்பட்டதல்ல என்பதைத்தான் நாம் இப்போது புரிந்துகொள்ள வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மூளையை ‘அறிவு’ என்று சொல்லலாம். அறிவு எங்கெல்லாம் இருக்கிறதென்றால், அது இல்லாத இடமே இல்லை என்பதுதான் இன்றையை அறிவு! ஆமாம். அறிவென்பது நம் உடல் முழுக்க, நம் நாடி நரம்புகளிலெல்லாம், நம் திசுக்களில், நம் உயிரணுக்களில், நம் டி.என்.ஏ.-யில், நம் முதுகில், நம் பிடரியில், ஏன் நம் நகத்தில்கூட வியாபித்திருக்கிறது. நாம் என்பதுகூட அறிவின் இன்னொரு பெயர்தான் என்று சொல்லிவிடலாம்.

நகத்தை வெட்டினால் மீண்டும் வளரவேண்டும் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. முடியை வெட்டினால் மீண்டும் வளர வேண்டும் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. அசுத்தமான, கெட்டுப்போன உணவை உட்கொண்டுவிட்டால் வாந்தியின் மூலமாக அதை வெளியேற்றிவிட  வேண்டும் என்று நம் வயிற்றுக்குத் தெரிந்திருக்கிறது. தேவையற்ற தூசு நம் நுரையீரலுக்குள் புக முயற்சித்தால், தும்மல் மூலமாக அதைத் தூக்கிவெளியே எறிய நம் நுரையீரலுக்குத் தெரிந்திருக்கிறது. நம் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான உயிரணுக்களும், நம்மைப் போலல்லாமல், எல்லா நேரத்திலும், மிகுந்த அறிவோடு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நம் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளும் எவ்வளவு தகவல்கள் இருக்கின்றன தெரியுமா? ஒரேயொரு உயிரணுவுக்குள் ஒரு லட்சம் பக்கங்கள்கொண்ட ஒரு புத்தகத்தில் எவ்வளவு விஷயங்களைச் சொல்ல முடியுமோ அவ்வளவு இருக்கிறது! ஆச்சரியம், ஆனால் உண்மை! ’The Power of Now’ என்ற புத்தகத்தில் எக்ஹார்ட் டாலி என்ற அதன் ஆசிரியர் – அவர் இந்தக்கால ரமணர் மாதிரி. ஜெர்மனியில் பிறந்த இவர் இப்போது கனடாவில் வாழ்கிறார் – அப்படித்தான் கூறுகிறார். அப்படியானால் நம் உடலுக்குள் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களுக்குள் இருக்கும் தகவல்கள் எவ்வளவு என்று நம்மால் யோசிக்கக்கூட முடியாது!

நாம் மட்டும்தான் நல்லது, கெட்டது, சின்னது பெரியது, கடினமானது, எளிமையானது, முடியக்கூடியது, முடிக்க முடியாதது, தீரக்கூடியது, தீர்க்க முடியாதது என்று மனதுக்குள் பட்டியல் போட்டு வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பணம், பதவி, அந்தஸ்து இப்படி நாம் எதை விரும்புகிறோமோ அது நம்மை வந்து அடையும் பாதையில் சீனப்பெருஞ்சுவர்களை நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எல்லாத் தடைகளுமே மனம் சார்ந்தவைகளே. இதைப் புரிந்துகொள்ள ஒருவர் ஆன்மிகவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய விஞ்ஞானமே இதை எடுத்துக்காட்ட நமக்குப் போதுமானதாக உள்ளது. மனிதர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் விஞ்ஞானம் பேசுகிறது. விஞ்ஞானரீதியாக, ஒரு மனிதனுக்கு எதெல்லாம் சாத்தியமோ, அதெல்லாம் எல்லா மனிதர்களுக்கும் சாத்தியம். ஆனால் ஒரு மனிதன் அடையும் உச்சங்களை ஏன் எல்லா மனிதர்களாலும் தொட முடிவதில்லை?

ஏற்கனவே நான் சொன்ன சீனப்பெருஞ்சுவர்கள்தான் காரணம். அவற்றை நாம் எப்படி உருவாக்கிக் கொள்கிறோம் என்று தெரிந்துகொண்டால், அவற்றை எப்படி தகர்க்கலாம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

சொல்லப்படுகின்ற வார்த்தைகள் நம் காதில் மட்டும் விழுவதில்லை. நம் மனதுக்குள்ளும் விழுகின்றன. எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்துக்கும் தக்கவாறு மூளையிலும் உடல் முழுக்கவும் தேவையான வேதிப்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. ”நியோரோபெப்டைட்ஸ்” என்று விஞ்ஞானம் அதற்குப் பெயர் கூறுகிறது.

பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும். நம் நினைப்பு நம்மைக் காப்பாற்றவோ அழிக்கவோ செய்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் போதும்.

ஒரு சின்னப் பையன். எட்டு வயதிருக்கும். கம்ப்யூட்டரில் ’ஷூட்டிங் கேம்ஸ்’ விளையாடுவதில் பிரியம். அவனுக்கு கான்சர், விரைவில் செத்துவிடுவான் என்று டாக்டர்கள் அவன் அம்மாவிடம் சொன்னது அவனுக்குத் தெரியாது. டாக்டர்களிடம் காட்டிவிட்டு, சோகமாக வந்த அம்மாவைப்பார்த்து, ”எனக்கு என்னம்மா” என்று கேட்டிருக்கிறான்.

June Alumai Sirpi Cover“ஒன்றுமில்லை. உன் உடம்பில் நிறைய பூச்சிகள் உன்னவனாம். அதையெல்லாம் சாகடிக்க வேண்டுமாம்” என்று சிரித்துக்கொண்டே அவள் அவனிடம் கூறினாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவனை ‘செக் அப்’ செய்த டாக்டர்களுக்கு ஒரே இன்ப அல்லது துன்ப அதிர்ச்சி. சிறுவனின் உடலில் ஒரு கான்சர் வைரஸ்கூட இல்லை! எப்படி என்று அவர்களுக்குப் புரியவில்லை. புரிய நியாயமும் இல்லை. டாக்டர்களுக்கு நோயைப்பற்றித்தான் தெரியும். ஆரோக்கியத்தைப் பற்றித் தெரியாது. எப்படியோ பையன் பிழைத்துவிட்டான். ’மெடிகல் மிராக்ள்’. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அம்மா, “நீ ஏதாவது செய்தாயா?” என்று மகனிடம் கேட்டாள், வியப்பு தாளாமல்.

“ஆமா, நீதான் சொன்னீல்ல, என் ஒடம்புக்குள்ள நிறைய பூச்சி இருக்குன்னு? நா ’கம்ப்யூட்டர் கேம்’ விளையாடும்போது அந்த பூச்சியையெல்லாம் ஒன்னு ஒன்னா சுட்டுச் சாகடிப்பதாக நெனைச்சு விளையாடினேன்” என்றான்!

நடந்தது அவ்வளவுதான். ஒரு விளையாட்டு. உயிர்காக்கும் விளையாட்டு.

எனவே, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் கல்; நீங்கள்தான் சிலை; நீங்கள்தான் சிற்பி. உடைப்பதும் நீங்களே. உருவாக்குவதும் நீங்களே. உடைப்பதை நிறுத்துங்கள். உருவாக்கிப் பாருங்கள்.

==========

சிலையும் நீ, சிற்பியும் நீ — 2

Silaiyum Nee Sirpiyum Nee 2உங்களுக்குள் உலகம் !

மனம் என்ற ஒன்று எத்தகையை சக்தி வாய்ந்த ஆயுதம் என்று ஒரு ‘சாம்பிள்’ பார்த்தோம்.  சரி, இந்த வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்?

இந்தக் கேள்வியை ஆயிரம் பேரிடம் கேட்டால் ஆயிரம் பதில்கள், ஏன், ஆயிரமாயிரம் பதில்கள்கூட வரும். எனக்கு அவள் வேண்டும், அவள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை, எனக்கு வேலை வேண்டும், எனக்குக் ’கார்’ வேண்டும், எனக்கு ’பைக்’ வேண்டும், எனக்கு வீடு வேண்டும், எனக்கு சென்னையில் சொந்த வீடு வேண்டும், எனக்குக் கல்யாணம் ஆகவேண்டும், எனக்கு விவாகரத்து வேண்டும் (!), எனக்கு ஆரோக்கியம் வேண்டும், நான் சாதனை செய்யவேண்டும், எனக்கு பயமே இருக்கக் கூடாது, எனக்கு கவலை இருக்கக்கூடாது, நான் தேர்வில் ’பாஸ்’ ஆகவேண்டும், நான் கலெக்டர், டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், நான் மந்திரி, நீ எந்திரி, நான் விஞ்ஞானி, நீ பேமானி, நான் சூப்பர் சிங்கர், ஓவியன், இயக்குனர், நடிகன் – அப்ப்பா…இந்த ’லிஸ்ட்’ முடியுமென்றா நினைக்கிறீர்கள்?

