அடாப்டிவ் அன்கான்ஷியஸ் — சிலையும் நீ, சிற்பியும் நீ — 5

SNSN Sept 2014 Cover உங்களுக்குள் உள்ளுணர்வு தோன்றும்போது உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்கள், திறமைகள் யாவும் மேலே வர ஆரம்பிக்கின்றன. நீங்கள் கற்பனை செய்ததைவிட நீங்கள் பெரிய ஆள் என்று தெரிய ஆரம்பிக்கும்.

  • பதஞ்சலி

 உள்ளுணர்வுக்குத்தான் ஆங்கிலத்தில் அழகாக ’அடாப்டிவ் அன்கான்ஷியஸ்’ என்று சொல்கிறார் மால்கம் க்ளாடுவெல். இதை ’இன்ஸ்பிரேஷன்’ (inspiration) என்று பொதுவாக ஆங்கிலத்தில் சொல்வர். நாம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டோமென்றால் உள்ளுணர்வு வருவதை, அது அறிவிப்பதையெல்லாம் கேட்க முன்கூட்டியே நாம் தயாராகலாம்.

 டாக்டர் வெயின் டயர் என்ற உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். Inspiration: Your Ultimate Calling என்று அவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். ஆனால் அவருக்கு முதலில் இரண்டு தலைப்புகள் தோன்றின. ஒன்று மேலே நான் சொன்னது. இன்னொன்றில் Calling என்ற சொல்லுக்கு பதிலாக Destiny என்று போட்டிருந்தார். ஆனால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிட்டது. ஹே ஹவுஸ் என்ற தன் நூலின் பதிப்பகத் தலைவர் ட்ரேஸி என்பவரை அழைத்து கருத்துக் கேட்கலாம் என்று அவருக்கு தொலைபேசி அழைப்பு கொடுக்கிறார். ’காலர் ஐடி’ திரையில் calling என்ற வார்த்தை மின்னி மின்னி மறைந்தது. அதை ஒருகணம் பார்க்கிறார். உஷாராகிறார். தெரிந்துவிட்டது. ‘காலிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்து என்று அவரது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் சொல்லிவிட்டது! அந்தப் பெயரையே தன் நூலுக்கு வைக்கிறார்! அதுவும் படு பிரபலமாகி அவருக்குப் புகழ் சேர்ந்தது.

SNSN 5.0Inspiration என்றால்  being in Spirit என்கிறார் அவர். அதாவது நம்முடைய சாரமாக, அடிப்படையாக, ஆதாரமாக எது இருக்கிறதோ அதோடு இருப்பது. ஆன்மாவோடு இருப்பது. உள்ளுணர்வு என்பது நம்முடைய சாரம் நமக்கு அனுப்பும் செய்தி. நமக்குள்ளே நம்மை மீறிய ஒரு மாபெரும் ஆற்றல் மறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு கணம்தான் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்யும் நேரம்.

 சரி உள்ளுணர்வை, இது உள்ளுணர்வுதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது? அது திரும்பத் திரும்ப வரும். அது சொல்கிற மாதிரி செய்வது ‘ரிஸ்க்’ என்றுகூடத் தோன்றலாம். ”பாதுகாப்பு வேண்டுமென்றால் கரையில் நில்; பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுக்குள் செல்” என்று பாரசீகக் கவி சா’அதி பாடியதும் உள்ளுணர்வை மதிப்பது பற்றித்தான்.

 ”நான் தனியாக இருக்கும்போது, நன்றாக சாப்பிட்டுவிட்டு காலாற நடந்துபோகும்போது, அல்லது யாருமே இல்லாமல் தனியாக இருக்கும்போது, தூக்கம் வராமல் தனிமையில் தவிக்கும்போது – இம்மாதிரி தருணங்களில்தான் எனக்கு அபரிமிதமாக கருத்துக்களும் இசைக்குறிப்புகளும் ஒரு ஆற்றைப்போல பொங்கிப் பிரவகித்து அபரிமிதமாக வருகின்றன. அவை எங்கிருந்து, எப்படி வருகின்றன என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்துதான் ஆகவேண்டும் என்று அவைகளை என்னால் வற்புறுத்தி வரவழைக்கவும் முடியாது” என்று கூறுகிறார் இசை மேதை மொசார்ட்!

