சிலையும் நீ, சிற்பியும் நீ — தீயை அணையுங்கள் — 9

Alumai Sirpi Cover Jan 2015கோபம் என்பது ஒரு பாத்திரத்தில் உள்ள அமிலம் மாதிரி. ஒருவர் மீது அது வீசப்பட்டால், அவருக்கு அது ஏற்படுத்தும் தீமையைவிட அது ஊற்றப்பட்டிருந்த பாத்திரத்துக்கு ஏற்படுத்தும் தீமைதான் அதிகம்

 • மார்க் ட்வைன்

ஒரு ஊரில் ஒரு அசுரன் இருந்தான். அவனுக்குப் பசிக்கும்போதெல்லாம் அவன் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் சாப்பிடுவான். மற்ற உணவு எதையும் எடுத்துக்கொள்ளமாட்டான். அப்படியானால் அந்த உணவு எப்போதும் கிடைக்கும் உணவாக இருக்கவேண்டுமல்லவா? அந்த உணவு என்ன என்று யோசிக்கிறீர்களா? அசுரர்கள் மனிதர்களை உண்ணுவார்கள் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த அசுரன் ரொம்ப வித்தியாசமானவன். அவனுடைய உணவு என்ன தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம். அவனுடைய உணவு கோபம்!

ஆமாம். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கோபத்தை உண்டு அவன் நாளொரு மேனியும் பொழுதொரு தொந்தியுமாக பெருத்துக்கொண்டிருந்தான்! ஏனெனில் கோபம் அவனுக்கு மிகமிக அதிகமான அளவில் கிடைத்துக்கொண்டே இருந்தது.

அவனுக்குப் பசியெடுத்தால் அவன் ஒரு காரியம் செய்வான். குடும்பத்துக்குள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்திவிடுவான். குடும்பத்தினர் ஒருவர்மீது ஒருவர் கோபம் கொண்டு கத்துவார்கள். சண்டைபோடுவார்கள். அடித்துக்கொள்வார்கள். பழிக்குப்பழி என்று வன்மம் வளர்ப்பார்கள். அதுபோதும் அவனுக்கு. அவர்கள் கோபம் அதிகமாக ஆக, இவனுடைய வயிறு பெருத்துக்கொண்டே போகும்.  பலமும் அதிகமாகிக்கொண்டே போகும். குடும்பச் சண்டை போதவில்லையென்றால், ஊருக்குள் சண்டையை ஏற்படுத்துவான். அதுவும் போதவில்லை என்றால் நாட்டுக்கு நாடு போரை உண்டாக்குவான். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் வெறுப்பை வளர்ப்பது அவனுக்கும் ஒன்றும் பெரிய விஷயமாக இல்லை. அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலத்தான் நாடுகளும் செயல்பட்டன. கோபப்படவும் வன்முறையைத் துவக்கவும் அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு துரும்புக் காரணம் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. கோபத்துக்கு அடிமையாகும் இந்த மானிட குணங்கள் யாவும் அந்த அசுரனுக்கு ரொம்ப வசதியாகப் போயின. எந்த அளவுக்கு என்றால் கோப உணவை உண்டு அவனுக்கு ‘போர’டித்து விடும் அளவுக்கு!

SNSN -- 09சரி, கதை மேற்கொண்டு என்ன என்று கேட்கிறீர்களா? சொல்லத்தானே போகிறேன். அசுரனுக்கு ஒரு வினோதமான ஆசை வந்தது. மனிதர்களின் கோபத்தை உண்டு உண்டு அவனுக்கு சலித்துவிட்டது. இனி தேவர்களுக்கும் கடவுளர்களுக்கும் மத்தியில் கோபத்தை உண்டுபண்ணி அந்தத் தேவகோபத்தை உண்ண வேண்டுமென்று விரும்பினான்! அதற்காக சக்கா என்ற கடவுள் இருந்த உலகத்துக்கு அவன் போனான். அங்கே பல தேவர்களும் குட்டிக்குட்டி கடவுளர்களும் இருந்தனர். அவன் போன நேரம் அவனுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. தலைமைக் கடவுளும் ராஜாவுமான சக்கா அங்கு இல்லை. அவர் எங்கோ சென்றிருந்தார். அவரது இருக்கை காலியாக இருந்தது. இதுதான் சரியான தருணம் என்றெண்ணிய அசுரன் சட்டென்று அந்த ராஜாக்கடவுளின் சிம்மாசனத்தில் போய் அமர்ந்துகொண்டான்.