நிச்சயம் இல்லை.

Silaiyum Nee Sirpiyum Nee 2.1ஆனால் இவ்வளவும், இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படலாம், பெறலாம். நிச்சயமாக. சத்தியமாக. அதற்கு உங்களைத் தயார் படுத்திக்கொள்ள நீங்கள் தயாரா? உளியின் அடி வலிக்கிறது என்று சொல்லும் கற்களால் சிலை ஆகமுடியாது! தோல்வி, ஏமாற்றம், சோர்வு, அடி, நஷ்டம், வேதனை இப்படி எதுவுமே இல்லாத வாழ்க்கை கிடையாது. ஆனால் இவையெல்லாம் வெற்றி போடக்கூடிய வேஷங்கள் என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்! இதுதான் ரகசியம்! அதிருக்கட்டும். ரகசியத்தை விலாவாரியாகப் புரிந்துகொள்ளுமுன் சில உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. பார்க்கலாமா?

Silaiyum Nee Sirpiyum Nee 2.2நம் கையில் இருந்து ஒரு பேனாவை மேலே தூக்கிப் போட்டால் என்னாகும்? கீழே வந்து விழும். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் கீழே விழுகிறது? இதற்கான பதிலும் எல்லாருக்கும் தெரியும். புவியீர்ப்பு விசை. பூமி தன்னை நோக்கி இழுக்கிறது. அதனால் அந்த விசையின் வீச்சுக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் கீழே வந்துதான் ஆகவேண்டும்.

அதேபோல, மாற்றமுடியாத வாழ்க்கை விதிகள், பிரபஞ்ச விதிகள் உள்ளன. அவை வெற்றிக்கான விதிகள். அவற்றைப் பின்பற்றும் யாராலும் வெற்றிபெற முடியும். அவர் படித்தவரா, படிக்காதவரா, ஏழையா, பணக்காரரா, பிரபலமானவரா, முகம் தெரியாத அந்நியரா, ஆரோக்கியமானவரா, நோயாளியா, ஆணா, பெண்ணா, திருநங்கையா – என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல.

மூன்று வயது வரை மேதை ஐன்ஸ்டீனுக்குப் பேச்சே வரவில்லை. பன்னிரண்டு வயது வரை தாமஸ் ஆல்வா எடிசனுக்குப் படிக்க வரவில்லை. அதோடு அவர் காதுகேளாதவராகவும் இருந்தார். சிம்ஃபனி இசையை உலகில் பிரபலப்படுத்தி புகழ்பெற்ற ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் சிம்ஃபனியைக் கொடுத்த பீத்தோவனுக்கும் காது கேளாது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக நான்கு முறை இருந்த ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட் போலியோ நோயால் அவதிப்பட்டார். 1921-ல் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது உடல் இடுப்புக்கீழே செத்துப்போனது.  வாழ்நாள் முழுவதும் அந்தப் பிரச்சனையோடுதான் அவர் வாழ்ந்தார். ஆனாலும் 1933 முதல் 1945-ல் அவர் இறக்கும் வரை ஜனாதிபதியாகவே இருந்தார்!

ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த உலகின் மாபெரும் விஞ்ஞானியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மூளை என்று அவரைச் சொல்லலாம். ஏனென்றால் அவரது உடல் கிட்டத்தட்ட முழுக்க செத்துவிட்டது. ’மோடார் நியூரான் டிசீஸ்’ என்ற ஒரு வினோத நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் பேசமுடியாது, உடலை அசைக்கக்கூட முடியாது. கண்கள் மட்டும் அசையும். சாப்பாடுகூட யாராவது ஊட்டிவிட வேண்டும். அப்போதும் முக்கால்வாசி தட்டிலேயே விழுந்துவிடும். மூச்சு விடுவதுகூட அவருக்கு ஒரு அவஸ்தையாக இருக்கிறது.

ஆனால் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்! A Brief History of Time என்ற நூலின் மூலம் அவர் உலகப் புகழ் பெற்றுவிட்டார். இன்றும் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்! (அவரைப் பற்றி “சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்” என்று நான் ஒரு நூலே  எழுதியிருக்கிறேன்).

அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் ஏன் போகவேண்டும்? நம்ம ஊர் சுதா சந்திரன் தெரியும்தானே? புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். 1981-ல் நடந்த ஒரு விபத்தில் தன் வலது காலை இழந்தார். ஆனாலும் செயற்கைக்கால் பொருத்திக்கொண்டு ’மயூரி’ என்ற தெலுங்குத் திரைப்படத்திலும் ஹிந்தியிலும் நடனமாடி நடித்துப் புகழ்பெற்றவர். இன்றும் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

’கோரி தேரா காவும் படா ப்யாரா’ என்ற இனிக்கும் ஹிந்திப்பாடலை ஜேசுதாஸின் குரலில் கேட்டு ரசித்திருக்கிறீர்களா? சிச்சோர், ராம் தேரி கங்கா மைலீ, விவாஹ், அகியோங்கே ஜெரோங்கோன்ஸே போன்ற ஹிந்தித் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர் ரவீந்திர ஜெயின் என்பவர். அவர் கண் பார்வையற்றவர்.

திருநங்கையர்கூட சாதனை புரிந்திருக்கிறார்கள். விஜய் டிவியில் ”இப்படிக்கு ரோஸ்” என்ற நிகழ்ச்சிதான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனராக ரோஸ் வெங்கடேசன் என்ற ஒரு திருநங்கை நடத்திய முதல் நிகழ்ச்சியாகும். சென்னையைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை ஐ.ஏ.ஏஸ். தேர்வு எழுத முயன்ற முதல் நபர். ஆண்கள் / பெண்களுக்கு மட்டுமே ஐ.ஏ.எஸ். உரியது என்று சொல்லப்பட்டதால் இன்னும் தன் உரிமைக்காகப் போராடி வருகிறார்.

நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமென்றால், நமக்கு பற்றி எரியும் ஆசை இருக்கிறதென்றால் எதுவும் சாத்தியம். சமீபத்தில் எடுக்கப்பட்ட விஜய்டிவி ’நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டிருந்தேன். வெற்றி பற்றிய நிகழ்ச்சி அது. எதிரணியில் இருந்த ஒருவர், ”பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர் இருபதாயிரம் சம்பாதிக்கலாம். ஆனால் அவர் அம்பானி ஆகிவிட முடியாது” என்று கூறினார். நான் அதை மறுத்துக்கூறினேன். அம்பானி என்ற ஒரு மனிதருக்கு எதெல்லாம் சாத்தியமோ அது எல்லா மனிதருக்கும் சாத்தியம்தான். தெரிந்தோ தெரியாமலோ அவர் பின்பற்றிய அதே வெற்றிக்கான விதிகளைப் பின்பற்றினால் போதும். யாரும் அம்பானியாகலாம் என்று சொன்னேன். (அதற்காக எனக்கு பரிசுகூட கொடுத்தார்கள்)!

நான் பரிசுக்காக எதையும் சொல்லவில்லை. நான் சொன்ன விஷயமே கூர்மையானவர்களுக்கு ஒரு பரிசுதான்.   நமக்கு எது தேவைப்பட்டாலும், எவ்வளவு தேவைப்பட்டாலும், எதுவுமே நமக்கு வெளியிலே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படீன்னா, பணம் தேவைப்பாட்டால், பணம் நமக்குள்ளேயே இருக்குமா? வெறும் ஜேபியில் கையை விட்டு எடுத்தால் பணம் வருமா? என்று கேட்கக்கூடாது. நான் அப்படிச் சொல்லவரவில்லை.

நமக்கு வாழ்க்கையில் எது தேவையோ, அதை நம்மை நோக்கி இழுக்கும் சக்தி நம்மிடம்தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை. சமீபத்திய விஞ்ஞானம் சொல்கிறது! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியம்தான், ஆனால் உண்மையும்கூட. Truths stranger than fiction என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படித்தான் இதுவும்.

பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், பணம் செலவு செய்யும்போதெல்லாம் அதோடு பேசுங்கள் என்று என் தியானக் கூட்டங்களில் நான் சொல்வேன். அதெப்படி பணத்தோடு பேசுவது என்று கேட்பார்கள். ”இப்ப போறே, போயிட்டு, சீக்கிரமா, நிறைய திரும்பி வா” என்று அதற்கு உத்தரவு போடுங்கள் என்று சொல்வேன். கேட்டுவிட்டு சிரிப்பார்கள். ஆனால் நான் ’ஜோக்’ அடிக்கவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். நீங்கள் வேறு, பணம் வேறு அல்ல. நீங்களும் பணமும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டவர்கள் ! ஆமாம், இன்றையை விஞ்ஞானம் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. எப்படி?