SNSN 5.1அன்பு, அமைதி, இன்பம் இவைதான் நம்முடைய சாரமாக உள்ளன. எப்போதெல்லாம் நாம் இவற்றிலிருந்து விலகி வெறுப்பு, கசப்பு, கோபம், பயம், பேராசை, இறுக்கம், பொறாமை, பொறுமையின்மை, துவேஷம், வன்முறை போன்ற தவறான திசைகளில் பயனிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது நாம் உள்ளுணர்வின் வழிகாட்டுதல் பெறவே முடியாது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் நம் சாரத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்யும்.

 நம் உடலில் இருந்து எடுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட ஒரு ரத்தத் துளியில் உள்ள இரும்புச் சத்து எவ்வளவு விழுக்காடு என்று பார்த்தால் ஒரு உண்மை புரியும். நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத் துளி ஒன்றில் எவ்வளவு இரும்புச் சத்து உள்ளதோ அதே விழுக்காடுதான் நம் உடலிலிருந்து வெளியில் வந்த துளியிலும் இருக்கும். நம் உடலில் இருந்து பிரிக்கப்பட்ட துளியும் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பிரிக்கப்படாத துளியும் ஒன்றுதான். ஆனால் உடலிலிருந்து பிரிந்துவிட்ட, தன் மூலத்திலிருந்து பிரிந்து வந்துவிட்ட அந்த ரத்தத் துளியால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அதனால் ஓடவோ, நமக்கு வலுவூட்டவோ, நம்மை குணப்படுத்தவோ முடியாது. ரொம்ப நாளைக்கு இப்படியே உடலை விட்டுப் பிரிந்து வெளியிலேயே இருக்குமானால் அது காய்ந்து, உலர்ந்து, அழிந்து போகும். உடலுக்கு உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்துளியில் இருக்கும் எல்லா அம்சங்களும் அதற்கு இருந்தாலும் பயனற்றுப் போகும். சாரத்திலிருந்து நாம் பிரிந்திருந்தால் நமக்கும் இந்த கதிதான்.

”கடவுளை சிரிக்க வைக்க வேண்டுமென்றால், நீங்கள் போட்டுவைத்திருக்கும் திட்டங்களையெல்லாம் அவனிடம் சொல்லுங்கள் போதும்” என்று சொல்வார்கள்! இதற்கு என்ன அர்த்தம்? திட்டமே போடக்கூடாது என்று அர்த்தமா? அப்படியல்ல. கடவுள் என்பதும் சாரம் என்பதும் ஒன்றுதான். உள்ளுணர்வுகள்தான் மீண்டும் மீண்டும் நம்முடைய சாரத்தோடு நம்மை இணைக்கின்றன. அவற்றிலிருந்து பிரிந்திருக்கும்போது எவ்வளவு திட்டம்போட்டாலும் அது பிரயோஜனப்படாது. ”வல்லாஹு ஹைருல் மாகிரீன்” என்று திருக்குர்’ஆன் வசனம் ஒன்று (03:54) கூறுகிறது.  திட்டமிடுபவர்களிலெல்லாம் மிகச்சிறந்த திட்டமிடுபவன் அல்லாஹ்தான் என்று அதற்கு அர்த்தம். சாரத்தின் திட்டம்தான் ஜெயிக்கும். உள்ளுணர்வோடு, உள்ளுணர்வை மதித்து வாழ்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறதா?

 SNSN 5.2ஜான் காட்மேன் என்று ஒரு அமெரிக்க உளவியலாளர் இருந்தார். அவர் ’காதல் சோதனைக்கூடம்’ (Love Lab)ஒன்று வைத்திருந்தார். அதில் கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட தம்பதியரைப் பேட்டி கண்டார். அவர்கள் பேசுவது கால் மணி நேரம் வீடியோ எடுக்கப்படும். அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும், உடல் அசைவுகளுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இப்படி ஒவ்வொரு வினாடிக்கும் செய்யப்பட்டது.

