இந்திரன் தோட்டத்து முந்திரி – 6.1(கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்)

KK 6.1 -- Oct 16-31 Coverதேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் நஹுஷன் இந்திர பதவியில் அமர்ந்தான். கொஞ்சநாள் எல்லாம் நன்றாகத்தான் போனது. ஆனால் ஒருநாள் இந்திரனுடைய மனைவி சசிதேவியைப் பார்த்தவுடன் அவனுக்குள்ளேயிருந்த ஹார்மோன்கள் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. இந்திரப்பதவி தனக்கென்றால் பத்தினியும் தனக்குத்தானே, இந்திராணியும் தனக்குத்தானே சொந்தமாகவேண்டும் என்று நஹுஷன் மனம் தர்க்கம் பேசியது!

உடனே தேவர்களையெல்லாம் அழைத்து, “இந்திராணி சசிதேவியை என்னிடம் அழைத்துவாருங்கள். இப்போது நான்தானே இந்திரன்? அப்படியானால் சசிதேவி எனக்குத்தானே இப்போது சொந்தம்?” என்று உத்தரவிட்டான்.

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று தேவர்கள் கலங்கினார்கள். தேவர்கள் செய்யவேண்டிய வேலையா அது?! கலங்காமல் என்ன செய்வார்கள், பாவம். “இல்லை, மன்னா, சசிதேவி இன்னொருவரின் மனைவி. அவளை நீங்கள் மோகிப்பது தர்மமாகாது” என்று எடுத்துக்கூறினர்.

ஆனால் உபதேசம் கேட்கும் மனநிலையிலே அவன் இருந்தான்?

“ஓஹோ, நீங்களெல்லாம் ரொம்ப தர்மவான்களா? அப்படியானால் உங்கள் இந்திரன் அகலிகையைத் தீண்டியபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? விசுவரூபனைக் கொன்று பிரம்மஹத்தி தோஷம் பெற்றானே அப்போது என்ன செய்தீர்கள்? விருத்திரனை வஞ்சித்துக் கொன்றதை ஏன் பொறுத்துக்கொண்டீர்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விக்கனைகளை வீசினான். வஜ்ராயுதத்தைவிடக் கூர்மையாக அக்கனைகள் தேவர்களைத் தாக்கின. ஏனெனில் அவன் கேட்டதில் ஒரு நியாயமிருந்தது. திரௌபதியை மானபங்கப்படுத்தியபோது ஏன் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தீர்கள்? அப்போது உங்கள் தர்மம் எங்கே போனது என்று பீஷ்மரைக் கிருஷ்ணர் கேட்டபோது பீஷ்மர் உறுத்தல் தாளாமல் மௌனம் சாதித்தார். உயிரை விடவும் துணிந்தார். உயர் நிலையில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் அதைத்தட்டிக் கேட்கின்ற வாய்ப்போ அல்லது சுட்டிக்காட்டுகின்ற தைரியமோ இல்லாமலிருப்பதும் அதர்மத்துக்குத் துணை போவதற்குச் சமம்தான் என்று மஹாபாரதம் பல இடங்களில் அவ்வப்போது வலியுறுத்திக் கூறுகிறது.

KK 1 of 6.1வேறு வழியில்லாமல் தேவர்கள் அனைவரும் நஹுஷனுடைய கோபத்துக்கு பயந்து எப்படியாவது சசிதேவியை சமாதானம் செய்து கொண்டுவந்து ஒப்படைக்கிறோம் என்று உறுதிகூறிச்சென்றனர். ஆனால் இந்திராணி  அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கற்புள்ளம் கொண்ட எந்தப் பெண்தான் ஒத்துக்கொள்வாள்? அவள் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அறிவார்ந்த ஒரு காரியமும் செய்தாள். உடனே தேவகுருவான பிரகஸ்பதியின் வசிப்பிடம் சென்று அவரிடம் முறையிட்டாள். அவர் அவளுக்கு சமாதானம் சொல்லி தன்னோடே தங்கவைத்துக்கொண்டார். பிறகு நஹுஷனிடமிருந்து அவள் தப்பிக்கும் உபாயம் ஒன்றையும் சொன்னார். அதன்படி நடப்பதாகச் சொன்ன சசிதேவி துணிச்சலாக நஹுஷன் இருக்கும் இடத்துக்கு, இந்திரசபைக்கு, சென்றாள்.

கர்வம், காமம் இரண்டும் பொங்க நஹுஷன் அவளைப் பார்த்தான். உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தாலும் அவள் தைரியமாகப் பேசினாள்.

“இந்திரன் இப்போது இல்லை. நீ என்னைப் பதியாக ஏற்றுக்கொள். பாவம் ஏற்படும் என்று பயப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவளுக்கு தைரியம் சொன்னான் நஹுஷன்.

“சரி, நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்திரன் இருக்கின்றானா அல்லது இறந்துவிட்டானா என்று தெரிந்துகொள்ளவேண்டும். நான் போய்ப்பார்த்துவருகிறேன். அவன் இறந்துவிட்டிருந்தால் என் மீது தோஷம் வராது” என்று அவள் கூறினாள்.