ரொம்ப ’சிம்பிள்’. நாம் எதால் ஆக்கப்பட்டிருக்கிறோம்? உயிரணுக்களால். ஆங்கிலத்தில் அதை cell (உயிரணு) என்றும் atom (அணு) என்றும் சொல்கிறோம். மனிதனாக இருந்தால் ‘செல்’ என்றும், மற்றவையாக இருந்தால் ‘ஆட்டம்’ என்றும் சொல்கிறோம். ஆனால் இரண்டின் உள்ளேயும் உள்ள ’சமாச்சாரங்கள்’ ஒன்றேதான்!

அணு எவ்வளவு சின்னது தெரியுமா? ஒரு ஊசி முனையில் லட்சக்கணக்கான அணுக்கள் இருக்குமாம்! 1895ம் ஆண்டுக்கு முன்புவரை அணுவைப் பிளக்க முடியாது என்று விஞ்ஞானம் கருதி வந்தது. அதன் பின் நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அந்த உண்மை வெளிவந்தது. அது என்ன உண்மை? அணுவைப் பிளக்க முடியும் என்பதுதான் அது!

ஒரு அணுவுக்குள்ளே எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற அணுவைவிடச் சின்ன சமாச்சாரங்கள் (subatomic particles) உள்ளன என்று கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இல்லை, இல்லை, இவற்றைவிட சின்ன சமாச்சாரங்களால் எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான்கள் ஆக்கப்பட்டுள்ளன என்று கண்டு பிடித்தார்கள். அவற்றுக்கு க்வார்க் என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். சரி, இந்த க்வார்க்-குகள் எதால் செய்யப்பட்டவை என்று பார்த்தால் ஒரு அதிசயம் விஞ்ஞானிகளுக்குக் காத்திருந்தது. க்வார்க்-குகள் எதாலும் செய்யப்பட்டவை அல்ல என்பதுதான் அந்த அதிசயம்! ஆமாம். அணுக்களின் உருவாக்கத்துக்குக் காரணமாக க்வார்க்-குகள் எந்தப் பொருளாலும் ஆக்கப்படவில்லை. அவை கண்களால் பார்க்க முடியாத, எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பாலும் பார்க்க முடியாத, எதாலும் பார்க்க முடியாத, நுட்பமானதொரு ஆற்றலால் (energy) ஆக்கப்பட்டுள்ளன!

சரி இப்போது அப்படியே கொஞ்சம் பின்னால் போகலாமா? அப்படியானால், க்வாக்-குகள் ஆற்றலால் செய்யப்பட்டவை. அப்படியானால் அவைகளால் செய்யப்பட்ட எலக்ட்ரான், நியூட்ரான் போன்றவையும் ஆற்றலால் செய்யப்பட்டவை. அப்படியானால் அவைகளால் செய்யப்பட்ட அணுவும் ஆற்றலின் குட்டி வடிவம்தான்! அப்படியானால் அணுக்களால் ஆக்கப்பட்ட இந்த வானம், பூமி, கடல், ஆறு, மலைகள், மரங்கள் இவையெல்லாம்? இவைகளும் ஆற்றலின் வடிவங்களே! அப்படியானால் பணமும் ஆற்றலின் இன்னொரு வடிவமே! அப்படியானால் உயிரணுக்களால் செய்யப்பட்ட மனிதன்?  ஆற்றலின் உச்சக்கட்ட வடிவம் மனிதன்தான்! ஆக, எல்லாமே ஆற்றல்தான்! சக்தியின் வடிவம்தான் நாமும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாமும்! அப்படியானால் ஒரு ஆற்றலால் இன்னொரு ஆற்றலை இழுக்க முடியாதா? முடியும்.

இப்படித்தான் இன்றையை விஞ்ஞானம் கூறுகிறது. இந்த உண்மையை தன் The Honeymoon Effect என்ற சமீபத்திய நூலில் கூறுகிறார் அணு உயிரியல் விஞ்ஞானி டாக்டர் ப்ரூஸ் லிப்டன்.

இந்த உண்மையை, இந்த விதியைத் தெரிந்துகொண்டால், பயன்படுத்தினால் கிடைப்பது என்ன?

எல்லாம். எது வேண்டுமோ அதை நம்மை நோக்கி இழுக்கலாம். பணம், புகழ், வேலை, காதலன், காதலி, ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழுக்கலாம். ஏனெனில் நாம்தான் அது. அதுதான் நாம். புரிகிறதா?

===

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s