அங்கு வந்த தேவர்களும் கடவுளர்களும் அதைக்கண்டு கடுமையான கோபம் கொண்டனர். “ஏ, அசுரனே! என்ன திமிர் உனக்கு! எங்கள் கடவுள் சக்காவின் இருக்கையில் நீ அமரலாமா?” என்று கொதித்தனர். அவர்கள் கோபத்தில் கொதித்து எழ எழ அசுரனுடைய உடல் பருத்துக்கொண்டே போனது. அவனுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. தேவர்களுடைய சக்தியெல்லாம் குறைந்துகொண்டே சென்றது. அசுரன் சிரித்தான். அவர்களது கோபம்தான் அவனது உணவு என்று பாவம் அவர்களுக்குத் தெரியாது! அவர்கள் கோபம் அதிகரித்துக்கொண்டே போனது. அவனது சக்தியும்தான். கோப உணவின் நல்ல விளைவு அதிகமாகி, சிவப்பு நிறத்தில் ஒரு புகைபோல ஒன்று அசுரனின் உடம்பிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் தீடீரென்று அங்கே ஒரு ஒளி தோன்றியது. அது சக்காவின் ஒளி. அவர் வந்துவிட்டார். அவர் அருகே வந்தவுடன் அசுரன் சிரித்தான். உன் இருக்கையில் நான் அமர்ந்திருக்கிறேன் பார்த்தாயா என்று கொக்கரித்தான்.

ஆனால் சக்கா கோபமடையவில்லை. அமைதியாக, “வாருங்கள் நண்பரே, உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் என் இருக்கையில் அமர்ந்தது என் பாக்கியம். எங்கள் விருந்தினராகிய உங்களுக்கு ஏற்ற கௌரவம் அதுதான். இதோ, உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த சாதாரண இருக்கையில் நான் அமர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு மேற்கொண்டு என்ன வேண்டும் கேளுங்கள் நண்பரே, தரக்காத்திருக்கிறேன்” என்றார் புன்முறுவலுடன்!

SNSN -- 09.2அவ்வளவுதான். அசுரனின் உடல் காற்றுப்போன பலூன் மாதிரி புஸ்ஸென்று மெலிந்துகொண்டே போனது. கோபத்துக்கு பதில் அன்பும் அமைதியும் சக்காவிடமிருந்து வரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சக்தியெல்லாம் வடிந்துபோயிற்று. இறுதியில் அவன் சக்தியின்றி, உணவின்றி செத்தே போனான்!

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. அன்பும் மன்னிப்பும்தான் கோபத்துக்கு மாற்று. நெருப்பை நீர் ஊற்றித்தானே அணைக்கமுடியும்? அதைத்தான் புத்தரும் செய்தார்.

அவரிடம் ஒருவன் வந்து அவரைக் கன்னா பின்னாவென திட்ட ஆரம்பித்தான். ஏன்? அவனுடைய குலத்தில் இருந்து ஒருவர் ராஜ்ஜியத்தைத் துறந்து புத்தரின் சொல்கேட்டு மனம் மாறி துறவியாகிவிட்டார். அந்தக் கோபம் அவனுக்கு. அவன் திட்டுவதையெல்லாம் புத்தர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் திட்டி முடித்ததும், “நண்பரே, உங்களுக்கு ஒருவர் சில பரிசுப்பொருள்களைக் கொடுக்கிறார். அவை உங்களுக்கு வேண்டாமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

என்னடா இது! நாம் திட்டுகிறோம், இவர் கோபமடையாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்ட அவன், “வேண்டாமென்றால் கொடுத்தவரிடமே பொருள்களைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்றான்.

