இசைக்குயில் பறந்தது

smakமூன்று நாட்களுக்கு முன்பு இது நடந்திருக்கிறது. நண்பர் நூர்சாதிக் சொன்னபடி, 26.09.14 வெள்ளியன்று மதியம் 3.42க்கு. மிகச்சரியாகச் சொன்னால் சின்ன எஜமான் யூசுஃப் தாதாவின் மறைவை நினைவுகூறும் நாளன்று! ஒரு இறைநேசர் இறைவனடி சேர்ந்த நாளன்று ஒரு இசைநேசரும் நம்மைவிட்டு உடல்ரீதியாகப் பிரிந்துவிட்டார்! ஆம். நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள் தம் 91வது வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். (எனக்கு இந்த தகவலை முதலில் சொன்னது நண்பர், கவிஞர் சீர்காழி தாஜ்தான். பின்னர் நண்பர் நூர்சாதிக்கிடம் கேட்டு உறுதி செய்துகொண்டேன்)

சில ஆண்டுகளாகவே உடம்புக்கு முடியாமல்தான் இருந்தார்கள். அவர்களின் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. நான் சில மாதங்களுக்கு முன் சென்று பார்த்தபோது ரொம்பவும் மெலிந்திருந்தார்கள். என்னை யார் என்று புரிந்தது. ஆனால் வழக்கம்போல அவர்களால் பேச முடியவில்லை. இல்லையெனில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

sma-kader-isaimani-yousufஇரண்டாண்டுகள் அவர்களிடம் முறையாக நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்! வர்ணம் என்ற பாடம் வரை. அதன்பிறகு எனக்கு வேலை கிடைத்துவிட்டதால் நான் மேற்கொண்டு கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான ராகங்களையெல்லாம் ஆரோகணம், அவரோகணத்தோடு பாடிக்கொடுத்தார்கள். நான் தம்பூரா வாசிக்க, SMAK-யும் அவர்களது பேரர் ராஜாவும் பாடினார்கள். நண்பர் பிலால் ரிகார்டிங் செய்தார்.

சுயமாக சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு அந்தப் பதிவு ஒரு வரப்பிரசாதமாகும். அதை கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் நான் கணிணி ஒலிக்கோப்பாக, mp3 ஆக, மாற்றி ஒவ்வொரு ராகமாக யூட்யூபில் இட்டுக்கொண்டிருக்கிறேன். அதுவும் முழுமையாக எப்போது முடியுமென்று தெரியவில்லை.

With SMAK (2)எனக்கு வந்த தகவலின்படி, ஜனாஸாத் தொழுகைக்காக பெரிய எஜமான் வாசலில் வைக்கப்பட்டது அவர்களது புனித உடல். வாசலுக்கு வெளியே இருந்த நெய்விளக்கையும் தாண்டி ஒரு ஐந்தடி அளவுக்கு மக்கள் தொழுகையில் கலந்துகொண்டார்கள் என்றும், சின்ன எஜமான் உரூஸை முன்னிட்டு ஓதப்பட்ட மௌலிதுகள், ராத்திபுகளின் துஆ ஒலிகளோடு SMAK அவர்களுக்கான துஆவும் இயற்கையான இணைந்துகொண்டது ஒரு தெய்வச்செயல் என்றும், ஒரு தெய்வீக அங்கீகாரம் என்றும் மக்கள் கருதினார்கள். இறைவன் அவர்களைப் பொருந்திக்கொண்டதன் அடையாளமாக அது இருந்தது. அப்படித்தான் நிச்சயம் இருக்கும். அவர்களது விருப்பப்படியே அவரது உஸ்தாத் தாவூத் மியான் அவர்க்ளை அடக்கம் செய்த இடத்துக்குப் பக்கத்தில் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

SMAK அவர்களைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இறுதி முயற்சியாக நானும் SMAK அவர்களது மகனார் நூர்சாதிக்கும் சேர்ந்து SMAK அவர்களின் இசை வாழ்வு பற்றி ஒரு வீடியோப்பதிவு செய்யலாம் என்று எண்ணி நண்பர் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாரிடமும், சன் டிவி வீரபாண்டியனிடமும் சொல்லி  அதற்காக ஆரம்பகட்ட ஏற்பாடுகளையெல்லாம் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் இடையில் நூர்சாதிக்குக்கு ஏற்பட்ட தொழில்ரீதியான இடையூறு காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

