02 — மஹாபாரத வாழ்வியல் — கங்கை மைந்தன்

இந்த மாத புதிய தரிசனத்தில் வந்த இரண்டாம் பகுதி.

Puthiyadarisanam Coveri July 01--15நதியைப் புனிதமாகவும், புனிதமானதைப் பெண்ணாகவும் பாவிக்கும் பாரம்பரியம் நம்முடையது. கங்கை நமக்குப் புனித நதி. இந்தியப் பெண்களில் கங்காக்கள் பலர் உண்டு. இதை இங்கே சொல்வதற்கு ஒரு காரணமுள்ளது. இந்த பாரம்பரியம் மஹாபாரத காலத்திலேயே தொடங்கியிருக்கவேண்டும். ஏனெனில் காப்பியத்தின் முக்கியமான கதாபாத்திரமான பிதாமகர் பீஷ்மரின் அம்மாவே கங்கை நதிதான்!

ஆம். அந்தக் கதைக்குள் போவதற்குமுன் நாம் சந்தனு மஹாராஜாவின் கதையைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் கதைதான் ஆதிகதை. நமக்கான பல செய்திகளைக் கொண்ட கதை.

புகழ்பெற்ற ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சி செய்துவந்தார் திருமணமாகாத சந்தனு மஹாராஜா. ஒரு நாள் காட்டுப்பக்கம் வேட்டைக்குப் போனபோது ஓர் உலகஅழகியைப் பார்த்தார். “நீ யாராக இருந்தாலும் எனக்கு மனைவியாகிவிடு. என் உடல், உயிர், மனம், தனம், ராஜ்ஜியம் எல்லாவற்றையும் உனக்காக நான் தருவேன்” என்று வாக்களித்தார். மன்மத லீலை மயக்கியது ஆளை. அந்த அழகி யார்? அவள்தான் கங்கை நதி. பெண்ணுருவில் அவள் ஏன் இருந்தாள்?  அது இப்போதைக்கு ரகசியம்.

Puthiyadarisanam KK-2 -- July 01--15சந்தனுவைத் திருமணம் செய்துகொள்ள கங்கை சம்மதித்தாள். ஆனால் மூன்று நிபந்தனைகளை விதித்தாள். ஏற்கனவே சில நிபந்தனைகளை நாம் பார்த்துவிட்டோம். என் எழுதுகோல் நிற்காது, எனவே  நிற்காமல் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்பது கணபதியின் நிபந்தனை. பொருள்புரிந்து எழுதவேண்டும் என்பது வியாசரின் நிபந்தனை. மஹாபாரதத்தில் அவ்வப்போது நிபந்தனைகள் வந்துகொண்டே இருக்கும். ஏன்? நிபந்தனைகள் இன்றி வாழ்க்கை இல்லை. எல்லாவற்றுக்கும் எல்லைகள், வரையறைகள், நிபந்தனைகள் உண்டு. சில எல்லைகளுக்குள் இயங்கும்போதுதான் சுதந்திரத்திற்கே அர்த்தம் வரும். இஷ்டத்துக்கு இருப்பேன் என்றால் கஷ்டம்தான் வரும்.

சரி, அந்த மூன்று நிபந்தனைகள் என்ன?

அவள் என்ன குலம் என்று கேட்கவே கூடாது.

அவள் என்ன செய்தாலும் தடுக்கக்கூடாது.

அவள்மீது எக்காரணம் கொண்டும் கோபிக்கக்கூடாது.

Puthiyadarisanam KK-2.2 -- July 01--15சந்தனு எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டார். இன்னும் முன்னூறு நிபந்தனைகள் போட்டிருந்தாலும் ஒத்துக்கொண்டிருப்பார். அவருக்குக் காரியம் ஆகவேண்டும். அவர் போதையில் இருந்தார். மதுவின் போதையல்ல. அதைவிட உக்கிரமானது. மாதுவின் மீதான போதை.

திருமணம் நல்லபடியாக முடிந்து, தம்பதியர் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். வருஷத்துக்கு ஒன்று என்று கங்கா பெற்றுக்கொண்டிருந்தாள். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் குழந்தை பிறந்தபிறகு அவள் செய்த காரியம்தான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடியது. அப்படி என்ன செய்தாள்?

