2014 – பாட்பூரி

ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு விதத்தில் மறக்கமுடியாத நிகழ்வுகளால் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. சோகம், சுகம், நகைச்சுவை என எல்லா சுவைகளும் அதிலிருக்கும். எப்படியோ இந்த ஆண்டு என் மனதில் இடம் பிடித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மக்கள் முதல்வர்

புதிதாக தமிழுக்கு ஒரு சொற்பிரயோகம் (?) இந்த ஆண்டு கிடைத்துள்ளது. ‘மக்கள் முதல்வர்’. தூய தமிழ்ச் சொல். கேட்கவும் சொல்லவும் அருமையாக இருக்கிறது. மக்களுக்காக வாழும், மக்களால் நேசிக்கப்படும் முதல்வர் என்று இதற்கு முதல் பொருள்.

இரண்டாவதாக ஒரு பொருளை வரலாறு கொடுத்திருக்கிறது. கைதாகி ஜெயிலில் அல்லது பெயிலில் இருப்பவர் என்று அர்த்தம். நம் நாட்டில் இத்தகைய மக்கள் முதல்வர்கள் ஏற்கனவே சிலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு கௌரவத்தை தமிழ்நாடு கொடுத்திருக்கிறது. இனி வருங்காலத்திலும் பல மக்கள் முதல்வர்களை எதிர்பார்க்கலாம்.

க்ரியாவின் “தற்காலத் தமிழ் அகராதி”யில் இந்த சொல்லையும் அடுத்த பதிப்பில் சேர்ப்பது பற்றி அவர்கள் யோசிப்பது நல்லது.

நாதஸ்வரம் சீரியல்

இது பற்றி ஏற்கனவே ரொம்ப நாளைக்கு முன் எழுதியிருந்தேன். சமீபத்திய ஒரு எபிசோடில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு சித்தப்பாவை முத்துப்பேட்டை தர்காவுக்கு அழைத்து வந்து ஓதிப்பார்த்து அவர் குணமடைவதாக ஒரு சீன் எடுத்திருந்தார்கள். அதுபற்றி கொஞ்சம் சொல்வதற்கு முன் விஸ்வரூபம் படம் கமல் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிட விரும்புகிறேன்.

விஸ்வரூபம் படத்தில் கமல் முஸ்லிமாக நடிப்பார். அவர் தீவிரவாதிகளால் தாக்கப்படும்போது திடீரென்று “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா” என்ற துஆவை ஓத ஆரம்பிப்பார்.

ரொம்ப துல்லியமான, சரியான அரபி உச்சரிப்பு. ஆனால் அந்த சீனில் அது பொருந்தவில்லை. தீவிரவாதிகளால் தாக்கப்படும்போது “எங்கள் இறைவனே எங்களுக்கு இந்த உலகில் அழகானதையும் மறுமையில் அழகானதையும் கொடுப்பாயாக” என்ற பிரார்த்தனை அபத்தமாக உள்ளது. எந்த இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அது கமலஹாஸனை மட்டும் பிரஸ்தாபிக்கிறது. அவர் ரொம்ப அறிவாளி. அரபியைக்கூட ஒரு முஸ்லிமைப்போல சரியாக உச்சரிக்க அவரால் முடியும். அவர் மிகவும் திறமைசாலி. இதுதான் அந்த காட்சி சொல்லும் செய்தி. (ஆனால் மிகமிக முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அது என்பது வேறு விஷயம்).

ஆனால் நாதஸ்வரம் அப்படி எதுவும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரை தர்காவுக்கு அழைத்து வருகிறார்கள். அவருக்கு விளக்கிலிருந்து நெய்யோ எண்ணெயோ மூன்று முறை கொடுக்கப்படுகிறது. அவர் அதைக் குடிக்கிறார். பின்னர் இறைநேசர் ஷேக் தாவூது வலியுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலத்திலிருந்து ஒருபச்சைத்துணி  எடுத்துவரப்பட்டு அது அவர் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பின்னர் அவருக்கு தாயத்து கட்டி விடப்படுகிறது. பின்னர் மயில் பீலியால் அவர் முகத்தில் தடவுகிறார்கள். பின்னர் துஆ ஓதப்படுகிறது.

காட்சி மிகச்சரியாக வந்துள்ளது. தர்காக்களில் என்ன நடக்கிறதோ அது அப்படியே காட்டப்பட்டு, அதோடு சீரியலின் காட்சி மிகச்சரியாகப் பொருத்தப்படுகிறது. சீரியலுக்காக எதுவும் மாற்றப்படவில்லை.  முத்துப்பேட்டை தர்காவில்தான் சீரியலின் முதல் காட்சி தொடங்கியதாக ஞாபகம். இப்படி ஒரு காட்சியை எடுத்ததற்காக இயக்குனர் திருமுருகன் அவர்களை மனமாறப்பாராட்டுகிறேன். மத நல்லிணக்கத்துக்கு இதுவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 