என்றாலும் SMAK அவர்களைப்பற்றி பலமுறை நானும், நண்பர்கள் ஆபிதீன், அப்துல் கய்யூமும், ஜஃபருல்லாஹ் நானாவும் இன்னும் பலரும் இணையத்தில் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருந்தோம். அவை எல்லாவற்றையும் தொகுத்து இங்கே இடுகின்றேன். எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு என்பது ஓரளவுக்குப் புரிவதற்காக.

தெலுங்கில் கீர்த்தனைகள் மூலமாக தியாகராஜர் என்ன செய்தாரோ, அதே வேலையை இஸ்லாமிய கலாச்சாரத்திற்காக SMAK அவர்கள் தமிழில் செய்ய முயன்றார்கள். பல  இஸ்லாமிய பாடல்களுக்கு ஸ்வரமமைத்து கீர்த்தனைகளாக்கினார்கள்.

இசைக்கு இஸ்லாத்தின் அனுமதி இல்லை என்ற ஒரு தவறான, பரவலான கருத்தின் காரணமாகவும், நமது உடலிலேயே இசையையும் தாளத்தையும் வைத்து இறைவன் பின்னி இருக்கிறான் என்பதைக்கூட அறியாத ஞான சூன்யங்கள் நிறைந்த சமுதாயமாக நாம் இருப்பதனாலும், தாவூத் நபிக்கு இறைவன் அளித்த சிறப்புத்தகுதி பறவைகளையும் மயக்கும் குரல் மற்றும் இசை என்ற வரலாறு அறியாதவர்களாக, சொந்தமாக சிந்திக்கத்தெரியாதவர்களாக நம் சமுதாயத்தில் அனேகர் இருப்பதனாலும், SMAK அவர்களுடைய இசைச்சேவை நிறைவு பெறமுடியாமலே போய்விட்டது. எனக்கு அவர்களோடு ஏற்பட்ட இசை அனுபவத்தை அடிப்படையாக வைத்து நான் எழுதிய ”அவரோகணம்” என்ற குறுநாவல் ”கணையாழி”யில் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் தேர்வு பெற்று வெளிவந்தது.

smak-trophyகடந்த 19.08.2009 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு, நாகூர் தர்கா உட்புற வளாகத்தில், SMAK அவர்கட்கு “வாழ்நாள் சாதனையாளர் விருதினை” நாகூர் தமிழ்ச் சங்கம் அளித்து கெளரவித்தது.

25.08.1952 – ஆம் ஆண்டு ”நாகூர் தர்கா வித்வான்” என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.

q-with-smakஎழுத்தாளர், கவிஞர் அப்துல் கய்யூம் எழுதி வாசித்தளித்த கவிதை இது :

“சுவைப்போர்” நிறைந்த ஊர்

இந்த ஊர் – என் சொந்த ஊர்

ருசியைச் சுவைப்போரும்

இசையைச் சுவைப்போரும்

sma-kaderவசிப்போர் இந்த ஊர்

“வாரரோ வாராரோ / ஞானக்கிளியே”

என்று பாடிய கானக்குயிலுக்கு

வாழ்த்துப்பா பாட / [பாப் (Pop) ஆட அல்ல]

வாய்த்தமைக்கு / வல்லோனை வணங்குகிறேன் !

சரீரம் தளர்ந்தாலும் / சாரீரம் தளராத

வீரியமிக்க / ஆரிய வாசம் வீசும்

ஸ்வரம் இவர் வசம்  – இது / இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON / இந்த மேதகு மரைக்கான்

இவருக்கு சங்கீதமும் தெரியும் / இங்கிதமும் தெரியும்

பாடிப் பாடியே / பாடி இப்படியே

(இப்போது தான் Body இப்படி!) / பணக்காரன் ஆனவர் இவர் !!

