இந்திரன் தோட்டத்து முந்திரி – 6 — மஹாபாரத வாழ்வியல்

KK Cover Sept 16-30இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

 

கவிஞர் வைரமுத்துவின் இந்தப் பாடல் வரிகள் ஞாபகமிருக்கிறதா? இவை சொல்லவரும் கருத்து என்ன? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள நாம் மஹாபாரதக் கதைகளுக்குள் போகவேண்டும். குறிப்பாக யயாதி கதைக்குள்ளும், அவன் தகப்பனான நஹுஷன் என்பவனின் கதைக்குள்ளும். போகலாமா?

யயாதி கதையைப் பார்த்தோமல்லவா? இது அதற்கு முந்தைய கதை. யயாதியின் தந்தை நஹுஷனின் கதை. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்று சொல்கிறோம். ஆனால் ஒரு குழந்தையின் குணாம்சங்கள் யாவும் தாயைப்போலத்தான் இருக்குமா? தந்தையைப்போல இருக்காதா? இருக்கும். எல்லாம் கலந்துதான் இருக்கும் என்பது நாமறிந்த விஞ்ஞானம் இன்று.  அப்போ, தாயைப்போல பிள்ளை என்று சொல்வதெல்லாம்? அதெல்லாம் ஒரு பந்தத்துக்காகவும், சொந்தத்துக்காகவும்!

நஹுஷனுடைய கதையைப் பார்ப்பதற்கு முன் இந்திரனுடைய கதையைப் பார்த்துவிடவேண்டும். அப்போதுதான் நஹுஷனுடைய கதை புரியும். மஹாபாரதம் முழுவதுமே இப்படித்தான். ஒரு கதையோடு இன்னொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த உலகில் எதுவுமே தனியாக இல்லை. எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற விஞ்ஞான ரீதியான ஆன்மிக உண்மையை மஹாபாரதக் கதை ஒவ்வொன்றும் சுட்டிக்கொண்டே இருக்கிறது. சரி, கதைக்குள் போகலாமா?

இந்திரன் இந்திரலோகத்தின் அதிபதி. தேவர்களுக்கு அரசன். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திரன் அடிப்படையில் ஒரு மன்மதன்! ஆமாம். அவனுக்குள் காமம் எப்போதுமே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தது. அதனால்தான் அவன் கௌதம முனிவரின் மனைவி அகலிகையின் மேல் மோகம் கொண்டு கௌதமரின் உருவத்தில் சென்று அவளை அனுபவித்து, அது முனிவருக்குத் தெரிந்து அவமானப்பட்டுப்போனான். இந்த ராமாயணக்கதை நமக்குத் தெரிந்த கதைதான். அதில் ஓடும் மையை இழை என்னவெனில், இந்திரனும் மோகமும் பிரிக்கமுடியாதவை என்பதுதான். அதனால்தான் வைரமுத்துவின் பாடல் வரியில் ’இந்திரன் தோட்டத்து முந்திரி’ ’மன்மத நாட்டு மந்திரி’க்கு எதுகையாக வருகிறது!  இந்திரன் தோட்டத்து முந்திரிக்குக்கூட அந்த குணமும் வேகமும் இருக்குமென்றால் இந்திரன் எப்படியிருப்பான் என்று நாம் ஓரளவு புரிந்துகொள்ளலாம்!

KK-06.1இந்திரமோகம் அவனது இயற்கை. ஆனால் பதவி கொடுத்த மோகமும் அவன் கூடவே இருந்தது. ஆமாம். இரண்டு தலைகள் கொண்டவனைப்போலத்தான் இரண்டு மோகங்களுக்கும் இடையில் அவன் வாழ்ந்தான். செயல்பட்டுவந்தான். பதவி மோகத்தால் அவன் ஒரு தவறு செய்தான். சின்ன தவறுதான். ஆனால் பெரிய விளைவை ஏற்படுத்திய தவறு. சின்ன விஷயம் பெரிய விஷயம் என்பதை நாம் எப்படித் தீர்மானிக்கிறோம்? ஒருகாரியம் ஏற்படுத்தும் விளைவை வைத்துத்தான். ஒரு விரலால் ஒரு ’ஸ்விட்ச்’சை ’ஆஃப்’ செய்வது சின்ன வேலைதான் என்றாலும், அது ‘மெயின் ஸ்விட்ச்’ஆக இருக்கும் பட்சம் வீடு முழுவதற்கும் மின்சாரம் துண்டிக்கப்படுமல்லவா? அப்போ அந்த சின்ன செயல் பெரிய செயலாகிவிடுகிறது.

