மஹாபாரத வாழ்வியல் 3 & 4

KK -- 3 Cover பிதாமகன் பீஷ்மர்  – 03

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள்மீது அப்பாவும் அம்மாவும் அவ்வளவு பிரியமாக இருந்தார்கள். அவளும் அழகான, அறிவான பெண்ணாக இருந்தாள். ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் தன் வீட்டுச் சுவரேறிக்குதித்து தனக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்துகொண்டு ‘செட்டில்’ ஆகிவிட்டாள். பைத்தியம் பிடித்த மாதிரி பெற்றோர் இருக்கின்றனர்.

இது அன்றாடம் எங்காவது நடக்கும் நிகழ்ச்சிதான். உணர்ச்சி என்று வரும்போது பெற்றோரின் உணர்ச்சியைவிட தங்கள் உணர்ச்சிதான் பெரிசு என்று சிறிசுகள் நினைப்பதுதான் வாடிக்கையாகவும் இயல்பாகவும் உள்ளது. ’இமோஷனல் இண்டலிஜென்ஸ்’ பற்றி நாம் இன்று அதிகமாகப் பேசுகிறோம். ”இட்லியாக இருங்கள்”, சட்னியாக இருங்கள் என்றெல்லாம் அது பற்றி நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.  ஆனால் அதற்கு முன்னோடியாக இருந்த ஒரு நபர்தான் மஹாபாரதத்தின் தேவவிரதன். ம்ஹும் பீஷ்மர். ஆம். அப்படிச் சொல்வதுதான் மரியாதை.

KK -- 3.0அஸ்திரப்பிரயோகங்களில் அற்புதங்கள் நிகழ்த்திய தேவவிரதன் சந்தனுவின் பட்டத்துக்குரிய மகனாக, இளையராஜாவாக வலம்வந்தார். ஆனால் அவர் செய்த இரண்டு சத்தியங்கள் அவர் புகழை வானளாவ உயர்த்திவிட்டன. இன்றைக்கு நம்மால் பின்பற்ற முடியாத, அல்லது பின்பற்ற மிகமிகக் கடினமான ஒரு செயலை அவர் தன் அப்பாவுக்காகச் செய்தார். அது ஒரு ஒப்பற்ற தியாகம். அப்படிப்பட்ட ஒரு தியாகத்தைச் செய்ய நிச்சயம் நாம் தயாராக இருக்க மாட்டோம்.

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க  மந்திரமில்லை என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த முதுமொழியே தவிர நாம் பின்பற்ற விரும்புகின்ற ஒரு விஷயமாக இல்லை என்பதுதான் நிஜம். மனைவிக்காகப் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் அனாதைகளாக விட்டுவிடும் ‘படித்த’ பிள்ளைகள் இருப்பது இக்காலம். ஆனால் அப்பாவுக்காக ஒரு ராமர் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசித்தார். உன் அப்பா இப்படிச் சொன்னார் என்று கைகேயி ராமரிடம் சொன்னபோது, “அப்பா சொன்னால் என்ன, நீங்கள் சொன்னால் என்ன தாயே” (தந்தையும் தாயும் நீரே! தலை நின்றேன், பணிமின் என்றான்…மன்னவன் பணி அன்றாகினும் நும் பணி மறுப்பனோ) என்று மரியாதையாகச் சொல்லிவிட்டு தன் பட்டாபிஷேகத்துக்கு நாடே தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒன்றுமே சொல்லாமல் மரஉரி தரித்துக்கொண்டு காட்டுக்குசெல்ல உடனே தயாராகிவிடுகிறார் ராமர். உலகெங்கும் ராமருடைய பெயர் இன்று புகழ்பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அந்த பாத்திரத்தின் உன்னத குணம்தான் காரணம். எந்த சூழ்நிலையிலும் ’டென்ஷன்’ ஆகாத, முழுக்க முழுக்க ’ரிலாக்ஸ்டாக’ இருந்த ஒரு மகா ’பெர்சனாலிட்டி’ ராமர்! அதனால்தான் வெற்றிமேல்வெற்றி புகழுக்குமேல் புகழ் அவருக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது.

KK -- 3.1பீஷ்மர் இன்னும் ஒருபடி மேலே சென்றார் என்று சொல்லத்தோன்றுகிறது. சமாச்சாரம் அப்படி. ராமராவது சீதையோடு காட்டுக்குச் சென்றார். ஆனால் இங்கே முதலுக்கே மோசமாகிவிட்டது!

