முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை

1நண்பர் ஈரோடு குணசேகரன் நேற்று அவரது மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார். எனக்காக ஒரு நூலைக் கொண்டுவந்திருந்தார். அதன் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை
இதுதான் தலைப்பு. நீண்ட தலைப்பு கொடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். என்னைப் பொறுத்தவரை தலைப்பு ரொம்ப முக்கியம். தலைப்பை முடிவு செய்துவிட்டுத்தான் நான் கதையோ, கவிதையோ, புத்தகமோ எழுத ஆரம்பிப்பேன்.
இயற்கையிலிருந்து மனிதன் எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறான் அதனால் என்னென்ன பாதிப்புக்கு உள்ளாகிறான் என்று இந்த நூல் ஒரு கவிதையின் அழகோடு கூடிய உரைநடையில் கூறுகிறது. 73 பக்கங்களே கொண்ட இந்த சிறு நூல் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் என்று கருதுகிறேன். செந்தமிழன் என்பவர் எழுதிய இந்நூல் தஞ்சாவூர் செம்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நூலிலிருந்து சில துளிகள்”
1. நீங்கள் பார்க்காததும் இங்குதான் இருக்கிறது – என்ற அத்தியாயத்திலிருந்து:
நீங்கள் கேட்கும் ஓசைகள் மட்டும்தான் பிரபஞ்சத்தில் ஒலிக்கின்றனவா? வீட்டில் சுழலும் மின் விசிறியின் ஓசை கேட்கிறது. பூமி சுழலும் ஓசை கேட்பதில்லை…இங்கே எந்த உயிருக்கு எது தேவையோ அது மட்டும் உணர்த்தப்படுகிறது. மாடுகளுக்கு வண்ணங்கள் தெரிவதில்லை. அவற்றின் கண்களில் எல்லாமே ஒரே நிறம்தான்.
இங்கே நீங்கள் பார்க்க இயலாதவைதான் அதிகமாக உள்ளன. நீங்கள் பார்க்காததால் அவையெல்லாம் இல்லாதவை ஆகிவிடாது…உங்கள் புலன்களின் எல்லைகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பினால் புலன்களை ஒடுக்கி, மனதை விரிக்கவேண்டும்.
கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, ஆய்வு செய்யாமல், புலன்களை அடக்கி அமைதியாக இருக்கும்போது, பேராற்றலுடன் உறவாட முடியும். அந்த உறவில் உங்களுக்கான விடைகள் கிடைக்கும். இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது எனக்கேட்டாலும் கிடைக்கும். நான் எதற்காகப் பிறந்தேன் என்றாலும் கிடைக்கும்…நீங்கள் எதன்மீது அக்கறையுடனும் விருப்பத்துடனும் இருக்கிறீர்களோ அதைப்பற்றிய தகவல்கள் உங்கள் உள்ளுணர்வின் வழியாக வந்து சேரும். [ உள்ளுணர்வின் வழியாக மட்டுமல்ல, வெளியுலகிலிருந்தும் உங்களை வந்து சேரும் – நாகூர் ரூமி].
வானில் உள்ள ஒரு கோளை ஆய்வு செய்து இதில் உயிர்கள் இல்லை என்கிறார்கள். அந்தக் கோளே ஒரு உயிர்தான் என்பதை உணர மறுக்கிறார்கள்.
அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது – திருமூலர்.
பூமியைத் தோண்டி சுரங்கங்கள் அமைத்து நிலக்கரி, தங்கம், வெள்ளி, எரியெண்ணெய், இரும்பு உள்ளிட்ட ஏராளமானவற்றைக் கொள்ளையிட்டால், பூமியை வென்றதாக அர்த்தமல்ல, பூமியை நிலநடுக்கத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதாக அர்த்தம்.
2. முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை – என்ற அத்தியாயத்திலிருந்து:
நாய்கூட உங்களைவிட சுந்திரமாகவே உள்ளது. நிச்சயமாக அந்த நாய்க்கு மாரடைப்பும், இரத்த அழுத்தமும் வருவதில்லை.
சமூகத்தில் இரண்டே இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. ஒன்று கடனாளிகள் இனம். இன்னொன்று நோயாளிகள் இனம்.
அறிவின் தலைமையில் வாழ்க்கையை வழிநடத்துவதுதான் மனிதகுலத்தின் பெரும்பாவம். அறிவு நமக்கு அடிமையாக இருக்க மட்டுமே தகுதியுடையது…
அறிவு உங்களுடையதல்ல, உங்களுக்கு வழங்கப்படும் அறிவில் பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் உள்ளன, அவற்றை இயற்றிய ‘மேதைகள்’ இருக்கிறார்கள். பிறருடைய தோல்விகள் இருக்கின்றன, உங்கள் விருப்பம் மீதான பிறருடைய பொறாமைகளும் அதே அறிவில்தான் இருக்கின்றன…
எல்லாவற்றிலும் கணக்குகள்தான் நிறைந்துள்ளன. குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் என்ன சத்து இருக்கிறது, அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணக்கிடுகிறார்கள்.
