08 – சின்ன தவறு, பெரிய தண்டனை — மஹாபாரத வாழ்வியல்

கதை கதையாம் காரணமாம்:மஹாபாரத வாழ்வியல்

08 — சின்ன தவறு பெரிய தண்டனை

KK JAN 1-15 Coverதராசைக் கையில் வைத்திருக்கும் நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். பாரபட்சம், விருப்பு வெறுப்பு வந்துவிடக்கூடாது. எது கனமானதோ அதுதான் கீழே போகவேண்டும். எது நியாயமோ அதுதான் ஜெயிக்க வேண்டும். இதுதான் நோக்கம். இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துவிட்டது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகால நட்பை முறிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. வழக்கம்போல சொதப்பல். ஆனால் நீதி, நியாயம், தர்மம் என்று வரும்போது சொதப்பல் இருக்கக் கூடாது. இந்திய அரசு சொதப்பினாலும் இந்திய பாரம்பரியம் அப்படிச் செய்யவில்லை. அதுதான் தர்ம தேவனின் கதை.

மாண்டவ்யர் என்று ஒரு முனிவர் இருந்தார்.  அவர் காட்டில் தனியாக ஆசிரமம் அமைத்துக்கொண்டு தவம் செய்துகொண்டிருந்தார். வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஆழ்ந்து படித்துணர்ந்தவர். ஒருநாள் அவர் நிஷ்டையில் இருந்தபோது அவர் குடிலின் பக்கமாக சில திருடர்கள் வந்தனர். அரண்மனையில் திருடிய பொருள்களுடன். அவர்களைத் துரத்திக்கொண்டு அரண்மனைக் காவலர்களும் வந்துகொண்டிருந்தனர். எனவே ஒதுங்குவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் தகுந்த இடம் தேடி திருடர்கள் வந்தனர்.

மாண்டவ்யரின் குடில் அவர்களுக்கு வசதியாகப் போனது.  மாண்டவ்யரும் ஏதுமறியாத நிஷ்டையிலிருந்தார். அவருடைய குடிலுக்குள் சென்று திருடிய பொருள்களையெல்லாம் வைத்துவிட்டு திருடர்களும் ஒளிந்துகொண்டனர்.

அங்கு வந்த அரண்மனைக் காவலர்கள் முனிவர் நிஷ்டையிலிருப்பதை அறியாமல் அவரிடம் திருடர்களைப்பற்றி விசாரித்தனர். காவலர் தலைவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் மாண்டவ்யர் பதில் சொல்லவில்லை. காரணம் அவன் கேட்டது அவர் மூளைக்குப் போய்ச்சேரவே இல்லை. அவர் வேறு ஒரு உலகத்தில் இருந்தார். அதற்குள் சில காவலாளிகள் குடிலுக்குள் சென்று பார்த்து, திருடர்களும் பொருட்களும் இருப்பதைக் கண்டுவந்து அவனிடம் கூறினர்.

KK 8.0காவலர் தலைவனுக்கு மாண்டவ்யரின் மீது கடுமையான கோபம் வந்தது. ’ஓஹோ, நீதான் திருடர்களின் தலைவனோ? எல்லாவற்றையும் திருடி ஒளித்துவைத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாயா’ என்று நினைத்து அரசனிடம் சென்று தன் கற்பனையை உண்மையென எண்ணிக் கூறினான். அவசரக்குடுக்கையாக இருந்த அந்த அரசனும் விசாரிக்காமல், உடனே மாண்டவ்யரைக் கழுவிலேற்று என்று உத்தரவிட்டான்.

கழுவில் ஏற்றுவதென்றால் என்னவென்று தெரியுமா? மிகக்கடுமையான, கொடுமையான தண்டனை அது. குதவாய்க்குள் ஈட்டியைக் குத்தி உயரமாக, செங்குத்தாக ஒரு மனிதனை நிறுத்தி வைப்பார்கள். அந்த வேதனையிலேயே துடிதுடித்து அவன் செத்துவிடுவான். சமணர்கள் இப்படி கழுவேற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மாண்டவ்யரையும் அப்படிச் செய்தார்கள். ஆனால் தவத்திலும் தியானத்திலும் இருந்த அவருக்கு தன் உடலைப் பற்றிய பிரக்ஞை எதுவுமே இல்லாமலிருந்ததால் வேதனை எதையும் அவர் உணரவில்லை. அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அவருடைய உயிரும் போகவில்லை. அவர் செய்துகொண்டிருந்த தவத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.  ’காட்டு’வாக்கில் விஷயம் கேள்விப்பட்டு மற்ற முனிவர்கள் அங்கே வந்து கூடினர். மாண்டவ்யருக்கு உணர்வு திரும்பியபோது அவர் பட்ட வேதனை சொல்லமுடியாதது.  கழுவிலேற்றப்பட்டவர் திருடரல்ல, ஒரு தவமுனிவர், அவர் இன்னும் சாகவில்லை என்று கேள்விப்பட்ட அரசன் உடனே அங்கு வந்து அவரை கீழிறக்கச் செய்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

பதவியில் இருப்பவர்களின் காலில் விழுகின்ற சுயஅவமரியாதைத் தவறை இன்று மனிதர்கள் செய்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் தவறு செய்தால் மன்னிப்புக்கோரி மன்னர்கள்கூட மற்றவர்களின் காலில் விழுந்தார்கள். மாண்டவ்யருக்கு மன்னன்மீது கோபமில்லை. ஆனால் தரும தேவனிடம் சென்று அவர் முறையிட்டார். தனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை, என்ன தவறு செய்தேன் என்று கேட்டார். அதற்கு தர்ம தேவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“நீங்கள் எறும்புகளுக்கும் தேனீக்களுக்கும் தொல்லை கொடுத்தீர்கள். சித்திரவதை செய்தீர்கள். அதற்காகத்தான் இந்த தண்டனை” என்றார்.

மாண்டவ்யருக்கு ஆச்சரியமாக இருந்தது. “எப்போது செய்தேன்?” என்று கேட்டார்.

“குழந்தையாக இருந்தபோது” என்று பதில் வந்தது!

என்ன செய்கிறோம் என்று அறியாத வயதில் ஒரு குழந்தை செய்த தவறுக்காக வளர்ந்தபிறகு கழுவிலேற்றிக் குதவதை செய்வதா? எல்லா மனிதர்களுக்கும் இப்படியான தண்டனை இருக்குமானால், இனஅழிப்பு செய்தவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்! அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிப்பார்களா?

KK 8.1கடுப்பாகிப்போன மாண்டவ்யர், ’இப்படி ஒரு கடும் தண்டனையை எனக்குக் கொடுத்த நீ மானிடனாகப் பிறக்க வேண்டும்’ என்று தரும தேவனுக்கே சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் விளைவாக, மனிதனாக, விசித்திர வீரியன் மனைவி அம்பாலிகையின் வேலைக்காரியின் மகனாகப் பிறந்தவன்தான் விதுரன். தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவன். தர்ம தேவனின் அவதாரம். திருதராஷ்டிரனின் அவையில் பிரதான ஆலோசகராக பீஷ்மரால் விதுரன் இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டான். போருக்குக் காரணமாக அமைந்த தாய விளையாட்டை திருதராஷ்டிரன் அனுமதித்தபோது அவன் காலில் விழுந்து ’அது வேண்டாம்’ என்று வாதிட்டவன் விதுரன். ’யுத்தம் வரும், உன் மக்களிடையே பிளவு வரும்’ என்று எடுத்துக்கூறியவன். ஆனால் அவன் பேச்சு எடுபடவில்லை. நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்?

=============================

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s