ஆமாம். கங்காதேவி சென்ற பிறகு திருமணம் செய்துகொள்ளாமல்தான் வாழ்ந்து வந்தார் சந்தனு. ஆனால் எத்தனை காலத்துக்குத்தான் உணர்ச்சிகளைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் அது வெளிவரத்தானே செய்யும்! ஒரு மீனவப் பெண்ணைப் பார்த்தபோது சந்தனுவுக்கு அதுதான் நடந்தது.

அவள் பெயர் சத்தியவதி. அவள் என்ன அவ்வளவு அழகாக இருந்தாளா? தெரியாது. அதுபற்றி மஹாபாரதம் சிலாகிக்கவில்லை. ஆனால் வேறு ஒரு விஷயம் பற்றி சிலாகிக்கிறது. அதுதான் அவள்மீது வீசிக்கொண்டிருந்த ஒரு நறுமணம்! வேறு எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒரு திவ்ய வாசனை அவள்மீது வீசியது!

KK -- 3.2இயல்பாக மீனவப்பெண் என்றால் அவள் மீது மீனின் கவுச்சிதான் வீசிக்கொண்டிருக்க வேண்டும்.  மாறாக அவள் உடம்பிலிருந்து ஒரு ‘ஆக்ஸ் எஃபக்ட்’ வெளியாகி சந்தனுவைக் கட்டிப்போட்டது. அது ஒரு முனிவர் கொடுத்த வரத்தின் பயன் என்று சொல்லப்பட்டது. ஆஹா, இப்படி ஒரு வரம் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்க வைக்கிறது.

சத்தியவதியின் வாசனை மன்மத வாசனையாக மாறிப்போனது சந்தனுவுக்கு. கங்கையிடம் சொன்னதுபோலவே அவளிடமும் தன் ஆசையைச் சொன்னார் சந்தனு. என் அப்பாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல, சந்தனுவும் மீனவத் தலைவனிடம் சென்றார். ”என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் உன் நாட்டை ஆளவேண்டும்” என்று நிபந்தனை விதித்தான் அவன். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது என்பது அதுதானே! ஆனால் பீஷ்மருக்கு துரோகம் செய்ய சந்தனுவுக்கு விருப்பமில்லை. ஒன்றும் சொல்லாமல் ஹஸ்தினாபுரத்துக்கு வந்துவிட்டார்.

KK -- 3.3ஆனாலும் மீனவப்பெண் சத்தியவதியின் வாசனை மீனை வருப்பதுபோல் அவரை நாளும் வாட்டியது. அப்பாவின் சோகத்தை உணர்ந்துகொண்ட மகன் தந்தையோடு பேசிப்பார்த்தான். “நீ எனக்கு நூறு பிள்ளைக்குச் சமம். எனினும் ஒரு மகன் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான் என்று சாஸ்திரம் படித்தவர்கள் கூறுகிறார்கள்” என்றெல்லாம் சந்தனு சொல்ல, தந்தையின் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சியை பீஷ்மர் புரிந்துகொண்டார். ஆனால் விஷயத்தைப் போட்டு சந்தனு உடைத்துவிடவில்லை. வயது காரணமாக வெட்கப்பட்டுத் தயங்கினார். அதைப்பார்த்த தேவவிரதன் ஒரு காரியம் செய்தார். ட்ரைவர்களுக்குத் தெரியாத முதலாளி பற்றிய ரகசியம் இருக்குமா என்ன? சந்தனுவின் தேரோட்டியிடம் பேசினார். எல்லா விஷயத்தையும் தேரோட்டி மீன் துண்டுகளைப் போல கூறுகட்டிச் சொன்னான்.

சத்தியவதியின் தந்தையிடம் சென்று பீஷ்மரே பேசினார். அப்பாவுக்குப் பெண் கேட்டுப்போன முதல் மகன் அவராகத்தான் இருக்கவேண்டும்! மீனவத்தலைவன் தன் நிபந்தனையைச்  சொன்னான். ”உன் மகளுக்குப் பிறப்பவர்களே பட்டத்து வாரிசுகளாக இருப்பார்கள். என் உரிமையை நான் விட்டுவிடுகிறேன்” என்று பீஷ்மர் வாக்குறுதி கொடுத்தார். இதுவே பெரிய விஷயம். ஆனால் மீனவத்தலைவனோ மிகுந்த முன்யோசனை கொண்டவனாக இருந்தான்.