 கால் மணி நேரம் எனில் கணவனுக்கு 900 வினாடிகள், மனைவிக்கு 900 வினாடிகள். மொத்தம் 1800 வினாடிகளுக்கான உணர்ச்சி வெளிப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கு எண்களும் வழங்கப்பட்டன. உதாரணமாக ஒரு தம்பதிக்கு முதல் ஆறு வினாடிகளில் 7,7,14, 10, 11, 11 என்ற எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், கொஞ்ச நேரம் கோபமாகவும், பின்பு உணர்ச்சி எதையும் வெளிப்படுத்தாமலும், பின்பு தன் கருத்தை நியாயப்படுத்தியும், பின்பு புலம்பவும் ஆரம்பித்தார் என்று புரிந்துகொள்ளலாம்.  இவ்விதம் 15 நிமிடங்களுக்கு ஆராய்ச்சி செய்தபின் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கணவன் மனைவியாகத் தொடர்வார்களா இல்லை விவாகரத்துப் பெற்றுவிடுவார்களா என்று 95 விழுக்காடு சரியாக காட்மேன் சொன்னாராம்! அவர் செய்ததையே மூன்று நிமிடங்களுக்கு வீடியோ எடுத்து சிபில் என்பவர் சொன்னார்! அதாவது அடுத்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த நிமிடம் சொல்கிறது! அடாப்டிவ் அன்கான்ஷியஸ் செய்யும் வேலையை கொஞ்சம் கஷ்டப்பட்டு காட்மேன் செய்துகாட்டியிருக்கிறார். ’விவாகரத்துக் கணக்கு’ (The Mathematics of Divorce) என்று 500 பக்க புத்தகம் வேறு அவர் எழுதினாராம்!

 உங்கள் படுக்கை அறை

 ஒரு கம்பனியில் வேலைக்கு ஆள் எடுக்கவேண்டும், அவர் நேர்மையானவரா, புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவரா, சோம்பேறியா, கடின உழைப்பாளியா என்றெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அந்த ஆளை நேர்காணல் செய்வார்களா அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது படுக்கையறையைக் கண்காணிப்பார்களா? இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்கிறீர்களா? முன்னதுதான் பின்னது இல்லை என்பீர்கள். நானும் அதைத்தான் சொல்வேன். ஆனால் கோஸ்லிங் என்ற உளவியலாளர் பின்னதைத் தேர்ந்தெடுத்தார்!

 ஒரு எண்பது மாணவர்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தை அவர்களின் நண்பர்களிடம் கொடுத்து முதலில் அவர்களுடைய கருத்தைக் கேட்டார். பின்பு அவர்கள் யாரென்றே தெரியாத நபர்களிடம் அக்கேள்விகளைக் கொடுத்து அந்த எண்பது பேர்களின் படுக்கையறைகளின் சாவிகளைக் கொடுத்தார். யாரும் இல்லாதபோது உள்ளே போய் அறையைக் கவனித்து அந்தக் கேள்விகளுக்கான பதில்களை எழுத வேண்டும். இதுதான் நிபந்தனை! அவர்களுக்கு அதற்காகக் கொடுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள்தான்!

 முடிவு என்ன தெரியுமா? அம்மாணவர்களை நன்கறிந்த நண்பர்கள் என்ன சொன்னார்களோ, அதையும், அதற்கு மேலும் மிகச்சரியான தகவல்களை, அம்மாணவர்களின் படுக்கையறைகளைப் பார்த்தே அந்த அந்நியர்கள் சொல்லிவிட்டனர்!