ஆம் .. .. ஒருகாலத்தில் / பெரும் பணக்காரனாய் இருந்து .. ..

பாடிப்பாடியே /பணக்காரன் ஆனவர் !!!

இவருக்கிருந்த செல்வத்தில் / மாளிகைகள் கட்டி இருக்கலாம்

ஆனால் ../ மாளிகைகள் ஒருநாளில் / மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.

இவரிழைத்த / – ராகமாலிகை / தாளமாலிகை

என்றென்றும் / எங்கள் காதுகளில் / தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும் / தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் – வீட்டின்

நடுக்கட்டில் இவர் பாடல் / களைகட்டும்

இவருக்கு இன்னும் / எத்தனையோ கோடிகள் / இறுக்கமாய் உண்டு

உண்மைதான் .. ../ சிஷ்ய-கோடிகள் பலவுண்டு

பாட்டென்றாலே / பலபேர் கத்துவான் – இந்த

பாட்டுடைத் தலைவன் / எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள் / many many – அதில் / தலையாய சீடர்தான்

இந்த “இசைமணி” / இவர் மட்டும்

ஐயர்வாளாய் இருந்திருந்தால் / இந்நேரம் / ஐநா வரை இவர் குரல்

எட்டியிருக்கும் / நாகூரில் பிறந்ததினால் / நாற்சுவரில் இவர் புகழ்

அடங்கிப் போனதோ? / திருட்டுத் தொழில் / இவர் தொழில்.

எத்தனை உள்ளங்களை / இவர் குரல் இதுவரை / கொள்ளை கொண்டிருக்கும்???

இவர் கலப்படக்காரர் ../ செய்ததோ முறையான கலப்படம்

கலப்படத்தில் அதுவென்ன / முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும் / கர்னாடகத்தையும்

கலப்படம் செய்தது / நிருபணம்

– பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்

– மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)

– மோகனம் / – சஹானா / – சுபபந்துவராளி

இவையனைத்தையும் / ஒன்றாக இணைத்து / பாடவல்ல வல்லமை / இவருக்குள்ள பெருமை

தர்பாரில் / கானடா ராகம் / இசைப்பவர் இவர் / ஆம் .. / நாகூரார் தர்பாரில் !

தலைக்கனமில்லா இவருக்கு / ஆரோகணம் முதல் / அவரோகணம் வரை

அத்தனையும் அத்துப்படி / இவர் தொடாத ராகமில்லை / இவர் பாடாத புலவர்களில்லை ..

– உமறுப் புலவர் / – காசீம் புலவர் / – காலகவிப் புலவர் / – வண்ணக் களஞ்சியப் புலவர்

– ஆரிபு நாவலர் / – ஆபிதீன் புலவர் / – பண்டிட் உசைன் / – குணங்குடி மஸ்தான்

– கலைமாமணி சலீம் / ஆம் ..

இவர் தொடாத ராகமில்லை .. ../ இவர் பாடாத புலவர்களில்லை ..

– கும்மிப்பாட்டு / – குறவைப் பாட்டு

– ஞானப் பாட்டு- சாஸ்திரிய / கானங்கள் பாடியது பலநூறு

இவரை இவ்வூர் பெற்றது / நாம் செய்த பெரும்பேறு

தாளம் அறிந்த இவரை / ஞாலம் கண்டு கொள்ளாதது

காலத்தின் கோலம் / “சேதுசாரா” என்ற

ஆதிதாள உருப்படி – இவரை / உயரே கொண்டு சென்றது ஒருபடி

கிட்டப்பா பயின்ற / தாவுது மியான் / இந்த காதருக்கு / குருநாதர்

சென்னை சபாக்களில் / டிசம்பர் மாதமென்றாலே

சங்கீதம் களைகட்டும் / ஏன் தெரியுமா?

எங்கள் பாகவதர் / பிறந்த மாதம் அது.

சமய நல்லிணக்கத்திற்கு / இமயம் / இச்சங்கீதச் சிகரம்.

சமாதானத் தூதர் / இந்த காதர் / இவரை அழைப்பது

பவுனு வீட்டுத் தம்பி. / பவுனு பவுனுதான் !!

