கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்

Puthiyadarisanam Attai June 16--30நான் ஏற்கனவே சொன்னதுபோல, மஹாபாரத வாழ்வியல் தொடர் புதிய தரிசனம் பத்திரிக்கையில் இந்த மாதம் தொடங்கிவிட்டது. மாதம் இருமுறை வரும் இதழ். ஒவ்வொன்றும் வந்த பிறகு வெளியிடுவேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். இந்த பக்கத்திலேயே.முகம்

மனிதன் எப்படி வாழவேண்டும், எப்படி வாழ்ந்தால் வாழ்வில் வெற்றியடைலாம், அமைதியும் நிம்மதியும் எப்போது கிடைக்கும், எப்படிப்பட்ட ஒழுக்க நியதிகளைப் பின்பற்றி மனிதன் வாழவேண்டும், மதிக்கத்தக்க மதிப்பீடுகள் எவை என்றெல்லாம் சொல்லும் நூல்கள் இன்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாய் கிடைக்கின்றன. ஆனால் இந்தியமரபில்தான் மனிதவாழ்க்கைக்கு வழிகாட்டும் முதல் நூல் உள்ளது என்று சொன்னால் இந்த உலகம் மூக்கில் விரலை வைக்கலாம். வைக்கட்டும், ஆனால் அதுதான் உண்மை! அந்த அற்புத நூல் எது?

மஹாபாரதம்.

KK-- Introஆம். இலக்கியத்தில், இதிகாசத்தில், புராணிகத்தில் மானிடக்கற்பனையின் உச்சம் எது என்று தேடினால் அதற்கான பதிலும் மஹாபாரதம் என்றுதான் சொல்லவேண்டிவரும். மஹாபாரதத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், என்ன இல்லை என்ற கேள்வியைத்தான் நேர்மையான பதிலாக வைக்க முடியும். கதைகள், உபகதைகள், உப-உப கதைகள், அவற்றின் ஊடாகச் சொல்லப்படும், சுட்டப்படும் உண்மைகள் யாவற்றையும் மனிதன் ஓரளவு புரிந்துகொண்டாலே போதும், வாழ்க்கையில் அவன் நிச்சயம்  வெற்றிபெற்றுவிடுவான். இன்று ஆங்கிலத்திலும், தமிழிலும் சுயமுன்னேற்ற நூல்கள் நிறைய வெளிவந்துகொண்டிருக்கின்றன. மஹாபாரதத்தை ஆழமாகப் படித்தால் இந்தமாதிரி புத்தகங்கள் தேவையில்லை என்றே சொல்லிவிடலாம். ஆமாம். அவ்வளவு இருக்கிறது அதில்.

KK-1அதிலிருந்து கொஞ்சம் எடுத்து உங்களுக்குக் கொடுத்து, இன்னும் போதுமான அளவு நாம் அமிழ்ந்து பார்க்காத பொக்கிஷத்தின் மீதான உங்களது ஆர்வத்தைத் தூண்டுவதே இத்தொடரின் நோக்கம். ஏன் ’கொஞ்சம் எடுத்து’ என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்காவிட்டாலும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். என்னிடம் உள்ள ஒரு ஸ்பூனைக்கொண்டு அந்தக் கடலில் இருந்து எவ்வளவு என்னால் அள்ள முடியும்?! மஹாபாரதத்தில் உள்ள கதைகளை, எனக்குப் பிடித்த வரிசையில், நான் சொல்லப் போகிறேன். என் பாணியில். வாருங்கள் என்னோடு.

விக்னேஷ்வர எழுதுகோல் — 01

KK-2மஹாபாரதத்தை எழுதியவர் யார் என்ற கேள்விக்கு வியாசர் என்று பதில் சொன்னால், அது சரிதான், ஆனாலும் சரியில்லை! ஏனெனில் அதை எழுதியவர் ஒருவகையில் வியாசர்தான் என்றாலும் இன்னொரு வகையில் அவரல்ல.  தன் மனதில் முதலில் முழுமையாக மஹாபாரதத்தை அவர் எழுதிவிட்டார். ஆனால் அதை எழுத்துவடிவில் வெளிக்கொண்டுவருவதற்கு இன்னொருவரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர் பிரம்மனை தியானித்தார். பிரம்மனும் பிரத்தியட்சமாகி, மஹாபாரதத்தை எழுதுவதற்குச் சரியான ஆள் கணபதிதான் என்று சொல்லிச் சென்றார்.