“நீ சொல்வதும் சரிதான். போய்த்தேடிப்பார்த்துவிட்டு விரைவில் வா” என்று உத்தரவு வழங்கினான்.

ஒரு கம்பனிக்கு எம்.டி.யாக நியமிக்கப்பட்டால் கோட்டு சூட் எல்லாம் போட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதுபோல, இந்திரப்பதவிக்கு வந்தவுடன் இந்திரனுடைய மனைவியும் தனக்கு மனைவியாக இருக்கவேண்டும் என்று நஹுஷன் நினைத்துவிட்டான்! பெண் என்றாலே ஒரு ’நுகர்பொருள்’ என்று எல்லாக் காலத்திலும் நினைக்கப்பட்டிருப்பது வருத்தப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய விஷயம்.

KK 2 of 6.1மானசரோவரில் தாமரைக்குள் ஒளிந்துகொண்டிருந்த இந்திரனை அவன் மனைவி கண்டு பிடித்தாள். அணுவுக்குள் அவன் ஒளிந்துகொண்டிருந்தாலும், அவனை அணு அணுவாக  அறிந்திருந்த அவன் மனைவியால் கண்டுபிடிக்க முடியாதா  என்ன? இந்திரனும் அவளுக்குப் பல சமாதாங்கள் சொல்லி கடைசியில் நஹுஷனுக்கு முடிவு ஏற்பட ஒரு உபாயமும் சொன்னான்.

“ஒரு பல்லக்கில் ஏறி உன்னை சந்திக்க நஹுஷனை வரச்சொல். அந்தப் பல்லக்கை சப்த ரிஷிகளும் தூக்கிவருவதே சிறப்பு என்றும் சொல். அதுவே அவனுக்கு முடிவாக இருக்கும்” என்று இந்திரன் கூறினான்.

அந்தக் கருத்தை அவள் நஹுஷனிடம் சொன்னதும் அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான். “ஆஹா, அற்புதமான சிந்தனை. இதுவரை இந்திரனுக்கே கிடைக்காத மரியாது இது. எனக்கேற்ற மரியாதை இதுதான். நல்லது. நான் என் பல்லக்கை சப்தரிஷிகளும் தூக்கிவர உத்தரவிடுகிறேன்” என்று கூறினான்.

சப்தரிஷிகள் என்பவர்கள் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஏழு முக்கியமான  ரிஷிகளாவர். அவர்கள் வஷிஷ்டர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், அத்ரி, விஸ்வாமித்திரர், அகத்தியர் ஆகியோர் என்றும் கூறப்படுகிறது.

சப்தரிஷிகளால் தூக்கி வரப்பட்ட பல்லக்கில் ஏறி புதுமாப்பிள்ளை நஹ்ஷன் ஊர்வலமாக சசிதேவியை நோக்கி, அவளை நினைத்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான். அவ்வப்போது ‘ஸர்ப்ப, ஸர்ப்ப” (சீக்கிரம் செல்லுங்கள்) என்று பல்லக்குத் தூக்கிகளாக இருந்த சப்த ரிஷிகளுக்கு உத்தரவிட்டான். அவனுடைய பாபங்களின் சுமை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் தன் காலால் ஒரு பல்லக்குத் தூக்கியாக இருந்த அகத்திய முனிவரை, “ஸர்ப்ப” என்று சொல்லி உதைத்தான். அவ்வளவுதான். அவன் பாவத்தின் சுமைகள் முழுமையடைந்தன.

கடுமயாகக் கோபமடைந்த அகத்தியர், “அதமனே! (கேவலமானவனே), சப்த ரிஷிகளை அவமரியாதை செய்த நீ ஒரு மலைச்சர்ப்பமாக சுவர்க்கத்திலிருந்து வீழ்வாய்” என்று சாபம் கொடுத்தார். அவ்வளவுதான் நஹுஷன் ஒரு மலைப்பாம்பாக மாறி விழுந்தான், வீழ்ந்தான் என்று கதை முடிகிறது.

KK 3 of 6.1காமத்தால் வீழ்ந்த ஒருவன் சாபத்தால் பாம்பாக மாறியதில் ஒரு உளவியல் ரீதியான உண்மை ஒளிந்துகொண்டுள்ளது. எல்லாக் காலத்திலுமே வதைக்கவும் வணங்கவும் படுகின்ற ஒரு ஜந்துவாக பாம்பு இருக்கிறது. ஏனெனில் அது காமத்தின் குறியீடு என்று உளவியல் கூறுகிறது. ஒரு பாம்பை ஒருவர் கனவில் கண்டால் அவரது காம உணர்வுகளையே அவர் பாம்பின் வடிவில் கண்டார் என்கிறார் உளவியல் மேதை சிக்மண்ட் ஃபிராய்ட்! அது நீளமாக இருப்பதும், படமெடுப்பதும் இந்த உளவியல் ரீதியான இணைப்புக்கு உதவி செய்கிறது. நம் கட்டுக்குள் மன்மதம் இருந்தால் அது போற்றப்படவேண்டிய ஒன்று. எல்லை மீறினால் அது வதைக்கப்படவேண்டியது. இந்திர, நஹுஷ கதைகள் சொல்லவருவது இதுதான்.

========

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s