புத்தர் சொன்னார். “ரொம்பச் சரி. இவ்வளவு நேரமாக ஏதேதோ சொற்களை என்னை நோக்கி வீசிக்கொண்டிருந்தீர்கள். அவைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவைகளை நீங்களே எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். இனி அவை உங்களுடையவை”!

SNSN -- 09.3உங்களை மனிதர்கள் வெறுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்குச் சிறந்த வழி கோபப்படுவதுதான்! ஆமாம், கோபப்படும் மனிதர்களை யாராவது விரும்புவார்களா? எனக்கு ஒரு மாமா இருந்தார். நான் கோலி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவ்வளவுதான். என் கன்னத்தில் அறை விழும். கன்னம் பழுத்துவிடும். நான் அப்போது சின்னப்பையன். எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் என்னை அதற்காக ஏன் அடித்தார் என்று இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இப்போதும் காரணம் தெரியவில்லை. ஒருவேளை அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர் மாமா அவரை அடித்திருக்கலாம். அல்லது குழந்தைகளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களை அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற தவறாக கொள்கையை அவர் பின்பற்றி இருக்கலாம். எது எப்படி இருப்பினும், விரும்பப்படாத ஒரு மாமாவாகவே அவர் ஆகிப்போனார்.  அதற்குக் காரணம் அவரது கோபம்.

ஒரு மனிதனின் கோபம் இன்னொரு மனிதனை காயப்படுத்துகிறது. ஆனால் கோபப்படும் மனிதருக்கு இது ஒருவகையில் வெற்றிதானே? அப்படியானால் கோபமானது கோபப்படுபவரையும் பாதிக்கிறது என்று மார்க் ட்வைன் சொன்னதன் அர்த்தம் என்ன என்று யோசித்தேன். இன்றையை விஞ்ஞானம் அதற்கான பதில்களை கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறது.

கோபம் வந்தால் உங்கள் இதயத்துடிப்பின் அளவு அதிகமாகிறது, ரத்த அழுத்தம் கூடுகிறது அல்லது குறைகிறது, அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் தேவையற்ற வகையில் மிக அதிகமாகச் சுரக்கின்றன, ரத்த ஓட்டம் கண்களுக்கு அதிகமாகப் பாய்ந்து விழிகள் சிவக்கும் (கோபப்பார்வை), உள்ளங்கைகளுக்கு ரத்தம் பாயும் (அடுத்தவனை அடிக்க வசதியாக), முகத்தசைகள் பாதிக்கப்படும், வியர்க்க ஆரம்பிக்கும் – இப்படி இத்யாதி இத்யாதி.

இதனால் என்ன என்கிறீர்களா? ஒன்றுமில்லை, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம். மூளை பாதிக்கப்படும். (மூளை இருந்தால் கோபப்பட்டிருக்கவே மாட்டான் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)! அனஃப்லாக்சிஸ் என்ற நோய்வர வழிவகுக்கும். ஒரு அம்மா ரொம்ப கோபக்காரியாக இருந்தாள். அடிக்கடி அவள் கோபம் என்ற உணர்ச்சிக்கு அடிமையாகிக்கொண்டே இருந்தாள். அப்படி ஒருமுறை கடுமையான கோபத்தில் இருந்தபோது தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திருக்கிறாள். அதைக் குடித்த குழந்தை இறந்து போனது! கோபம் அவளது ரத்தத்தை விஷமாக்கிவிட்டது! இந்த தகவலை தாதாஜி என்று அழைக்கப்பட்ட மகான் வஸ்வானி கூறுகிறார். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த விஞ்ஞான உண்மைகளெல்லாம் தெரியாத காலத்திலேயே பெரியவர்களெல்லாம் இந்த உண்மையை உள்ளொளியால் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன. நம் திருவள்ளுவர் ’வெகுளாமை’ என்று ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கி சினம் பற்றிய பத்து குறள்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டுமானால் கோபப்படாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் அந்தக் கோபம் அவனையே கொன்றுவிடும் என்று கூறுகிறார். இதைவிட வெளிப்படையாகச் சொல்லவும் வேண்டுமா? அதுமட்டுமா?