காவியமானாலும் கசமுசாவானாலும் முதலில் மனதில்தான் கருவாகி உருவாகிறது. எல்லாமே மனதில்தான் தொடங்குகிறது. அங்கே தொடங்காமல் வெளியில் எதுவுமே வரவோ நடக்கவோ முடியாது. எண்ணங்கள்தான் அவற்றுக்கு ஏற்ற புறச்சூழ்நிலையை உருவாக்குகின்றன. வெற்றியை நம்மை நோக்கி இழுக்கும் பிரபஞ்ச விதிகள் எவை, அவற்றின் விஞ்ஞான அடிப்படை என்ன, ஆசை அல்லது லட்சியம் எப்படி நிறைவேறுகிறது, ஏன் நிறைவேறாமல் போகிறது, நேரத்தை எப்படிச் செலவிடவேண்டும் – இப்படி எவ்வளவோ விஷயங்களை இன்றைய வாழ்வியல் நூல்கள் கூறுவது நமக்குத் தெரியும்.

மகான்களும், பெரியவர்களும், ஞானிகளும், சூஃபிகளும், சித்தர்களும் காட்டிய பாதையும் அதுதான். As a Man Thinketh என்ற பைபிள் வாசகமும், ஜேம்ஸ் ஆலன் அதே தலைப்பில் எழுதிய நூலும் பிரபலமானவை. தீபக் சோப்ரா, வான்டயர், எக்கார்ட் டாலி, ராபின்ஷர்மா, மால்கம் க்லாட்வெல் போன்ற உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உதாரணங்களும் உண்டு.

விஞ்ஞான அடிப்படையில் நமக்கு இன்று சொல்லப்படும் உண்மைகளையெல்லாம் ஆன்மிக அடிப்படையில், கதைகள் மூலமாக, கற்பனையின் மூலமாக மஹாபாரதம் சொல்கிறது. துவக்கத்திலேயே மனதைப்பற்றிய முக்கியமான செய்தியோடு அது துவங்குகிறது. இல்லையெனில் முதலில் வியாசர் மனதில் மஹாபாரதம் விரிந்தது என்ற தகவலைச் சொல்லியிருக்க வேண்டியதில்லையே! கதைகளிலும், கற்பனையின் அழகிலும் நாம் அமிழ்ந்து போவோமெனில், வெறும் பக்திசார்ந்த விஷயமாக நாம் அதை எடுத்துக்கொள்வோமானால் பெரிய இழப்பு நமக்குத்தான்.

சரி கதைக்கு வருவோம்.

வியாசர் கணபதியைத் தியானிக்க, அவரும் எழுந்தருள, விஷயத்தைச் சொல்கிறார் வியாசர். எழுதுவதற்கு ஒத்துக்கொள்ளும் கணபதி ஒரு ’கண்டிஷன்’ போடுகிறார்! அது என்ன? ரொம்ப வினோதமான நிபந்தனை அது. “நான் எழுதுகிறேன். ஆனால் என்னுடைய எழுதுகோல் நிற்காது. அதனால் நீ நிற்காமல் சொல்லிக்கொண்டே போகவேண்டும்” என்பதுதான் நிபந்தனை! யாராவது இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியுமா?

அதிருக்கட்டும். நிற்காமல் எழுதும் ஒரு எழுதுகோல்! ஆஹா, என்ன அற்புதமான கற்பனை! இந்தக் காலத்தில் சிலர் எழுதுவதைப் படித்தால், எப்போது இவர் பேனா நிற்கும் என்று ஏங்கவேண்டியுள்ளது! இந்த அற்புதமான கற்பனையின் மூலம் வியாசரின் பெருமை நமக்கு உணர்த்தப்படுகிறது. சாதாரண கவிஞனுக்கும் மஹாகவிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். சாதாரண கவிஞர்கள் யோசித்து எழுதுவார்கள். ஆனால் மஹாகவிகள் மழையைப் போலப் பொழிவார்கள். மொத்த மஹாபாரதமும் வியாசரின் மனதுக்குள் வந்தாகிவிட்டது. இனி அதைக் கொட்டவேண்டியதுதான் பாக்கி. எனவே, கவிதை என்பது, “Spontaneous overflow of powerful feelings” என்று ஆங்கிலக் கவி வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல, வியாசர் கொட்டுவதற்கு விக்னேஷ்வர எழுதுகோல்தான் சரி.