”அது சரி, நீ விட்டுக்கொடுத்துவிடுவாய், ஆனால் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் ராஜ்ஜியத்துக்கு உரிமை கோரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?” என்று கேட்டான்.

தீர்க்கதரிசனத்தோடும் மிகுந்த சுயநலத்தோடும் அப்படி ஒரு கேள்வி வரும் என்று பீஷ்மர் எதிர்ப்பார்க்கவே இல்லை. ஆனால் அவர் சொன்ன பதிலை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு தியாகம் அந்த பதிலில் இருந்தது.

“நான் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்பதுதான் அது!

தன் உணர்ச்சிக்காக மற்றவரின், பெற்றோரின் உணர்ச்சியை மதிக்காமல் இருப்பதுதான் நாம் காணும் வாழ்க்கை. ஆனால் மஹாபாரதம் காட்டும் வாழ்க்கை, அடுத்தவருக்காக தன்னுடைய நியாயமான உணர்ச்சிகளையும் தியாகம் செய்த மஹாபுருஷர்களுடைய வாழ்க்கை.

நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். தேவவிரதன்போல நம்மால் இருக்க முடியுமா? ’அற்புதங்கள் செய்தவர்’ என்ற அர்த்தம் தரும் ’பீஷ்மர்’ என்ற பெயர் தேவவிரதனுக்கு அதனால் நிலைத்தது.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அற்புதம்தானே!

 KK -- 4 Coverசஞ்சீவினி மந்திரம் -– 04

அதிகார மோகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதிக்குலைவும், வன்முறையும் போரும்தான் இருக்கும். மூன்று உலகங்களையும் ஆட்சிசெய்வது யார் என்ற போட்டியில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஒருகாலத்தில் யுத்தம் நடந்தது. தேவர்களுக்குக் குருவாக பிரகஸ்பதி இருந்தார். அசுரர்களுக்குப் போதகராக சுக்ராச்சாரியார் இருந்தார். பிரகஸ்பதி வேதங்களை ஆழமாகக் கற்றவர். சுக்ராச்சாரியார்  ஒருபடி மேல். செத்துப்போனவர்களை மீண்டும் உயிரோடு கொண்டுவரும் சஞ்சீவினி என்ற மந்திரவித்தை தெரிந்திருந்தது அவருக்கு! அதனால் யுத்தத்தில் தோற்று இறந்துபோன அசுரர்களெல்லாம் மறுபடி மறுபடி உயிருடன் வந்து தேவர்களோடு சண்டையிட்டுக்கொண்டே இருந்தார்கள்!

தேவர்களுக்குப் பெரிய பிரச்சனையாகிவிட்டது. எப்படி அதிலிருந்து மீள்வது என்று யோசித்தார்கள். கடைசியில் பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவன் மூலம் அதைச் செய்யமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றியது. இளைஞன் கசனிடம் சென்று பிரச்சனையைச் சொல்லி அதற்கான தீர்வும் அவனிடத்தில் இருப்பதாக எடுத்துக்கூறினார்கள். அது என்ன தீர்வு?

சுக்ராச்சாரியாரிடம் அவன் சீடனாகச் சேரவேண்டும். அவருடைய நன்மதிப்பையும் அன்பையும் பெற்று எல்லாக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சஞ்சீவினி மந்திரம் உட்பட. அதைத் தெரிந்துகொண்டுவிட்டால் தங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அவர்கள் நினைத்தனர். அதோடு, சுக்ராச்சாரியாரின் அழகான மகள் தேவயானியின் அன்பையும் கசன் பெற்றுக்கொள்ளலாம் என்று அவனை உசுப்பிவிட்டனர்!