இந்திரனும் அப்படித்தான் ஒரு காரியம் செய்தான். ஒரு நாள் தன் அவைக்கு வந்த தேவகுருவான பிரகஸ்பதிக்கு எழுந்து நின்று வரவேற்று மரியாதை செய்யாமல் விட்டுவிட்டான். ’தேவலோகத்துக்கே அரசன் நான். இந்த சாதாரண ஆசிரியருக்கு நான் எதற்கு எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும்?’ என்ற அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுத்த மமதை பிரகஸ்பதிக்கு அவமரியாதை செய்ய அவனைத் தூண்டியது.

சபைக்கு பிருகஸ்பதி வந்தபோது இந்திரன் உட்கார்ந்துகொண்டே இருந்துவிட்டான். ஆனால் பிருகஸ்பதி அதைப் பொருட்படுத்தாமலும் ஒன்றும் சொல்லாமலும் அமைதியாகச் சென்றுவிட்டார். தான் செய்த காரியத்தை எண்ணி இந்திரன் அதற்காகப் பின்னர் வருத்தப்பட்டான். ”செய்ததை எண்ணி வருந்தும் மனிதனே, வருந்துவதை எண்ணி எப்போது வருந்தப் போகிறாய்?” என்று மிகச்சரியாகக் கேட்கிறார் பாரசீகக் கவிஞானி ரூமி!

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை. எதையுமே உரிய காலத்தில் செய்யவேண்டும். காலம் தவறிச் செய்யப்படும் காரியங்கள் நன்மையை விளைவிப்பதில்லை. இந்திரனுடைய நிலையும் அப்படியே ஆனது. மிருந்த வருத்தமடைந்த பிருகஸ்பதி மாயமாக மறைந்து போனார். அவர் எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

தேவகுரு இல்லாமல் தேவர்களின் பலம் குறைந்து போனது. அசுரர்கள் தேவர்களை வதைக்க ஆரம்பித்தனர்.  ஒரு ஆசார்யா இல்லாமல் தேவர்களின் நிலை மிக மோசமாகிப்போனது. அதுகண்டு வருந்திய பிரம்மாவின் அறிவுரைப்படி, பெரும் தபஸ்வியான விசுவரூபன் என்ற இளைஞனை தங்களுக்கு குருவாக இருக்கவேண்டும் என்று தேவர்கள் வேண்டிக்கொண்டார்கள். விசுவரூபனும் அதற்கு உடன்பட்டான்.

ஆனால் பிரச்சனை அங்கே முடிந்துவிடவில்லை. விசுவரூபனுடைய தாயார் தேவர்களுக்கு எதிரான குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்திரனுக்கு சந்தேகமும் உறுத்தலும் இருந்துகொண்டே இருந்தது. விசுவரூபனை எப்படியாவது காலி செய்துவிட  திட்டம் தீட்டினான். அவனது முதல் திட்டம் விசுவரூபனுடைய தவத்தைக் கெடுப்பது. அதற்காக உலக அழகிகளான அப்சரஸ்களை அனுப்பி வைத்தான். அவனைப்போலவே எல்லோரயும் நினைத்துவிட்டான்! ஆனால் பிரபஞ்ச அழகிகளின் ஆட்டத்தால் விசுவரூபனின் தவத்தை அசைக்க முடியவில்லை. இதெல்லாம் சரிப்படாது என்று புரிந்துகொண்ட இந்திரன் துணிந்து தன் வஜ்ராயுதத்தால் தாக்கி விசுவரூபனைக் கொன்றுபோட்டான்.