ஏழிசை கற்ற இவரை / வாழிய வாழியவென / வாயார வாழ்த்துகிறேன் !

– அன்புடன் அப்துல் கையூம்

ஆஸ்கார் நாயகனும் ஆஸ்தான பாடகனும்

ar rahman at smak'sஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம்  தேடி வந்திருக்கிறார்.  உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவர் புதல்வன்.

“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.

“வாப்பா!~ பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை போட வித்வானுக்கு வந்ததே கோவம்.

“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.

கவிஞர் ஜபருல்லாஹ்வின் பாஷையில் சொல்லப்போனால்,  “அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

Zஅட.. இப்படியும் ஒரு மனிதரா..?

 வாழ்க்கையை எல்லோருக்கும்

பகிர்ந்து கொடுத்துவிட்டு

இசையை மட்டுமே –

சொத்தாய் வைத்துக் கொண்ட

இவர் – மனிதனுக்கும் மேலே..!

இதனால்தான் என்னவோ? / இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு

கிராமபோஃன் பெட்டியை / பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?

இவர் வீட்டில் / வெள்ளித் தட்டுகள் / உணவு மேசையில் / சாதாரணமாய் கிடக்கும்..!

இசைத்தட்டுகள் மட்டும் / பூட்டிய அல்மாரிக்குள் / பத்திரமாக இருக்கும்..!

அட இப்படியும் ஒரு மனிதரா..? / “மனைவிக்கு மரியாதை”

இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..

“வாங்க.. போங்க.. என்னங்க../ சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”

இவைகள் எல்லாம் – இவரின் / இல்லற அகராதியில் –

மனைவியுடன் பேசும் / அன்பில் தோய்ந்த சொற்கள்..!

இவர் –/ நல்ல குடும்பத் தலைவர் / நல்ல கணவர் ..

நல்ல தந்தை .. மட்டும் அல்ல../ நல்ல நடத்தைகளை

சொல்லிக் கொடுத்த ஆசான்..! / இவர் தங்கம்.. / அதனால்தான் இவர் பிள்ளைகள்

வைரமாக ஜொலிக்கிறார்கள்..! / அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

இவர் – சட்டக் கல்லூரிக்குப் போகாத / நீதிபதி..!

இவரின் “நடுக்கட்டு சபை” / நாகூரில் பிரபலம்.

இது – கோர்ட்டு அல்ல ../ சான்றோர் சபை..!

இதில் – சட்டம் பேசாது..! / நீதி – சொல்லும்..!

தர்மம் – தீர்ப்பு வழங்கும்..! / “மேல் முறையீடு” / இன்றுவரை இல்லை..!

சம்பந்திகள் சச்சரவு / சொத்துப் பிரச்சனைகள் / முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்

என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு / அணைத்துக் கொண்டு –

சிரிப்போடும் – சிறப்போடும் போகும் காட்சி / மந்திரம் அல்ல..

இந்த மனிதரின் சாதனை..! / “உங்களாலேத்தான் / எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!

ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் – / நம்மகிட்ட என்னா இருக்குது..

பேசவைத்தவனும் அவன்தான்..! / எல்லாம் அவன் கையிலே..!

செய்ய வைத்தவனும் அவன்தான்! / நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!

– என்று சொல்லி கலகலவென சிரிப்பார்..!

இந்த சபையில் ஜூரிகளும் உண்டு / B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா

இமாம் கஜ்ஜாலி காக்கா / M.G.K. மாலிமார் காக்கா

நாகை தமீம் மாமா ../ இந்த சரித்திர சபையில்

ஒருமுறை நான் / சாட்சியாய்ப் போனேன் / என் மதிப்பு கூடியது..!

நிதிபதிகள் –/ அபராதம் போடுவார்கள்…

இவரோ – சிற்றுண்டி தருவார் / வடையும்/ தேநீரும்..!

இவர் சபையில் –/ மனிதர்கள் வருவார்கள்…/ மதங்கள் வந்ததில்லை..!