KK -- 4.0கசனும் உடன்பட்டான். ஆனால் அது தேவயானிக்காக அல்ல என்பது கதையை முழுமையாகப் படித்த பிறகு தெரியும். அந்தக்காலத்தில் ஒரு குருவிடம் மாணாக்கனாகச் சேர்வதென்பது சாதாரண விஷயமல்ல. இரண்டு முக்கியமான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும். பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஏன் ’லேட்’ என்று கேட்டால் எந்த மாணவரும், “சாரி சார், இனிமேல் ’லேட்’டா வராம இருக்க முயற்சி பண்றேன்” என்றுகூடச் சொல்வதில்லை. மாறாக, ”பஸ் ’லேட்’டாக வந்தது, அம்மா சமைக்க ’லேட்’டாகிவிட்டது” என்பது போன்ற பொய்யான காரணங்களையும், பழியைத் தூக்கி அடுத்தவர்மீது போடும் வேலையையும்தானே செய்கிறார்கள்! அல்லது, நாங்க என்ன அரிச்சந்திரனா, மஹாத்மாவா என்று சொல்லி உண்மை சொல்லாமல் இருக்கும் பழக்கத்தை நியாயப்படுத்துவார்கள்!

இரண்டாவது நிபந்தனை முன்னதைவிடக் கடினமானது. கற்றுக்கொள்ளும் காலம் வரை, அது எத்தனை ஆண்டுகளானாலும் சரி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்! அங்கே ’அரியர்ஸ்’ வைத்தெல்லாம் தேறமுடியாது! முதலாண்டிலேயே திருமணம் செய்துகொள்ளும் மாணவர்களையும், படித்துக்கொண்டிருக்கும்போதே காதலனோடு போய்விடும் மாணவிகளையும் நாம் அறிவோம். ஆனால் ஒரு ஞானியைப்போல, உணர்ச்சிகளை அடக்கியாளக்கூடியவனே அந்தக்காலத்தில் ஒரு குருவிடம் சீடனாகச் சேரமுடியும்.

KK -- 4.1இன்னாருடைய பேரன் நான், இன்னாருடைய மகன் நான், இப்படியெல்லாம் இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து, தேவயானிபோன்ற ஒரு பேரழகியை மகளாகப்பெற்ற குருவிடம் லட்டு தின்ன ஆசைப்படாத உண்மையான மாணவனாகப் போய்ச் சேர்ந்தான் கசன்!

எதிரிக் கும்பலிலிருந்து வந்தவன் என்று தெரிந்தும் ஏன் சுக்ராச்சாரியார் அவனை ஏற்றுக்கொண்டார்? தகுதியுள்ளவனுக்கு அறிவை மறைக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக அன்று இருந்தது. குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் தன் ஜாதிக்காரனுக்கு கல்லூரியில் இடம் கொடுக்கப்படுவதும், அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் வேறு ஜாதிக்காரனுக்கு இடம் மறுக்கப்படுவதும் நடக்கும் இக்காலத்தில் மஹாபாரதம் காட்டும் மதிப்பீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

சுக்ராச்சாரியாரின் மனம் மகிழும் வகையில் கசன் அவருக்கு சேவைகள் செய்கிறான். அவருடைய மகள் தேவயானிக்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.  ஆடிப்பாடி அவளை அவன் மகிழ்வித்தான். ஆனால் எந்தக்கட்டத்திலும் எல்லை மீறியதே கிடையாது. அவனுடைய சுயகட்டுப்பாடு தேவயானிக்கு அவன்மீதான காதலை அதிகப்படுத்தியிருந்தது. இவ்விதம் சில ஆண்டுகள் சென்றன.

KK -- 4.2கசன் மாணாக்கனாக சுக்ராச்சாரியாரிடம் சேர்ந்த விஷயம் தெரியவந்ததும் அசுரர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சஞ்சீவினி வித்தையைக் கற்றுக்கொள்ளவே அவன் வந்திருக்கிறான் என்று அவர்கள் மிகச்சரியாக யூகித்தனர். என்ன செய்யலாம்? மனிதர்களாக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ராட்சசர்களாக அவர்கள் இருந்ததனால் கசன் தனியாக இருந்த நேரம் பார்த்து அவனைக் கொன்றார்கள்.

ஒரு முறையல்ல. மூன்று முறை!

முதல் முறை அவன் பசுக்களை மேய்க்கப் போயிருந்தபோது கொன்றார்கள். கொன்றபிறகு அவன் உடலைக் கண்டதுண்டமாக வெட்டி நாய்களுக்குப் போட்டார்கள்.  பசுக்கள் மேய்ப்பனின்றி திரும்பி வந்தன.