KK 6.2வஜ்ராயுதம் என்பது குண்டாந்தடி போன்ற ஒன்று. இடியும் மின்னலும் சேர்ந்த தாக்குதலும் வஜ்ராயுதம்தான். ஒரு மனிதனின் தலைமீது இடியும் மின்னலும் சேர்ந்து விழுந்தால் என்னாகும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். வஜ்ரம் என்றால் வைரம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ’உறுதி’ என்ற பொருள் ‘வஜ்ரம்’ என்ற சொல்லுக்குள் ஒளிந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ உறுதியான பற்களுக்கு ’வஜ்ரதந்தி டூத்பேஸ்ட்’ விளம்பரம் வருகிறது போலுள்ளது! ஆனால் வஜ்ராயுதத்தின் உறுதி அழிக்கக்கூடியது.

ஆனால் விசுவரூபனின் கொலையால் இந்திரன் சந்தோஷமடையமுடியவில்லை. ஏனெனில் அதன் விளைவுகள் விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்தன. மகனின் கொலையால் ஆக்ரோஷமடைந்த அவனது அம்மா இந்திரனுக்கு எதிராக ஒரு வேள்வி நடத்தி அதிலிருந்து விருத்திரன் என்று ஒரு அசுரன் கிளம்பி அவன் இந்திரனுடன் யுத்தம் செய்தான். கடைசியில் இந்திரன்தான் வென்றான். விருத்திரனும் கொல்லப்பட்டான்.

ஆனால் பிரச்சனை இங்கும் முடிந்துவிடவில்லை. ஏனெனில் பிரச்சனை என்பது வெளியில் உள்ள ஒரு பொருள் சம்பந்தப்பட்டதல்ல. எல்லாப் பிரச்சனைகளுமே மனம் சம்பந்தப்பட்டவையே. ஷேக்ஸ்பியரின் ’மேக்பெத்’ நாடகத்தில் கொலைக்குத் தூண்டுதாலாக இருந்த மேக்பெத்தின் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். “அரேபிய நாட்டின் அனைத்து வாசனைப் பொருள்களையும் கொண்டு கழுவினாலும் என் கையில் உள்ள ரத்தத்தின் துர்நாற்றத்தை வாசமாக கொஞ்சமும் மாற்ற முடியாது” என்று கூறுவாள். உறுத்தல் மனதில் இருக்கும்வரை அது குத்திக்கொண்டேதான் இருக்கும்.

இந்திரன் நிலையும் அப்படித்தான் இருந்தது. அவன் ஒரு கொலை செய்திருந்தான். மேலும் வாக்குத் தவறியிருந்தான். அந்த இரண்டும் அவனை உறுத்திக்கொண்டே இருந்தன. அதுதான் மிகப்பெரிய பிரச்சனை. மனதில் இருந்த உறுத்தல் எனும் இருட்டு காரணமாக இந்திரன் ’ஒளி இழந்துபோனான்’ என்று மஹாபாரதம் கூறுகிறது. வெறுப்போடும், கோபத்தோடும், பொறாமையோடும் நீங்கள் ’ப்யூட்டி பார்ல’ரிலிருந்து ’ஃபேசியல்’ செய்துகொண்டு வெளியில் வந்தாலும் அசிங்கமாகத்தான் இருப்பீர்கள். எல்லா அழகும், ஒளியும் உள்ளிருந்து வருவதுதான். லைலாவைவிட அழகிகளை உனக்குத் தருகிறோம் என்று மஜ்னூனிடம் சொன்னபோது, லைலாவைவிட அழகி உலகிலேயே இல்லை என்று அவன் சொன்னான். இல்லை, அவள் கறுப்பு, நாங்கள் உனக்கு உண்மையிலேயே உலக அழகிகளைக் காட்டுகிறோம். நீ யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள். லைலாவை மட்டும் விட்டுவிடு என்று கூறினார்கள். ஆனால் அவர்களிடம் மஜ்னூன், “லைலாவை நீங்கள் என் கண்களால் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்! அதுதான் விஷயம். அதுதான் காதல். அங்கே நிறங்களோ இனங்களோ பேசுவதில்லை. எல்லாமே மனசுடைய பேச்சுதான். எல்லாமே மனம் சாந்தவைதான்.