அட… இப்படியும் ஒரு மனிதரா..? / கற்பனையால் கயிறு திரித்து

மற்றவர்கள் எழுதிவைத்த / சரித்திரத்தால் –/ வரலாற்று நாயகர்களாய்

வலம் வருவோர் நிறைய உண்டு..! / இவர் வாழ்க்கை வரலாற்றை

நேரில் சென்று கேட்டோம்../ இரண்டு மணி நேரம் சொன்னவர்

அவர் வரலாற்றை அல்ல../ அவர் குருவின் சரித்திரத்தை..!

அவர் உஸ்தாத் தாவூது மியான் / பிறந்த தேதி/ இறந்த நாள்

இவர் நினைவில் நிற்கிறது..! / இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக

நியமனம் பெற்ற நாள் அல்ல..! / வருடமே நினைவில்லை..!

அட.. இப்படியும் ஒரு மனிதரா..? / “உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”

இவரின் – உன்னதமான பாடல்..! / இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!

இன்றுவரை –/ கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!

பாட்டு காதில் விழுகிறது..! / காட்சி கண்ணில் விரிகிறது..!

இவர் சுருதி – / இன்றுவரை மாறியதில்லை

இசையில் மட்டுமல்ல..! / வாழ்க்கையிலும்..!

ஏற்றம்/ இறக்கம் என்பதை / இசையில் ஆரோகணம்/ அவரோகணம்

என்பார்கள் – இசையில் / இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!

வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!

இவர் தாளம் –/ எப்போதும் தப்பாது…

பாட்டில் மட்டுமல்ல./ வீட்டிலும்..!

86 வயது ஆயினும் / இதுவரை – அவரின் கைத்தடி / தம்பூராதான்..!

பாட்டால் நமக்கு அவர் / சொக்குப்பொடி போடுவார்..!

அவரோ – பட்டணம் பொடி போடுவார்..! / பாடிக்கொண்டு இருக்கும்போதே

அவர் வெள்ளை கைக்குட்டை/ சமாதான கொடியைப் போல

மூக்கு வரை ஏறும் / உடன் இறங்கும்..! / பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!

தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம் / இவருக்கு மட்டுமே/ தெரியும்..!

புனித மாதங்களின் முதல் பிறையில் / எல்லோரும் ஒதுவார்..!

இவர் பாடுவார்..! / இறைவனைத் துதித்து..! / அவன் –/ தூதரை நினைத்து..!

மனிதர்கள் போல –/ வாழ்ந்துக் கொண்டிருக்கும் / இந்த நாட்களில்

நாகூர் தமிழ்ச் சங்கம் / ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து

“வாழ்நாள் சாதனையாளர் விருது” கொடுக்கிறது..

விருது அவர்களுக்கு என்றாலும் / எங்களுக்கு அல்லவா / புகழ் வருகிறது..!

மாறி மாறி வேஷங்கள் / போடுகின்ற மனிதரிடை / தேறிவந்த மனிதர் இவர்

தெளிவான மனதுடையார்..! / கூறுகின்ற இவர் சொற்கள்

ஆறுதலை பிறக்க வைக்கும்..! / சேருகின்ற இடமெல்லாம் / வரவேற்பு சிறந்திருக்கும்..!

இசையாத பேர்களையும் / இசையவைக்கும் அன்பாளர்..!

இசையாலே மனம் தொட்டு / இன்பம் தரும் இசை ஆளர்..!

இறைநெறியில் நபிவழியில் / இணைந்திருக்கும் பண்பாளர்..!

இம்மைக்கும் மறுமைக்கும் / நலம் சேர்க்கும் நல்லடியார்..!

எப்போதும் சிரித்திருக்கும் / குழந்தை உள்ளம்..!

இவர் இசையை கேட்போரின் / இதயம் துள்ளும்..!

ஒப்பில்லா இவர்வாழ்க்கை / அன்பின் வெள்ளம்..!

உள்ளபடி இவர் நிறைவை / நாளை சொல்லும்..!

வல்லவனே..! யா அல்லாஹ்

யாசிக்கின்றேன்..! இவர்

வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!