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற

என்றும் சொல்லியுள்ளார். நமது கோபம் பலிக்காத இடங்களில், உதாரணமாக நமது முதலாளிகள், எஜமானர்கள், ’பாஸ்’கள், நம்மைவிட வலிமையும் செல்வாக்கும் வாய்ந்தவர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவதால் பயனில்லை. அதனால் நமக்கு தீமையே ஏற்படும். சரி, அப்படியானால், நம்மைவிட எளியவரிடத்தில் கோபத்தைக் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது! ஏன்? அப்போதும் நமக்கே தீமை என்கிறார் திருவள்ளுவர் பெருமான்! எந்த வழியில் கோபப்பட்டாலும் அது தீமையே விளைவிக்கும்! ஆஹா, ஞானம் என்பது இதுதான். ஞானமிக்க நமது தமிழ்ப் பாரம்பரியத்தில் இல்லாதது ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நாம்தான் அதை இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

 

SNSN -- 09.1தன் மனைவியின் கால்சிலம்புகளைத்தான் கோவலன் களவாடினான் என்று அவன் மீது கோபப்பட்டு பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரணதண்டனை விதித்து உயிர் பறித்தான். ஆனால் அவனுடைய கோபத்தின் விளைவு என்ன? அது தன்னுடைய கால்சிலம்புதான் என்று கண்ணகி நிரூபித்த பிறகு ”யானே கள்வன்” என்று கதறிக்கொண்டு மன்னன் தன் இன்னுயிரை விட்டான். வள்ளுவர் சொன்ன உண்மையை ’சிலப்பதிகாரம்’ அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

ஒருமுறை ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த போர்க்கைதிகளையெல்லாம் ‘சாப்பிட்டீர்களா?’, ‘தூங்கினீர்களா?’ என்று  நலம் விசாரித்தார். “மிஸ்டர் லிங்கன், எதிரிகளோடு நடந்துகொள்ளும் முறை இதுவல்ல” என்று அவருடைய பெண் காரியதரிசி கூறினார். அதுகேட்ட லிங்கன், “உண்மைதான் மேடம். ஆனால் இப்போது அவர்களை நான் என் நண்பர்களாக்கிவிட்டேனில்லையா?” என்றார்! எவ்வளவு அறிவார்ந்த வார்த்தைகள்! கோபம் எதிரிகளைத்தான் உருவாக்கும். ஆனால் அன்பும் கருணையும் எதிரிகளையும் நண்பர்களாக்கிவிடும்!

சரி இதனால்தான் நாம் கோபப்படக்கூடாதா? இதுமட்டுமல்ல. கோபம் நம்மை அதன் அடிமையாக்கிவிடும். அதுதான் விஷயம். அலெக்சாண்டர் கிரீஸ் நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கிரேக்கர்கள் இந்திய மகான்களையும் யோகிகளையும் விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் தன்னோடு ஒரு மகானையும் கூட்டிச் செல்லவேண்டும் என்று விரும்பினார். ஒரு யோகியைப் பார்த்து, “நான் அலெக்சாண்டர், நீங்கள் என்னோடு எங்கள் நாட்டுக்கு வாருங்கள்” என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த யோகியோ, “நான் எங்கும் வரவிரும்பவில்லை” என்று கூறிவிட்டார். அதுகேட்ட அலெக்சாண்டருக்கு வந்தது மகா கோபம்.

“நான் யார் தெரியுமா? உலகை வெற்றிகொண்ட மாவீரன் அலக்சாண்டர். என்னோடா வர மறுக்கிறாய்? உன் தலையைச் சீவிவிடுவேன்” என்று கூறினார். ஆனால் அந்த யோகியோ பயப்பட்டதாகத் தெரியவில்லை.