குழந்தை பிறந்தவுடன் அதைக்கொண்டுபோய் கங்கை நதியில் போட்டுவிடுவாள்! சந்தனு அப்பாவுக்கு அந்தச்செயல் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. கொடுத்த வாக்கு அவரைத் தடுத்தது. வாக்குத் தவறுவதற்கு முதல் பரிசு கொடுக்கவேண்டுமென்றால் அது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம்தான். ஆனால் பண்டைய காலத்தில், எல்லாப் பண்பாடுகளிலும், வாக்குத்தவறுவது ஒரு கொடிய பாவமாகத்தான் பார்க்கப்பட்டது. கொடுத்த வாக்கை மீறுவது அந்தக் காலத்தில் பழக்கமில்லை.

உலகின் தலைசிறந்த அழகியை உனக்குத் தருகிறேன் என்று பாரிஸுக்கு வாக்களித்து அதன் படி ஹெலனை அவனுடன் அனுப்பியதால்தான் ஹோமரின் ”இலியட்” காவியமே எழுந்தது. பத்தாண்டுகளுக்குமேல் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் போர் நடந்தது. உலகில் முதன் முதலில் எழுதப்பட்ட கிரேக்க காவியமான ’இலியட்’ காலத்திலும் வாக்குத்தவறுவது ஒரு பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது.

கொடுத்தவாக்கைக் காப்பாற்ற வேண்டித்தான், ராமன் ராஜ்ஜியம் துறந்து காட்டுக்குப் போகவேண்டும் என்ற கொடூரமான வரத்தைக் கைகேயி கேட்டபோது, பதில் சொல்லமுடியாமலும் மறுக்க முடியாமலும் தசரதன் மயங்கி விழுந்தார்.

சந்தனுவும் மௌனம் காத்தார். இப்படியே ஏழாண்டுகள் சென்றன. ஏழு குழந்தைகள் நதியின் நீரோட்டத்துக்குப் பலியாகிவிட்டார்கள். எட்டாவது குழந்தை பிறந்ததும்தான் சந்தனுவுக்குக் கோபம் வந்தது. மயக்கம் தெளிய எட்டாண்டுகள் ஆகியிருக்கிறது மஹாராஜாவுக்கு!

”நீ என்ன பெண்ணா, இல்லை பேயா? பெற்ற குழந்தையை இப்படி ஒரு தாய் கொல்லலாமா? ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்றெல்லாம் கேட்டுவிட்டார்.

“உனக்குக் குழந்தையின்மீது பாசம் வந்துவிட்டது. இனிமேல் நான் உனக்குத் தேவையில்லை. உண்மையைச் சொல்லவேண்டிய நேரமும் வந்துவிட்டது” என்று சொல்லிய கங்கை ஏழு குழந்தைகளைக் கொன்றது ஏன் என்ற கதையைச் சொன்னாள்.

வசுக்கள் எனப்பட்ட எட்டு தேவர்கள் ஒருநாள் தம் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது ஒரு வசுவின் மனைவி அங்கு வந்த ஒரு அழகான பசுவைப் பார்த்து அதைத் திருடிச்செல்ல ஆசைப்பட்டாள். ஆனால் அது சாதாரண பசுவல்ல. விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீகப்பசு நந்தினி. வஷிஷ்டமுனிக்குச் சொந்தமானது. விஷயம் தெரிந்த வசுக்கள் வேண்டாமென்று சொல்லினர். ஆனால் ஒரு வசுவின் மனைவியின் பிடிவாதத்தால் வசிஷ்டர் திரும்பி வருவதற்குள் பசுவைக் கொண்டுவந்து விட்டுவிடலாம் என்று நினைத்து அவர்கள் பசுவைக் கவர்ந்துசென்றனர். தன் தவவலிமையால் அதை உணர்ந்துகொண்ட வசிஷ்டர் மானிடர்களாக பூமியில் பிறப்பெடுக்க வேண்டுமென்று வசுக்களைச் சபித்தார்!  மனிதனாகப் பிறப்பதே ஒரு சாபம் போலும்!

வசுக்கள் தண்டனையைக் குறைக்க வேண்டினர். ம்ஹும், வஷிஷ்டர் பணியவில்லை. இறுதியில், ஏழு வசுக்கள் மட்டும் பிறந்தவுடன் விடுதலை அடைந்துவிடுவர் என்றும், பசுவைத் திருடச்சொன்னவளின் கணவன் மட்டும் பூமியில் நெடுநாள் வாழ்ந்து பின்னர்தான் தேவலோகத்துக்கு வரமுடியும் என்றும், அதற்குமேல் சாபத்தை ‘டைல்யூட்’ செய்யமுடியாதென்றும் வசிஷ்டர்  இறுதியாகச் சொல்லிவிட்டார். அந்த எட்டு பேரும், அஷ்ட வசுக்களும், கங்கையின் பிள்ளைகளாக, சந்தனுவுக்கு மகன்களாகப் பிறந்தனர். அவர்களைத்தான் நதியில்வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்துக்கொண்டிருந்தாள் கங்கை!