பசுக்கள் மேய்ப்பனின்றித் திரும்பினால் மேய்ப்பனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அர்த்தம். தேவயானி பதறிப்போய் தந்தையிடம் சொல்ல, அவர் உடனே சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்தார். நாய்களின் வயிற்றிலிருந்து கசனின் துண்டுகள் புறப்பட்டு ஒன்று சேர்ந்து உயிருடன் கசன் மீண்டு வந்து நடந்ததை அவரிடமும் தேவயானியிடமும் சொன்னான்.

இரண்டாவது முறையாக அவனைக் கொன்ற அசுரர்கள், இந்த முறை அவன் உடலை அரைத்துக் கடலில் கரைத்துவிட்டனர். மறுபடியும் பசுக்கள் தாமாகவே திரும்பிவந்தன. இந்த முறையும் தேவயானிதான் கவனித்துச் சொன்னாள். மறுபடியும் சஞ்சீவினிப் பிரயோகம். மீண்டும் உயிருடன் வந்தான் கசன்.

மூன்றாவது முறை அவன் பிழைக்கவேகூடாது என்று அசுரர்கள் ஓர் உபாயம் செய்தார்கள். அவனை எரித்துக்கொன்று, அந்த சாம்பலை மதுவில் கலக்கி, அந்த மதுவை சுக்ராச்சாரியாருக்கே கொடுத்தார்கள்.  அவரும் விஷயம் தெரியாமல் வாங்கி ரசித்து, ருசித்துக் குடித்துவிட்டார்! ஒரு மனிதனுக்கு போதையேற்படும்போது அறிவு மழுங்கிவிடுகிறது. நான் மதுகுடிப்பதனால் ஏற்படும் போதையைச் சொல்லவில்லை. மதுவுக்கு ஒருவர் அடிமையானவுடன், அந்த அடிமைத்தனமே ஒரு போதைதான். அதுவும் அறிவை வேலை செய்யவிடுவதில்லை. அதனால்தான் டாஸ்மார்க்குகளில் கூட்டம் ’ஆடி’ அலைமோதுகிறது அனுதினமும். ரொம்ப அக்கறையாக ஏன் மதுவைக் கொடுக்கிறார்கள் என்று சுக்ராக்சாரியாரும் யோசிக்கவில்லை. ஏனெனில் அவர் மதுவைக் குடித்துவிடவேண்டும் என்ற போதையில் இருந்தார்!

இந்தமுறையும் தேவயானிதான் சந்தேகித்து, கசனைக் காணவில்லை என்று தந்தையிடம் முறையிட்டாள். ஆனால் போதையில் இருந்த முனிவர், “சரி விடம்மா, இது முடிவில்லாத தொல்லையாக இருக்கும். இறப்பு தவிர்க்க முடியாதது. நீ நிம்மதியாக இரு” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் ”கசனில்லாமல் என்னால் இருக்க முடியாது. பட்டினிகிடந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் தேவயானி. அவனுக்காக உபவாசம் இருக்கவும் செய்தாள்.

போதையிறங்கிப்போனது சுக்ராச்சாரியாருக்கு. மகளைக் காப்பாற்றவேண்டி சுக்ராச்சாரியார் மறுபடியும் மந்திரத்தைச் சொல்லி, கசனை வா என்றழைத்தார். “என்னை ஆசீர்வதியுங்கள் குருவே” என்ற சப்தம் அவர் வயிற்றுக்குள்ளிருந்து வந்தது! அசுரர்கள் செய்த துரோகச்செயலை கசன் சொன்னான். மது உண்டதால் இப்படி ஆகிவிட்டதே என்று அசுரர்கள் மீதான அவருடைய கோபம் அதிகரித்தது. அசுரர்களைத் திட்டிவிட்டு, மது உண்பதைப் பற்றிய பொதுவான உபதேசத்தை இந்த உலகுக்கு அவர் வழங்குகிறார்.

டிவி சீரியல்களிலும் சினிமாவிலும் மது குடிக்கும் காட்சி காட்டப்படும்போதெல்லாம் ”குடி குடியைக் கெடுக்கும்” என்ற வாசகத்தைக் காட்டத் தவறுவதில்லை. சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் ஒரு குடிகாரப் பாத்திரம் அந்த வாசகத்துக்கு ஒரு புது விளக்கம் சொல்கிறான். குடி என்ற குடும்பமானது குடிப்பதைக் கெடுத்துவிடுகிறது, எனவே குடி குடியைக் கெடுக்கும் என்பது சரிதான் என்று கூறுகிறான்! ஆனால் சுக்ராச்சாரியார் என்ன சொல்கிறார்?