எனவே நிபந்தனைக்கு வியாசர் ஒத்துக்கொள்கிறார். ஆனால் பதிலுக்கு விக்னேஷ்வரருக்கு ஒரு எதிர்நிபந்தனை போடுகிறார்! சபாஷ், சரியான போட்டி! “நான் நிற்காமல் சொல்லிச் செல்வேன். ஆனால் பொருளை உணர்ந்துகொண்டுதான் நீங்கள் எழுதவேண்டும்” என்பதுதான் அந்த நிபந்தனை! என்ன விந்தை! கடவுளுக்கே நிபந்தனை போடும் கவிஞன்!

கணபதி நகைத்துவிட்டு சம்மதித்தார். அந்தப் புன்னகை ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது. எனக்கே நிபந்தனையா? எனக்கு உன் மஹாபாரதம் புரியாமல் போகும் என்றும் நினைக்கிறாயா? எவ்வளவு மடத்தனம்! எவ்வளவு கொழுப்பு உனக்கு! என்றெல்லாம் அந்தப் புன்னகை சொல்லியது!

ஆனாலும் சம்மதித்துவிட்டார். ஏனெனில் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் மனிதவாழ்வு. நிபந்தனைகளற்ற வாழ்க்கை கிடையாது. நிபந்தனைகளை அடுத்தவர் கொடுப்பார், அல்லது நாமே நமக்குக் கொடுத்துக்கொள்வோம். அல்லது இயற்கை கொடுக்கும். மனிதனாகப் பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும். அவனுக்கு நிச்சயம் பசிக்கும். தூக்கம் வரும். ஓய்வு வேண்டும். இவையெல்லாம் இயற்கையின் நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளுக்கு உட்படாமல் ஒரு மனிதன் வாழமுடியாது. இலக்கியம் படைக்க வேண்டுமென்றால் அதற்கான நிபந்தனைகள் உண்டு. நூறு பக்கத்து எழுதிவிட்டு அதை சிறுகதை என்று சொல்லமுடியாது. அதேபோல மூன்று பக்கங்களுக்கு எழுதிவிட்டு அதை புதினம் என்று வாதிக்க முடியாது. ஒரு வாக்கியத்துக்கீழே இன்னொரு வாக்கியமாக எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொல்லமுடியாது. எல்லாவற்றும் புற மற்றும் அக நிபந்தனைகள், வரையறைகள் உண்டு.

எனவே கணபதியும் வியாசரின் நிபந்தனைக்கு சம்மதித்துவிட்டார். மனிதர்களோடு விளையாடுவதுதான் கடவுளுக்குப் பிடித்த விஷயமாயிற்றே! வியாசரும் பாடிக்கொண்டே சென்றார். ஆமாம் பாடிக்கொண்டுதான். எளிதில் பொருள் விளங்கிக்கொள்ள முடியாத கடினமான அர்த்த முடிச்சுகளை ஆங்காங்கு அமைத்துப் பாடினார். சிலகணங்கள் விக்னேஷ்வரர் தயங்கி, ஸ்லோகங்களின் பொருளை அவதானித்துவிட்டு மீண்டும் எழுதினார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி வியாசர் அடுத்தடுத்த ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்து நிறுத்திக்கொள்வார்! இப்படித்தான் மஹாபாரதம் முழுவதும் வியாசரால் பாடப்பட்டு, விக்னேஷ்வரரால் எழுதப்பட்டது!

கடவுளையே திகைக்கவும் தயங்கவும் வைத்த மஹாகவியிடம் நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும்! வாருங்கள் பார்க்கலாம்!

 

 

 
Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்

  1. Mohan says:

    Dear sir, what happend with Mahabharatha valviyal? We could not see in your blog the continuation after July issue? Will that come? Eagerly expecting sir..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s