புறஉலகில் நடக்கும் பல காரியங்கள் சம்பந்தப்படாவர்களுக்கு கொடூரமானதாகத் தெரியலாம். ஆனால் உண்மையில் அவை கருணை மிகுந்த காரியமாகக்கூட இருக்கலாம். மோசஸ் எனப்படும் மூஸா நபி ஒருமுறை கில்ர் என்ற நபியோடு இறைவனின் உத்தரவுப்படி சென்றுகொண்டிருந்தார். ஒரு சின்னப்பையனை கில்ர் கொலை செய்தார். அது கொடிய பாவம் என்று மூஸா நினைத்தார். ஓரிறைவன் மீது நம்பிக்கையில்லாமல் வளர்ந்து அந்தப் பையன், ஓரிறைவன்மீது நம்பிக்கைகொண்ட தன் பெற்றோர்களைச் சித்திரவதை செய்வான் என்று பின்னர்தான் தெரிந்தது. இந்தக்கதை குர்’ஆனில் சொல்லப்படுகிறது. நிகழும் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு காரணமிருக்கும். ஆனால் அது நமக்கு அந்த நேரத்தில் தெரியாமலிருக்கலாம்.

அந்தக் காலத்தில் அனஸ்தீசியா இல்லாமல் ஆபரேஷன் செய்தார்கள். இந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்குக்கூட ’பைபாஸ்’ செய்கிறார்கள்! பார்ப்பதற்கும் நினைப்பதற்கும் வேதனையான விஷயம்தான் என்றாலும் அவை உயிர் காக்கச் செய்யப்படும் கருணைமிருந்த முயற்சிகளல்லவா? கங்கை தன் குழந்தைகளை ஆற்றில் வீசியதும் கருணையால்தான்! காதலில் தொடங்கியது கருணையில் முடிந்திருக்கிறது!

சரி, எட்டாவது குழந்தைக்கு என்னானது? ஒன்றும் ஆகவில்லை. அது வளர்ந்து வாலிபப் பருவம் வரும் வரையில் வைத்திருந்து, பின்னர் உன்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லி சந்தனுவை விட்டுப் பிரிந்துசென்ற கங்கை அக்குழந்தையை தானே வளர்த்து வந்தாள்.

சில ஆண்டுகள் கழித்து கங்கைக் கரைக்குச் சென்ற சந்தனுவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அழகானதொரு வாலிபன் கங்கை நதியில் அம்பெய்து பழகிக்கொண்டிருந்தான். அஸ்திரப்பிரயோகம். அதில் என்ன ஆச்சரியம் என்றால், அவன் அம்புவிட்டால், அம்பு சென்று குத்தி நின்ற இடத்தைவிட்டு மேலே நகராமல் நின்றது நதி!  ஆஹா, என்ன அற்புதமான கற்பனை! ’மாஜிகல் ரியலியஸம்’ என்றெல்லாம் பேசுகிறோம். இதைவிட ஒரு மந்திர யதார்த்தம் உண்டா? அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கும் மஹாபாரதம் பதில் தருகிறது.

அங்கே நடந்துகொண்டிருந்தது தாய்க்கும் மகனுக்குமான விளையாட்டு! ஆம். அம்மா மகனுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள். அவன் அம்பு விட, அதன் காரணமாக நதி நகரமுடியாமல் இருப்பதாக அவள் நடித்து மகனை மகிழ்வித்துக்கொண்டிருந்தாள்! அவன்தான் சந்தனுவிடம் ஒப்படைப்பதாகச் சொன்ன எட்டாவது மகன் தேவவிரதன். பின்னாளில் அவன் ”பீஷ்மர்” என்ற புகழ்ப்பெயருடன் விளங்கினார்.  “பீஷ்மர்” என்றால் அற்புதமான செயலைச் செய்தவர் என்று அர்த்தம். அம்பு விட்டு ஆற்றின் ஓட்டத்தை நிறுத்துவது அற்புதம்தானே? ஆனால் அதைவிட ஒரு பேரற்புதத்தை பீஷ்மர் தன் வாழ்க்கையில் நிகழ்த்தினார். அதுவும் தன் தந்தைக்காக. காத்திருங்கள், பார்க்கலாம்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s