மாறாக, “நீ உலகை வெற்றி கொண்டவனா? இருக்கவே முடியாது. நீ என் அடிமையில் அடிமை என்பதுதான் உண்மை”என்றார்!

அலெக்சாண்டருக்கு பயங்கர ஆச்சரியம். நான் அடிமையா? அதுவும் இவனது அடிமையின் அடிமையா? என்ன வினோதம் இது? “எப்படி இப்படிச் சொல்கிறாய்?” என்று கர்ஜித்தார்.

அப்போதும் கொஞ்சமும் கலங்காமல் அந்த ஞானி சொன்னார், “கோபம் எனது அடிமை. நீயோ அதன் அடிமையாக இருக்கிறாய். அதனால்தான் அப்படிச் சொன்னேன்”!

அதற்குமேல் கதையில் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவேண்டியதில்லை. அலெக்சாண்டரும் புரிந்துகொண்டார். அவரும் ஒருவகையில் ஞானிதான். இல்லையென்றால் உலகையே வெற்றிகொண்ட அவர், “நான் இறந்த பிறகு என் கைகளை மட்டும் பிணப்பெட்டிக்கு வெளியில் வைத்து, கைகளில் மண்ணை வைக்கவேண்டும்” என்று கோரிக்கை வைப்பாரா? எவ்வளவு வெற்றிகொண்டாலும் எந்த மனிதனாலும் எதையும் எடுத்துச் செல்லமுடியாது என்ற உண்மையை தன் இறுதிக்கணத்தில் உணர்த்திய அவர் ஞானிதானே!

சரி, மறுபடியும் கோபத்துக்கு வரலாம். அந்த ‘சப்ஜக்ட்’ட்டுக்கு வரலாம் என்று கூறினேன். அப்படியானால் ஒரு மனிதன் வாழ்நாளில் கோபமே படக்கூடாதா?

இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கு நியானமான பதில்: கோபப்படலாம் என்பதுதான்! அப்படியானால் இதுவரை சொல்லியதெல்லாம்? அதுவும் சரிதான். இதுவும் சரிதான்! என்ன புரியவில்லையா?

கோபத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று உங்களையே அழிக்கும் கோபம். இன்னொன்று தார்மீகமான கோபம். மேலே விவரித்ததெல்லாம் முதல்வகைக் கோபம். இரண்டாவது வகைக்கோபம் அநியாயத்தை, அக்கிரமங்களைக் கண்டு பொங்கி எழுவது. இன்ன இடத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வரும்போது நமக்கு தார்மீகமான கோபம் வரவேண்டும். அந்த கோபம் உங்களை அழிக்காது. ஏனெனில் அது கோபப்படுவதல்ல. கோபத்தை வெளிப்படுத்துவது. இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு.

கோபப்படுவது நம்மை அடிமையாக்கிவிடும். நான் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவோம். உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம். ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் இரண்டாவது வகையில் நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்போம். அதேசமயம் இது சரியல்ல என்று அநியாயத்தை நோக்கிய நமது எதிர்ப்பை கோபமாக வெளிப்படுத்துவோம். அப்படி வெளிப்படுத்தும்போது நாம் நம்மை அந்த உணர்ச்சியின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு உண்மைகளை மட்டும் ஆணித்தரமாக, அழுத்தமாகச் சொல்வோம். பேசுவோம் அல்லது எழுதுவோம். அல்லது நமக்கே உரிய வகையில் வெளிப்படுத்துவோம்.

நாம் ஒரு ஓவியனாக, எழுத்தாளனாக இருந்தால் ஒரு ஓவியத்தின், ஒரு காவியத்தின் மூலமாக நம் கோபத்தை நாம் வெளிப்படுத்துவோம். அக்கிலிஸின் கோபத்தை ஹோமர் ’இலியட்’ என்ற காவியாமாக்கினார். பாண்டவர்களின் கோபம் மஹாபாரதமானது. நாம் ஒரு இசையமைப்பாளராக இருந்தால் நம் கோபத்தை இசையாக்குவோம். ஷைகோவ்ஸ்கி போல. ஆனால் இப்படியெல்லாம் செய்யும்போது நாம் கோபம் என்ற உணர்ச்சிக்குள் இருக்கமாட்டோம். அதற்கு வெளியே இருப்போம்.