– இஜட் ஜபருல்லாஹ்

dawood-mianதாவுதுமியானின் முதன்மை மாணாக்கனாக விளங்கியவர் இவர். தாவுதுமியானால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் இன்று புகழுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் S.M.A காதர் அவர்களே. முறைப்படிக் கர்நாடக இசையைக் குருகுலமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று இசைவாணராக வளர்ந்து மரபிசையரங்குகள் மட்டுமே நடத்தி வரும் இவர் இசை மரபுகளில் அழுத்தமான பற்றுடையவர். இவர் பிறந்தது 1923 டிசம்பரில். 25.8.1952-ல் இவர் ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். செவ்விசை மரபைச் சிறிதும் மீற விரும்பாத இவர் தம் இசையரங்கை இசையறைவுள்ள பத்துப் பேர் கேட்டால் போதும் என்பார். மதுரை சோமு பாடும்போது சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்கும். அதுபோல் இவரது இசையிலும் இந்துதானி சாயல் காணப்படுகிறது. இது அவர் தம் ஆசிரியர் வழி வந்த சாயலாகும்.

மரபிசையைச் சுவைப்போரும் மதிப்போரும் அருகிவரும் நிலையாலும், இசுலாமியர் என்ற காரணத்தால் இவர்தம் இசைத் திறனைப் பலரும் சரியாக அறிந்து கொள்ளாததாலும், செவ்விசை மரபுகளைச் சிறிதும் தளர்த்த விரும்பாத இவர்தம் கொள்கையாலும் இவர்தம் இசையரங்குகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இக்காலத்து முதல் தரமான இசைவாணர்களில் ஒருவராக விளங்கும் இவர் சில தமிழ் உருப்படிகளையும் இயற்றிப் பாடியிருக்கிறார். ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற பாடல் நாட்டுப்புறப் பாடலாகிய கும்மி அமைப்பில் இவர் இயற்றிப் பாடிய பாடல். கொலம்பியா இசைத்தட்டில் இது பதிவு செய்து வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கில் விற்கப்பட்ட கொலம்பியா இசைத்தட்டுகளில் இதுவும் ஒன்று.

குணங்குடியார் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக்களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், மலையாளம் காலகவிப் புலவர், காசிம் புலவர், உமறுப் புலவர் ஆகியஞிசுலாமியப் புலவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளில் பாடியது மட்டுமின்றி தியாகராசர் கீர்த்தனைகளையும் இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார்.

‘சேது சாரா’ என்ற பைரவி இராக ஆதிதாள உருப்படி ஒரு முஸ்லிம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது. ‘காரண நபியே’ என்ற அம்சத்வனி இராகப் பாடலுக்குக் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். உமறுப் புலவர் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச்சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு உண்டு. இதில் பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி ஆகிய இராகங்களும், ஆதி, மிசிர சாப்பு, தேசாதி, திசிரஏகம் ஆகிய தாளங்களும் கலந்து வரும்படி பாடியது குறிப்பிடித்தக்கது. இக்காலத்தில் இராகமாலிகையைக் காணலாம். தாளமாலிகையைக் காண்பது அரிது.

இவர்தம் பாடல்கள் பதிவு செய்த ஒலி நாடாக்களும் உண்டு. அவற்றிலும் இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் உள்ளன.

இவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் கீதம், வர்ணம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டவர்தாம். எம்.எம். ஈசுப் என்ற மாணவர்தாம் 8 ஆண்டுகள் தொடர்ந்து இசை பயின்றார். அவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். இவருடன் இசைமணிப் பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

முனைவர் இரா.திருமுருகன் –  நன்றி : ஆபிதீன் பக்கங்கள்

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம் இசை பயில அனுப்பி வைத்தார் என்ற உண்மை பலருக்கும் தெரிய நியாயமில்லை.

”இறைவன் அழைத்தான் திருநபியை” என்ற பாடலைக்கேட்க இங்கே கிளிக் செய்யவும்

நாகூர் தர்காவில் பாடியதன் சிறு தொகுப்பு இது

நன்றி: ஆபிதீன், கய்யூம், ஜஃபருல்லாஹ் நானா, இரா. முருகன், நூர் சாதிக், பிலால்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s