முதன் முதலாக ஆற்றில் நீச்சலடிக்கப் போகும்போது நீங்கள் யாருடைய அறிவை நம்புவீர்கள்? முதன் முதலாக ஒரு பெரிய மரத்தில் ஏறும் சிறுவர்கள் எந்த அறிவைக்கொண்டு உச்சிக்கிளைக்குச் சென்று தொங்கி மகிழ்கிறார்கள்?…
உங்களால் ஒருபோதும் ஒரு தூக்கணாங்குருவியின் கூட்டினைப் பின்னிவிட முடியாது. [குழந்தையின்] எடை, இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூச்சுச் செயல்பாடு ஒவ்வொன்றையும் கண்காணிக்கிறது மனித அறிவு. அவ்வுயிரின் வளர்ச்சிக்கெனக்கூறி கருவறைக்குள்ளேயே இரசாயனங்கள் செலுத்தப்படுகின்றன. அந்த உயிர் எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியே வரவேண்டுமென்று மனித அறிவு தீர்மானிக்கிறது. உலகில் உள்ள எல்லா உயிர்களும் கருவறையிலிருந்து தாமாகத்தான் வெளியே வருகின்றன. மனிதர்கள் மட்டும்தான் வயிற்றைக் கிழித்து அவ்வுயிரை வெளியே எடுக்கிறார்கள். வெளியே வந்த அந்தக் குழந்தை அதிகமாக அழுதாலும் மருந்துகள், அழாவிட்டாலும் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. பல வேளைகளில் அக்குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தமக்கு என்ன நடக்கிறது என்பதைக்கூட அறிய இயலாத பிஞ்சுகளின்மீது செலுத்தப்படும் வன்முறைகள் இவை.
…இவ்வளவும் எதற்காக என்றால் அக்குழந்தையின் உயிரைக் காப்பதற்காக என்று பதிலளிக்கிறார்கள். நீங்கள் யார் காப்பதற்கு? நீங்கள் படைத்த உயிரா அது?…சமூகம் அறிவால் ஆனது. அது உங்களை சமாதானப்படுத்துகிறது…சமூகம் ஏற்கனவே அறிவின் அடிமையாக மாறிப்போனது…’உனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. நீ கொஞ்சம் கொஞ்சமாக சாகப்போகிறாய்’ என்று சொன்னால் அந்த சாபத்தை வேதவாக்காகக் கருதிக்கொண்டு, மருந்துகளை விழுங்கி தனது ஆயுளை தானே குறைத்துக்கொள்ளும். உங்கள் கழிவறையில் இருக்கும் கரப்பான்கூட தன் விருப்பத்துக்கு வாழ்கிறது.
நீங்கள் ஏதோ ஒரு இறையாற்றலை நம்புபவராக இருந்தால் மருத்துவர்களிடம் உங்கள் உயிரை ஒப்படைக்க மாட்டீர்கள்…மருத்துவம் தேவைதான், மருந்துகளும் தேவைதான். ஆனால் அவை வெறும் அறிவின் கழிவுகளாக இருந்தால் அவற்றால் உங்கள் உயிரைக் காக்க முடியாது…
நீங்கள் கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்தத் துவங்கிய பின்னர்தான் கொசுக்கள் அதிகரித்து உள்ளன. இப்போது கடும் நஞ்சை உங்கள் படுக்கையறைக்குள் பரவவிட்டு, காற்று வெளியேறா வண்ணம் கதவுகளை மூடிக்கொண்டு உறங்குகிறீர்கள்…
மரங்கள் நிறைய வளர்ந்தால், மழை பொழியும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கும் மேலான உண்மை ஒன்று உள்ளது.
வெப்பக்கோளமாக இருந்த பூமியில் 410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. அப்போது பூமியில் மரங்கள் இல்லை. மரங்கள் மட்டுமல்ல, பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை…
மழை எப்படிப் பெய்கிறது என ஆராய்ச்சி செய்யும் மனிதர்கள் மழையை உருவாக்கிவிட முடியாது. எந்த ஆராய்ச்சியும் செய்யாத மரங்களால் மழையை வரவழைக்க முடியும்.
நாம் வாழத்தேவையானவை எல்லாம் நமக்காகப் படைக்கப்பட்டுள்ளன. நம்மை நாமே அழித்துக்கொள்ளத் தேவையானவற்றை எல்லாம் நாம் படைத்துக்கொண்டிருக்கிறோம்.
இது ஒரு சிறு குறிப்புதான். உங்கள் கருத்துக்களை directorsenthamizhan@facebook.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு சொல்லலாம்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s