இப்படிப்பட்ட கோபம் ஒரு தர்மம்கூட. நமது கடமைகளின் ஒன்று என்றுகூடச் சொல்லலாம். சில நேரங்களில் குழந்தைகளிடம் நாம் கோபத்தைக் காட்டவேண்டியுள்ளது. அவர்களை நெறிப்படுத்த. சில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கோபத்தைக் காட்டவேண்டியுள்ளது. அவர்களை சரிப்படுத்த. போகிற போக்கில் ஆட்டோ ட்ரைவர் நம்மீது ஒரு கால்கிலோ எச்சிலைத் துப்பிவிட்டுச் சென்றால் அவன்மீது நம் கோபத்தைக் காட்டி அவனை வாய்மூட வைக்கவேண்டியது நமக்கு அவசியமாகிறது.

இந்த மாதிரியான தார்மீக கோபத்தை நாம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பாரதி கூறினான். ரௌத்திரம் பழகு என்று. நபிகள் நாயகம் சில சமயங்களில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். கண்கள் சிவந்திருக்கும். உடல் நடுங்கும். ஆனால் வார்த்தையிலும் நடத்தையிலும் நிதானம் தவறாது. அவர்களது கோபத்தைப் புரிந்துகொண்டு உடனே மற்றவர் தம் நடத்தையைச் சரிப்படுத்திக்கொள்வர். இப்படிப்பட்ட கோபம் ’இமோஷனலி இண்டலிஜெண்ட்’-ஆன கோபம். இதில் யாருக்கும் தீமை விளையாது. நன்மையே விளையும்.

கோபம் பற்றி சில பெரியவர்கள் சொன்னதை கீழே எடுத்துக்காட்டியுள்ளேன். அவற்றைப் பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்:

 •  கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், முடிவில் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிவரும் – பெஞ்சமின் ஃப்ராங்க்லின்.
 • முட்டாள்களின் இதயத்தில்தான் கோபம் குடியிருக்கும் – ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன்.
 • கோபம் என்பது தற்காலிக பைத்தியம். அதைக்கட்டுப்படுத்துங்கள். அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்திவிடும் – ஜி.எம்.ட்ரவெல்யன்.
 • கோபம், வருத்தம், அச்சம் எல்லாம் உங்களுடையதல்ல. அவைகள் உங்கள் மனதின் நிலைகள். அவைகள் வரும், போகும். வந்துபோகும் எதுவுமே உங்களுடையதல்ல. அது நீங்களல்ல – எக்ஹார்ட் டாலி

இவர்கள் பேசியிருப்பதெல்லாம் முதல் வகை கோபம் பற்றித்தான். பாரதி சொன்ன ரௌத்திரம் பற்றியல்ல. இவ்வகைக்கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்த நாம் சில வழிகளைக்கையாளலாம்:

 • கோபம் வரும்போது உடனே அதை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் தள்ளிப்போடலாம். 100 வரை எண்ணலாம்.
 • கோபம் வரும்போது ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்கலாம். அது கோபத்தை நிச்சயம் குறைக்கும்.
 • அமைதியாக ஒரு இடத்தில் அசைவின்றி உட்காரலாம்.
 • யார் மீது கோபமாக இருக்கிறதோ அவருக்கு நம் கோபத்தையெல்லாம் கொட்டி, பச்சை பச்சையாகத் திட்டி ஒரு கடிதம் எழுதி, எழுதி முடித்தவுடன் அதைக்கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிடலாம். அப்போதும் நம் மனது ரிலாக்ஸ் ஆகிவிடும்.

இப்படியெல்லாம் முயற்சி செய்துதான் பாருங்களேன்.

=========

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to சிலையும் நீ, சிற்பியும் நீ — தீயை அணையுங்கள் — 9

 1. nagore kavi says:

  superb sir….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s