“எவன் அறிவின்மையால் மதுவைக் குடிக்கிறானோ, அவனை தருமமும் ஒழுக்கமும் உடனே விட்டு விலகும். அவன் எல்லோராலும் இகழப்படுவான். இது என்னுடைய முடிவு. இன்று முதல் மக்கள் இதை சாஸ்திரமாக வைத்துக்கொண்டு நடக்கவேண்டும்” என்கிறார்! போதையில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டும்!

சரி, கசனைக் காப்பாற்றினாரா இல்லையா? அதில் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. கசன் உயிருடன் வெளியே வரவேண்டுமென்றால் குருவின் வயிற்றைப் பிளந்துகொண்டுதான் வரவேண்டும். அப்படிச் செய்தால் குரு இறக்க நேரிடும். இப்போது யார் உயிர் உனக்கு வேண்டும் என்று மகளைக் கேட்கிறார். எனக்கு இரண்டு பேருமே வேண்டும். யார் இறந்தாலும் நானும் இறப்பேன் என்று தேவயானி கூறுகிறாள். ஆஹா, இதுவல்லவா முடிச்சு! இந்த ’க்ளைமாக்ஸில்’ என்னாகப்போகிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? சொல்லத்தானே போகிறேன்!

குருவுக்கு விளங்கிவிட்டது. ”கசனே, நீ என்னிடம் வந்த நோக்கம் இப்போது நிறைவேறப்போகிறது. நான் உனக்கு இப்போது சஞ்சீவினி மந்திரத்தை சொல்லித்தரப் போகிறேன். அதை நீ கற்றுக்கொள். பின் அதைச் சொல்லி உன்னை நான் அழைப்பேன். என் வயிற்றைக் கிழித்துக்கொண்டு நீ வெளியில் உயிருடன் வருவாய். ஆனால் நான் இறந்து கிடப்பேன். நீ அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை அழைக்கவேண்டும். எனக்கும் உயிர் வந்துவிடும்” என்று சொல்லி அவனுக்கு மந்திரத்தை உபதேசித்தார்.

அப்படியே நடந்தது. சீடன் உயிர் பெற்ற பிறகு குருவும் உயிர் பெற்றார். ஆனால் ’க்ளைமாக்ஸ்’ இதுவல்ல. இனிமேல்தான் அது வர இருக்கிறது.

KK -- 4.3எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன், தன் அன்பை வெளிப்படையாகச் சொன்ன தேவயானி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கசனைக் கேட்கிறாள். அந்தக்காலத்துப் பெண்கள் துணிச்சல் கொண்டவர்கள்தான்! ஆனால் கசன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை! அதற்கு அவன் சொல்லும் பதில்தான் இங்கே மிகமுக்கியமானது.

“எனக்கும் உன் தந்தைக்கும் உள்ள உறவு அலாதியானது. அவர் என் குருநாதர். அதனாலும், எனக்கு உயிர் கொடுத்தனாலும் அவர் எனக்குத் தந்தையாவார். அவர் வயிற்றில் இருந்து நான் வெளி வந்ததனால், எனக்கு அவர் தாயும் ஆவார். எப்படிப் பார்த்தாலும் எனக்கு நீ சகோதரிதான். உன்னை நான் பூஜிக்கிறேன். ஆனால் மணந்துகொள்ள முடியாது” என்று கூறிவிடுகிறான்! ஒரு ஆசிரியருக்கும் ஒரு மாணவருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பதைச்சொல்ல இதைவிட அழகான கதை உண்டா?

மதிப்பீட்டுக் கல்வி (Value Education) என்பது இன்று கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவ மாணவியருக்குப் பாடமாக உள்ளது. மாறாக, மஹாபாரதக் கதைகளைப் பாடமாக வைத்துவிட்டால் போதுமே!

======

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to மஹாபாரத வாழ்வியல் 3 & 4

  1. Mohan says:

    Super sir. Amazing story telling..story take readers to the spot of incidents while reading..excellent.its first time for all the readers to remember the story easily about Mahabharata. Waiting eagerly to read next article.

    And also it’s first time it’s make interest to youngsters to Mahabharata.thank you very much sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s