எனவே ஒளியிழந்தும் களையிழந்தும் போன இந்திரன் மனமுடைந்து மறைந்து வாழ ஆரம்பித்தான்! ஆமாம். மானசரோவரில் ஒரு  தாமரைக்கொடியின் தண்டில் ஒரு அணுவாக ஒளிந்துகொண்டிருந்தான்!

மானசரோவர்! ஆஹா, சொல்லும்போதே மனதில் ஒருவித குளிர்ச்சியை ஏற்படுத்தும் பெயர். அது ஒரு ஏரி. திபெத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியா, நேபால், திபெத் ஆகிய நாடுகளிலிலிருந்து பக்திமான்கள் புனிதயாத்திரை செல்லும் ஏரி அது. அதில் குளித்தாலோ, அல்லது அதன் நீரைக் குடித்தாலோ நூறு ஜென்மங்களில் பாவங்கள் யாவும் தொலைந்து, துடைக்கப்பட்டு நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள் என்றும், அது பிரம்மனின் மனதில் உருவான ஏரி என்றும் நம்பிக்கை கூறுகிறது. ’மான சரோவரம்’ என்றாலே ‘மனதில் ஏரி’ என்றுதான் சமஸ்கிருதத்தில் அர்த்தம்! ஆஹா, மனதைத் தூய்மைப் படுத்தும் ஒரு ஏரியில், ஒரு தாமரைக்கொடியின் தண்டில், மனத்தூய்மையற்ற இந்திரன் உறுத்தலுடன் ஒளிந்துகொண்டிருந்தான்! ஒருவேளை மான சரோவரின் மகிமையால் தன் உள்ளமும் தூய்மையடையலாம் என்று நினைத்தானோ என்னவோ!

இந்திரலோகம் இந்திரனில்லாமல் அவதிப்பட்டது. அரசனில்லாமல் எப்படி ஒரு ராஜ்ஜியம் இருக்க முடியும்? எனவே இந்திரனுக்கு பதிலாக வேறொருவரை அந்த இடத்தில் அமர்ந்த தேவர்களும் ரிஷிகளும் முடிவுசெய்தார்கள்!  பராக்கிரமும் புகழும் அடைந்திருந்த நஹுஷனை இந்திரப்பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் வேண்டினார்கள்.

நஹுஷன் யயாதியின் தந்தை என்பதையும் யயாதியின் வியாதி என்னவென்பதையும் ஏற்கனவே பார்த்தோம். நஹுஷனின் உயிரணுவில் கலந்திருந்த உணர்வு அது! அது என்னவெல்லாம் செய்ய வைத்தது? அது கதையின் அடுத்த பகுதி!

=====

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to இந்திரன் தோட்டத்து முந்திரி – 6 — மஹாபாரத வாழ்வியல்

  1. கவிஞர் வைரமுத்துவிடம் ஒருவர் கேட்டார் “அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? சந்தம் வரவேண்டும் என்பதற்காக எது வேண்டுமானாலும் போடுவதா? அதற்கு அவர் சொன்ன பதில். “சாதாரணமாக முந்திரி என்றாலே வீரியமுள்ள வஸ்து. அதுவும் இந்திரனுடைய வீட்டு தோட்டத்தில் விளைந்ததாக இருந்தால், அதன் வீரியத்தைச் சொல்லவா வேண்டும்?” ஏன் ரூமி, இதுதான் தேவலோகத்து வயாக்ராவோ?

  2. நாகூர் ரூமி says:

    ஆஹா, இதுதான் நாகூர் மூளை என்பது! முன்னமே எனக்கு இப்படி தோன்றியிருந்தால் தேவலோகத்து வயாகரா என்றே தலைப்பு வைத்திருக்கலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s