 எப்படி? படுக்கையறையில் என்ன இருக்கும்? களைந்து கடாசிய ஜட்டி, சுருட்டி  மூலையில் போடப்பட்ட பனியன், மடிக்காமல் போட்டுவைத்த லுங்கி, ’அழகி’களின் படங்கள், பீடி சிகரட் நாற்றம் – இப்படி இருக்கலாம். அல்லது அடுக்கி வைக்கப்பட்ட துணிமணி, புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒழுங்கில் இருக்கும் மேஜை, சுருட்டி வைக்கப்பட்ட படுக்கை, சுவற்றில் அழகாக மாட்டப்பட்ட நிழல்படம் அல்லது ஓவியம் – இப்படி இருக்கலாம். இந்தப் பொருள்களெல்லாம் உங்களைப் பற்றி ஒரு காவியமே பாடிவிடும் என்பதுதான் உண்மை. உங்கள் ’லட்சணம்’ என்ன என்பதை அவை காட்டிவிடும். ஆங்கிலத்தில் அழகாக அதை behavioral residue என்று சொல்கிறார்கள். நீங்கள் யார் என்ற உண்மை, நீங்கள் இல்லாதபோதுதான் நீங்கள் பயன்படுத்திய பொருள்கள் மூலமாக சிறப்பாக உணர்த்தப்படும்! ஆம். அதுதான் தின் ஸ்லைசிங். உங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அதைப் பார்த்தவுடனேயே பார்ப்பவரின் அடாப்டிவ் அன்கான்ஷியஸ் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உங்களைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அது சொல்லிவிடும். அதுதான் கோஸ்லிங் பரிசோதனையில் நடந்தது. வருஷக்கணக்கில் பழகியவர்களால்கூட சொல்ல முடியாததை சில நிமிஷங்கள் மட்டும் அங்கே கழித்தவர்களால் சொல்ல முடிந்தது. அது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் செய்த மாயம்.

 நம் வாழ்வின் பல நேரங்களில் நாம் தின் ஸ்லைசிங் செய்துகொண்டுதானிருக்கிறோம். அதாவது அடாப்டிவ் அன்கான்ஷியஸைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். புதிதாக ஒருவரைப் பார்க்கும்போது, ஒரு புதிய சூழலில் இருக்கும்போது இப்படி. எந்த இடத்துக்கு எந்த மாதிரி உடை அணிந்துகொண்டு செல்ல வேண்டும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் நமக்கு ‘ட்ரெஸ் சென்ஸ்’ இருக்கிறது என்று அர்த்தம். ஒரு கூடைப்பந்தாட்ட வீரருக்கு களத்தில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், விளையாட வேண்டும் என்று தெரிந்திருந்தால் அவருக்கு ‘கோர்ட் சென்ஸ்’ இருப்பதாக அர்த்தம். இதெல்லாம் திட்டம் போட்டு செய்வதில்லை. உடனுக்குடனேயே செய்துவிடுகிறோம். இந்த ’சென்ஸ்’தான் உள்ளுணர்வு என்பது. இதுதான் அடாப்டிவ் அன்கான்ஷியஸ். இதுதான் தின் ஸ்லைசிங்.

 டேவிட் சிப்லீ என்ற பறவையியல் நிபுணர் ஒருநாள் கிட்டத்தட்ட 200 கெஜ தூரத்தில் பறந்துகொண்டிருந்த பறவையொன்றைப் பார்த்தார். பார்த்தவுடனேயே அது ரஃப் என்ற வகையைச் சேர்ந்த உள்ளான் பறவை என்று கண்டுபிடித்துவிட்டார். அதுவரை அந்தவகை உள்ளான்கள் பறப்பதை அவர் பார்த்ததே இல்லை!  ஆனால் எப்படியோ பறவைகளின் சாரம் அவருக்கு அத்துபடியாகியிருந்தது. அது உள்ளான்தான் என்று அவரது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் மிகச்சரியாகச் சொல்லிவிட்டது!

டாம் ஹாங்க்ஸ் என்று ஒரு ஹாலிவுட் நடிகர் இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டு யாருக்கும் தெரியாதவராக இருந்தார். ஒருநாள் அவரை ஹாலிவுட் தயாரிப்பாளர் ப்ரையன் க்ரேஸர் பார்த்தார். பார்த்தவுடனேயே டாம் ஹாங்க்ஸ் ’ரொம்ப ஸ்பெஷல்’ என்று உணர்ந்துகொண்டார். வாய்ப்புகள் கொடுத்தார். ஸ்ப்லாஷ், அபோல்லோ 13, த டாவின்ஸி கோட் போன்ற படங்களில் நடிக்க வைத்தார். டாம் ஹாங்க்ஸ் இன்று உலகப்பிரபலம். பல விருதுகளைப் பெற்றுவிட்டார். எல்லாம் ப்ரையன் அவரைப் பார்த்த கணத்தால் வந்த யோகம். ஆனால் அவரிடம் ’ஏதோ’ இருந்ததை ப்ரையனிடமிருந்த ‘ஏதோ’ ஒன்று உடனே புரிந்துகொண்டது! அந்த ‘ஏதோ’ ஒன்றுதான் நமது உள்ளுணர்வு.  அடாப்டிவ் அன்கான்ஷியஸ்.