ஏர்டெல் சூப்பர் சிங்கர்

முந்தையை சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரி இது மனதில் ஏனோ ஒட்டவில்லை. ரொம்ப சின்ன பிள்ளைகளும் நன்கு வளர்ந்த பிள்ளைகளும் இணையாகவே இல்லை. வெகு சிறப்பாகப் பாடுவதாக யாரையும் குறிப்பிட முடியவில்லை. ஸ்பூர்த்தி ஓகே. ஆனால் அது தன் வெற்றிக்கு கர்நாடிக் பக்கமே சாய்கிறது. அதுவே அதன் தோல்வியாகிவிடலாம். (சன் டிவியில் காமெடியன் கங்கை அமரனை வைத்து நடத்தப்படும் படு கேவலமான சன் சிங்கர் நிகழ்ச்சியை ஒப்பிட்டால் இது உண்மையிலேயே ‘சூப்பர்’ சிங்கர் நிகழ்ச்சிதான். மலையாளச் சேனல் ஒன்றில் “பதினாளாம் ராவு” என்ற ஒரு பாடல் நிகழ்ச்சியில் பாதுஷா என்ற சிறுவன் பாடுவதைக் கேளுங்கள்:

K_Balachanderஇயக்குனர் பாலசந்தரின் மறைவு

ஒருவர் மறைந்துவிட்டால் அவரைப் புகழவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பால சந்தர் விஷயத்தில் அது பொருத்தமானதும்கூட. நடுத்தர வர்க்க மனிதர்களின் பிரச்சனைகளை அவரைவிட சிறப்பாக வேறு யாரும் எடுக்கவில்லை என்பது என் கருத்து.

முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது அவருடைய வசனங்கள். அவைகள் வெறும் வசனங்கள் அல்ல. சமுதாயத்தின்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள். ’பாமா விஜயம்’ ஒரு சீனில் நடிகை பாமா நாகேஷ் வீட்டுக்கு வருவார். நாங்க உங்க ஷூட்டிங் பார்க்க வரலாமா என்று ஜெயந்தி (நாகேஷ் மனைவி) கேட்பார். அதற்கு நடிகை ஓ தாரளமா என்பார். நாங்க எல்லாரும் வரலாமா என்று ஜெயந்தி கேட்பார். அதற்கும் வரலாம் என்று அவர் பதில் சொல்வார்.அப்போது நாகேஷ் அவரிடம், “நீங்க வருவீங்களா?” என்று கேட்பார்!

காதல் காட்சியில கதா நாயகனோட நெருங்கி நடிக்கும்போது கூச்சமா இருக்காதா? – நாகேஷ்.

“கூச்சப்பட்டா எப்படிங்க நடிக்க முடியும்?” – இது நடிகை.

“அப்ப கூச்சப்படுறமாதிரி நடிக்க சொன்ன என்ன செய்வீங்க?” – நாகேஷ்!

ஒரு இயக்குனர் இப்படிக்கூட சுயவிமர்சனம் செய்ய முடியுமா? பால சந்தர் ஆச்சரியமான மனிதர்தான்.

ஆனால் அவர் திரைப்படக் கதைகளின் முடிவுகளைப் பொறுத்தமட்டில் அவைகள் ஆரம்பித்த இடத்துக்கே கடைசியில் வந்து நிற்கும். இந்த விஷயத்தில் துணிச்சலான இயக்குனர் என்று அவரை என்னால் சொல்லமுடியவில்லை. உதாரணமாக “அவள் ஒரு தொடர்கதை”, “அபூர்வ ராகங்கள்” இவற்றைச் சொல்லலாம். கடைசியில் கதா நாயகிகள் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கே திரும்புவர். அவள் ஒரு தொடர்கதை கதா நாயகி திரும்பவும் வேலைக்குப் போவாள். அபூர்வ ராகங்களின் கதாநாயகிகள் தாங்கள் விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை பாரதிராஜா பால சந்தரை மிஞ்சியவர் என்று சொல்வேன். ”புதுமைப்பெண்” என்று ஒரு படம். மனைவியை சந்தேகப்படும் கணவனைத் தூக்கி எறிந்துவிட்டு நாயகி (ரேவதி) தாலியைக் கழற்றி கோவில் உண்டியலில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பாள். அந்த துணிச்சலை பாலசந்தரிடம் நான் பார்க்கவில்லை.

என்றாலும் சர்வர் சுந்தரம், பாமா விஜயம், நீர்க்குமிழி, இரு கோடுகள், நான் அவனில்லை, மன்மத லீலை ஆகிய படங்களை  க்ளாஸிக் என்றுதான் சொல்லவேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம்

ஒரு மனிதனுக்கு பணம் இருந்தால் என்னென்னவோ செய்யலாம். ஆனால் எல்லாவற்றியும் பணத்தால் செய்யமுடியாது. அன்பை, ஆதரவை, உறவை, பாசத்தை, நட்பை – இப்படி மனித வாழ்வின் மிகமுக்கியமான எதையுமே பணத்தால் வாங்க முடியாத என்ற செய்தியைச் சொல்லும் விளம்பரம் இது.

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s