 ஒரு உலகப் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அவரோடு சேர்ந்து தொழிலில்

அவருடைய பங்குதாரராக ஆகவேண்டுமென்று எட்வின் சி. பார்ன்ஸ் என்பவர் விரும்பினார். ஆனால் அதற்கு இரண்டு விஷயங்கள் தடையாக இருந்தன. ஒன்று, பார்ன்ஸ் அந்த விஞ்ஞானியை அதுவரை நேரில் பார்த்ததில்லை. இரண்டு, அவருடைய ஊரிலிருந்து அந்த விஞ்ஞானி இருந்த ஊருக்கு ரயிலில் செய்ய அவரிடம் காசில்லை! ஆனாலும் அவர் விடவில்லை. எப்படியோ கிளம்பிவிட்டார். எப்படி என்கிறீர்களா? நம்முடைய வழியில்தான்! கூட்ஸ் வண்டியில் ஏறிச் சென்றுவிட்டார்! போய் அந்த விஞ்ஞானியில் தொழிற்சாலை வாசலில் நின்றுகொண்டு தான் வந்திருக்கும் நோக்கத்தை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்! எல்லோரு சிரித்தார்கள். என்றாலும் இப்படி ஒரு பைத்தியக்காரர் சொல்லிக்கொண்டு தொழிற்சாலை வாசலில் நிற்கிறார் என்ற செய்தி அந்த விஞ்ஞானிக்குச் சென்றது. விஞ்ஞானியும் வந்து அவரைப் பார்த்தார். ஊரைவிட்டு துரத்திவிடப்பட்ட பிச்சைக்காரனின் கோலத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்றாலும் அந்த விஞ்ஞானி பார்ன்ஸை தன் தொழிற்சாலையில் ஒரு ஊழியராக சேர்த்துக்கொண்டார்! கொஞ்ச காலத்திலேயே பார்ன்ஸின் கனவும் நிறைவேறியது! ஆமாம். அந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியின் ’பார்ட்ன’ராகவும் ஆகிவிட்டார்.

 சரி, யார் அந்த விஞ்ஞானி? அவர்தான் உலகப் புகழ்பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன்! பிச்சைக்காரக் கோலத்திலிருந்து எட்வின் பார்ன்ஸை அவர் ஏன் முதலில் ஊழியராக சேர்த்துக்கொண்டார். உருவத்தையும் உடையையும் பார்த்து நிச்சயம் சேர்த்திருக்க முடியாது. பின் அவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஏன் எடிசனுக்குத் தோன்றியது? காரணத்தை எடிசனே சொல்கிறார். “அவருடைய முகத்தில் ஏதோ இருந்தது. அவர் எந்த எண்ணத்தோடு வந்திருக்கிறாரோ அவர் அதை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று அந்தக் கணம் எனக்குத் தோன்றியது” என்கிறார் எடிசன்! பின்னர் பல மாதங்கள் கழித்து எடிசன் டிக்டேடிங் மெஷின் என்ற ஒன்றை எடிசன் கண்டுபிடித்தபோது அதை விற்க யாரும் முன்வரவில்லை. பார்ன்ஸ் முன் வந்து அதிக எண்ணிக்கையில் விற்று சாதனை படைத்து, அவர் விரும்பியதுபோலவே எடிசனின் பங்குதாரராகவும் ஆனார்.

 எடிசனை அப்படி முடிவெடுக்க வைத்தது அந்தக் கணத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு உணர்வு. அவருடைய அடாப்டிவ் அன்கான்ஷியஸ் கொடுத்த உத்தரவு என்றும் சொல்லலாம். ஒரு கண நேரப் பொறிதான் அது. ஆனால் அதன் பேச்சு எப்போதுமே பொய்யாவதில்லை.

நாம் பொய்சொல்லலாம். ஆனால் நமது உள்ளுணர்வு, நமது அடாப்டிவ் அன்கான்ஷியஸ் எப்போதுமே பொய்சொல்வதில்லை.

=======

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s